இலங்கை அரசியலமைப்பு சுயநலமா? சர்வாதிகாரமா?

253

 

ஒரு நாட்டின் அரசியலமைப்பு அந்நாட்டு மக்களுக்கானது. ஜனநாயக நாட்டில் மாத்திரமே அரசியலமைப்பு அவசியமானது. அது அந்நாட்டு மக்களால் தாபிக்கப்படுகிறது. அரசியலமைப்பின் உருவாக்கமே முடிந்தவரை நாட்டில் ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதற்காகும். பல்லின  சமுதாயத்தில் சகல இன மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் சகல இன மக்களாலும் அவ்வரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஒரு நாட்டில் வாழும் மக்கள் தமக்கான அரசியலமைப்பை தாமே உருவாக்கிக் கொள்வதென்பது பெரும்பாலும் அம்மக்களின் பிரதிநிதிகள் மூலம் தயாரிக்கப்பட்டு மக்களால் அல்லது பிரதிநிதிகளால் ஏற்று அங்கீகரிக்கப்படுவதாகும். அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் முதலில் பொதுமக்களின் அபிப்பிராயங்களுக்கு விடப்பட்டு பல்வேறு கருத்துகளுக்காகவும் கால அவகாசம் வழங்கப்பட்டு அரசியலமைப்போ அரசியலமைப்புத் திருத்தங்களோ மேற்கொள்ளப்பட வேண்டும்.

அரசியலமைப்பொன்றை வரைந்தளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் முதலில் ஏகோபித்த முடிவை அல்லது 2/3 விசேட பெரும்பான்மை மூலம் ஏற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் மக்கள் தீர்ப்பில் மக்களால் ஏற்கப்பட வேண்டும். ஏனெனில் ஆட்சியென்பது ஆட்சியாளர்களுக்கல்ல. அது மக்களுக்கானது. ஆட்சியாளர்களும் மக்களில் ஒரு பகுதியினர் என்ற வகையில் அரசியலமைப்பானது ஆள்வோர்  ஆளப்படுவோர், பெரும்பான்மையினர்  சிறுபான்மையினர் என்ற பாகுபாடின்றி சகலரையும் சமமாகக் கருத வேண்டும். அரசாங்கத்தின் அதிகாரங்களான சட்டத்துறை, நிறைவேற்றுத்துறை, நீதித்துறை என்பன சுயாதீனமான முறையில் அமைக்கப்பட்டு அதனது எல்லைக்குள் சுதந்திரமாக இயங்க வழிவகை செய்யப்பட்டிருக்க வேண்டும். மொத்தத்தில் அரசியலமைப்பானது சகல துறைகளிலும் விடயங்களிலும் நாட்டில் நிலையானதும் சுபீட்சமுமான எதிர்கால அபிவிருத்தியை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் நமது நாட்டில் உருவாக்கப்படுகின்ற அரசியலமைப்பு அவ்வுயரிய தன்மைகளைக் கொண்டில்லாமல்  பன்மைத்துவ சமூகத்தை மதிக்காமல்  பரந்த மக்கள் தள விருப்பைப் பெறாமல்  பொதுநலத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் சுயநலன்களுக்காகவும் சர்வ அதிகாரங்களையும் தன்னகத்தே பெற்றுக் கொள்வதற்காகவும் உருவாக்கப்படுவதால்தான் அதனால் நிலைத்து நிற்கவோ தாக்குப்பிடிக்கவோ முடியாமற் போகிறது. அவ்விதமே யாப்புத் திருத்தங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசியலமைப்புக் குறித்த சர்ச்சைகளும் வாதப்பிரதிவாதங்களும் நெருக்கடிகளும் ஏற்படுகின்றன. இனங்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. சிறுபான்மையினரால் மதிக்கப்படாமல் இருக்கின்றன. தேசிய சர்வதேச கண்டனங்களுக்கு வித்திடுகின்றன. இலங்கையர்களால் 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பு பௌத்த யுத்தத்தையும் சிங்கள மொழியையும் மேம்படுத்தி ஏனைய மதங்களையும் தமிழ் மொழியையும் மதிப்பிழக்கச் செய்ததாலும் நாட்டின் பொருளாதாரத்தைப் பாழ்படுத்தி மக்களின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்ததாலும் சுமார் 6 வருடங்கள் மாத்திரமே நடைமுறையிலிருந்து அகற்றப்பட்டது.

 

முதலாம் குடியரசு யாப்பை அகற்ற விருப்பங்கொண்ட நாட்டு மக்கள் 1977ஆம் ஆண்டு தேர்தலில் 168 ஆசனங்களில் 140 ஆசனங்களை (5/6) ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கியதன் மூலம் 2ஆம் குடியரசு யாப்பு 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் 2ஆம் குடியரசு யாப்பு முற்று முழுக்க ஜே.ஆர். ஜயவர்தனவின் சுயநலத்திற்காகவும் சர்வாதிகாரத்தைக் கொண்டு நடத்துவதற்காகவும் தாபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் மாத்திரமன்றி பின்னால் பதவிக்கு வரும் ஜனாதிபதிகளும் சர்வாதிகாரத்தைக் கொண்டு நடத்த வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. யாப்பின் சிருஷ்டியான ஜயவர்தன இறந்து போனாலும் யாப்பின் மூலம் அவர் தோற்றுவித்துச்சென்ற சர்ச்சைகளும் நெருக்கடிகளும் நீறுபூத்த நெருப்பாக வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றதே தவிர தணிந்து போவதற்கும் அமைதியாகச் செல்வதற்குமான எந்த வாய்ப்பும் இதுவரை கனிந்து வந்துள்ளதாகத் தெரியவில்லை.

குறிப்பாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகளவு நிறைவேற்று அதிகாரங்கள் பாராளுமன்றத்தினதும்  உச்ச நீதிமன்றத்தினதும் பலவீனத்தன்மை, பௌத்த மத ஏற்பாடு, விகிதாசாரத் தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகள், முறைப்படியில்லாத யாப்புத் திருத்தங்கள், தேர்தல் தினங்களின் உறுதியற்ற ஏற்பாடுகள் போன்ற பல அம்சங்கள் நமது அரசியலமைப்பின் கௌரவத்தை அசிங்கப்படுத்தி நிற்கின்றன. நாடும் அரசாட்சியும் மக்களுக்கா அல்லது ஆட்சியாளர்களுக்கா எனக் கேட்கின்ற அளவுக்கு அரசியலமைப்பு தனியொரு நபருக்கு அளவு கடந்த அதிகாரங்களை அள்ளிக் குவித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு 1978 செப்டம்பர் 08 ஆந் திகதி நடைமுறைக்கு வந்தாலும் 1977 ஒக்டோபர் 20 ஆம் திகதி முதலாம் குடியரசு யாப்பில் மேற்கொள்ளப்பட்ட 2 ஆவது திருத்தத்தின் மூலம் 1978 பெப்ரவரி 04 ஆம் திகதியே நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறை அமுலுக்கு வந்துவிட்டது. 1978 யாப்பின்படி நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி மக்கள் சக்தியைப் பெற்றிருக்க வேண்டுமென்ற வகையில் அவர் தனியான தேர்தலொன்றின் மூலம் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

எனினும் இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன 1978.02.04 முதல் 1982.10.19 ஆம் திகதி வரை மக்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படாமல் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதியாக இருக்கும் வகையில் யாப்பில் ஏற்பாடு செய்து கொண்டார். இதன்மூலம் மக்கள் சக்தியினால் பிறப்பிக்கப்படாமலேயே ஜனாதிபதிப் பதவியின் சகல நிறைவேற்று அதிகாரங்களும் ஆரம்பத்தில் பிரயோகிக்கப்பட்டுள்ளன. அரசியலமைப்புக் குறித்த ஆழ்ந்த ஞானம் சாதாரண மக்களுக்கு இருப்பதில்லை. ஜே.ஆர். ஜயவர்தனவின் யாப்பின் தந்திர வித்தைகளை எல்லாம் மக்கள் நுணுகி ஆராய்ந்திருக்கவில்லை. 1977 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக் கொண்ட 140/168 பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகளை கைப்பொம்மைகளாக வைத்துக் கொண்டு ஜே.ஆர். விரும்பியவாறு நாட்டின் அரசியலமைப்பைத் திட்டமிட்டுக் கொண்டதன் மூலம் அது மக்களின் விருப்பம் என்றொரு முட்டாள்தனமான புதியதொரு அரசியல் கருத்தியலை நாட்டுக்கு முன்வைத்து மக்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டுச் சென்றுள்ளார்.

பௌத்த மதம், சிங்கள மொழி தொடர்பான சில ஏற்பாடுகளால் அவர் சிங்கள  பௌத்த மக்களைக் குளிர வைத்திருக்கலாம். ஆனால் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையினால் கொடுக்கப்பட்ட வலி நாட்டிலுள்ள சிறுபான்மை, பெரும்பான்மை இன மக்கள் அனைவருமே தாங்கிக்கொள்ள முடியாத நீண்ட வலியாகும். அதனால்தான் இன்று சிங்கள  பௌத்த மதகுருக்கள் கூட நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறைக்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்காமல் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்றால் அரசாங்கத்திற்கெதிராக செயற்படவுள்ளதாக ஆளுந்தரப்பில் அங்கம் வகித்த பௌத்தவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய கூறியிருந்தது. அதன் தலைவர்களில் ஒருவரான அதுரலிய ரத்ன தேரர் இதுகுறித்துத் தெரிவிக்கும் போது ஜனாதிபதி முறை மாற்றப்படாவிட்டால் ஜனாதிபதியையே மாற்றுவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதன்படி இக்கட்சி எதிரணி ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. அரசியலமைப்பின் முதலாம் அத்தியாயம் மக்கள் இறைமை முழுமையாக ஜனாதிபதிக்கன்றி தனித்தனியாக முத்தரப்பும் பிரயோகிக்க வேண்டும் என்று கூறுகிறது. மக்களின் சட்டவாக்க அதிகாரம் பாராளுமன்றம் மற்றும் மக்கள் தீர்ப்பு மூலமும் பாதுகாப்பு உள்ளிட்ட நிறைவேற்றுத்துறை அதிகாரம் ஜனாதிபதி மூலமும் நீதித்துறை அதிகாரம் நீதிமன்றங்கள் மூலமும் பிரயோகிக்கப்பட வேண்டும் என்கிறது. ஆனால் யாப்பின் ஏனைய ஏற்பாடுகளும் நடைமுறைப் பிரயோகமும் ஜனாதிபதியே மக்கள் இறைமையைச் செலுத்தும் தனித்துவத் தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது. பாராளுமன்றம் நிராகரித்த  அரசியலமைப்பு திருத்தம் சாராத ஒரு சட்டமூலத்தைக் கூட ஜனாதிபதி விரும்பினால் மக்கள் தீர்ப்புக்கு விட்டு சட்டமாக்கிக் கொள்ளலாம். மக்கள் தீர்ப்பு என்ற நேரடி ஜனநாயக ஏற்பாடு நடைமுறை பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் குறைபாடுகளைக் களையவே ஜனநாயக நாடுகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இலங்கையில் மக்கள் தீர்ப்பு நடத்துவதும் நடத்தாமல் விடுவதும் ஜனாதிபதியின் விருப்பத்தில் தங்கியுள்ளது.

1982ஆம் ஆண்டு இலங்கையில் முதலும் கடைசியுமாக  றுஸர்ஷீஹீ… நடத்தப்பட்ட மக்கள் தீர்ப்பு ஜனநாயகத்துக்கு விரோதமானது. 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் எளிய பெரும்பான்மை தேர்தல் முறையில் பெற்றுக் கொண்ட 5/6 பெரும்பான்மையைக் கொண்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கியபோது அதில் இனிமேல் தனியொரு கட்சி 2/3 பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாத வகையிலமைந்த விகிதாசாரத் தேர்தல் முறையை அதில் புகுத்தி அவ்வரசியலமைப்பை மாற்ற வேண்டுமெனில் 2/3 பெரும்பான்மையுடன் ஒரு மக்கள் தீர்ப்பும் தேவை என்ற ஏற்பாட்டையும் சேர்த்துக் கொண்டார். இது திறப்பை வீட்டுக்குள் வைத்து வெளியில் கதவை இழுத்துப் பூட்டியது போன்றதாகும். ஆனால் தான் உருவாக்கிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தும்போது தானே மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, தான் விரும்பும்போதெல்லாம் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்து கொள்ளும் வகையில் தான் பதவியில் இருக்கும் காலம் முழுவதும் 2/3 பெரும்பான்மையை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்கள் தீர்ப்பின் மூலம் பாராளுமன்றத்தின் ஆட்சிக் காலத்தை நீடித்துக் கொள்ள முடியும் என்ற ஏற்பாட்டையும் யாப்பில் சேர்த்துக் கொண்டார்.

1982 இல் பொதுத் தேர்தல் நடத்தி புதிய மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக 1982.12.22 ஆந் திகதி  சாதாரண பெரும்பான்மையுடன் மக்கள் தீர்ப்பில் அங்கீகாரத்தைப் பெற்று 1977 இல் தெரிவான தமது கட்சியின் 5/6 உறுப்பினர் பலத்தைக் கொண்டு அரசியலமைப்பில் 1982.12. 23 ஆம் திகதி அரசியலமைப்பில் 4ஆந் திருத்தத்தைக் கொண்டு வந்து 1977 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தை 1989.08.04 ஆம் திகதி வரை நீடித்துக் கொண்டார். 1977 இல் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் 1982 இல் பொதுத் தேர்தல் சவாலை எதிர்கொள்ளாமல் 1989 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருக்கக் கிடைத்த உயரிய வாய்ப்பை ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் பயன்படுத்திக் கொண்டு ஜனாதிபதியிடம் சரணடைந்து விட்டனர்.

ஏற்கனவே 1982.10.20 இல் ஜனாதிபதித்  தேர்தலிலும் வெற்றிபெற்ற ஜே.ஆர். ஜயவர்தன நாட்டின் மிகவும் பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்துக் கொண்டார். 1982 இல் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் தமது விருப்பத்திற்கேற்ப புதிய பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தவற்கு மாறாக ஒரு மக்கள் தீர்ப்பின் மூலம் 5/6 பெரும்பான்மை பலத்தை நீடித்துக் கொண்டமை ஜனநாயக விரோத செயலாகும். இம்மக்கள் தீர்ப்பானது ஒரு பொதுத் தேர்தலுக்கு எவ்வகையிலும் மாற்றீடாகாது. 5/6 பாராளுமன்ற பலத்தை தக்கவைத்துக் கொண்டு ஜே.ஆர். ஜயவர்த்தன நினைத்த நேரமெல்லாம் அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்தார். தற்போதைய யாப்பில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற 18 திருத்தங்களில் ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக் காலத்திலேயே (1978  1988) 16 திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.

அரசியலமைப்பை உருவாக்கும் போதே 81ஆம் பிரிவில் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் எவரது குடியுரிமையையும் பறிக்கும் ஏற்பாட்டை யாப்பில் புகுத்திக் கொண்டிருந்தார் ஜே.ஆர். இதன்மூலம் அவர் 1978 இல் ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்து அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் பேரில் பாராளுமன்றத்தைப் பயன்படுத்தி 1980 இல் தமது அரசியல் எதிரியான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை 7 ஆண்டுகளுக்குப் பறித்துக் கொண்டதன் மூலம் அவரை தலைதூக்கவிடாமல் செய்துவிட்டே 1982 இல் ஜனாதிபதி தேர்தலுக்குச் சென்றார் ஜே.ஆர். பின்னர் சந்திரிகா ஜனாதிபதியாக வந்ததும் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கவை நியமித்து இப்படியொரு பிரேரணையை முன்னர் பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கக் கூடாது என்றொரு பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் பாராளுமன்றமே கேலிக்குரியதாக மாற்றப்பட்டு விட்டது. ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்கள் என்று குறிப்பிட்டுள்ள ஜயவர்தன முதலில் மக்களால் தெரிவு செய்யப்படாமலும் பிறகு மக்களால் தெரிவு செய்யப்பட்டும் மொத்தமாக 11 ஆண்டுகள் நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதியாக இருந்துவிட்டுச் சென்றார். அவர் பதவியில் இருக்க விருப்பம் கொண்ட காலம் வரை  ஓய்வெடுக்கும் வயது வரை இருந்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளத் திட்டமிட்டுக் கொண்ட அவர், ஒருவர் 2 தடவைகளே ஜனாதிபதிப் பதவி வகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை யாப்பில் இட்டிருந்தது ஒரு கண்துடைப்பாகும்.

ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்துக்கும் 6 வருடங்கள் என்ற அதிகூடிய காலங்களைக் குறிப்பிட்டதன் மூலம் அடிக்கடி தேர்தல் செலவுகளுக்கு இட்டுச்செல்லக் கூடாதென்றே நன்நோக்கம் இருந்தால் பராவாயில்லை. ஆனால் பாராளுமன்றத்தை 6 வருடங்கள் வரை விட்டுவைக்காமல் தமது அரசியல் தேவையைப் பூர்த்தி செய்ய, ஒரு வருடத்தின் பின்னர் ஜனாதிபதி விரும்பிய போதெல்லாம் பாராளுமன்றத்தைக் கலைத்துத் தேர்தலுக்குச் செல்வதும் 4 வருட முடிவில் பதவியிலிருக்கும் ஜனாதிபதி விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வதும் நாட்டின் அரசியல் ஸ்திரத் தன்மையையே சிதைத்து விட்டுள்ளது. அதேவேளை பாராளுமன்றத்தினதும் ஜனாதிபதியினதும் பதவிக்காலத்தை அதிகரிப்பதாயின் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் ஒரு மக்கள் தீர்ப்பும் அவசியப்படுத்தப்பட்டுள்ளமை அதிகூடிய ஆட்சிக்காலத்தை மறைத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்ட ஒரு கவனக்கலைப்பாகும். இவ்விதம் இவ்விரு அதிகாரத் தாபனங்களின் பதவிக்காலத்தை நீடிக்கச் செய்ய வழிசெய்யப்பட்டுள்ளதன் மூலம் புதியவர்கள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க மறுக்கப்படுவதுடன் மக்களுக்கு புதிய பிரதிநிதித்துவத் தெரிவை இல்லாதொழிக்க வழிசெய்யப்பட்டுள்ளது. பிரதான அரசியல் அதிகாரத் தாபனங்களை மக்கள் உருவாக்கும் தேர்தல்கள் காலத்துக்குக்காலம் கட்டாயமாக நடத்தப்பட வேண்டியது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய தேவைப்பாடாகும்.

SHARE