புலிகள் தவிர்ந்த அனைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களும் அழித்தொழிக்கப்படும் வரை புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்தச் சந்தர்ப்பததைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை இந்திய அரசுகள்

337

 

 

மூன்று தசாப்த ஆயுதப் போராட்ட வரலாறு அழிவு சக்திகளின் பிடியில் திரிபு படுத்தப்பட்டு ஒவ்வொருவரும் தமக்குரிய அடையாளத்தை நிறுவிக் கொள்வதற்கான கருவியாகப் பயன்பட்டுப் போவது வேதனை தரும் சம்பவங்கள். மண்ணிலிருந்து பிடிங்கியெறியப்பட்டு உலகின் ஒவ்வொரு மூலைகளை நோக்கியும் விரட்டியடிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனிடமும் ஆயிரம் அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன. சமூகத்தின் பொதுவான பிற்போக்குச் சிந்தனையை மாற்றும் போக்கில் இந்த அனுபவங்கள் காத்திரமான பாத்திரத்தை வகிக்கவல்லன. அனுபவப் பகிர்வு என்பது தனிமனித அடையாளத்தையும் சமூக அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையாக அன்றி அந்தக் காலத்திற்கே உரித்தான புறச் சூழலையும் அதனோடு இணைந்த அரசியல் மாற்றத்தையும் புரிந்து கொள்வதற்கான அடிப்படையாக அமையுமானால் அதுவே அதன் அரசியல் வெற்றியாகும். 80 களின் இறுதிக் கட்டங்களில் ஈழப் போராட்டத்தில் சில குறிப்பான எனது அனுபவங்கள் கற்றலுக்குப் பயனுள்ளதாக அமையும் என எண்ணுகிறேன்.

புலிகள்

டிசம்பர் மாதம் 13ம் திகதி 1986ம் ஆண்டு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F) என்ற இயக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளால் (L.T.T.E) அழிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் பனியுறையும் குளிர்காலம் என்பது கூடத் எமக்குத் தெரிந்திராத அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்து அரசியல் வெம்மை , ஜனநாயகத்தை துப்பாக்கி முனையில் கேள்விகேட்டது.

யாரும் எதிர்பாராத தாக்குதலைத் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆரம்பித்திருந்தனர். யாழ்ப்பாணத்தில் ஒவ்வொரு சந்தியிலும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டன. அப்போதெல்லாம் இராணுவம் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தது. விமானத் தாக்குதலகளை மட்டும் அவ்வப்போது மக்கள் குடியிருப்புக்கள் மீது நடத்திவந்தது.

இராணுவம் தெருவில் இறங்கிச் சண்டை போடுகிறது என்பதை யாரும் நம்பவில்லை. ஈ.பி.ஆர்.எல்,எப்(EPRLF) இற்கு முன்னதாக ரெலோ(TELO) இயக்கமும் புலிகளால் அழிக்கப்பட்டிருந்ததால் எதோ இயக்க மோதல் என்பதைப் பொது மக்கள் ஊகித்துக்கொள்ள நேரமெடுக்கவில்லை.

பலர் இலங்கை அரசிற்கு எதிராகப் போராட மட்டுமே இயக்கங்களில் இணைந்து கொண்டனர். புலிகள் இயக்கத்தினர் அவர்களைத் தேடித் தேடி அழித்தனர். நிராயுதபாணிகளான பல இளைஞர்கள் ஏன் என்று அறியாமலே மரணித்துப் போயினர். தெருத் தெருவாக விடுதலைப் புலிகள் ஒலிபெருக்கியில் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் சரண்டயுமாறும் இல்லையெனில் கண்ட இடத்தில் சுடப்படுவார்கள் என்றும் எச்சரித்தனர் . சிலர் தமது வீடுகளிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இல் ஏற்பட்டிருந்த உள் முரண்பாடு காரணமாக அதன் இராணுவத் தளபதியாகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவின் பொறுப்பிலிருந்த அனைத்து இராணுவத் தளப்பாடங்களும் கபூர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவர்தான் புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். கபூரைத் தவிர சுரேஸ் பிரேமச்சந்திரன் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மத்திய குழு சார்பில் இலங்கையில் இயக்க நடவடிக்கைகளைக் மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.

சுரேஸ் பிரேமச்சந்திரனின் அதிகார தோரணை பல போராளிகளை விரக்திக்கு உள்ளாக்கியிருந்தது. டக்ளஸ் அணியைத் தவிர ஈ.பி.ஆர்.எல்,எப் இல் இன்னொரு முற்போக்கு அணியும் உருவாகியிருந்தது.

அவர்கள் டக்ளஸ் மற்றும் சுரேஸ் முரண்பாடுகளுக்கு அப்பால் புதிய மக்கள் பலமுடைய அணியாகத் திகழ்ந்தனர். ஒரு வகையில் இந்த முற்போக்கு அணியென்பதே ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அடிப்படைப் மக்கள் பலமாக அமைந்திருந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் முற்போக்கு அணியினரோடு இயக்கத்திற்கு வெளியிலிருந்த பலரும் தொடர்புகளைப் பேணிவந்தனர்.
அந்தவகையில் எனக்கு அறிமுகமானவர் தான் ஜேரோம் என்ற புனைபெயரைக் கொண்ட ஜெயராஜ். அப்போது அவருக்கு முப்பது வயதாகியிருக்கலாம். ஆயுதப் போராட்ட இயக்கங்கள் உருவாவதற்கு முன்பதாகவே இடதுசாரி இயக்கங்களோடு தன்னை இணைத்துக்கொண்டவர். அப்போது ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பொருண்மியப் பிரிவிற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார். இயக்கத்தில் உட்கட்சிப் போராட்டங்கள் குறித்து பல தடவைகள் யாழ்ப்பாணத்து நகர வீதிகளைச் சைக்கிளில் கடந்தவாறே பேசியிருக்கிறோம்.

பல்கலைக்கழகப் மாணவர் போராட்டத்தில் ஈடுபட்ட விமலேஸ்வரன் உட்பட பலர் தலைமறைவாக வாழ்ந்த ஜனநாயக முற்போக்கு சக்திகளின் “காசி” யாகத் திகழ்ந்தது உரும்பிராய் கொலனி என்ற கிராமம்.

கிராமிய உழைப்பாளஎ சங்கம் என்ற அமைப்பு அக்கிராமத்திலேயே தோன்றி வளர்ந்திருந்தது. இயக்க மோதல்களில் உயிரைக் காப்ப்பாற்ற முனைகின்றவர்களின் இறுதிச் சரணாலயம் கிராமிய உழைப்பாளர் சங்கமும் உரும்பிராய் கிராமமும் தான். ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்ட 13ம் திகதி இரவு சில போராளிகள் உரும்பிராயில் தலைமறைவகியிருந்தனர். அவர்களில் ஜெரோமும் ஒருவர்.

13ம் திகதி ஜெரோமை நான் உரும்பிராயில் சந்திக்கும் போது நள்ளிரவை அந்த நாள் தொட்டுக்கொண்டிருந்தது.

ஜெரோமும் நானும் ஒரு குடிசையில் இருந்து எதிர்காலம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். ஈ.பி.ஆர்.எல்.எப் இற்குள் உள்முரண்பாட்டைத் தீவிரமடையச் செய்து ஜனநாயக முற்போக்கு சக்திகளைப் பலவீனமடையச் செய்து இறுதியில் புலிகள் இயக்கத்தைப் பயன்படுத்தி அழித்துப் போட்டதே இந்தியா தான் என்று ஜெரோம் வாதிட்டுக்கொண்டிருந்தார். எல்லா இயக்கங்களையும் புலிகளைப் பயன்படுத்தி அழித்து முடித்துவிட்டு இறுதியில் புலிகளையும் இந்தியா அழிக்கும் என்று தொடர்ந்தார்.

நாம் இனிமேல் இலங்கை அரசிற்கு எதிராகப் போராடுவதற்கான புதிய அரசியலை முன்வைக்க வேண்டும். தமிழ் நாட்டில் அன்றி இலங்கையில் மக்கள் மத்தியில் தான் அதன் தலைமை வாழ வேண்டும் என்ற ஜெரோம் இதற்காகத் தான் ஏற்கனவே தான் ஆயுதங்களை சில இடங்களில் மறைத்து வைத்திருபதாகவும் கூறினார்.

கல்வியன்காட்டில் ராசபாதை வீதியில் அமைந்திருந்த பெண்கள் முகாமில் சில ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாகவும் இப்போது போனால் அவற்றை எடுத்து வந்துவிடலாம் என்றும் ஆலோசனை கூறினார்.

அங்கு வேறு குடிசைகளில் எம்மைப் போன்றே பெசிக்கொண்டிருந்தவர்களிடம் நாங்கள் இருவரும் சென்று ஆயுதங்களை எடுத்துவரப் போவதாகக் கூறுகிறோம். பொதுவாக அனைவரும் இப்போது புலிகள் இயகத்தைச் சேர்ந்தவர்கள் தெருத்தெருவாக ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களைத் தேடியலைகிறார்கள். கிராமத்தை விட்டு வெளியே சென்றால் ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

இறுதியில் ஒரு முடிவோடு நள்ளிரவிற்குச் சற்றுப் பின்னர் ஜெரோம் துவிச்சக்கர வண்டியை செலுத்த நாம் இருவரும் ராசபாதை வீதி முகாமை நோக்கி வயல் வெளிகளை ஊடறுத்துக் கொண்டு செல்கிறோம். அரை மணி நேரத்தில் தனிமை உறைந்து கிடந்த மாடிக்கட்டிட வளாகத்தினுள் நுளைகிறோம். அக் கட்டிடம் பெண்கள் முகாமாகவிருந்தது. அன்று முதல் நாள் அதி காலையிலேயே அங்கு சென்ற விடுதலைப் புலிகள் அங்கிருந்த பெண்களைக் கைதுசெய்து அழைத்துச் சென்றுவிடுகின்றனர். யன்னல் திரைகள் அகற்றப்பட்டு, நீண்ட மாளிககை போன்ற கட்டடத்தின் கதவுகள் ஓவெனத் திறந்திருக்க நிலவு ஒளியில் கட்டடத்தின் பின்புறத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்தபோது அதிகாலை ஒரு மணியை அண்மித்திருக்கலாம்.

மணைணைத் குடைந்து இரண்டு அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை எடுப்பதற்கான முன் ஆயத்தங்களுடன் நாம் அங்கு சென்றிருக்கவில்லை. அருகில் கிடைத்தவற்றை எல்லாம் எடுத்துக்கொண்டு ஆயுதங்களை மீட்பதற்கு எமக்கு 20 நிமிடங்களாவது தேவைப்பட்டிருக்கும். சில கிரனைட்டுக்கள், ஒரு கைத்துப்பாக்கி, எஸ்.எல்.ஆர் ரக துப்பாக்கி ரவைகள் என்பவற்றை அங்கு பெற்றுக்கொண்டோம்.

கட்ட்டத்தின் உள்ளே சென்ற ஜெரோம் ஒரு பிளாஸ்டிக் பையோடு வெளியே வருகிறார். கட்டட வாசற்கதவு நாம் உள்ளே வரும் போது திறந்தே இருந்தது.

நாம் புறப்படத் தயாராகும் போது புலிகளின் ஜீப் வண்டியொன்று வளாகத்தினுள் வரும் ஒளியைக் காண்கிறோம். எமக்கு அங்கிருந்து தப்பிச் செல்ல வேறு வழிகள் இருக்கவில்லை.

இருள் கவ்விய கட்டடத்தின் மேல் பகுதியில் அவசர அவசமாகச் சென்று ஒளிந்து கொள்கிறோம். ஜீப் வண்டியில் வந்த புலிகள் சில நிமிடங்கள் அங்கே செலவுசெய்துவிட்டு அங்கிருந்து அகன்று சென்றுவிடுகின்றனர். சில நிமிடங்கள் தாமதத்தில் நாங்கள் உரும்பிராய் நோக்கிச் சைக்கிளைச் செலுத்துகிறோம். ஜெரோம் இந்தத் தடவையும் சைக்கிள் செலுத்த நான் அங்கிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களைக் கைகளில் வைத்திருக்கிறேன்.
கோண்டாவில் பகுதியில் அன்னங்கை என்ற இடத்தை அண்மித்ததும் குடியிருப்புப் பகுதிகள் ஊடாகச் சைக்கிளைல் பயணித்துக்கொண்டிருந்த போது நேரம் 2 மணியைத் தாண்டிவிட்டுருந்தது.

இனிமேல் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் புலிகள் இயக்கத்திற்கும் தலைமறைவாகத் தான் நடத்தப்பட வேண்டும் என்பதை நாம் பேசிக்கொண்டே பயணிக்கிறோம். அப்போது குடியிருப்புப் பகுதிகளிலிருந்த வீடொன்றின் சுவர் வழியாக ஜெரோமின் உண்மைப் பெயரான ஜெயராஜ் என்ற பெயரில், “ஜெயராஜ் அண்ணை” என்ற குரல் கேட்கிறது.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பலர் துப்பாக்கிகளோடு எம்மைச் சூழந்துகொள்கிறார்கள். அவர்களுள் ஜெரோமின் முன்னை நாள் நண்பரும் ஒருவர். அவர் தான் அந்தக் குழுவிற்குப் பொறுப்பானவர். புலிகளில் முக்கிய பதவியை வகிப்பவர். உடனடியாகவே எங்கள் இருவரையும் சாரமாரியாகத் தாக்குகிறார்கள். துப்பாக்கிகளாலும் கால்களாலும் தாக்குதல் நடத்துகிறார்கள்.

அடியின் கோரத்தின் மத்தியிலும் ஜெரோம் என்னப் பாதுகாக்க முற்படுகிறார். நான் ஈ.பி.ஆர்.எல்.எப் ஐச் சார்ந்தவன் இல்லை என்பதையும் தற்செயலாக என்னைக் கண்டபோது சைக்கிளில் ஏறி வந்ததாகவும் கூறுகிறார். என்னை அடிப்பதை நிறுத்திவிட்டு பல கேள்விகள் கேட்கிறார்கள். இறுதியில் நான் இயக்கத்தைச் சார்ந்தவன் அல்ல என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

பின்னதாக யாரையோ எதிர்பாத்துக் காத்திருந்தார்கள். அரை மணி நேரத்தில் வெள்ளை நிற வான் ஒன்று வந்து சேர்ந்தது. அதற்குள் எம் இருவரையும் ஏற்றிக் கொள்கிறார்கள். அதே வானில் ஏனைய சில கைதிகளையும் காண்கிறோம். பொதுவாக அனைவரும் மிருகத் தனமாகத் தாக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த வானில் சுமார் ஐந்து புலிகள் இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஆயுதங்களோடு அமர்ந்திருந்தார்கள். அக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர் சரா என்ற புலித் தளபதி. சரா என்பவர் அப்போது கல்வியன்காட்ட்டுப் பிரதேசப் பொறுப்பாளராகவும் புலிகளின் தலமையால் நியமிக்கப்பட்டிருந்தார்.

கோண்டாவில் சுடுகாட்டை அடைந்தபின்னர் வான் அத்ற்கு அருகாமையில் நிறுத்தப்பட்டது. ஜேரோமை வானில் இருந்து தர தரவென வெளியில் இழுத்துச் சென்றனர்.

இந்தச் சுடுகாட்டில் வைத்தே உன்னைக் கொலைசெய்யப் போகிறோம் என மிரட்டியவாறே மூன்றுபேர் ஜெரோமோடு சென்றனர். ஆறு அடிக்கும் மேல் உயர்ந்த ஆஜான பாகுவான தோற்றம் கொண்ட ஜெரோமின் கால்களில் துப்பாக்கியால் ஒருவர் அடித்ததும் அவர் கீழே சரிந்தார், உடனே அவரைத் தரதரவென்று இழுத்துச் சென்றனர்.

சுடலைக்குச் ஜெரோன் அழைத்துச் செல்லப்பட்ட சில நிமிடங்களாக ஏனைய கைதிகளோடு நானும் பயத்தின் மத்தியில் காத்துக்கொண்டிருக்கிறேன்..
பலமான அலறல் சத்தம் சுடலை நடுவிலிருந்து கேட்கின்றது.

அதிகாலை அமைதியை கிழித்துக்கொண்டு எமது காதுகளை அறைந்த அனத மரண ஓலம், எமது அனைவருக்கும் மரண பயத்தை அறிமுகம் செய்தது.

நாம் எண்ணியது போன்று ஜெரோம் கொல்லப்படவில்லை. சிறிது நேரத்தின் பின்னதாக மீண்டும் வானிற்கு அழைத்து வரப்படுகிறார். அரவரது முகம் முழுவதும் இரத்தம் வடிந்திருந்தது அவரை இழுத்து வந்தவர்கள் வானிற்குள் அழுத்துகிறார்கள். பின்னர் வான் மானிப்பாய் பகுதிக்குச் செல்கிறது. அங்கு ஏற்கனவே தரித்திருந்த மற்றும் சில வாகனங்களில் இருந்தவர்களோடு பேசிக் கொள்கிறார்கள்.

சில நிமிடங்களில் அங்கிருந்த ஒரு வீடு சுற்றி வளைக்கப்படுகிறது. அந்த வீட்டில்ருந்த முதியவர் திருடர்கள் என்ற பயத்தில் யன்னல் வழியாக கத்தியொன்றோடு எட்டிப்பார்க்கிறார். துப்பாக்கிப் பிடியால் அடித்ததில் அவரது விரல் துண்டிக்கப்படுகிறது.

பின்னர் வீட்டுக் கதவு திறக்கப்படுகிறது. அங்கு சோதனையிட்டச் சென்ற புலி உறுப்பினர்கள் சற்றுப் பின்னதாக வெளியெ வருகின்றனர். வானுக்குள் இருந்த சராவிடம் ஒருவர் வந்து இது தவறான தகவல் என்றும் அவர்களுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்றும் கூறுகிறார்.

மீண்டும் வான் அடுத்த கைதை நோக்கி நகர்கிறது. இதற்கிடையில் வானில் இருந்தவரிடம் கைதி ஒருவர் தண்ணி கேட்கிறார். புலி உறுப்பினர் போத்தல் ஒன்றிலிருந்த கொக்கோகோலாவை வழங்க முற்படும் போது சரா அவரின் கன்னத்தில் அறைந்து, கெட்ட வார்தைகளால் திட்டுகிறார். போத்தலைத் திருப்பி வாங்கிக் கொள்கிறார்.
உரும்பிராய் பகுதிக்குச் சென்ற சரா குழுவினர் அங்கிருந்த ஆமி குமார் என்று அழைக்கப்பட்டவரையும் கைது செய்கின்றனர்.

அதிகாலை 6 மணிக்கு வான் நல்லூர் வைமன் ரோட்டில் இருந்த முகாமை அடைகிறது.

இரண்டு மாடிகளைக் கொண்ட அந்த முகாமில் மேல் மாடியில் இருந்து சித்திரவதைக் கூக்குரல்கள் கேட்கின்றன. அங்கு கொண்டு செல்லப்பட்ட எமது விபரங்களை ஒருவர் பதிந்து கொள்கிறார். அவரது ஒரு கையில் துப்பாக்கிச் சூட்டுக்காயத்திற்குக் கட்டுப்போடப்பட்டிருந்தது. இன்று பிரித்தாபியாவில் கே.பி நடத்தும் தன்னார்வ நிறுவனத்தின் பிரித்தானியப் பிரதிநிதியென தன்னை அறிமுகம் செய்யும் வாசு என்பவர் தான் எமது விபரங்களைப் பதிந்து கொண்டவர் என சில காலங்களின் முன்னதாக அறிந்துகொண்டேன்.

நாங்கள் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறோம். முக்கிய உறுப்பினர்களுக்கான சித்திரவதைக் கூடத்திற்கு ஜெரோம் கொண்டுசெல்லப்படுகிறார். எனையவர்கள் கீழ் தளத்தில் என்னோடு சிறிய அறையொன்றில் அடைக்கப்படுகிறார்கள்.

அங்கு ஏற்கனவே நான்கு பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்ந்து பிரான்சில் செயற்படும் கிருபன் என்பவரும் ஒருவர்.

மறு நாள் மாலை ஒரு தொகுதிக் கைதிகளை விசாரணை செய்வதற்காக புலிகளின் தளபதி கிட்டு வருகிறார். விசாரணையின் முடிவில் சிலருக்கு மேலதிகவிசாரணையும், சிலருக்கு விடுதலையும், சிலருக்கு மரண தண்டனையும் வழங்கப்படுகிறது.

விசாரணையிலிருந்து மீண்ட கிருபன் தன்னை மறுநாள் காலை விடுதலை செய்யப் போவதாகவும் என்னைப் புலிகள் அடைத்து வைத்திருப்பது குறித்து எனது வீட்டில் சொல்லப் போவதாகவும் உறுதியளித்தார்.

கிருபன் அதிகாலை விடுதலை செய்யப்படுகிறர். இரண்டாவது தொகுதிக் கைதிகள் மதியத்தை அண்மித்த வேளையில் அழைக்கப்படுகிறார்கள். அதில் நானும் இணைக்கப்படுகிறேன். விசாரணைக்காக அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம். கிட்டு விசாரணை மேற்கொள்ள வாசு குறிப்பெடுக்கிறார். எனக்கு சற்று முன்னதாக விசாரிக்கப்பட்ட ஒருவர் கிட்டு கேட்ட கேள்விக்கு சரியாகப் பதிலளிக்காமையால் கிட்டு வைத்திருந்த சங்கிலியால் அவரது தலையில் ஓங்கி அடிக்கிறார். அவரின் தலை பிளந்து இரத்தம் ஓட நிலத்தில் சரிகிறார். உடனடியாக அவர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்ப்படுகிறார்.

நான் அழைக்கப்பட்டதும் கிட்டு மற்றும் ஐடியா வாசு என்ற புலி உறுப்பினர்கள் இரகசியமாகப் பேசிக்கொள்கின்றனர். கிட்டு, வாசு இருவரும் என்னை அடையளம் கண்டு கொள்கின்றனர். விஜிதரன் என்ற பல்கலைகழக மாணவன் புலிகளால் கடத்தப்பட்டுக் கொலைசெய்யப்பட்டது குறித்த போராட்டத்தின் தலைமைக் குழுவில் நானும் செயற்பட்டதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். விஜிதரன் விடுதலை குறித்து இந்த இருவரையும் நான் முதலில் சந்திருந்தேன். வேறு எதுவும் அவர்கள் பேசவில்லை. ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த பத்திரத்தில் கையெழுத்திடச் சொன்னார்கள். நான் எதுவும் பேசமல் கையெழுத்திடுகிறேன். அதில் இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எழுதப்பட்டிருந்தது. மேலதிகமாக அவர்கள் எதுவும் பேசவில்லை நான் விடுதலை செய்யப்படுகிறேன்.

முகாமிற்கு வெளியே வந்ததும், அங்கே எனது அம்மாவும் அப்பாவும் காத்துக் கொண்டிருந்தனர். கிருபன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் ஏற்கனவே அவர்கள் அங்கு வந்திருந்தனர். தவிர பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவனான கல்வி கற்றுகொண்டிருந்த எனது கைது குறித்து அங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் எனது விடுதலைக்கான போராட்டம் நடத்த தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது அங்கு சென்றதும் தெரிய வந்தது.

மரணத்தின் வாசலைத் தரிசித்துத் திரும்பிய உணர்வு ஏற்பட்டது.

சில நாட்கள் உரும்பிராயிலும் பல்கலைக்கழக விடுதியிலும் வெளியுலகம் தெரியாமல் தங்கிருந்தேன்.

புலிகள் தவிர்ந்த அனைத்து விடுதலைப் போராட்ட இயக்கங்களும் அழித்தொழிக்கப்படும் வரை புலிகள் இயக்கத்தினரின் தாக்குதல்கள் தொடர்ந்தன. இந்தச் சந்தர்ப்பததைப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை இந்திய அரசுகள் அதன் தலைமைகளைத் தம்மோடு இணைத்துக்கொண்டன. பல போராளிகள் வேறு வழியின்றி தலைமைகளின் வழி தொடர்ந்தனர். இன்றைய ஈ.பி.டி.பி யின் இருப்பும் இந்த அடிப்படையிலேயே உருவானது.

ஈ.பி.ஆர்.எல்.எப், இந்திய இராணுவம்

அழிக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் இலங்கையை ஆக்கிரமிக்கும் நோக்கோடு வடக்கில் நிலைகொண்ட இந்திய இராணுவத்தோடு(IPKF) மீளவும் பிரசன்மாகியிருந்தது. ஒவ்வொரு பிரதான சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தது. அவர்களோடு அழிக்கப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீளவும் வந்திறங்கினர். புலிகளை அழித்து இந்தியாவின் உதவியோடு ஈழத்தைக் கைப்பற்றுவோம் என ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்களில் ஒருவரான வரதராஜப் பெருமாள் அறிக்கைவிடுக்கிறார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் யாழ்ப்பாண நகரின் கோடியில் அமைந்திருந்த அசோக் ஹோட்டலில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் இராணுவம் செயற்பட்டது.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான மண்டயன் குழுவினர், சந்தேகத்தின் பெரில் கைதுசெய்த பலரை வெட்டியே கொன்றனர் என்ற தகவல்கள் வெளியாகின. இந்திய இராணுவம் நிலைகொள்ள ஆரம்பித்த முதலாவது நாளில் இருந்தே மக்கள் விரோதக்க் கும்பலாகவே தன்னை அறிமுகப்படுத்தியது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்ற அனைத்தும் இலங்கை இராணுவத்திற்கு ஒப்பான வகையில் நிறைவேற்றப்பட்டன.

தேசியப் போராட்டம், வர்க்கப் புரட்சி, மக்கள் இயக்கம் என்ற அழகான வார்த்தைகளை உச்சரித்த ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இயங்க ஆரம்பித்தது.

1988 ஆம் நடுப்பகுதில் ஈ.பி.ஆர்.எல்.எப் மக்கள் மீதான பல முனைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. குறிப்பாகப் பல்கலைக் கழக மாணவர்கள் மீதான கைதுகள் உச்சத்தைத் தொட்டிருந்தன. பல்கலைக் கழகத்திற்குக் கல்விகற்கச் செல்வதென்பதே பாதுகாபற்றதாக இருந்தது. இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் அமைப்புச் சார்பாக ஒரு துண்டுப் பிரசுரம் ஒன்றை வெளியிட்டோம்.

1988ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய இராணுவத்தின் தலைமையில் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற்றன. அவ்வேளையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் விடுதியில் நான் தங்கியிருந்தேன். விடுதிக்கு நேர் எதிராக அமைந்திருந்த தொழில் நுட்பக் கல்லூரி தேர்தல் சாவடியாகப் பயன்படுத்தப்பட்டது.

விடுதிக்குப் பின்புறமிருந்து தேர்தல் சாவடியை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனையடுத்து இந்திய இராணுவத்தினர் விடுதியைச் சுற்றிவளைத்தனர். தெருவில் நடமாடிய ஒவ்வொருவரையும் எழுந்தமானமாகத் தாக்கினர்.

விடுதியிலிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வரவில்லை என்பதை விடுதியைச் சுற்றிவளைத்திருந்த இந்திய இராணுவத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு என்னை அவர்களிடம் சென்று பேசுமாறு மாணவர்கள் முடிவெடுத்தனர்.

அவர்களிடம் பேசச் சென்ற போது நான் தேர்தல் சாவடியிலிருந்த இராணுவத் தளபதியிடம் பேசுவதற்காக அழைத்துச் செல்லப்பட்டேன்.
பஞ்சாபிக் காரரான அவரது முன்னால் சென்ற போது எனது மேலங்கியில் எண்ணைப் படிவு காணப்படுவதாகவும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தது நானாக இருக்க வேண்டுமென முடிவெடுக்கிறார். என்னை தீர விசாரிக்குமாறு சில இராணுவத்தினரிடம் அனுப்பி வைக்கிறார்.

அவர்கள் என்னைத் தாக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு இராணுவத்தினர் ஒரு மேசையுடன் இணைத்து என்னைக் கட்டிவைத்துவிட்டு மிருகத் தனமாக அடிக்க ஆரம்பிக்கின்றனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக எனக்கு அடி விழுகிறது. இறுதியில் நான் மயக்கமடைந்து விட்டேன். மயக்கம் தெளிந்த போது எனக்கு சிறிதளவு நீர் அருந்த அனுமதித்தார்கள். தேர்தல் முடிவடைந்திருந்தது. இராணுவத்தினர் முகாமிற்கு செல்ல ஆரம்பிக்கின்றனர். எனது கைகளை இறுகக்கட்டி இராணுவ வாகனத்தை நோக்கி அழைத்துச் செல்கின்றனர்.

சேகர் என்ற தமிழ் அதிகாரி அங்கு வருகிறார். என்னைப் புலியா எனக் கேட்கிறார். இல்லை என்றதும் தனது சப்பாத்துக் கால்களால் எனது முதுகில் உதைகிறார். சில நிமிடங்கள் நினைவிழந்த நிலையில் மருதானாமடம் பிரிவைச் சேர்ந்தா இராணுவத்தினரின் வாகனத்தில் ஏற்றப்படுகிறேன். அங்கு என்னை ஒப்ப்டைத்தவர் சேகர். அந்த அணியின் பொறுப்பதிகாரிக்கு நான் புலிகள் சார்ந்தவன் என்று கூறியே ஒப்படைக்கப்படுகிறேன்.

மருதனாமடம் முகாமிற்கு அவர்கள் என்னைக் கொண்டு செல்லும் வரைக்கும் ஏறத்தாழ 10 நிமிட நேரமாக பலர் அங்கும் இங்குமாகத் தாக்குதல் நடத்தினர். சிகரட் புகைத்துக்கொண்டிருந்த இராணுவதினர் ஒருவர் என் மீதே அதனை அணைக்கிறார். பல தடவைகள் உரத்து அலறியும் எந்தப் பயனும் இல்லை. எல்லாமே மரத்துப் போனது போன்ற உணர்வு. இறுதியாக முகாமை அடைந்ததும் அங்கு இராணுவ வண்டியில் படுக்க வைக்கப்பட்டிருந்த எனது கால்களைப் பிடித்து இழுத்ததில் எனது தலை அடிபட விழுந்ததில் மற்றொரு தடவை நினைவிழக்கிறேன்.

நான் விழித்துக்கொண்ட போது என்னைச் சுற்றிப் பலர் தமிழில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் முன்னை நாள் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள். எனக்குத் தெரிந்த ஒருவரையும் காணக்கூடியதாக இருந்தது.

ஒரு சிலர் குடி போதையில் இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. எல்லோருமே என்னிடம் பல கேள்விகளைக் கேட்கின்றனர்.
அங்கிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் ஒருவர் நான் இந்திய இராணுவத்திற்கு எதிராகச் செயற்படுவது தனக்குத் தெரியும் என்கிறார். உடனடியாகவே கேள்விகள் நிறுத்தப்பட்டு சாரமாரியாகத் தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றனர்.

தமக்குத் தெரிந்த சித்திரவதை முறைமகள் அனைத்தையும் கையாள்கின்றனர். ஒரு புலி உறுப்பினரையாவது காட்டிக்கொடுக்காவிட்டல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகின்றனர். எனக்கு முன்னமே தெரிந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் அங்கிருந்து செல்லும் போது எனது முதுகில் வில்லுக் கத்தியால் கீறிவிட்டு மறு நாள் வரைக்கு இது இரத்தம் சொட்டப் போதுமானது எனக் கூறிவிட்டு அகன்று செல்கின்றார்.

மருதனாமடம் முகாம் வழமையாகக் கைதிகளைத் தடுத்துவைப்பதற்கான முகாம் இல்லை என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கு நேரமெடுக்கவில்லை. முகாமில் என்னைத் தவிர வேறு கைதிகளைக் காணமுடியவில்லை. இரவு நெடு நேரமாக கிணற்றிற்கு அருகிலிருந்த மரத்தோடு என்னைக் கட்டிவைத்திருந்தனர். நள்ளிரவு இருக்கலாம் ஒரு இந்திய இராணுவத்தினர் எனக்கு அருக்கில் வந்து குடிப்பதற்கு நீர் கொண்டுவந்து தந்த பின்னர் முகாமின் பின்புறதில் இருந்த மலசல கூடத்திற்குப் பின்புறம் காணப்பட்ட அறையில் அடைத்துவிட்டனர். இரவு உறங்கியதாக நினைவில்லை. அதிகாலையில் உறங்க முற்பட்ட வேளையில் சற்று உணவோடு அறைக்குள் எனைத் தள்ளிய இராணுவ சிப்பாய் வருகின்றார்.

சற்றுப் பின்னதாக இரண்டு ஈ.பி.ஆர்.எல்.எப் பிரதான உறுப்பினர்கள் வருகின்றனர். ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட தங்கன் என்ற மானிப்பாயைச் சேர்ந்தவர். மற்றவர் பிரதீப் என்பவர்.

நீ எப்போது புலியில் சேர்ந்தாய் என்று கேட்டவாறே தங்கன் என்னைச் சாரமாரியாகத் தாக்குகிறார். கிணற்றிற்கு அருகில் அழைத்துச்சென்ற அவர்கள் நீர் நிரம்பிய ஒரு வாளிக்குள் எனது தலையை அமிழ்த்துகின்றனர். நான் மூச்சுத்திணறும் வரைக்கும் நீருக்குள் எனது தலையை வைத்திருக்கின்றனர். என்னிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள முடியாமையால் அறைக்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்குதல்களைத் தொடர்கின்றனர்.

அப்போது தமிழ்ப் பேசும் இந்திய இராணுவ அதிகாரி சேகர் அங்கு வருகின்றார். தனது பங்கிற்கு அறையின் மூலையில் உட்காரவைக்கப்பட்டிருந்த என்னை கால்களால் உதைக்கிறார்.

என்னை இங்கு வைத்து விசாரணை செய்தால் உண்மை சொல்லப்போவதில்லை என்றும் மானிப்பாயில் உள்ள விசேட சித்திரவதை முகாமிற்கு என்னை அழைத்துச் செல்லப் போவதாகவும் கூறுகின்றனர்.

அங்கே மின்சாரம் பாய்ச்சும் உபகரணங்கள் உட்பட பல சித்திரவதைக் கருவிகள் இருப்பதாகவும் நான் எப்படியும் உண்மை சொல்வேன் என்றும் பேசிக்கொள்கின்றனர்.

அதன் பின்னர் வெளியே வாசலுக்குச் சென்று அங்கு சித்திரவதைச் செய்யப்படும் போது இறந்துபோன ஒருவரைப்பற்றியும் பேசிக்கொள்கின்றனர்.

அவர்கள் அங்கிருந்து அகன்ற சிறிது நேரத்தில் அறைக்குள் வந்த உப நிலை இராணுவ அதிகாரி ஒருவர் தன்னை நாகரீகமாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார். ராஜஸ்தானைச் சேந்தவர் என்கிறார். நான் உண்மையில் புலி இயக்கத்தைச் சார்ந்தவனா என்று கேட்கிறார். நான் நடந்தவற்றை விபரிக்கிறேன். அவர் சித்திரவதை முகாமில் நடப்பவற்றை விபரிக்கிறார். கைகளில் நகங்களைப் பிடுங்குவார்கள், கண்களில் ஊசி ஏற்றுவார்கள் என்று மனித நாகரீகங்கள் கேட்டிராத பல சித்திரவதைகளைப் பற்றிக் கூறுகின்றார்.

அவர் கூறும் போதே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. முதல் நாள் இரவு ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் கீறிய கத்திக்காயம் மேலும் வலித்தது.

யாராவது எனக்குத் தெரிந்த பல்கலைகழகப் புலி உறுப்பினர் தொடர்பான தகவல்களை மட்டும் கூறினால் என்னை இங்கிருந்து விடுதலை செய்துவிடுவதாகக் கூறினார். வெள்ளிக்கிளமை விடுமுறை நாளொன்றில் கைது செய்யப்படிருந்தேன். அன்று சனி.

இன்னும் ஒரு ஞாயிறு கழிந்தால் திங்கள் பல்கலைக் கழகத்தில் போராட ஆரம்பித்துவிடுவார்கள். போராட்டம் ஆரம்பித்தபின்னர் அடிகாயங்களோடு என்னை விடுதலை செய்ய மாட்டார்கள். ஒன்றில் கொலை செய்துவிடுவார்கள் அல்லது சித்திரவதை முகாமில் நீண்டகாலம் வைத்திருப்பார்கள் என்கிறார்.

பல்கலைக் கழகதிலிருந்து சிலர் அணுகியதாகவும் இராணுவ அதிகாரிகள் நான் கைதானதை மறுத்துவிட்டதாகவும் கூறுகிறார். கைதானதை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லாத காரணத்தால் கொலை செய்து அழித்துவிடுவது இலகுவானது என்கிறார். அவரோடு ஒத்துழைத்தால் விடுதலைக்காக ஆவன செய்வதாகக் கூறுகிறார்.
எனக்குத் யாரையும் தெரியாது என்று மீண்டும் கூறியதும் எதுவும் பேசாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார்.

மதிய உணவு தரப்பட்டதாக நினைவு. மாலை வேளையில் தங்கன் மீண்டும் என்னை வந்து மிரட்டிவிட்டுச் சென்றார். ஞாயிறு மாலை சித்திரவதை முகாமில் சந்திப்பதாகக் கூறினார்.

சில மணி நேரங்களின் பின்னர் அதே உப நிலை இராணுவ அதிகாரி வருகின்றார்.

புலிகளின் ஒரு உறுப்பினரை காட்டிக்கொடுத்த பின்னர் விடுதலையாகி வெளியில் சென்று தமக்குத் தகவல் தருமாறு செயற்பட்டால் உடனடியாகவே விடுதலை செய்வதாகக் கூறுகிறார். தவிர, நான் அதிகமாகத் தாக்கப்பட்டிருப்பதால் ஏனைய கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் முகாம்களுக்கு அனுப்பத் தயாரில்லை என்றும் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்த அடிப்படையில் விடுதலை செய்யலாம் அல்லது சித்திரவதை முகாமிற்கு அனுப்ப வேண்டியதாக இருக்கும் என்கிறார்.

நான் இப்போது பேச ஆரம்பிக்கிறேன்,

“உங்களுடைய நாட்டில் வெள்ளையர்களை வெளியேற்றுவதற்கான போராட்டம் நடைபெற்றபோது மக்கள் ஆதரவு இருந்ததைப் போன்றே இப்போதும் புலிகளை மக்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் புலிகள் தலைமறைவு அமைப்பு. மக்களுக்குப் பழக்கப்பட்டவர்கள் இப்போது அங்கே இப்போது தலைமறைவாகிவிட்டார்கள். காட்டிக்கொடுப்பதற்கு யாரும் இல்லை. ஆனால் நீங்கள் அப்பாவிகளைத் தாக்கினால் அவர்கள் புலிகளோடு இணைவதைத் தவிர வேறு வழி இல்லை என்றாகிவிடும்” என்பன போன்ற விடயங்களைக் கூறுகிறேன். ஆமோதிப்பது போன்று தலையசைத்துவிட்டுச் செல்கிறார். அவரை மீண்டும் நான் காணவில்லை.

அன்று இரவு சித்திரவதைகள் குறைந்திருந்தன. மறு நாள் ஞாயிறு, மதியம் அளவில் முகாமின் முன்னரங்கில் காவலுக்கு நின்றிருந்த இராணுவத்தோடு என்னை நிறுத்தி வைத்தனர். தெருவால் புலி உறுப்பினர்கள் சென்றால் காட்டிக்கொடுக்குமாறு பணிக்கப்பட்டேன். துப்பாக்கியோடு ஒரு இராணுவச் சிப்பாய் தெருவில் போகிறவர்களை கண்காணித்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது இடைவெளி கிடைக்கும் போதெல்லாம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட என்னைத் தாக்குவார்.

பொழுது சாய்ந்ததும் மறுபடி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டேன். சில ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்கள் வந்தார்கள். மானிப்பாய் முகாமிலிருந்து பிரதீப்பும் வந்திருந்தார். “நல்ல தமிழ்” மட்டும் தான் “தோழர்” பேசினார்.
வெளியே ஒடிச்சென்று பெரிய தடி ஒன்றைக் கொண்டுவந்து தாக்கியது நினைவிருக்கிறது.

ஒரு கட்டத்தில் நான் நினைவிழந்துவிட்டேன். கண்விழித்த் போது யாரும் அருகில் இல்லை. நீண்ட நேரத்தின் பின்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் வந்து ஏதோ ஹிந்தியில் கேட்டார். நான் பதில் சொல்லவில்லை. திட்டியபடி பல தடவை முகத்தில் அறைந்தார்.

அவர்கள் கூறியபடி சித்திரவதை முகாமிற்கு நான் கூட்டிச் செல்லப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது.

மறு நாள் அதிகாலை அடி உதை எல்லாம் நிறுத்தப்பட்டிருந்தது. சித்திரவதை முகாமிற்குக் கொண்டு செல்லப்போவதாகவும் என்னை இராணுவ உடுப்பை அணிந்து கொள்ளுமாறும் ஒரு அதிகாரி உடை, தொப்பி ஆகியவற்றுடன் வந்தார்.

மதியத்திற்குச் சற்றுப்பின்னர், இராணுவ உடையுடன், பின்பக்கம் திறந்த இராணுவ வண்டியில் ஏற்றப்படுகிறேன்.

சித்திரவதை முகாமிற்குச் செல்லும் வழியில் எனது மானிப்பாய் வீட்டைச் சோதனையிடப் போவதாகச் சொல்கிறார்கள்.
வீட்டிற்குச் செல்லும் வழியில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்திற்கான தயாரிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக உளவாளிகள் மூலம் தகவல்கள் கிடைத்திருப்பதாகச் பொறுப்பதிகாரி சொல்கிறார்.

எனது வீட்டிற்குச் செல்லும் வழியில் கடை ஒன்றின் அருகில் சற்று மறைவான இடமொன்றில் என்னையும் இன்னொரு இராணுவ அதிகாரியை காவலுக்கும் நிறுத்திவிட்டு வீட்டைச் சோதனையிடச் செல்கிறார்கள். அவ்வேளையில் எனது வீட்டில் எனது ஆசிரியராகவிருந்த கலாநிதி சிறீதரன், பேராசிரியை ரஜனி திரணகம உட்பட உறவினர்கள், நண்பர்கள் பலர் “காணாமல்போன” என்னைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்ததை பின்னதாக அறியக் கூடியதாக இருந்தது.

அங்கு சென்ற இந்திய இராணுவத்தினர் தாங்கள் என்னைக் கைது செய்யவில்லை என்றும், வீட்டில் ஒளிந்திருக்கிறேனா எனச் சோதனையிட வந்ததாகவும் கூறியிருந்தனர்.

எனக்குக் காவலுக்கு நின்றிருந்த இராணுவச் சிப்பாய் அருகிலிருந்த கடைக்கு பீடி வாங்குவதற்காகச் செல்கிறார். அவ்வேளையில் எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தெருவால் நடந்து செல்கிறார்.

அவரை நான் சைகை காட்டி அழைத்ததும் என்னை நோக்கி வருகிறார். அடி விழுந்ததில் முகம் முழுவதும் வீக்கமடைந்திருந்ததால், கூர்க்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அழைப்பதாகக் கருதியே அவர் என்னை அணுகியதாக பின்னதாக அவர் என்னிடம் கூறியிருந்தார்.

அருகில் வந்ததும் என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் என்னுடன் ஏதும் பேசாமல் உடனடியாகவே மறுபக்கம் திரும்பிச் சென்று எனது வீட்டில் விடயத்தைத் தெரிவித்திருக்கிறார்.

வீட்டில் இருந்த அனைவரும் கடையை நோக்கி ஓடிச் செல்ல, நிலமையைப் புரிந்துகொண்ட இந்திய இராணுவத்தினர் அவசர அவசரமாக வாகனத்தை நோக்கி விரைந்து அதனைச் செலுத்த ஆரம்பித்தனர்.

வாகனத்தின் பின்னால் எனது குடும்பத்தினர் ,மற்றும் அவர்களுடனிருந்த பேராசியர்கள்  ஓடிவருவதைக் காணக்கூடியதாக இருந்தது.

இப்போது நான் முகாமில் உயிரோடு வைக்கப்பட்டிருப்பதைப் பலர் சாட்சியாகக் கண்டிருக்கிறார்கள். இராணுவ வாகனம் இடையில் நிறுத்தப்பட்டு யாரையோ தொடர்பு கொள்கிறார்கள்.

இப்போது அவர்களது திட்டம் மாறியிருக்க வேண்டும். மருதனாமடம் முகாமிற்கு மீண்டும் கொண்டு செல்லப்படுகிறேன்.

அன்று மாலைவரை எனக்கு யாரும் அடிக்கவில்லை. அன்று இரவிற்குள் எனது வீட்டார், ரஜனி திரணகம போன்றோர் பல அதிகாரிகளைச் சந்திக்கின்றனர். ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் பத்மனாபாவையும் சந்திக்கின்றனர்.

அன்று இரவே விடுதலை செய்யப்படுகிறேன். காயங்கள் குணமாகும் வரை வெளியே வரக்கூடாது, பத்திரிகைகளில் படம் வரக்கூடாது, என்ற எச்சரிக்கையின் பின்னர் எனதுகுடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறேன்.

* வைமன் வீதி முகாமில் நான் சந்தித்த வாசு இப்போது கே.பி இன் தன்னார்வ நிறுவனத்தின் பிரித்தானிய முகவர்…பிரித்தானியாவில் வசிக்கும் புலி எதிர்ப்பாளர். கலாநிதி சிறீ மனித உரிமைக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயற்பாட்டாளர், ஜெரோம் சில காலங்களின் பின்னர் மாரடைப்பால் மரணித்துவிட்டார், கிருபன் பிரான்சில் வசிக்கிறார், பிரதீப் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் வசிப்பதாகக் கூறுகிறார்கள். நான் மீண்டும் எழுத்துக்களோடு பிரித்தானியத் தெருக்களில்…

SHARE