இலங்கை அரசின் துரோக வரலாறும் நல்லாட்சி அரசாங்கத்தின் குள்ளநரித் துரோகங்களும்

754

இலங்கையில் பூர்வகுடிகளான தமிழர்கள் மீது கி.மு மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே பண்பாட்டுப் படையெடுப்புகளும், அரசியல் படையெடுப்புகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்துள்ளன. சிங்களர் என்ற இனம் தோன்றிய காலத்திலிருந்தே, ஈழப்பகுதியில் பார்ப்பனர்களின் மதம் மற்றும் பார்ப்பனர்களின் வேத மத அடிப்படையிலான பண்பாட்டுப் படையெடுப்புகள் நடந்துள்ளன. நாம் இந்தக் கட்டுரை விவாதிக்க இருப்பது அரசியல் படையெடுப்புகள், சிங்களர் – தமிழர் இனப்போராட்டம் மற்றும் மதப்போராட்டம் பற்றியவை மட்டுமே. பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புப் பற்றி பிறகு விவாதிக்கலாம்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாறு பற்றி நாம் பேசும் போதும், எழுதும் போதும் கி.பி.1956 ல் W.S.R.D.னு.பண்டாரநாயகாவின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘தனிச்சிங்களச் சட்டத்தி’ லிருந்துதான் தொடங்குகிறோம்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இலங்கையில் கொண்டுவரப்பட்ட, 1931 முதல் 1947 வரை நடைமுறையில் இருந்த ‘டொனமூர் ஆணைக்குழு’வின் புதிய அரசியலமைப்புச் சட்டம், இந்த அரசியலமைப்பையும் திருத்தி வெளியான சோல்பரி அரசியலமைப்புச்சட்டம் ஆகிய ஆங்கிலேய அரசியல் அமைப்புச்சட்டங்களே தமிழர் – சிங்களர் இனப்பகையை உருவாக்கி வளர்த்தன என்று சில அமைப்புகள் பதிவுசெய்கின்றன.

நாம் தமிழர் கட்சி இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போனது.  இலங்கையில் இருந்த பல்வேறு அரசுகளில் ஒன்றான கண்டி அரசை 1739 – 1815 வரை ஆண்ட தமிழ்நாட்டு மன்னர்களே தமிழர் – சிங்களர் இன மோதலைத் தொடங்கி வைத்தனர் என நம்பவைக்க முயற்சி எடுத்துள்ளது.

சிங்கள ஆதிக்கத்துக்கு ஆதரவு

தமிழ்நாட்டின் ஆதிக்கச்சக்திகள் பார்ப்பனர்கள். அந்த ஆதிக்கநிலையை அடைய அவர்களுக்கு உதவியவை கடவுள், வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள் போன்றவவை. இந்த உண்மைகளை ஒடுக்கப்படும் தமிழ்மக்கள் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக -ஆதிக்கச்சக்திகளான பார்ப்பனர்களைக் காப்பாற்ற – பார்ப்பன எதிர்ப்பைத் திசைதிருப்பத்  திட்டமிட்டு – தெலுங்கர், மலையாளி, கன்னடர் எதிர்ப்புக்கள் உருவாக்கப்பட்டன.

அப்படிப் பார்ப்பன நலன்களுக்காகப் பாடுபடும் முக்கிய அமைப்பு நாம் தமிழர் கட்சி. 2015 வரை தமிழ்நாட்டு அளவில் இயங்கிவந்த இந்த அமைப்பு, 2016 ல் தமது துரோக எல்லையை தமிழீழம் வரை விரிவாக்கியுள்ளது. அக்கட்சியின் துணை அமைப்பான ‘வீரத்தமிழர் முன்னணி’ அண்மையில் வெளியிட்டுள்ள கண்டி நாயக்கர் ஆவணப்படத்தில்,

சிங்களர்களின் போர்வையில் காட்டுமிராண்டித் தெலுங்கர்கள் இருப்பதால்தமிழர்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவது பவுத்த வெறிபிடித்த சிங்களர்கள் என வெளிஉலகத்தை நம்ப வைத்துள்ளனர்”  – கண்டி நாயக்கர் ஆவணப்படம் நேரம் 0.27.07

அதாவது, இலங்கையில் 18 நூற்றாண்டுகளாகத் தமிழர்களைக் கொன்று அழிப்பவர்கள், பல நூற்றாண்டுகளாகத் தொடர் இனப்படுகொலையை நடத்துபவர்கள் சிங்களர்கள் அல்ல; ஆந்திர தேசத்துத் தெலுங்கர்கள் என்பதைத்தான் நாம் தமிழர் கட்சி வெளிப்படையாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்ல,

இலங்கையில் வாழும் உண்மையான சிங்கள மக்களுக்கு இலங்கையில் பிரதமராகும் வாய்ப்பு ஒருமுறைகூடக் கிடைக்காமல் பார்த்துக் கொண்டனர் சிங்களப் போர்வையில் இருக்கும் தெலுங்கர்கள்.

எனச் சிங்கள இன மக்களின் உரிமைக்காகவும் குரல் எழுப்பியுள்ளனர். இலங்கையை ஒரு பெளத்தவெறி நாடாக மாற்றியுள்ள பொதுபல சேனாக்காரர்களும், முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நடத்திய சிங்கள – இந்திய – பன்னாட்டு அதிகார மய்யங்களும் பொறாமைப் படும் அளவுக்கு – அவர்களுக்கு அவர்களுக்குப் போட்டியாகச் சிங்கள வெறியர்களைக் காப்பாற்றுகிறது இந்த அமைப்பு.

கண்டி அரசு

இலங்கையின் மத்திய மலைப்பகுதியில் இருந்த ‘கோட்டே’ அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து, அதிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி அரசாக உருவானதுதான் ‘கண்டி அரசு’. கி.பி.1469ல் சேனா சம்மத விக்கிரபாகு என்ற சிங்கள மன்னன்தான் இந்தக் கண்டி அரசை உருவாக்கினார். இலங்கையில் இருந்த பல அரசுகளில் ஒன்று கண்டி அரசு. கண்டியை கி.பி.1739 முதல் கி.பி.1815 வரை ஆண்டவர்கள் நாயக்க மன்னர்கள். கண்டி நாயக்க அரசின் கடைசி மன்னர் $ விக்கிரமராஜ சிங்கன் ஆவார். 1815 ல் கண்டி அரசு ஆங்கிலேயப் படையெடுப்பில் சிக்கியது. கண்டி அரசர் சிறை பிடிக்கப்பட்டு, 1832ல் தமிழ்நாட்டில் வேலூரில் மறைந்தார்.

vikrama raja singam

இது உண்மை வரலாறு தான். இந்த உண்மையோடு ஒரு வரலாற்றுப் பொய்யை இணைத்தனர் நாம் தமிழர் கட்சியினர். அதாவது, 1739 – 1815 வரையான 76 ஆண்டுகளில் கண்டியை ஆண்ட நாயக்கர்களின் வாரிசுதான் 1947 ல் இலங்கையின் முதல் பிரதமர் டான் ஸ்டீபன் சேனாநாயகா. நாயக்கர்களின் வாரிசுகள் தான் இன்று வரை இலங்கையை ஆண்டு வருகின்றனர். இலங்கையின் பிரதமர்கள், அதிபர்கள் அனைவரும் சிங்களர்கள் அல்ல; தெலுங்கர்கள். இதுதான் அவர்களின் வாதம்.

வெறும் 76 ஆண்டுகள் இலங்கையின் ஒரு சிறு பகுதியான – ஒரு குறுநில அரசில் வாழ்ந்த நாயக்கர்கள் – ஏற்கனவே அங்கு வாழ்ந்த சிங்களர்களின் மொழியைப்பேசி, பெளத்தமதத்தில் நுழைந்து அதன்வழியே இன்றுவரை அரசுகளையும் கைப்பற்றினர் என்கின்றனர்.

அடிப்படையாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறு,‘சிங்களர்’ என்ற இனம் எப்படித் தோன்றியது? அதையும் கண்டி நாயக்கர் ஆவணப்படத்திலேயே மகாவம்சத்தைச் சான்றாக வைத்துக் கூறுகிறார்கள்.

தமிழ்ச்சிங்களர்கள்

வடஇந்திய, கலிங்கப் பகுதியிலிருந்து வந்தவர்களும், பாண்டியர்களும் இணைந்ததால் – கலந்ததால் உருவானவர்களே ‘சிங்களர்’ என்ற இனம்.  கலிங்கர்களும், தமிழர்களும் இணைந்து தான் சிங்கள இனம் உண்டானது என்பதற்குச் சான்றாக மயிலை. சீனி.வேங்கடசாமி அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.

“கி.மு. 5ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த விசயனும் அவனுடைய எழுநூறு தோழர்களும் தமிழகத்திலிருந்து பாண்டிய நாட்டு மகளிரை மணஞ்செய்து கொண்டதை முன்னமே அறிந்தோம். பாண்டி நாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற எழுநூறு மணமகளிரோடு அவர்களைச் சேர்ந்த பரிவாரங்களும், பதினெட்டு வகையான தமிழத் தொழிலாளர் குடும்பங்கள்ஆயிரமும் இலங்கைக்குப் போனார்கள் என்பதையும் அறிந்தோம். அவர்கள் எல்லோரும் தமிழ்மொழி பேசியவர்கள். அதனால், காலப்போக்கில் தமிழ்மொழியும் வட இந்திய மொழியும் சேர்ந்து புதுவைகையான பழைய சிங்கள மொழி (ஈளுமொழி) தோன்றிற்று.

இந்தக் கலப்புத் திருமணத்தின் காரணமாகத் தோன்றிய சந்ததியார் சிங்களவர் அல்லது ஈழவர் என்று பெயர் பெற்றனர். தமிழ் – சிங்கள உறவு அந்தப் பழங்காலத்தோடு நின்றுவிடவில்லை. இடையிடையே அவ்வக் காலங்களில் தமிழகத்திலிருந்து சில தலைவர்கள் தமிழ்ச்சேனையை அழைத்துக்கொண்டுபோய் இலங்கையாட்சியைக் கைப்பற்றிச் சில பல காலம் அரசாண்டதையும் வரலாற்றில் கண்டோம். அந்தத் தமிழர் ஆட்சிக் காலத்தில் தமிழக வீரர்களும் தமிழகக் குடும்பங்களும் இலங்கையில் தங்கி வாழ்ந்தனர். அவர்களில் சிலர் சிங்களவர்களாக மாறியிருக்கக்கூடும். (1)

தமிழர் – சிங்களர் பண்பாட்டு ஒற்றுமை

இரண்டு இனங்களும் கலந்து உருவானதே சிங்களர் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பண்பாட்டு அளவிலும் தமிழர் – சிங்களர் இரு இனங்களுக்கும் இடையேயுள்ள பொதுவான கூறுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி சி.க.சிற்றம்பலம் ‘ஈழத்தமிழர் வரலாறு – கி.பி 1000 வரை’ என்ற வரலாற்று ஆய்வு

“தமிழ், சிங்கள மொழிகளுக்கிடையே காணப்பட்ட அடிப்படை ஒற்றுமை – பெளத்த மதத்தோடு வந்த பாலி மொழியின் செல்வாக்கால் சிங்களம் என்ற தனியான ஒரு போக்கில் செல்லுமுன்னர் அது திராவிட மொழிக்குரிய பண்புகளுடன் விளங்கியதை எடுத்துக் காட்டியுள்ளது. அத்துடன் சிங்கள -தமிழ்ச்சமூகங்களிடையே நிலவும் உறவு முறைப் பெயர்கள், பண்பாட்டு அம்சங்கள் ஆகியனவும் இதனை உறுதிப்படுத்துகின்றன. பெளத்தத்தைத் தழுவும் முன்னர் சிங்கள மக்களின் மூதாதையர் இந்துக்களாகவே விளங்கினர். இதனை ஈழத்தின் மிகப்பழைய கல்வெட்டுக்களாகிய பிராமிக் கல்வெட்டுக்களே எடுத்தியம்புகின்றன…” என்று கூறியுள்ளார். (2)

மயிலை வேங்கடசாமி அவர்களும் இந்தப்பண்பாட்டு ஒற்றுமையை விளக்கியுள்ளார்.  அவரது பண்டைத் தமிழக வரலாறு – கொங்குநாடு – பல்லவர் – இலங்கை வரலாறு என்ற நூலில்,

“இலங்கையில் வாழ்கிற தமிழர்களால் முருகனும் திருமாலும் வழிபடப்படுகின்றனர் என்பது மட்டும் அல்ல; தமிழரல்லாத பெளத்தராகிய சிங்கள மக்களாலும் முருகனும் திருமாலும் தொன்று தொட்டு இன்றுகாறும் வழிபடப்படுகின்றனர். முருகன் சிங்களவர்களால் ஸ்கந்தன் என்றும் கந்தன் என்றும் வழிபடப்படுகிறார். திருமால், விஷ்ணு என்றும் மாவிஸ் உன்னானே என்றும் வருணன் (உபுல்வன்) என்றும் சிங்களவர்களால் வழிப்படப்படுகிறார்.

ஸ்கந்தனாகிய முருகனை (இலங்கைத் தமிழர் வழிபடுவது மட்டுமல்லாமல்) சிங்களவரும், இலங்கைக் காட்டில் வாழும் வேடர்களும் வழிபடுகின்றனர். ஸ்கந்தனைக் கெலெதெவியோ (கல்தெய்வம், கல்-மலை, தெவியோ – தெய்வம்) என்றும் கலெ இயக்க (கலெ – மலை, இயக்க – சிறுதெய்வம்) என்றும் கூறுகிறார்கள்.”(3)

இன்றும் சிங்களர்களிடையே, சேர, சோழ, பாண்டிய நாட்டு மக்களின் பண்பாடுகள் நிலவுவதை இந்நூல் விரிவாக விளக்கியுள்ளது. கி.மு 5 ஆம் நூற்றாண்டில் விஜயன் வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அப்படியானால் தமிழர் – பாண்டியர்இணைப்பு ஏற்பட்டு, சிங்களர் என்ற இனம் உருவாகி ஏறத்தாழ 2500 ஆண்டுகள் ஆகிவிட்டது. கண்டி நாயக்கர் ஆவணப்படமும் இந்த வரலாறுகளை ஏற்றுக் கொள்கிறது.

வெறும் 76 ஆண்டுகள் நாயக்கர் மன்னர்களில் சிலர் சிங்களர்களோடு கலந்தனர் என்பது போன்ற கற்பனையான கதைகளைக் கொண்டு, சிங்கள இனத்தையே நாயக்கர் ஜாதியாகக் காட்ட முடியுமானால் – 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டுப் பாண்டியர்களால் உருவானதே சிங்கள இனம் என்ற வரலாற்று உண்மைகளை அடிப்படையாக வைத்து ‘பாண்டியர்கள் தான் சிங்களர்கள்’ என்று நம்மாலும் கூறமுடியும்.

நாம் தமிழர் கட்சியினரின் ஆய்வுகளின் அடிப்படையில் நாமும் அவர்களைப் போலவே பிறப்பு ஆராய்ச்சி செய்தால், தற்போது ‘ஈழத்தமிழர்கள் மீது இனப்படுகொலையைக் கட்டவிழ்த்து விடுபவர்கள் தமிழ்நாட்டுப் பாண்டியர்கள்’ என்று தான் பேச முடியும்.  இப்படிப்பட்ட இழிவான ஆய்வுகள் எதற்குப் பயன்படும்? ஈழத்தமிழர்களின் உண்மையான எதிரியான சிங்கள இனவெறியர் களைக் காப்பாற்றவே பயன்படும்.

இனத்தை அறிவது எப்படி?

உலகில் எந்த இனத்தையும் அது, வேறு ஒரு இனத்தோடு கலக்காத தனித்துவமான இனம் என்று அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்த முடியாது. எல்லா தேசிய இனங்களும் கலப்பட மானவையே.  அப்படியானால் எந்த அடிப்படையில் ஒடுக்கும் இனத்தையும், ஒடுக்கப்படும் இனத்தையும் பிரித்து அறிவது? தோழர் பெரியார் தமிழ்நாட்டுச் சூழலில் இருந்து விளக்குகிறார்.

“இந்நாட்டில் வாழும் தற்காலப் பார்ப்பனர்கள் மத்திய ஆசியாவில் இருந்து குடியேறிய ஆரியர்களின் நேரான சுத்தமான சந்ததியர்கள் அல்ல என்பது உண்மையே. ஆனாலும்  அவர்களையும் திராவிடர்கள் என்று ஒப்புக் கொள்ளாமைக்குக் காரணம், அவர்களுக்கும்  நமக்கும் உள்ள பல்வேறு பண்பு, கலை, ஆசாரம், நடப்பு ஆகிய பல வேறுபாடுகள் தாம்.

நம் கழகத்தில் யாரையும் பிறவி காரணமாக வேறினத்தவர் என்று ஒதுக்கவில்லை. பழக்க வழக்கங்களையும் பார்த்துத்தான் அவர்களுக்கும் நமக்கும் இருந்து வரும் அடிப்படை பேதத்தைக் கருதித்தான் பிரிவினை செய்கிறோம். அவர்கள் எப்போதுமே திராவிடர்களை ஒதுக்கி வைத்துத்தான் வந்திருக்கிறார்கள். ஒதுக்கி வைத்திருக்கும்படியான கலாச்சாரத்தைத் தான் பின்பற்றி நடந்து வருகிறார்கள். அதாவது தாம் உயர்ந்தவர்கள் திராவிடர்கள் தாழ்ந்தவர்கள் இருவருமே தனித்தனிப் பிறப்பு என்கிற உணர்ச்சி அவர்களை விட்டு எப்போதும் நீங்கியதில்லை. (4)

பார்ப்பனர்களுக்குக் கூறும் வரையறையை அப்படியே சிங்களர்களுக்குப் பொருத்திப் பார்க்க வேண்டும். சிங்களர் என்ற இனம், தமிழர்களும் இணைந்து உருவான இனமாக இருந்தாலும், காலப்போக்கில் சிங்களர்கள் தமிழர்களை ஒடுக்கியே வந்துள்ளார்கள். எதிர் இனமாகவே கருதி இயங்கி யுள்ளார்கள்.  கி.மு 3 நூற்றாண்டில் தொடங்கிய இனமோதல் இன்று வரை தொடர்கிறது.

தமிழர்களும், எதிர் இனமான சிங்களர்களும், கண்டி நாயக்க அரசர்களை எந்த இனமாகப் பார்த்தார்கள்? கண்டி அரசர்களை யாருக்கான அரசர்களாகப் புரிந்துகொண்டார்கள்? என்பது தான் வரலாற்றில் மிக முக்கியமானதாகும். கண்டி நாயக்க அரசர்களை, குறிப்பாகக் கடைசி மன்னர் $விக்கிரம ராஜ சிங்கனின் ஆட்சியைச் சிங்கள மக்கள், தமிழர்களின் ஆட்சியாகவே பார்த்தனர். தமிழர்கள் தங்களின் மன்னராகவே அவரைக் கருதினர். மிக முக்கியமாக, விடுதலைப்புலிகள் அமைப்பு கண்டி நாயக்க மன்னர்களைத் தமிழ் அரசர்களாகவே கருதியுள்ளது.

கண்டி மன்னர்கள் தமிழர்களே

கிளிநொச்சியைத் தலைநகராகக் கொண்டு, தமிழீழ விடுதலைப்புலிகளின் தனிஅரசு நடந்த காலங்களில் புலிகள் அரசின் கல்வித்துறை, ‘தமிழீழக் கல்விக்கழகம்’ என்ற பெயரில் இயங்கியது. அந்தத்துறையின் சார்பில் ‘வரலாறு சொல்லும் பாடம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நூல் கண்டி மன்னர்களைத் தமிழர்கள் என்றே பதிவு செய்துள்ளது.

கண்டி அரசு ஒரு சிங்கள பெளத்த அரசாக இருந்த போதும்அதனை கி.பி.1739 முதல் கி.பி 1815வரை 76 ஆண்டுகளாக ஆண்டவர்கள் தமிழ்மன்னர்கள் தான்.

அவர்களது வீறான ஆட்சியில் கண்டி அரசைக் கைப்பற்றப் பலதடவை ஒல்லாந்தராலும்ஆங்கிலேயராலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டாலும் அவர்கள் கேவலமான தோல்விகளையே எதிர்கொண்டனர். அந்தத் தமிழ் அரசர்களது அரண்மனைக்குள்ளேயே பெளத்த சிங்களவெறி நுழையத் தொடங்கியதானதுஇலங்கை வரலாற்றில் துயர் மிகுந்த வரிகளாகும்.

தனது அரசின் மன்னனாக ஒரு தமிழன் எப்படி இருக்கமுடியும் என்ற சிங்களப் பெருங்குடிச் சிந்தனையும் கண்டி அரசின் மீளமுடியாத சறுக்கலுக்குக் காரணங்களாயின….

கடைசியாகக் கண்டி அரசை ஆண்ட தஞ்சை புதுக்கோட்டை பூலாம்பட்டியைச் சேர்ந்த தமிழ் மன்னன் கண்ணுச்சாமி என்ற சிறீ விக்கிரம ராச சிங்கன் ஆங்கிலேயரால் தமிழ்நாட்டின் வேலூருக்குக் கொண்டு சென்று சிறை வைக்கப்பட்டு, 1832 ல் அங்கு இயற்கைச் சாவடைந்தான்.” (5)

விக்கிரம ராஜ சிங்கனைத் தங்களது மன்னராகப் புகழும் தமிழ் நூல்கள்தமிழ் நாடகங்கள்

ஈழத்தமிழர்கள் கண்டி அரசரைத் தங்களின் மன்னராக எண்ணி, அவரைநாயகராக வைத்து, விக்கிரம ராஜ சிங்கனின் வரலாற்றை நாடகமாகவும், தெருக்கூத்தாகவும் நடத்தி வருகின்றனர். 1887 ல் திரிகோணமலையில் வாழ்ந்த வே.அகிலேசம்பிள்ளை எழுதிய ‘கண்டிநாடகம்’, 1908 ல் பருத்தித்துறையில் ‘கண்டிராசன் கதை’,  1910 ல் எம்.என்.பாவா எழுதிய ‘கடைசிக் கண்டி மன்னன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்’, 1928 ல் ஏகை.சிவ.சண்முகம்பிள்ளை எழுதிய ‘கண்டி ராஜா நாடகம்’, 1934 ல் பி.கே.எம் ஹசன் எழுதிய ‘ கண்ணுச்சாமி அல்லது $ விக்கிரம ராஜ சிங்கம்’ எனப் பல்வேறு நூல்கள் விக்கிரம ராஜ சிங்கனைப் புகழும் நூற்களாகும்.  (6)

இலங்கையில் இனப்படுகொலை உச்சத்தை அடைவதற்கு முன்பு வரை ஈழத்தமிழர்களின் கிராமங்களில், திருவிழாக்களில் ‘கண்டிராசன் கதை’ என்ற என்ற பெயரில் நாடங்களும், கூத்துக்களும் ஏராளமாக நடந்துள்ளன. இவ்வாறு தமிழர்கள் போற்றும் மன்னரை ‘தெலுங்கன்’ என்று அந்நியப்படுத்த முயற்சிப்பது மிகப்பெரும் தமிழினத் துரோகச் செயலாகும்.

ஈழத்தமிழர்களும், இன்றை நிலையில் ஈழத்தமிழர்களின் குரலாகத் திகழும் விடுதலைப்புலிகள் அமைப்பும் கண்டி அரசர்களைத் தமிழர் அரசர்கள் என்று அறிந்து, உரிமை கொண்டாடுவதைப் பார்த்தோம். அதே நேரத்தில் சிங்களர்களும், சிங்கள அரசுகளும் கண்டி அரசர்களைத் தமிழர்களாகவே கருதியுள்ளனர் என்பதையும் பார்ப்போம்.

கண்டி அரசர்களை வீழ்த்திய சிங்கள இனமதவெறி

கண்டித்தமிழ்அரசர்களின் ஆட்சியின் இரண்டாவது மன்னர் கீர்த்தி $ ராஜ சிங்கன் ஆவார். இவரது ஆட்சியில் பெளத்த மதத்துக்கும், சிங்களர்களுக்கும் ஏராளமான நன்மைகளைச் செய்தார். இருந்தாலும் அவர் தனிப்பட்ட முறையில் திருநீறு அணியும் வழக்கத்தைக் கைவிடவில்லை. இந்து மதத்திற்கும் தேவயானவைகளைச் செய்தார். எனவே  அவரைக் கொன்று ஆட்சியைக்கைப்பற்ற அவரது ஆட்சியிலேயே இருந்த சிங்களத் தளபதிகளும், புத்த பிக்குகளும் முடிவு செய்து, அதற்கான முயற்சியில் இறங்கினர். தற்செயலாக மன்னர் காப்பாற்றப்பட்டார். சதிச்செயலுக்குக் காரணமான சிங்கள அதிகாரிகளான சமணக்கொடி அதிகாரி, மொலதந்த ரட்டராலே, கடுவெனராலே, மதினப்பொல திசாவ ஆகியோர் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.

பிலிமத்தலாவக்கு மரணதண்டனை

அதுபோலவே, கடைசி மன்னரான $ விக்கிர ராஜ சிங்கனையும் சிங்களர்கள் தமிழ் மன்னனாகவே பார்த்தனர். அவரது முதல் அமைச்சராக இருந்த ‘பிலிமத்தலாவ’ என்பவர் சிங்களத் தளபதிகளைத் திரட்டி, கண்டி அரசரை வீழ்த்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். மூன்று முறை படையெடுப்பு முயற்சிகளைச் செய்தார். அரசரைக் கொல்லும் முயற்சியிலும் இறங்கினார். அனைத்திலும் தோற்று விட்டார். பிலிமத்தலாவையின் சதிச்செயல்களை இனியும் மன்னிக்க இயலாது என முடிவு செய்த கண்டி அரசர் 1811 ல் பிலிமத்தலாவ க்கு மரண தண்டனை விதித்தார்.

எகலப்பொல மகா நிலம’ குடும்பம் அழிப்பு

பிலிமத்தலாவையின் படை வீரர்கள் ஆங்கிலேய மேஜர் ஜெனரல் வில்சனின் படைகளோடு இணைந்து கொண்டு மீண்டும் விக்கிரமராஜ சிங்கனை அகற்றும் பணியைத் தொடர்ந்தனர். பிலிமத்தலாவைக்குப் பிறகு அவரது பதவியில் பிலிமத்தலாவயின் மருமகன் ‘எகலப்பொல மகா நிலம’ நியமிக்கப்படுகிறார். எகலப்பொலவும் சிங்களத் தளபதிகளுடனும், புத்தப் பிக்குகளுடனும் இணைந்து கண்டி அரசனின் ஆட்சியை அகற்றப் பலமுை-ற முயற்சி செய்கிறார். அனைத்திலும் தோல்வியுறுகிறார்.

ஒரு புறம் படையெடுப்பு முயற்சியையும் மறுபுறம் சிங்கள மக்களைத் திரட்டும் வேலையையும் செய்து வந்தார். அவற்றை அறிந்த கண்டி மன்னர், எகலப்பொலவின் சதிக்கு உடந்தையாக இருந்த, பெளத்தப் பிக்குகள் பரந்தர உனான்சே, சூரியகொட உனான்சே, மொர தொட குட உனான்சே, புசவெள திசா ஆகியோருக்கு மரண தண்டனை விதித்துக் கொலை செய்தார். எகலப்பொல தலைமறைவாகி விட்டார்.

1814 ஆண்டு மே மாதத்தில், கண்டி அரண்மனைக்கு எதிரே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் எகலப்பொலவின் மனைவி குமாரிஹாமியும், 11 வயதுக்குக்கும் குறைவான அவர்களது நான்கு சிறு குழந்தைகளும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் செயல் ஏற்கனவே வெறுப்பில் இருந்த சிங்கள மக்களுக்கு விக்கிரம ராஜ சிங்கன் மீது கடும் கோபத்தை உண்டாக்கியது.

இந்தச்சூழலை எகலப்பொலவும், ஆங்கிலேய அதிகாரி இராபர்ட் ப்ரவுன் ரிக்கும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். கண்டி அரசு மீது படையெடுத்துச் சென்றனர். சிங்கள மக்களிடையே ஒரு முக்கியப் பிரச்சாரத்தைக் கையிலெடுத்தனர்.

“சிங்கள மக்களையும், பெளத்த மதத்தையும் அந்நிய மன்னனிடமிருந்து காப்பாற்றவே இந்த யுத்தம் நடைபெறப்போகிறது.”(7)

என்று சிங்கள இனவெறியையும், மத வெறியையும் தூண்டிவிட்டனர்.  இந்தக் காலத்தில், விக்கிரம ராஜ சிங்கனிடம் நீண்ட நெடுங்காலமாக மிகவும் விசுவாசமாக இருந்த படைவீரர்கள் தமிழர்கள் மட்டுமே என்பதைக் குறிப்பாகக் கவனிக்க வேண்டும்.

சிங்கள இனவெறியும், பெளத்த மதவெறியும், ஆங்கிலேய ஆதிக்க வெறியும் இணைந்து ஈழத்தமிழர்களின் நம்பிக்கையைப் பெற்ற கண்டி அரசன் $ விக்கிரம ராஜ சிங்கனை  வீழ்த்தின.

துரோகியின் பெயரில் நகரம்

கண்டி அரசருக்கு எதிராகச் சிங்களத்தளபதிகளைக் கொண்டு சதி செய்து மாட்டிக் கொண்டவர் பிலிமத்தலாவ என்ற சிங்கள முதல் அமைச்சர். ஆங்கிலேய ஆட்சியிலிருந்து இலங்கை விடுதலை பெற்ற பிறகு, கண்டிக்கு அருகிலுள்ள ஒரு நகருக்கு ‘பிலிமத்தலாவ’ என்று பெயர் சூட்டப்பட்டது.

‘எகலப்பொல மகா நிலம’ என்ற தமிழின எதிரியை கதாநாயகராக வைத்து, சிங்களர்கள் ‘எகலப்பொல நாடகம்’ என்ற பெயரில் நாடங்களை நடத்தி வருகின்றனர். கடந்த 2014 ல் ‘எகலப்பொல குமாரிஹாமி’ என்ற பெயரில் சிங்களத் திரைப்படம் ஒன்று வெளியாகி வெற்றிநடைபோட்டது. இப்படத்தில் கண்டி அரசர் $விக்கிரம ராஜ சிங்கனை, பெளத்த சிங்கள மக்களுக்கு எதிரியாகவும், கொடுங்கோலனாகவும் சித்தரித்துள்ளனர். சிங்கள இனவெறியையும், பெளத்த மதவெறியையும் நிலைத்து வைப்பதற்காக இப்படம் வெளியிடப்பட்டது.

நாயக்க மன்னர்களின் வாரிசுகள்தான் இன்றுவரை இலங்கையை ஆளும் அதிபர்கள் என்றால் நாயக்கமன்னர்களை எதிரிகளாகவும் – நாயக்கமன்னர்களுக்கு எதிராகப் போரிட்டவர்களைச் சிங்களத் தலைவர்களாகவும், சிங்கள மக்களுக்காக அவதாரம் எடுத்தவர்களாகவும், சிங்கள இன வீரத்தின் அடையாளச் சின்னங்களாகவும் இன்றும் மக்களிடையே பதிவு செய்து கொண்டிருக்க மாட்டார்கள். செய்யவும் முடியாது.

நாடுகடத்தப்பட்ட கண்டி அரசரின் இரத்தச்சொந்தங்கள்

1815 ஆண்டு மார்ச் 2 ஆம் நாள் கண்டி அரசர்,  சிங்கள மற்றும் ஆங்கிலேயப் படைகளால் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டார். ஆங்கிலேய அரசுக்கும், கண்டி அரசுக்கும்  10.03. 1815 ல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இலங்கை கவர்னர் இராபர்ட் பிரெளன்ரிக் மற்றும் ‘எகலப்பொல மகா நிலம’ இருவரிடையே இந்த ஒப்பந்தம் நடந்தது.

அந்த ஒப்பந்தப்படி கண்டி அரசர் $ விக்கிரம ராஜ சிங்கனும், அவரது குடும்பத்தினரும் கண்டி அரச எல்லையிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். $ விக்கிரம ராஜ சிங்கனின் உறவினர்களோ, இரத்தச் சொந்தங்களோ எவரும் கண்டி எல்லைக்குள் இருக்கக்கூடாது. அந்த எல்லைக்குள் எப்போதும் வரக்கூடாது எனத் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு அனைவரும் ஒட்டுமொத்தமாக இலங்கையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். எனவே கண்டி நாயக்க அரசரின் வாரிசுகள்தான் இன்றைய இலங்கை அதிபர்களும், பிரதமர்களும் என்பது மிகவும் அப்பட்டமான வரலாற்றுப் புரட்டு.

கி.மு விலேயே தொடங்கிய இன – மத படுகொலைகள்

சிங்களரைக் காப்பாற்றுவதற்காக, நாம் தமிழர் வெளியிட்ட ஆவணப்படத்தின் முக்கியமான அடுத்த சில குற்றச்சாட்டுகளையும் அவற்றுக்கான மறுப்புகளையும் பார்ப்போம்.

“இந்த நாயக்க அரசர்கள் இலங்கைக்கு வந்த காலமான 1739 க்குப் பிறகுதான், இலங்கையில் மதச் சண்டைகள் நடந்தன. போர்க்குற்றங்களும், இனப்படுகொலைகளும், போர் அழிவுகளும் நாயக்கர் காலத்திற்குப் பிறகு தான் நடந்தேறின. அதற்கு முன்னர் தமிழர்களும், சிங்களர்களும் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். இரு தரப்புக்கும் போர் நடந்தாலும் அது அரச அதிகாரத்தைப் பிடிக்கும் போர் என்ற அளவில்தான் நடந்தன.  தமிழர்களோ, சிங்களர்களோ அதனால் பாதிக்கப்படவில்லை. மத அடிப்படையிலோ, இன அடிப்படையிலோ போர்கள் நடைபெற வில்லை. தமிழர்களின் துயரத்திற்குக் காரணம் சிங்களர்கள் அல்ல; தெலுங்கர்களே”

என நிறுவுகின்றனர். வரலாற்றுச் சான்றுகளின் அடிப்படையில் இந்த மோசடிக் கருத்துக்களை முற்றிலும் மறுக்கிறோம். தமிழர் இனப்படுகொலைகளும், பெளத்த மதவெறியும் கி.மு விலேயே தொடங்கியவை என்பதற்கான சாறுகளைப் பார்ப்போம்.

எல்லாளனைக் கொன்ற புத்த மதவெறி

அநுராதபுரத்தைத் தலைநகராகக்கொண்டு கி.மு 145 முதல் கி.மு 101 வரை சிறப்பாக ஆட்சி நடத்தியவர் தமிழ் மன்னர் எல்லாளன். கி.மு 205 முதல் கி.மு 161 வரை என்றும் ஒரு வரலாற்றுத் தகவல் உள்ளது. சிங்கள இளவரசன் துட்டகாமினி என்பவர் எல்லாளன் மீது பலமுறை போர் தொடுத்தார். எனினும் எல்லாளனை வெல்ல இயலவில்லை. கி.மு. 101 ல் துட்டகாமினியால் சூழ்ச்சி செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் எல்லாள மன்னர்.

naam tamilar kandi

எல்லாளனை எதிர்த்து, துட்டகாமினி முதன் முதலாகப் போர்தொடுத்த போது, ஆயிரக்கணக் கான படைவீரர்களும், துட்டகாமினியின் தாயார் விகாரைமாதேவியும் உடன்சென்றனர். இவர்களுடன் திசகமராமை விகாரையைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட புத்த பிக்குகளும் எல்லாளனை அழிக்க, அநுராதபுரத்தை நோக்கிச் சென்றனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் இப்போரில் அழிக்கப்பட்டார்கள்.   அந்தப் போருக்காகத் துட்டகாமினி ஒரு அறிவிப்பு வெளியிடுகிறார்.

“நான் அரச போகங்களுக்காக இந்த யுத்தத்தில் இறங்கவில்லை. பெளத்த சாசனத்தின் உன்னதத்திற்காகவே போர் தொடுக்கிறேன்” (8)

என்கிறார். புத்தபிக்குகள் ஒரு போரில் தொடர்புபடும் நிகழ்வு வரலாற்றில் அப்போதுதான் முதல்முறையாக நடந்தது. கி.மு.101 லேயே தமிழர்களுக்கு எதிராக, இன ரீதியாகவும், மதரீதியாகப் போர்க்குற்றங்களும் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. எல்லாள மன்னரும் மரபுவழிப் போரில் வெல்லப்படவில்லை. சூழ்ச்சியால், போர்க்குற்ற நடவடிக்கையால் கொல்லப்பட்டார். ஆயிரக்கணக்கான தமிழர்கள் போரில் அழிக்கப்பட்டனர்.

இந்தப்போரின் முடிவில் துட்டகாமினி புத்த தேரர்களிடம், ஆயிரக்கணக்கானவர்களை அழித்துவிட்டேன் என வருந்துகிறான். இந்துமதத்தில் கீதா உபதேசத்தைப் போல, புத்த தேரர்கள், துட்டகாமினியிடம் கூறுகிறார்கள்,

“பெளத்தத்தை நம்பாதவர்கள் விலங்குகளைப் போன்றவர்கள். பெளத்தத்தை நம்பாத தமிழர்களை அழிப்பது குற்றமாகாது. அதனால் எந்தப் பாவமும் வந்து சேராது”(9)

என உபதேசம் செய்துள்ளனர்.

கி.மு 3 ஆம் நூற்றாண்டிலேயே ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனவெறியும், மதவெறியும் கட்டவிழ்த்து விடப்பட்டதற்கு மயிலை சீனி வேங்கடசாமி அவர்களும் சான்றுகளைத் தருகிறார்.

“துட்டகாமினி, எல்லாளனுக்கு எதிரான போரில், ஐந்நூறு பெளத்தப் பிக்குகளின் சேனையையும் அழைத்துக்கொண்டு வந்தான். ஐந்நூறு பெளத்தப் பிக்குகள் போர் செய்வதற்காக அல்லர்; ஐந்தாம் படை வேலை செய்வதற்காக; குடிமக்களிடத்தில் போய் அவர்களுக்கு மதவெறியையூட்டி ஏலேல மன்னனுக்குஎதிராக அவர்களைக் கிளப்பிவிடுவது அவர்கள் வேலையாக இருந்தது. சேனைகளோடு பிக்குகளை ஐந்தாம்படை வேலை செய்ய அழைத்துக் கொண்டது மல்லாமல், துட்டகமுனு தன்னுடைய தாயாகிய விகாரமகா தேவியையும் போர்க்களத்துக்கு அழைத்து வந்தான்.” (10)

தமிழர் – சிங்களர் இனப்போர்

இலங்கையில் மகாவம்சம் போலவே மேலும் சில நூல்கள் முக்கிய வரலாற்றுக் களஞ்சியம் போலக் கருதப்படுகின்றன. அவை, இராஜவலிய, பூஜாவலிய, சூளவம்சம், நிக்காய சங்கிரஹய, யாழ்ப்பாண வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம், கைலாயமாலை போன்றவை ஆகும்.

கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை ஆண்ட கரிகாலன் இலங்கை மீது நடத்திய போர் பற்றி ‘இராஜவலிய’ கூறும் வராலற்றுச்செய்தியைப் பார்ப்போம்.

“கரிகாலன் இலங்கையின்மீது படை யெடுத்துச் சென்று 12 ஆயிரம் இலங்கை மக்களைச் சிறை செய்து தன் நாட்டுக்குக் கொண்டு வந்தானாம். அவர்களைக் கொண்டு தன்னாட்டில் பாயும் காவிரி ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரைகள் அமைத்தானாம். இவ்வாறு கூறும் அந்த வரலாறு மேலும் சிலவற்றைக் கூறுகிறது. முதலாம் கயவாகு என்னும் இலங்கை அரசன் சோழநாட்டுக்கு வந்து தன்னாட்டுக் கைதிகளை மீட்டுக் கொண்டு சென்றதோடு தமிழ்நாட்டிலிருந்து மேலும் 12 ஆயிரம் பேர்களைக் கைதுசெய்து தன்னாட்டுக்கு அழைத்துச் சென்றானாம். இவ்வாறு கூறப்படும் வரலாறுகளில் வரும் கைதிகளின் எண்ணிக்கை உயர்வுநவிற்சியாக இருக்கக் கூடும். ஆனால், நிகழ்ச்சியில் ஓரளவேனும் உண்மை இருக்கத்தான் செய்யும்.”(11).

இராஜராஜசோழனால் அழிந்த அநுராதபுரம்

பிற்காலச்சோழர்களின் முக்கிய அரசர் இராஜராஜசோழன். இவர் கி.பி.993 ல் இலங்கை மீது படையெடுத்தார். அப்போது இலங்கையில் ஐந்தாம் மகிந்தன் ஆட்சியில் இருந்திருக்கிறார்.  அநுராதபுரம்தான் அப்போது இலங்கையின் தலைநகரம். இராஜராஜன் படை, ஐந்தாம் மகிந்தனை அநுராதபுரத்திலிருந்து விரட்டி அடித்தது. ஆயிரக்கணக்கான வீரர்களையும், அப்பாவி மக்களையும் ஈவு இரக்கமின்றிப் படுகொலை செய்தது. மகிந்தனின் தலைநகரான அநுராதபுரம் முற்றிலும் அழிக்கப்பட்டது. எல்லாள மன்னர் காலத்திலிருந்து தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரத்தை அழித்து விட்டு, பொலனருவை என்ற நகரைச் சோழர்களின் தலைநகராக உருவாக்கினார்கள்.

இராஜராஜனின் படைவீரர்கள், பொலனருவையில் இருந்த ஐந்தாம் மகிந்தனின் அரசகுடும்பப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை நடத்தி, அவர்களது மூக்கையும் அறுத்து, பிறகு படுகொலை செய்திருக்கிறார்கள். (12)

போரில் பின்வாங்கிய மகிந்தன் மீண்டும் அடிக்கடி சோழர் ஆட்சிக்கு எதிராகப் போர் தொடுத்தான். எனவே கி.பி.1020 ல் இராஜராஜனின் மகன் இராஜேந்திரசோழன் மகிந்தன் மீது படையெடுத்து அவனை வென்றார். வென்றது மட்டுமல்ல; மகிந்தனின் மனைவியைச் சிறைபிடித்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து சிறைவைத்து தமிழ்நாட்டிலேயே கொல்கிறார்.

அதன் பிறகு இராஜேந்திரசோழனின் மகன் இராஜாதிராஜன் காலத்திலும் சோழப் படையெடுப்பு ஒன்று நடந்துள்ளது. அந்தப்போரில் தோற்ற சிங்களத் தளபதிகளின் தலைகளை வெட்டிக் கொண்டுபோய், தமது அரண்மனையில் தோரணமாகத் தொங்க விட்டுள்ளர் இராஜதி ராஜசோழன்.(13)

மாகோன் – குளக்கோட்டன் படைஎடுப்பு

கி.பி.1215 ல் கலிங்க மாகன் என்ற மன்னர் இலங்கையின் தலைநகராக பொலனருவை மேல் படையெடுத்தார்.  இவர் கலிங்க நாட்டின் மன்னனாவார். அப்போது இலங்கையை முதலாம் பராக்கிரம பாகு ஆண்டுவந்தார்.  இலங்கையில் கலிங்கர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் களைவதற்காக கலிங்கர்களின் மன்னர் படையெடுத்தார். இந்தப் படையெடுப்பில் அவருக்கு இணையாக குளக்கோட்டன் என்ற தமிழ் மன்னனும் படையெடுக்கிறார். கலிங்க மன்னனும், தமிழ்மன்னனும் இணைந்து சிங்கள மன்னரை எதிர்த்துப் படை நடத்தினர். இப்படையில் முழுவதும் பாண்டிய, சேர நாட்டுப் படைவீரர்களேஇருந்துள்ளனர். இந்தப் படையெடுப்புப் பற்றி ‘இராஜதரங்கணி’ என்ற பாலி நூல் கூறுவதைப் பார்ப்போம்.

பெளத்த மத அழிப்பு

“கலிங்க மகானின் மதவெறி இந்து மதத்தின் சகிப்புத் தன்மைக்கு மாறானது. அவன் ஆலயங்களின் செல்வங்களைப் படைகொண்டு கொள்ளையடிக்கச் செய்தது, இந்தியாவில் ஹர்ஷ மன்னன் செய்த அட்டூழியங்களைப் போன்றது. ஹர்ஷன் தெய்வ விக்கிரகங்களை உடைத்தான். தெய்வச் சிலைகள் மீது மலசலங்களை ஊற்றச் செய்தான். ஹர்ஷனின் மனிதாபிமானமற்ற செயல்களைப் போன்றதே மாகனுடைய செயல்களும்.

ஹர்ஷனைப் போலவே மாகனும் பிராமணர்களை வேலை வாங்கினான். பெண்களையும், கலைஞர்களையும் வேலை வாங்கினான். கொலைகளைச் செய்து, கொல்லப்பட்டவர்களின் தலைகளை முன்வாயில் தோரணங்களில் தொங்கவிட்டான். மாகனும், ஹர்ஷனும் செய்த சமயக் கொடுமைகள் ஒரே மாதிரியானவை.” (14)

வீரசைவ மதமாற்றம் – தமிழர் குடியேற்றம்

இதே படையெடுப்பிற்குப் பிறகு மாகன்  குளக்கோட்டன் ஆட்சியில் பெளத்த மதத்தினர் பட்ட கொடுமைகளை ‘இராஜவலிய’ என்ற இலங்கை வரலாற்று நூல் விளக்குகிறது.

“வடக்கிலே, ஊரான்தோட்டை, வலிகாமம், தெமளப் பட்டிணம், இலுப்பைக்கடவை; கிழக்கிலே கொட்டியாரம், திருகோணமலை, கந்தளாய்; மேற்கிலே குருந்தன்குளம், மன்னர், மாந்தை; மத்தியில் பொலனருவை, பதவிய, கொலன்னருவ முதலிய இடங்களில் மாகன், தமிழரைக் குடியேற்றினான். தமிழர் குடியேற்றங்களை உருவாக்கினான். மேலும் இவன் மக்களை தவறான சமயத்திற்கு மதம் மாற்றினான். புத்த குருமார்களின் வதிவிடங்களைக் கொள்ளையடித்தும், சங்க உறுப்பினர்களைக் கொடுமைப் படுத்தியும், செல்வந்தர்களைக் கொடுமைப் படுத்தியும் அமைதியின்மையை ஏற்படுத்தினான்.”(15)

கலிங்க மாகன் – குளக்கோட்டன் இருவரது காலத்தில் இலங்கையில் வீர சைவம் செழித்தோங்கி யுள்ளது. கிழக்கு இலங்கையில் உள்ள திருக்கேதீசுவரம் (மாதோட்டம்), திரிகோணமலை, சிலாபம், கீரிமலை, தண்டேசுவரம் (மாதோட்டம்) ஆகிய பகுதிகளில் சிவலிங்கங்கங்களை மூலவர் சிலைகளாக நிறுவியுள்ளனர். இவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் சைவ ஆயலயங்களை நிர்மாணித்து – பெளத்த மடங்களை அழித்துள்ளனர்.

இலங்கையின் வரலாற்று நூற்களாக நாம் ஏற்கனவே கூறியுள்ள அனைத்து நூல்களும் கலிங்க மாகன் – குளக்கோட்டன் படையெடுப்பு பற்றியும் அவர்களது ஆட்சி பற்றியும் எதிராகவே எழுதியுள்ளன. அந்த வரலாறுகளின்படி இவர்கள் இருவரும் மிகப்பெரும் போர்க்குற்றவாளிகள் என்றே கருத வேண்டியுள்ளது.

இலங்கையில் முக்கிய வரலாற்று ஆய்வாளர்களான, பரணவிதான, வியன கமகே போன்றவர்களும் இந்த நூல்கள் கூறும் வரலாற்றில் ஒரளவு உண்மை உள்ளது என உறுதிப்படுத்து கின்றனர். இவர்களது படையெடுப்பிலும் – ஆட்சியிலும் சிங்களர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்களருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாண ‘ஆரியச் சக்கரவர்த்திகள்’ என்ற தமிழ்நாட்டுப் பார்ப்பனக் கலப்பு அரசர்கள் வரிசையில் கி.பி.1279 முதல் 1302 வரை ஆட்சி நடத்தியர் விக்கிரம சிங்கை ஆரியர் ஆவார். இவரது ஆட்சிக்காலத்தில் தமிழருக்கும் சிங்களருக்கும் மிகப்பெரும் மோதல் உண்டானது. இந்த மோதலில் பலர் படுகொலை செய்யப்பட்டனர். மோதலைத் தொடர்ந்து சிங்களர்கள் 17 பேருக்கு தமிழ் மன்னர் மரண தண்டனை அறிவித்தார். அதனால் மீண்டும் பெரும் இனப்போர் நடைபெற்றுள்ளது. இந்த இனமோதல்  ‘யாழ்ப்பான வைபவ மாலை’ என்ற ஏட்டில் பதிவாகி உள்ளது.

சப்புமல்குமரயவால் அழிந்த யாழ் நகரம்

கி.பி.1450 ல் சிங்கள ‘கோட்டே’ என்ற அரசின் தளபதி சப்புமல்குமரய என்பவர் யாழ்ப்பாணத் தமிழ் அரசு மீது படையெடுத்தார். அப்போது யாழ்ப்பாணத்தை ஆண்டவர் தமிழ்ப்பார்ப்பனர்களோடு கலந்த இனமான ஆரியச்சக்கரவர்த்திகளின் வம்சமான கனக சூரிய சிங்கை ஆரியன் ஆவார்.

தமிழர் படை சிங்களனின் படையிடம் தோற்றது. மன்னர் தன் இரண்டு மகள்களோடு தமிழ்நாட்டுக்குத் தப்பிஓடிவிட்டார். சப்புமல்குமரயவின் படைகள் மதங்கொண்ட யானைகள் போல யாழ்ப்பாண நகருக்குள் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தன. யாழ்ப்பாணம் இரத்தக்காடாகியது. அனைத்துக் கட்டிடங்களும், வீடுகளும், மாளிகைகளும் தரைமட்டமாக்கப்பட்டன. கி.பி.1248 ல் கட்டப்பட்ட நல்லூர் கந்தசாமி கோவில் முற்றிலும் தகர்க்கப்பட்டது.(16)

இவை, தமிழ் மன்னர்கள் அல்லது சிங்கள மன்னர்களைப் பெருமைப்படுத்தவோ, சிறுமைப் படுத்தவோ பட்டியலிப்பட்டவை அல்ல. எல்லாளன் – துட்டகாமினியின் போர் இன்னும் முடிவடையவில்லை என்பதை உறுதிப்படுத்தவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இவை போல, இலங்கையின் வரலாற்றிலிருந்து இன்னும் ஏராளமான சான்றுகளைத் திரட்டித்தர முடியும்.  தமிழர் – சிங்களர் இனப்பகை, மதப்பகை என்பவை இன்று நேற்றல்ல; நாயக்கர் காலத்துக்குப் பிறகு அல்ல; கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது.

நாயக்கர்களின் வாரிசுகள் தான் சிங்களர்கள் என்றும் – நாயக்கர்களின் ஆட்சிக்குப் பிறகு தான் சிங்களர்கள் போர்க்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும், மதப்படுகொலை களையும் செய்தனர் என்றும் நாம் தமிழர் கட்சி கூறியுள்ள தவறான வரலாறுகள் உடைத்தெறியப்பட்டுள்ளன.

சான்றுகள்:

1,3,10,11. மயிலை. சீனி.வேங்கடசாமி மயிலை. சீனி.வேங்கடசாமி  பண்டைத் தமிழக வரலாறு – கொங்குநாடு பாண்டியர் – பல்லவர் – இலங்கை வரலாறு

2. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் கலாநிதி சி.க.சிற்றம்பலம் எழுதிய ‘ஈழத்தமிழர் வரலாறு – கி.பி 1000 வரை’

4. தோழர் பெரியார் – விடுதலை 06.10.1948

5. தமிழீழக் கல்விக் கழகம் வெளியிட்ட வரலாறு சொல்லும் பாடம் நூல், பக்கம் 9, 10

6,7. கலாபூஷணம் சாரல்நாடன் எழுதிய, ‘ கண்டிராசன் கதை’ நூல்

8,9.செங்கை ஆழியான் எழுதிய ‘ஈழவரலாறு: கி.மு அய்ந்தாம் நூற்றாண்லிருந்து கி.பி.1621 வரை’  – ஈழநாடு 06.06.1997 , ஈழநாடு 13.06.1997

12,13. க.ப.அறவாணனின் ‘ஈழம்: தமிழரின் தாயகம்’ நூல், ராஜ்கவுதமனின்‘தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும்’

14,15. மட்டக்களப்பு தொல்லியல் ஆய்வாளர் தங்கேÞவரி எழுதிய ‘மாகோன் வரலாறு’ நூல்

16. ‘யாழ்ப்பாணம் பாரீர்’ நூல், மற்றும் ஈழநாடு28.08.1997

 

SHARE