‘சிங்களத் தலைவர்களுடன் இனியும் ஒத்துப் போக முடியும் எனத் தோன்றவில்லை. தமிழர்கள் தன் மானத்துடன் வாழ தனியான அமைப்பொன்று அவசியம்.

349

jayawardene_250 ஈழத்தமிழர்களது இருப்பிற்கான போராட்டத்தைச் சிங்களப் பேரினவாத அரசும், தமது நலன்களுக்காக சிங்கள அரசிற்கு வக்காலத்து வாங்கும் சில நாடுகளும், பயங்கரவாதம் என்று முத்திரை குத்தி அதனை நசுக்குவதற்கு பல வழிகளிலும் முயன்று கொண்டிருக்கின்றனர்.

ஈழ மண்ணினதும்; ஈழத் தமிழர்களதும் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கின்ற எவரும் தமது உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, தமது சுயநிர்ணய உரிமையை நிலைநிறுத்துவதற்காக நடக்கின்ற இந்தப் போராட்டத்தை, பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்தியதற்காக நிச்சயமாய் ஒருநாள் வெட்கித் தலைகுனிவார்கள்.

தம்மண்ணைத் தாமே ஆண்ட ஈழத் தமிழரது வரலாற்றையும் வியாபார நோக்கங்களுக்காக இலங்கைக்குள் வந்தவர்கள் தமது பரிபாலனத் தேவைகளுக்காக விட்ட தவறுகளையும் தமிழரின் அரசியல் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் தமது கதிரை ஆசைக்காகச் செய்த துரோகங்களையும் சிங்கள இனவெறி அரசின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளையும்; சற்றே மீட்டுப் பார்ப்போம்.

ஆரியரால் தம்பபன்னி என்றும் கிரேக்கரால் செரண்டிப் என்றும் ஆங்கிலேயரால் சிலோன் என்றும் அழைக்கப்பட்ட இலங்கைத் தீவானது பண்டைக் காலத்தில் பல அரசர்களின் கீழ் ஆளப்பட்ட பல பிரதேசங்களாகவே இருந்து வந்திருக்கின்றது..

அநுராதபுர இராச்சியம், யாழ்ப்பாண இராச்சியம், வன்னி இராச்சியம், பொலநறுவை இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என இந்த அரசுகள் பல காலப்பகுதிகளிலும் பல பெயர்களால் அழைக்கப்பட்டும், ஆளப்பட்டும் வந்திருக்கின்றன.

வடக்கு கிழக்கை மையப்படுத்திய இராச்சியங்கள் தமிழர்களாலேயே ஆளப்பட்டு வந்திருக்கின்றன. சிங்கள இராசதானிகள் கூட பல தமிழ் அரசர்களினால் ஆளப்பட்டு இருக்கின்றது. உதாரணமாக அநுராதபுரத்தை ஆண்ட எல்லாளனுடைய வரலாற்றை சிங்களவர்களால் கூட மூடி மறைத்துவிட முடியவில்லை. அதேபோல 1815ம் ஆண்டு கண்டியை பிரிட்டிஸார் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போது கண்டியை ஆண்டு கொண்டிருந்த சிறிவிக்கிரம இராஜசிங்கனும் தமிழ் அரசனே. அதேபோல யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலியன், வன்னியில் குறுநில மன்னனாக இருந்த பண்டார வன்னியன் ஆகியோர் அந்நியரை எதிர்த்து காட்டிய வீரம் வரலாற்றில் மறக்க முடியாதது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தரால் ஆளப்பட்ட காலத்தில் கூட இலங்கைத்தீவு முழுவதும் ஒரே ஆட்சிக்குட்பட்டதாக அமையவில்லை 1815ம் ஆண்டு கண்டியை ஆங்கிலேயர் கைப்பற்றி இலங்கைத்தீவை தமது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதும் இலங்கை பல பரிபாலனப் பகுதிகளாகவே ஆளப்பட்டு வந்தது. ஆனால் 1833ம் ஆண்டு கோல்புறூக் மற்றும் கமரோன் ஆகியோரின் பரிந்துரையுடன் கொண்டுவரப்பட்ட அரசியல் திட்டத்தின்படியே இலங்கை ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்தது.

தனியாக ஆளப்பட்ட தமிழர் பிரதேசங்கள் சிங்களப் பிரதேசங்களுடன் சேர்த்து ஆளப்பட்ட போதிலும் இது குறித்து தமிழர் தரப்பு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.. ஆங்கிலேயர்கள் தமிழர், சிங்களவர் என்ற பாகுபாடின்றி கல்வித்தகமைக்கும் திறமைக்கும் முன் உரிமை கொடுத்தமையையும் தமிழ்த் தலைவர்களினது அசமந்தப் போக்கையும் இதற்கான காரணங்களாகக் கூறலாம்.

இதேபோல சிங்களத் தரப்பிடமிருந்தும் ஆங்காங்கே சில சல சலப்புக்கள் ஏற்பட்ட போதிலும் பெரிதான அரசியல் நிகழ்வுகள் எதுவும் நடக்கவில்லை.. இந்த நிலை 1910ம் ஆண்டு வரை நீடித்தது. ஆனால் 1910ம் ஆண்டிற்கும் 1948ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பல முக்கியமான அரசியல் நிகழ்வுகளும் சிங்களப் பேரினவாதிகளின் சுயரூபம் வெளிப்பட்ட சம்பவங்களும் இன வன்முறைச் சம்பவங்களும் நடந்து முடிந்தன.

இந்த வகையில் 1915ம் ஆண்டு சிங்கள முஸ்லிம் கலவரம் வெடித்தது. கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பித்த கலவரம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பரவியது. உடனடியாகச் செயற்பட்ட பிரிட்டிஸ் நிர்வாகம் இராணுவ சட்டத்தை பிறப்பித்தது. கலக்காரர்களை படையினர் சுட்டுக் கொண்டனர். இராணுவச் சட்டத்தின் கீழ் பலரைக் கைது செய்தனர். பலருக்குத் தூக்குத் தண்டனை வழங்கினர்.. சுதந்திர இலங்கையின் முதற்பிரதமராக இருந்த டி.எஸ் சேனநாயக்கா, பாரன் ஜெயதிலக்கா உள்ளிட்ட பலரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அந்தக் காலப்பகுதியில் சட்டசபையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு பிரதிநிதியாக இருந்த சேர் பொன் இராமநாதன் அவர்கள் லண்டனுக்குச் சென்று மரண தண்டனையை எதிர்நோக்கிக் கொண்டிருந்தவர்களுக்காக வாதாடி அவர்களை விடுதலை செய்வித்தார். இதனால் இராமநாதன் நாடு திரும்பிய போது அவரைக் குதிரை வண்டியில் ஏற்றி சிங்களத் தலைவர்கள் கொழும்புத் துறைமுகத்திலிருந்து அவரது வீடுவரை தாமே இழுத்துச் சென்றது வரலாறு. இந்தப் புகைப்படம் கொழும்பு நூதனசாலை உள்ளிட்ட பல அரச அலுவலகங்களிலும் மற்றும் பல இடங்களில் காணப்பட்ட போதிலும் தீடீரென மாயமாக மறைந்து விட்டன.

அக்காலப் பகுதியில் இலங்கையில் இருந்த முக்கியமான அரசியல் இயக்கங்களாக இலங்கைத் தேசிய சங்கம், அரசியல் சீர்திருத்தக் கழகம், யாழ்ப்பாண சங்கம் என்பவற்றைக் குறிப்பிடலாம். சேர் பொன் அருணாசலம் தலமையில் இயங்கிய அரசியல் சீர்திருத்தக் கழகம் 1919ல் இலங்கைத் தேசிய காங்கிரஸாக மாற்றம் பெற்றது. இலங்கைத் தேசிய காங்கிரஸின் உதயத்தோடு இலங்கை அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற பொன் அருணாச்சலத்தின் கனவு சில காலங்களுக்குள்ளாகவே தவிடு பொடியானது.. சிங்களத் தலைவர்களுடன் ஒத்துப் போக முடியாமல் அல்லது சிங்களத் தலைவர்கள் ஒத்துழைக்காததால் பொன் அருணாச்சலம் தன் தலைமைப் பதவியைத் துறந்தார்.

1823ம் ஆண்டு சேர் பொன் அருணாசலம் இலங்கைத் தமிழர் மகாசபை எனும் அமைப்பை ஆரம்பித்தார்.. அதன் அங்குராப்பண கூட்டத்தில் அவர் பேசிய பேச்சின் ஒரு பகுதி இது.

‘சிங்களத் தலைவர்களுடன் இனியும் ஒத்துப் போக முடியும் எனத் தோன்றவில்லை. தமிழர்கள் தன் மானத்துடன் வாழ தனியான அமைப்பொன்று அவசியம். அதுதான் இனி நமது இலக்கு. அதனை அடைய தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை, தோழமை அவசியம். நமது இலக்கை விளக்கி நாடெங்கிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும். பெருமைக்குரிய பாரம்பரியத்தின் சொந்தக்காரரான நாம் தமிழர் நலன்களுக்காகவே மட்டும் பாடுபடும் சுயநலமிகள் அல்லர் என்பதையும் நாட்டு மக்களுக்கு உணர்த்த வேண்டும்.’

இன வேறுபாடின்றி, இன்னும் சரியாகச் சொல்வதானால் சிங்களத் தலைவர்களினது நலனுக்காகவே செயற்பட்ட ஒரு தலைவரிடமிருந்து இத்தகைய வார்த்தைகள் வருவதற்கு அவர் சிங்களத் தலைவர்களால் எவ்வளவு தூரம் வஞ்சிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நேயர்கள் புரிந்து கொள்வீர்கள்.

இலங்கைக்கென புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக 1927ம் ஆண்டு டொனமூர் இலங்கைக்கு வந்தார்.

டொனமூர் கமிசனிடம் 50இற்கு 50 பிரதிநிதித்துவம் வேண்டும் என்று ஜி.ஜி. பொன்னம்பலம் வலியுறுத்த மக்கள் தொகையில் 64வீதமாக இருந்த சிங்களவர்கள் அதனை எதிர்த்தனர்.. ஜி.ஜி பொன்னம்பலத்தின் கோரிக்கையை நிராகரித்த டொனமூர்; 1931 இல் சர்வஜன வாக்குரிமையைப் பிரகடனம் செய்தார்.

டொனமூர் திட்டத்தின்படி உருவான அரசாங்க சபைக்கு 1931இல் தேர்தல் நடந்தது. யாழ் இளைஞர்கள் பகிஸ்கரித்ததால் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை காங்கேசன்துறை பருத்தித்துறை ஆகிய நான்கு தொகுதிகளின் தேர்தலும் நடக்கவில்லை..

இவ்வாறாக முதலாவது பொதுத் தேர்தலிலேயே தமிழர்கள் தேர்தல் பகிஸ்கரிப்பை ஆரம்பித்து விட்டது வரலாறு.

டொனமூர் அரசியலமைப்பின் கீழ் ஆளப்பட்டுக் கொண்டிருந்த கால கட்டத்தில் 2ம் உலகப் போரும் ஆரம்பமானது. இரண்டாம் உலகப் போரில் பிரிட்டன் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால் இலங்கை அரசியலில் தமது அக்கறையைக் காட்டவில்லை..இந்தக் கால கட்டத்தில் சிங்களப் பேரினவாதச் சக்திகளும் எழுச்சி பெறத் தொடங்கின. யு.P ஜெயசூரியா முதலான சிங்கள இனவாதிகளையும் சேர்த்துக் கொண்டு பண்டாரநாயக்கா சிங்கள மகாசபையை அமைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ் மக்களும் பொன்னம்பலம் தலைமையில் தமிழர் மகா சபையை அமைத்து 50: 50 என்ற கோசத்தை தீவிரமாக எழுப்ப ஆரம்பித்தனர்.

இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து டொமினியன் அந்தஸ்தில் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கத் தீர்மானித்து அதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு தலைவர்களைக் கேட்டனர். தலைவர்களால் வழங்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் அவற்றில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்தும் விசாரித்து தீர்மானங்களை மேற்கொள்ள சோல்பரிக் கமிசனை நியமித்தது.

தமிழ் மக்கள் சார்பாக கோரிக்கைகளை முன்வைக்க செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம் உள்ளிட்ட தலைவர்கள் கொழும்பு சாகிராக் கல்லூரியில் கூடி ஆலோசித்தனர். அங்கு வைத்துத் தமிழர் மகா சபை தமிழ் காங்கிரசாக மாறியது. 50: 50 கோரிக்கையை தக்க நியாயங்களுடன் சோல்பரிக் கமிசன் முன் வைக்கத் தீரமானித்தது. ஆனால் அந்தத் திட்டத்தை சோல்பரிக் கமிசன் கண்டு கொள்ளாமல் அமைச்சர்கள் வழங்கிய திட்டத்தை சில திருத்தங்களுடன் ஏற்றுக் கொண்டது.

இதனால் கோபமடைந்த தமிழ் தலைவர்கள் சோல்பரிக் கமிசனால் தயாரிக்கப்பட்ட வெள்ளையறிக்கையை எதிர்த்து வாக்களிக்கும் படி அரசாங்க சபையின் தமிழ் உறுப்பினர்களைக் கேட்க அவர்களும் ஒத்துக் கொண்டனர்.

இதனை அறிந்த சிங்களத் தலைவர்கள் தமிழ் உறுப்பினர்களைச் சந்தித்து ‘முதலில் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் அடைவது தான் முக்கியம். பிறகு எங்களிடையே அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். எங்களை நம்புங்கள்’’ என்று பலவாறாக வாக்குறுதிகளை அள்ளி வழங்கினர். அதை நம்பி ஏமாந்த தமிழ் உறுப்பினர்களின் ஒப்புதலுடன் வெள்ளையறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது

srimavo_pandaranyak_181அதற்கிணங்க இலங்கைக்கும் டொமனியன் அந்தஸ்தில் சுதந்திரம் வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. தனியாக ஆண்டு வந்த தமிழினம் அந்நியரிடம் அடிமையாகி இருந்த காலம் முடிந்து சிங்களவரிடம் அடிமைப்பட்ட வரலாறுக்கு கட்டியம் கூறப்பட்டது.

சோல்பரி அரசியலமைப்பின் கீழ் நடந்த தேர்தலில் இலங்கைத் தேசிய காங்கிரசும் சிங்கள மகா சபையும் இணைந்து மலர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, சமசமாஜக் கட்சி, தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட்டன.

இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்ற போதிலும் அதற்குப் பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை. எனினும் சேனநாயக்கா ஆட்சியடைக்க முன்வந்தார். அப்போது ஆளுனராக இருந்த ளுசை ஒலிவர் குணதிலக தமிழர் முஸ்லிம்கள் பறங்கியர் இந்தியர் என்ற அனைத்துத்தரப்பும் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்பட்டாலே முழு சுதந்திரம் கிடைக்கும் எனச் சொன்னதும் சேனநாயக்கா அதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

சகல சமூகத்தவரையும் அமைச்சரவையில் சேர அழைப்பு விடுத்தார். அப்போது கூடத் தமிழர் அமைச்சரவையில் சேராமல் பகிஸ்கரித்திருந்தால் இலங்கைக்குப் பூரண சுதந்திரத்தை வழங்குவது குறித்து ஒன்றிற்கு இரண்டு தடவைகள் யோசித்திருப்பார்கள். ஆனால் சி. சுந்தரலிங்கமும் சி. சிற்றம்பலமும் அமைச்சரவையில் ஒட்டிக் கொண்டு ஒட்டுக்குழுக்களின் வரலாற்றை ஆரம்பித்து வைத்தார்கள்.

அமைச்சரவையில் அனைத்துத் தரப்பினரும் இடம்பெற்றதால் திருப்தியடைந்த பிரிட்டிஸ் அரசு 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் நாள் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கியது. வடக்கிலும் கிழக்கிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிடப்பட்டது.. தென்னிலங்கையில் சிங்கக் கொடி ஏற்றும் போது வடக்கு கிழக்கு மக்கள் தமது தன்னாட்சியை வெளிப்படுத்த நந்திக் கொடி ஏற்றுவர் எனத் தமிழ்த் தலைவர்கள் அறிவித்தனர்..

அதனால் வடக்கிலும் கிழக்கிலும் சிங்கக் கொடியோ நந்திக் கொடியோ பறக்கவிடக் கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டது. எனினும் தமிழர் பகுதிகளில் சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடிகளே பறக்கவிடப்பட்டிருந்தன. இந்த வரலாறு இன்று வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சுதந்திரம் பெற்றதுமே சிங்கள இனவெறி மெல்ல மெல்ல விசுவரூபம் எடுக்கத் தொடங்கியது.

தனக்குப் பதில் பிரதமர் பதவி தரப்படவில்லை என்ற கோபத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்த பண்டாரநாயக்கா உடனடியாக மக்கள் மனதில் இடம்பெறுவதற்கு என்ன வழி என்று யோசித்தார். மதம், மொழி என்பனவே மக்களைக் கவர்வதற்கான இலகுவான வழி எனக் கண்ட பண்டாரநாயக்கா நான் ஆட்சிக்கு வந்தால் 24 மணித்தியாலத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை ஆட்சி மொழியாக்குவேன் என்று வாக்குறுதி வழங்கினார்.

அந்த வாக்குறுதிகள் அவரைப் பிரதமர் குதிரையிலும் அமர்த்தின. தான் கொடுத்த வாக்குறுதிப்படியே அதனைச் செய்வதற்கான முயற்சிகளில் இறங்கினார். அதற்கான சட்டநகலில் நியாயமான அளவு தமிழ் உபயோகம் என்ற பதத்தையும் சேர்த்துக் கொண்டார். அதை எதிர்த்து பேராசிரியர் யு.கு ஜயசூரியா நாடாளுமன்ற வளவில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவிக்க பயந்து போன பண்டாரநாயக்கா நியாயமான அளவில் தமிழ் என்ற பதத்தை நீக்கி தனிச் சிங்களச் சட்ட வரைவைக் கொண்டு வரத் திட்டமிட்டார்;.தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட தினத்தில் நாடாளுமன்றத்திற்கு அருகில் தந்தை செல்வாவும் தொண்டர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கினர். அரசினால் ஏவிவிடப்பட்ட குண்டர்கள் வந்து தந்தை செல்வாவையும் தொண்டர்களையும் தாக்கினர்.

அதனைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தூண்டி விடப்பட்டன. தமிழர் கடைகள் உடைமைகள் நொறுக்கப்பட்டன. 150 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இதனிடையே தமிழர் தாயகத்தை கூறு போடும் ஒரு முயற்சியாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் விரைவு படுத்தப்பட்டன.

இதனால் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருந்த புத்தளம் போன்ற பகுதிகளில் தமிழர்கள் சிறுபான்மையினராகினர். மணலாறு பகுதிக் குடியேற்றம் தமிழர் தாயகத்தைக் கூறு போட்டது.

அரசுக்கு பல வழிகளிலும் ஆதரவு அளித்து வந்த சி. சுந்தரலிங்கம் சிங்களவரின் போக்கினால் வெறுப்புற்று ‘தனித் தமிழீழம் தமிழர் மீட்சிக்கு வழி’ எனக் குரல் கொடுத்தார்.

தமிழ் மக்களின் எதிர்ப்பைக் கண்டு அவர்களைச் சமாதானப்படுத்துவதற்காக பண்டாராநாயக்கா தமிழர் தரப்புடன் பேச்சு நடத்த முன்வந்தார். இந்தப் பேச்சுக்களின் முடிவில் பண்டா செல்வா ஒப்பந்தம் தயாரானது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஓரளவு சுயாட்சியை வழங்க பண்டாரநாயக்கா முன்வந்தார்.

இதை அறிந்ததும் ஐக்கிய தேசியக் கட்சி தன் பங்குக்கு இனவாதத்தைக் கையில் எடுத்தது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளியாக இருந்த து.சு.ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்குப் பாதயாத்திரை ஒன்றைத் தொடங்கினார்.

இந்த நிலமையைத் திசை திருப்புவதற்காக பண்டாரநாயக்கா வாகன இலக்கத் தகடுகளில் ஆங்கில எழுத்துக்குப் பதிலாக சிங்கள சிறி எழுத்தை அறிமுகப்படுத்தினார். தமிழ் பகுதிகளில் இதற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. தமிழ் பகுதிகளில் தமிழில் சிறி என்று எழுதவும் சிங்கள எழுத்துக்களை அழிக்கவும் செய்தனர். இந்தப் போராட்டங்கள் மலையகத்திலும் நடைபெற்றன. இதன் போது பொகவந்தலாவ பகுதியில் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தமிழ் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

பண்டாரநாயக்கா அமைச்சரவையில் மக்கள் நலத்துறை அமைச்சராக இருந்த விமலா ஜெயவர்த்தனா பிக்குகளைத் திரட்டிக் கொண்டு வந்து பிரதமரின் ரொஸ்மிட் பிளேஸ் இல்லத்தின் முன் போராட்டத்தைத் தொடங்கினார்.

பண்டாரநாயக்காவும் பண்டா செல்வா ஒப்பந்தம் செல்லாது என்று எழுத்து மூலம் உறுதியளித்து அந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

சிங்களத்தலைவர்களால் ஒப்பந்தங்கள் எழுதப்படுவதும் அல்லது வாய்மொழி உறுதி மொழிகள் வழங்கப்படுவதும் பின்பு மீறப்படுவதுமான சம்பவங்கள் தொடர் கதைகள் ஆகின.

இந்த நிலையில் தமிழர் தலைவர்கள் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய வவுனியாவில் கூடினர்கள். இந்த மாநாடு முடிந்து சொந்த இடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்த தலைவர்கள் பல இடங்களில் தாக்கப்பட்டார்கள். தென்னிலங்கையில் தமிழர்களுக்கெதிரான வன்முறைகள் தலைவிரித்தாடின. நிலமை கட்டு மீறியது. தேசாதிபதியாக இருந்த ஒலிவர் பிரதமரிடம் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்துங்கள் என்று வற்புறுத்தினார். இலங்கை அரசு இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்தாவிட்டால் இந்தியப் படைகளை வரவழைக்க வேண்டியிருக்கும் என்று அவர் மிரட்டியதைத் தொடர்ந்தே பிரதமர் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

வினை விதைத்தவன் வினையையும் தினை விதைத்தவன் தினையையும் அறுக்கத்தானே வேண்டும். சிங்கள மக்களிடம் இனவெறியை ஊட்டி அரச சுகம் கண்ட பண்டாரநாயக்காவைச் சந்திக்கவென வந்த பௌத்த துறவி ஒருவரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் பண்டாரநாயக்கா கொல்லப்பட்டார்.

சிறிது காலத்தின் பின் கணவனின் இறப்பைக் காட்டி சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக் கதிரையில் அமர்ந்தார்.

ஆட்சியில் அமர்ந்ததும் 1961ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியில் இருந்து வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் தனிச் சிங்களச் சட்டத்தை அமுல்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டார். இந்த ஆணையை எதிர்த்து தமிழ் மக்கள் கிளர்ச்சி செய்தனர். இந்த நிலையில் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்த சிறிமா வடக்கு கிழக்குக்கு இராணுவத்தை அனுப்பி வைத்தார். தமிழரசுக் கட்சியைத் தடை செய்தார். கட்சித்தலைவர்களை பனாகொடை இராணுவ முகாமில் அடைத்தார். நியாயம் கேட்ட தமிழரை இராணுவ ரீதியாக அடக்கும் வரலாறு ஆரம்பமாயிற்று

1965ம் ஆண்டு. தேர்தல் காலம். இந்தத் தேர்தலில் டட்லி சேனநாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி 66 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. ஆனால் அரசமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தேசிய அரசு அமைப்பதற்கு தமிழரசுக்கட்சி, தமிழ் காங்கிரஸ் என்பவற்றுக்கு அழைப்பு விடுத்தார். இதற்குச் தந்தை செல்வா இணங்கவில்லை. இதற்கிடையில் தமிழரசுக் கட்சியின் சில உறுப்பினர்கள் கூடி அமைச்சரவையில் இணைய வலியுறுத்தினர். அதற்கு ஒப்புதல் கிடைக்காத நிலையில் மு. திருச்செல்வம் பின்கதவால் உள்ளுராட்சி அமைச்சரானார்..

1970 ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் மீண்டும் சிறிமா பண்டாரநாயக்கா பிரதமரானார். இந்தக் காலப்பகுதியில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற றோஹண வீஜேவீரா தலைமையிலான ஜே.வி. பி. முயற்சித்தது. ஒரே தினத்தில் இலங்கையில் இருக்கும் பொலிஸ் நிலையங்களைத் தாக்கிக் கைப்பற்றுவது அவர்களது திட்டமாக இருந்தது.திட்டமிடுதலில் ஏற்பட்ட தவறினால் திட்டம் வெளியே கசிந்து பிரதமர் உசாராகி விட்டார். இருந்தாலும் மொனராகல உள்ளிட்ட சில பகுதிகளை ஜெவிபியினர் சில தினங்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆனால் கொடூரக் கரங் கொண்டு இந்தப் போராட்டத்தை சிறிமா முடக்கினார். ஆயிரக்கணக்கான இளைஞர்களும் யுவதிகளும் கொல்லப்பட்டனர்.. விஜேவீரா உள்ளிட்ட பலர் கைது செயயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தக் காலப்பகுதியில் இனியும் சிங்கள மக்களோடு இணைந்திருக்க முடியாது என்று உணர்த்தும் மற்றொரு சட்டம் அமுலாக்கப்பட்டது.

கல்வியையே தமது மூலதனமாகக் கொண்டு தமிழினம் முன்னேறுவது கண்டு பொறுக்க முடியாமல் சிறிமா அரசினால் தரப்படுத்தல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி சிங்கள முஸ்லிம் மாணவர்களுடன் ஒப்பிடுகையில் கூடிய புள்ளிகளை எடுத்துப் பல்கலைக்கழகம் செல்ல வேண்டிய நிலை தமிழ் மாணவர்களுக்கு ஏற்பட்டது. இளைஞர்கள் மத்தியில் விடுதலையின் அவசியத்தை வீச்சாய் சொல்ல வைத்த சம்பவம் இது. இதன் விளைவாய் தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது.

இதனிடையே புதிய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் இலங்கையைக் குடியரசாக்கும் முயற்சியிலும் சிறிமா ஈடுபடத் தொடங்கினார். வழமை போலவே தமிழ்த் தலைவர்களின் கோரிக்கைகள் எதுவும் செவிசாய்க்கப்படாமலே யாப்பு உருவானது. இந்த யாப்புக்கு தனதும் தமிழ் மக்களதும் எதிர்ப்பைக் காட்ட தந்தை செல்வா தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார். அத்துடன் அவர் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் குரல் கொடுத்தார்.

தமிழ் மக்களின் மனதில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்ட மற்றொரு சம்பவம் 1974இல் நடைபெற்றது. உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் கூடி தம் தமிழுக்காக விழா எடுத்து வந்தனர். அந்த வகையில் நான்காவது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த முடிவாகியது.

மாநாட்டை அரச ஆதரவுடன் கொழும்பில் நடத்தலாம் என அரசாங்கம் அழைப்பு விடுத்தது. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இதன் மூலம் மறைப்பதற்கு அது திட்டம் போட்டது. அந்தத் திட்டத்தைப் புரிந்து கொண்டு மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவது என முடிவானது. ஆத்திரம் கொண்ட அரசு தமிழ் மக்களுக்குப் பாடம் புகட்டத் திட்டம் போட்டது.

rajiv_300மாநாட்டின் இறுதி நாளன்று யாழ்ப்பாணமே தமிழ் அன்னைக்கு விழா எடுக்கும் களிப்பில் மூழ்கியிருக்க சிங்களப் பொலிசார் திட்டமிட்டு அராஜகத்தை அரங்கேற்றினர். மாநாட்டு மண்டபத்தில் தடியடி, கண்ணீர் புகைக் குண்டுவீச்சுக்களை நடத்தினர். மினசாரக் கம்பிகளை அறுத்துப் போட்டனர். இந்தக் களேபரத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இத்தனைக்கும் அவர்கள் செய்த தவறு தமிழன்னைக்கு விழா எடுத்ததைத் தவிர வேறில்லை.

1975ம் ஆண்டு காங்கேசன்துறை இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மீண்டும் அந்தத் தேர்தலில் போட்டியிட்ட தந்தை செல்வா அமோக வெற்றி பெற்றார்.

1976ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியால் வரலாற்றுச் சிறப்பு மிக்க வட்டுக்கோட்டை மாநாடு நடத்தப்பட்டது. அங்கு தமிழர் ஐக்கிய முன்னணி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியாக மாற்றம் பெற்றது. அதன் தலைவர்களாக தந்தை செல்வா, ஜி.ஜி. பொன்னம்பலம், ளு. தொண்டமான் ஆகியோர் இருப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.

அம்மாநாட்டிலே இனி சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் சுதந்திரத் தமிழீழம் அமைக்கப் பாடுபடுவது என உறுதி எடுக்கப்பட்டது, இந்தத் தீர்மானம் குறித்து தந்தை செல்வா பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

‘தமிழ் மக்கள் இழந்த உரிமைகளை மீட்க நாங்கள் ஒரு காலத்தில் இணைப்பாட்சி கேட்டோம். அதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது சாத்தியம் இல்லை என்பதை பட்டறிவு மூலம் உணர்ந்தோம். எனவே நாங்கள பிரிந்து வாழ்வது தான் வழி என்ற முடிவுக்கு வந்து விட்டோம். இதை நாம் செய்யாவிடில் தமிழனம் இழந்த உரிமைகளை ஒருபோதும் மீட்க முடியாது. கூட்டாட்சிக் கோரிக்கையை அடியோடு கைவிட்டு விட்டோம்’

இதனிடையே தமிழாய்ச்சி மாநாட்டுப் படுகொலைகளுக்குப் பழிவாங்குவதற்கு உரும்பிராயில பிறந்த சிவகுமாரன் முயற்சிக்கிறார். அந்தக் கொலைக்குக் காரணமான பொலிஸ் உயர் அதிகாரி சந்திரசேகரவைக் கொலை செய்யத் திட்டமிட்டு அவரைத் தேடித் திரிகிறார்; சிவகுமாரன். தெல்லிப்பழையில் வைத்து சந்திரசேகரா பயணம் செய்த ஜீப் வண்டியின் மீது குண்டு வீசுகிறார். ஆனால் அந்தக் குண்டு வெடிக்கவில்லை. இந்த நிலையில் பொலிசார் சிவகுமாரனை வலை வீசித் தேடுகின்றனர். கடைசியில் பொலிசாரால் சுற்றி வழைக்கபபட்ட நிலையில் சயனைட் அருந்தி வீரமரணமடைகிறார்; சிவகுமாரன். இளைஞர் போராட்டத்திற்கும் தியாகத்திற்கும் ஆரம்பமாக அமைந்து விட்ட சிவகுமாரனின் நினைவாக உரும்பிராயில் தூபி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

இப்படியாய் சிங்களவருக்குப் புரியாத அகிம்சை மொழியில் பேசிக் கொண்டிருப்பதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. அவர்களுக்குப் புரிகின்ற பாசையிலே பேசுவதற்கு இளைஞர்கள் அணிவகுக்கத் தொடங்கிக் கொண்டிருந்தனர். இந்த இளைஞர்களில் ‘தம்பி’ என்று மற்றவர்களால் அழைக்கப்படும் தேசியத்தலைவர் திரு பிரபாகரனும் ஒருவர்.

இவரும் இன்னும் சில இளைஞர்களுமாய் இணைந்து புதிய தமிழ் புலிகள் என்ற பெயருடன் விடுதலைப் போரை ஆரம்பிக்கின்றனர்.

விரோதியை விடத் துரோகியை ஆபத்தானவர்கள் என்பதை உணர்ந்த இவர்களது பார்வை தமது பதவி சுகத்திற்காக அரசுடன் ஒட்டிக் கொண்டு தமிழ் விரோத செயல்களில் ஈடுபடும் அரசியல் வாதிகள் மீது பாய்கிறது.

அந்த வகையில் சிறிமா அரசுடன் ஒட்டிக் கொண்டு தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலைக்குக் காரணமாக இருந்தவரான அல்பிரட் துரையப்பாவைக் கொல்வதற்கு தேசியத்தலைவர் பிரபாகரனும் அவரது கூட்டாளிகளும் திட்டமிடுகின்றனர். அதன் படி துன்னாலை வரதராஜப் பெருமாள் கோயிலில் வைத்து 1975ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் திகதி அல்பிரட் துரையப்பா சுட்டுக் கொல்லப்படுகிறார்..

சிறுபிள்ளை வேளாண்மை என்று எள்ளி நகையாடியவர்களும் மெல்லத் தமக்குள் குசுகுசுத்து இளைஞர்களின் வீரத்தைப் பேசும் சம்பவங்களுக்கு ஆரம்பமாய் அமைந்தது அந்தச் சம்பவம்.

புதிய தமிழ்ப் புலிகளின் நடவடிக்கைகளுக்கும் விஸ்தரிப்பிற்கும் ஆயுதக் கொள்வனவிற்கும் எனப் பணம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் புதிய தமிழ்ப் புலிகள் புத்தூர் வங்கிக்குள் புகுந்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்தையும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளையும் கொள்ளையடிக்கிறார்கள்

1976ம் ஆண்டு வைகாசி மாதம் ஐந்தாம் திகதி புதிய தமிழ் புலிகள் இயக்கமானது தமிழீழ வடுதலைப் புலிகள் என்ற பெயருடன் புத்தூட்டம் பெறுகிறது.

அல்பிரட் துரையாப்பா கொலை, புத்தூர் வங்கிக் கொள்ளை என்பவற்றைத் தொடர்ந்து சிங்கள அரசாங்கம் விசேட பொலிஸ் குழுக்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்புகிறது.

அவர்கள் அப்பாவி இளைஞர்கள் மீது தம் கோபத்தைக் காட்டுகிறார்கள். இது இளைஞர்கள் மத்தியில் தமக்கான ஒரு இராணுவத்தின் அவசியத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. விளைவாய் பலரும் விடுதலை இயக்கங்களுடன் தம்மை இணைத்துக் கொள்கிறார்கள்.. வங்கிக் கொள்ளைகளும் காவல்துறையினருக்கெதிரான தாக்குதல்களும் தொடர்கின்றன.

நாடு பொருளாதார ரீதியாக மிகவும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில் 1977 இல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வட்டுக்கோட்டைப் பிரகடனத்தை வலியுறுத்தி தமிழீழத்திற்கு ஆணை தரும்படி வாக்குக் கேட்டது. அதன் படி வடக்கில் மொத்த பதின்நான்கு ஆசனங்களையும் கிழக்கில் ஐந்தில் நான்கு இடங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணி வென்றது.

தென்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றி பெற்றது. சுதந்திரக் கட்சி படுதோல்வி காண தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியும் கிடைத்தது.

1977இல் மற்றும் ஒருமுறை தமிழ் மக்கள் மீது இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ்தேவி ரெயில் அநுராதபுரத்தில் தாக்குதலுக்குள்ளானது. பெரும் இனக்கலவரம் நாடு முழுவதும் தலைவிரித்தாடியது. பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. அகதிகளாகப் பாடசாலைகளிலும் கோயில்களிலும் தஞ்சமடைந்தவர்கள் வடக்கு கிழக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வடக்கு கிழக்கே தமிழரின் தாயகம் என்பதை சிங்களமே ஒத்துக் கொண்டதற்கு அடையாளமிது.தமிழ் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கிறது எனக் கண்டு தமிழரையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற து.சு. ஜெயவர்த்தனா மாவட்ட அபிவிருத்தி சபை என்னும் எலும்புத் துண்டை வீசியெறிகிறார். அந்தத் எலும்புத்துண்டு கூட வேறு யாருடைய கையிலும் சிக்கி விடக்கூடாது. மாறாக தனது கட்சிக்கு விசுவாசமாக வாலையாட்டிக் கொண்டிருப்பவர்களிடமே சென்றடைந்து விட வேண்டும் என்பதற்காக தென்னிலங்கையிலிருந்து குண்டர்களை காமினி திசாநாயக்கா மற்றும் சிறி;ல் மத்தியூ தலைமையில் அனுப்பி வாக்கு மோசடிக்குத் தயாராகிறார். ஆனாலும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பெரும் தோல்வி கிடைக்கிறது. அவர்களது கோபம் தமிழ் மாணவர்கள் கல்வியல் காட்டும் அக்கறையைச் சிதைப்பதற்கான தார்க்கத்தைத் தேடுகிறது.

அந்தக் கொடியவர்களின் தீக் கரங்கள் யாழ்ப்பாண நூலகத்தை பஸ்பமாக்குகிறது. 94 ஆயிரத்ததிற்கு மேற்பட்ட நூல்கள் மற்றும் ஆவணங்களுடன் தென்னாசியவின் சிறந்த நூலகமாகக் காட்சி தந்த யாழ்ப்பாண நூலகம் சாம்பல் மேடாகிறது.

தமிழர்கள் ஆலய வழிபாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள். கோயில் என்றாலே பக்தியுடன் பணிபவர்கள். அவர்கள் கோயிலுக்கு அடுத்தபடியாக மதிப்பது நூலகங்களையே. தாம் பூசித்த அந்தப் பெருங் கோயிலின் இழப்பு ஒவ்வொரு தமிழனது மனதிலும் ஆழப் பதிந்து விட்ட சோகமானது. தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற கோசத்தை அடிமனதில் பதியச் செய்து விட்டது.

1980 களின் ஆரம்பத்தில் வீறுகொண்ட இந்தப் போராட்டத்தில் பல இளைஞர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். தமிழ் பிரதேசங்களில் காவற்துறையினருக்கெதிரான தாக்குதல்களும் துரோகிகளுக்கெதிரான தாக்குதல்களும் மெல்ல மெல்ல அதிகரித்தன.

தமிழ் மக்களின் எழுச்சியை அடக்க துசு ஜெயவர்த்தனா இராணுவத்தை ஏவி விட்டார். தனது மருமகன் திஸ்ஸ வீரதுங்கவிடம் அதிகாரங்களை ஒப்படைத்து வட இலங்கையில் இளைஞர்களின் எழுச்சியை அடியோடு துடைத்தெறிந்து விட்டு வரும்படி அனுப்பினார்.

யாழ்ப்பாணம் வந்த திஸ்ஸ வீரதுங்க சர்வாதிகாரி போல் தன்னிஸ்டப்படி தமிழரைக் கைது செய்து சித்திரவதைகள், தாக்குதல்கள் என்று வெறியாட்டங்களில் ஈடுபடத் தொடங்கினார்.

இராணுவத்தின் அட்டகாசம் இளைஞர்கள் மத்தியில் தோன்றியிருந்த விடுதலை நெருப்பை கொழுந்து விட்டெரியச் செய்தது.

இளைஞர்கள் விடுதலைப் போரில் தம்மை இணைத்துக் கொண்டனர். இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களும் அதிகரித்துக் கொண்டே இருந்தன.

இந்த வகையில் 1982ம் ஆண்டு ஆடி மாதம் 2ம் திகதி நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய போராளிகளிடம் இருந்தவை இரண்டே இரண்டு ஆயுதங்கள் தான். அதில் ரிவோல்வரை வைத்திருந்த சங்கர் என்ற போராளி சந்திக்கும் முதல் தாக்குதல் களமும் அதுதான். அந்தத் தாக்குதலில் 4 காவற்துறையினர் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு போராளிகள் வெற்றியுடன் மீள்கின்றனர்.

அதே ஆண்டில் சங்கர் தங்கியிருந்த வீடு முற்றுக்கையிடப்படுகிறது. சங்கர் தப்பிக்கிறான். ஆனால் இராணுவத்தின் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டொன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்க்கிறது. குருதி குமுறிப் பாய்கின்றது. அத்தனை வலியையும் தாங்கிக் கொண்டு பாதுகாப்பான இடத்துக்குச் சென்ற சங்கர் தன்னுடைய ஆயுதத்தை மற்றொரு போராளியிடம் ஒப்படைத்து விட்டு மயக்கமடைகிறான்;.

இராணுவம் வீதி எங்கும் நிறைத்திருந்ததால் எங்கும் சிகிச்சையளிக்க முடியாத நிலை. மிகுந்த சிரமங்களிற்கு மத்தியில் இந்தியாவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கிறார்கள்.

1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி தலைவரின் மடியிலே அவர் கைகளைப் பற்றியபடியே தன் இறுதி மூச்சை விடுகிறான் சங்கர். சங்கரின் இழப்பு சோகத்தைத் தந்தாலும் தமிழ் மக்கள் மத்தியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளிடத்திலும் தாயகத்தை மீட்டேயாக வேண்டும் என்ற உத்வேகத்தைத் தருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் தங்கியிருந்த தேசியத் தலைவரும் நாடு திரும்புகின்றார். விடுதலைப் போர் வீச்சுப் பெறுகிறது.

1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் திகதி. அட்டகாசம் பண்ணித்திரியும் சிங்கள இராணுவத்திற்குப் பெரிய அடி ஒன்றைக் கொடுப்பதற்குப் புலிகள் தயாராகின்றனர்.. பலாலி வீதியில் ரோந்து செல்லும் வாகனத் தொடரை வழிமறித்து தாக்குவது தான் திட்டம்.

அதனைச் செயற்படுத்துவதற்காக தேசியத்தலைவருடன் கிட்டு, புலேந்திரன், செல்லக்கிளி உள்ளிட்ட போராளிகள் திருநெல்வேலியிலுள்ள தபாற் பெட்டிச் சந்தியினருகே காத்திருக்கின்றனர். வெற்றிகரமாக நடந்து முடிந்த அந்தத் தாக்குதலில் 13 சிங்களப் படையினர் கொல்லப்பட்டனர். சிங்களப் படைக்கெதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் அது.

தாக்குதல் செய்தியைக் கேள்விப்பட்டதும் ஜே.ஆர் ஜெயவர்த்தனா அதிர்ந்து போகிறார். செய்தி தென்னிலங்கை எங்கும் பரவுகிறது. இறந்த பதின்மூன்று இராணுவத்தினரின் இறுதி நிகழ்வுகளும் பொறளை கனத்தையில் நடத்தப்படத் திட்டமிடப்படுகிறது.

அங்கே மக்கள் வெள்ளம் கூடுகிறது. அன்று பௌத்தர்களுக்கு நோன்மதி தினம். அன்றைய தினம் மதுச்சாலைகள் மூடப்பட்டிருக்கும். ஆனால் அங்கு கூடியவர்கள் மது போதையில் இருக்கிறார்கள். ஏதோ திட்டத்துடன் கூடியிருப்பது தெரிகிறது. நேரம் கழிந்து கொண்டே இருக்கிறது. ஆனால் சடலங்கள் வந்து சேரவில்லை. கனத்தையில் கூடியிருந்தவர்களின் கவனம் பொறளைப் பகுதியிலிருந்த தமிழ்க் கடைகளின் மீது திரும்புகிறது.. அங்கிருந்த தமிழர் கடைகளைச் சூறையாடுகிறார்கள். சொற்ப நேரத்திற்குள்ளாகவே கொழும்பு முழுவதும் தமிழருக்கெதிரான தாக்குதல்கள் ஆரம்பித்து விடுகின்றன. தாக்குதல் நடத்தியவர்களின் கைகளிலே வாக்காளர் டாப்புகள். அதிலுள்ள தமிழ்ப் பெயர்களைக் கொண்டு வீடுகளைத் தேடிப் பிடித்துத் தாக்குகிறார்கள்.

கலவரம் மலையகம் உள்ளிட்ட ஏனைய பகுதிகளுக்கும் பரவுகிறது. இராணுவமும்; பொலிசாரும் கலகக் காறர்களுக்கு உதவுகிறார்கள்.

chandrika_400வீதிகளெங்கும் தமிழர்கள் தேடிப் பிடித்துத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்க வெலிக்கடைச் சிறையில் மற்றொரு கோரம் அரங்கேறுகிறது. அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 35 கைதிகள் அங்கிருந்த சிங்களக் கைதிகளாலும் சிறைக்காவலர்களாலும் துடிக்கத் துடிக்கக் கொல்லப்படுகிறார்கள். உலகின் எங்கும் நிகழாத கோரம் இது. ஆனால் காவல் துறையோ அரசோ ஏனைய கைதிகளைக் காப்பாற்றவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இரண்டு நாட்கள் கழித்து மேலும் 17 தமிழ்க் கைதிகள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றனர்.

இத்தனை சம்பவங்களையும் கண்டும் காணாமல் இருந்த து.சு. ஜெயவர்த்தனா ஐந்து நாட்கள் கழித்துத் தொலைக்காட்சியில் தோன்றுகிறார். நடந்த சம்பவங்களுக்காகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்டிருப்பார் என்றோ அல்லது சிங்கள மக்களை அமைதி காக்குமாறு கேட்டிருப்பார் என்றோ நீங்கள் நினைத்தால் இன்னும் சிங்களத் தலைவர்களைச் சரியாக எடை போடவில்லை என்றே அர்த்தப்படுத்த வேண்டும்.

துசு சொன்னது இதுதான்

“தனிநாடு கேட்ட தமிழர்களுக்குச் சிங்கள மக்கள் தக்க பாடம் புகட்டி விட்டனர். இனி எவராவது தனிநாடு என்ற பேச்செடுத்தாலே தொலைத்து விடுவோம். சொத்துக்களைப் பறிப்போம். தனிநாடு பற்றிப் பேசுவோர் சார்ந்துள்ள இயக்கங்கள் கட்சிகளைத் தடைசெய்வோம்.’’

தார்மீக சமுதாயத்தை உருவாக்குவதாகச் சொல்லி ஆட்சிக்கு வந்த, முழு நாட்டுக்குமே தன்னை அதிபர் என்று சொல்லிக் கொண்ட, பௌத்த தர்மத்தைப் பேணுவதாகச் சொல்லிக் கொண்ட ஒரு அரசுத் தலைவர் பேசிய பேச்சு இது

கௌதம புத்தரின் வழிவந்தோர் என்று சொல்லிக் கொண்டவர்களின், ஒரு எறும்பைக் கூடக் கொல்ல மாட்டோம் என்று பேசித் திரிந்தவர்களின் சுய ரூபத்தை உலகமே அறிந்து கொள்கிறது.

இலங்கையின் நிகழ்வுகளைக் கேள்விப்பட்ட தமிழ் நாடு கொதித்தெழத் தொடங்கி விட்டது. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியுடன் தொடர்பு கொள்கிறார். மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இலங்கை நிலமை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியையும் சினமடையச் செய்கிறது. அவர் ஜேஆருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்கிறார். அதன் பின்பே வன்முறைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கிறது.

இதனைத் தொடர்ந்து இலங்கை விவகாரத்தில் குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் அக்கறை செலுத்தத் தொடங்கிய இந்திரா காந்தி 83 கலவரம் ஓய்ந்து சில மாதங்களுக்குள்ளாகவே தனது சிறப்புத் தூதுவராக பு. பார்த்தசாரதியை கொழும்புக்கு அனுப்புகிறார். பார்த்தசாரதி இலங்கை அரசுடனும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருடனும் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்துகின்றார்.

இந்த நிலையில் ஈழப் பிரச்சினையின் போக்கையே தலைகீழாக மாற்றி விட்ட அந்தச் சோக சம்பவம் நடந்தேறுகிறது. 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்ப்பாதுகாவலன் ஒருவனாலே சுட்டுக் கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரசியல் அநுபவம் இல்லாத ராஜிவ் காந்தி பிரதமராகிறார். ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்திலும் சமரச முயற்சிகள் தொடர்வதற்கான சமிக்ஞைகள் தெரியத் தொடங்கியதும் துசு தனது அரசியல் சாணக்கியத்தை அரசியல் கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தியிடம் காட்டுகிறார்.

ஈழப் பிரச்சினையைப் புரிந்து கொண்டு நியாயமாகச் செயற்பட்டு வந்த பார்த்தசாரதிக்குப் பதிலாக வேறொருவரை நியமிக்கும்படி துசு கேட்க ராஜீவும் அதற்குச் சம்மதிக்கிறார்.

பார்த்தசாரதிக்குப் பதிலாக பண்டாரியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. அதே காலப்பகுதியில் இலங்கைத் தூதுவராக திட்சித் நியமிக்கப்படுகிறார்.

இந்த நிலையில் 1985ம் ஆண்டு பூட்டானின் தலைநகர் திம்புவில் இருதரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படுகிறது. தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மிகவும் அடிப்படையான நான்கு அம்சத் திட்டத்தை முன்வைக்கின்றன.

1. தமிழ் மக்கள் தனித் தேசிய இனம்
2. வட – கிழக்கு மாகாணங்கள் அவர்களின் தாயக பூமி
3. அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமை உண்டு
4. இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவரும் குடியுரிமை, அடிப்படை உரிமைகளுக்கு உரித்துடையவர்கள்

என்பனவே இந்த அடிப்படை அம்சங்கள்.

தமிழர் தரப்பின் இந்த நான்கு அடிப்படைக் கோரிக்கைகளில் முதல் மூன்றையுமே சிங்களத் தரப்பு எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட பேச்சு முடிவுக்கு வருகிறது.

அரசியல் காய் நகர்த்தல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க யாழ்ப்பாணம் முழுவதையும் தமது கட்டு;பபாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட போராளிகள் ஒரு அங்கீகரிக்கப்படாத தனி இராச்சியத்தை நடத்த ஆரம்பிக்கின்றனர்.

இநத நிலையில் வடமாராட்சியை இராணுவம் கைப்பற்றியது. அங்கிருந்த இளைஞர்களை தாறுமாறாகக் கொன்று குவித்தும் கைது செய்தும் பேயாட்டம் புரிந்தது.

இவர்களுக்குத் தக்க பாடம் புகட்டத் தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராகினர். வடமாராட்சியைக் கைப்பற்றிய இராணுவம் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்தது. அந்த முகாமை புதியதொரு ஆயுதத்தைக் கொண்டு தாக்குவதற்கான திட்டமது.

நெஞ்சில் ஓர்மமும்; நாட்டுக்காக, மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்கும் தியாக சிந்தையும் மட்டுமே இந்த ஆயுதத்தின் மூலதனங்கள். ஆம்! தம்மையே ஆயுதமாக்கும் கரும்புலிகள் சகாப்தத்தின் ஆரம்பம் அது

1987ம் ஆண்டு யூலை மாதம் 5ம்திகதி வல்லிபுரம் வசந்தன் என்ற இயற்பெயர் கொண்ட கப்டன் மில்லர் முதற் கரும்புலியாகி நெல்லியடி மகா வித்தியாலய முகாமை வெடிமருந்துகள் நிரப்பிய தனது வாகனத்தின் மூலம் துவம்சம் செய்கிறான். தனியொருவனாக நூற்றுக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்று சிங்கள இராணுவத்தின் உள உறுதியையே தகர்த்து வீரகாவியமாகிறான்.

வெற்றிக் களிப்பில் மிதந்த துசு அரசுக்கு விழுந்த பெருத்த அடி அது. இதனிடையே வடமாராட்சியில் சிங்கள இராணுவத்தின் அட்டகாசங்கள் இந்திய அரசிற்கும் எரிச்சலைக் கொடுக்க அவர்கள் சிங்கள அரசிற்கு சில நிர்ப்பந்தங்களைக் கொடுக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் இந்தியாவினால் தான் அடக்கப்பட்டு விடுவோமோ என்ற சந்தேகம் கலந்த அச்சம் துசு இற்குத் தோன்ற அவர் தனது அரசியல் குள்ளநரித்தனத்தைப் பாவிக்கத் தொடங்கினார். அரசியல் அநுபவமில்லாத பெரிய நாட்டின் தலைவரை அரசியல் குள்ளநரியான சிறிய நாட்டின் தலைவர் ஜே. ஆர் தன் வலைக்குள் சிக்க வைத்தார்.

தமிழர்களுக்காக, தமிழர்களின் அடிமைத்தளையை நீக்குவதற்காக, தமிழ் மண்ணை மீட்பதற்காக, தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈந்து போராடிக் கொண்டிருக்கின்ற விடுதலைப் புலிகளின் ஆலோசனை கேட்கப்படாமலே இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இதனிடையே யாழ்ப்பாணம் சென்று தேசியத் தலைவரைச் சந்தித்த அதிகாரிகளிடம் பல சந்தேகங்களை தேசியத் தலைவர் கேட்டார். இது குறித்து டெல்லி வந்து ராஜீவ் காந்தியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவரை டெல்லிக்கு அழைத்தார்கள்

டெல்லியில் வைத்து ஒப்பந்த நகல்கள் வழங்கப்பட்டபோது அவற்றில் ஏற்றுக் கொள்ள முடியாத பல விடயங்கள் இருப்பது குறித்து தலைவர் விசனம் தெரிவிக்க அவற்றிற்கு மழுப்பலான பதில்கள் தரப்பட்டு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள புலிகள் வற்புறுத்தப்பட்டனர்.

இதனை சில தினங்களின் பின் சுதுமலையில் நடந்த மாபெரும் கூட்டத்தில் தலைவர் அவர்கள் தனது உரையில் தெரிவித்திருந்தார்;.

1987 ஜுலை 29 இல் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் எத்தனையோ குறைகள், குற்றங்கள், முரண்பாடுகள் இருந்தன. இவ் ஒப்பந்தத்தில், தமிழர் தரப்பை நசுக்கிய சிங்கள அரசும் பாதிக்கப்பட்ட தமிழர் தரப்புமே கைச்சாத்திட்டிருக்க வேண்டும். மத்தியஸ்தம் வகித்த இந்தியா சாட்சிக் கையெழுத்திட்டிருக்க வேண்டும். ஆனால் சாட்சிக் கையெழுத்துக்குப் பதிலாக தமிழர் தரப்பிற்காக இந்தியா கையெழுத்திட்டது விந்தையானது.

இந்திய மத்திய அரசின் வாக்குறுதிகளை நம்பி ஆயுதங்களை ஒப்படைக்கவும் புலிகள் ஆரம்பித்திருந்தனர். ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட எந்த விடயங்களையும் பற்றி சிங்கள அரசு அலட்டிக் கொண்டதாகவே தெரியவில்லை. மாறாக தென் தமிழீழத்தில் அசுர வேகத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஸ்தாபிப்பதில் தன் முழுக்கவனத்தையும் செலுத்திக் கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகள் கொதித்தனர். தமது எதிர்ப்பைக் காட்டுவதற்குத் சரியான வழியை யோசித்தவர்களுக்கு அஹிம்சையைப் போதித்த இந்தியாவிற்கு அஹிம்சை மார்க்கமே சரியெனத் தோன்றியிருக்க வேண்டும்.

ஒப்பந்த விதிகளுக்கமைய தமிழீழத்தில் இடைக்கால நிர்வாகம் அமைக்கப்பட வேண்டும்.

புனர்வாழ்வு என்ற போர்வையில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்

போன்ற நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் சாகும்வரை உண்ணாவிரதத்தில் குதித்தார்.

1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் திகதி நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்றலில் திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பமானது. அகிம்சையைப் போதித்த இந்தியா திலீபனுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் நல்ல பதிலைத் தரும் என்றே தமிழர்களில் பலர் நம்பினர். ஆனால் இந்தியா மௌனமாகவே இருந்தது

ஒட்டு மொத்தத் தமிழினத்தையே கதறி அழ வைத்த அந்தத் துயரம் 26ம் திகதி நடந்தது.

ஆம்! மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று ஆசைப்பட்ட அந்தத் தியாகி நல்லூர் மண்ணிலே இந்தியாவின் அஹிம்சை முகத்திரையைக் கிழித்து மூச்சிழந்து போனான்.

இந்தியா விடிவைப் பெற்றுத் தரும் என்று நம்பிய சாதாரண தமிழ் மக்களுக்குக் கூட இந்தியாவின் கபட நாடகம் புரியத் தொடங்கியது. இந்தியாவின் மீதான நம்பிக்கையை தமிழீழ மக்கள் முற்றாக இழக்க வைத்த சம்பவம் இது.

இந்த நிலையில் சிங்கள அரசின் பிடிவாதத்தனத்திற்கும் இந்திய அரசின் கையாலாகாத்தனத்திற்கும் சாட்சியாக அமைந்த, தமிழ் மக்களை இந்திய அரசின் மேல் ஆத்திரப்பட வைத்த, தங்களது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய வீரத் தளபதிகளை அநியாயமாகப் பறிகொடுத்த, பலிகொடுத்த அந்தச் சோக சம்பவம் நடந்தேறியது.

ஒப்பந்த விதிகளுக்கமைவாக கடலில் பயணம் செய்து கொண்டிருந்த புலிகளின் முன்னணித் தளபதிகளான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 புலி வீரர்களை இராணுவம் கைது செய்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு மதிப்பளித்து சண்டை செய்யாமலே அவர்கள் சரணடைகிறார்கள். புலித் தளபதிகள் கைது செய்யப்பட்ட செய்தியறிந்த சிங்கள அரசு அரசியல் கணக்குப் போட ஆரம்பித்து விட்டது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் எழுதப்பட்டதால் கொதிப்படைந்திருந்த சிங்கள மக்களிடம் தனது திறமையைக் காட்ட துசு திட்டமிட்டார்.. கைது செய்யப்பட்ட தளபதிகளை கொழும்புக்குக் கொண்டு வருமாறு உத்தரவிட்டார்.

எக்காரணம் கொண்டும் கைது செய்யப்பட்டவர்களைக் கொழும்பிற்குக் கொண்டு போகக் கூடாது என்பதில் புலிகள் உறுதியாக இருந்தனர். அதை இந்தியத் தரப்பிடம் உறுதியாகக் கூறவும் செய்தனர். ஆனால் இந்திய அரசினால் அவர்களைக் கொழும்புக்குக் கொண்டு போவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அல்லது தடுத்து நிறுத்த விரும்பவில்லை.

இந்த நிலையில் 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5ம் திகதி கொழும்பிற்குக் கொண்டு செல்லப்படுவதற்காக விமானத்தில் ஏற்றப்பட இருந்த வேளை 17 வேங்கைகளும் சைனைட்டை அருந்துகிறார்கள். அவர்களி;ல் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 வீரர்கள் வீரமரணம் அடைகின்றனர். போர்க்களங்களில் சிங்களத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்த வீரத் தளபதிகளை கபடமாகக் கொன்று சிங்களம் எக்காளமிட்டது. இந்திய கைகட்டி மௌனியாகி நின்றது.

அத்துடன் இந்திய அரசின் மீதான நம்பிக்கை முற்றாகத் தகர்ந்து போக இந்திய இராணுவத்துடனான மோதல் ஆரம்பமாகிறது.

சுக்கானைப் பிடித்தபடி இந்தச் சுக்கான் எரிந்து முடிவதற்குள் எமது இராணுவம் உங்களை முடித்து விடும் என்று எள்ளி நகையாடிய திக்சித்திற்கும் இந்தியாவிற்கும் தாம் போட்டது தப்புக் கணக்கு என்று புரிந்தது.

புலிகளின் வீரத்தின் முன் பல இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆத்திரமடைந்த இந்திய இராணுவம் பொது மக்கள் மீது கடுந் தாக்குதலைத் தொடுத்தது. யாழ்ப்பாண் வைத்தியசாலைக்குள்ளும் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி பலரைக் கொன்று குவித்ததுசிங்கள இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் செய்த அட்டூழியங்களுக்கு இணையான அல்லது அதை விட ஒருபடி மேலான அராஜகங்களைக் கட்டவிழ்த்து விட்டது. தேசியத் தலைவரையும் ஏனைய புலிகள் இயக்க முக்கியஸ்தர்களையும் கொன்று விடுவதற்கு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்ட இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு கிடைத்ததெல்லாம் தோல்வியே.

இந்நிலையில் புலிகளுக்கும் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவிற்கும் இடையே பேச்சுக்கள் நடைபெற்றது. இந்திய இராணுவத்தை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. எதையுமே சாதிக்காத, இழப்புக்களை மட்டுமே சந்தித்து ஒட்டு மொத்தத் தமிழினத்தின் வெறுப்பையும் சம்பாதித்த கூட்டமாக இந்திய இராணுவம் வெளியேறியது.

வழமையான சிங்களத் தலைவர்கள் போலவே பிரேமதாசாவும் தமிழர் தரப்பை ஏமாற்ற முயற்சிக்கிறார். போர் நிறுத்தம் முடிந்து மீண்டும் போர் ஆரம்பமாகிறது..

1990ம் ஆண்டு யூலை மாதம் பத்தாம் நாள் முதல் முறையாக கடற் கரும்புலித்தாக்குதல் நடத்தப்படுகிறது. பருத்தித்துறைக் கடலில் நின்ற சிங்களத்தின் கட்டளைக் கப்பலைத் தகர்த்து மேஜர் வினோத், மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோர் வீரகாவியம் படைக்கின்றனர். கடலும் சிங்களத்திற்குச் சிம்மசொப்பனமாகிறது.

பல முனைகளிலும் அடி வாங்கினாலும் இழப்புக்களைச் சந்தித்தாலும் தமிழரை போரியல் ரீதியாக வென்று விட வேண்டும் என்ற எண்ணம் எல்லாச் சிங்களத் தலைவர்களிடமும் ஆழப் பதிந்தே இருந்து வந்திருக்கிறது.

அதற்குப் பிரேமதாசாவும் விதிவிலக்கல்ல. தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றிக் கொலை செய்ய இராணுவத்தை ஏவி விட்ட பிரேமதாசாவும் 1993ம் ஆண்டு மே மாதம் 1ம் திகதி மேதின ஊர்வலத்தில் வைத்துக் கொல்லப்படுகிறார்.

முன்னர் போலன்றி தமிழர் தலைமை சரியான பார்வையுடன் சிங்கள அரசியலையும் அரசியல் தலைவர்களையும் பார்க்கத் தொடங்கியிருந்தாலும் சாதாரண தமிழ் மக்கள் மத்தியில் சமாதானத்தை உருவாக்கக் கூடிய தலைவராக இவர் இருப்பாரோ என்று நம்பிக்கை கொள்ள வைப்பவர்களும் சிங்கள அரசியலில் தோன்றிக் கொண்டு தான் இருந்தார்கள்.

அந்த வகையில் தனிச் சிங்களச் சட்டத்தை ஆரம்பித்து வைத்த பண்டாரநாயக்காவினதும் தரப்படுத்தலை அமுல் செய்த சிறிமா பண்டாரநாயக்காவினதும் வாரிசான சந்திரிக்கா குமாரணதுங்கவும் சமாதானப் புறா வேடம் தாங்கி அரசியலில் நுழைந்தார். ஆனால் சொற்ப காலத்திற்குள்ளாகவே சமாதானத்திற்கான யுத்தத்தை ஆரம்பித்து யுத்தத்தை கொண்டு நடத்தும் பொறுப்பை மாமனாரான அநுருத்த ரத்வத்தையிடம் கொடுத்தார்.

இவரது காலப்பகுதியில் தான் வரலாற்றில் பதியப்பட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்தது. 1995ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண மக்கள் அனைவருமே குடிபெயர வேண்டி ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து புலிகளின் பலம் அழிந்து விட்டது என்று சிங்களம் கணக்குப் போட்டது. சர்வதேசமும் இதை நம்பியது. ஆனால் எல்லாக் கணக்குகளையும் தவிடு பொடியாக்கும் விதமாக பெரும் பாதுகாப்புடன் அமைந்திருந்த பாரிய முல்லைத்தீவு இராணுவ முகாமைத் தாக்கியழித்ததுடன் முழு முல்லைத் தீவு மாவட்டத்தையும் புலிகள் மீட்டெடுத்தனர்..

ஓயாத அலைகள் தாக்குதல் மூலம் ஜெயசிக்குறு படையினரைத் தமிழர் தாயகத்தை விட்டு ஓட்டமெடுக்க வைத்தனர்.

இப்படியாக அடிமேல் அடி பட்ட போதும் சிங்களத்தின் போர் வெறி அடங்கவில்லை. சந்திரிக்காவிற்குப் பின்னர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சியைப் பிடித்த காலத்தில் மற்றுமொரு முறை யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. இம்முறை நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகள் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தது.

இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்வதற்கு முன்பாகவே ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் ஐக்கிய தேசியக ;கட்சி அரசாங்கம் சந்திரிக்காவினால் கலைக்கப்பட்டது. இது பேச்சுவார்த்தையைப் பாதிக்கும் என்று தெரிந்திருந்தும் சர்வதேசம் மௌனமாகவே இருந்து விட்டது.

சந்திரிக்காவைத் தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் ஏறிய மஹிந்த ராஜபக்சவும் அதே யுத்த வெறியை மக்களுக்கு ஊட்டி யுத்தத்தால் தமிழரை அழித்து விடலாம், அடக்கி விடலாம் என்று செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நீதியும் நியாயமும் நிலைத்து நிற்பது உண்மையெனில் தர்மமும் சத்தியமும் நிலையானது என்பது யதார்த்தமெனில் வரலாறு மீண்டுமொரு பாடத்தை ஆட்சியாளர்களுககுக் கற்றுக் கொடுக்கும் என்று நம்புவோம்..

SHARE