இர்ரெவரண்ட் ஃபாதர் ஜெகத் கஸ்பர் பேசிய பத்திரிகையாளர் சந்திப்பு பல உண்மைகளைத் தெரிவிக்கிறது (வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன் என்பது இவரைப் போன்றவர்களுக்கே பொருந்தும்).
முதலாவதாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் எட்டு பேர் கொல்லப்படுவோம் என்பது தெரிந்து இருந்தவர்களே… அதாவது, மக்கள் அதிகாரம் போன்ற வன்முறை போராட்ட வழிமுறைகளில் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்களே. துப்பாக்கியைக் கையில் ஏந்த நாள் பார்த்துக் காத்திருப்பவர்களே. அதே துப்பாக்கியால் கொல்லப்படுவோம் என்பதைத் தெரிந்து வைத்திருப்பவர்களே. அந்தவகையில் காவல்துறை அப்பாவிகளைக் கொன்றுவிடவில்லை. அப்பாவிகள் மேல் குண்டு பாய்ந்துவிடக்கூடாது என்ற அக்கறையுடன் இந்த போராளிகளின் வெகு அருகில் நின்று குறிபார்த்துத்தான் சுட்டிருக்கிறார்கள். வேன் மேல் ஏறி நின்ற மஞ்சள் டீஷர்ட் காவலரின் ஷூட்டிங் போஸ் திட்டமிட்ட திசை திருப்பலே.
இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும் என்பது காவல்துறைக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அதனால்தான் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பாதிரியார்களுக்கும் காவலர்கள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டிருக்கிறார்கள். அவர்களும் வெகு கவனமாக தூத்துக்குடி பக்கமே தலைவைக்காமல் இருந்துவிட்டிருக்கிறார்கள். காவலர்கள் அப்பாவி மக்களிடம் எதுவும் சொல்லவில்லை. அப்பாவி மக்களைக் கொல்லவும் இல்லை. மக்கள் அதிகாரம் குழுவினர் இந்த அமைதிப் போராட்டத்தை வன்முறைப் பாதைக்குக் கொண்டு சென்று நாட்டில் புரட்சியைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு வந்திருக்கிறார்கள். காவலர்கள் அவர்களுக்குப் புரியும் மொழியில் பதில் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.
அடுத்ததாக, 17 வயது பெண் போராளி ஸ்நோலின் கொல்லப்பட்ட விதம் நிச்சயம் கொடூரமானது. எந்தவகையிலும் ஏற்க முடியாதது. கொல்லப்பட்ட வன்முறைப் போராட்டப் போராளிகள் ஆயுதம் இல்லாமல் இருந்தபோது கொல்லப்பட்டிருக்கிறார்கள்(இந்து இயக்கத் தொண்டர்களும் ஆயுதங்கள் இல்லாதபோதுதான் கொல்லப்பட்டார்கள்). கொன்றது அரசுப் பணியாளர்கள். இந்த இரண்டு விஷயங்கள்தான் கவனத்தில் கொள்ளவேண்டியவை.
இந்தப் போராளிகள் நாளை ஆயுதங்களுடன் தாக்க வரும்போது கொல்வதில் எந்தக் குற்ற உணர்ச்சியும் யாருக்கும் இருக்கப் போவதில்லை. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இது தினமும் நடக்கும் செயல்தான். காஷ்மீரிலும் வட கிழக்கிலும் நடக்கும் அவை பற்றி நாம் என்றேனும் கவலைப்பட்டிருக்கிறோமா…
காந்திய அஹிம்சை வழிகளில் மிகுந்த நம்பிக்கை இருக்கும் எனக்கு காந்தியைப் போலவே உலகப் போர் போன்ற நேரங்களிலும் உள்நாட்டுப் போர்களிலும் எளியவர்களைக் காக்க வன்முறை தவிர்க்க முடியாதது என்பது புரியும். ஆனால், வன்முறைப் போராளிகள் ஆயுதங்களுடன் இருந்திராதபோது சுட்டுக் கொன்றது நிச்சயம் மிக மிகத் தவறு. அவர்கள் பொதுச் சொத்துக்கு தீங்கு விளைவித்தபோதிலும் அரசுப் பணியாளர்களுக்கு துன்பங்கள் விளைவித்தபோதிலும் ஆயுதம் இல்லாத ஒருவரை அரசு எந்திரம் சுட்டுக் கொன்றது நிச்சயம் தவறுதான். முட்டுக்குக் கீழே சுடுதல், சிறைப்பிடித்தல், கடுமையான சிறைத் தண்டனை தருதல் இவைதான் செய்திருக்கவேண்டும்.
தமிழக அரசு இந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து இது போன்ற கலகக் கும்பல்கள் மக்களைத் திரட்டிப் போராட இடம் கொடுத்தது முதல் தவறு. ஊடகங்களில் அது குறித்த பெருமித சாகச உணர்வை ஊட்ட அனுமதித்தது அடுத்த தவறு. அந்தத் திட்டங்கள் எல்லாம் பல ஆண்டுகளாக நடந்து வருபவை. அவை தொடர்பாக கலகக் கும்பல்கள் முன்வைக்கும் அவதூறுகள், மிகை பயங்கள் எல்லாம் ஆதாரமற்றவை என்று தன் தரப்பு நியாயங்களை வலுவாக எடுத்துச் சொல்லாதது அதைவிடப் பெரிய தவறு. இத்தனை நாட்கள் இப்படி இம்பொடண்டாக நடந்துகொண்டுவிட்டு இன்று ஒரே நாளில் இப்படி விறைத்துக் கொண்டு நின்றது எல்லாவற்றையும்விடப் பெரும் தவறு (கொன்றது வன்முறையில் நாட்டம் கொண்ட போராளிகளையே என்ற போதிலும்).
இன்றைய தமிழக மாநில அரசானது, மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறது என்ற போர்வையில் அனைத்துக் கீழறுப்பு வேலைகளையும் செய்துவருகிறது. சோனியா-காங்கிரஸையும் சசிகலாவையும் குறைத்து மதிப்பிடுவதால் நேர்ந்துவரும் அபாயம் இது. நரேந்திர மோதியின் மத்திய அரசானது தனக்கும் இந்த மாநில அரசுக்கும் இடையில் எந்தவிதத் திரைமறைவுப் புரிந்துணர்வும் கிடையாது… மத்திய அரசின் நலத்திட்டங்களை முறையாக அமல்படுத்த எல்லா மாநில அரசுகளைப் போலவே தமிழக அரசுடனும் இயல்பான புரிந்துணர்வு மட்டுமே இருக்கிறது. அவ்வளவுதான் என்ற செய்தியை மிகத் தெளிவாகத் தெரிவித்தாக வேண்டிய நேரம் இது.
ஒருவேளை அரசியல் வெற்றிடம் உருவாகியிருக்கும் சூழலில் மெள்ளத் தன் காலை அழுத்தமாக ஊன்ற இந்த நான்காண்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தால் அதுகூடத் தவறில்லை. ஆனால், இயல்பான புரிந்துணர்வோ, அரசியல் எதிர்பார்ப்போ எதுவாக இருந்தாலும் அந்தக் கணிப்பு வெகு மோசமாகத் தோற்றுவிட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு உடனடியாகச் செயல்பட்டாகவேண்டும். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சியைப் பிடிப்பது எவ்வளவு அவசியமோ அதைவிடத் தமிழகத்தில் நன்மதிப்பைப் பெறுவது மிக மிக அவசியம். கப்பலில் ஓட்டை விழும் பகுதியில்தான் முதலில் கவனத்தைக் குவிக்கவேண்டும்.
இந்த அரசைக் கலைப்பதன் மூலம்தான் அதைச் சாதிக்கமுடியும் என்றால் அப்படியே ஆகட்டும்.
இதில் இன்னொரு வலுவான சந்தேகமும் எழுகிறது. கொல்லப்பட்டவர்கள் அனைவருமே அப்பாவிப் பொதுமக்கள் என்று சொல்வது கூடுதல் பொலிட்டிகல் மைலேஜைத் தரும் என்ற நிலையிலும் அவர்கள் இடதுசாரிப் போராளிகளே என்று தெளிவாக வெளிப்படையாகச் சொல்வது ஏன்..? அந்தப் போராளிகளிடம் உங்கள் தியாகத்தை அங்கீகரிக்கிறேன் என்ற போர்வையிலும் காவல்துறையிடம் நீங்கள் அப்பாவிகளைக் கொல்லவில்லை என்று வெளிப்படையாகச் சொல்கிறேன் என்றும் சொல்லி இரு தரப்பு நல்லெண்ணத்தையும் பெறும் நோக்கம்தான்.
அடுத்ததாக, இடதுசாரிப் போராளிகளைக் கட்டம் கட்டிக் கொன்றிருப்பது வேறொரு சந்தேகத்தையும் எழுப்புகிறது. முதலாவதாக அவர்களை விரைவிலேயே ஆயுதத்தைத் தூக்க வைக்கும் நோக்கில் இது நடத்தப்பட்டிருக்கும். மாவோயிஸ்ட்கள், நக்ஸல்கள், கேரள கம்யூனிஸ்ட்கள் எல்லாரும் ஆயுதத்துடன் திரியும் நிலையில் தமிழகத்தில் மட்டும் வினவு… புலம்பு என்று இணையதளப் போராளியாகவே இருந்துவரும் அந்த கும்பலை வன்முறைக்கு விரைவில் தள்ளுவது ஒரு நோக்கம். அதைவிட, பின்னாளில் தமிழ் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக நிற்க வாய்ப்பு உள்ள அவர்களை முளையிலேயே கிள்ளுவது இன்னொரு நோக்கம். அல்லது, அவர்கள் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்காமல் பிரிவினைப் போருக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்கவேண்டும் என்ற பாடத்தைப் புகட்டவும் இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.
இலங்கையில் இடதுசாரி இயக்கங்கள் முதலில் ஒழிக்கப்பட்ட பிறகுதான் தமிழ்ப் பிரிவினைவாதம் தலை தூக்கியதையும் வட கிழக்கில் பிரிவினைக் கும்பல்களுக்கும் வர்க்கப் போராளிகளுக்கும் இடையில் மோதல் இருந்துவருவதையும் நினைவில் கொள்ளவும்.
இப்போது இன்னொரு சந்தேகம் வருகிறது… மஃப்டியில் இந்த இடதுசாரிப் போராளிகளுக்கு வெகு அருகில் இருந்து சுட்டவர்கள் காவலர்கள்தானா..? இந்த துப்பாக்கிச்சுட்டில் அதிகம் பலனடைவது யார் என்ற கேள்வியைக் கேட்டுப் பார்த்தால் உண்மை புரியும்.
காவல்துறை பொதுவெளியில் தலை குனிய நேர்ந்திருக்கிறது. மாநில அரசு அவர்களைக் காப்பாற்ற வேண்டிய தர்ம சங்கட நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. மத்திய அரசும் கிட்டத்தட்ட அதையே செய்ய நேர்ந்திருக்கிறது. இடதுசாரி இயக்கத்துக்கு சில தியாகிகள் கிடைத்திருக்கிறார்கள். தேவாலய முற்றத்தில் இனி இந்தப் பகுதியில் எங்களைக் கேட்காமல் எதுவும் நடக்க முடியாது என்று தீர்மானம் இயற்றியிருக்கிறார்கள்.
காவல்துறையோ, மாநில அரசோ, மத்திய அரசோ இதைச் செய்திருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவு. ஏனெனில் இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் நன்மையைவிட தீமையே அதிகம். இடதுசாரி இயக்கங்கள் தமக்குத் தியாகிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்திருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. அவர்களில் ஒருவர் கொல்லப்படும் முன் எதிர் தரப்பில் பத்து பேரையாவது கொன்றுவிடவேண்டும் என்ற வெறி உடையவர்கள். எனவே…
******
இதன் நீட்சியாக இன்னொரு விஷயமும் சொல்லவேண்டியிருக்கிறது. கும்பல்களைப் பயன்படுத்தி அரசியல் என்பது ஒரு அபாயகரமான கலையாகவே பரிணமித்திருக்கிறது. இந்திய நிகழ்வுகளை இந்திய அளவோடு நிறுத்திப் பார்க்காமல் சர்வ தேசக் கரங்கள் இதில் இருக்கின்றன என்ற உண்மையை ஏற்றுக்கொண்டு யோசித்தால் இந்த உண்மை புரியும்.
கும்பல் வன்முறையில் ஈடுபடும் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதால் ஒரு கும்பல் கூடும் போது விஷமிகளைக் கொண்டு வன்முறையை நிகழ்த்தி அந்தக் கும்பல் மேல் பழிபோட்டு அப்படியான கும்பல் இனி கூட விடக்கூடாது என்ற நோக்கில் செயல்படும் போக்கு அதிகரித்துவந்திருக்கிறது. அந்தக் கும்பலைக் கூட்டும் இயக்கங்களும் தன் ஆட்கள் இப்படியான வன்முறையில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று நம்பி அவர்களைக் காப்பாற்றவே முயற்சி செய்வர். அது அந்த கும்பல்தான் வன்முறையில் ஈடுபட்டது என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமாகவே ஆகிவிடும். ஆக செய்யாத தவறுக்கான பழியை அந்த இயக்கம் காலமெல்லாம் சுமக்க நேரிடும். வெறும் சதிக்கோட்பாடாக ஒதுக்கித் தள்ளப்படும் இதன் பின்னால் வலுவான சாத்தியம் இருக்கிறது.
ராமபிரானுக்கான கரசேவை – செங்கல் பூஜை இந்தியா முழுவதும் நடந்தது. ரத யாத்திரை நடந்தது. மிகப் பெரிய மக்கள் திரள் அதில் பங்கெடுத்தது. ஆனால், துளி வன்முறை கூட நடக்கவில்லை. அரசு கரசேவகர்களைச் சுட்டுக் கொன்ற பிறகும் அந்த கும்பல் இலக்கில் வெகு தெளிவாக குறியாக இருந்து அந்தக் கட்டுமானத்தை மட்டுமே இடித்துவிட்டு அமைதிகொண்டது. ஆனால், அந்த கும்பல் பெரும் வன்முறையை நிகழ்த்தும் என்று காத்திருந்தவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அதனால்தான், அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற வலுவான சாத்தியத்தை கோத்ரா எரிப்பு மூலம் நிகழ்த்தி அதற்கான எதிர்வினையில் பல்வேறு விஷமிகளின் கைவேலையில் ஆரம்பித்து ஊடகத் திரிபுகள், மிகைப்படுத்தல்கள் என அனைத்தையும் செய்து தேசத்தில் பிரிவினையை விதைத்தார்கள். பாஜக இன்றும் அந்தப் பழியில் இருந்து மீளவே முடிந்திருக்கவில்லை. ஏனென்றால் கும்பல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் என்ற நம்ப வலுவான காரணத்தை அங்கு உருவாக்கிவிட்டார்கள்.
தமிழகத்தை எடுத்துக்கொண்டால் கிறிஸ்தவ-இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் முகமூடியான விசிகவுடன் சேர்ந்து இந்துத்துவத்துக்கு எதிராகச் செயல்பட அழைப்புவிடுக்கப்பட்ட பாமக அதை ஏற்க மறுத்ததால் தர்மபுரி- நாயக்கன் கொட்டாய் கலவரம், சேஷபுரத் தேர் எரிப்பு, பேருந்துகள் உடைப்பு என வன்முறைக் கட்சியாக நிறுவியதிலும் இந்த கும்பலைப் பயன்படுத்தும் அரசியல் ஒளிந்திருக்கிறது. மெரீனா கூட்டம் திறந்தவெளியில் கூடியதிலும் அதைத் தொடர்ந்து காவல்துறையே வன்முறையில் ஈடுபடுவதுபோல் காவலர்கள் மத்தியில் இருந்தே வீடியோ எடுத்து வெளியிட்டதிலும் இப்போது வேனின் மேல் பளிச்சென்ற மஞ்சள் டீஷர்ட்டுடன் ஏறி நின்று போஸ் கொடுத்ததிலும் கும்பலை நல்லவர்களாகவும் அரசை வன்முறையாளர்களாகவும் சித்திரிக்கும் திட்டமிடல் இருக்கிறது.
இந்து சார்பு கும்பல் என்றால் அதை வன்முறையாகச் சித்திரித்தல்… பிரிவினைவாத இந்து எதிர்ப்பு கும்பல் என்றால் அரசை வன்முறையாளராகச் சித்திரித்தல் என அது இயங்குகிறது. கும்பல் செய்யும் வன்முறையைவிட கும்பலை வைத்து அரசியல் செய்ய விரும்பும் சக்திகளின் வன்முறை மிக மிக அதிகம். மிகவும் தந்திரமானது. மிகவும் அபாயகரமானது. இதனால்தான் நான் எப்போதும் இந்து இயக்கங்கள் பெண்களை முன்னிறுத்தி கூட்டங்கள் கூட்டவேண்டும் என்றும் காவலர்கள் மயக்க மருந்து தோட்டா, போராட்டத்தில் பங்குபெற்றவர் மேல் அழியாத மையைத் தெளித்தல் (கூட்டமாக இருக்கும்போதுதான் இவர்களுக்கு பலம். தனியாக அந்த மையுடன் வெளியில் தலைகாட்டவே பயப்படுவார்கள்), பின்னர் அவர்களைத் தனியாக விசாரித்தல் என அரசு செயல்படவேண்டும் என்றும் சொல்கிறேன்.
எதிரிகள் விரிக்கும் வலையில் சிக்காமல் இருப்பதுதான் சாணக்கிய தந்திரம்.