போராட்டமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதே “நல்லாட்சி”தான். உலகமயமாதல் எதுவோ அதுவே “நல்லாட்சியாக”இருக்கின்றது.

275

 

போராட்டமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பதே “நல்லாட்சி”தான். உலகமயமாதல் எதுவோ அதுவே “நல்லாட்சியாக”இருக்கின்றது. உலகமயம் என்பது சொத்துடமையைக் குவிக்கும் உலகளாவிய வர்க்கத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதாகும். “நல்லாட்சி”யானது சுதந்திரமாகச் சொத்தைக் குவிக்க உள்ள தடைகளை அகற்றுவதும் அதற்கு ஏற்ற பண்பாட்டுக் கலாச்சார அடிப்படைகளை உருவாக்குவதுமாகும்.

மனிதன் சந்திக்கக் கூடிய சமூகப் பிரச்சனைகளுக்கு மாற்றம் (நடைமுறை) ஒன்றே தீர்வு. பிரச்சனைகளை அனுபவிப்பதாலோ, உணர்வதாலோ, கருத்துச் சொல்வதாலோ தீர்வு வருவதில்லை. மாறாக வாழ்வதற்கான நடைமுறைப் போராட்டம் ஒன்று தான் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது. இதுவொரு பொது உண்மையாகும்.

வாழ்வதற்காக உயிரினம் போராடுவது இயற்கையின் நியதி. இந்த இயல்பான போராட்ட வாழ்வையே மகிழ்ச்சிக்குரியதாக கூறி, வாழ்ந்து காட்டியவர் கார்ல் மார்க்ஸ். போராட்டத்தை வாழ்க்கையாக்கி அதை மகிழ்ச்சியாக்காதவன் போராட்ட நடைமுறையில் பங்கு கொள்ளாதவனும், நேரடியாகவோ மறைமுகமாகவோ “நல்லாட்சியைக்”கொண்டாடுபவனாகவும், தனிவுடமையைக் குவிக்கும் சமூக அமைப்பை பாதுகாப்பவனாகவும் இருக்கின்றான்.

கூட்டமாக (சமூகமாக) வாழும் மனித இயல்பு மகிழ்ச்சியாக தனித்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியாததால் வாழ்க்கை ஒரு போராட்டமாக இருக்கின்றது. இதற்கு மாறாக பொருளை முதன்மைப்படுத்தி, அதை அடைவதைக் கொண்டு மகிழ்ச்சியாக கொண்டாடுவதே சுயநலமாகும். இது தன்னைச் சுற்றிய மனிதர்களின் மீது அக்கறை கொள்ளவைப்பதில்லை. சமூக போராட்ட நடைமுறையில் பங்காற்ற வைப்பதில்லை.

தன்னலத்தை முதன்மையாகக் கொண்ட செயலற்ற தன்மையானது தேர்தலில் நம்பிக்கை கொள்வதும், ஆட்சியாளர்களை மாற்றுகின்ற முறைமையை மாற்றமாக முன்வைக்கின்றது. ஆட்சியாளர்கள் தான் மனித துயரங்களுக்கு காரணமென முன்வைக்கின்றது. தன்னலத்தை அடிப்படையாகக் கொண்ட சொத்தைக் குவிக்கும் தனிவுடமை வர்க்கங்களல்ல என்ற கருதும் இந்த சுயநலம் தேர்தலில் வாக்களிப்பு முறைமையை முன்னிறுத்தி இயங்குகின்றது. சமூக போராட்ட நடைமுறையை மறுதளிக்கின்றது.

தேர்தலில் வாக்கு போடுவதுடன் தனிமனிதனின் போராட்ட (ஜனநாயகக்) கடமையை முடித்து விடுகின்றது. இந்தச் சுயநலமானது இனம், மதம், சாதி, நிறம், பால் போன்றன மூலம் மனிதனை பிளந்து குதறுவதையும், மனித உழைப்பைச் சுரண்டுவதையும், வாழ்க்கையாகவும் ஜனநாயகமாகவும் கொண்டு இயங்குகின்றது.

தன்னலத்தை மறுத்த மனிதர்களின் நடத்தைதான் போராட்டம்

சுயநலமானது “நல்லாட்சியை”முன்னிறுத்த, பொதுநலமானது போராட்டத்தை முன்னிறுத்துகின்றது. இதில் ஒன்றைத் தெரிவு செய்யுமாறு வாழ்க்கை முறை நிர்ப்பந்திக்கின்றது. எங்கும் வாழ்வுக்கான போராட்டமே நடைமுறையில் வாழ்க்கை முறையாகி இருக்கின்றது. போராடும் யாரும் “நல்லாட்சி”பற்றி கனவு காணவில்லை. நடைமுறைக்கு வெளியில் பேசிக்கொள்வதன் மூலமும், வாக்கு போடுவதன் மூலமும் தீர்வு வரும் என்று நம்பியிருக்கவில்லை. போராடுவது தான் ஒரே தீர்வு என்பது வாழ்க்கை முறையாகி வருகின்றது. போராட்டம் என்பது, வாழ்க்கைக்கு அன்னியமானதாக இருக்கவில்லை. “நல்லாட்சியோ”மக்களின் வாழ்க்கையை அழித்து, உரிமைகளைப் பறித்து வருகின்றது.

இந்த பின்னணியில் மாணவர்கள் தங்கள் இலவசக் கல்வி உரிமைக்காகப் போராடுகின்றனர். பல்கலைக்கழகப் பட்டம் பெற்றவர்கள் வேலை கேட்டுப் போராடுகின்றனர். அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையைக் கோரிப் போராடுகின்றனர். காணாமல் போனவர்களின் உறவினர்கள், தங்கள் உறவுகள் எங்கே என்று கேட்டுப் போராடுகின்றனர். மீனவர்கள் கடல் சார்ந்த தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாக்கப் போராடுகின்றனர். நவதாராளமயத்திடமும், இலங்கை அரசு இயந்திரத்திடமும் இழந்த தங்கள் நிலத்தைக் கோரிப் போராடுகின்றனர். நிலமும் நீரும் நஞ்சானதையும், தொடர்ந்து நஞ்சாவதையும் எதிர்த்தும், இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இலவச மருத்துவத்தைக் கோரியும் போராடுகின்றனர். பிறப்புரிமையிலான பிரஜாவுரிமையை அரசியல் காரணங்களுக்காக மறுக்கின்ற அரசின் சூழ்ச்சிகளுக்;கு எதிராகப் போராடுகின்றனர். விவசாயிகள் தங்கள் பொருளுக்குரிய விலையைக் கோரியும், அதைக் கொள்முதல் செய்யக் கோரியும், விவசாய மானியத்தை ரத்துச் செய்கின்ற சதிக்கு எதிராகப் போராடுகின்றனர். இனவாதத்துக்கு எதிராக மொழிகளுக்கு சமவுரிமையை முன்னிறுத்தியும், மொழி சார்ந்த ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடுகின்றனர். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடுவதுடன், சாதி ஒழிப்பைக் கோரிப் போராடுகின்றனர். மலையக மக்கள் தங்கள் அடிப்படைக் கூலியைக் கோரியும், தங்கள் வீடு மற்றும் நிலவுரிமைக்காகப் போராடுகின்றனர். புழமைவாத, அடிப்படைவாத மத, நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கலாச்சார திணிப்புக்கு எதிராகப் போராடுகின்றனர். தொடரும் ஆணாதிக்க பாலியல் வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்கள், அரச படைகளின் வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்கள், சுற்றுச்சூழல் நஞ்சாவதற்கு எதிரான போராட்டங்கள் … என்று எங்கும் எதிலும், வாழ்க்கையானது இன்று போராட்டமாகி இருக்கின்றது. இது இன்றைய மனித வாழ்க்கையைச் சுற்றிய எதார்த்தம். இது போன்ற பலநூறு போராட்டங்கள் அங்குமிங்குமாக நடந்தேறுகின்றது. “நல்லாட்சிக்கு”எதிரான மக்களின் வாழ்க்கை போராட்டங்களாக மாறி இருக்கின்றது.

அரசுகளின் துணையுடன் செல்வத்தைக் குவித்து வருகின்ற பின்னணியில் கொடிய வறுமை மக்களை ஆட்டிப்படைக்கின்றது. பலம் பொருந்தியவர்களின் வன்முறையும் அதிகாரமும் நாட்டில் தலைவிரித்தாடுகின்றது. பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு, கலாச்சாரக் கண்காணிப்புக்கும் சதா உள்ளாகின்றனர். சாதிய கொடுமைகளும், புறக்கணிப்புகளும் மேலெழுந்து வருகின்றது. ஊழல் வாழ்க்கை முறைக்குள் புகுந்து தன்மானத்தை குட்டிச்சுவராக்கி விட வாழ்க்கை முறை அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படுகின்றது. கல்வி வியாபாரமாகி மக்களை கசக்கிப் பிழிகின்றது. பெற்றோரின் வரட்டுக் கவுரவமும், சுயவிருப்பமும் முன்னிலைப்படுத்தப்பட்டு, குழந்தைகள் கல்விக்கூடங்களிலும் வீட்டிலும் வதைக்கப்படுகின்றனர். குடிநீர் இன்றி மக்கள் அல்லாடுகின்றனர். சுகாதாரமான சுற்றுச்சூழல் இன்றி மக்கள் உடல்ரீதியான சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். மருந்துவ வசதியின்றி வறியவர்கள் கால்கடுக்க மருத்துவமனைகளில் சாவை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். இனவாதம், மதவாதம் வாழ்க்கையில் சதா தலையிடுகின்றது. கலாச்சாரத் திணிப்புகளால் வாழ்க்கை நரகமாகின்றது. தனிவுடமை வாழ்க்கை சதா மனிதனை துன்புறுத்துகின்றது.

இதற்கு எல்லாம் தேர்தல் மூலம் மாற்றம் வரும் என்று நம்பிய “நல்லாட்சி”மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. நடந்த மாற்றம் வெறும் முகமாற்றமே என்பது எங்கும் எதிலும் இன்று உண்மையாகி இருக்கின்றது. அன்றாட வாழ்க்கையும் போராட்டமும் இதைத்தான் எடுத்துக் காட்டுகின்றது. “நல்லாட்சி”சொத்தைக் குவிக்கும் வர்க்கத்தின் ஆட்சியே ஒழிய, மக்கள் ஆட்சியல்ல என்ற உண்மை அம்பலமாகி இருக்கின்றது. அது மக்கள் நலக் கூறுகளை அகற்றுவதை தனது கொள்கையாக பிரகடனம் செய்திருக்கின்றது.

“நல்லாட்சியின்”பொருளாதாரக் கொள்கை என்ன?

நாட்டின் பொருளாதாரத்தில் எஞ்சிய சோசலிசவாத பொருளாதாரக் கூறுகளை அகற்றுதலே, “நல்லாட்சியின்”நோக்கம் என்று இந்த வருடத்துக்கான (2016 க்கான) வரவு செலவுதிட்டத்தில் அரசு முன்வைக்கின்றது. இந்த சோசலிசவாத “இருட்டினை சபிப்பதனை விடுத்து ஒரு மெழுகு வர்த்தியினை ஒளியேற்றி இருட்டினை விளக்கி விடுவோம்”என்று தனிவுடமைக் கொள்கையை அறிவித்திருக்கின்றது.

மக்கள் சார்ந்த சோசலிசவாத பொருளாதார கூறுகளை இல்லாதாக்கும் போது ஏற்படும் தடைகளை (மக்கள் எதிர்ப்பை) அகற்ற, இருக்கின்ற 428 பொலிஸ் நிலையங்கள் போதாது என்று அறிவித்துள்ளது. இதற்கு பதில் 600 பொலிஸ் நிலையங்களாக அதிகரிக்கவுள்ளதும், அதற்கு தேவையான 1,000 மில்லியன் நிதியையும் “நல்லாட்சி”ஒதுக்கீடு செய்திருக்கின்றது.

சோசலிசவாத மக்கள் நலத்திட்டங்களை அகற்ற, அதற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்காக, புதிதாக 172 பொலிஸ் நிலையங்களை அமைக்கவுள்ளதன் மூலம், “நல்லாட்சி”எது என்பது வெளிப்படையாக அறிவித்திருக்கின்றது.

இந்தப் பின்னணியில் பொருளாதாரத்தில் அதன் கொள்கையென்பது, செல்வத்தைக் குவித்து கொழுக்கும் வர்க்கம் மேலும் கொழுக்க உதவுவது தான்.

இந்த வகையில் பொருளாதாரத்தில் “சோசலிசவாத நலன்புரி பொருளாதாரம்” 1948 முதல் காணப்பட்டதாக கூறி அதை ஒழித்துக் கட்டுவதை முன்மொழிந்திருக்கின்றது. “நல்லாட்சி”அரசு இருப்பது “சோசலிசவாத நலன்புரி தனியார் பொருளாதாரம்”என்று கூறிய அதை ஓழித்துக்கட்டுவதை “ஒளியாக”முன்வைக்கின்றது.

“சோசலிசவாத நலன்புரி தனியார் பொருளாதாரம்”என்றால் என்ன?

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்கில் கூர்மையடைந்த தொழிலாளர் வர்க்க போராட்டங்கள், 1917 இல் ருசியப் புரட்சிக்கு வித்திட்டது. அங்கு தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சியை உருவாக்கியதுடன், 8 மணி நேர வேலை, 8 மணி ஓய்வு, 8 மணி உறக்கம் என்ற தொழிலாளர் நலன் கொள்கையை அமுல் செய்தது. அனைவருக்கும் வேலை என்ற கொள்கை (உழைத்தால் உணவு) நடைமுறைப்படுத்தப்பட்டது. கடின வேலைக்கு அதிக ஓய்வு, ஆண் பெண் சமவுரிமை, பெண்ணின் வேலைப்பளுவைக் குறைக்க குழந்தைக் காப்பகங்கள், பொது உணவுக் கூடங்கள், வயோதிபர் பராமரிப்பு இல்லங்கள் என்று மனித தேவைகளை முன்னிறுத்தியது. ஓய்வைப் போக்க ஓய்வு மையங்கள், அனைவருக்கும் இலவசக் கல்வி, வீடு, மருத்துவம் உறுதி செய்யப்பட்டது. தொழிலாளராக இருப்பதே சமூகத் தகுதி என்று புதிய சமூகப் பண்பாடும், தொழிலாளர் நலன் முதன்மை பெற்றது. தனியார்துறையை இல்லாததாக்கி, பொதுத்துறை உற்பத்தி முறையாகியதுடன், அதை தொழிலாளர் வர்க்கம் கட்டுப்படுத்தியது.

இந்த பின்னணியில் உலகத் தொழிலாளி வர்க்கம் சோவியத் தொழிலாளர்களின் உரிமைகளை உதாரணமாக முன்னிறுத்தி தத்தம் நாடுகளில் போராடத் தொடங்கினர். முதலாளித்துவம் தனது தனிவுடமையிலான சொத்துடமை வர்க்க ஆட்சியைத் தக்கவைக்க, “சோசலிசவாத நலன்புரி”பொருளாதாரக் கூறுகளைத் தனிவுடமைக்குள் கொண்டு வந்தது. இந்த வகையில் இடது – வலது கட்சிகளும், அதன் கட்சிக் கொள்கைகளும் உருவானது.

தொழிலாளர் வர்க்கப் புரட்சியைத் தடுக்கும் வண்ணம் “சோசலிசவாத நலன்புரி”கொள்கைகளை முன்வைத்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசியல் கட்சிகளின் கொள்கைகள் என்பது, சோவியத் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகள் சிலவற்றை தன் தொழிலாளிக்கு கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டதன் பொது வெளிப்பாடாகும்;. இதுவே சமூக நலத்திட்டங்களாக மாறின. இலவசக் கவ்வி-மருத்துவம் தொடங்கி தொழிலாளர் உரிமைகள் வரை அடங்கும்.

இன்று உலகில் தொழிலாளி வர்க்க ஆட்சிகளற்ற (சோசலிச நாடுகளற்ற) சூழலில், முன்னர் வழங்கிய “சோசலிசவாத நலன்புரி”திட்டங்களை அகற்றுகின்ற கொள்கையே, அனைத்து முதலாளித்துவ கட்சிகளின் கொள்கையாக மாறி இருக்கின்றது. உலகெங்கும் “சோசலிசவாத நலன்புரி”கொள்கைகள் அமுலாகிய அன்றைய பின்னணி இன்று இல்லாமையால், இலங்கை பொருளாதாரத்திலும் “சோசலிசவாத நலன்புரி”இல்லாதாக்குவதை “நல்லாட்சியாக”அரசு முன்வைத்திருக்கின்றது.

அனைவருக்கும் இலவசக் கவ்வி, மருத்துவம், இருப்பிடம் என்ற கொள்கையை இல்லாதாக்குவதும். 8 மணி நேர உழைப்பு என்ற கொள்கைக்குப் பதில் சுதந்திரமாக சுரண்டுவது, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை இல்லாதாக்கி விரும்பியவாறு சுரண்டும் உரிமை, அரசு துறைகளை இல்லாதாக்குவது, தொழிலாளர் நலச் சட்டங்களை இல்லாதாக்குவது… இவை இன்று உலகமயமாகி வருகின்றது. இந்தப் பின்னணியில் இவை “சோசலிசவாத நலன்புரி”பொருளாதாரமாகவும், இதை இருண்டதாகவும் அரசு அறிவித்திருக்கின்றது. மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உரிமைகள் மீது வெளிப்படையாக கையை வைத்திருக்கின்றது, இந்த “நல்லாட்சி”அரசு.

“நல்லாட்சி”அரசு கூறுகின்றது, “எமது அரசாங்கத்தின் கொள்கையானது, சந்தைகளில் சுதந்திரமாகச் செயற்படுவதற்கான தடைகளை நீக்குவதனை மையமாகக் கொண்டுள்ளது. கொள்கைக்கூற்றின் சீர்திருத்தங்கள் இக்கூற்றில் பிரதான இடத்தைப் பெறுகின்றன. முன்மொழியப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் தனியார் துறையின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது மாத்திரமல்லாது முழுமையான பொருளாதாரச் செயல்முறையில் அவர்களின் பங்கையும் உறுதிப்படுத்துவதாக…”இருக்கும் என்கின்றது. இப்படி தனியார் மயமாக்கும் அரசின் கொள்கை விளக்கமே – 2016 வரவுசெலவு திட்டம் முழுக்க காணப்படுகி;ன்றது.

முழு பொருளாதாரச் சமூகக் கூறையும் தனியாருக்கு (செல்வத்தை குவிப்பவனுக்கு) ஏற்ற வகையில் மாற்றி விடுவதை “நல்லாட்சியாக”பிரகடனம் செய்திருக்கின்றது. இதற்கு எதிராக மக்கள் போராடாது இருக்க – மக்களை பிரித்தாள்வதை நடைமுறைக்குள்ளாக்கத் தொடங்கி இருக்கின்றது.

மக்களை பிரித்தாளும் “நல்லாட்சிக்”கொள்கை

தனிச் சொத்துடமையை கொண்டிராத மக்களுக்கும், தனிச் சொத்துடமையைக் குவிக்கும் வர்க்கங்களுக்கும் இடையிலான போராட்டமே, “நல்லாட்சியில்”முதன்மையான முரண்பாடாக மாறி வருகின்றது. இதை தடுக்க மக்களிடையே பிளவை ஆழப்படுத்துவதே “நல்லாட்சியின்”நடைமுறையாகி இருக்கின்றது.

இனரீதியாக மக்களைப் பிரித்தாண்ட அரசின் கடந்தகாலப் பொருளாதாரக் கொள்கைகள், பாரிய இனரீதியான யுத்தத்தைக் கொண்டு வந்தது. தனிவுடமை வர்க்கங்களின்; பொருளாதார குவிப்புக்கு உதவுவதற்காக கொண்டு வந்த இனவாதம் முதன்மையாக தனிக் கூறாக வளர்ந்து தனிச்சொத்துடமை குவிவதற்கு பதில் அதை இனரீதியாக குறுக்கி முடக்கியது.

உலகமயமாதலுக்கு அமைவாக தனிவுடமை குவிவதில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பின்னணியில் பிராந்திய மற்றும் ஏகாதிபத்திய பொருளாதார முரண்பாடுகளே காரணமாகும். இனவாதத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தலையிட்டதன் மூலம், நேர் எதிரான இனவாத சக்திகள் பலம் பெற்றதன் மூலம் தனிவுடமை குவிப்பதற்கு இனவாத யுத்தம் தடையை ஏற்படுத்தியது.

இந்த பின்னணியில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலமே – உலகளவில் செல்வத்தைக் குவிக்கும் தனிவுடமை வர்க்கங்களின் நலனை பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலையில் ஏகாதிபத்தியங்களின் துணையுடன் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

யுத்தத்துக்கு தலைமை தாங்கி அதை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள், தங்களின் தனிப்பட்ட நலனை முன்னிறுத்தியதால் யுத்தத்துக்கு பிந்தைய சூழல் உலக மூலதனத்துக்கு புதிய தடையாக மாறியது. இந்த தடையை அகற்றவே முகமாற்ற “நல்லாட்சி”முன்வைத்ததும் தனிவுடமை குவிவதற்கான தடைகளை இல்லாதாக்கியது. இதன் மூலம் உலக மூலதனங்களின் நலன்களையே முகமாற்ற “நல்லாட்சி”மூலம் கொண்டு வந்தார்களே ஒழிய மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கவில்லை. இன்றைய தொடர் போராட்டங்கள் இதைத்தான் பிரதிபலிக்கின்றது.

தனிச் சொத்துடமையைக் குவிக்கும் பொருளாதாரத்தை முன்னெடுக்க கடந்த காலத்தில் முன்தள்ளப்பட்ட இன முரண்பாடுகளும் அதன் விளைவுகளும், இன்று புதிய போராட்டத்துக்கு வித்திட்டுள்ளதே ஒழிய அவற்றைத் தீர்க்கவில்லை. தொடர்ந்தும் சமூகத்தை மென்மையான இன முரண்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் தான், மக்களை பிரித்தாள முடியும் என்பதே அரசின் கொள்கையாக இருக்கின்றது.

இந்த வகையில் இன்று இனம் – மதம் – சாதிய .. முரண்பாடுகள், குறுகிய பிரதேச மட்டத்தில் கூர்மையாக்கப்பட்டு வருகின்றது. சிறிய சிறிய முரண்பாடுகள் அடிப்படையில் மக்களை மோத வைப்பதும் அதற்குள் மக்களை முடக்குவதுமாக “நல்லாட்சிக்”கொள்கை மாறி இருக்கின்றது.

முன்பு இனமுரண்பாட்டை பிரதான முரண்பாடாக முன்னிறுத்திய அரசின் பிரித்தாளும் பொருளாதாரக் கொள்கை இன்று சிறு முரண்பாடுகளைத் தூண்டி மக்களை பிரித்தாளும் பொருளாதாரக் கொள்கையாக மாற்றி இருக்கின்றது. மக்கள் பொதுப் பிரச்சனைகள் மீது ஒன்றுபடுவது என்பது – தனிவுடமையை குவிக்கும் உலகளாவிய வர்க்கத்திற்கு எதிரானதாகி விடுவதால் அதைத் தடுக்க மக்களிடையே முரண்பாடுகளைத் தூண்டி விடுவதே அரசின் கொள்கையாக இருக்கின்றது. இதற்கு அமைவாக குறுந்தேசியவாதமும் அரசுடன் கூட்டுச் சேர்ந்து பயணிக்கத் தொடங்கி இருக்கின்றது.

எதிர்கட்சியற்ற “நல்லாட்சிக்”கொள்கை

எதிர்க்கட்சி என்பது என்ன? தேர்தலில் பெரும்பான்மை – சிறுபான்மையூடாக, அரசையும் எதிர்க் கட்சியையும் புரிந்து கொள்வது என்பது பொதுப் புத்தியாகும். இதுவொரு உண்மையல்ல. கட்சிகள் என்பது வர்க்கங்களை பிரதிநித்துவப்படுத்தும் அதையே தங்கள் பொருளாதாரக் கொள்கையாகவும் முன்வைக்கின்றனர்.

தனிச் சொத்துடமையைக் குவிக்கும் பொருளாதார அமைப்பில் அரசின் துணையுடன் தான் சுரண்டும் வர்க்கங்கள் கொழுக்கின்றன. சுரண்டும் வர்க்கங்கள் தங்கள் வர்க்க ஆட்சிப் பிரதிநிதிகள் மூலம், தமக்கு ஏற்ற பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டு வருவதையே தேர்தல் மூலம் செய்கின்றன.

உலகளாவில் சுரண்டும் வர்க்கங்களுக்கு இடையில் செல்வத்தைக் குவிப்பதிலுள்ள அக முரண்பாடு தனது பிரதிநிதியை ஆட்சிக்கு கொண்டு வர முனைகின்றது. இந்த வகையில் நிதி, பிரச்சாரம்.. என்று பல வழிகளில் தன் வர்க்கப் பிரதிநிதிக்கு தேர்தலில் உதவுவதும், அது தோற்கின்ற போது எதிர்க்கட்சியாக மாறுகின்றது. சுரண்டும் வர்க்கத்தின் முரண்பட்ட பிரிவுகளின் பிரதிநிதிகளின் வெற்றியும், தோல்வியும், தேர்தல் மூலம் நடந்தேறுகின்றது.

இது வர்க்க ரீதியான முரண்பாடல்ல, சுரண்டும் வர்க்கத்தின் அக முரண்பாடு சார்ந்து (இது ஏகாதிபத்திய முரண்பாடுடன் இணைந்து இயங்குகின்ற பொருளாதாரக் கூறாக இருக்கின்றது) தோற்ற எதிர்க்கட்சி, தன்னை மக்கள் பிரதிநிதியாக காட்டிக் கொண்டு அரசை எதிர்க்கின்றது. மக்கள் பிரச்சனையை முன்வைத்து, தன்னை ஆதாரிக்கும் சுரண்டும் வர்க்கப் பிரிவின் ஆட்சியை கொண்டு வரும் ஒரு எதிர்க்கட்சியாக இயங்குகின்றது.

இந்த சுரண்டும் வர்க்கம் சார்ந்த முரண்பட்ட பொருளாதாரக் கூறுக்கு இருக்கக்கூடிய அரசியல் அடிப்படையை அழிக்கும் வண்ணம், எதிர்க்கட்சி இல்லாத “நல்லாட்சியை”அரசு உருவாக்கி இருக்கின்றது.

இந்த வகையில் தமிழ் இனவாதம் பேசும் சாதியவாத மேற்கு ஆதரவு பொருளாதாரவாதக் கட்சியை எதிர்க்கட்சியாக்கியதன் மூலம் அரசு, தான் பிரதிநித்துவம் செய்யும் உலகளாவிய சுரண்டும் வர்க்கத்துக்கு சேவை செய்ய வைத்துள்ளது.

இதன் மூலம் மூன்று விடையங்கள் சாதிக்கப்படுகின்றது.

1.உலகளாவிய சுரண்டும் வர்க்கத்தின் முரண்பட்ட பிரிவுகளின் செயற்பாட்டுக்கான அரசியல் தளத்தை இல்லாதாக்கி முரணான பொருளாதாரக் கூறை விழுங்கிவிட முனைகின்றது.

2.ஆளும் வர்க்கம் சார்ந்த வர்க்கத்தின் நலனுக்கு முரணான போட்டி மூலதனம் எதிர்க்கட்சி மூலம் அதிகாரத்துக்கு வருவதற்காக மக்கள் பிரச்சனைகளை பேசுவதை பாராளுமன்றத்தில் இல்லாதாக்கி இருக்கின்றது.

3.இனவாத-சாதியவாத கட்சியை எதிர்க்கட்சியாக்கியதன் மூலம் – இனப் பிரச்சனையின் வீரியத்தை மட்டுப்படுத்தி சாதியவாத முரண்பாட்டை தமிழர்கள் மத்தியில் முதன்மையாக்கி இருக்கின்றது.

எதிர்க்கட்சியும் – சாதியவாதமும்

மேற்குப் பொருளாதாரத்தை இலங்கையில் பலப்படுத்தும் கூட்டமைப்பின் பொருளாதாரக் கொள்கைக்கும் அரசுக்கும் இடையில் வேறுபாடு கிடையாது. இந்த வகையில் தமிழ் இனவாதக் கட்சியான கூட்டமைப்பு அரசின் துணையுடன் எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. அத்துடன் “நல்லாட்சி”அரசின் பவ்வேறு சலுகைகளைப் பெற்ற கட்சியாகவும் இருக்கின்றது.

கடந்த காலங்களில் இனவாதத்தை முன்வைத்து இயங்கிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடு ஒத்த சர்வதேச பொருளாதாரக் கொள்கைக்கு அமைவாக மட்டுறுத்தப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் தமிழ் மக்களைப் பிரித்தாள அரசியல் பொருளாதாரரீதியாக ஆதிக்கமுள்ள வடக்கில் சாதிய முரண்பாடுகள் முன்னுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

வடக்கில் சாதியம் கூர்மையடைந்து வருவதுடன், பண்பாட்டு கலாச்சாரக் கூறுவரை வீரியமடைந்து வருகின்றது. தமிழ் “கலாச்சாரம்”குறித்து மேலெழுகின்ற அண்மைய செயற்பாடுகள் சாதிய ஆணாதிக்கத் தன்மை கொண்டவை.

இந்த பின்னணியில் யுத்த காலத்தில் ஊரைவிட்டு ஓடியவர்களும் ஊரில் எஞ்சியவர்களும் இணைந்து, மீளவும் சாதிய ஊர்களைக் கட்டமைக்க முனைகின்றனர். சாதிய அடிப்படையில் ஊரைச் சுத்தப்படுத்தும் வண்ணம் சாதியத்தை முன்னிறுத்தியும், பழைய சாதிய பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கலாச்சாரக் கிராமங்களை உருவாக்க முனைகின்றனர். இந்த வகையில் கோயில்கள் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டு சாதிக்கொரு கோயில்களாக கிராமங்கள் பிரிக்கப்பட்டு வருகின்றது.

பேசிச் செய்யும் சாதித் திருமணங்களையும், சாதி பார்த்துக் காதலிக்கும் காதல் திருமணங்களையும், மீள உருவாக்க முனைகின்றனர். இந்தப் பின்னணியில் பெண்ணுக்கு பாரம்பரிய சாதிய ஆணாதிக்க மதக் கலாச்சார ஒழுங்குகள் புகுத்தப்படுகின்றது.

“நல்லாட்சி”யின் ஆதரவுடன் எதிர்க்கட்சியின் செயற்பாடு என்பது தமிழ் மக்களை சாதி மூலம் கூறு போட்டு மேற்கு சார்பு பொருளாதாரத்தை முன்னெடுக்க உதவுவதே எதிர்க்கட்சி அரசியலாக மாறியிருக்கின்றது.

உலகமயமாதலின் நடைமுறையே நல்லாட்சியாகின்றது

உலகமயமாதல் கொள்கையே “நல்லாட்சியாக”இருக்கின்றது. இந்த பின்னணியில் சர்வதேச சந்தைவிலைக்கு ஏற்ப, பொருட்களின் விலை அதிகரிக்க வைக்கப்படுகின்றது. கல்வி, மருத்துவம், குடிதண்ணிர் … உள்ளிட்ட அனைத்தும் விற்பனைக்குரிய பண்டப் பொருளாகின்றது. மக்கள் தேசங்கடந்த சொத்துடமைக்கு அடிமைகளாகவும், கூலிகளாகவும் மாற்றப்படுகின்றனர். சிறு சொத்துடமையாக இலங்கை மக்களிடம் இருக்கக் கூடிய நிலம், வீடு… என அனைத்தையும் பறித்தெடுக்கும் வண்ணம், “நல்லாட்சித்”திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றது.

இந்த வகையில் அடுத்த ஐந்தாண்டுகளில் சேரிகளை அகற்றுவதன் பெயரில் 100000 வீடுகளை கட்டுவதன் மூலம், நகர்ப்புற வாழ்விடங்கள் பறிக்கப்படவுள்ளது. அரசு ஊழியர்களுக்கு 150000 வீடுகளை கட்டவுள்ள அரசு, அதை மலிவுவிலையில் கொடுக்கவுள்ளது. இதன் மூலம் பாரம்பரியமான கிராமப்புற வாழ்விடங்களில் இருந்து மக்களை வெளியேற்றவுள்ளது. மற்றும் தொகுதிக்கு 5000 வீடுகள் என்ற திட்டம் மூலம் கிராமப்புற நிலங்களை கைப்பற்றவுள்ளது.

பாரம்பரியமான வாழ்விடங்களில் இருந்த மக்களை அகற்றுவது, அவர்களின் சிறு விவசாய உற்பத்தியை நசுக்குவதே இந்த வீட்டுத் திட்டத்தின் பின்னுள்ள சதியாகும். இதற்கு அமைய தொழிற்பேட்டைகளும் விவசாயப் பண்ணைகளும் அமைக்கப்படுகின்றது.

அரசு ஒரு பகுதி பணத்தைக் கொடுக்கும் இந்த வீட்டுத்திட்டத்தில், பணத்தைக் கொடுத்து வீட்டை சொந்தமாக மாற்ற முடியும். இந்த கொழுக்கி மூலம், தங்கள் பாரம்பரியமான நிலத்தை விற்றுவிடுமாறு ஒரு சூழலையே 2016 வரவு செலவு திட்டம் மூலம் “நல்லாட்சி”முன்வைத்திருக்கின்றது.

இதன் அடிப்படையில் இலங்கையில் முன்னெடுத்த உதாரணமாக இருப்பது யுத்தத்துக்கு பிந்தைய வடகிழக்கு மறுவாழ்வுத் திட்டமாகும். அரசும், சர்வதேச தன்னார்வ நிறுவனங்களின் மறுவாழ்வு திட்டமாகும். இது ஒரு பகுதி பணத்தை பெறுவதாக இருந்தால் மறுபகுதியை பெறுபவர் செலவு செய்ய வேண்டும். இந்த வகையில் அரசும், தன்னார்வ நிறுவனங்களும் வழங்கிய பணத்தையும் பொருளையும் பெற, யுத்தத்;தில் எஞ்சியதைக் கொண்டும் கடன் வாங்கியும் மறுவாழ்வு பெறுமாறு கோரியது. இலகுவாக கடன் கொடுக்கும் வண்ணம் வங்கிகளை யுத்த பிரதேசத்தில் குவித்தது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் சுயத்தை இழக்கும் வண்ணம், சார்ந்து இருக்கும் வண்ணம் மீள்கட்டுமானம் முன்வைக்கபட்டது. வீடு, விவசாயம்.. என அனைத்தையும் இந்த பொறிமுறைக்குள் சிக்கவைத்ததன் மூலம் சுயத்தை அழித்தனர். தன் வீட்டை முதன்மைப்படுத்தி அதற்குள் மூழ்கியவர்கள், விவசாயத்தை முதன்மைப்படுத்தி அதற்குள் புதைந்தவர்கள், இன்று தங்கள் பாரம்பரிய சுயத்தை இழந்துள்ளனர். உலகமயமாதல் முன்வைத்த மீள்கட்டுமானம் இதுவாகவே இருந்தது.

இந்த பின்னணியில் சுய அழிவைத் துரிதமாக்க விவசாயத்திற்கு இலவசமாக வழங்கிய ஒற்றைப் பயிர் விதைகள் மூலம், சந்தை வாய்ப்பற்ற மிகை உற்பத்தி மூலம் விவசாயத்தை அழித்தனர். விவசாயத்தில் இயந்திரத்தை புகுத்த வழங்கிய கடன்கள் மூலம், மிதமிஞ்சிய இயந்திர மயமாக்கல் மூலம் உற்பத்தியில் ஈடுபட முடியாத பயனற்ற இரும்பாக இயந்திரத்தை மாற்றினர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களிடம் எஞ்சியதை இழந்ததுடன் கடன்காரராகவும், சுய உழைப்பற்ற கூலிகளாகவும் மாறுவாழ்வு திட்டம் மாற்றியுள்ளது.

இந்த விளைவை உள்வாங்கக் கூடிய வண்ணம் வன்னிப் பரப்பில் உருவாக்கப்படும் பெரும் பண்ணைகள், கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட்டது. சுயத்தை இழந்தவர்கள் இங்கு கூலிகளாக மாறி வருகின்றனர். இந்தப் புதிய சூழலுக்கு அமைவான வீட்டுத்திட்டங்கள் மூலம் பாரம்பரிய குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களை கைவிட்டு வெளியேறுமாறு செய்கின்றது. 2016 வரவு செலவுத்திட்டதில் வவுனியாவில் சிறப்பு கைத்தொழில் பேட்டை உட்பட, வடகிழக்கை இணைக்கும் புதிய அதிவேக பாதைகளை அமைக்கவும் அதை அண்டிய பிரதேசத்தில் விவசாய கைத்தொழில் பேட்டைகளை அமைக்க நிதியை ஒதுக்கியுள்ளது.

வன்னியில் பெரும் விவசாயப் பண்ணைகளும், கைத்தொழில் பேட்டைகளும் அமையவுள்ளது. இது போன்று தான், நாடு தளுவிய அளவில் “நல்லாட்சிக்”கொள்கை முன்வைக்கப்பட்டு இருக்கின்றது.

“நல்லாட்சி”மாற்றத்தைக் கொண்டு வந்ததா?

மேற்கின் நேரடி முதலீடு, மேற்குடனான கூட்டு முதலீடுகளுக்கேற்ப ஆள்வோரை மாற்றுமாறு உலகமயமாதல் கோரியது. இதைத்தான் ஆட்சி மாற்றம் மூலம் “நல்லாட்சியாக”முன்வைத்தனர். நல்லாட்சி என்பது மேற்குக்கேற்ற “முகமாற்ற”ஆட்சி தானே ஒழிய, வாழ்வின் பிரச்சனைகளுக்கு தீர்வைக் கொண்டதல்ல. இந்த உண்மையை தேர்தல் காலத்தில் மக்கள் முன் வைக்கப்பட்ட போதும், இன்று இந்த உண்மை எங்கும் நடைமுறையாக இருக்கின்றது.

சொத்தைக் குவிக்கும் தனிவுடமை அமைப்பு முறையை மாற்றாது “நல்லாட்சி”என்பது பொய். இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிலான உண்மையும் கூட. ஆட்சி மாற்றங்கள் மூலம் செய்கின்ற சீர்திருத்தங்கள், கெடுபிடிகளைத் தளர்த்தல் மூலம், வெளித்தோற்றத்தில் நடைபெறும் முகமாற்றங்கள் என்பது வெறும் மூகப்பூச்சு தான். இவை ஆழமாக புதிய தாக்குதலை நடத்தும் முன்தயாரிப்பாகும்.

இதற்கு பின்னால் இனப்பிரச்சனையை தீர்க்க மறுக்கும் இனவாதம், பொருளாதார ரீதியாக ஒட்டச் சுரண்டும் புதிய கொள்கைகள்;. இது மட்டுமல்ல, கல்வி தனியார் மயமாக்கல், மீனவர்களின் வாழ்வியல் உரிமைகளை மறுத்தல், வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் அவலங்கள், மலையக தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தி சுரண்டும் கொடுமைகள், சாதிய ஒடுக்குமுறைகள், மதரீதியான துன்புறுத்தல்கள், சூழல் நஞ்சாகுதல், ஊழல், அதிகார துஸ்பிரயோகங்கள் … என்று பற்பல மனித அவலங்கள். இவைகளை பாதுகாத்து முன்னெடுத்தல் “நல்லாட்சி”யாகத் தொடருகின்றது.

உலகளவில் சொத்தைக் குவிக்கும் வர்க்கத்துக்கு இலங்கையில் இருக்கும் தடைகளை அகற்றி அது சுதந்திரமாக எந்தக் கட்டுப்பாடுமற்ற வகையில் செயற்படுவதை உறுதி செய்வதே “நல்லாட்சியாக”இருக்கின்றது. இதனால் வாழ்க்கைக்கான போராட்டம் என்பது தவிர்க்க முடியாதாகி இருக்கின்றது. மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை, எதைச் செய்ய வேண்டும் என்பதை, “நல்லாட்சி”கொள்கை தீர்மானிக்க, அது வாழ்வுக்கான போராட்டமாக மாறியிருக்கின்றது.

அண்மையில் பிரான்ஸில் இடம்பெற்ற 46வது இலக்கிய சந்திப்பில் “சமகால அரசியல் போக்கு அரங்கில்”தோழர் ரயாகரன் ஆற்றிய உரை .

SHARE