தமிழர்கள் பிரச்சினை எங்கு தொடங்கியது, எப்போது தொடங்கியது, ஏன் தொடங்கியது,

330

 

தமிழர்கள் பிரச்சினை எங்கு தொடங்கியது, எப்போது தொடங்கியது, ஏன் தொடங்கியது, எவ்வாறான ஒரு பாதையில் இதுவரை பயணித்துள்ளது என்பவற்றைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ளும் ஆற்றல் எனக்குத் தரப்பட்டுள்ளது என்றே நான் கருதுகின்றேன். அந்த அடிப்படையில் சிந்தித்ததில் சில அடிப்படை உரிமைகளை நாங்கள் பெறாவிட்டால் எமது இனம் விரைவில் இலங்கையில் மறைந்து போகப்போவது திண்ணம் என்ற எண்ணம் என்னிடம் மேலோங்கியுள்ளது. ஆகவே நான் எதைச் சரியென்று அடையாளம் காண்கின்றேனோ அதனைக் கூறிவருகின்றேன் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரன். தமக்குக் கிடைக்கும் கேள்விகளில் ஒன்றிற்கு வாராவாரம் பதிலளித்து வருகின்றார்.

இவ் வாரத்தைய கேள்வி –தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் படாதபாடுபடுகையில் அண்மையில் அரசியலுக்கு வந்த நீங்கள் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதைப் பலரும் விமர்சனஞ் செய்கின்றார்கள். மற்றவர்களுடன் சேர்ந்து போகாமல் அவர்களின் செயற்பாடுகளுக்கு முரண்பாடாக நடப்பது எதற்காக?

ஒன்றை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். விக்னேஸ்வரனுக்கு ஏற்கனவே பெயர்,புகழ், பணம், கல்வி, அந்தஸ்து, நல்ல மனைவி பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று எல்லாவற்றையுந் தந்து வைத்து விட்டான் இறைவன். கேவலம் ஒரு கட்சியை ஏற்படுத்தி அதில் தலைமைப் பதவி வகிக்கவோ, ஒரு மத்திய அரசின் அமைச்சர் பதவி பெறவோ விக்னேஸ்வரனுக்குத் தேவையில்லை. அவற்றில் அவனுக்கு நாட்டமும் இல்லை. வேண்டாவெறுப்பாக அரசியலுக்கு வந்தவன் அவன். தலைமைத்துவத்துடன் சேர்ந்து ஒத்துழைப்பதில் அவனுக்கு எந்தவிதப் பிரச்சினையும் இல்லை. இறைவன் அருளாலும் குருவின் ஆசியாலும் அண்மைக் காலங்களில் அவன் மனதில் குரோதம், பொறாமை, கோபம் போன்ற குணங்கள் தங்கியிருக்க மறுத்துவிட்டன.

எதிரிகளையுஞ் சேர்த்து எல்லோர் மீதும் உண்மையான அன்பு பாராட்டக்கூடிய ஒரு நிலையை இறைவன் அவனுக்கு அளித்துள்ளான். முன்னைய பிரதம நீதியரசர் ஸ்ரீபவன், பாராளுமன்ற அங்கத்தவர் சுமந்திரன், சட்டத்தரணி புவிதரன் போன்றவர்கள் தனது மாணாக்களாவார்கள் என்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் கொண்டவன். தன் சகோதரர்கள் போலவே அவர்களை அன்புடன் நோக்குகின்றான். ஆகவே எவரையும் பகைமை பாராட்ட வேண்டிய அவசியம் அவனுக்கில்லை.
பின் எதற்காக விக்னேஸ்வரன் கருத்துக்கள் முரண்பாடாக அமைந்துள்ளன என்று கேட்டால் ஒரு விடயத்தை பரிசீலித்துப்பார்க்கும் போது அதனை ஆதியோடந்தமாக ஒரு சரித்திர ரீதியாகப் பார்க்கும் ஒரு பாங்கை அவனுக்கு இறைவன் கொடுத்துள்ளான். நீதியரசராக இருந்த போது அந்தப் பங்கானது உறுதுணையாக அமைந்தது.

இப்பொழும் அப்படித்தான். தமிழர்கள் பிரச்சினை எங்கு தொடங்கியது, எப்போது தொடங்கியது, ஏன் தொடங்கியது, எவ்வாறான ஒரு பாதையில் இதுவரை பயணித்துள்ளது என்பவற்றைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ளும் ஆற்றல் அவனுக்குத் தரப்பட்டுள்ளது என்றே நான் கருதுகின்றேன். அந்த அடிப்படையில் சிந்தித்ததில் சில அடிப்படை உரிமைகளை நாங்கள் பெறாவிட்டால் எமது இனம் விரைவில் இலங்கையில் மறைந்து போகப்போவது திண்ணம் என்ற எண்ணம் என்னிடம் மேலோங்கியுள்ளது. ஆகவே நான் எதைச் சரியென்று அடையாளம் காண்கின்றேனோ அதனைக் கூறிவருகின்றேன். தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை இக்கட்டினுள் இட்டுச் செல்லும் எண்ணம் எனக்கு இம்மியளவும் கிடையாது. அவர்கள் எடுக்கும் பாதை பிழையான சேரிடத்திற்கு செல்லப் போகின்றது என்பதை அறிந்தும் அதனைத் தடுக்காது விட்டால் எம் யாவரினதும் பவனி எமக்கு அழிவையே நல்கும். பாதையைச் சீர்செய்து பவனியுங்கள் என்று மட்டுமே நான் கூறிவருகின்றேன். பலர் என்னைப் போன்றே அதனைக் காண்கின்றார்கள். ஆனால் சிலர் தாம் போகும் பாதையே சரி என்று பயனற்ற பாதையில் பயணஞ் செய்யப் பார்க்கின்றார்கள். இது தான் முரண்பாட்டின் காரணம். முரண்பாட்டிற்கு நான் காரணமல்ல என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிலர் நினைக்கின்றார்கள் முன்னைய தமிழ்த் தலைவர்கள் தாயகம், சுயநிர்ணயம், வட கிழக்கு இணைப்பு, சமஷ;டி என்றெல்லாம் கூறி வைத்துச் சென்றமை ஏதோ தான்தோன்றித்தனமான பிதற்றல்கள் என்றும் இன்றைய நிலையில் அவையொன்றும் கிடைக்காது என்றும் அதனால் கிடைத்ததை அல்லது கிடைப்பதைத் தக்க வைக்க வேண்டும் என்று. மேலும், ஏதோ வழியில் வாழ்ந்துவிட்டுப் போகலாம்; பணம்,பதவி,அதிகாரம், சொகுசு வாழ்க்கை இவைதான் முக்கியம் என்று நினைக்கின்றார்கள். அரசாங்கம் தருவதை எடுத்து சந்தோஷமாக இருப்பதை விட்டு வீணாகச் சமஷ;டி அது இது என்று கூறிக்கொண்டு தமது நடவடிக்கைகளுக்கு நாம் முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

தாயகம், சுய நிர்ணயம், வடகிழக்கு இணைப்பு, சமஷ;டி போன்ற கருத்துக்கள் கொழும்பிலும் தெற்கிலும் வாழும் போது தேவையற்றதாகத்தான் கருதப்படுகிறது. ஆனால் வட கிழக்கில் அக் கருத்துக்கள் மிக முக்கியமானவை. அவற்றின் தாற்பரியத்தைத், தேவையைத்,தத்துவத்தை வடக்கு கிழக்கு மக்கள் முற்றாக அறிந்துள்ளார்கள்.

தாயகம் என்றால் இலங்கைத் தமிழர்கள் காலாதிகாலமாக ‘தமது நிலம்’ என்று அடையாளப்படுத்தி வந்த நிலம். தாயகம் எனக் கூறப்படும் நிலந்தான் ஒரு இனத்தை அடையாளங்காட்டுகின்றது. உணர்வால், உணர்ச்சிகளால் எம் மக்களை ஒன்று சேர்க்கின்றது. எமது நிலம் இல்லை என்றால் எமது அடையாளம் இல்லை. அவ்வாறான எமது தாயக நிலத்தினுள் தற்போது இராணுவத்தினரும் தெற்கில் இருந்து கொண்டுவரப்பட்ட குடியேற்ற வாசிகளும், பிற நாட்டு, தென்னாட்டு முதலீட்டாளர்கள் எனப் பலரும் குடியேறியுள்ளார்கள்.அவர்கள் வாழ்க்கையை நோக்கும் விதம் வேறு. எமது பாரம்பரியங்கள் வேறு. எமது தாயகத்தைஅடையாளப்படுத்திப் பாதுகாக்காவிட்டால் எமது பாரம்பரியம் அழியும். பண்பாடு அழியும். விழுமியங்கள் விலைபோகும். ஆகவேதான் தாயகத்தை எமது தானையோர் தாயினும் மேலாகக் கருதினர்.

அடுத்து வடகிழக்கு இணைப்பு. தாயகத்துடன் சேர்ந்தது இது. முஸ்லீம் மக்களுள் இருவகையினர் உள்ளார்கள். தென்னிந்தியாவில் இருந்து மரக்கலங்களில் வந்து இங்கு குடியேறியவர்கள். மத்திய கிழக்கில் இருந்து வந்து குடியேறியவர்கள். தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள் பலர் தமிழ்ப் பாரம்பரியங்களில் திளைத்தவர்கள். அவர்கள் முதலில் தமிழர்; அடுத்து இஸ்லாமியர்கள். ஆனால் அடுத்த பிரிவைச் சேர்ந்தவர்கள் தமது மதத்திற்கு முதல் இடம் கொடுப்பது மட்டுமல்லாமல் தம்மை வேறொரு இனமாக அடையாளப்படுத்தி வருகின்றார்கள். அவர்கள் தான் வடகிழக்கு இணைப்பை எதிர்ப்பவர்கள். அவர்கள் அவ்வாறு எதிர்த்தாலும் அவர்களின் மொழிப் பற்றின் நிமித்தம் வடகிழக்கானது தமிழ்ப் பேசும் மாநிலங்கள் என்ற கருத்தை ஏற்றேயுள்ளனர். எனவே தமிழ்ப்பேசும் கிழக்கு மாகாணத்தினுள் சமச்சீர்மையற்ற  ஒரு அலகை முஸ்லீம் மக்கள் பெற்றால் வட கிழக்கு இணைப்பை ஏற்க அவர்களுள் பலர் முன்வந்துள்ளார்கள். பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள முஸ்லீம் தலைவர்கள் வட கிழக்கின் இணைப்பை ஏற்காதது தமது மாநிலங்களில் அவர்களுக்கு வாக்கு கிடைக்காது போய்விடும் என்பதால்.

கிழக்கு தற்போது தமிழர்களிடம் இருந்து பறிபோய்விட்டது என்பது உண்மை. அதை எவரும் மறுக்க முடியாது. ஆனால் வட கிழக்கு இணைப்பைக் கைவிட்டால் நாம் எஞ்சிய கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள் ஆவோம். ஒரு சிங்கள பௌத்த பிக்குவிடம் போய் உதவி கேட்கும் அளவுக்கு அவர்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அரசியல் வாதிகளின் புறக்கணிப்பின் நிமித்தம் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். தமிழர் தாயகம் பாதுகாக்கப்படுவதன் அவசியம் போன்றே வட கிழக்கு இணைப்பும் அத்தியவசியமாகின்றது. இணைப்பின்றேல் தமிழினம் மறைந்து போகும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கின்றது. மத ரீதியாக, சமூக ரீதியாக, தொழில் ரீதியாக, கல்வி ரீதியாக, அரசியல் ரீதியாக கிழக்கு மாகாணத் தமிழர்கள்இப்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆகவே எமது கிழக்குச் சகோதர சகோதரிகளைப் பாதுகாக்க வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது. பேரினவாதம் தொடர்ந்து தலைகாட்டாமல் இருக்க வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது. தமிழ் முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்த வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமாகின்றது. இதைத் தெரிந்துதான் சிங்களத் தலைவர்கள் வட கிழக்கு இணைப்பை எதிர்க்கின்றார்கள். கிழக்கை முழுமையாகத் தம்வசப்படுத்தத் தாமதமாகிவிடுமோ என்று அவர்கள் சிந்திக்கின்றார்கள். ஆனால் இன விருத்தியைப் பார்க்கும் போது முஸ்லீம் சகோதரர்களே கிழக்கைக் கைப்பற்றப் போகின்றார்கள். அவர்கள் இன விருத்தி கிட்டத்தட்ட 5 சதவீதம் என்றால் சிங்களவருடையது 2 சதவீதமும் தமிழர்களுடைய இனவிருத்தி வீதம் 1 சதவீதமும் ஆகும். எனவேதான் முஸ்லீம்களுந் தமிழர்களுஞ் சேர்ந்து இணைந்த வடகிழக்கில் தமிழ் வாழ வழிவகுக்க வேண்டும் என்கின்றேன்.

வடகிழக்கை இணைக்குமாறு எமது முன்னைய தமிழ்த் தலைவர்கள் கோரிய போது இருந்த நிலைமை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. அப்போது வடகிழக்கு இணைப்பு, தமிழ் மக்களை கிழக்கு மாகாணம் பாரம்பரியமாகப், பெரும்பான்மையாகக் கொண்டிருந்தபடியால் கோரப்பட்டது. இப்பொழுது தமிழ் மொழியையும் தமிழ்ப் பாரம்பரியங்களையும் பாதுகாக்க வேண்டிய ஒரு கடப்பாட்டின் நிமித்தம் வட கிழக்கு இணைப்புக் கோரப்பட வேண்டியுள்ளது. தமிழர் தலைவரின் திருமலையானது தமிழர் பெரும்பான்மையாக வாழும் இடம் என்று சொல்லக் கூடிய நிலையில் நாம் இப்பொழுது இல்லை.

அடுத்து சுய நிர்ணயம். இங்குதான் சிங்களத் தலைவர்கள் ஆங்கிலேயரிடமிருந்து ஆட்சி அதிகாரத்தைப் பொறுப்பேற்றதன் விளைவுகள் தெரியவருகின்றது. சுதந்திரமாக வாழ்ந்த வடமாகாணத் தமிழ் மக்களும் தமிழ்ப் பேசும் குறுநில வன்னியனார்களால் ஆளப்பட்ட கிழக்கு மாகாணமும் ஆங்கிலேயர்களால் நிர்வாகம் நிமித்தம் 1833ம் ஆண்டில் சிங்களப் பிரதேசங்களுடன் சேர்க்கப்பட்டன. ஆனால் வெள்ளையார்கள் வெளியேறிய போது தமிழ்ப் பேசும் வட கிழக்கைத் தமிழ் மக்களிடம் கையளிக்க வேண்டும் என்று சிந்திக்கவில்லை. எமது அப்போதைய தமிழ்த் தலைவர்களும் இலங்கை பூராகவும் தமிழர்கள் பரவலாக வாழ்ந்ததையே கவனத்திற்கு எடுத்திருந்தார்கள். ஒற்றையாட்சியின் கீழ் சிங்களத் தலைவர்கள் தமிழ் மக்களைச் சகோதரர்கள் போல் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்து அரசியல் யாப்பின் 29ம் ஷரத்தை மட்டும் பாதுகாப்பாகத் தந்துவிட்டு அரசியல், நிர்வாக அதிகாரங்களைச் சிங்களத் தலைவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துக்குச் சென்றடைந்தார்களோ இல்லையோ சிங்களத் தலைவர்கள் அதற்கு முன்னரே மலை நாட்டுத் தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறித்தார்கள். அதன் பின் தமிழ் மக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்தார்கள். அப்போதுதான் தேசியத்தின் அவசியம் எமக்குப் புலப்பட்டது. தமிழர் வாழ்ந்த, வாழ்ந்துவரும், பக்கம் பக்கமாக அவர்கள் வாழும் இடங்கள் யாவும் அவர்களின் தேசியத்தின் நிமித்தம் சுய நிர்ணய உரிமை கொண்ட இடங்கள் என்று சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாதம் அப்போது முன்வைக்கப்பட்டது. உள்ளக சுய நிர்ணயமானது சில அடிப்படைகளின் நிமித்தம் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு சட்டக் கருத்தாகும். பாரம்பரிய பூமி, பொது மொழி, இனம், மதம் போன்றவை, பொதுப் பண்பாட்டுத் தகைமைகள் போன்றவை உள்ளக சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தின. எனவே ஆங்கிலேயர் காலத்தில் நாடெங்கும் பரவிவிரவியிருந்த தமிழர்கள் தமக்கென இருக்கும் ஒரேயுரித்து சுய நிர்ணய உரித்தே என்று கண்டு அதனை வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து இன்றும் வலியுறுத்துவதன் அவசியம் உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நம்புகின்றேன்.

அடுத்து சமஷ;டி முறை. தமிழர்களை வட கிழக்கினுள் வரம்புபடுத்த வேண்டும், கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒக்ஸ்பொட் சென்று நாடு திரும்பி வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க அவர்கள் 1926ல் இந் நாட்டுக்குச் சமஷ;டி முறையை வலியுறுத்தினார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் எமது தமிழர்களே.

நாடெங்கிலும் பரந்து வாழும் எம்மை ஏன் வட கிழக்கிற்குள் தனிமைப்படுத்தப் பார்க்கின்றீர்கள் என்று கேட்டார்கள் எம் தலைவர்கள். இதனால்த்தான் திரு. ஜீ.ஜீ. பொன்னம்பலம் அவர்கள் 50க்கு 50 என்ற யுக்தியை வலியுறுத்தினார். சிங்களப் பிரதிநிதிகள் 50 சதவீதமாகப் பாராளுமன்றத்தில் இடம்பெற்றால் மற்றெல்லா சிறுபான்மை இனங்களுஞ் சேர்ந்து 50 சதவீதம் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். தமிழ்ப் பேசும் மக்கள் நாட்டில் சிறுபான்மையினர் என்றாலும் வட கிழக்கில் அவர்கள் பெரும்பான்மையினர். ஐம்பதுக்கு ஐம்பதை ஆங்கிலேயர்கள் ஏற்கவில்லை. தமிழர்கள் இருந்த இடத்திலேயே வசித்துக் கொண்டு சிங்கள ஆதிக்கத்தை முறியடிக்கவே திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம் வழி கூறினார். அது ஏற்றுக்கொள்ளப்படாத போது சமஷ;டிக் கோரிக்கை தந்தை செல்வாவால் முன்வைக்கப்பட்டது. அதனையே நாம் இப்பொழுதும் வலியுறுத்துகின்றோம். தமிழ்;ப்பேசும் மக்களை வட கிழக்கினுள் வரம்பு படுத்த சமஷ;டி அடிகோலும் என்பது சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும். வட கிழக்கு மக்களின் நோக்குகளையும் தேவைகளையும் அபிலாiஷகளையும் சமஷ;டி அலகு பூர்த்தி செய்யுமே ஒளிய கொழும்பில் இருக்கும் வட கிழக்குத் தமிழர்கள் யாவரும் வட கிழக்குக்குப் போக வேண்டும் என்றோ வட கிழக்கில் வசிக்கும் சிங்களம் பேசும் சகோதர சகோதரிகள் சிங்களப் பிரதேசங்களுக்குச் செல்லவேண்டும் என்றோ கட்டளைகள் இடப்பட மாட்டா.
சுயநிர்ணயம், சமஷ;டி ஆகியன ஒரு மக்கட் கூட்டம் தம்மைத் தாமே ஆள வழிவகுக்கும். சமஷ;டி ஒன்றே ஓரளவுக்கு பெரும்பான்மையினத்தின் பேரினவாதத்தை முறியடிக்கக் கூடியது.

ஒற்றையாட்சி எமக்குத் தரும் இன்னல்களைப் பார்த்தோமானால் எம்மை நாமே ஆள, எமது தேவைகளையும், நோக்குகளையும் நோக்கிமுன்னேற அது இடமளிப்பதில்லை. உதாரணத்திற்கு மிக அண்மையில் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்பில் உள்ள நிறுவனமோ திணைக்களமோ ஒன்று பிரதம மந்திரியுடன் சேர்ந்து வடமாகாணத்தைச் சுற்றியுள்ள தீவகப் பகுதிகளின் முன்னேற்றத்திற்காகவும் பொருளாதார விருத்திக்குமாக ஒரு செயல்த்திட்டத்தை வகுத்துள்ளார்கள். விரைவில் நடைமுறைப்படுத்தவும் துணிந்துள்ளார்கள். எம்முடன் எதுவுமே அது பற்றிப் பேசவில்லை. இதை அறிந்ததும் எனது பிரதிநிதியூடாக இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவ்வாறான நடவடிக்கைகளே எம்மை சிங்கள மக்கட் தலைவர்களிடமிருந்து அந்நியப்படுத்தியுள்ளது என்பதை எடுத்துக்காட்டினேன். எம்முடன் சேர்ந்தே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று தெரிவித்தேன்.

அவர்களுக்குக் கூறாத ஒன்றை நான் இங்கு கூற விரும்புகின்றேன். மத்திக்குத் தேவை பணம். எமது தீவகங்களை எவ்வாறு பெரும் பணம் ஈட்டப் பாவிக்க முடியும் என்பதே அவர்கள் கரிசனை. உதாரணத்திற்கு குடி, கும்மாளம், சூது, பரத்தமை போன்றவற்றிற்கு இடங்கொடுக்க வேண்டும்; அவற்றில் பெரும் பணம் ஈட்டலாம் என்று மத்தி முடிவெடுத்தால் எம்மால் அதை மாற்ற முடியுமா? அவர்கள் கைவசம் இருக்கும் இடங்களை எவ்வாறு அவர்கள் நிர்வகிக்கின்றார்கள் என்பதை நாம் அறியக்கூட முடியாததை தற்போது இராணுவத்தினர் கைவசம் இருக்கும் இடங்களை வைத்தே புரிந்து கொள்ளலாம். அவர்கள் என்ன செய்கின்றார்கள், ஏன் செய்கின்றார்கள், எப்படிச் செய்கின்றார்கள் என்ற எந்த விபரங்களும் எமக்குத் தெரியாதிருக்கின்றது. ஆகவேதான் நாங்கள் தாயகம், சுய நிர்ணயம், வடகிழக்கு இணைப்பு, சமஷ;டி போன்றவற்றை வலியுறுத்தி வருகின்றோம். மத்தி எமக்காகச் சிந்திக்கச் செயற்பட எத்தனித்தால் எமது தனித்துவம் பறிபோய்விடும். அத்துடன் எமது விழுமியங்கள் விலைபோய் விடுவன.

சமஷ;டி என்று கூறி ஒற்றையாட்சியை நிறுவுவதும் சுய நிர்ணயம் என்று கூறி மத்தியின் அதிகாரங்களைப் பலப்படுத்துவதும் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. வட கிழக்கை வலிந்து அங்கு வாழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதையும், வட கிழக்கில் அரச குடியேற்றங்களைப் பெருமளவில் முடுக்கி விடுவதையுங் கண்டு அதை எம்மால் பொறுத்துக் கொண்டு இருக்க முடியாது.

சிங்கள மக்கட் தலைவர்கள் பிழையான நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். இது சிங்கள நாடு, தமிழர்கள் வந்தேறு குடிகள் என்று கூறுகின்றார்கள். அண்மைத் தொல்லியல்க் கண்டுபிடிப்புக்கள் அக்கருத்தைப் பிழைபடுத்தியுள்ளன. இவற்றைச் சிங்கள மக்கட் தலைவர்களுக்கு எடுத்துக்கூற எமது தலைவர்கள் முன்வர வேண்டும். எவ்வாறு ஒரு நோயைக் குணமாக்க நோயாளியின் வரலாறு முக்கியமோ எமது இனப்பிரச்சனையைத் தீர்க்கவும் எமது சரித்திரம் அவசியம். எமது அரசியல் நோயை முழுமையாகச் சுகப்படுத்த முழு வரலாற்று விபரங்களும்,  DNAபரிசீலனைகளின் விபரங்களும் பெறப்பட வேண்டும். நாட்டின் சரித்திரத்தின் முழு விபரங்களும் வெளிவந்தால் சிங்கள மக்கட் தலைவர்களின் சிந்தனையில் மாற்றம் பிறக்கும் என்று நான் நம்புகின்றேன். எனது நம்பிக்கை வீண்போகாது. நான் தமிழ்த் தலைமைகளுக்கு எதிரானவன் அல்ல. ஆனால் எமது தமிழ் மக்களுக்கு உறவானவன். அதனால்த்தான் உங்களுக்கு நான் முரண்பாடுள்ளவனாகப் புலப்படுகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE