பொம்மை ஜனாதிபதியாக மைத்திரி நிச்சயமாக மாறிவிடுவார்

306

 

ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவை வீழ்த்துவதற்கு வியூகங்கள் வகித்து செயல்பட்டதில், மறைந்த சோபிததேரர், சந்திரிக்கா அம்மையார் போன்றவர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பது உலகமறிந்த உண்மையாகும்{2015}

மஹிந்தவை இந்த தேர்தலில் வீழ்த்த முடியாது விட்டால், இனிமேல் அவரை வீழ்த்த முடியாமல் போகும் என்ற காரணத்தினால்தான்,

கடைசியும் முதலுமாக, கடும் வியூகம் அமைத்து செயல்பட வேண்டியிருந்தது அவர்களுக்கு.

அந்த திட்டத்துக்கு ரணில் அவர்களும் பூரண ஒத்துழைப்பை வழங்கி பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு அந்த நேரம் சம்மதம் தெரிவித்திருந்தார்.அந்த பொது வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயளாலரான மைதிரிபால சிறிசேனாவை ரகசியமான முறையில் அவர்கள் தெரிவு செய்தார்கள்.அந்த விடயத்தை மஹிந்த ராஜபக்ச அவர்கள் அறிந்தால், பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும் என்ற காரணத்தினால், கடைசிவரையும் அந்த விடயம் ரகசியமாவே பாதுகாக்கப்பட்டு வந்தது.ஜனாதிபதி பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முந்தைய இரவில் கூட, மஹிந்தவுடன் சந்தோசமாக அப்பம் சாப்பிட்டுவிட்டு, அடுத்த நாள் பொதுவேட்பாளராக, மஹிந்தவுக்கு எதிராக களம் இறக்கப்பட்டவர்தான் இந்த மைதிரிபால சிரிசேன அவர்கள் ஆவார்.இதற்கு முக்கியபாத்திரம் வகித்தது யார் என்றால் சந்திரிக்கா அம்மையார் அவர்கள்தான் என்பதை யாரும் மறுக்கமுடியாது.சந்திரிக்கா அம்மையார் அவர்களுக்கு இரண்டு நோக்கங்களே அன்று இலக்காக இருந்தது, அதில் ஒன்றுதான் மஹிந்த குடும்பத்தை அரசியலிருந்து ஒதுக்குவது, அடுத்தது ஸ்ரீ.ல.சு.கட்சியை கைப்பற்றுவது.சந்திரிக்கா அம்மையாருக்கு, ரணிலை பிரதமராக்குவதோ, அல்லது ஐ.தே.க. கட்சியை உயர்த்திவிடுவதோ அவரது இலக்குகள் அல்ல, மாறாக மேற்கூறிய விடயங்களுக்காகவே மைதிரியை அவர் பயன் படுத்தினார்.

மைதிரி பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விடயம்ஆரம்பத்தில் மஹிந்தவுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அது ஒரு போட்டியாக நமக்கு வராது என்றே மஹிந்த ராஜபக்ச நினைத்தார்.இருந்தாலும், தேர்தல் திகதி நெறுங்க, நெறுங்க அவரது உள்ளத்தில் ஏதோ ஒரு வகையில் அச்சத்தை ஏற்படுத்தியது,காரணம், அந்த காலகட்டத்தில் முஸ்லிம்களின் எதிர்ப்பு வழமையைவிட அகோரமாக இருந்தது என்பதே உண்மையாகும்.முஸ்லிம் மக்களின் மஹிந்த மீதான எதிர்ப்புக்காரணமாக, அன்று அவரோடு நெருக்கமாக இருந்த முஸ்லிம் கட்சி தலைவர்களான ரிசாட், ஹக்கீம் போன்றவர்கள் திடீரென மஹிந்தவை விட்டு விலகிய விடயம், அவரது அரசியல் தோல்வியை உருதிப்படுத்தியது என்பதே உண்மையாகும்..அதன் பிற்பாடு, ஐ.தே.கட்சியின் சிங்கள மக்களின் ஆதரவோடும். அதேநேரம், தமிழ், முஸ்லிம்,மலையக மக்களின் பூரண ஆதரவோடு 62 லட்சம் வாக்குகளை பெற்று மைதிரி பால சிரிசேன அவர்கள் அன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.அதே நேரம் பெரும்பாலான சிங்கள மக்களின் 58லட்சம் வாக்குகளை பெற்று மஹிந்த ராஜபக்ச அவர்கள் தோல்வியை தழுவியிருந்தார்.ஜனாதிபதி தேர்தல் நடந்து., மைதிரி அவர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட கையோடு, தனக்கு எதிராக வாக்களித்த 58 லட்சம் மக்களின் ஆதரவை பெற்ற கட்சியான, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக அவர் ஆக்கப்பட்டார்.தனக்கு ஆதரவளித்த ஐ.தே.கட்சி மக்களின் எதிர்க்கட்சியான, ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியின் தலைவராக மைதிரி அவர்கள் இருந்து கொண்டு, எதிர்வரும் பொதுத்தேர்தலை மைதிரி அவர்கள் எப்படி சந்திக்க போகின்றார் என்ற ஐயம், அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தையும், எதிர்பார்ப்பயும் அந்த நேரத்தில் ஏற்படுத்தியிருந்தது.உண்மையில் மைதிரி அவர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராகாமல், தனக்கு வாக்களித்த ஐ.தே.கட்சியில் இணைந்து கொண்டு, பொதுத்தேர்தல் காலங்களில் மேடைகளில் ஏறி,ரணில் அவர்களை பிரதமாராக்குங்கள், நாட்டை ஒரே பாதையில் வழிநடத்த அது உதவியாக இருக்கும் என்று, ஜனாதிபதி மைதிரி அவர்கள் சகல மேடைகளிலும் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தால், அந்த மேடை பேச்சின் காரணமாக,நிச்சயமாக மக்கள் ஐ.தே.கட்சிக்கு வாக்களித்து இருப்பார்கள்.அப்படி மக்கள் வாக்களித்து இருந்தால், ஐ.தே.கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க ஏதுவாக அமைந்திருக்கும்.இந்த நேரத்தில் மைதிரி அவர்கள் இந்த நாட்டின் எதிர்கால முன்னேற்றம் கருதி, ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைமை பதவியை ஏற்றுக்கொள்ளாமல் ரணிலுடன் இணைந்து தனிப்பாதையில் செல்ல விரும்பியிருந்தாலும், அதற்கு சந்திரிக்கா அம்மையார் அவர்கள் விட்டிருக்க மாட்டார்.அவருடைய எண்ணமெல்லாம் ஸ்ரீ.ல.சு.கட்சியை, மைதிரியை வைத்து கைப்பற்றுவதே குறிக்கோளாகும்.அதனால் மைதிரி அவர்கள் அன்று இரண்டும் கெட்டான் நிலையில் மாட்டிக்கொண்டு திண்டாடினார்.அப்படியில்லாமல் மைதிரி அவர்களால் தனித்தன்மையோடு இயங்குவதற்கு சந்திரிக்கா அம்யைார் அன்று தடையாக இருந்தார் என்பதே உண்மையாகும்.<காரணம், மைதிரி அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட பாதையில்லை இது என்பதனால், சந்திரிக்கா அம்மையாரின் திட்டத்துக்கு ஏற்றால் போல் ஆடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.மாறாக, மஹிந்த குடும்பத்தை எதிர்ப்போரின் கை பொம்மையாக மாட்டிக்கொண்டவர்தான் இந்த மைதிரி அவர்கள்.இந்த விளையாட்டில் அவர் வெற்றி பெற்றிருந்தாலும், நாட்டின் நன்மை கருதி அவர் சுயமாக முடிவெடுத்து செயல்பட பல தடைகளை தாண்டவேண்டியுள்ளது.எது எப்படி இருந்தாலும், ஸ்ரீ.ல.சு.கட்சியின் தலைவரானதன் பிற்பாடு மைதிரி அவர்கள், பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்சவை பிரதம வேட்பாளராக அறிவித்து விட்டு, சுதந்திரக்கட்சியின் எந்த மேடையிலும் ஏறாமல், பிரச்சாரமும் செய்யாமல் ஒதுங்கியே இருந்து விட்டார். அதனால் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு பெரும்பான்மையை பெறமுடியாமல் போனது.அதற்கு காரணம், ஜனாதிபதி மைதிரி அவர்கள் அந்த கட்சிக்கு சார்பாக பிரச்சாரம் செய்ய மறுத்ததுதான்.அதே நேரம் மறுபக்கம் யோசித்துப்பார்த்தால், உண்மையிலேயே ஸ்ரீ.ல.சு.கட்சியில் மைதிரி அவர்கள் மஹிந்தவுக்கு ஆதரவாக மேடையேறி பிரச்சாரம் செய்திருந்தால் நிச்சயமாக ஸ்ரீ.ல.சுதந்திரக்கட்சி தனித்து நின்று அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைத்திருக்கும்.ஜனாதிபதியானவர் எந்தப்பக்கம் உள்ளாரோ அந்தப்பக்கம் வாக்களிப்பது என்பது, பெரும்பான்மை வாக்காளப் பெருமக்களின் நிலையாகும்.ஆனால், அப்படி நடந்திருந்தால் தன்னை ஜனாதிபதி ஆக்குவதற்கு வாக்களித்த மக்களுக்கும், ரணிலுக்கும் அது ஒரு பெரும் துரோகமாக அமைந்திருக்கும் என்பதே உண்மையாகும்.ஆனால் மைதிரி அவர்கள் ஸ்ரீ.ல.சுதந்திர கட்சி தலைவராக இருந்தாலும் தனது கட்சி வெற்றியடையக் கூடாது என்ற எண்ணரத்தில் செயற்பட்டவிதம், அரசியல் அரங்கில் வித்தியாசமான ஒரு மனிதராக மைதிரியை இனம் காட்டியது என்பதே யதார்த்தமாகும்.எது எப்படி இருந்தாலும் மைதிரி அவர்களுக்குத்தான், இந்த அரசியல் களம் பெரும் சோதனைக் களமாக மாறியிருந்தது.பொதுத்தேர்தலில் மைதிரி அவர்கள் செயல்பட்ட விதம் ஐ.தே.கட்சி ஆதரவாளர்களுக்கு பெரும் நிம்மதியைக் கொடுத்தாலும்,ஸ்ரீ.ல.சு.கட்சி ஆதரவாளர்களுக்கு அது மிகப் பெரும் இடியாகவே அமைந்தது, என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை எனலாம்.இப்போது ஏதோ ஒருவகையில் கூட்டரசாங்கம் என்று மைதிரியும், ரணிலும் வண்டியை ஓட்டிச்சென்றாலும், உள்ளூர ஒரு அச்சம் அவர்களுக்குள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது என்பது, உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏதோ காரணம் சொல்லி இழுத்தடிப்பதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.இப்போது ஏதோ ஒரு காரணத்தினால் மஹிந்த என்ற தனிநபருக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகின்றது என்பதை யாராலும் இலகுவாக மறுதழிக்க முடியாது.அதே போன்று ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் ரணிலின் பக்கம் இருக்கின்றார்கள் என்பதும் மறுக்கமுடியாத ஒன்றாகும்.ஆனால் மைதிரி என்னும் தனி நபருக்கு மக்கள் ஆதரவு உண்டா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் இருக்கின்றது.அவருடைய ஆதரவை தீர்மானிக்க எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்தான் பதில் அளிக்கப்போகின்றது.அந்த தேர்தலில் ரணில் அவர்கள் நிச்சயமாக கட்சியின் அடைப்படை வாக்குகளினால் அவருடைய பலம் நிரூபிக்கப்படும்.மஹிந்தவும் அவருடைய மக்கள் பலத்தை காண்பிக்க அந்த தேர்தல் ஏதுவாக அமையும்.ஆனால், மைதிரியின் அரசியல் பலம் என்னவென்ற கேள்விக்கான பதில் உள்ளூறாட்சி தேர்தலின் முடிவுகள் சொல்லும்.மைதிரி அவர்கள், சில வேளைகளில், அந்த தேர்தலில் மஹிந்தவை விட கூடுதல் வாக்குகள் எடுத்தார் என்றால்,மஹிந்தவின் அரசியல் வாழ்க்கை அத்தோடு முடிவுக்கு வந்துவிடும் என்பதே உண்மையாகும்.அப்படி நடக்காமல், மைதிரியை பின் தள்ளிவிட்டு மஹிந்த மக்கள் ஆதரவை பெற்றுவிட்டார் என்றால்,அதன் பிற்பாடு மக்கள் ஆதரவு இல்லாத, பொம்மை ஜனாதிபதியாக மைதிரி நிச்சயமாக மாறிவிடுவார்.அதே நேரம் உலகநாடுகள் இந்த கூட்டரசாங்கத்தை நம்ப மாட்டார்கள்.காரணம் என்னவென்றால்.,மக்கள் ஆதரவு உள்ள ரணிலும், மக்கள் ஆதரவு இல்லாத மைதிரியும் எப்படி கூட்டரசாங்கம் நடத்தமுடியும்.,இந்த கூட்டரசாங்கததை நம்பி எப்படி முதலீடுகளை இடுவது என்றுஉலக முதலீட்டாளர்கள் நினைத்தால்,இலங்கையின் பொருளாதாரம் ஆதாள பாதாளத்துக்கு சென்று விடும் என்பதே உண்மையாகும்.அதே நேரம் மக்கள் சக்தியுள்ள ரணிலும், மஹிந்தவும் கூட்டுச்சேர்ந்தால் தான் உண்மையான கூட்டரசாங்கமாக அது அமையும் .அப்படி ஒரு கூட்டு நடக்காமல் இருந்தால், நாட்டில் அரசியல் ஸ்த்திர தன்மை கேள்விக்குறியாக, எதிர்காலத்தில் மாறும் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது.அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்பதுதான் கடந்தகால அரசியல் வரலாறு என்பதை நாம் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.அரசியல் அரங்கில் எதுவும் நடக்கலாம்..ஆனால் பாதிக்கப்பட போவது, இதனை நம்பி ஏமாந்த மக்கள்தான் என்பது கவலைககுறிய விடயம்தான்.ஆகவே, பல எண்ணங்களினூடாக பயணம் செய்யும் இந்த அரசியல் தலைவர்கள் ஏதோ ஒரு விடயத்தில் மாட்டிக்கொள்ளத்தான் போகின்றார்கள் என்பதுதான் நிதர்சனமாகும்.

SHARE