முஸ்லிம் காங்கிரஸ் கருப்பில் காரில் ஏறுவதோ வெள்ளைக் காரில் ஏறவதோ என்பது முக்கியமல்ல. ரணில் என்றும் குடிகாரன் ஓட்டும் காரில் ஏறக்கூடாது
இலங்கை முஸ்லிம் அரசியல் மிக நீண்ட வரலாற்றைக்கொண்டது, அங்கு பல்வேறு சிந்தனைகள்,கருத்துகள்,கட்சிகள்,ஆளுமைகள்,தனிமனிதர்கள் தாக்கம் செலுத்தியிருக்கிறார்கள். அவ்ர்கள் ஒவ்வொருவரும் ஏற்படுத்திச்சென்ற தாக்கங்கள் எமது அரசியலில் இன்றும் இருக்கின்றன, இந்நிலையில் பல்லின சமூகசூழல் ஒன்றில் வாழும் எம்மைப்போன்ற ஒரு சமூகம் தனது அரசியல் நடந்தையில் அதிக கவனம் செலுத்தவேண்டிய தேவையுடையதாக இருக்கின்றது.பலகருத்துகளும் அரசியல் நடத்தைகளும் ஒருபக்கம், அரசியலில் வினைத்திறனான செயற்பாட்டின் தேவை மருபக்கம்; எனவே இத்தகைய இரு நிலைகளையும் கருத்தில் கொண்டு நோக்கும்போது, நாம் எமது அரசியல் குறித்த ஒரு மீளாய்வின் பால் தேவையுடையவர்களாக இருப்பதாகவே எமக்குத்தோன்றுகின்றது.
பொதுவாக மேற்படி அம்சம் எம்மை பல வழிகளில் சிந்திக்கச் செய்கின்றது. பெருமான்மை சமூகங்களுடன் ஒன்றித்துப்போன அரசியல் நடைமுறையிலிருந்து மிகுந்த விமர்சனங்கள், எதிர்ப்புகள், சதிமுயற்சிகள் என்பவற்றைக்கடந்து தனித்துவ சமூகமாக இனத்துவமாக அரசியலில் தடம் பதித்து: உரிய இலக்கை அடைவதற்கு முன்னமே துண்டுதுண்டாய் சிதறிப்போய் நாட்டுக்கு ஒரு கட்சி என்ற நிலைமாறி ஊருக்கொரு கட்சி அல்லது ஒவ்வொரு மாற்றுக்கருத்துக்கும் ஒரு கட்சி என்ற நிலை தோன்றிவிட்ட சூழலில் நாம் மேற்படி விடயம் குறித்து ஆராய்கின்றோம்.
இஸ்லாத்தின கருத்துசார்ந்த வளர்ச்சியில் எமதுசமூகம் முதிர்ச்சியடையாவிட்டாலும் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் ஒருவித பக்குவநிலை இன்னும் ஏற்படவில்லை என்றுதான் நான் கருதுகின்றேன், குறிப்பாக மார்க்கத்தையும் அரசியலையும் சேர்த்து நோக்கும் உன்னத நிலை எட்டப்படாத ஒரு சமூக அமைப்பில் நாம் மாற்று அரசியல் குறித்து கருத்துப்பறிமாற்றம் செய்கின்றேம். இந்த ஆரம்ப அறிமுகத்துடன் எமது மாற்று அரசியல் குறித்த கருத்துப்பரிமாற்றம் பின்வரும் முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருக்கும் என நான் கருதுகின்றேன்
01- தற்போதைய அரசியல் நடத்தைகளூடாக முன்வைக்கப்படும் மாற்றுக்கருத்துகள்
02-முஸ்லிம் அரசியல் வரலாறு எமக்கு முன்வைக்கும் அனுபவப்பாடங்கள்
03- இஸ்லாமிய அரசியல் அடிப்படைகளும் சமகால முஸ்லிம் உலக அரசியலும்
04- மாற்றுக்கருத்தின் நடைமுறை வடிவம்
என்பனவே அத்தகைய முக்கிய பகுதிகளாகும்
இலங்கை முஸ்லிம் சமூகத்தில் மாற்று அரசியல் கருத்து, சக்தி என்பதற்கான தேவையானது: தற்போது நடைமுறையில் இருக்கின்ற அரசியல் கருத்து, சக்தி என்பவற்றின் குறைபாடுகள், போதாத்தன்மை என்பவற்றின் காரணமாக மட்டும் எழுந்த ஒன்று அல்ல: மாற்றமாக முஸ்லிம் அரசியல் என்ற சுலோகத்துடன் சாக்கடை அரசியல் நடைபெறும் சூழலில் மிகவும் சரியான முஸ்லிம் அரசியல் கருத்தும் சக்தியும் தூரத்தே வீசப்பட்டுள்ளது. அதனை மிகச்சரியான வடிவில் எடுத்தாள்வதற்கான முயற்சியே முஸ்லிம் அரசியலில் மாற்றுக்கருத்தும் சக்தியும் என்ற தோற்றப்பாட்டின் நோக்கமாகும்.
இதனை முன்னிருத்திகின்ற போது சமகால முஸ்லிம் அரசியல் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் அவசியப்படுகின்றன. சமகால அரசியல் நடத்தைகளின் பால் மக்களின் நிலைப்பாடும் நம்பிக்கையும் எத்தகையது என ஆராய்தல் எமது இந்தக் கருத்துக்கு வலுச்சேர்க்கும்.
இஸ்லாமிய அரசியல் என்பதற்கும் முஸ்லிம் அரசியல் என்பதற்கும் இடையே மிகப்பாரிய வேறுபாடு இருக்கின்றது. இலங்கையில் இஸ்லாமிய அரசியல் என்பது இனத்துவம் சார்ந்ததோ, பிரதேசம் சார்ந்ததோ அல்ல என்பதும் அது மனிதம் சார்ந்ததும், மக்களின் நலன் சார்ந்ததுமாகும் என்பதும் அழுத்திச் சொல்லப்பட வேண்டியவை.
முஸ்லிம் சமூக நலன் முதன்மைப் படுத்தப்படுவதைவிடவும் மனித நலன் முதன்மைப்படுத்தப்படுவதே இஸ்லாமிய அரசியலின் அடிப்படை நாதமாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கை போன்ற இனத்துவ சிந்தனையின் அடிப்படையில் அமைந்த தேசத்தில் முஸ்லிம்களின் அரசியல் தனித்த பங்குபற்றுதலுடன் இருக்கும் அதே வேளை உண்மையான இஸ்லாமிய அரசியலின் அடிப்படைக்கருத்துக்களை விட்டும் விலகியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இஸ்லாம் அதற்கே உரித்தான ஒரு அரசியல் ஒழுங்கை தன்னகத்தே கொண்டுள்ளது. அது அல்லாஹ்வே ஆட்சிக்குரியவன் என்றும் மனிதர்கள் அவனின் பிரதிநிதி என்றும் மனிதர்கள் ஆட்சியாளர்கள் அல்ல அல்லாஹ்வின் கட்டளையை நடைமுறைப்படுத்தும் அவனது அடிமைகள் என்றும், உலகத்தில் அல்லாஹ்வின் பிரதிநிதி என்றும் அழுத்தமாகக் கூறுகின்றது. அல்லாஹ்வின் கட்டளையை நடைமுறைப்படுத்தும வாழ்வை ஒழுங்கமைப்பதற்காகவே தலைமைத்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்ற கருத்தையும் கொண்டுள்ளது.
இஸ்லாத்தின் அத்தகைய உயரிய இலக்கின் அடிப்படையில் அமையப்பெற்ற அரசியல் ஒழுங்கைப் போன்றே – சமகால சமூக வளர்ச்சி கருதிய தற்காலிக அரசியல் ஒழுங்கும் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரையில் அத்தியாவசியமானது. இது விடயத்தில் இஸ்லாத்தின் நெகிழ்வுத்தன்மைகள் பற்றி பிரிதொரு அத்தியாத்தில் விரிவாகக் காண்போம்.
இத்தகைய மிக அடிப்படையான கருத்துப்பரிமாற்றங்களுடன் இலங்கை முஸ்லிம் சமூக அரசியலில் மாற்றுச் சக்தியொன்றிற்கான தேவை குறித்த வாதம் முக்கியத்துவம் பெறுகின்றது. ஏன் முஸ்லிம் சமூகம் மாற்று அரசியல் சக்தி குறித்து கலந்துரையாட வேண்டும், உண்மையில் அத்தகைய தேவை எம்மிடம் இருக்கின்றதா என்ற வினாவிற்கு விடை காண்பது இந்த அத்தியாத்தின் நோக்கமாகும்.
இலங்கைத் தேசத்தில் முஸ்லிம்கள் தனித்துவமான அரசியல் ஒழுங்கை நாடவேண்டுமா என்ற விவாதம் தற்போதைக்கு அவசியப்படாத அளவிற்கு காலாவதியாகிவிட்டது. இருப்பினும் சுதந்திரத்தை தொடர்ந்துவந்த காலப்பகுதியில் ”இலங்கையர்|| என்ற ஒருமை அடையாளத்தை விடவும் இனத்துவம் சார்ந்த அடையாளம் முதன்மை பெறுகின்றது. பொதுவாக இத்ததைகய இனத்துவ அடையாளம் இருக்கின்ற சூழ்நிலையில் எமது அடையாளத்தை இழந்து மாற்று இனங்களுடன் நல்லெண்ணத்துடன் நடக்க முற்படுவதும் அவர்களிடமிருந்து நல்லெண்ணத்தை எதிர்பார்ப்பதும் தங்கப்பாத்திரத்தில் பிச்சை எடுப்பதற்கு ஒப்பானது.
பெரும்பான்மைகளுடன் ஒன்றித்துப்போய் அவர்களுடன் ஒன்றறக் கலந்து அரசியல் செய்வதை விடவும் தனியான சக்தியாக அரசியலில் பங்கெடுத்து கௌரவமான அந்தஸ்துடன் அவர்களுடன் தேசத்தின் அபிவிருத்திக்கும் நலனுக்கும் ஒத்துழைப்புடன் செயற்படமுடியும் என்பது இற்றைவரையான அனுபவப்பாடம். எனவே இங்கு முஸ்லிம்கள் தனித்து அரசியல் செய்ய வேண்டும் என்பதில் பெரும்பாலான முஸ்லிம்கள் உடன்பாட்டுடனேயே இருக்கின்றார்கள்.
அதாவது முஸ்லிம் காங்கிரஸ் உட்பட இன்னும் பல முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் இருக்கின்ற சூழலில் முஸ்லிம்களுக்கென்ற தனியான மாற்று அரசியல் கருத்தும் கட்சியும் அவசியமானதுவா: இங்கு மிக நிதானமாக எமது கருத்துப் பரிமாற்றங்களை நகர்த்த வேண்டும். முஸ்லிம் காங்கிரஸை ஒரு தனியான அலகாகவும் இதர முஸ்லிம் கட்சிகளை தனியான அலகாகவும் நோக்குவது பொருத்தமாக இருக்கும்.
ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் முஸ்லிம் சமூகம் குறித்து உடன்பாடானதும், முரண்பாடானதுமான கருத்துகளை தம்வசம் கொண்டுள்ளன, எனவே அவற்றின் கருத்துகளுக்கு மதிப்பளித்தும், நாம் எடுத்துக்கொண்ட கருப்பொருளின் தேவைகருதி ஒருசில எடுகோள்களுக்காக ஒரு சில கட்சிகளின் நடத்தைகளை இங்கு குறிப்பிடுகின்றேன், அவை மிகப்பொதுவானதாகவே நோக்கப்படல் வேண்டும்.
முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி தவிர்ந்த ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் அவற்றின் தோற்றத்தில் முஸ்லிம் காங்கிரஸின் நேரடி அல்லது மறைமுக தாக்கம் இருப்பதை அவதானிக்க முடியும். முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தமது அரசியல் நடத்தைக்கான தேவை கருதி முஸ்லிம் சமூக பிரதிநிதிகளாக தம்மை நிலை நிருத்தும் நோக்கில் பல்வேறு கட்சிகளைத் தொடங்கினர். தேசிய முஸ்லிம் காங்கிரஸ், அஷ்ரப் காங்கிரஸ், முஸ்லிம் ஐக்கிய முன்னணி, ஆருNயு, ருஆஆயு, னுருயு, உலமா கட்சி என்பன போன்ற சமகாலப் கட்சிகளும் முஸ்லிம் கட்சி போன்ற சற்று காலத்தால் முந்திய கட்சிகளும் முஸ்லிம் காங்கிரஸின் நேரடி அல்லது மறைமுக தாக்கத்திற்கு உட்பட்டனவே..
அவற்றின் தலைமைகள் தாம் கட்சி தொடங்கியதன் நோக்கம்: முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டம், அபிவிருத்தி என்றும் முஸ்லிம் காங்கிரஸின் சமூகத்துரோகமும்தான் நாம் கட்சி தொடங்க காரணம் என்று, PழுஐNவு 04 – அதற்கான நியாயமான காரணம் முஸ்லிம் சமூகத்தால் மிகவும் எளிதாக உணரப்பட்டேயுள்ளது. அதன் வெளிப்பாடகவே அக்கட்சிகள் தனித்து அரசியல் களம் இறங்குவதற்கு மறுப்பதும் பெரும்பான்மைக் கட்சிகளின் குடைக்குள் அடைக்களம் தேடுவதும் அமைச்சுப்பொருப்புக்களை முன்னிருத்தி பேரம் பேசுவதும் அமைந்துவிட்டுள்ளது. மிக நீண்ட விவாதத்திற்கு உட்படுத்த முன்னமே அத்தகைய அரசியல் வாதிகளின் மீதும் அரசியல் கட்சிகளின் மீதும் முஸ்லிம் சமூகம் நம்பிக்கை இழந்தே இருக்கின்றது.
இருப்பினும் கூட ஒரு சில அவதானங்களை இங்கு முன்வைக்க முடியும்.
சிறு முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அத்தகைய கட்சிகள் முதன்மைப்படுத்திய அம்சங்களும். அவற்றின் பலவீனமான பக்கங்களும்
‘சில பல காரணங்களுக்காக கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவர், அல்லது வெளியேருவர். அவசரமாகக் கூடி தமது பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்திற்கு அவரசப் பாதுகாப்புத்தேடுவர், ஏதாவது பெரும்பான்மைக் கட்சியுடன் உடன்பாடு கண்டுகொள்வர் அல்லது ஏலவே எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் வெளியேருவர்
கட்சியைப் பதிவர், அறிக்கை விடுவர், வசை பாடுவர் சிலபோது சில அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுவர். இத்தகைய நடவடிக்கைகள் மக்களைப் பொறுத்தவரையில் பழகிப்போன அம்சமாக மாறிவிட்டது. அதுமட்டுமின்றி அத்தகைய கட்சிகளும் – அதன் தலைவர்களும் முஸ்லிம்களின் உரிமைப்போராட்ட விடயத்தில் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை முன்வைப்பதும், வாய்ச்சவாடல்களை வெளியிடுவதும் மிகப்பொதுவாக மக்களால் அவதானிக்கப்பட்ட அம்சங்களாகும்.
குறிப்பிட்ட ஒரு தனிநபரின் அல்லது குழுவின் நன்மைகள், நலன்களும் முதன்மைப்படுத்தப்படுவதும் கட்சியின் அரசியல் இயக்கத்தின் நலன்கள் புறந்தள்ளப்படுவதும் இத்தகைய சிறு முஸ்லிம் கட்சிகளின் செல்வாக்கு எடுபடாமல் போனமைக்கான காரணிகளுள்; ஒன்றாகும். அப்படிச் சிந்திருந்தால் தலைமைத்துவத்துடனும் கட்சி உயர் பீடத்துடனும் ஏற்பட்ட முறுகல்கள் அமைச்சுப் பொறுப்புக்களை நோக்கி அவ்வளவு அவசரமாக அவர்களை அடித்துச் செல்லாது கட்சியின் மீதும் முஸ்லிம் சமூக அரசியல் மீதும் கொண்ட பற்றுறுதி மாற்றுக்கருத்தொன்றை மிகச்சக்தி வாய்ந்ததாக தோற்றுவித்திருக்கும் அல்லது தான்தோன்றித்தனமான தலைமைத்துவத்தை துடைத்தெறிந்திருக்கும்.
குறிப்பிட்ட ஒரு பிரதேசம் சார்ந்த அல்லது தேர்தல் மாவட்டம் சார்ந்த செல்வாக்கும் தேசிய ரீதியிலான செல்வாக்கற்ற தன்மைகளும் அத்தகைய கட்சிகளின் யதார்த்தமான பின்னடைவுகளுக்குக் காரணம் எனலாம்.
பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்துவிட்டு அவர்களது நலன்களுக்கு அப்பாற்பட்டு செயற்பட முடியாதிருத்தல் – இத்தகைய சிறு கட்சிகளின் மீதான மக்களின் அவநம்பிக்கைக்கு காரணம் எனலாம். அதாவது மிகக்கிட்டிய காலத்து நிகழ்வான பொத்துவில் படுகொலை சம்பவத்தின் போது அதே பிரதேசத்திலிருந்து பாரளுமன்றம் சென்றவர்கிளின் நடவடிக்கைகளும் மாவனல்லை பிரச்சினையின் போது அதே பிரதேசத்திலிருந்து பெரும்பான்மை வாக்குகளை பெறாத முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டுக்கிமிடையேயான வித்தியாசத்தை விளங்கிக்கொள்ளமுடியுமாக இருந்தால் – இத்தகைய சிறுகட்சிகளின் பலம் குறி;த்து உணர முடியும்.
மாவனல்லை இனக்கலவரத்தின் (2001) போது முஸ்லிம் காங்கிரஸ் சக அமைச்சர் ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவந்ததும் அரசிலிருந்து வெளியேரும் அளவிற்கு பிரச்சினை தீவிரப்படுத்தியும் முஸ்லிம்களின் நலன்குறித்து செயற்பட்ட அதேவேளை – பொத்துவில் விவசாயிகள் படுகொலை (2006) சம்பவத்தின் போது அங்குள்ள மக்களின் கருத்து நிலைமைகளையும் மீறி அரசிற்கு சாதகமான சாட்சியங்களைத் திரட்டுவதில் காட்டப்பட்ட அக்கறையும் முஸ்லிம் சமூகத்தின் மீது குறித்த சிறு கட்சிகள் கொண்டுள்ள அக்கறையைத் தெளிவாகக் காட்டும்
பெருமான்மைக் கட்சிகளுடன் இரண்டரக்கலந்து அக்கட்சிகளின் சின்னத்தில் களமிறங்கி வெற்றி பெற்று பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் அமைச்சுப் பொறுப்புக்களையும் பெற்றுக்கொண்டவர்களுக்கும் முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் குறித்து கோஷமெழுப்பி முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்தின் ஆர்வலர்களாக தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட இத்தகைய கட்சிகளின் சொந்தக்காரர்களுக்கும் என்ன வித்தியாசமிருக்கின்றது. முன்னையவர்கள் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் மட்டும் சென்றனர் அவர்கள் இருவரும் முஸ்லிம் சமூகத்தின்; தனித்துவ அரசியல் செய்பவர்கள் அல்ல அப்படி அவர்களால் முடிந்திருந்தால் பெரும்பான்மைக் கட்சிகளின் குடைகளுடன் தேர்தல் களத்திற்கு வந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இப்போதுமல்ல எப்போதும் அவர்கள் தனித்து வரப்போவதில்லை.
இப்படியாக சிறிய கட்சிகள் மீது முஸ்லிம் சமூகம் நம்பிக்கை இழந்த நிலையில் பலமான மாற்றுக் கருத்தொன்றின்பாலும் மாற்று அரசியல் நிறுவனத்தின்பாலும் உள்ள தேவை குறித்த கருத்துப் பறிமாற்றத்தில் – எம் முன்னால் எழுகின்ற அடுத்த அம்சம் முஸ்லிம் காங்கிரசும் அதன் இருப்பும் உள்ள சூழலில் முஸ்லிம்களுக்கென்ற மாற்று அரசியல் ஒழுங்கின் தேவை எத்தகையது என்பதாகும்.
இலங்கையில் முஸ்லிம்களின் தனித்துவ அரசியலுக்கு வழிசமைத்தது முஸ்லிம் காங்கரஸ்தான் – என்ற கருத்திற்கு மாற்றுக் கருத்து நிலவ முடியாது. ஆதன் ஆரம்பமும் அதன் ஸ்தாபகத்தலைவரும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாத நெருக்கம் கொண்டவை – அஷ்ரபுடைய ஆளுமையும் மிகவேகமான நுனுக்கமான முடிவுகளும் இலட்சியத்தலைமைத்துவமும் முஸ்லிம் காங்கிரஸின் பலம். ஆனால் அந்த தலைமைத்துவம்தான் இன்றைய முஸ்லிம் காங்கிரஸின் பலவீன்த்திற்கும் காரணம் என்பதில் பலருக்கு உடன்பாடு இருக்காது.
ஒரு கட்சியின் யாப்பும், நெறிமுறைகளும் முடிவுகளை மேற்கொள்வதற்கும் அசாதாரண சூழ்நிலைகளின் போது வேகமான நகர்வுகளுக்கும் தடையாக இருக்கக்கூடாது என்ற விதியில் அஷ்ரப் அசையாத நம்பிக்கை கொண்டவர். அந்த விதிக்கும் ஸ்தாபகத் தலைவருக்கும் நெருக்கமான தொடர்பு இருந்தது. ஆனால் அந்த ஸ்தாபத் தலைமைத்துவத்தைத் தொடர்ந்து வந்த இரண்டாம் தலைமைத்துவம் குறித்த விதியைக் கையாளுகின்ற பொழுது எழுகின்ற சமதரப்பு நிலைமைகள் தொடர்பில் அக்கறை கொண்டிருக்கவில்லை. எனவேதான் முன்னைய பெருந்தலைவரின் தலைமைத்தவம் காண்பித்த வழிகாட்டல் பின்னைய தலைமைத்துவத்தால் முன்னெடுக்கப்பட முடியாது போனது. எனவேதான் கட்சி பிளவுபடவும், கட்சிக்குள் மூன்றாம் தரமானவர்கள் நுழைவதற்கும் ஏன் தலைமைத்துவத்தின் மீது சேறு பூசவும் இறுதியில் தலைமைத்துவத்தை கலங்க வைத்து கட்சியின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் நிலைமை தோன்றவும் காரணம் என்பது பொதுவான அபிப்பிராயம். இது ஒன்றும் இரண்டு நிமிடங்களில் நிகழ்ந்தேறிவிடவில்லை. சிறுகச் சிறுக வளர்ந்து வந்த புற்று நோய் அது. கட்சியின் யாப்பு: அதன் ஒரு சில விஷேட அம்சங்கள் இத்தகயவர்களை வளர்த்துவிட்டது என்றும் கூறலாம்.
எனவே முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரையில் 1990களில் தேவைப்பட்ட அதிரடித் தலைமைத்துவத்தின் தேவை இப்போது இல்லை. ஆனாலும் அதனையொத்த தலைமைத்துவ மாதிரியை அமுல் செய்வதில் தற்போதைய தலைமைய காட்டும் அக்கறை முஸ்லிம் காங்கிரஸின் மீதான நம்பகத்தன்மைக்கு கேள்வி எழுப்புகின்றது. மசூறாவின் (கலந்துரையாடலின்) அடிப்படையில் அமையப் பெற வேண்டிய தலைமைத்துவம் இன்னும் அதன்பால் ஒழுங்குபடுத்தப்படாமல் இருப்பதுவே இங்கு முன்வைக்கப்படும் முதல் விவாதமாகும்.
அடுத்து கட்சி சமூகத்தின் நலனின் அடிப்படையில் செயல்படுகின்றதா அல்லது சமூகத்தின் நலன் என்று கூறிக்கொண்டு வேறொரு நலனுக்காய் செயற்படுகின்றதா என்ற வினா அண்மைக்கால நிகழ்வுகளை (2002-2007) வைத்து நோக்குகின்ற பொழுது தோன்றுகின்றது.
கட்சியின் இருப்புக்கு சவால் விடும் வகையில் சந்திரிக்காவின் செயற்பாடுகளுக்கு முன்னால் கட்சி மேற்கொண்ட சில நடவடிக்கைகள் சோதனைகள் புயலாய்வரும் பொழுது அழிவோடு சேர்ந்து அழிந்து போகின்ற சூழலை உணர முடிந்தது. உண்மையில் இராஜதந்திர அடிப்படையில் முடிவுகளை மேற்கொண்டிருந்தால் எதற்கு நாம் பேரம் பேசும் பலத்தை இழக்கப் போகின்றோம். தற்பொழுது(2007ல்) மஹிந்த அரசுடன் இணைந்து கொண்டது ஒன்றும் பேரம் பேசும் பலத்துடன் அல்ல என்பதும் தற்காப்பு எண்ணத்துடன் என்பதும் உண்மை. இவற்றையெல்லாம் வைத்து நோக்குகின்ற பொழுது கட்சி எதையோ ஒன்றை இழந்துவிட்டது போன்ற அல்லது எதையோவொன்றை மறைக்கப் பார்ப்பது போன்ற உணர்வு தோன்றுகின்றது. இத்தகைய கட்சியின் மீது முஸ்லிம் சமூகத்தின் நம்பிக்கை தொடர்ந்தும் இருக்கும் என நப்பாசை வைப்பது மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாய் மாறிப்போகும். அது மட்டுமல்ல முஸ்லிம் காங்கிரஸின் இத்தகைய இரண்டாம் கெட்டான் நிலைக்குக் காரணம் முஸ்லிம் சமூகத்தில் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் மாற்றுச் சக்தியின் பிரசன்னமின்மை ஒரு முதன்மைக் காரணமாகவே கொள்ளப்படவேண்டும்
முஸ்லிம் காங்கிரஸின் உள்விவகாரங்களை சந்திக்கு அழைப்பதோ அல்லது அதன் தலைமைத்துவம் உட்பட முக்கியஸ்தர்களின் முகத்திரை கிழிப்பதோ ஒரு ஆரோக்கியமான கருத்துப் பறிமாற்றத்திற்கு உரிய பண்பாக அமையாது. எனவே மிக மேலோட்டமாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கின்ற சூழலில் முஸ்லிம் சமூகத்தில் மாற்று அரசியலின் தேவை குறித்து எமது கவனத்தை செலுத்த முடியும்.
மிகச் சரியாக முஸ்லிம் காங்கிரஸை படிப்பவர்களுக்கு அதன் வரலாற்றை அறிந்தவர்களுக்கு ஒரு உண்மை மிகத் தெளிவாகத் தெரியும்.
முஸ்லிம் காங்கிரஸ் எதற்காக உருவாக்கப்பட்டது? அதன் பணி என்ன? அதன் சமகாலப் போக்கு என்ன என்பதுவே அந்த உண்மை.
முஸ்லிம்களின் உரிமை, முஸ்லிம்களின் இருப்பு, நிலத்தொடர்பற்ற மாகாணம், தனி அலகு, துணை ஜனாதிபதி என அதன் வியாக்கியானமும் விளக்கங்களும் ஏராளம். ஆனால் இன்னதுதான் எமது நிலைப்பாடு என்று வரையறுத்து குறித்துச் சொல்லுங்கள் என்றால் மளுப்பலும் சலப்பலும்தான் விடையாகின்றது.
கிழக்கு மாகாணத்தின் தென்பகுதி (அம்பாரை) மக்கள் தனியலகில் ஆர்வமும் நாட்டமும் கொள்ள வடகிழக்கு(தி-மலை, மட்டக்களப்பு) பகுதி மக்கள் சற்றே முரண்பட்டுக்கொள்ளும் நிலை தொடங்கி வடமாகாண மக்கள் தமது இருப்பை பலவந்தமாக இழந்துள்ள சூழலில் இனத்துவ மோதல் குறித்த முஸ்லிம் காங்கிரஸின் மிகச்சரியான பொருத்தமான நிலைப்பாடு என்ன?
மிக அடிப்படையான இவ்வினா பற்றிய முஸ்லிம் காங்கிரஸின் ஸ்திரமற்ற கொள்கைகளின் மீது முஸ்லிம் சமூகம் எப்படி நம்பிக்கை கொள்ள முடியும். இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தையில் தனித்தரப்புகோரும் அதே நேரம் தனித்தரப்பில் நாம் எதை முன் கொண்டு செல்லப் போகின்றோம் என்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் என்ன சொல்லப் போகின்றது.
இனப்பிரச்சினையில் இப்படியான பலவீனமான நிலைப்பாடுகளுடன் உள்ள வேளையில் தென்னிலங்கையில் ஆளும் தரப்புடன் இணைந்ததான அரசியல் குறித்த கருத்;தை முஸ்லிம் காங்கிரஸ்; மெதுவாக முன்வைக்கின்றது. இதற்கும் முன்னைய பெரும்பான்மைகளுடனான ஒன்றித்த அரசியலுக்கும் என்ன வேறுபாடு இருக்கப்போகின்றது. வடகிழக்கில் முஸ்லிம்களுக்கான தீர்வை மறுதளிக்கும் அரசுடன் தென்னிலங்கையில் முஸ்லிம் காங்கிரஸ் தேனிலவு நடத்துமா..?
இப்படியாக மிக அடிப்படையான அம்சங்கள் குறித்த ஸ்திரமற்ற நிலைப்பாடுகள் மீது மிண்டும் மீண்டும் மக்களை நம்பிக்கையூட்டுவது எவ்வளவு காலத்திற்கு சாத்தியம் எனவே முஸ்லிம் சமூகம் மாற்று அரசியல் கருத்தையும் சக்தியையும் நோக்கி திரும்புவது அத்தியாவசியமாகின்றது.
சுனாமி பேரணர்த்தத்தின் போதும்ளூ யுத்த நிறுத்த காலங்களின் இன வன்முறைகளின் போதும் இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போதும் முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்தை திருப்திப்படுத்தும் நிலையிலிருந்து விடுபட்டு அது தன்னோடு இரகசிய உடன்பாடு கண்டவர்களை திருப்திப்படுத்தும் முக்கிய பணியில் ஈடுபட்டிருந்தது என்ற பரவலான குற்றச்சாட்டு முஸ்லிம் காங்கிரஸ் மீதான நம்பிக்கையைத் தளர்த்தப் போதுமானது. முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்புடன் இருக்கின்றதா அல்லது எதிர்க்கட்சியல் இருக்கின்றதா என்பது கேள்வியல்ல. அது எப்படியிருக்கின்றது என்பதுதான் முக்கியம். இதனை மறைந்த தலைவரின் வார்த்தையில் சொல்வதென்றால் முஸ்லிம் காங்கிரஸ் கருப்பில் காரில் ஏறுவதோ வெள்ளைக் காரில் ஏறவதோ என்பது முக்கியமல்ல. ரணில் என்றும் குடிகாரன் குடிகாரன் ஓட்டும் காரில் ஏறக்கூடாது அவர் அக்கூற்றின் மூலம் நாடியது எந்தக்கொள்கையுடன் என்பதுதான், ஆனால் தற்போது முஸ்லிம் காங்கிரஸின் நிலையையும் மேலுள்ள கூற்றையும் இணைத்துப்பார்க்கும் போது எமக்கு முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.
இப்படியாக சிறிய முஸ்லிம் கட்சிகளிடமும் முஸ்லிம் காங்கிரஸிடமும் நம்பிக்கை இழந்த சூழ்நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகம் மாற்றுக்கருத்தொன்றின் பால் நிச்சயம் வழிகாட்டப்படவேண்டும். அல்லாதவிடத்து இத்தகைய சுயநல அரசியல்வாதிகளும் சந்தர்ப்ப அரசியல்வாதிகளும் எமது சமூகத்தின் தலைவிதியினை மாற்றி எழுதிவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.
மிகப் பலவீனமான சிவில் சமூக ஒழுங்கைக் கொண்டுள்ள முஸ்லிம் சமூகம் தனது செயற்பாடுகள் மூலம் எப்படி முஸ்லிம் அரசியல் கட்சிகளையும் அரசியல் தலைவர்களையும் ஒழுங்குபடுத்தப்போகின்றது. உலமா சபையும், சமூக அமைப்புக்களின் கூட்டமைப்புக்களும் மிகப் பலமான நிலையைக் கொண்டதாக இல்லை என்பது சமகால சிவில் சமூக நடத்தைகளின் மாதிரிகளிலிருந்து எம்மால் புரிந்து கொள்ள முடிந்திருக்கின்றது.
இந்த அத்தியாயத்தின் முடிவில் பொதுவாக நாம் ஒரு கருத்தை மிக ஆணித்தரமாக உணர முடிகின்றது.
சிறிய முஸ்லிம் அரசியல் கட்சிகளோ முஸ்லிம் காங்கிரஸோ அவை தற்போதுள்ள ஒழுங்கில் நிலைத்திருக்கும்வரை அவற்றால் முஸ்லிம் சமூகத்திற்கான தீர்வை, அபிவிருத்தியை, முன்னேற்றத்தை பெற்றுத்தர முடியாது. மாற்றமாக முஸ்லிம் சமூகம் மாற்று அரசியல் கருத்தின் பாலும் சக்தியின் பாலும் தேவையுடயதாக இருக்கின்றது. அம் மாற்றுக்கருத்து அல்லது சக்தி ஒன்றில் குறித்த அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்துவதிலோ அல்லது அவற்றை ஓரங்கட்டும் நேரடி அரசியல் நடவடிக்கையிலோ நிச்சயம் கவனம் செலுத்துவதாய் அமையும். இத்தகைய முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொதுவாக மேற்கொண்ட முதன்மையான தவறு முஸ்லிம் அரசியலை இனத்துவ அடிப்படையில் அமைத்துக் கொண்டமை எனலாம். முஸ்லிம்களுக்கு என்று ஒரு அரசியல் ஈடுபாடு தனித்துவமாகத் தேவை என்பதைப் போலவே அது இனத்துவ சிந்தனையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதும் உணரப்படுதல் வேண்டும்.
முஸ்லிம்களுடைய அரசியல் சிந்தனையானது நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றம் என்பதிலும் நீதி நேர்மை என்பதிலும் தனது அடிப்படையை அமைத்துக் கொண்டிருந்தால,; நாம் இன்று வன்முறைகளால் அழிந்து கொண்டிருக்கும் ஓரு தேசத்தின் சொந்தக்காரர்களாக இருந்திருக்க வேண்டியதில்லை. அத்துடன் தனித்தரப்பும் தனியலகும் என்ற நிலை தாண்டி சிலபோது மத்தியஸ்தம் வகிக்கும் உண்ணத நிலை கூட எட்டப்பட்டிருக்கலாம். அது மட்டுமின்றி இனத்துவ உணர்வை கூர்மைப்படுத்துவதை விடவும் மழுங்கடித்திருக்கலாம். இவ்வாறாக முஸ்லிம் அரசியல் இனத்துவ ரீதியின் தனது அடையாளத்தை அமைக்காமல் மாற்று வழிகளில் முஸ்லிம்களின் மாற்று அரசியல்; கருத்தும் சக்தியும் வழிநடாத்தும் என்பதுவே எமது பொதுவான எதிர்பார்ப்பாகும்.
இவ்வாறாக முஸ்லிம் சமூக அரசியலானது மாற்று அரசியல் கருத்தையும், சக்தியையும் வேண்டி நிற்பது இதுவரை காலமும் ஏற்படுத்தப்பட்ட வரலாற்றுத் தவறினை திருத்தியமைப்பதற்கும் முஸ்லிம்களின் கௌரவமான அரசியல் ஈடுபாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்குமேயாகும். மாற்றாமாக இதுவரை காலமும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் கட்சிகளும் மேற்கொண்ட அதே தவறை இன்னுமொரு கோணத்தில் நின்று மேற்கொள்வதற்கல்ல
இலங்கை முஸ்லிம் சமூகம் தனது அரசியல் பங்கு பற்றுதல் வரலாற்றில் எதிர்கொண்ட மிக இக்கட்டான காலமாக கடந்த தசாப்தம் அமைகின்றது. தற்போது பெரும்பான்மைக் கட்சிகளுடன் ஒன்றித்த அரசியலும் தனித்துவமான முஸ்லிம் அரசியலிலும் முஸ்லிம் சமூகம் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் மிகச் சரியான மாற்று அரசியல் கருத்தும் சக்தியும் அவர்களின் தெரிவுக்கு முன்வைக்கப்படாத விடத்து அது இச்சமூக ஆர்வலர்களின் வழிகாட்டிகளின் வரலாற்றுத் தவறாய் அமையும். அத்தோடு முஸ்லிம் சமூகம் அரசியல் அடையாளம் தொலைத்த அநாதைகளாக்கப்படுவர். இத்தகைய அபாயம் தவிர்ப்பது இச்சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தவனினதும் தலையாய கடமை.