உடையாற்ற திருவிழாவில பொன்னம்பலத்தாற்ர சைக்கிள்ள வந்து மணியண்ணை வானம் விடுகின்றார்! : த ஜெயபாலன்

337


Manivanan_Visvalingam

“ஞானப்பிரகாசர், ஆறுமுக நாவலர் இறுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் உட்பட பலர் போராடினர். நானும் போராடினேன். எமது சமூகம் முற்போக்கான நாகாரீகமான சமூகமாக மாற வேண்டும் என்று போராடினார்களே தவிர வேறொன்றும் இருக்கப்போவதில்லை. அவர்கள் செய்தது தவறு எனின் மேலே உள்ளவர்களின் துரோகிகள் பட்டியலில் ஞானப்பிரகாசர், ஆறுமுக நாவலர், மேதகு பிரபாகரன் ஆகியோர் வாரிசையில் நான் சேர்க்கப்படுவதை பெருமையாக கருதுகின்றேன்”. – மணிவண்ணன் விஸ்வலிங்கம் – மாநகர முதல்வர் வேட்பாளர் – தமிழ் காங்கிரஸ் – டிசம்பர் 27, 2017 இல் தனது முகநூலில் எழுதிய பதிவு.

கவுணாவத்தை வேள்வியை – கிடாய் வெட்டை நீதிமன்ற உத்தரிவினூடாக நிறுத்தியதை தமிழ் காங்கிரஸின் தமிழ் தேசியப் பேரவையின் மாநகர முதல்வர் வேட்பாளர் மணிவண்ணன் தமிழ் தேசியக் காவலன் இப்படி விம்பம் கட்டி இருக்கின்றார். இந்த விம்பம் கட்டலுக்கு பழம் தின்று கொட்டைபோட்ட பழுத்த தமிழரசுக்கட்சியினர் கூட ஈடுகொடுக்க முடியாது.

மேலே மணிவண்ணன் குறிப்பிடுகின்ற ஞானப்பிரகாசரோ, ஆறுமுகநாவலரோ பிரபாகரனோ தமிழ் சமூகம் முற்போக்கான நாகரீகமான சமூகமாக மாற வேண்டும் என்று போராடவில்லை. சட்டத்தரணி மணிவண்ணன் முற்போக்காண நாகரீகம் என்று எதைக்கருதுகிறார் என்பது புரியவில்லை. ஞானப்பிரகாசர் காலனியாதிக்கத்தின் கீழ் கிறிஸ்தவமதத் தத்துவங்களை முன்நகர்த்தியவர். அவருக்கும் ஆறுமுகநாவலருக்கும் இடையே மிகுந்த வாக்குவாதங்கள் நிகழ்ந்திருந்தது. ஆறுமுகநாவலர் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை தூக்கி எறிந்து அவர்களை ஏறி மிதித்து சைவத்தை வளர்த்தவர். பெண்கள் படிப்பதை பாவமாகக் கருதியவர்.

இந்த இருவரைக் காட்டிலும் பிரபாகரன் முற்றிலும் மாறுபட்டவர். மணிவண்ணன் கூறுவது போல் பிரபாகரன் ஒருபோதும் வேள்விக்கு எதிராகப் போராடவில்லை. அவர் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி அதற்காக தன்னுயிர் தன் குடும்பத்தாரின் உயிரை இழந்தவர். ஆனாலும் அவர் வளர்த்த வேள்வியில் கவுணாவத்தை வேள்ளிவியில் கொல்லப்பட்ட மீருகங்களைக் காட்டிலும் பல ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் பலியிடப்பட்டது. பிரபாகரனது நோக்கம் சரியானதாக இருந்தாலும் அவர் தேர்ந்தெடுத்த பாதை மிகச் சர்ச்சைக்குரியதாகவே இன்னும் உள்ளது.

Sritharan_S_at_Maveerar_Naalஏற்கனவே பிரபாகரனின் இடம் தனக்குதான் என்ற இறுமாப்போடு சிறிதரன் தமிழரசுக் கட்சியினுள் களம் இறங்கி இருக்கிறார். அதற்குப் போட்டியாக பிரபாகரன் கனவில் மணிவண்ணன் விம்பம் கட்டுகின்றார். இதெல்லாம் சுத்த அபத்தம் என்பது கூடவ தெரியாமல் இருக்கின்றார் சட்டத்தரணி.

ஆனாலும் அவருடைய அறிக்கைகளுக்கு குறைவில்லை. ”எனது மதத்தில் உள்ள பிற்போக்கு தனங்களை, மூட நம்பிக்கைகளை மாற்றி மறுசீரமைக முழு உரித்துள்ளவன் என்று நான் கருதுகின்றேன்” என்று மணிவண்ணன் விட்ட அறிக்கையைப் கேள்விக்கு உட்படுத்தி உள்ளார் அவருடைய முகநூல் நண்பர் ஜெ ஜீவன். “1 .ஆலயத்தினுள் மாதவிடாய் காலத்தினுள் போகக்கூடாது எனும் பிற்போக்கு காட்டுமிராண்டிக்கு எதிராக, 2.ஆண்கள் மட்டுமே பூசாரியாக உள்ளதை எதிர்த்து அன்றைய‌ தமிழ்கங்கிரஸ் கேட்டது போல் 50 / 50 ஆண், பெண் பூசாரிகள்‌ சகல ஆலயங்களிலும் நிலை நிறுத்தப்பட வேண்டும் என 3. பிறப்பால் குறிப்பிட்ட இச்சாதியை சேர்ந்தவர்கள் மட்டும் பூசாரி ஆகலாம் எனும் சகலரும் சமன் என்பதற்கெதிரான கொடிய சிந்தனைக்கெதிராக. 4. குறிப்பிட்ட பகுதிக்கப்பால் குறித்த சாதியை சேர்ந்தவர்களை தவிர பிறர் புகமுடியாது எனும் மனிதகுலத்துக்கு எதிரான அநீதிக்கெதிராக தாங்கள் நடாத்தும் சட்டப்போராட்டத்தையும் அறியத்தாருங்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த முற்போக்கான விடயங்களில் எல்லாம் மணிவண்ணன் மெளனமாய் இருந்தால் கூட பரவாயில்லை, அவர் மறுதலையாக பிற்போக்குவாதிகளோடு சேர்ந்து சாதிமான்களோடு சேர்ந்து தனது வாக்கு வங்கியை நிரப்பத் தலைப்பட்டு உள்ளார். நாகவிகாராதிபதியின் தகனக் கிரியையை எவ்வாறு தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்த பயன்படுத்தினாரோ, அதே வழியில் கிந்துசிட்டி மயானப் பிரச்சினையிலும் இரட்டைவேடம் போட்டு சாதிமான்களோடு கைகோர்த்துக் கொண்டார். இது மணிவண்ணனுடைய அரசியல் மட்டுமல்ல தமிழ் காங்கிரஸின் பரம்பரை அரசியல் கொள்கையும் அதுவே.

Kanpollai_Statute(படம்: கன்பொல்லை கிராமத்தில் சாதிய போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்காக கட்டப்பட்ட சிலை இன்றும் உடைக்கப்ப்ட நிலையிலேயே உள்ளது.) “இலங்கையின் வட பகுதியில் வாழுகின்ற தாழ்த்தப்பட்ட மக்களின் மீது அங்குள்ள உயர்சாதியினர், குறிப்பாக வெள்ளாள சாதியினர் செலுத்தி வருகின்ற சாதி ஒடுக்குமுறையும், தீண்டாமைப் புறக்கணிப்பும் மிகவும் கொடூரமானதும் நீண்ட வரலாற்றைக் கொண்டதுமாகும். இதில் சாதி வெறியர்களின் பலம் என்னவென்றால்> அவர்களுக்கு அரசியல் ரீதியிலான ஒரு பலம் இருந்தமையே. தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சி என வர்ணிக்கப்படும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையில் செயல்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே சாதி அடிப்படையில் செயல்பட்ட, யாழ்ப்பாண சைவ வேளாள மேட்டுக்குடியினரைப் பிரதிநிதித்துவம் செய்த கட்சி.

அதேபோல, அக்கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியும் சொல்லளவில் ‘சாதி ஒழிய வேண்டும்” என்று சொன்னாலும், நடைமுறையில் சாதி அமைப்பைப் பாதுகாத்த, அதே யாழ். சைவ வேளாள மேட்டுக்குடியினரின் நலன்களைப் பாதுகாத்த ஒரு கட்சிதான்” என ‘தீண்டாமைக்கெதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக: முன்னுதாரணமான ஒரு போராட்டத்தின் படிப்பினைகள்!’ என்ற தலைப்பில் முதலி சின்னையன் ஏப்ரல் 22, 2017 இல் ரமிழ்ஸ்ரைம்ஸ் இணையத்தளத்தில் தமிழ் தேசியக் கட்சிகளின் சாதியப் பின்னணியை விபரித்து இருந்தார்.

“புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி, சர்வகட்சி மாநாட்டுத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட முன்வந்தது. அதன் தொடக்கப் புள்ளியாக, ‘சாதி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற கோசத்துடன் சாதி அமைப்புக்கும் தீண்டாமைக்கும் எதிரான மாபெரும் கண்டன ஆர்பாட்ட ஊர்வலமொன்றை 1966 ஒக்ரோபர் 21 ஆம் திகதி சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை நடாத்துவதென்றும், முடிவில் யாழ். முற்றவெளி மைதானத்தில் பகிரங்கப் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்துவதெனவும் அக்கட்சி தீர்மானித்தது.

ஆனால் பொலிசார் ஊர்வலத்துக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்கள். அதற்குக் காரணம் இருந்தது. ஆட்சியில் பிற்போக்கு ஐ.தே.க. இருந்தது. அந்த அரசின் பங்காளிகளாக சாதிவெறி பிடித்த தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இருந்தன. வட பகுதியில் பணிபுரிந்த பெரும்பாலான தமிழ் பொலிசார் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததுடன், தமிழ் கட்சிகள் இரண்டினதும் ஆதரவாளர்களாக இருந்தனர். எனவே அவர்கள் சாதி வெறியர்களின் சொற்படியே செயற்பட்டு வந்தனர்” என்றும் முதலி சின்னையன் குறிப்பிட்டு இருந்தார்.

வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ளாவிட்டால் வரலாறு மீளவும் அரங்கேறிவிடும். நாக விகாராதிபதியின் தகனம் தொடர்பாக தமிழ் காங்கிரஸ் வேட்பாளர்களான மணிவண்ணன் விஸ்வலிங்கம், பார்தீபன் வரதராஜன் குழு யாழ் மாநாகரசபை ஆணையாளருக்கு எழுதிய முறைப்பாட்டு கடிதத்தில், ‘தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது அன்றாட தேவைகளுக்கு வந்து செல்லுகின்ற நகரின் மத்தியில் மேற்படி நிகழ்வு (நாகவிகாராதிபதியின் தகனம்) நடைபெறவிருக்கின்றது. இந்த நிகழ்வினால் (சடலம் எரிக்கப்படுவதால்) இச்சூழலுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஏற்கனவே புத்தூர் மயானப் பிரச்சினை பலத்த சர்ச்சைகளைத் தோற்றுவித்து நீதிமன்றத்தால் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதும் தாங்கள் அறியாதது அல்ல. அவ்வாறு இருக்கையில் தமிழர்களின் பண்பாட்டினதும் கலாச்சாரத்தினதும் அடையாளமாக இருக்கின்ற யாழ்ப்பாணத்தின் இதயப்பகுதியில் மேற்படி நிகழ்வை நடாத்துவது சிறந்தது அல்ல” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

Protest_to_Move_Crematoriumநாகவிகாராதிபதியின் தகனம் சூழலுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று புத்தூர் கிந்துசிட்டி மாயானத் தீர்ப்பை மேற்கோள்காட்டும் சட்டத்தரணி மணிவண்ணன், புத்தூர் கிந்துசிட்டியில் மக்கள் மத்தியில் மயனம் இருக்க வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக சாதியமான்களின் பக்கம் நின்று வாதாடியுள்ளார். மணிவண்ணனின் இந்த முற்றிலும் ஒன்றுக்கு ஒன்று முரணான இந்த இரட்டைவேடம் அவரும் அவரது தமிழ் காங்கிரஸ் கட்சியும் அதிகாரத்தின் பக்கமே சாயும் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்து உள்ளது.

நகவிகாராதிபதியின் உடல் முற்றவெளியில் தகனம் செய்யப்பட்டால் ‘இச்சூழலுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்’ என்று நீலிக் கண்ணீர் வடிக்கும் மணிவண்ணன் குழுவினர் புத்தூர் கிந்துசிட்டி மயானத்தருகில் வாழும் மக்களுக்கு என்ன சொல்கின்றார். “காலாகாலமாக மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மயானங்களில் அத்துமீறி குடியேறிவிட்டு பின்னர் குறித்த மயானங்களை அகற்றவேண்டும் என்று விடுக்கப்படுகின்ற சட்டவிரோத கோரிக்கைகள் அங்கிகரிக்கப்படின் யாழ் குடாநாட்டில் இருக்கும் அனைத்து மயானங்களையும் அகற்ற வேண்டிய நிலைமை உருவாகும். அது சட்டவிரோதமாக மயானங்களை ஆக்கிரமிக்கும் செயலை ஊக்குவிக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து” என்று மணிவண்ணன் புரட்டிப் போடுகின்றார்.

முற்றவெளியில் நாக விகாராதிபதியின் தகனம் போன்ற நிகழ்வுகள் சில பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கலாம் ஆனால் அதுவே ‘இச்சூழலுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும்’ என்று ‘தூய கரங்கள் தூய நகரம்’ புகழ் மணிவண்ணன் feel பண்ணுகின்றார். ஆனால் கொக்குவில் மயானம் தொடர்பாக மணிவண்ணன் இப்படிச் சொல்கிறார் “கொக்குவில் இந்து மயானமானது யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் விளையாட்டு மைதானத்திற்கும், மாணவர் விடுதிக்கும், கொக்குவில் புகையிரத நிலையத்திற்கும் நடுவில் அமைந்திருப்பதுடன் குறித்த மயானத்துக்கு அருகில் ஏராளமான குடியிருப்புக்கள் இருக்கின்றபோதும் இதுவரை எத்தகைய சுகாதார சீர்கேடுகள் தொடர்பான முறைப்பாடுகளும் வரவில்லை. குறித்த மயானத்தை அகற்ற வேண்டும் என்ற எத்தகைய கோரிக்கைகளும் இதுவரை எழவில்லை” என்கிறார். ஆனால் மணிவண்ணனின் முகநூலிலேயே சிலர் கொக்குவில் மயானத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

Manivannan_V_Local_Election_Posterமணிவண்ணனினது கரங்கள் மட்டுமல்ல தமிழ் காங்கிரஸின் கரங்கள் ஒரு போதும் தூய்மையாய் இருந்தது கிடையாது. அது பணமும் அதிகாரமும் கைக்கு வந்தால் அதற்காக அது வாதாடும். இவர்கள் கட்டப் போகும் நகரமும் தூய நகரமாய் இருக்கப் போவதில்லை. சாதிய நகரமாய்தான் இருக்கும். மலையக மக்களை கள்ளத்தோணிகள் என்று வாக்குரிமையைப் பறித்த தமிழ் காங்கிரஸ் வாரிசுகள், ஒடுக்கப்பட்ட மக்களை கள்ளக் காணி பிடித்தவர்கள் என்று இன்று முத்திரை குத்தகின்றனர். தமிழ் காங்கிரஸ் அப்புக் காத்துகளும் தமிழரசுக் கட்சி அப்புக்காத்துகளும் வளைச்சுப் போட்ட காணிகளெல்லாம் நல்ல காணி, பஞ்சப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் போக்கிடமில்லாமல் குடியேறிய காணி மட்டும் கள்ளக்காணி. ஜி ஜி பொன்னம்பலத்தாரின்ர DNA யை அப்பிடியே நகல் எடுத்து பிறந்திருக்கிறார்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் – தமிழ்த் தேசியப் பேரவையும்.

ஜி ஜி பொன்னம்பலம் ஒடுக்கப்பட்ட மக்களிடம் வாக்கு வேட்டைக்குச் செல்லும் போது ‘கந்தப்பு எப்பிடி இருக்கிறா? முத்தவளை இன்னும் கட்டிக்குடுக்கேல்லையோ?” என்று கேட்டுக்கொண்டு போவாராம். பள்ளிக்கூடப் பக்கமே போயிராத கந்தப்புவைப் பொறுத்தவரை ‘அந்தப் பெரிய மனுசன் என்ரை பெயரை ஞாபகம் வைச்சிருக்கிறார். என்ரை குடும்பத்தை ஞர்பகம் வைச்சிருகிறார்” என்று பெருமைப்பட்டுக் கொண்டு வாக்கை தமிழ் காங்கிரஸ்க்கு – சைக்கிளுக்கு போட்டுவிடுவார். ஆனால் தன்னிடம் வர முதல் முன்வீட்டில கதைத்து பெயர் பின்னணி எல்லாம் அறிந்து தான் வருகிறார் என்பதை உணரும் அறிவு கந்தப்புவிடம் இல்லை. ஜி ஜி பொன்னம்பலம் ஓடின அதே சைக்கிளில இப்ப கஜேந்திரகுமாரும் மணிவண்ணனும் டிபுள்ஸ் போகினம்.

வாலாற்றில் இருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளத் தவறினால் வரலாறு எம்மை ஈவிரக்கமின்றி தண்டித்துவிடும். அன்று இலங்கையில் பலம்பெற்றிருந்த இடதுசாரிக் கட்சிகள் தமிழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த போது – தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த போது, தமிழ் காங்கிரஸ் உம் தமிழரசுக் கட்சியும் தமிழ் மக்கள் மீது மிகமோசமான அடக்குமுறையை பிரயோகித்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுக் கலவியில் திளைத்திருந்தன. அன்று நாம் நண்பர்களையும் எதிரிகளையும் இனம் காணாததால் மிக மோசமான அழிவைச் சந்தித்தோம். ஆனால் நாம் அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளவில்லை. இன்றும் அதேநிலை தொடர்வதைக் காணலாம்.

தமிழ்ரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுக் கலவியில் உள்ளது. தமிழ் காங்கிரஸ் உயர்சாதிமான்களுக்கு காவடி எடுத்து ஒடுக்கப்பட்ட மக்களை ஏறி மிதிக்கின்றது. அம்மக்களுக்கு எதிராக நீதிமன்றம் வரை சென்று வாதாடி வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எப்போதும் குரல்கொடுத்துவரும் புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சியை விமர்சிக்கும் மணிவண்ணன் சாதிமான்களோடு சேர்ந்து பிற்போக்குத் தனங்களையும் மூடநம்பிக்கைகளையும் மாற்றி மறுசீரமைக்க போகின்றாராம். ‘கேட்பவர்கள் கேணையர்கள் என்ற நினைப்பில் எலி ஏரோப்பிளேன் ஓடும்’ என்று கதைவிடுகிறார் மணிவண்ணன். வல்லை மக்களுக்கு ‘தலைவர் வருவார்’ என்று தமிழீழ விடுதலை இயக்க முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரன் ரீல்விட்ட கதை மறப்பதற்குள் மணிவண்ணன் சாதிமான்களோடு சேர்ந்து புரட்சிசெய்யப் போவதாக ரீல் விடுகின்றார்.

Senthiveel_Si_Kaவன்னி யுத்தத்தில் மக்கள் வகைதொகையாகக் கொல்லப்பட்ட போது புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினசக் கட்சித் தலைவர் சி கா செந்திவேல் உட்பட அதன் முக்கியஸ்தர்கள் இலங்கையில் மக்களோடு நின்று போராடிக்கொண்டு இருந்தனர். ஆனால் அன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் – இன்றைய தமிழ் தேசிய மக்கள் முண்ணணியின் முக்கியஸ்தர்கள் அப்போது பாதுகாப்பாக பந்தாவாக ஐரோப்பாவில் விடுதலைப் புலிகளின் மேடைகளில் வீரமுழக்கம் இட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டபின், இவர்கள் கோத்தபாயா – ராஜபக்ச அரசின் அணுசரணையோடு மீண்டும் இலங்கை திரும்பியதும் இரா சம்பந்தன் பாராளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு ஆசனங்கள் அளிக்காமல் கலைத்தவிட்டதும்; இவர்களுக்கு தமிழ்தேசிய உணர்வு ஊற்றெடுத்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்ததும் தேர்தலுக்காக எழுக தமிழ் நடத்தியதும் வரலாறு.

ஒடுக்கப்பட்ட மக்களின் கலைமதி குடியிருப்புக்கு அருகில் இருப்பதால் நீண்டகாலமாகக் கைவிடப்பட்ட கிந்துசிட்டி மயானத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர, முற்றாக உயர்சாதியினரைக் கொண்ட மயான அபிவிருத்திக்குழு நடவடிக்கை எடுத்தது. அதற்கு உடந்தையாக மயானத்திற்கு சற்று தள்ளியுள்ள அதே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜனசக்தி கிராமத்தைச் சேர்ந்த இருவரை மயான அபிவிருத்திக்குழுவின் உபகுழுவினுள் உள்வாங்கி; அவர்களை முன்நிறுத்தி காய்நகர்த்தினர். சாதிமானான மயான அபிவிருத்திக் குழுவின் துணைத்தலைவரான தியாகராஜாவே மயானத்தக்கு அருகில் உள்ள காணிகளை கலைமதி கிராம மக்களுக்கு விற்றுள்ளார். தற்போது அந்த மயான அபிவிருத்திக்குழுவே மயானம் இயங்க வேண்டும் என்று மணிவண்ணன் மூலம் நீதிமன்றம் சென்றது.

ஆனால் உள்ளுராட்சித் தேர்தல் அறிவித்ததும் முளைத்த காளான் – மணிவண்ணன் சொல்கிறார் “ஆக அங்கு (புத்தூர் கிந்துசிட்டிய மயானத்தில்) நடப்பது ஓர் அரசியற் கட்சியின் அரசியல் நாடகம் மட்டுமே. குறித்த சுடலை காணியை ஆக்கிரமித்து கொடுத்து பணம் சேர்க்கும் ஒரு சிலரின் குறுகிய சுய நலன் மட்டுமே” என்று. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு காணியை விற்ற உயர்சாதி மயான அபிவிருத்திக்குழுவுக்காக அவர்களிடம் பணம் வாங்கி வாதாடும் சட்டத்தரணி மணிவண்ணன் நாக விகாராதிபதியின் தகனத்துக்கு தலையையும் கிந்திசிட்டி மக்களுக்கு வாலையும் காட்டுகின்றார். அனைத்து தொழில்களிலும் மனச்சாட்சியற்ற மிக மோசமான சுரண்டலைச் செய்பவர்கள் சட்டத்தரணிகள் என சிறந்த சட்டத்தரணியாக ஒரு காலத்தில் செயற்பட்ட நண்பர் அடிக்கடி சுட்டிக்காட்டுவார். இது எல்லோருக்கும் பொருந்தாவிட்டாலும் மணிவண்ணனுக்கு மிகப்பொருத்தமாக உள்ளது.

Ratna_Jeevan_Hoole_Profடிசம்பர் 14 2017 அன்று வீதிப் போக்குவரத்து பொலிஸார் தொடுத்த வழக்கை மொழிக் கொள்கையைப் பயன்படுத்தி புரட்டிப் போட்டார் பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல். பேராசிரியர் ஹூல் 70 கிமீ/மணி உள்ள வேகக்கட்டுப்பாட்டு வீதியில் 80 கிமீ/மணி வேகத்தில் பயணம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்து அதனைக் கடந்து செல்லாமல் சட்டத்தை தானே எதிர்கொண்டு வாதாடினார். முல்லைத்தீவில் நடைபெற்ற வழக்கில் பொலிஸார் சிங்களத்தில் வழக்கை தாக்கல் செய்த போது வழக்கு தமிழ் பிரதேசத்தில் நடப்பதால் தமிழில் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ் தெரியாத பொலிஸார் எப்படி தமிழ் பிரதேசத்தில் பணிபுரிய முடியும் என்று கேள்விக்கு உட்படுத்தினார். இறுதியில் வேகத்தை அளக்கும் கருவியின் திறன் உறுதிப்படுத்தப்படாததை அதன் தொழில்நுட்ப விடயத்தை வைத்து நிரூபித்த பேராசிரியர் ஹூல் அவ்வழக்கில் வெற்றி பெற்றார்.

சட்டத்தரணி மணிவண்ணன் இடையால சைக்கிள் ஓடுறது கப்பில கிடாய் வெட்டுறது இவற்றை விட்டுவிட்டு பணத்துக்காக மட்டுமல்லாமல் சவாலான வழக்குகளில் தோண்றி பரந்துபட்ட மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக போராட முன்வரவேண்டும். இலங்கையில் உள்ள சட்ட வரம்கபுக்குள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை உறுதிப்படுத்த பேராசிரியர் இரத்தின ஜீவன் ஹூல் போன்றவர்களின் முன்மாதிரிகளைப் பின்பற்ற வேண்டும்.

SHARE