தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டத் தலைவர்கள் யாணை விழுங்கிய விளாம்பழம் போன்றவர்கள்-நெற்றிப்பொறியன்

307

இந்த நாட்டில் உண்மையிலேயே மக்களுக்கு இறையாண்மை உண்டா?” என்ற கேள்வி வளர்ந்து கொண்டிருக்கிறது. “ஏன் நாட்டுக்கே இறையாண்மை உண்டா?” என்று குண்டுக் கேள்வியைப்போடுவோரும் உள்ளனர். இதற்குக் காரணமும் உண்டு. தாம் பாதுகாப்பற்ற ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமது இருப்புக்கும் செயற்பாடுகளுக்குமான இடமில்லை. அல்லது வரையறுக்கப்பட்டுள்ளது என்று உணரும்போது இறையாண்மையைக் குறித்த கேள்விகள் எழுகின்றன.
குறிப்பாக இலங்கையிலுள்ள தமிழ், முஸ்லிம், மலையகத்தமிழர்களிடம் இந்தக் கேள்வி பலமானதாக உள்ளது. அவர்களுடைய மொழி பொதுத்தளத்தில் சிதைக்கப்படுகிறது. அதிலும் அரச அறிவிப்புப் பலகைகள் தொடக்கம் நிர்வாகக் கடிதங்கள் வரையில் இந்தத் தவறு பகிரங்கமாகத் தொடரப்படுகிறது. எத்தனையோ பேர், எத்தனையோ தடவை உத்தியோகபூர்வமாகவும் பொதுத்தளத்திலும் இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டியபோதும் நடைமுறையில் மாற்றங்கள் ஏற்படவேயில்லை. பேருந்துகளின் பெயர்ப்பலகை தொடக்கம், அமைச்சு மற்றும் திணைக்களங்களின் பெயர்கள், அறவுறுத்தல்கள், விளக்கங்கள் என எல்லாவற்றிலும் இந்த மொழிச் சிதைப்புத் தொடர்ந்து கொண்டேயுள்ளது.
இவ்வளவுக்கும் தேசிய மொழிகள் ஒருமைப்பாட்டுக்கு எனத் தனியாகவே ஒரு அமைச்சுண்டு. அதற்குப் பொறுப்பாக மனோ கணேசன் எனத் தமிழ் மொழிபேசும் அமைச்சர் ஒருவரும் உள்ளார். இருந்தும் கூட மொழிச்சிதைப்புத் தாராளமாக நடக்கிறது. இலங்கையின் வரலாற்றில் இந்த அளவுக்குப் பகிரங்கத்தளத்தில் எந்தப் பொறுப்புமில்லாமல் மொழிச் சிதைப்பு நடந்ததில்லை. கடந்த 10 ஆண்டுகளில்தான் இது மிக மோசமான அளவில் நடந்து கொண்டிருக்கிறது. இதை நாள்தோறும் காணுகின்ற தமிழ் மொழியைப் பேசும் மக்கள் இந்த நாட்டில் தங்களுடைய இருப்பைக் குறித்துச் சந்தேகிப்பார்களா? இல்லையா? அவர்களிடம் போய் இலங்கையில் அனைத்துச் சமூகங்களுக்கும் நீதியும் நியாயமும் உரிமைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இறையாண்மை பெற்ற மக்களாகவே அனைவரும் உள்ளனர். பன்மைத்தன்மைக்கு இந்த நாடு இடமளித்திருக்கிறது என்று சொன்னால், அதை நம்புவார்களா? செருப்பால்தான் அடிப்பார்கள்.
மிகக் கொடிய யுத்தத்திற்குப் பிறகு அமைதியைப் பற்றியும் இன நல்லிணக்கத்தைப் பற்றியும் பேசப்படுகிறது.  கடந்த கால யுத்த நெருக்கடிகளில் சிக்கிய அனுபவங்களைக் கொண்டவர். அதற்கும் அப்பால் யுத்த அரசியலோடு, போராட்ட அரசியலோடு தொடர்புபட்டவரே. இதைச் சரியாகச் சொன்னால், இறையாண்மையற்ற சமூகத்தின் சார்பாக விடுதலை கோரிப்போராட்டத்தை முன்னெடுத்த அரசியலின்பாற்பட்ட யுத்தத்தில் ஈடுபட்டவர். ஆனால், யுத்தத்தின் மூலமாக மரணத்தையும் இழப்புகளையும் அழிவுகளையும் துயரத்தையும் தவிர வேறு எதையும் சாதிக்க முடியவில்லை என்பதையும் அனுபவமாகக் கொண்டவர். அந்தப் படிப்பினைகளின் அடியாக புதிய நிலைமைகளைக் குறித்துச் சிந்திக்க முற்படுகிறார். ஆனால், அப்படிப் புதிய நிலைமைகளைக் குறித்துச் சிந்திக்க முடியாத அளவுக்கே நாட்டின் போக்கும் நடவடிக்கைகளும் இருக்கின்றன.
புதியதொரு சூழலை உருவாக்கும் பொருட்டு, அதற்கான நம்பிக்கைகளுடன் புதிய ஆட்சியொன்றை நடப்பிலுள்ள அரசாங்கம் அமைத்தது. பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக நாட்டின் பெரும் கட்சிகள் இரண்டும் ஒருமுகப்பட்டு இந்த ஆட்சியில் பங்குபற்றி வருகின்றன. இந்த இணைந்த பங்கேற்பின் மூலமாக நாட்டின் சவால்கள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் என்றும் கூறப்பட்டது. மக்களும் அப்படித்தான் நம்பினார்கள். அதாவது சுதந்திரத்துப் பின்னான இலங்கையில் ஒரு அரசியல் புரட்சி, ஜனநாயகச் சீராக்கல், பன்மைத்தன்மைக்கான சிறப்பிடம் நிச்சயம் ஏற்படத்தான் போகிறது என்று எல்லாத் தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது.
அப்படி ஒரு புதிய சூழல் உருவாகும்போது சமூகங்கள் இறையாண்மையைப் பெறுவது மட்டுமல்ல, நாடே இறையாண்மையைப் பெற்றுக்கொள்ளும் என்றும் நம்பப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கைகள் அனைத்தும் மணலில் விழுந்த மழைத்துளி போலாகி விட்டன. இப்போது எல்லாவற்றுக்கும் அடிப்படையான அரசியலமைப்பே மாற்றப்படுமா என்பதே சந்தேகமாகி விட்டது. ஜனாதிபதியும் பிரதமரும் பௌத்த பீடங்களின் பின்னே பதுங்கத் தொடங்கி விட்டனர். நிறைவேற்று அதிகாரம் என்பது ஜனாதிபதிக்கா அல்லது மகாநாயக்க தேரர்களுக்கா என்ற கேள்வி எழுந்து நிற்கிறது.
மகாநாயக்க தேரர்களின் சம்மதம் இல்லாமல் அரசியலமைப்பில் தம்மால் ஒரு அடிகூட முன்னகர முடியாது என்று ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றனர். அப்படியென்றால், அரசியலமைப்புத்திருத்தம் தொடர்பாகப் பொது மக்களிடம் எதற்காக அபிப்பிராயம் கேட்கப்பட்டது? எதற்காக அரசியலமைப்பை உருவாக்குவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டன? இதற்காக செலவழிக்கப்பட்ட நேரமும் மனித உழைப்பும் வளங்களும் அவமரியாதை செய்யப்படுகிறதா? பேசாமல் ஒரேயடியாக அப்போதே தேரர்களின் விருப்பத்தை மட்டும் கேட்டுவிட்டுத் தீர்மானத்தை எடுத்திருக்கலாமே! வேடர் சமூகத்திடம் வரை போய் நாடகமாடியிருக்கத் தேவையில்லையே!
இந்த நாடு அனைத்துச் சமூகங்களுக்குமான நாடா? அல்லது சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடா? என்ற கேள்வி எழும் இடமும் இதுதான். ஏனைய இன மக்கள் அரசாங்கத்தையும் சிங்கள பௌத்த சமூகத்தினரைச் சந்தேகத்துடன் நோக்குவதும் இவ்வாறான ஆபத்தான சிந்தனைகளாலேயே. சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் முன்னுரிமை என்று சிந்திக்கப்படும்போதெல்லாம் இதேபோல, மதவாதிகளின் – பிக்குகளின் விருப்பு வெறுப்புகளே முன்னிலை பெறும். அப்படி மதகுருக்கள் முதன்மை வகிக்கும் சூழலில் நியாயமான அரசியல் தீர்வு கிடைக்க வாய்ப்பில்லை. போர் பற்றிச் சிந்திக்கத்தான் தோன்றும்.
இலங்கை பல்லினச் சமூகங்கள் வாழ்கின்ற நாடு என்றால், அனைத்துச் சமூகங்களையும் நிறைவு செய்யக்கூடிய முறையில் அரசியலமைப்பும் ஆட்சி முறையும் இருக்க வேணும். அதுவே நாட்டின் இறையாண்மைக்கும் சமூக இறையாண்மைக்கும் வழியேற்படுத்தும். இதுவொன்றும் கடினமான பணியல்ல. அனைவருக்கும் சமனாக நீதியாக ஆட்சியைச் செய்வதில் உள்ள மகிழ்ச்சியும் நிறைவும் வேறு எதில்தான் கிடைக்கப்போகிறது? உலகத்தில் பல இனங்கள், பல்வேறு மதப்பிரிவுகள், பல மொழிகளைப் பேசுவோர் வாழ்கின்ற நாடுகள் பல உள்ளன. குறிப்பாக சீனா, இந்தியா போன்ற நாடுகள் 120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டவை. ஆனால், அங்கே தேசிய ஒருமைப்பாடு வலுவானதாக உள்ளது. இலங்கையில் இரண்டு கோடி மக்கள்தான் வாழ்கின்றனர். ஆனால், ஏகப்பட்ட பிரச்சினைகள்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்கு ஏற்ற வகையில் அரசியலமைப்புத்திருத்தம்  செய்யப்பட வேண்டும் என்றே கூறப்பட்டது. அந்த அடிப்படையில்தான் அரசியலமைப்புத்திருத்தத்துக்கான யோசனைகளும் கோரப்பட்டன. குழுக்களின் செயற்பாடுகளும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றன. இடையில் சில எதிர்ச்சக்திகள் இதைக் குழப்பி தேரர்களைத் தூண்டிவிட்டுள்ளன. ஆகவே அவர்களைக் கடந்து ஆட்சியாளர்களால் சிந்திக்க முடியாது. அது நெருக்கடியை உண்டாக்கும். ஆகவேதான் அவர்கள் பிக்குகளின் கால்களில் தஞ்சமடைய வேண்டியேற்பட்டுள்ளது என்று சொல்வோருண்டு.
மகாநாயக்கர்களுக்கு பிரச்சினையைத் தெளிவு படுத்த வேண்டுமே தவிர, அவர்களிடம் மண்டியிடுதல் தலைவர்களுக்கு அழகல்ல. மதக் கட்டுப்பாடுகளுக்குத் தலைவர்கள் கட்டுப்பட்டால், அவர்கள் தலைவர்களாக இருக்க முடியாது. மத அடிமைகளாகவே ஆகி விடுவர். மதகுருக்களுக்குத் தலைவர்கள் மதிப்பளிக்கலாம். ஆனால், ஆட்சி கட்டுப்படக்கூடாது. மட்டுமல்ல, இந்த நாட்டின் ஆட்சியானது தனியே சிங்கள, பௌத்த மக்களுக்காக மட்டும் நடத்தப்படவில்லை. முழு இலங்கைக்குமாகவே ஆட்சியை நடத்தவேணும். அப்படியென்றால், அனைத்துச் சமூகங்களையும் இணைத்துச் செல்லும் முறைமை இதுதானா?
இது மன்னராட்சிக் காலமல்ல. மன்னராட்சியில் மன்னன் வைத்ததே சட்டம். மன்னனின் விருப்பமே நாட்டின் நடைமுறை. இது மக்களாட்சி. ஜனநாயக மறுமலர்ச்சிக் காலம். மட்டுமல்ல, பௌத்தத்துக்கு அப்பாலான மதப்பிரிவைச் சேர்ந்த மக்களும் இந்த நாட்டிலே வாழ்கின்றனர். அவர்களுடைய அடிப்படை உரிமைகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டு ஏனைய இனங்களும் இணைந்து வாழலாம் என்று சொல்வது அந்தச் சமூகத்தினரை அவமதிப்பதாகும். அவர்களை ஒரு வகையில் ஒடுக்கி வைத்திருப்பதாகும். இதுவே தொடர்ந்தும் நடந்துகொண்டிருப்பது. அப்படியென்றால், நல்லாட்சி அரசாங்கத்தின் அடையாளம் என்ன? குணாம்சம் என்ன?
இத்தகைய இரண்டக நிலை தொடருமானால் பிற இனமக்கள் எதிர்நிலையிலேயே சிந்திப்பர். அது தவிர்க்க முடியாத விதி. போரின்மூலம் வெற்றி பெற்று விட்டதாக சிங்கள ஆட்சியாளர்கள் கருதலாம். அந்த வெற்றி அவர்களுடைய கண்களை மறைக்கலாம். பிற சமூகத்தினரை எப்படியும் நடத்தலாம் என்று கூடச் சிந்திக்கலாம். ஆனால், அது வரலாற்றைச் சரியான திசையில் நகர்த்தாது. நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கவும் மாட்டாது. பதிலாக தற்கொலைக்கே கொண்டு செல்லும்.
நாடு இன்னும் தற்கொலை வலயத்திலிருந்து மீளவில்லை. அதை மீட்டெடுப்பதற்கு முன் வந்த ஆட்சியும் இன்னொரு தற்கொலை வலயத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம், நாடு இன்னும் தலைவர்களைப் பெறவில்லை. இருப்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகளே. மதத்தின் நிழலில் இளைப்பாறுவோர்.
SHARE