அவுஸ்திரேலியாவை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும்-விராட் கோஹ்லி நம்பிக்கை

408
 

அவுஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்த முடியும் என்று இந்திய அணியின் பதில் தலைவர் விராட் கோஹ்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இரு அணிகளும் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் நான்காம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகவுள்ளது.

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதலாவது டெஸ்டில் மட்டும் இந்திய அணித்தலைவர் டோனி ஆடமாட்டார். அதற்கு பதிலாக விராட் கோஹ்லி அந்த டெஸ்டில் இந்திய அணியின் தலைவராக செயல்படுவார்.

19 பேர் அடங்கிய இந்திய அணியினர் நேற்றிரவு மும்பையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டனர். முன்னதாக இந்திய பதில் தலைவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, எங்களது டெஸ்ட் அணி வீரர்களின் திறமை மீதும், மனோதிடம் மீதும் நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம். ஒவ்வொரு வீரர்களும் அவுஸ்திரேலியாவில் உள்ள சவாலை எதிர்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

அங்கு நடக்கும் போட்டிகளில் ஆக்ரோஷத்துடன் எச்சரிக்கையாக ஆட வேண்டியது அவசியம். முதலில் நம்மால் சமாளிக்க முடியும் என்ற மனநிலை இருக்க வேண்டும். அதன் பிறகு ஆக்ரோஷ பாணியை வெளிப்படுத்தி, ஆட்டத்தை நம் வசப்படுத்த வேண்டும். இந்த மாதிரியான மனநிலையை உருவாக்கி கொள்வது தான் போட்டியின் பிரதான யுக்தி.

டெஸ்ட் தொடரில் களம் காணும் 11 பேர் கொண்ட அணியில் சரியான வீரர்களை அடையாளம் கண்டு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் டெஸ்ட் போட்டியில் எப்போதும் சரியான கூட்டணியை களம் இறக்கி, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டியது முக்கியம்.

எல்லா நேரமும் வெற்றி மட்டுமே மனதில் இலக்காக இருக்க வேண்டும். அவுஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தோற்கடிக்க எங்களுக்கு நல்ல வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு நாங்கள் அவர்களை அவர்களது இடத்தில் வீழ்த்தியிருப்பதை மறந்து விடக்கூடாது. அதே போன்று ஏன் மீண்டும் அவர்களை தோற்க முடியாது? அணியில் உள்ள எல்லா வீரர்களுக்கும் ஆக்ரோஷமாக ஆடக்கூடிய பாங்கு உண்டு.

விரைவில் உலக கோப்பை போட்டி வர இருந்தாலும், முதலில் எங்களது கவனம் டெஸ்ட் தொடரில் மட்டுமே இருக்கும். அதன் பிறகு முத்தரப்பு கிரிக்கெட் தொடர் முடிந்த பிறகே உலக கோப்பை குறித்து சிந்திப்போம். அவுஸ்திரேலியாவில் உலக கோப்பை போட்டி நடக்க உள்ள நிலையில், அதற்கு முன்பாக அவ்விடத்திலேயே விளையாட வாய்ப்பு கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம். உலக கோப்பைக்கு முன்பாக அங்குள்ள சூழலை பழகிக் கொள்வதற்கு இந்த தொடர் உதவும்.

2011-12-ம் ஆண்டு அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் தோற்றாலும் தனிப்பட்ட முறையில் அந்த தொடர் எனது வாழ்க்கையில் மைல் கல்லாக (சதம், அரைசதம் உள்பட 300 ரன்கள் எடுத்தார்) அமைந்தது. அவுஸ்திரேலிய பயணத்தை முடித்து விட்டு கிளம்பிய போது நான் முற்றிலும் வித்தியாசமான மனிதராக, வித்தியாசமான வீரராக மாறியிருந்தேன்.

தற்போது முதலாவது டெஸ்டில் அணித்தலைவராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கனவு நனவானது போன்று உள்ளது. டெஸ்ட் தொடரை நாங்கள் நல்ல முறையில் தொடங்குவோம் என்று நம்புகிறேன்.

எங்களது முழு கவனமும் கிரிக்கெட் மீதே இருக்கிறது. களத்திற்கு வெளியே (ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினை) நடக்கும் விஷயங்களை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அது தொடர்பாக எதுவும் விளக்கம் தேவை என்றால், அதை அணி நிர்வாகம் பார்த்துக் கொள்ளும். மற்ற விவகாரங்களால் கவனம் சிதறவில்லை என கோஹ்லி மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE