தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் எங்கே செல்கின்றது என்ற கேள்விக்கு விடை காணப்படாத நிலையில் 17 பாராளுமன்ற உறுப்பினர்களும் தடுமாறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் ஒவ்வொரு வருடங்களைக் கடக்கும் போதிலும், தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பொய்யான வாக்குறுதிகள் யுத்தம் நிறைவடைந்து 7 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டில் தீர்வுகள் எட்டப்படும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சூளுரைத்து வருகின்றது.
விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசின் பலமானது பன்மடங்கு அதிகரித்துள்ளது. விடுதலைப்புலிகளைத் தவிர வேறு எந்த இயக்கங்களும் இறுதி வரை தமிழினத்தின் விடிவுக்காகப் போராடவில்லை. தூய்மையான போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த துரோகிகளாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி போன்ற இயக்கங்களைக் குறிப்பிடலாம் இதன் விளைவே இன்றும் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் எட்டப்படாத நிலையாகும். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பது போல் இவர்களது இன்றைய அரசியல் நிலை காணப்படுகின்றது.
விடுதலைப்புலிகள் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற இலட்சியத்திற்காக இறுதிவரை போராடி இறுதியில் சர்வதேசமே போராட்டங்களை முடிவுக்குக்கொண்டுவந்தது. இதன்போது மேற்குறிப்பிடப்பட்ட இயக்கங்கள் மற்றும் முஸ்லீம் தரப்புகள் தமிழீழ மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தை அழித்தொழிப்பதற்கு அதிதீவிரமாக செயற்பட்டுவந்தன. இன்று இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில் பதவிமோகம் கொண்ட அரசியல் கட்சிகள் தீர்வுத்திட்ட விடயத்தில் கரிசனை கொள்ளாது தமது கட்சியினைப் பலப்படுத்துவதிலும் கதிரைகளைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் முனைப்புடன் செயற்பட்டுவருகின்றனர்.
சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் த.தே.கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய முடிவு சரியானது. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதற்கு சாதகமாக அமையவில்லை என்பதே முக்கிய விடயம். இங்கு நடந்தது என்ன? ஆரம்ப கட்டத்தில் தமிழ் மக்கள் பேரவையை வைத்து மாற்றுத்தலைமை ஒன்றை தமிழரசுக்கட்சிக்கு எதிராக முன்வைக்கமுடியும் என்ற நிலைப்பாட்டிலேயே சுரேசின் ஆரம்ப நகர்வுகள் சென்றன. மாற்றுத்தலைமைக்குத் தயாராகவிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் தமிழரசுக்கட்சி மற்றும் இந்தியாவின் அழுத்தத்தினால் அதிலிருந்து பின்வாங்கிக்கொண்டார். இந்த காலகட்டத்தில் மாற்றுத்தலைமை என்பது தேவையற்றது எனவும் அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் அரசியலுக்கு வந்து சிறிதுகாலம் என்றாலும் அரசியலைப் படித்தவர்.
இவ்வாறான நிலையில் EPRLF சுரேஸ் அவர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் கரங்களைப் பற்றிக்கொண்டார். அதன்போது EPRLF மட்டும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறினால் போதாது ஏன்ற ரீதியில் ஊடக சந்திப்புக்கள் அமைந்திருந்து. வடமாகாணசபையில் அமைச்சரவை மாற்றம் நிகழ்ந்தது. அதில் சுரேசினுடைய சகோதரனுக்கு கல்வி அமைச்சு வழங்கப்பட்டதுடன் கஜேந்திரகுமார் அவர்களின் கைகளையும் மெல்ல மெல்ல அகற்றிவிட்டார் சுரேஸ் அவர்கள்.
தமது கட்சியின் சின்னத்தில் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி – சைக்கிள் சின்னம்) போட்டியிடவேண்டும் என்று கஜேந்திரகுமார் அவர்கள் பணித்தமையாலேயே அதிலிருந்து வெளியேறியதாக சுரேஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார். இது இவ்வாறிருக்க சுரேஸ் அவர்களின் வெளியேற்றத்திற்கு அது காரணமல்ல. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணியின் சூரியன் சின்னத்தில் போட்டியிடமுடியாது என்று ஏற்கனவே கஜேந்திரகுமார் அவர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு எடுத்துக்கூறிய நிலையிலும், சுரேஸ் அவர்கள் தானே இதற்கு தலைமை தாங்கவேண்டும் என்ற காரணத்தினால் கஜேந்திரகுமார் அவர்கள் இதற்கு உகந்தவர் அல்ல என்றும் இதனால் தலைமைத்துவப் பிரச்சினைகள் உருவாக வாய்ப்புகள் இருக்கின்றது என்றும் தேசியம், சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ளாத ஆனந்தசங்கரி அவர்களுடன் இணைந்து எவ்வாறு சூரியன் சின்னத்தில் போட்டியிடமுடியும் என்பதையும் நன்கு உணர்ந்தே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுரேஸ் அவர்களுடன் இணைவதில்லை என்ற முடிவுக்கு வந்தது.
தமிழரசுக்கட்சிக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சினைகள் கொள்கை அடிப்படையானதே – பதவிக்கோ அல்லது கதிரைக்காகவோ அல்ல.
இதிலொரு விடயம் குறிப்பிடப்படவேண்டும் என்னவெனில் பிரதேச சபை இட ஒதுக்கீட்டில் தமக்கான ஆசனங்கள் அதிகமாக ஒதுக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் இக்கட்சிகள் கவனம் செலுத்தியதே தவிர கொள்கை அடிப்படையில் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கவேண்டும். தமிழ்;த்தேசியக்கூட்டமைப்பு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்ற ரீதியில் முடிவுகள் எடுக்கப்படவில்லை. அதனது விளைவாகவே பிரதேச சபைகளுக்கான இட ஒதுக்கீட்டில் தமிழரசுக்கட்சியின் எச்சிலை விழுங்கும் கடசிகளாக தற்போதும் ரெலோ, புளொட் இரண்டும் செயற்பட்டு வருகின்றது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கமைய இவர்களுடைய செயற்பாடு கொள்கை அடிப்படையில் இருக்குமாகவிருந்தால் விடுதலைப்புலிகளது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் விட்ட இடத்தில் இருந்து இந்த மூன்று ஆயுதக்கட்சிகளும் போராட்ட களத்தில் குதித்திருக்கவேண்டும். (அதாவது அஹிம்சை அல்லது ஆயுதப்போராட்டம்) எனினும் இப்போராட்டங்களுக்குத் தகுதியில்லாதவர்களாக தமிழரசுக்கட்சியின் வாலைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்தும் இந்த ஆயுதக்கட்சிகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக தமிழரசுக்கட்சியிலிருந்து நுPசுடுகு கட்சி முற்றாக வெளியேறவேண்டும். இவர்கள் வெளியேறினாலும் தனித்து இவர்களுடைய சின்னத்தில் போட்டியிடவேண்டும். அந்த வெற்றியே இவர்களுடைய அரசியலின் அடுத்த மைல்கல்லை எட்டுவதற்கான அத்திவாரமாக அமையும்.
வானத்தால் போன சனியனை ஏணிவைத்து இறக்கிய EPRLF தமிழர் விடுதலைக்கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெறலாம் என கூட்டுக்கட்சிகள் வடக்கிலும் கிழக்கிலும் களமிறங்கியிருக்கின்றன. இது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினுடைய ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும், அதனுடைய பலத்தைக் குறைப்பதற்குமான செயற்பாடாகவே அவதானிக்கமுடிகிறது. சிங்களக் கட்சிகளுக்கும், சிங்கள அரசிற்கும் பாடம் புகட்டும் முகமாக தமிழ்க்கட்சிகள் செயற்படவில்லை. இதற்கு தமிழரசுக்கட்சியினுடைய பிற்போக்குத்தனமே காரணம் என ஏனைய கட்சிகளால் குற்றம் சாட்டப்படுகிறது. அவ்வாறு குற்றம் சாட்டப்படுவதாகவிருந்தால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்து ஏனைய கட்சிகளும் வெளியேறி இக்கருத்தைக் கூறவேண்டும். கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பதுபோல் இகட்சிகளின் அரசியல் நடவடிக்கைகள் இருக்கின்றன.
தமிழரசுக்கட்சியினது நம்பிக்கை வடக்கிலும், கிழக்கிலும் தாம் தனித்துப்போட்டியிட்டு வெற்றிவாகை சூடுவோம் என்பதுவே. இது நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதும் கேள்வியே. அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதுபோல் இந்த 03 ஆயுதக்கட்சிகளும் இணைந்துகொண்டால் அது பாரிய பலமாக அமைந்துவிடும். அதனைத் தற்காத்துக்கொள்ளவே தமிழரசுக்கட்சி ஏனைய இரு ஆயுதக்கட்சிகளுக்கும் இனங்கண்டு பிரதேச சபைகளுக்கான ஆசனங்களை அதிகரித்துள்ளது. அக்கட்சியில் உள்ள உறுப்பினர்கள் தனித்துப் போட்டியிட்டால் வடக்கிலும், கிழக்கிலும் 90 வீதத்திற்கு அதிகரிக்கலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது.
இந்தப்பிளவு ரணில் அவர்களால் தடுக்கப்பட்டது. இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதற்கு அப்பால் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தற்போதைய ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களை நன்கு உணர்ந்துகொண்டுள்ளனர். ஆகவே இதனை உணர்ந்துகொண்ட தமிழரசுக்கட்சி ஒரு நம்பிக்கையாக ஆயுதக்கட்சிகளில் இருந்து தமது கட்சிகளுக்குத் தாவியவர்களை வைத்தே வெற்றிவாகை சூடலாம் என தவறான கணக்கு போட்டிருக்கிறது.
வன்னியைப் பொறுத்தவரை எம்.பி.சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா, மாகாணசபை உறுப்பினர்களான கமலேஸ்வரன், ரவிகரன் போன்றோரை வைத்து வன்னியினை முற்றுகையிடமுடியும் என்பது இவர்களது நம்பிக்கை. இவை எல்லாவற்றுக்கும் பதிலளிக்கும் முகமாக தமிழரசுக்கடச்p இராஜதந்திர முறையில் EPRLF தவிர ஏனைய கட்சிகளை இணைத்துப்போட்டி;யிடுவதற்கு அனுமதித்துள்ளது.
பிரதேச சபை தேர்தலிலும் சர்வதேசம் பார்க்கிறது, இனப்படுகொலை, பிரபாகரன் என்ற சொற்பதங்களும் பிரயோகிக்கப்படுகின்றது. இந்த பிரதேச சபைத் தேர்தல் முற்றுமுழுதாக நகர அபிவிருத்தியை மட்டுமே மையமாகக்கொண்டது. தமிழினத்தின் காதில் பூவைச் சுற்றும் நடவடிக்கைகளையே இந்த அரசியல்வாதிகள் மேற்கொண்டுள்ளனர். இது இவர்களுக்கு நல்லதல்ல. சுரேஸ் அவர்களும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும், சித்தார்த்தன் அவர்களும், செல்வம் அடைக்கலநாதன் அவர்களும், ஏனைய இதர கட்சிகளும் ஒன்றுசேருமாகவிருந்தால் முதலமைச்சர் விக்னேஸ்வரனை தலைமையாகக்கொண்டு ஒரு கட்சியை உருவாக்குவதன் மூலம் வெற்றிகாண முடியுமே தவிர அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை வைத்துக்கொண்டு ஒரு தலைமைத்துவத்தை ஏற்கமுடியுமே தவிர, வேறு எந்த காலகட்டத்திலும் தமிழரசுக்கட்சியைத் தோற்கடிக்க முடியாது. இதைவிடுத்து இவர்களது செயற்பாடுகள் அனைத்தும் பகற்கனவாகவே இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.