டோனி தான் தலைவர்- கேப்டன் பதவி பற்றி விவாதம் தேவையில்லை: கவாஸ்கர் கருத்து

348
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வீராட் கோலி கேப்டனாக பணியாற்றினார். தனது அறிமுக கேப்டன் பதவிலேயே அவர் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்தார்.

இந்த டெஸ்டில் இந்திய அணி போராடி தோற்றது. வீராட் கோலியின் செயல்பாட்டை முன்னாள் வீரர்கள் சிலர் பாராட்டினர். டிராவுக்காக ஆடாமல் வெற்றியை நோக்கி விளையாடியது துணிச்சலானது என்று புகழ்ந்து இருந்தனர்.

அதோடு டெஸ்ட் கேப்டன் பதவியில் அவரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். இதுவே அதற்கு சரியான நேரம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் கருத்து தெரிவித்தார்.

இதனால் டோனியின் கேப்டன் பதவி குறித்து விமர்சனம் எழுந்தது. வெளிநாட்டு மண்ணில் அவர் அதிகமான தோல்வியை தழுவியதால் கோலிக்கு ஆதரவு பெருகியது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் டோனி தான் கேப்டன். இதனால் கேப்டன் பதவி குறித்து விவாதிக்க தேவையில்லை என்று முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

ஆஸ்திரேலிய தொடரில் டோனி தான் கேப்டன். இதனால் கேப்டன் பதவி எந்த கேள்வியும் எழுப்ப தேவையில்லை. இது ஒரு கேள்வியை தான் உருவாக்கும் என்று நான் கருதுகிறேன்.

இதனால் கேப்டன் பதவி பற்றி எந்த விவாதமும் செய்ய தேவையில்லை. எஞ்சிய 3 டெஸ்டுக்கும் டோனி தான் தலைவர். இந்த தொடருக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுளள்ளார். வீராட் கோலி தொடர்ந்து கேப்டனாக இருக்க வேண்டும் என்று தேர்வு குழு டோனியிடம் சொன்னது கிடையாது.

கோலியின் கேப்டன் பொறுப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவரது ஆக்ரோஷமான அணுகுமுறையில் தவறு இல்லை. ஆனால் ரோகித்சர்மா ஆட்டம் இழந்தபிறகு டிராவுக்காக ஆடி இருக்க வேண்டும். வெற்றி பெற முடியாத பட்சத்தில் ஆட்டத்தை ‘டிரா’ செய்வதே சிறந்ததாகும்.

இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்

SHARE