முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்…

283

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைக்குப் பின் முஸ்லீம் இனத்தின்மீதான இலங்கை அரசின் கொலைகள்-வன்முறைகள் சொல்வது என்ன?(1)அப்பாவி மக்களைப் பலியெடுக்கும் இனப்படுகொலை அரசிலானது இன்றைய இலங்கையை பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய வகைத் தாக்குதலுக்குள் தள்ளியுள்ளது.கடந்த மூன்று தசாப்தமாக நடைபெற்ற ஈழத்துக்கான போரின் எதிர்விளைவுகளாக இதை எடுப்பதற்கில்லை.இலங்கையின் மிக அண்மைய அரசியல் நகர்வும் அதுசார்ந்த பௌத மதவாதச் சாயம் பூசிய இனவாதத்தாக்குதல் போக்குகளும்,இலங்கைச் சிறுபான்மை இனங்களை ஒட்டயொடுக்கி காலப்போக்கில் அவர்களை எந்தவுரிமையுமற்ற வந்தேறுகுடிகளாக்கும் பாரிய திட்டத்தைக் கொண்டிருக்கிறது.

இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து சிங்கள மக்களைத் திசை திருப்பி மகிந்த அரசைக் காப்பதற்கெடுக்கும் முயற்சிக்குப் புலிகளில்லாத இலங்கையில் „பௌத -இஸ்லாம்“மதப் பிரச்சனையொன்று திட்டமிடப்பட்டு இயக்கப்படுகிறது.

இதற்கான ஒத்திகைகளைப் புலத்துத் தமிழர்களுக்குள் இயங்கும் தலித்துவ மற்றும் பிரதேசவாதக் குழுக்களைவைத்து இயக்கிய மகிந்தா அரசு, இதை மிக நேர்த்தியாக இயக்கும் பண்பை இவர்களது ஒத்துழைப்புகளோடுதாம் மீளவும், இயக்குகிறது. இதற்காவேதாம் சிங்கள பௌத அடிப்படைவாதச் சக்திகளையெல்லாம் தலித்துவக் குழுக்கள் சந்தித்து, பகிரங்கமாக ஒப்புதலளித்தும் இருந்தனர்.

இன்று நாட்டில் பேயாட்டம் போடும் ஞானசார தேரோவுடன் 
இதன்பின் தலித்துவக் குழுவின் தலைவர் தேவதாசன்குழுவும்  மற்றும் பிரதேசவாதப் பிளவு வாதிகளான ஞானம் குழுவும்இணைந்த „நாம் அனைவரும் இலங்கையர்கள்“ தமிழ்த் தேசிய வாதத்தை நிராகரித்து இலங்கையை முன்னேற்ற வேண்டுமெனப் பகிரங்கமாகப் பேசவும் முற்பட்டனர்.சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் முள்ளிவாய்கால் இனப்படுகொலையைக் குறுக்கி „பாசிசப் புலிகளை“அழித்த மகிந்தாவுக்கு நன்றியும் தொடர்ந்து தெரிவித்தனர்.

இதை யாழ்பாணம்வரை சென்று, டான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் -பிரச்சாரமும் செய்தனர்.இவர்களுக்கிணைவாகப் பிழைப்புவாதி குகதாசனின் தொலைக்காட்சியும் இலங்கையில் சமாதனம் தோன்றி, ஜனநாயகம் மலர்ந்துவிட்டதாகவும் பரப்புரையைத் தொடர்ந்து  செய்து மகிந்தாவின் பாசிச அரசைக் காத்துவந்தனர்.

இன்றிந்த முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலைகளைப் பார்த்து இப்படித்தான் கருத்தாடத் தோன்றினுங்கூட இத்தகைய தாக்குதல்களின் பின்னே ஒளிந்திருக்கும் அன்னிய நலன்களும் அவை சார்ந்த அரசியல் சாணாக்கியமும் அப்பாவிகளைத் தமிழரின்- முஸ்லீம்களின் மற்றும் பௌத்த சிங்களவரின் பேரால் அழித்து வருகிறது.இதற்குடந்தையாக விடுதலைவேண்டிப் போராடப் புறப்பட்ட முன்னாள் தமிழ் இயக்கங்கள் அனைத்துமே இருக்கின்றன. ஒவ்வொரு இயக்கங்களும்-குழுக்களும்,கட்சிகளும் தத்தமது இயக்க-கட்சி நலன்களின் அரசியலை அப்பாவி மக்களின் மீது பலிகளைச் செய்து, தமது எஜமான வேண்டுதலை நிறைவேற்றும்போது சாவதென்னவோ ஏழையெளிய மக்களே.அந்த மக்கள் தமிழைப் பேசினால் என்ன சிங்களத்தைப் பேசினாலென்ன இல்லை, முஸ்லீம் ,பௌத்தர்களாகவிருந்தாலென்ன அனைவரும் மனிதர்கள்தாம்!

சிங்களப் பேரினவாதத்தின் அதீத வெளிப்பாடுகள் மக்களை வகைதொகையின்றி வருத்தியபடி அவர்களின் உயிர்களை இனப்படுகொலையாகப் பறித்துவருவதை எந்த மனிதாபிமானமிக்க நபரும் பார்வையாளராக இருந்து மௌனிக்க முடியாது.

அப்பாவி மக்கள் முள்ளி வாய்க்காலிலோ அல்லது, அழுத்கமவிலோ சரி இனவாத அரசியலுக்குத் தீனீயாக்க முடியுமென்றால் இலங்கையின் இன்றைய அரசியல் சூழலை எந்தத் தேசத்தோடும் ஒப்பிட முடியாதளவு மோசமானவொரு இருண்ட சூழலுக்குள் இருப்பதை நாம் ஊகிக்க முடியும்.உலகம் 21 ஆம் நூற்றாண்டை மனித வேட்டை-நர மாமிசம் புசிக்கும் நூற்றாண்டாகவே பிரகடனப்படுத்தியுள்ளது.இவ் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆவ்கானிஸ்தானை-ஈராக்கை அத்துமீறி அழித்து வரத் தொடங்கிய ஏகாதிபத்திய எரிபொருளுக்கான பெரு வேட்டை, கொத்துக் கொத்தாகச் சிரியாவில் , உக்கிரைனில்மனிதப் பிணங்களை உற்பத்தி பண்ணி வருகிறது.இத்தகையவொரு அரசியலை உலகம் வலிந்துருவாக்கி வைத்தபடி இன்றைய தேசிய இன முரண்பாட்டை அத்தகையவொரு சதிமிகு நலன்களுக்குடந்தையாக்கி எமது மண்ணில் குருதியாற்றைத் தொடர்ந்து ஓட வைத்திருக்கிறது.

இன்று உலகந்தழுவி எப்பகுதியிலும் மனிதர்களைக் கொல்லுதல் மிகச் சாதரணமான விடையமாகப் போயுள்ளது!

பயங்கரவாதத்தின் பெயராலும்,பட்டுணியின் பேராலும் அப்பாவிகளின் உயிரைப் பறித்துவரும் புதிய உலக ஒழுங்கானது இன்றைய குறைவிருத்திச் சமுதாயங்களின்மீது தமது அத்துமீறிய வலுக்கரத்தைப் பதித்து தேசங்களின் இறைமைகளையே நாசமாக்கியுள்ளது.இந்த அரசியல் இலக்குக்கிசைவாகக் காரியமாற்றும் மூன்றாமுலக அரசியல் மற்றும் பெருங்கட்சிகள்கூடவே அவர்களது லொபிக் கூலிக் குழுக்கள் தமது மக்களின் உண்மையான எதிரியாக மாறியுள்ளது.இதுவொரு மிக மோசமான புறச் சூழலை அமைதியாக வாழும் இனங்களுக்கிடையில் தோற்றி வைத்து,அதுசார்ந்து இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளாக வளர்த்துச் சம்பந்தப்பட்ட தேசங்களின் சுய வளர்ச்சியை மெல்லச் சிதைத்து வருகிறது.இத்தகைய தந்திரம் அந்நிய நிதி மூலதனத்துக்கு அவசியமானது.

இதன் தொடர்ச்சியான விளைவுகள்,போர்,பொருளாதார அழிவுகள்,நோய்,நொடி,பட்டுணிச் சாவாக மக்களை அண்டும்போது தேசத்தின் மிகப் பொதுவான மனிதவளம் நோய்வாய்க்குட்பட்டுத் தேசத்தின் சுய ஆளுமை அழிந்து தேசம் அன்னியத் தயவில் சுயசார்பிழந்து தங்கி வாழும் இனத்தை உற்பத்தி பண்ணுகிறது.இங்கே, தொடர்ச்சியான யுத்தத்துள் இருத்தி வைப்பதற்காகவும் தமது பழைய-கழிவு ஆயுதங்களை விற்றுக் காசாக்கவுமாக மூன்றாம் உலகத்தில் செயற்கையான முரண்பாடுகளையும் அதுசார்ந்த யுத்தத்தையும் ஏகாதிபத்தியக் கம்பனிகள் தொடக்கி வைத்திருக்கின்றன.இன்றைய நிலவரப்படி ஜேர்மனிய அரசு காட்டுமிராண்டி அரசான அல்ஜீரியாவுக்கு 980 டாங்கிளை 1600 கோடிகள் டொலருக்கு விற்பனை செய்கிறதென்றால் இதன் நோக்கம் என்னவாக இருக்கும்?

இதன் தொடர்ச்சியில் மையங்கொள்ளும் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் இராணுவக் கேந்திர அரசியலானது என்றைக்கும் மூன்றாமுலகத்தில் அமைதியும் சமாதானம் மலர விருப்பமுற்றே இருக்கிறது.இது, தான் உற்பத்தி செய்வதற்கானவொரு இனமாகத் தமது தேசத்தைக் கட்டி வளர்த்தபடி மற்றைய கீழத்தேய வலயத்தை மூலதனத்தைச் சுரண்டும் வலயங்களாகவே இருத்தி வைத்திருக்கிறது.இத்தகைய அரசியலைப் புரிந்து கொள்ள ஆபிரிக்கக்கண்டக் கொங்கோ தேசமே நல்ல உதாரணமாக இருக்கிறது. இன்று -இப்போது இலங்கையே நல்ல உதாரணமாகும்!

இத்தகையவொரு இருண்ட பொருளாதார நலன்சார்ந்த இனவழிப்பு -வன்முறைகள்நமது தேசத்தில் அப்பாவிக் குழந்தைகளை இனப்படுகொலையாகக் கொன்று குவிப்பதற்குச் சிங்கள-தமிழ்-முஸ்லீம் இனங்களின் நலன்களின் வாயிலாக எழும் முரண்பாடாக எவரும் பார்ப்பாராகின், எமது இத்தகைய அழிவுகளைத் தடுத்து நிறுத்தவே முடியாது.இது இன்னும் பலிக்குப்பலி அரசியல் வடிவத்தை எட்டி, எமது மண்ணில் என்றைக்குமே அமைதியற்றவொரு சூழலை நிரந்தரமாக்கித் தேசத்தை இராணுவச் சர்வதிகாரத்தின் கீழ் கட்டிப்போடும் அபாயம் நெருங்கி வருகிறது.இதிலிருந்து மீள்வதும், இனங்களுக்கிடையாலான முரண்பாடுகளின் மீது இலகுவாக ஆதிக்கஞ் செய்யும் அன்னிய நலன்களை வெற்றிகொண்டபடி இலங்கையில் பல்லினங்களும் பரஸ்பர நட்புறவோடு வாழ்வை முன்னெடுப்பது அவசியமானவொரு அதி மானுடத் தேவையாகவே இன்றிருக்கிறது.இதையொட்டிச் சிந்தித்ததாகச் சொல்லும் புலம் பெயர் „மாற்றுக் குழுக்கள்“எனும் போர்வைக்குள் ஒடுக்குமுறையாளர்களோடு  கைகோர்த்த தலித்துவ-பிரதேசவாதப் பிளவுவாதிகள் செய்த சதி அரசியலை எங்ஙனம் புரிந்துகொள்வது நண்பர்களே?

இனப்படு கொலை அரசியலானது அப்பாவி மக்கள்மீது பயங்கரத்தனமான தாக்குதல்களைத் தொடுத்து அவர்களது கனவைச் சிதைப்பதை நாம் தொடர்ந்து“அடிக்கு அடி-இனப் படுகொலைக்குக் கொலை“எனும்படி அனுமதிப்போமானால் இலங்கையில் எந்தவொரு இனமும் தனது நிம்மதியை-நிலைத்த வாழ்வைத் தக்கவைக்க முடியாது!இது எமது தேசத்தைக் குட்டிச் சுவாராக்க எண்ணும் அன்னிய ஆளும் வர்க்கங்களுக்கும் இலங்கையின் தரகு ஆளும் கும்பலுக்குமான வேட்டைக் காடாகவும் அவர்களின் குடும்ப நலன்களுக்கான கொலைகளுமாகப் படுகொலைகள் பரந்த அரசியல் பழிவாங்கலாக நம்மைப் பூண்டோடு அழிப்பதாக முன் நகரும்.இத்தகைய அரசியல் செல்நெறி ஒருபோதும் முஸ்லீம்களுக்கோ அல்லது ,தமிழருக்கான-இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான விடுதலையைத் தரப்போவதில்லை. மாறாக, நமக்கு இன்னும் பல தசாப்த காலத்துக்கு இதே அழிவு வாழ்வைத் தந்து நமது வரலாறே சுடுகாடாகும்!

இதை தடுப்பதற்கான ஒரு அரசியல், இலங்கையின் இனங்களுக்கிடையலான முரண்பாட்டை முடிவுக்குக்கொணரும் இன விடுதலைசார்ந்த சுய நிர்ணயத்தை அங்கீகரிப்பதும், சுய ஆட்சியுடைய வலயங்களை உருவாக்குவதுமே இன்றைய மூன்றாமுலகத்தின் முன் இருக்கும் அரசியல் பணி.இதைச் செய்து முடிக்கும் தகமை இனங்களுக்கிடையலான ஒற்றைமையின் இருப்பிலே சாத்தியமாகும்.இந்த ஒற்றுமையைக் குலைப்பதே அன்னிய நலன்களின் பெருவிருப்பு.நாம் இதை வெற்றிகொள்வது அவசியம்.அங்ஙனம் வெற்றி கொள்ளாதவரை முள்ளிவாய்க்காலுக்குப்பின் அழுத்கமவிலும் பின் யாழ்ப்பாணத்துக்கும் ,மட்டககளப்புவுக்குமென மதவாத வன்முறையாகவும்-இன வன்முறைகளாகவும் சுழன்றடிக்கும் இலங்கைப் பாசிச அரசின் இனவழிப்பு அரசியலாகும்.இதன்வழி மகிந்தாவின் அந்நியச் சேவை அரசு தன்னைத் தற்காத்துக்கொள்ளும்.இதற்காவேதாம் இந்தப் புலத்து லொபிக்குழுக்கள் யாவும் தமது பிழைப்புக்காக இலங்கை மக்களைச் சாதிரீதியாக-பிரதேசரீதியாக மற்றும் மதவாத ரீதியாவும் பிளந்து குருதி குடிக்கின்றனர்.இந்தப் பயங்கரவாதிகளை வெல்வதும் இவர்களை ஜனநாயகரீதியாகத் தோற்கடிப்பதும் புரட்சிகரமான அரசியலுக்குட்பட்டதே.இதையொட்டி உதிரிகளான நாம் என்ன செய்யப் போகின்றோம்?-இது கேள்வி…

( 2)

முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள…

இலங்கையில் முசுலீம் இனத்தின்மீது அரசியல் வன்முறையை ஏவி விட்டுள்ள  மகிந்தா தலைமையிலான இனவாத அரசானது „தற்செயலான வன்முறைக்கு“ப் பாத்திரமற்றது என்றொரு கருத்தைப் பலர் உரையாடுகிறார்கள்.அவர்களுள் முசுலீம் அரசியற்றலைமைகள் கூட இங்ஙனம் உரையாடுவதில் தமது பதவிகளை -அமைச்சகப் பொறுப்புக்களைக் காக்கவும் முனைகின்றனர்.இந்த சிக்கலான காலத்திற்கூட இலங்கையில் ஒடுக்குமுறைக்குட்பட்ட – உட்படும் சிறுபான்மை மக்களினங்களானவை தமக்குள் இணக்கமானவொரு அரசியலைக் கொண்டியங்க முடியாத  தடைகளாக இருப்பவைகள் என்ன?

தமிழ்பேசும் மக்களது ஒரு பிரிவான மலையக மக்கள், மலையகத்தில் ஒட்டச் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதில்  பொது பல சேனாவின் முகத்தோடு அந்த மக்களையும் வேட்டையாடப்போகும் மகிந்தா அரசின் தொழிலாளர்களுக்கெதிரான அசியற்போக்ககளின் விருத்தியே இத்தகைய வன்முறையாகவெழுகின்றது.இதன் மிக நுணுக்கமான செல்நெறியானது மக்களினங்களைப் பல வடிவினில் அரசு சாரத முறைமைகளில் ஒடுக்குவதும் ,அதன்வழி தத்தமது எசமானர்களான அந்நிய முதலீட்டார்களின் நலன்களை இலங்கையில் அடைவதற்கான அனைத்து வழிகளையும் திறந்துவிடுவதாகவே இன்றைய மகிந்தா தலைமையிலான இலங்கை அரசின்  பண்பாக -நிலைப்பாடாகவிருக்கிறது!

இன்று முசிலீம் மக்கள்மீது இலங்கை அரசால் ஏவப்படும் சிங்கள உதிரிவர்க்கமானது தனக்கான நலன்களைப் பேணத்தக்க முறைமைகளில் முசீலீம் சிறு வர்த்தகர்களைத் தாக்கியழிப்பதில் குறியாவிருக்கிறது.மதரீதியாக -மொழிரீதியாகப் பிளவுண்ட சிறு வர்த்தக நலன்களானது இக் குழுமங்களுக்குள் மிகவும் போட்டியானவொரு சூழலைக் கடந்த 20 ஆண்டுகளாகச் செயற்கையாகவே உருவாக்கியது.இதன் பலாபலன்களானது ஊட்டி வளர்க்கப்படும் இன -மத வாதச் சூழலைத் தகமைத்து மக்களினங்களைப் பிளந்து  அரசுக்கெதிரான அணித் திரள்வை உடைத்தெறிவதே இலங்கை -சீன அரசுகளது தந்திரமாவிருக்கிறது.

இலங்கையில் நடாத்தப்படவிருந்த இரூனேசியப் பாணி“மக்கள் எழிச்சி“ ஒட்போரது[Otpor!] தலைமையின் தூண்டலோடு சம்பந்தப்பட்டதெனினும் அஃது மேற்குலகின் வியூகம் -ஒத்துழைப்போடு சம்பந்தப்பட்டதென்பதையும் கூடவே , இலங்கையில் கம்யூனிச-வர்க்கவுணர்வு அதிகமாகப் போர்க் குணமிக்க பாட்டாளிகளைக்கொண்டிருப்பதென்பதும் உலகம் அறிந்ததுதாம்.இதன் திசையில் கட்டப்படும் வியூகங்களை ஒடுக்குமுறைக்குட்படும் எந்தச் சிறுபான்மையினங்களும் சரியப்புரிந்து முன்னெடுக்கும் அரசியல் வெற்றிடமாகவே உள்ளது.

இந்நிலையை மீள மறுத்தொதுக்கும் தமிழ் „மார்க்சிய“ நண்பர்கள் சிலர் கீழ்வரும்படி எதிர்வு கூறுகிறார்கள்:“இலங்கையின் புரட்சிக்கான சூழலுக்கு, ஆசிய மூலதனத்தின் வரவோடு புதிய பாட்டாளிய வர்க்கத்தை அது தோற்றுவிக்கும் என்றும், உற்பத்திச் சக்திகளை(தொழில்மயப்படுத்தும் உற்பத்தி ஜந்திரங்கள்) உருவாக்கி அதுசார்ந்த உறவுகளை வலுப்படுத்தும்.இதனால் தொழிற்சங்கம்வரும்,பாட்டாளிகள் தமக்குள் இனங்கடந்து ஒன்றுபடுவார்கள்-இனவாதம் செயலிழக்கும்,இனங்கலந்து தொழில் ஈடுபடும்போது அங்கே இனவொற்றுமை வலுக்கும்,இது புரட்சிகரமான சூழலைத் தகவமைக்கும்.“ என்று பகற் கனவுகாணும் நண்பர்கள்,அதன் பாதகமான பக்கங்களை மறுப்பது ஒருவகையில் ஏகாதிபத்தியங்களிடம் சரணடையும் அரசியலாகவே இருக்கும்.இதைக் கவனப்படுத்தும்போது,நிலைமை கட்டுக்கடங்காத திசை நோக்கிச் செல்வதை இனங்காண முடியும்.இதைச் சற்றுப் புரிய முனைவோம்.

1):முள்ளிவாய்காலிற் புலிகளை முற்று முழுதாக அழித்தபின் இலங்கையினது அரசியல் நகர்வானது ஆசிய மூலதனத்தைச் சுற்றியருப்பினும் அது சிங்கள மையவாதத்தில் மூழ்கியே கிடக்கிறது.அந்நியப் பெருவர்த்தகங்கள் இலங்கையை நோக்கிப்படையெடுப்பதாகவிருந்தாலும் அங்கே  அரசுக்கும் , பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாகவே இருக்கிறது.இது இலங்கை தழுவிய புரட்சிக்கான விசும்பு நிலையை அடைவதற்குத் தடையாகத் தமிழ்த் தேசிய இனத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு வடிவங்களில் அணுகப்படுகிறது.இஃது,அந்நிய மூலதனத்துக்கிசைவான இலங்கையின் முன் நகர்வுகளில் ஒன்றானதே.இலங்கை -அந்நிய அரசுகளது இன்றைய இலங்கை மீதான பொருளாதார நகர்வுகள் இலங்கையின் வளங்களை ஒட்டச் சுரண்டுவதிலும் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடல் வலயத்தை வார்த்தக -அரசியல் தேவைக்குட்பக்  கையக்படுத்தும்போது வரும் மக்களது கூட்டுத் தாக்குதலைக்கொண்ட உணர்வெழுச்சி வெடித்துக் கிளம்பாதிருக்கச் செயற்கையாக இனக் குரோதத்தைத் திட்டமிட்டு வளர்க்கிறார்கள் .இலங்கையை மாறி மாறி ஆளும் கட்சிகளானவை இன்றைய தெரிவில் வன்முறையான சகல வடிவங்களையும் தமக்குள் உள்வாங்கிச் செயற்படுத்துகின்றனர்.

2):புலிகளென்பவர்கள் இன்று அழிக்கப்பட்டபின், ஒவ்வொரு களமுனையிலும் சாகடிக்கப்பட்ட எமது மக்களது குழந்தைகளின் அளப்பெரிய உயிர் பிழையான முறையில் அந்நிய நலன்களுக்காகப் பலியெடுக்கப்பட்டதாகவே போய்விட்டது.இத்தகைய நிலைமைகளில், புலிகளின் படுபாதகமான அரசியல் கபடத்தனமே நம் மக்கள் மத்தியில் அம்பலமாகியது.எனினும், புலிகளால் ஏமாற்றப்பட்ட தமிழ்பேசும் மக்களினது உரிமைகளை இந்த இலங்கையை ஆளும் எந்தக் கட்சிகளும் மதித்து,அவர்களது வாழ்வைச் செப்பனிட இனிமேல் முனைவதற்கில்லை.இதனால் இனங்களுக்கிடையில் தொடர்ந்து அவநம்பிக்கை வளர்க்கப்படுகிறது.

3):இலங்கையின் இன்றைய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் ஆசிய-மேற்குலக ஏகாதிபத்தியங்களின் மிக மட்டரமான அணுகுமுறையானது இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து இனவொதுக்குதலுக்குள் முடக்கியபடி, இலங்கையின் ஜனநாயகச் சூழலை இல்லாதாக்குவது.அதன்பின், இராணுவ வகைப்பட்ட ஆட்சியலகை நிலைப்படுத்துவது.இதற்குச் சிலியினது பினேசேவ் ஆட்சியை உதாரணமாக எடுக்கலாம்(இது அமெரிக்கப் புதியலிபரல்களின் பொருளாதாரவாதியான மில்டன் பிறீட்மான் திசைவழிப்பட்டது.)

4):இதன் தொடராக வந்தடையும் இலங்கையின் அரசியலில்,இலங்கை மக்களினது எந்தவுரிமையும்(போராட்டம்,தொழிற்சங்கவுரிமை,வேலைநிறுத்தம்,சுதந்திரமான கருத்துப்பரிமாற்றம் இன்னபிற)தேசவிரோதம்-அரசுக்கு விரோதமெனும் போக்கில் நசுக்குவதற்கானவொரு இராணுவச் சர்வதிகாரமே இலங்கைக்கு இனிமேல் வாய்க்கப்பெறும்படியாக இந்த அந்நிய ஆர்வங்கள் விதிக்கின்றவொரு சூழலை எட்டுவதே அவர்களின் நோக்கு(பத்திரிகையாளர் திரு.திஸ்சநாயகத்துக்கு விதிக்கப்பட்ட இருபதுவருடச் சிறைத் தண்டனை இதை மேலும் உறுதிப்படுத்தும்).

5):இலங்கையை ஆளும் கட்சிகளும்,போராடும் சிறுபான்மை இனங்களின் அமைப்புகளும் வர்க்க அரசியலுக்குள் தாம் சார்ந்த உடமை வர்க்கத்துக்கு-எஜமானர்களுக்கு ஏற்ற வகைகளிலேயே வளர்தெடுக்கப்பட்டு,இன்றுவரை உயிர்த்திருக்கும்படி விடப்பட்டிருக்கிறார்கள்.

6):இன்றைய பின்போராட்டச் சூழலில்-போராட்டத் தோல்விக்குப்பின் இவைகளைக் கடந்து, நமது மக்கள் இலங்கையின் பெரும்பாண்மைச் சிங்களத் தொழிலாள வர்க்கத்தோடு தோள் சேர்ந்து-தமக்கு நேர்ந்த கொடுமைகளுக்கெதிராக-அவர்களது பலத்தோடு போராடுவதைத் தவிர வேறு வழி இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கில்லை என்றாகிறது இன்றைய சூழல்.என்றபோதும், இத்தகைய ஒருமைப்பாட்டை எட்டுவதற்கான பல தடைகளை இலங்கையின் கட்சி அரசியலுக்குள் நாம் இனங்காணமுடியயும்.இனஞ்சார்ந்த குறுகிய கதையாடல்களை வளர்த்துச் சதி அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளுக்கு அந்நியச் சக்திகளது நிதி ஆதாரமாக இருக்கிறது.இதன் உண்மையில் திட்டமிடப்பட்ட உலக வல்லரசுகளது இலங்கைமீதான ஆதிக்கம்-அரசியல் இலாபங்கள் குவிந்திருக்கிறது.இவற்றைத் தகர்ப்பதற்கான இலங்கையின் முழுமொத்த மக்களது எதிர்ப்புப் போராட்டம் இன்னமும் மையங்கொள்ளாது இனவாதத் தீயில் மூழ்கிக்கிடப்பதற்காக ஒவ்வொரு பொழுதிலும் ஏதோவொரு வகையில் படுகொலைகள் நடந்தேறுகிறது.அல்லது, குறைந்தபட்சமாவது இனவாத அவநம்பிக்கைப் பிரகடனங்கள் முன்னுக்குத் தள்ளப்படுகிறது.

7) : இப்போது முசுலீம் -சிங்கள இனங்களுக்கிடையில் வளர்க்கப்படும் குரோதமானது திட்டமிட்ட அந்நியச்சதி என்கிறோம். இதிலிருந்து வளர்க்கப்படும் பொதுபல சேன என்ற இனவாத அமைப்பானது இலங்கைக்குள் நிகழ்த்தப்படவிருக்கும் பல்வேறு சமூக அமுக்க வினைகளுக்கானவொரு ஆரம்பம்.இத்தகைய அரசியல் வாழ்வை எதிர்கொள்ளும் இலங்கை மக்கள் மத்தியில் கட்டிவளர்க்கப்படவேண்டிய „இனங்களுக்கிடையிலான ஐக்கியம்“ இன்று அதே சக்திகளலேயேதாம் பேசவும் படுகிறது.இவற்றை எதிர்கொண்டு இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைப் பேணும் அரசாக மகிந்தாவின் அரசை எண்ணமுடியாது.அவ்வரசு முசுலீம் மக்களை மட்டுமல்ல இலங்கையின் அனைத்து இனங்களையும் அழித்துக் கரைத்துச் சிங்கள „நாம் அனைவரும் இலங்கையர்“ என்று கதையைத் தொடர்கிறது.இந்தத் திசையில் முசுலீம் மக்கள் மத்தியில் தொடரப்படும் இன்றைய இனவாதத் தாக்குதல்களுக்கும், சீன முசுலீம் முரண்பாட்டிற்கும் பல்வேறு வகையான தொடர்புகள் உண்டு. சீனாவில் முசுலீம் மக்களுக்கும் சீன அரசுக்குமிடையிலான முரண்பாட்டின் விளைவுகளை [Shaanxi (province, China)Holy War in China ]-வெளிகளை [History of Muslims in Northwest China ]ஆயும் ஒரு முன்னோட்டமாகச் சீன அரசும் இதை வளர்த்து இயக்கிப் பார்த்துக்கொள்கிறது.தற்போது இலங்கையானது சீனாவின் மட்டுமல்ல பல அந்நியச் சக்திகளது பரீட்சார்த்தக்களமாகவே இருக்கிறது.சீனாவின் சமீபத்து (2009 )முரண்பாட்டில் (ethnic tensions between Uighurs and Han Chinese )பலர் கொல்லப்பட்டார்கள்.பண்டுதொட்டுச் சீனாவின் இந்த முரண்பாடுகள் இன்னும் நீறுபூத்த நெருப்பாகவே இருப்பதால் இதை அணுகும் பல பொறிமுறைகளை நோக்கிச் சீனா நகர்கிறது[ Read more … : Studies in Islamic History and Civilization: In Honour of Professor David Ayalon ]

எனவே, இந்நிலையில் முசிலீம் மக்கள் மீதான வன்முறையைப் புரிந்துகொள்ள முனையுந் தருணத்திற்கூட முசிலீம் இனமானதோ அதைக் குறித்துப் பேசுவதைவிட்டுப் பண்ட்டுதொட்டுச்  சிங்கள இனவாத அரசுகளால் ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் பரந்துபட்ட  தமிழ்மக்களைக் குற்றக்கூண்டில் ஏற்றுவதிலேயேதாம் முழுமூச்சாகவிருக்கிறது.இதைக் கடக்கும் அரசியலைத் தமிழ்ச் சூழலை அண்மித்த அரசியற் குழுக்கள் தற்போது முன்வைத்தாகவேண்டும்.

SHARE