முத்கல் குழு விசாரிக்க பி.சி.சி.ஐ., எதிர்ப்பு

745

சீனிவாசன், தோனி உள்ளிட்ட 13 பேர் மீதான புகாரை முத்கல் குழு விசாரிக்க, பி.சி.சி.ஐ., எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் சூதாட்டம் குறித்து, நீதிபதி முத்கல் குழு, சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை அறிக்கை அளித்தது. இதில், தோனி, சீனிவாசன் உள்ளிட்ட 13 பேர் மீது புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்க, பி.சி.சி.ஐ., நியமித்த ரவிசாஸ்திரி உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய குழுவை ஏற்க, சுப்ரீம் கோர்ட் மறுத்தது. தவிர, இதை முத்கல் குழுவே விசாரிக்க பரிந்துரை செய்தது. இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதி ஏ.கே.பட்னாயக் அடங்கிய ‘பெஞ்ச்’ முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது முத்கல் குழு சார்பில், இந்த விசாரணையை தொடர, ‘முன்னாள் சி.பி.ஐ., ஸ்பெஷல் இயக்குனர் எம்.எல்.சர்மா, சென்னை, டில்லியை சேர்ந்த, உதவி கமிஷனர் அந்தஸ்துக்குட்பட்ட 2 சீனியர் அதிகாரிகள் தேவை, 4 மாத கால அவகாசம் வேண்டும்,’ என, கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது பி.சி.சி.ஐ., குறுக்கிட்டு, ‘ஏற்கனவே முத்கல் குழு கொடுத்த அறிக்கையில் பல பிழைகள் உள்ளன. இந்தக்குழு விசாரணையை தொடரக் கூடாது. சீனிவாசன் மீண்டும் தலைவர் பொறுப்பேற்க அனுமதிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் புதிய விசாரணைக்குழுவை நியமிக்க வேண்டும்,’ என, தெரிவித்தது.
இதையடுத்து, எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல், வழக்கை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. இன்னும் ஓரிரு நாட்களில், புதிய குழு தொடர்பாக கோர்ட் தனது முடிவை தெரிவிக்கும் எனத் தெரிகிறது.
புதிய குழு நான்கு மாதத்தில் விசாரித்து, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யும். இதன் பின், செப்டம்பர் மாதம் தான், சூதாட்ட வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.
மீண்டும் மறுப்பு
‘பி.சி.சி.ஐ., தலைவர் பொறுப்பில் இருந்து ஒதுக்கப்பட்டதால், சீனிவாசன் ஐ.சி.சி., தலைவர் பதவிக்கு செல்வதை சுப்ரீம் கோர்ட் தடை செய்ய வேண்டும்,’ என, பீகார் கிரிக்கெட் சங்க செயலர் ஆதித்ய வர்மா சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதை நீதிபதி ஏ.கே.பட்னாயக் தலைமையிலான ‘பெஞ்ச்’ ஏற்க மறுத்தது. இவ்விஷயத்தில் தங்களுக்கு ஆர்வம் இல்லை என்றும், சூதாட்டம் குறித்த வழக்கில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்தது.

SHARE