மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரவேண்டும் என்பதே தமிழ் மக்களின் இலக்காக இருக்கவேண்டும்

684

மே 18ஆம் திகதி நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை எடுத்துப் பார்ப்போமானால் பல்வேறு தரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் பல விடயங்கள் மறைக்கப்பட்டும் உள்ளன. பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு விடயத்தை எழுச்சி பூர்வமாக செய்யும் பொழுது அவர்கள் புலனாய்வாளர்களால் உள்வாங்கப்பட்டனர் என்றும் குறிப்பிடப்படுகின்றனர். அதேபோன்று ஜனநாயகப் போராளிகள் மற்றும் இராணுவப் போராளிகளின் செயற்பாட்டிற்கு ஒத்ததாகவே அவர்களின் செயற்பாடெனவும் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கத்துக்கு முண்டுகொடுக்கும் ஓர் அமைப்பாகவே பார்க்கின்றனர். ஆனால் இவர்கள் அனைவருமே மக்கள் பிரதிநிதிகள். விடுதலைப் புலிகளால் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை வைத்து நடாத்தப்பட்ட பொங்கு தமிழ் அதில் பங்கு பற்றிய மாணவர்கள் மற்றும் அதனை முன்னின்று செய்தவர்கள் பலர் இராணுவப் புலனாய்வாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கு பின்னர் மாவீரர் நிகழ்வுகள், தமிழ் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள், பொதுக் கூட்டங்கள், தமிழ் மக்களுக்கான எழுச்சிக் கூட்டங்கள் போன்றவற்றை நடாத்தியோரும் 4ம் மாடிக்கு வரவழைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு ஒரு சிலர் கொல்லப்பட்டனர். ஏனையவர்கள் அங்கவீனர்களாக இன்றும் நடமாடுகின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினைப் பொறுத்த வரையில் யுத்தத்துக்கு முன்னரும் யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதிகளிலும் மறைமுகமாகப் பல எழுச்சிகளையும் பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து செயற்படுத்தியிருந்தனர். இதனாலும் பல தமிழ் மக்களது உயிர்கள் காவு கொள்ளப்பட்டது. ஆனாலும் புரட்சிகர நிகழ்வை வெற்றிகரமாக செயற்படுத்தி வந்தனர். காணாமல் ஆக்கப் பட்டோருக்காக போராட்டங்கள் 30ற்கு மேல் இவர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதில் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பதே இவர்களுடைய கோசமாக இன்றுவரை இருக்கின்றது. அது எந்தளவில் அவர்களது அரசியல் கட்சி செயற்படப் போகிறது என்பதற்கு அப்பால், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது ஒரு பொது நிகழ்வு, இதனை குழப்புவதற்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாணவர்களுடன் இணைந்து செயற்பட்டமை என்பது தவறான விடயமாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நிகழ்வுகளை பொறுத்தவரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களால் அவமானப்படுத்தப்பட்டனர். தீபம் ஏற்றும் தூணுக்கு அருகில் செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக கிராமத்தில் எந்தவொரு அமைப்போ , நகரத்தில் எந்தவொரு அமைப்போ , தேசிய, உலகளாவிய ரீதியில் இருக்கும் எந்தவொரு அமைப்புமே அரசியல் செல்வாக்கு இல்லாமல் செயற்பட்டதாக வரலாறு இல்லை. இதைத் தவிர தேசிய ரீதியாக மாணவர்கள் முன்னின்று நடாத்திய போராட்டங்கள் எந்தவொரு நாட்டிலும் வெற்றியை நிலைநாட்டவில்லை. அது வெறுமனே புரட்சிகளை மாத்திரமே தோற்றுவித்தது. பல்கலைக்கழக கல்வியை சீர்குலைத்து, அவர்களை ஆயுதத்தினை ஏந்த வைத்ததே இதன் அன்றிலிருந்து இன்றுவரையான நிலையாகும்.

தமிழ் மக்கள் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செயற்படுத்த வேண்டும் என்பதே எம் அனைவரினதும் விருப்பமாகும். விடுதலைப் போராட்ட வரலாற்றை அழித்தொழிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளை அனைத்துப் போராட்டத்தையும் மக்கள் மயப்படுத்தி உள்ளது. விடுதலைப்புலிகள் மற்றும் ஏனைய இயக்கங்களைக் கொண்ட கட்சிகள் இந்நாட்டைப் பிரித்தாலும், தந்திரத்துடன் செயற்படுவதை சிங்கள இனவாதக் கட்சிகள் அன்றிலிருந்து இன்றுவரை ஏற்றுக் கொண்ட நிலைப்பாடே இல்லை. மாறாக எங்கெங்கு மக்கள் புரட்சி வெடிக்கின்றதோ அதனைக் குழப்பும் வகையில் இவர்கள் செயற்பாடுகள் அமைகின்றன. குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த அனைத்து வாகன இலக்கங்களும் இராணுவப் புலனாய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டன.

அதில் பங்கு பற்றிய பல்கலைக்கழக மாணவர்களினது அடையாள இலக்கம் உட்பட அனைத்துப் பெயர் விவரங்களும் அவர்கள் வசமாகியது. ஜனநாயகப் போராளிகளது அனைத்துத் தகவல்களும் சேகரிக்கப்பட்டு அதில் பிரதானமாக செயற்பட்டோர் பற்றி தீவிரமாக புலனாய்வாளர்கள் ஆராய்ந்தனர்.

பொது அமைப்புக்கள், ஆயுதக் கட்சிகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்புக்கள், தமிழினத்தைப் பிரதிபலிக்கும் ஏனைய கட்சிகள் அனைவரும் ஓர் விடயத்தை சிந்திக்க வேண்டும். நாம் எந்த இலட்சியத்தை அடைவதற்காக எமது தேசியத் தலைவர் பிரபாகரன் போராடினாரோ அந்த இலட்சியத்தினூடாகவே நாம் பயணிக்க வேண்டும். யுத்தம் முடிந்த பின்னும் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை சரியான விதத்தில் முழுமையாக அரசாங்கம் பகிர்ந்தளிக்கவில்லை.

இதற்கு எதிராக சில அமைப்புக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதைக் கைவிட்டுவிட்டு தற்போது சில நிகழ்வுகளை அரசாங்கம் முன்னெடுக்கத் தடையின்றி இடமளித்துள்ள நிலையில் இந் நிகழ்வுகளை சாதாரணமான முறையில் செய்வதற்கு அனுமதித்திருக்கிறது. தற்போது நான் நீ என்று போட்டி போட வேண்டிய தேவை இல்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கட்சி அரசியல் யாரும் செய்யக்கூடாது. தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தில் தேசியம், சுயநிர்ணய உரிமை வழங்கப்படவில்லை, காணி பொலிஸ் அதிகாரம் வழங்கப்படவில்லை, வடகிழக்கு இணைப்பு இடம்பெறவில்லை, திட்டமிட்ட இராணுவ நில அபகரிப்பு, யுத்தத்திற்கு பின்பு வடகிழக்கில் அமைக்கப்பட்ட பௌத்த சிலைகள் அகற்றப்படவில்லை.
மேலும் தமிழினத்தின் பல உயிர்களினைக் கொலை செய்துவிட்டு ஆங்காங்கே இராணுவ முகாம்கள்; பல இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அவை அகற்றப்பட வேண்டும். ஏனெனில் இவைகள் மக்கள் மனதில் விமர்சனங்களையும் சலிப்புத் தன்மையினையுமே ஏற்படுத்துகின்றது. இவற்றினை எதிர்த்து இந்தப் போராட்ட எழுச்சியாளர்கள் செயற்பட வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கோசங்களை எழுப்பி, சர்வதேச மட்டத்தில் தீர்வினைப் பெற இவ் அமைப்புக்கள் முற்படவேண்டும். இவையே தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானவையாகும்.

இதை விட்டுவிட்டு நீயா நானா எனப் போட்டி போட்டுக்கொண்டு பல நிகழ்வுகளை நடத்துவதும் யுத்தம் முடிந்த பின்பு வீரவசனம் பேசுவதும் சிறுபிள்ளைத்தனமான ஒன்றாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற ஒரு சிலரைத்தவிர பலர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நேரடித் தொடர்பிலுள்ளவர்களாவர். மாவை சேனாதிராஜா அவர் ஒரு அறவழிப் போராட்ட வீரர், தமிழினத்தின் விடுதலை வேண்டிப் போராடிய போது மட்டக்களப்பு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

உமாமகேஸ்வரன், பிரபாகரன், ஸ்ரீசபாரத்தினம், யோகி, குட்டிமணி, தங்கத்துரை, பத்மநாபா, போன்றவர்களுடன் மாவை சேனாதிராஜாவின் போராட்ட வாழ்க்கை வரலாறும் அடங்கியுள்ளது. ரெனா என்ற ஓர் ஆயுதக் கட்டமைப்பையும் மாவை சேனாதிராஜா அன்று உருவாக்கியிருந்தார். அவருடன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை எள்ளளவும் ஒப்பட்டுப் பார்க்கமுடியாது. இதனை நாம் யதார்த்த ரீதியில் புரிந்து கொள்ள வேண்டும்.

மாவை சேனாதிராஜாவுக்கு சாதகமாக இக்கட்டுரையினை நாம் எழுதவில்லை. நடந்த உண்மைகளினையே கூற விரும்புகின்றோம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனைப் பொறுத்தவரையில் அவர் சிங்கள பேரினவாதத்துடன் இரண்டரக் கலந்தவராவார். வாசுதேவ நாணயக்காரவின் சம்பந்தியும், மகிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பனுமாவார். மகிந்த ராஜபக்ஷவின் முன்னிலையிலேயே முதலமைச்சர் பதவிக்காக சத்திய பிரமாணம் செய்து கொண்டவர். இதைவிட பாலியல் பிரேமானந்தா சுவாமியின் சிஷயனும் கூட, இவர் 11 சிறுமிகளை வன்புணர்வுக்குட்படுத்தி தண்டனை பெற்றவர் என்பதும் கூட வரலாறு. இப்படிப்பட்ட தொடர்புகளைக் கொண்டிருக்கும் முதல்வர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தீபம் ஏற்ற எடுத்துக் கொடுத்ததென்பதும், அவ் வளாகத்தினுள் நுழைந்ததென்பதும் மிகவும் கொடுமையானதே. அதைவிட ஏனைய அரசியல் வாதிகள் சிறந்தவர்களே. எனவே இவ்வாறு விமர்சித்துக் கொண்டு சென்றால் அங்கு நடந்த ஒவ்வொரு விடயங்களையுமே தனித்தனியே விமர்சித்துக் கொண்டே செல்லலாம். ஆனால் பாதிக்கப்படப்போவது தமிழினமே.

எனவே இதனை விடுத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்பது ஒட்டு மொத்த தமிழினத்தின் பேரவலம் என்பதனைக் கருத்தில் கொண்டு நாம் ஒற்றுமையாக இந்த நினைவஞ்சலியை அனுஷ;டிக்க முன்வர வேண்டும். தற்போது இருக்கக் கூடிய அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்பதே உண்மை. இதை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி.

இவர்கள் பாராளுமன்றிலே செய்துகொண்ட சத்தியப் பிரமாணம் ‘நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்படமாட்டோம் என்பதாகும்’ இதில் பல விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றது. ஆனால் அதைவிட்டு வீரவசனம் பேசுவதென்பது முறையானதல்ல.

சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு எதிராக ஆயுத ரீதியிலும், அகிம்சை ரீதியிலும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சிங்கள இனவாத அரசு தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தினைத் தரப் போவதில்லை என்பதுவே உண்மை. எனவே நன்கு சிந்தித்து தமிழ் மக்கள் செயற்பட வேண்டும் என்பதுதான் உண்மை. எனவே வீணாகக் கத்தியைத் தீட்டாதே மாறாக உன் புத்தியைத் தீட்டு.

SHARE