முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும், தலை­வர்­க­ளி­னதும் சுய­நலப் போக்­கு­க­ளினால் மக்கள் பலரும் அதி­ருப்தி அடைந்­துள்­ளார்கள்.

290

லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் அதன் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மர­ணத்தின் பின்னர் அபல கூறு­க­ளாக்­கப்­பட்­டது. இதனால், முஸ்­லிம்­க­ளி­டையே பல கட்­சிகள் தோற்றம் பெற்­றன.

முஸ்­லிம்­களின் வாக்­குகள் பல கட்­சி­க­ளுக்கும் அளிக்­கப்­பட்­டன. வாக்­குகள் பல கட்­சி­க­ளுக்கு சித­ற­டிக்­கப்­பட்­ட­தனால் முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் சிதைக்­கப்­பட்­டது. முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பேரி­னக் கட்­சி­களின் தலை­வர்­களின் கட்­டுப்­பாட்டில் பணயக் கைதி­களைப் போன்று செயற்­பட்­டார்கள். முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களின் கரங்­களில் காணப்­படும் கறை­களே இந்­நி­லைக்கு வித்­திட்­டது.

முஸ்லிம் அர­சியல் கட்சித் தலை­வர்­களின் இந்­நி­லையால் முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளையும், தேவை­க­ளையும் நிறைவு செய்துகொள்ள முடி­ய­வில்லை. அதே வேளை, அர­சியல் தலை­வர்கள் தங்­களின் சுய­தே­வை­களை அர­சாங்­கத்தின் மூல­மாக நிறை­வேற்றிக் கொண்­டார்கள். இதனால், முஸ்லிம் சமூகம் தேய்­பி­றை­யா­கவும், அர­சியல் தலை­வர்கள் வளர்­பி­றை­யா­கவும் மாற்­றப்­பட்­டனர்.

முஸ்லிம் சமூ­கத்தின் இந்­நி­லையைக் கருத்திற் கொண்டு முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் ஒரு முகப்­ப­டுத்­தப்­பட வேண்டும். முஸ்லிம் கட்­சிகள் வேற்­று­மை­களை மறந்து சமூ­கத்தின் நல­னுக்கு ஒற்­று­மைப்­பட வேண்­டு­மென்று முஸ்லிம் அமைப்­புக்கள் பலவும், பொது நலன் விரும்­பி­களும் குரல் கொடுத்­தன. ஆனால், அர­சியல் கட்­சிகள் இந்த ஒற்­று­மையை ஏற்றுக் கொள்­ள­வில்லை. ஒவ்­வொரு அர­சியல் கட்­சியும், தலை­வரும் தங்­களின் சுய அர­சியல் இலா­பத்தில் கவனம் செலுத்­தி­னார்­களே அல்­லாமல் முஸ்லிம் சமூ­கத்தின் பொது நலனில் கவனம் செலுத்­த­வில்லை.

முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும், தலை­வர்­க­ளி­னதும் சுய­நலப் போக்­கு­க­ளினால் மக்கள் பலரும் அதி­ருப்தி அடைந்­துள்­ளார்கள். இதனால், அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற எண்­ணப்­பாடு முஸ்­லிம்­க­ளி­டையே பர­வ­லாகப் பேசப்­பட்டு வரு­கின்­றது. மக்­க­ளி­டையே காணப்­படும் இந்த நல்ல சிந்­தனை சாத்­தி­ய­மா­குமா, இதற்கு முஸ்லிம் கட்­சிகள் இணக்கம் தெரி­விக்­குமா எனப் பல கேள்­விகள் முன் வைக்­கப்­பட்­டன.

இந்­நி­லையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டு­க­ளி­னாலும், அக்­கட்­சியின் தலைவர் பற்­றியும், கட்­சியின் நட­வ­டிக்­கைகள் பற்­றியும் முன் வைக்­கப்­பட்டு வரு­கின்ற கருத்­துக்கள், எம்.ரி.ஹஸன்­அ­லியை ஓரங்­கட்ட எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைகள், பசீர் சேகு­தா­வூதிற்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் என ஒன்றன்பின் ஒன்­றாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்திரத்­தன்மை பல­வீ­ன­மாகும் வகையில் சிக்­கல்கள் அக்­கட்­சியை துரத்திக் கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்­லிம்­க­ள­ிடையே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் குறித்து காணப்­பட்ட நம்­பிக்­கைகள் வலு­வி­ழந்து கொண்டு வரு­கின்­றன.

இதே வேளை, நாட்டில் ஏற்­பட்­டுள்ள அர­சியல் சூழ் நிலையில் முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­ப­தற்கு அர­சாங்கம் போதிய கரி­சனை காட்­டு­வ­தாகத் தெரி­ய­வில்லை.

முஸ்லிம் கட்­சிகள் முஸ்­லிம்­க­ளுக்கு எது நடந்­தாலும் பரவா­யில்லை என்ற மனோ நிலையைக் கொண்­டவையா­கவே உள்­ளன. இதனால், முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கால அர­சியல் ஸ்திரத்­தன்­மைக்கு பல­மான அர­சியற் கட்சி ஒன்று அவ­சி­ய­ம் என்று உண­ரப்­பட்­டுள்­ளது. இதனை இன்­றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸி­னாலோ ஏனைய முஸ்லிம் கட்­சி­க­ளி­னாலோ ஏற்­ப­டுத்திக் கொள்ள முடி­யாது. எல்லா கட்­சி­களும் பேரி­ன­க் கட்­சி­களின் கிளை­களைப் போன்றே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன.

முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு பல­மான அர­சியல் கட்சி எனும் தேவையை முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு மூலம்தான் பூர்த்தி செய்ய முடியும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் அத்­தோடு ஏனைய கட்­சி­களில் உள்ள கிழக்கு மாகா­ணத்தில் உள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இணைந்து முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பை உரு­வாக்க வேண்டும்.

முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்­புக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் சாத­க­மான நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­மாயின் முஸ்­லிம்­களின் வாக்­குகள் சித­ற­டிக்­கப்­ப­டாமல் முஸ்­லிம்­களின் மக்கள் பிர­தி­நி­தித்­து­வத்தை பாது­காத்துக் கொள்­வ­தற்கும், முஸ்­லிம்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்ப­தற்கும் முடியும்.

தமிழ் மக்­க­ளி­டையே பல கட்­சிகள் காணப்­ப­டு­கின்­றன. அவை தமிழ் மக்­களின் எதிர்­கா­லத்தை கருத்திற் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பாக செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.

இதன் மூல­மாக தமி­ழர்­களின் அர­சியல் பலம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஆதலால், முஸ்­லிம்­களும் தங்­களின் அர­சியல் பலத்தை அதி­க­ரித்துக் கொள்­வ­தற்கு கட்­சி­களின் கூட்­ட­மைப்பு அவ­சி­ய­மாகும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இணைந்த வடக்கு, கிழக்கு மாகா­ணத்தை கோரிக் கொண்­டி­ருக்­கின்­றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் முஸ்­லிம்­களின் அர­சியல் அதி­காரம் குறித்து எந்த திட்­டத்­தையும் முன்வைக்­க­வில்லை. ஏனைய முஸ்லிம் கட்­சிகள் வடக்கும், கிழக்கும் தனி­யாக இயங்க வேண்­டு­மென்று தெரி­வித்­துள்­ளன.

இந்தப் பின்­ன­ணியில் இலங்­கைக்கு கடந்த திங்கட்கிழமை விஜயம் செய்த இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் எஸ்.ஜெய்­சங்கர், இனப் பிரச்­சினைத் தீர்வு தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களின் போது வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்தக் கூடாது.

இந்­தியா, இலங்கை அர­சாங்­கத்­திற்கு இது தொடர்பில் அழுத்­தங்­களை கொடுக்­காது எனத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் அவரைக் கொழும்பில் சந்­தித்த போது தெரி­வித்­துள்ளார். இவரின் இக்­கூற்றின் மூலம் வடக்கும், கிழக்கும் இணை­வ­தற்கு இந்­தியா விரும்­ப­வில்லை என்­பது தெளி­வா­கின்­றது.

இலங்கை அர­சாங்­கத்தின் தேவைக்கேற்ப செயற்­பட்டு தமது நாட்டின் நலன்­களை அடைந்து கொள்­வ­தற்கும், இலங்­கையை தமது கட்­டுப்­பாட்டில் வைத்துக் கொள்­வ­தற்­குமே இந்­தியா எண்­ணி­யுள்­ளது. இந்­தி­யாவின் இந்­நி­லைப்­பாடு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இது வரைக்கும் வடக்கு, கிழக்கு இணைப்புக் கோரிக்­கைக்கு எதிர்க் கருத்­துக்­களை தெரி­விக்­காத இந்­தியா, முதற் தட­வை­யாக நேர­டி­யாக வடக்கு, கிழக்கு இணைப்­புக்கு இந்­தியா அழுத்­தங்­களை கொடுக்­காது என்று தெரி­வித்­துள்­ளது. இந்­தி­யாவின் இந்­நி­லைப்­பாடு இலங்கை அர­சாங்­கத்­திற்கு மிக்க மகிழ்ச்­சியைக் கொடுத்­துள்­ளது.

இதே வேளை, இன்னும் மூன்று மாதங்­க­ளுக்குள் கிழக்கு, வட­மத்தி, சப்­ரகமுவ மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல்கள் நடை­பெற வாய்ப்­புக்கள் உள்­ளன.

அவ்­வாறு தேர்தல் நடக்கும் பட்­சத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்­தலை முஸ்லிம் கட்­சிகள் ஒற்­று­மை­யுடன் எதிர் கொள்­ளாது போனால் கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தை தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு கைப்­பற்றும். இதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் அதி­கா­ரங்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­டமும், ஏனைய மாகாண சபை­களின் அதி­கா­ரங்கள் தேசியக் கட்­சி­க­ளி­டமும் இருக்கும். தமி­ழர்­களும், சிங்­க­ள­வர்­களும் மாகாண சபை­களின் அர­சியல் அதி­கா­ரங்­களைக் கொண்­டி­ருக்­கையில் முஸ்­லிம்கள் மாகாண சபையின் அர­சியல் அதி­கா­ரங்­க­ளில்­லா­த­வர்­க­ளாக இருப்பர். ஆகவே, கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்­தினை முஸ்­லிம்கள் பெற்றுக் கொள்ள வேண்­டு­மாயின் முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும்.

2012 ஆம் ஆண்டு நடை­பெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்­தலின் பின்னர் கிழக்கு மாகாண சபையின் முத­ல­மைச்­சர்­க­ளாக நஜீப் அப்துல் மஜீட், நசீர் அஹமட் ஆகி­யோர்கள் ஒருவர் பின் ஒரு­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டார்கள். அத்­தோடு, முஸ்லிம் அமைச்­சர்­களும் கிழக்கு மாகாண சபையில் உள்­ளார்கள். இருப்­பினும் முஸ்­லிம்­களின் குர­லாக கிழக்கு மாகாண சபை­யினால் செயற்­பட முடி­ய­வில்லை. பல தட­வைகள் முஸ்லிம் சமூ­கத்­திற்கு தீமை­களை ஏற்­ப­டுத்தக் கூடிய விட­யங்­க­ளுக்கு கிழக்கு மாகாண சபை ஆத­ர­வாக செயற்­பட்­டுள்­ளது.

சில வேளை­களில் மௌன­மாக இருந்­துள்­ளது. ஆதலால், கிழக்கு மாகாண சபையின் முத­ல­மைச்­ச­ராக முஸ்லிம் ஒருவர் இருந்­தாலும் அவ­ராலும், ஏனைய முஸ்லிம் அமைச்­சர்­க­ளி­னாலும் முஸ்லிம் உரி­மை­களைப் பெற்றுக் கொடுக்க முடி­ய­வில்லை.

கிழக்கு மாகாண சபை  தமது அதி­கா­ரத்தில் உள்­ள­தென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றது. ஆனால், கிழக்கு மாகாண சபையின் ஆட்சி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஐ.தே.க, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்றின் கூட்டு ஆட்­சி­யாக உள்­ளது. இதனை கிழக்கு மாகாண சபை முத­ல­மைச்சர் நசீர் அஹமட் நல்­லாட்­சிக்கு முனுதா­ர­ண­மாக கிழக்கு மாகாண சபை செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தாக பல தட­வைகள் தெரி­வித்­துள்ளார். ஆனால், கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் காணிகள் பல இடங்­களில் அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் பறிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றைப் பெற்றுக் கொடுக்க முடி­யா­துள்ள கிழக்கு மாகாண சபையில் நல்­லாட்சி நில­வு­வ­தாக எவ்­வாறு சொல்ல முடியும்.

கிழக்கு மாகாண சபையின் அதி­கா­ரத்தை மாத்­தி­ர­மின்றி அர­சியல் யாப்பில் செய்­யப்­ப­ட­வுள்ள மாற்­றங்கள் தொடர்பில் முஸ்­லிம்­களின் அபி­லா­சைகள் பற்றி முஸ்லிம் கட்­சிகள் எந்த திட்­டத்­தையும் முன்வைக்­க­வில்லை.

முஸ்லிம் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­மானால் முஸ்­லிம்­களின் அபி­லா­சை­களைக் கொண்ட திட்­ட­மொன்­றினை முன் வைக்­கவும் முடியும். இதனால், முஸ்­லிம்­களின் கோரிக்­கை­களை அர­சாங்­கத்­தினால் நிரா­க­ரிக்க முடி­யாது. முஸ்லிம் கட்­சிகள் பிரிந்து நிற்­ப­தனால் அர­சாங்கம் முஸ்லிம் கட்­சி­களை தனித்­த­னியே கையாண்டு வரு­கின்­றது.

கட்சித் தலை­வர்­க­ளுக்கு அமைச்சர் பத­வி­களை வழங்கி முஸ்லிம் சமூ­கத்தின் உரி­மை­களை மலி­னப்­ப­டுத்தும் வேலை­க­ளையே அர­சாங்கம் மேற்­கொண்­டுள்­ளது. இதற்கு முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் துணை போய்க் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதனை தவிர்ப்­ப­தற்கும் முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு அவ­சி­ய­மாகும்.

இதே வேளை, முஸ்­லிம்கள், கட்சி ரீதி­யாக கொண்­டுள்ள கண் மூடித்­த­ன­மான பற்­று­தல்­க­ளி­லி­ருந்து தம்மை விடு­வித்துக் கொள்ள வேண்டும்.

அர­சியல் கட்­சி­களின் திட்­டங்­க­ளுக்கு முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்த முயற்சி முஸ்லிம் தனியார் சட்­டத்­தி­ருத்த முயற்சி ஏற்ப செயற்­ப­டாது முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்காலம் பற்­றிய சிந்­த­னை­யுடன் முடி­வு­களை எடுக்க வேண்டும். முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­படும் சாத்­தி­யங்கள் நிறை­ய உள்­ளன. ஆதலால், முஸ்­லிம்கள் குறிப்­பாக கிழக்கு மாகாண முஸ்­லிம்கள் அதனை தயக்­க­மின்றி ஆத­ரிக்க வேண்டும்.

முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பை உரு­வாக்­காது போனால் முஸ்­லிம்கள் தேசியக் கட்­சி­களில் இணைந்து செயற்­பட வேண்­டியும் ஏற்­ப­டலாம். முஸ்­லிம்­க­ளுக்கு உரிமை அர­சி­யலை கொண்டு வந்த பெருமை மர்ஹும் அஷ்­ரப்­பையே சாரும். அவரின் மர­ணத்தின் பின்னர் உரிமை அர­சியல், சலுகை அர­சி­யலை விடவும் மோச­மான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அர­சியல் கட்சி ஒன்றின் தலை­வ­ருக்கு அமைச்சர் பதவி கொடுத்­தாலே போதும் என்­ப­தா­கவே முஸ்லிம் அர­சியல் உள்­ளது. முஸ்லிம் அர­சியல் கட்சித் தலை­வ­ருக்கு வழங்­கப்­படும் அமைச்சர் பதவி முஸ்­லிம்­களின் உரி­மை­யாக காண்­பிக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும், உரிமை அர­சியல் பாதை­களை அமைத்தல், கட்­டி­டங்­களை அமைத்தல், கொந்­த­ராத்­துக்­களைப் பெற்றுக் கொள்ளல், திணைக்­க­ளங்­களின் தலைவர் பத­வி­களைப் பெற்றுக் கொள்ளல், தேசி­யப்­பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியைப் பெற்றுக் கொள்ளல் ஆகி­ய­வற்­றிற்கும் வேறு தேவை­களை அடைந்து கொள்­வ­தற்­கு­மாக திசை மாற்­றப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் இம்சை அர­சர்­க­ளாக அறி­யப்­ப­டு­கின்­றார்கள்.

அநீ­திக்காக கூலிக்கு மார­டிக்கும் தரப்­பாக உள்­ளார்கள். இதனை மாற்­றி­ய­மைக்க வேண்­டு­மானால், முஸ்­லிம்­களின் அர­சி­யலை சுத்­தப்­ப­டுத்தி மீண்டும் உரிமை அர­சி­யலை கொண்டுவர வேண்­டு­மாயின் முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்டும்.

முஸ்லிம் கட்­சி­களின் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்கு தடை­யாக எந்த அர­சியல் கட்சி இருந்­தாலும் அக்­கட்­சியை முஸ்­லிம்கள் நிரா­க­ரிக்க வேண்டும்.

கட்­சி­களின் அர­சியல் நலன்­களை விடவும், முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் நலன் முக்­கி­ய­மாகும். இதற்கு விட்டுக் கொடுப்­புக்­களை செய்ய முடி­யாத அர­சியல் கட்­சிகள் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சி­யலைப்  பற்றி பேசவோ, முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு எங்களால் முடியுமென்றொ சொல்வதற்கு அருகதையற்றவையாகும்.

SHARE