பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக்கோரி வட மாகாண சபைதீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

607

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரி வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
நாட்டில் அமைதி நிலவுகின்ற போதிலும், தமிழ் மக்களுக்கு அழுத்தம் கொடுக்கத்தக்க வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி வருவதாக இந்தப் பிரேரணையை சபையில் முன்மொழிந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் டாக்டர் சிவமோகன் குற்றஞ்சுமத்தியிருக்கின்றார்.
தொடர்புடைய விடயங்கள்
மனித உரிமை
விடுதலைப்புலிகளை மீளிணையச் செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என குற்றஞ்சாட்டி வடக்கில் பலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த முயற்சிக்குத் தலைவர்களாக இருந்தார்கள் எனக் கூறப்பட்ட மூவர் இராணுவத்தினரால் அண்மையில் நெடுங்கேணி பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இந்தச் சூழ்நிலையில் திங்களன்று யாழ்ப்பாணத்தில் கூடிய வட மாகாண சபை இத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
‘பயங்கரவாதத்துடன் சம்பந்தம் இல்லாதவர்களையும்கூட, தங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை என குற்றம் சுமத்தி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்து, ஏழு வருடங்கள் அடைத்து வைக்க முடியும் என்றிருப்பது ஏற்க முடியாதுள்ளது’ என டாக்டர் சிவமோகன் தெரிவித்தார்.
‘அதேபோல கைது செய்யப்பட்ட ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைப் பலவந்தமாகப் பெற்ற, அதனைச் சான்றாக வைத்து அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியும்.’ என அவர் குறிப்பிட்டார்
பயங்கரவாதத் தடைச் சட்டம் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதால் இந்த பிரேரணையை வட மாகாண சபையில் நிறைவேற்றியுள்ளதாக சிவமோகன் தெரிவித்தார்.

SHARE