அந்நியர்களுக்கு எதிரான அனாவசிய அதிபீதியை ஆங்கிலத்தில் “Xenophobia” என்பார்கள். முஸ்லிம்களையும், தமிழர்களையும் அந்நியர்களாகவே கட்டமைத்து வந்திருக்கிற சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தம் அதிபீதி மிக்க வெறுப்புணர்ச்சியை பரப்பி வந்திருப்பதை நாம் அறிவோம்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பீதி என்பது கடந்த காலத்தில் தமிழர்களுக்கு எதிராக புனையப்பட்டிருந்த பீதியிலும் பார்க்க வேறுபட்டது. உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களும், புனைவுகளும் இஸ்லாமிய வெறுப்புணர்ச்சியும் (Islamofobia) இதை ஒத்ததே.
இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு ஏனையோர் வந்தேறு குடிகள் என்பதை உறுதிபடுத்துவதற்கான முஸ்தீபு இன்று நேற்றல்ல அந்த சித்தாந்த பரப்புரைக்கு ஒரு நூற்றாண்டுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. தமிழ் மக்களை ஆயுத ரீதியில் தோற்கடித்த பின்னர் அரசியல் ரீதியில் தோற்கடிப்பதற்கு தமிழ் இனத்துடன் முஸ்லிம் இனமும் அவர்களது நிகழ்ச்சி நிரலில் இருப்பது தான்.
முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்ச்சிநிரலில் சிங்கள பௌத்த பேரினவாத சித்தாந்தம் பல படிநிலைகளைக் கொண்டியங்கி வருகிறது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியை சித்தாந்த ரீதியில் வலுவாக பாமர சிங்கள மக்கள் மத்தியில் உறுதியாக ஊன்றச் செய்தால் மாத்திரமே அதன் அடுத்த கட்ட வடிவத்துக்கு அதனை நகர்த்த முடியும்.
இதுவரை இலங்கையில் நிகழ்ந்த அத்தனை இனக் கலவரங்களின் பின்னணியிலும், வெறுப்புணர்ச்சி, வதந்தி, முன்பீதி என்பவை பிராரம்பமாக இருந்திருக்கிறது. அது தன்னியல்பாக நிகழ்ந்தது போல தென்பட்டாலும் கூட அதற்கென்று ஒரு நீட்சி இருந்ததென்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.
அப்படி முன் பீதிக்கு உள்ளாக்குகின்ற பல கட்டுக்கதைகளும், ஐதீகங்களும், புனைவுகளும், மாயைகளும் சமூகத்தில் இன்றளவிலும் பலமாக ஊன்றச் செய்யப்பட்டிருக்கிறது. இன்று அதனை திட்டமிட்டு மேற்கொள்வதற்கு சமூக வலைத்தளங்கள் பேராயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அம்பாறை நிகழ்வுக்கு முன்னர் இந்த பணிகள் நிறைவேற்றப்பட்டு இனக்கலவரத்துக்கு தயார் நிலையில் தான் இருந்திருக்கிறது. அங்கு மட்டுமல்ல நாடு முழுவதும் இன்று அப்படிப்பட்ட இனக்கலவரத்துக்கான தயார் நிலை இருக்கவே செய்கிறது என்பது கசப்பான உண்மை. அது கடந்த சில வருடங்களாக உறுதிசெய்யப்பட்டு வந்திருக்கிறது.
அம்பாறை நிகழ்வு திட்டமிட்டதா?
கொழும்பிலும் பல இடங்களிலும் கடந்த பெப்ரவரி மாதம் ஒரு சுவரொட்டி பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இப்படி இருந்தது.
“சிங்களவர்களே!
இலங்கை முழுவதுமுள்ள சிங்களக் கடைகளில் உணவை/பொருட்களை வாங்காதீர்கள். பெப்ரவரி முதல் வாரத்தில் இந்த நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள அதிக விஷமுள்ள மலட்டுத்தன்மை உருவாக்கும் மருந்துகளை இலங்கை முழுவதுமுள்ள பள்ளி வாசல்களால் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. பெண்கள் பாடசாலைகளுக்கு அருகாமையில் உணவு கரத்தைகளில் வடை, பெட்டிஸ், போன்றவற்றை மலிவு விலைக்கு விற்கப்படுகின்றன. நீங்கள் விழிப்புடன் இருந்து உங்கள் குழந்தைகளுக்கு தெளிவுபடுத்துங்கள்.”
அம்பாறை சம்பவம் நிகழ்ந்த அதே பெப்ரவரி 26 அன்று மவ்பிம பத்திரிகையில் ஸ்ரீ விஜயராம விகாராதிபதி கலாநிதி தலாவே சங்கரதன தேரர் ஆற்றிய உரை வெளியாகியிருந்தது. 1951 இல் 51% மாக இருந்த சிங்கள கொழும்பு பௌத்தர்களின் சனத்தொகை இப்போது 10% ஆக குறைந்துவிட்டது, அடுத்த 10வருடங்களில் அது 0% வீதமாக ஆகப் போகிறது, கொழும்பில் உள்ள பன்சலைகளுக்கு இனி வேலையில்லை நூடிவிடுங்கள் என்பார்கள். அவை மியூசியங்களாக எஞ்சிவிடும், ஏனையவை அழிக்கப்பட்டுவிடும்,”
இந்த பிரசாரங்களுக்கும் அம்பாறை நிகழ்வுகளுக்கும் சம்பந்தமில்லை என்று கூறப் போகிறோமா? அம்பாறையில் சர்ச்சைக்குரிய கொத்துரொட்டி பிரச்சினையை கிளப்பியவர் சிறிது நேரத்தின் பின்னர் தலைமறைவானார். அதன் பின்னர் கலவரத்தை முன்னெடுத்தவர்கள் அடுத்த கட்ட அணியினர். தீயிடுவதற்கான பெட்ரோல், மற்றும் ஆயுதங்கள் சொற்ப நேரத்தில் அங்கு இருந்தது. அது முன்கூட்டிய செயலே என்கிற சந்தேகம் வலுவாக இருக்கிறது.
“இனப்பெருக்க – இனச்சுருக்க சதி”
முஸ்லிம்களின் இனப்பெருக்கம் செயற்கையாக அதிகரிக்கப்படுகிறது என்பதும். அது ஒரு திட்டமிட்ட சதி என்பதும் இதற்கு முன் நிகழ்ந்த நிகழ்வுகளில் நீட்சி தான்.
அதாவது முஸ்லிம்கள் தமது இனத்தை பெருக்குவதை திட்டமிட்டு மேற்கொள்வது ஒருபுறம் நிகழ்த்திக் கொண்டிருக்க மறுபுறம் ஏனைய இனங்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த தமது வியாபார வலைப்பின்னல்களுக்கூடாக மலட்டுத்தனத்தை உருவாக்கக் கூடிய பொருட்களை இரகசியமாக கலந்து விற்று விடுகிறார்கள் என்கிற பிரச்சாரம்.
சிங்களவர்களை மலட்டுத் தனமாக்கும் சதியை முஸ்லிம்கள் செய்கிறார்கள் என்கிற பிரச்சாரம் சில ஆண்டுகளாகவே கூர்மை பெற்றுள்ளது. சகல இனவாத சக்திகளும் இந்த கருத்தை சிங்கள சமூகத்தில் ஆழமாக விதைத்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் கடைகளுக்கு செல்ல வேண்டாம் என்கிற எச்சரிக்கையையும், பீதியையும் கிளப்பி வந்திருக்கிறார்கள். முஸ்லிம்கள் வேகமாக இனபெருக்கம் அடைந்து வருகிறார்கள். சிங்கள நாட்டை விரைவில் ஆக்கிரமித்து விடுவார்கள். என்றும், அதன் சதியின் இன்னொரு அங்கமாக சிங்களவர்களை மலட்டுத்தன்மை ஆக்கும் முயற்சியில் பல வடிவங்களில் இயங்கி வருகிறார்கள். வதந்திகளையும் பரப்பி வந்திருக்கிறார்கள்.
இந்தப் பிரசாரங்களை தொடர்ச்சியாக செய்து வந்த முக்கிய பத்திரிகை திவயின. முஸ்லிம்களின் இனப்பெருக்கம், “கருத்தடை சதி” பற்றிய கட்டுரைகள், செய்திகள், பேட்டிகள், பேச்சுக்களை அதிகமாக வெளியிட்ட பத்திரிகை அது தான். இதனை ஆதாரத்துடன் நிறுவ முடியும். யுத்த காலத்தில் அதன் யுத்த செய்திகளையும், அவை சார்ந்த புனைவுகளையும் நம்பித் தான் அதன் வியாபாரம் நடந்தது. பாமர மக்களுக்கு மகிழ்வூட்டக்கூடியதாக யுத்த செய்திகளை புனைவேற்றி, திரித்து பரப்புவதில் அதற்கு நிகர் இலங்கையில் வேறொரு ஊடகம் இருந்ததில்லை. அதனை சிங்கள ஜனநாயக சக்திகளும், ஆய்வாளர்களும் கூட ஒப்புக்கொள்வார்கள்.
இதில் சிங்கள முஸ்லிம் வர்த்தக வர்த்தக போட்டியும் ஒரு காரணம் அதேவேளை பண்பாட்டு வெறுப்புணர்ச்சி, இன்னொரு இனம் தலைதூக்குவது பற்றிய பீதி என்பதன் வகிபாகமும் கவனத்திற் கொள்ளவேண்டியது.
90களில் ஆரம்பிக்கப்பட்ட பீதி
இனபெருக்கம், கருத்தடை சதி பற்றிய பீதியை தீவிரமாக முன்னெடுத்தவர் சோம ஹிமி. 90களில் அவர் முஸ்லிகளுக்கு எதிராக பல ஐதீகங்களை பரப்பி நிலைபெறச் செய்தவர்களில் முக்கியமானவர். அவருக்கும் மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கும் இடையில் பகிரங்கமாக நிகழ்ந்த நேரடி TNL தொலைக்காட்சி விவாதம் (27.09.1999) மிகவும் பிரசித்தி பெற்றது. அஷ்ரப் அவர்கள் சோம ஹிமியின் புனைவுப் பட்டியலை ஆதாரபூர்வமாக உடைத்தெறிந்தார். அவரே வெற்றிபெற்றார் என்றே முஸ்லிம், தமிழ் தரப்பு நம்பியது. அதேவேளை சிங்கள தரப்பும் அஷ்ரப்பை தாம் தோற்கடித்ததாக பிரச்சாரம் செய்தது.
20 வருடங்களுக்கு முன்னர் சோம ஹிமி பேசிய உரை இது. “…சிங்களவர்கள் வேகமாக மலட்டுத்தனத்துக்கு உள்ளாகிவருகிறார்கள். இன்னும் 40 வருடங்களுக்குள் சிங்களவர்கள் 45%க்கும் குறைவாகி விடுவார்கள். 55% வீதமாக முஸ்லிம்களும், தமிழர்களும் உயர்ந்துவிடுவார்கள். அப்போது முஸ்லிம் ஒருவர் ஜனாதிபதியாகவும், தமிழர் பிரதமராகவும் ஆகிவிடுவார். சிங்களவர்களுக்கு இந்த சமுத்திரம் மட்டும் தான் தான் எஞ்சும்….”
சோம தேரரைத் தொடர்ந்து அதே காலத்தில் “சிங்கள வீர விதான இயக்கம்” செய்தது. சம்பிக்க ரணவக்கவை தலைமையாகக் கொண்ட அந்த இயக்கம் அந்த பிரச்சாரத்தை ஹெல உறுமய, ஜாதிக ஹெல உறுமய என்கிற பெயர்களில் தொடர்ந்து மேற்கொண்டது. பின்னர் அக்கட்சியும் பாராளுமன்ற அரசியலுக்குள் நுழைந்ததன் பின்னர் காலப்போக்கில் இந்த பிரச்சாரத்தில் தந்திரோபாய நிலையை எடுத்தது. அவர்கள் பகிரங்கமாக அதுவரை முன்னெடுத்த தீவிர சித்தாந்தத்தை சற்று அடக்கி வாசிக்கத் தொடங்கிய போது, அதிலிருந்து வெளியேறிய சக்திகள் முன்னெடுத்தன. அப்படி அதிலிருந்து வெளியேறி அந்த நிகழ்ச்சிநிரலை கைமாற்றிக்கொண்டு பகிரங்கமாக இயங்கத் தொடங்கிய இயக்கம் தான் “பொது பல சேனா” இயக்கம்.
பொது பல சேனா இயக்கத்தைப் போல பகிரங்கமாக “இனப்பெருக்க பீதி, கருத்தடை சதி” பற்றிய பிரச்சாரத்தை முன்னெடுத்த வேறெந்த இயக்கமும் இலங்கையின் வரலாற்றில் இருந்தது கிடையாது. பல தடவைகள் இலங்கையில் பல பாகங்களில் பகிரங்கமாக சுவரொட்டிகளை ஒட்டினார்கள். எதிர்காலத்தில் இந்தத் தீவை முஸ்லிம் நாடாக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமே சிங்களவர்களை மலட்டுக்குள்ளாக்கும் இஸ்லாமிய சதி என்றார் ஞானசார தேரர்.
4 வருடங்களுக்கு முன்னர் குருநாகல் மற்றும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களில் ஒட்டப்பட்டிருந்த பொதுபல சேனாவின் சுவரொட்டிகள் இவை.
“முஸ்லிம் அடிப்படைவாதிகள் பாகிஸ்தானில் இருந்து கொண்டு வந்திருக்கும் சீரகத்தைச் சாப்பிட்டால் சிங்கள இனம் மலட்டுக்குள்ளாகும். சிங்களவர்களே இப்போதாவது விழித்தெழுங்கள்” பொதுபல சேனா
– குருநாகல் மாவட்டம் -“
பொதுபல சேனா இயக்கத்தின் பிரச்சார பீரங்கிகளாக பெருமளவு சமூகவலைத்தள ஆதரவாளர்கள் உருவானார்கள். திட்டமிட்டு உருவாக்கப்பட்டார்கள். அவர்களால் உருவாக்கப்பட்ட வலையமைப்பு; இன்று மைய அமைப்பு உடைந்தால் கூட தொடர்ந்தும் பலமாக இயங்கக் கூடிய வலையமைப்பு. அவை நாளாந்தம் குட்டிபோட்டு பெருகிக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது என்பதை கண்காணித்து அறிந்தே வருகிறேன்.
இறுதியாக தற்போது சிங்கள பௌத்த இளைஞர்களைக் கொண்ட “மஹாசொன் பலகாய” (மஹாசொன் படையணி) என்கிற இயக்கம் பிக்குமாரை அணிதிரட்டி களத்தில் இறங்கி இந்த பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.
பாசிச பரப்புரை
ஹலால் சான்றிதழுக்கு எதிரான பிரச்சாரம், தொல்பொருள் இடங்களை ஆக்கிரமித்து அழிக்கிறார்கள் என்கிற பிரச்சாரம், மாட்டிறைச்சித் தடை, ISIS பீதி, ஹிஜாப் எதிர்ப்பு, வஹாபிசம் என்கிற பிரச்சாரம், குவாசி (Quazi Court) நீதிமன்றத்துக்கு எதிரான பிரச்சாரங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஹலால் உணவுகளை நிராகரியுங்கள், முஸ்லிம்களின் கடைகளில் பொருட்கள் வாங்காதீர்கள், முஸ்லிம்களுக்கு காணிகளை விற்காதீர்கள், முஸ்லிம்களுக்கு எதையும் வாடகைக்கு கொடுக்காதீர்கள், முஸ்லிம் கடைகளில் மட்டுமே உணவு அருந்துங்கள், முஸ்லிம்களை திருமணம் செய்யாதீர்கள் போன்ற தொடர் பிரச்சாரங்கள் இரண்டாம் உலகப் போரின் போது யூதர்களுக்கு எதிராக ஹிட்லரின் நாசிப் படைகள் மேற்கொண்ட பிரசாரங்களை ஒத்தது. யூதர்களின் கடைக்கண்ணாடிகளில் “இங்கே பொருட்களை கொள்வனவு செய்யாதீர்” என்று என்று யூதப் படையினர் ஒட்டிய போஸ்டர்களை நினைவுக்கு கொண்டு வருகிறது. பாசிஸ்டுகள் எங்கும் ஒரே மாதிரியாகத் தான் இயங்கியிருக்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் பரப்பட்டவை “ஹலால் பொருட்களை வாங்காதீர்கள். முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள், முஸ்லிம்களுக்கு காணிகளை விற்காதீர்கள், முஸ்லிம்களுக்கு கடைகளை வாடகைக்கு கொடுக்காதீர்கள்”
1930களில் ஜேர்மன் கடைகளில் நாசிகள் ஒட்டியவை
ஜெர்மானியர்களே! எதிர்த்து நில்லுங்கள்! யூதர்களின் கடைகளில் கொள்வனது செய்யாதீர்!”
“சிங்களவர்களே! சகல முஸ்லிம் வியாபாரத்தையும் பகிஸ்கரியுங்கள்”
இவற்றின் தொடர்ச்சி தான் முஸ்லிம் வர்த்தக நிலையங்களின் மீது தாக்குதல்,
முஸ்லிம்களை நிராகரியுங்கள், அவர்களின் பண்பாட்டையும், தயாரிப்புகளையும், சேவைகளையும் நிராகரியுங்கள் என்கிற கோஷத்தில் உள்ளார்ந்திருக்கும் முட்டாள்தனத்தைப் பார்த்தால் இனவாதத்துக்கு அறிவு என்கிற ஒன்று அவசியப்படுவதில்லை என்பது தான் நிரூபணமாகிறது. அப்படி முஸ்லிம் சமூகத்தை நிராகரிப்பதன் மூலமோ தடை செய்வதன் மூலமோ ஏற்படக்கூடிய இழப்பைப் பார்ப்போம். இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை 70களில் உருவாக்கியது ஈரான் நாடு. இன்று நமது நாட்டில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான எரிபொருளில் ஏறத்தாள 60% வீதமானவை இதன் மூலம் தான் பூர்த்தி செய்யப்படுகிறது. இன்றுவரை இலங்கையின் பிரதான அந்நிய செலவாணியாக ஈட்டித்தறுவது மத்தியகிழக்கு முஸ்லிம் நாடுகளில் பணிபுரியும் நம் நாட்டவர்களுக்கு ஊடாகத் தான். 2015 இல் மாத்திரம் 948,975 மில்லியன்கள் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களால் மாத்திரம் வருவாயாக கிடைத்திருக்கிறது. அதில் 54% வீதம் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் தொழில் புரிபவர்களால் கிடைப்பது. இப்படி உதாரணப் பட்டியல்களை நீட்டிக் கொண்டே செல்லாலாம்.
சிறுவர்களின் இனிப்புப் பண்டங்களில், சாராயத்தில், உணவுப் பொருட்களில், முஸ்லிம் மருத்துவர்களால் வழங்கப்படும் மருந்துகளில் மட்டுமல்ல பெண்களின் உள்ளாடைகளில் கூட மலட்டுத் தன்மையை ஏற்படுத்துகின்ற மருந்துகள் கலந்து விடுகிறார்கள் என்கிற செய்திகள் அடிக்கடி வெகுஜன பத்திரிகைகளில் கூட செய்தியாக வெளிவந்துகொண்டு தான் இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி வெகுஜன ஊடகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய செய்திகளின் பரப்புரைக்கு பலியான சாதாரண சிங்கள பாமர வாசகர்கள் வேறென்ன செய்ய முடியும். அவர்கள் பீதிக்கு மேல் பீதியும், வெறுப்புக்கு மேல் வெறுப்பும் கொண்டு உள்ளூர ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். இந்த கூட்டு ஆத்திரம் தான் சமயத்தில் தாக்குதல் மேற்கொள்ளவும் தயங்காத சக்திகளாக உருவாக்கப்பட்டுவிடுகிறார்கள்.
“சிங்களவர்களே அணிதிரளுங்கள்!
முஸ்லிம் ஆக்கிரமிப்பிலிருந்து சிங்களவர்களின் ஒரே நாட்டை மீட்டிடுங்கள்!”
இனவாதத்துக்கு அறிவு அவசியமில்லை.
உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் இனபெருக்க வளர்ச்சி வேகம் ஏனைய இனங்களை விட, மதங்களை விட அதிகமாகத்தான் இருக்கிறது என்பது விஞ்ஞானபூர்வமான உண்மையே. பல சர்வதேச ஆய்வுகள் அதனை ஒப்புவித்திருக்கின்றன. அந்த உண்மை மறுப்பதற்கில்லை. ஆனால் இந்தத் தரவை வைத்துக் கொண்டு இந்த இனபெருக்க வளர்ச்சி செயற்கையானது என்றும், திட்டமிட்ட சதி என்கிறதுமான பிரச்சாரம் உலகளாவிய இஸ்லாமிய எதிர்ப்பாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. “இன-மத” தேசியவாதம் பாசிசமாக உருவெடுத்துவரும் முஸ்லிம் அல்லாத நாடுகளில் இந்த தரவு முஸ்லிம்களுக்கு எதிராக இலகுவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இலங்கையும் தீவிரமடைந்து வருகிறது.
மலட்டுத்தன்மையை உருவாக்கும் இப்படி வினோதமான மருத்துகள் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று விஞ்ஞானபூர்வமாக பலர் நிறுவியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினோதமான முறைகளை எளிதில் நம்பச்செய்யுமளவுக்கு இனவாத பிரச்சாரங்களுக்கு வலிமை இருக்கிறது என்பதைத் தான் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருகிறது.
ஒரு சிங்கள மருத்துவ நண்பர் இதுபற்றி ஒரு குறிப்பை பகிர்ந்திருந்தார். இப்படியொரு மருந்தை எங்காவது கண்டால் நீங்கள் செய்ய வேண்டிய காரியத்தை அவர் பட்டியலிட்டிருந்தார். அப்படியோன்ரைக் கண்டெடுத்தால் மறுத்து தயாரிக்கும் நிறுவனமொன்றுக்கு பெரும் விலைக்கு விற்று பணம் சம்பாதிக்கலாம், அல்லது இதுபோன்ற ஒரு உணவைக் கொண்டு சென்று கட்டாக்காலி நாய்களுக்கும், பன்சலைகளில் கொண்டுபோய் விடப்படும் நாய்களுக்கும் கொடுத்து புண்ணியம் தேடிக்கொள்ளுங்கள். அந்த ஜீவராசிகளுக்கு கருத்தடை செய்வதற்காக செய்யப்படும் மருத்துவம் வேதனை மிக்கது. செலவு மிக்கது. கடந்த 2017ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபை மாத்திரம் நாய்களுக்கு இத்தகைய சேவையை செய்வதற்காக 15 மில்லியன்களை செலவு செய்திருக்கிறது. கொத்து ரொட்டியில் இத்தகைய மருந்தைக் கலந்து கருத்தடையை ஏற்படுத்தி அரச செலவைக் குறைப்பது மட்டுமன்றி ஆஸ்பத்திரிகளில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கென ஆகும் அரச செலவையும் குறைக்க முடியும். என்று அவர் ஹாஸ்யமாக எழுதியிருந்தார்.
இந்த நிலைமைகளை சரி செய்வதாக கூறிக்கொண்டு “நல்லாட்சி”, “இன நல்லிணக்கம்” போன்றவற்றை பிரதான இலக்காகக் கொண்டு இன்றைய ஆட்சி அமைக்கப்பட்டது. நல்லினக்கத்துக்கென ஒரு அமைச்சே உருவாக்கப்பட்டது. போதாதற்கு இனவாத முயற்சிகளைக் கட்டுப்படுத்தவென புதிய சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டன. இறுதியில் பிரதமரிடம் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சும் ஒப்படைக்கப்பட்ட அடுத்ததடுத்த நாள் இப்படிப்பட்ட கலவரம் நிகழுமாயிருந்தால் இலங்கை பெரும் கலவரத்தையோ, அல்லது கலவரங்களையோ அண்மித்துக் கொண்டிருக்கிறது என்று தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.