மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்பார்ப்புகள் எவ்வாறு அமைகின்றன என்பதையும் சித்தாந்தம்தான் முடிவுசெய்கிறது என்பதை இந்தக் கட்டுரை நிறுவ முற்படுகிறது. இந்தப் பணியைச் சந்தேகக் கண்ணோடு அணுகுவது அரசியல் சிந்தனையில் மிகச் சரியான எடுத்துரைப்பு வெளிப்படவும் நீதிக்கும் புனரமைப்புக்குமான விசாலமான முன்னெடுப்புகளை அடையாளங்காட்டவும் உதவும்.
எண்ணிலடங்காத மரணங்கள்
ஐ. நா. விபரங்களின்படி நான்கு மாதங்களே நீடித்த இறுதிக்கட்டப் போரில், குறைந்தது 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் (LLRC) முன்னால் சான்று வழங்கிய மன்னார் ஆயர் 1,46,679 தமிழர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கையை இலங்கை அரசால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வத் தரவுகளிலிருந்து அவர் பெற்றுள்ளார்.
இத்தகைய அதிர்ச்சியூட்டும் வகையிலான பெரும் எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பற்றிய உண்மையை எவ்வாறு சரியாக அரசியல் சிந்தனையில் எடுத்தியம்ப முடியும்? சர்வதேசச் சட்டம் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு, அமைதிக்கெதிரான குற்றம் ஆகியன உள்ளிட்ட சட்ட, கோட்பாட்டு வகைப்பாடுகளை முன்வைக்கிறது. இந்த வகைப்பாடுகளுக்கேற்ப இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகளை எடுத்துரைத்தால் அது புனரமைப்புக்கும் மீளலுக்கும் எத்தகைய முன்னெடுப்புகள் தேவையென்பதைத் தீர்மானிக்கும்.
இது போர்க்குற்றமா?
மூன்று அங்கத்தினர்களைக் கொண்ட இலங்கைமீதான ஐ. நா. பிரதிநிதிகள் குழு, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch), சர்வதேச நெருக்கடிகள் குழு (International Crisis Group) என்பன இறுதிக்கட்டப் போரில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டது நிச்சயமாகப் போர்க்குற்றம் என்றே எடுத்துரைக்கின்றன. ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியனவும் இதேவகையான சிந்தனையையே கொண்டுள்ளன என்பதைப் போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவை கோருவதிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகிறது.
இலங்கை தொடர்பில் போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தாடல் (discourse) சில தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளது. அவை:
– இந்தப் போர் உள்நாட்டு யுத்தமாகக் கருதப்பட்டது
– தனிநபர் உரிமைகள் முன்னிலைப்படுத்தப்பட்டு ஏற்புடைய அளவில் வன்முறையைப் பயன்படுத்துவதற்கான வரையறைகள் விதிக்கப்படுகின்றன.
– இரு சாராரும் குறைகூறப்பட வேண்டியவர்கள் என்பது வலியுறுத்தப்படுகிறது. (இதே அடிப்படையிலேயே ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகள்மீதான தடையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் நியாயப்படுத்தியது.)
– இலங்கை அரசு தன்னைத் தற்காத்துக்கொள்வதற்கான உரிமை ஏற்கப்பட்டு அது ஒற்றையலகு (unitary) என்பது அங்கீகரிக்கப்படுகிறது (அரசியல் களம்)
– அனைத்துவகையான தேசியவாதங்களும் எதிர்மறையாகவே நோக்கப்படுகின்றன (சர்வதேச நெருக்கடிகள் குழு).
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தாடல்கள் இத்தகைய சித்தாந்தங்களால் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நீதிக்கான வாய்ப்புகளும் இதே சித்தாந்தங்களால் மட்டுப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதது. எனவே சட்ட ஒழுங்கை வலுப்படுத்துவதிலும் குற்றவாளிகளைத் தண்டிப்பதிலுமே முக்கியக் கவனம் செலுத்தப்படுகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படாத நிலையை நிவர்த்திக்க இந்த முன்னெடுப்புகள் முக்கியமானவை என்றபோதும், இவை இனப்பிரச்சினையைத் தோற்றுவித்த காரணங்களை எந்தவிதத்திலும் நீக்க முயலவில்லை. மாறாக அந்தக் காரணங்களை முற்றமுழுதாக மூடிமறைக்கின்றன. இந்தக் கருத்தியலில் புனரமைப்பு என்பது தமிழர்களுக்கான வரையறுக்கப்படாத அரசியல் தீர்வாக – ஏற்கனவே உள்ள ஒற்றையலகு அரசுக்கு (unitary state) உட்பட்ட தீர்வாக – ஆகிறது. நடைபெற்ற வன்கொடுமைகளைச் சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகக் குறைத்து மதிப்பிடுகின்ற இந்தப் போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தாடலின் போதாமையே இத்தகைய தீர்வு வெளிப்படக் காரணம். இத்தகைய அணுகுமுறைக்கு இனப்பிரச்சினை பற்றிய வரலாற்று நோக்கு அறவே கிடையாது. அதனால் இனப்பிரச்சினைக்குக் காரணமாக அமைந்த ஒற்றையலகு அரசையோ அந்தக் கோட்பாட்டையோ கேள்விக்குட்படுத்தவே இயலாது. இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் கண்டறிதல்களுக்கும் பரிந்துரைகளுக்கும் இந்த அணுகு முறையே ஏறக்குறைய ஆதாரமாக அமைகிறது. அது அரசின் ஒற்றையலகுத் தன்மையை மாற்ற முடியாத விடயமாக ஏற்றுக்கொள்வதோடு அரசு தன் இறையாண்மையைப் பாதுகாக்கப் போர் தொடுப்பதையும் நியாயப்படுத்துகிறது. இந்த அரசு ஆணைக் குழு அரசுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களைத் தனித்த, தொடர்பற்ற, அதிகாரபூர்வமற்ற நிகழ்வுகளாக நோக்குகிறது. சர்வதேசக் குழுக்கள் இரு சாரார்மீதும் குற்றம்சுமத்துகின்றன. இந்நிலையில், போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தாடல்களின் உண்மையான அர்த்தம் என்ன? ஒற்றையலகு அரசைப் பாதுகாக்கும் போர் நியாயமானது, குற்றமல்ல!
இது மானிடத்திற்கெதிரான குற்றமா?
மேற்குறிப்பிட்ட அமைப்புகள் மானிடத்திற்கெதிரான குற்றம் என்னும் சொற்பதத்தைப் பயன்படுத்தாதபோதும், சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அதைப் பயன்படுத்துகிறது. 2010இல் நடத்தப்பட்ட இலங்கைமீதான மக்கள் தீர்ப்பாயம் (டப்ளின் தீர்ப்பாயம்) இரண்டு சொற்பதங்களையும் பயன்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், மானிடத்திற்கெதிரான குற்றம் என்பது ஆயுதப் போராட்டத்தில் நிகழ்த்தப்படும் நியாயப்படுத்த முடியாத கொலைகளை மட்டுமன்றி, ஒரு மக்கள் கூட்டத்திற்கு எதிராகத் திட்டமிட்ட முறையில், பரவலாக, விளைவு தெரிந்த நிலையில் நிகழ்த்தப்படும் தாக்குதல்களின்போது மேற்கொள்ளப்படும் குற்றங்களையும் உள்ளடக்கும். போர்க்குற்றத்திற்கும் மானிடத்திற்கெதிரான குற்றத்திற்கும் மூலம் ஒன்றானபோதும், நோக்கம் மாறுபடுகிறது. கொலை போர்க் குற்றமாகக் கருதப்படுகையில், கொலையின் நோக்கம் ஒருவரை அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களைக் கொலைசெய்வதாகும். கொலை மானிடத்திற்கெதிரான குற்றமாகக் கருதப்படுகையில் கொலையின் நோக்கம் ஒருவரைக் கொல்வது என்பதோடு, பரவலான திட்டமிட்டவகையிலான பொதுமக்கள்மீதான தாக்குதல்களின் அங்கமாகவும் அது இருப்பதை உள்ளடக்குகிறது.
டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையின் இன முரண்பாடு அடிப்படையில் தமிழ் மக்களுக்கெதிரான போர் என்பதை வலியுறுத்தியதோடு, ‘பயங்கரவாதத்திற்கெதிரான உலகளாவிய போர்’ என்ற தோரணையில் இலங்கை அரசின் செயல்பாட்டிற்கு அரசியல் அங்கீகாரம் வழங்கியதில் சர்வதேசம் முழுப்பொறுப்பு வகித்ததையும் சுட்டிக்காட்டியது. ‘தமிழ் மக்கள்’ என்ற சொற்பதத்தைத் தனது அறிக்கையில் பயன்படுத்தியதன் மூலம் டப்ளின் தீர்ப்பாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டவர்களின் கூட்டு அடையாளத்தை ஏற்றுக்கொண்டதோடு, இலங்கை அரசே பெரும்பாலும் குற்றம்புரிந்ததாக நிறுவியது. மேலும் ஒற்றையாட்சி என்ற கோணத்தைத் தாண்டிச் செல்வதன் மூலம், இலங்கை இனப்பிரச்சினையின் மட்டுமீறிய சர்வதேசமயப்படுத்தலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. டப்ளின் தீர்ப்பாயம் இந்தப் படுகொலைகளை இனப்படுகொலை எனக் குறிப்பிடவில்லை எனினும் மேலதிக விசாரணைகள் தேவையெனப் பரிந்துரைக்கிறது.
மானுடத்திற்கெதிரான குற்றங்கள் பற்றிய கருத்தாடல்களிலிருந்து நீதி, புனரமைப்பு பற்றிய எத்தகைய புரிதலை அடைய முடியும்? நீதி, புனரமைப்பு என்பவற்றை அரசியல் கைதிகளின் விடுதலை, அகதிகளின் தேவைகளை நிவர்த்தித்தல், போருக்குப் பிந்தைய மறுவாழ்வு, அதிகாரப் பரவலாக்கலைக் கொண்ட அரசியல் தீர்வு என்பனவாகவே டப்ளின் தீர்ப்பாயம் பார்க்கிறது. இலங்கையில் அதிகாரமிக்க உண்மைகளுக்கும் நீதிக்குமான ஆணைக் குழுவொன்றையும் (நல்லிணக்கம் என்ற சொல்லை அது தவிர்க்கிறது. ஏனெனில் இலங்கை அரசு நிகழ்ந்தவை பற்றிய ஞாபகத்தை மழுங்கடித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை மறுப்பதற்கான சமூக-அரசியல் கருவியாகவே ‘நல்லிணக்கம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘நீதி’ என்ற சொல்லே அர்த்தமுள்ளதாகிறது.), 2002ஆம் ஆண்டின் முன்னெடுப்புகள் முறிவடைந்ததற்கும் 2006ஆம் ஆண்டில் போர் மீளமூண்டதற்கும் சர்வதேசம் ஆற்றிய பங்கை விசாரிக்கச் சுயாதீனமான சர்வதேச ஆணைக் குழுவொன்றையும் அது பரிந்துரைக்கிறது. நீதியை நிலைநாட்டுவதற்கும் புனரமைப்புக்குமான அதன் பரிந்துரைகளில் சில போர்க்குற்றங்கள் பற்றிய கருத்தாடல்களை ஒத்திருந்தாலும், டப்ளின் தீர்ப்பாயத்தின் அணுகுமுறை முக்கிய விடயங்களில் வேறுபடுகிறது.
டப்ளின் தீர்ப்பாயம், மக்களை அவர்களின் அரசிடம் இருந்து பாதுகாக்கவே சர்வதேச மனிதநேயச் சட்டம் (International Humanitarian Law) பிரகடனப்படுத்தப்பட்டது என நிறுவுவதோடு இலங்கை அரசின் குற்றநிலையை முன்னிலைப்படுத்துகிறது. (விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களைப் புரிந்தார்கள் என டப்ளின் தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டபோதும், பாதிக்கப்பட்ட மக்களின் எந்தச் செயல்பாடும் போர்க்குற்றங்களையோ மானிடத்திற்கெதிரான குற்றங்களையோ நியாயப்படுத்தாது எனக் கூறுகிறது.) அத்தோடு, இலங்கை அரசுக்கு ஆதரவளித்ததன் மூலம் ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறது. டப்ளின் தீர்ப்பாயத்திற்குக் கட்டுப்படச் சட்டக்கடப்பாடு இல்லையெனினும், அறக்கடப்பாடு உண்டு. இது உண்மைக்கும் நீதிக்குமான செம்மையான அரசியல் எடுத்துரைப்புகளை மேற்கொள்வதற்கான வெளியை உருவாக்கும்.
இருந்தாலும், போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள் ஆகிய சட்ட அடிப்படையிலான வகைப்பாடுகள் இலங்கையின் இனமுரண்பாடு பற்றிய வரலாற்றை ஆராயாமலேயே பிரயோகிக்கப்பட்டுள்ளன. சிங்களப் பௌத்தத் தேசிய வாதம் (இனச்சார்பும் மதச்சார்பும் உடையது), தமிழ்த் தேசியவாதம் (இனச்சார்புடையது, மதச்சார்பற்றது) ஆகிய, இனமுரண்பாட்டின் இரண்டு முக்கியக் கதையாடல்களின் தன்மை பற்றிய எந்தத் துருவல்களும் காணப்படவில்லை. இந்தச் சட்டவகைப்பாடுகள் இலங்கையின் வன் கொடுமைகளை விளங்கிக்கொள்வதற்கு அவசியமான முதல் நிலைகளாக இருந்தாலும், அவை முரண்பாட்டின் விசாலத்தைப் போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை. அதன் பயனாக, நீதி வழங்கலையும் புனரமைப்பு முறையையும் அவை பாதிக்கின்றன. ஆகவே இலங்கையில் இடம் பெற்ற வன்கொடுமைகள் பற்றிய அரசியல் சிந்தனைகளை வரலாற்று அடிப்படையில் அணுக வேண்டியது முக்கியம். இதன் அர்த்தம் பாதிக்கப்பட்டவர்களின் நோக்கிலிருந்தும் தனித்துவமான தேசிய இனக்குழு என்ற அடிப்படை யில் வரலாற்று ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அவர்களின் எதிர்ப்பிலிருந்துமே உண்மை பெறப்பட வேண்டும்.
இது இனப்படுகொலையா?
ரஃபேல் லெம்கின்னின் கூற்றுப்படி, ‘இனப்படுகொலை என்பது ஒரு தேசத்தை அல்லது தேசிய இனத்தை அழிப்பது. பொதுவாக, இனப்படுகொலையின் அர்த்தம் ஒரு தேசத்தை உடனடியான அழிப்பது அல்ல. அதன் மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகக் கொல்லும்போது மட்டுமே இப்படி அர்த்தம்கொள்ள முடியும். மாறாக இனப்படுகொலை என்பது ஒரு தேசிய மக்கள் குழுவின் வாழ்வாதாரங்களைக் குறிவைத்தழிக்கும் வெவ்வேறு நடவடிக்கைகளைக் கொண்ட திட்டமிட்ட செயல்பாட்டையே குறிக்கிறது’. ‘இத்தகைய செயற்பாடுகள் ஒரு மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அதன் ஒரு பகுதியையோ குறிவைக்கலாம்’ என இன அழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சாசனம் மேலும் தெளிவுபடுத்துகிறது. ஆகவே இன அழிப்பு என்பதன் வரைவிலக்கணம் ஒரு மக்கள் கூட்டத்தின் பொது அடையாளத்தையும் அவர்களை முழுமையாகவோ அவர்களில் ஒரு பகுதியினரையோ அழிப்பதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளையும் குறிப்பிடுகிறது.
இலங்கையில் பெருந்தொகையாகப் பலியானவர்கள் தனிநபர் உரிமைகளைக்கொண்ட தனியாட்கள் மட்டுமல்ல, அவர்கள் குறிப்பிட்ட கூட்டு அடையாளத்தையும் கூட்டு உரிமைகளையும் கொண்டவர்களும்கூட. இலங்கை அரசின் நோக்கத்தையும் செயல்பாடுகளையும் வரலாற்று நோக்கில் ஆராயும்போது, தமிழ் மக்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட இன அழிப்புப் படிமுறை தெளிவாகிறது. கொள்கை அறிவிப்புகள், கட்டளைகள், செயல்பாடுகளால் விரிவாக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட, திட்டமிட்ட செயல்திட்டம் வரலாற்றுப் பின்னணியில் புலனாகிறது. போரின் இறுதிக்கட்டத்தின் மீதே இதுவரை முக்கியக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது (ஜனவரி முதல் மே 2009). ஆனால் நோக்கம் என்ற விடயத்தை வரலாற்றுரீதியாக ஆராயும்போது, இலங்கை இனப்பிரச்சினையின் நான்கு முக்கியக் காலகட்டங்கள் வெளிப்படுகின்றன. இவையின்றி, இறுதிக்கட்டப் போரின் இன அழிப்பு நோக்கம் தெளிவுபடாது.
1. காலனித்துவக் காலம் (1948 வரை): இலங்கை ஒற்றையலகு அரசாகப் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியாளர்களால் கட்டியெழுப்பப்பட்டு, சிங்களப் பெரும்பான்மையின் ஆட்சி நிறுவப்படுகிறது. இலங்கையில் இனவாதத்தின் தொடக்கம் இதுதான். அது தமிழ் திராவிடப் பண்பாட்டைவிட ஆரிய இனம் உன்னதமானது என்ற இந்தோ-ஐரோப்பியப் புனைவிலிருந்து ஊட்டம் பெறுகிறது.
2. பின்-காலனித்துவக் காலம் (1948-1970கள்): சுதந்திரத்திற்குப் பின்னான அரசாங்கங்கள் அனைத்தும் ஒற்றையலகு அரசு முறையையும் அதன் சிங்கள-பௌத்தச் சித்தாந்தத்தையும் வலுப்படுத்தி நாடு முழுவதும் பண்பாட்டை ஒருமுகத் தன்மையுடையதாக ஆக்குவதை (cultural homogenization) ஆதரித்து வந்துள்ளன. தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் குடியுரிமை மறுக்கப்பட்டது. சிங்களம் மட்டுமே அதிகாரபூர்வ மொழியாக அறிவிக்கப்பட்டுத், தமிழ்ப் பிரதேசங்களில் சிங்களக் குடியிருப்புகள் அரசால் நிறுவப்பட்டன. இந்த முப்பதாண்டுக் காலத்தில் தமிழ் எதிர்ப்பு இயக்கங்கள் காந்திய வழிகளைத் தழுவின. எனினும் இந்தச் சாத்வீக எதிர்ப்புகள் சிங்கள இனவாதக் குழுக்களாலும் அரசுப் படைகளாலும் கோரமாகத் தாக்கப்பட்டன. இந்த இனவாதத் தாக்குதல்களால் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டபோதும் யாரும் நீதியின்முன் நிறுத்தப்படவில்லை.
3. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இராணுவப் போராட்ட காலம் (1970கள் – 2002): காலனித்துவத்திற்குப் பிந்தைய முதல் முப்பதாண்டுக் காலத்தில் தமிழ் எதிர்ப்பின் முக்கியக் கோரிக்கை, அரசு அலகுக்குள் சம உரிமையுள்ளவர்களாகத் தமிழர்கள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதே. எனினும் தமிழர்களின் சம உரிமைக் கோரிக்கை ஒடுக்கப்பட்டதன் விளைவாக 1970களில் ஆயுதந்தரித்த தேசியவாத இயக்கம் ஒன்று விடுதலைப் புலிகளின் தலைமையில் உருவானது. அதற்கு ஜூலை 1983 திருப்புமுனையாக அமைந்தது. அதில் அதிகாரபூர்வத் தரவுகளின்படி 3000க்கும் அதிகமான தமிழர்கள் – அரசுப் படைகள், காவல்படை, அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் ஆகியோரின் ஆதரவுடன் – சிங்கள இனவாதக் குழுக்களால் கொல்லப்பட்டார்கள். 2002 வரையான போரில் குறைந்தது 2,15,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்றும் இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்றும் பிரித்தானிய மருத்துவ ஏடு ஒன்று கூறுகிறது. ஒன்றரை மில்லியனுக்கு அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள் என வெவ்வேறு கணிப்புகள் தெரிவிக்கின்றன.
4. போர் நிறுத்தக் காலம் (2002-2006): போரில் ஈடுபட்டிருந்த இரு சாராரும் சமவலிமை பெற்றதன் விளைவாக இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் போர் நிறுத்த ஒப்பந்தமும் சமாதான முயற்சிகளும் நடைமுறைக்கு வந்தன. ஒக்டோபர் 2006இல் தொடங்கிய போரின் இறுதி அங்கம், மேலும் ஒருமுறை கோர வன்முறைக்கும் பெருந்தொகையான பொதுமக்கள் உயிரிழப்புக்கும் வழிகோலியது.
நோக்கம் என்பது தனிநபரின் உளவியல் நிலை எனப் பார்க்கப்பட்டாலும் வெளிப்படையான பொதுமக்கள் கதையாடல்கள் தனிநபரின் நோக்கையும் கூட்டு நோக்கையும் ஒன்றிணைக்கின்றன. இலங்கையில் வன்கொடுமைகளுக்குப் பொறுப்பான உள்நாட்டுக் குற்றவாளியான இலங்கை அரசின் (இதில் சர்வதேசக் குற்றவாளிகளுக்கும் பங்குண்டு) வெளிப்படையான கதையாடல் ஒற்றையலகு அரசையும் பண்பாட்டு ஒருமுகப்படுத்தலையும் ஆதரிக்கும் சிங்களப் பௌத்தத் தேசிய வாதத்தையும் உள்ளடக்கியது. தமிழ்த் தேசிய இனத்தை அழிக்கின்ற நோக்கத்திற்கு உந்துகையாக (னீஷீtவீஸ்ணீtவீஷீஸீ) இருப்பது ஒற்றையலகு அரசையும் சிங்களப் பௌத்த சித்தாந்தத்தையும் பாதுகாக்க வேண்டும் என்னும் அவாவே. இந்த வகையில், வெளிப்படையான கதையாடல்களின் பின்னிருக்கும் நோக்கம், இலங்கை அரசின் இன அழிப்பு நோக்கத்தை நிறுவுகிறது.
வரலாற்று நோக்கில் உந்துகையும் நோக்கமும்
காலனித்துவக் காலத்தில் . . .
சிங்களப் பௌத்தத் தேசியவாதத்தின் தந்தையான அனாகரிகா தர்மபாலா, 1910களில் சிறுபான்மையினருக்கெதிரான உணர்வுகளையும் வன்முறையையும் தூண்டினார். 1915இல் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபட்ட சிங்களத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்துக் காலனித்துவ அரசுக்கு அவர் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி பின்வருமாறு அமைந்தது:
‘பிரித்தானிய அதிகாரிகள் சிங்களவர்களைச் சுட்டாலும் தூக்கிலிட்டாலும் அடைத்துவைத்தாலும் கைதுசெய்தாலும் என்ன செய்தாலும் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே மனக்கசப்பு எப்போதும் இருந்துகொண்டேயிருக்கும். எனினும் பிரித்தானிய முடிக்கான எனது விசுவாசம் எப்போதும் அசைக்க முடியாதது.’
1930களில் முன்னணிச் சிங்களத் தொழிற்சங்கத் தலைவரான ஏ. ஈ. குணசிங்க அவரது கட்சியால் ‘சிங்கம்’ என அழைக்கப்பட்டார். அதன் அதிகாரபூர்வ ஏடு ஹிட்லரின் முன்னுதாரணத்தைப் பின்பற்றி, கலப்பு மணங்களைத் தவிர்த்துச் சிங்கள இரத்தத்தின் தூய்மையைப் பேண வேண்டியதன் தேவையை வலியுறுத்தியது. ஜெர்மனியில் ஜெர்மன் ஆரிய இனத்தைப் பாதுகாக்க யூத எதிர்ப்புணர்வு தூண்டப்பட்ட வேளையில், இலங்கையில் சிங்கள ஆரிய இனத்தைப் பாதுகாக்கத் திராவிட எதிர்ப்புக் கொள்கை சிலாகிக்கப்பட்டது. இனவாதமயப்படுத்தப்பட்ட சிங்கள அடையாளம், குறிப்பாகப் பாட்டாளி மக்கள் மத்தியில் வலிந்து புகுத்தப்பட, அது இந்தியப் புலம்பெயர் தொழிலாளர்கள்மீதான தாக்குதல்களுக்கு வழிவகுத்தது.
தேசத்தின் தந்தையாகக் கருதப்படுபவரும் 1948இல் சுதந்திர இலங்கையின் முதல் பிரதமராகப் பதவி வகித்தவருமான டி. எஸ். செனநாயக்கா 1939இல் இவ்வாறு கூறினார்:
‘நாங்கள் ஒரே இரத்தம். ஒரே தேசிய இனம். நாங்களே தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள். தனது மதம் 5500 ஆண்டுகள் நிலைக்குமெனப் புத்தர் சொன்னார். அதன் அர்த்தம், அந்த மதத்தின் பாதுகாவலர்களான நாங்கள், நீடூழி வாழ்வோம்.’
1956இல் சிங்களம் மட்டுமே தேசிய மொழியென வகுத்த எஸ். டிபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கா 1939இல் பின்வருமாறு கூறினார்:
‘எனது சிங்களச் சமூகத்திற்காக நான் உயிரைத் தியாகம் செய்யவும் தயாராக உள்ளேன். எங்கள் வளர்ச்சியை யாரும் தடுக்க முற்பட்டால் அவர்களால் மறக்க முடியாத வகையில் அவர்களுக்குப் பாடம் புகட்ட நான் தீர்மானித்துள்ளேன்.’
காலனித்துவத்திற்குப் பிந்தைய தேசக் கட்டுமானக் காலத்தில் . . .
தேசத்தைக் கட்டியெழுப்பும் செயல்பாடுகள் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலவரங்களால் அடையாளப்படுத்தப்பட்டன. இந்தக் கலவரங்களில் பெரும்பாலானவை ஒடுக்குதல்களுக்கு எதிராகத் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட சாத்வீக ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகத் தூண்டப்பட்டன. 1958இல் இடம்பெற்ற தமிழர்களுக்கெதிரான கலவரத்திற்குப் பின் சிங்களப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிய கூற்றுகளுள் சில வருமாறு:
‘தமிழர்கள் எங்களை அழித்துவிடுவார்கள். அது நடப்பதற்கு முன் தமிழர்களுக்கு முதலும் இறுதியுமாக முடிவுகட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’- பாணி இலங்கைக்கோன்.
‘தமிழர்கள் தாம் வாழும் எல்லாப் பாகங்களிலும் பலம்பெற்று வருகிறார்கள். சிங்களவர்கள் அவர்களால் அழித்தொழிக்கப்படும் அபாயம் உள்ளது’- சாகரா பலன்சூரிய.
‘அவர்களை அழித்தொழி’ – லக்ஷ்மன் ராஜபக்ஷ.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமான ஆயுதப்போராட்டக் காலத்தில் . . .
தமிழர்களின் எதிர்ப்பியக்கம் பிரிவினைவாதத்தை முன்வைக்கும் ஆயுத இயக்கமாக மாற்றமுற இலங்கையின் முதல் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியான ஜே. ஆர். ஜெயவர்த்தனே (1978-1988) இவ்வாறு கூறினார்: ‘நான் யாழ்ப்பாணத்து மக்களின் கருத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாம் அவர்களின் உயிர்களைப் பற்றியோ கருத்தைப் பற்றியோ சிந்திக்க முடியாது. வடக்கின் மீது எவ்வளவு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதோ அவ்வளவுக்குச் சிங்கள மக்கள் இங்கே மகிழ்ச்சியடைவார்கள். உண்மையில் நான் தமிழர்களைப் பட்டினி போட்டுக் கொன்றால் சிங்களவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.’
தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாயிருந்த தேசியப் பாதுகாப்பு அமைச்சரின் (1982-1988) பின்வரும் கூற்று தமிழர்களின் கூட்டு அடையாளத்தின் ஆதாரங்களிலொன்றை அழித்தொழிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது: ‘பயங்கரவாதத்தை வோரோடழிப்பதற்கான ஒரே வழி, “பாரம்பரியத் தாயகம்” என்ற கோட்பாட்டை இல்லாது செய்வதே.’ – லலித் அத்துலத்முதலி
இந்தக் காலகட்டத்தில் தென்னாசியாவின் மிகப் பழமைவாய்ந்த நூலகங்களில் ஒன்றும் பெரும் எண்ணிக்கையிலான புராதனத் தமிழ் ஏடுகளைத் தன்னகத்தே கொண்டதுமான யாழ்ப்பாணப் பொதுநூலகம், அமைச்சர் ஒருவரின் வழிநடத்தலில், சிங்களவர் குழு ஒன்றால் எரிக்கப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டு வாழ்வின் முக்கியச் சின்னமாக அந்த நூலகம் மதிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில், 53 தமிழ் அரசியல் கைதிகள், சிறைக் காவலர்களின் துணையுடன், சிங்களக் கைதிகளால் கொல்லப்பட்டனர். எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் இலங்கை அரசை வழிநடத்தியவர்களின் இனவாதக் கொள்கையை இன்னுமொரு ஜனாதிபதியின் பின்வரும் கூற்று பிரதிபலிக்கிறது:
‘சிங்களப் பெருவிருட்சத்தில் தொங்குகின்ற கொடிகள் போன்றவர்கள் சிறுபான்மையினர்’ – டி. பி. விஜேதுங்கா.
செப்ரெம்பர் 1998இல், தென் ஆப்பிரிக்காவிற்கான அதிகாரபூர்வப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த சந்திரிகா குமாரதுங்க தொலைக் காட்சி நேர்காணல் ஒன்றில் பின்வருமாறு கூறினார்:
‘அவர்கள் (தமிழர்கள்) – நாட்டின் பூர்வீகக் குடிகள் அல்லாத ஒரு சிறுபான்மையினத்தினர் – தனிநாடு கோருகிறார்கள்.’
திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட இன அழிப்பு நோக்கத்தின் உந்துகையான சிங்களப் பௌத்த வாதம், சிங்கள மக்களின் மாற்ற முடியாத, அத்தியாவசிய மன நிலையைப் பிரதிபலிக்கவில்லை. இந்த மனநிலை அடிப்படையில் – பன்முகத்தன்மையான பல பிர தேசங்களை ஒன்றிணைத்து மைய ஆட்சி கொண்ட ஒற்றைத் தேசக் கட்டுமானத்தைத் திணிக்கும் அதேவேளை ‘ஆரிய மேன்மை, திராவிட இழிவு’ என்ற புனைவைப் பரப்பும் – பிரித்தானியக் காலனித்துவ நடைமுறையால் உருவாக்கப்பட்ட ஒன்று. காலனித்துவத்திற்கு முந்தைய பௌத்த நூல்கள் மொழி பெயர்க்கப்பட்டு முழுத்தீவும் சிங்களவர்களுக்கே உரியது, காலாதி காலமாக அது ஒற்றையலகுலகாகவே இருந்தது, அதில் வாழும் ஏனைய மக்கள் (பெரும்பாலும் தமிழர்கள்) அனைவரும் ஊடுருவிகளே எனச் சிங்கள மக்களை நம்பவைக்கும் வகையில் விளக்கமளிக்கப்பட்டது. இத்தகைய புனைவுக்கு உந்தியது இந்தியாவை ஆள்வதற்கான ராணுவக் கேந்திரமாக இலங்கையை அது பயன்படுத்திய தந்திரமே. ஒரு கேந்திர நிலையத்தைத் தக்கவைப்பதற்கு அதன்மீது முழுமையான அரசியல் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது அவசியம். அந்தக் கட்டுப்பாடு இந்தியத் துணைக் கண்டத்தில் சிறுபான்மையினராகவும் இலங்கையில் பெரும்பான்மையினராகவும் இருந்த சிங்களவர்களுக்குச் சலுகைகளை வழங்குவதன் மூலம் எட்டப்பட்டது. அதேவேளை, பிரித்தானியர்கள் காலனித்துவ ஆட்சியை மேற்கொண்டிருந்தாலும் தமிழர்களே ஊடுருவிகள், ‘அவர்கள் இலங்கையில் எதையும் கட்டியெழுப்பவில்லை, மற்றவர்கள் கட்டியெழுப்பியதையும் அழித்துவிட்டார்கள்’ என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. காலனித்துவத்திற்கு முந்தைய படையெடுப்புகள் யாவும் உண்மையில் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த அரசகுலங்களுக்கிடையிலான பிணக்குகளால் மாறிமாறி நடந்த கைப்பற்றுதல்கள் என்றபோதும், அவை யாவும் தமிழர்களின் ஊடுருவல்கள் எனக் காண்பிக்கப்பட்டன. இந்தப் போர்கள், அவற்றின் உள்ளீட்டிலும் கட்டமைப்பிலும் நவீன தேசிய, சர்வதேசப் போர்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன.
வரலாற்றுரீதியான அடக்குதல்களையும் ஒடுக்குதல்களையும் மீறித் தமிழ் தேசிய இயக்கமானது ஆதரவற்ற பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையிலிருந்து உருமாறி ஒன்றிணைந்து தேசியத்தை வலியுறுத்துவதாகப் பலம்பெற்று, குறிப்பாக விடுதலைப் புலிகளின் தலைமையின்கீழ் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அங்கீகாரமற்ற தனிநாட்டை உருவாக்கியிருந்தது. இந்த உண்மையே 2002 அளவில் அரசின் இராணுவ முயற்சிகள் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருமளவு பாதித்திருந்த நிலையில், இனவாத நோக்கத்திற்கு வலுச் சேர்த்த சிங்களப் பௌத்தத் தேசிய வாதத்தின் கதையாடல்களை வலுவிழக்கச்செய்திருந்தது. பேச்சு வார்த்தை மூலம் எட்டப்படும் அரசியல் தீர்வே முன்னேற்றத்திற்கான ஒரே வழியாகக் கருதப்பட்டது. வன்கொடுமைகளுக்கான உந்துகையும் நோக்கமும் இந்த வரலாற்றுப் பின்னணியில் ஆராயப்பட வேண்டும். 2002இலிருந்து 4 முதல் 6 வருடங்களுக்குப் பின் எவ்வாறு சிங்களப் பௌத்தத் தேசியவாதக் கதையாடல்களின் அரசியல்பலம் அதிகரித்துத் தமிழர்களின் அங்கீகார மற்ற நாட்டின் அழிவுக்கும் அதில் வாழ முடிவுசெய்திருந்த பெரும் எண்ணிக்கையிலான மக்களின் கொலைக்கும் வழிவகுத்தது? சில மேற்குலக ராஜதந்திரிகளும் ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் பிணக்குத் தீர்வு வல்லுநர்களும் கூறுவதுபோல், அது தானாகவே உள்ள பலச்சமன்பாடுகளினதும் மாற்ற முடியாத இன அடையாளங்களினதும் விளைவாக நிகழ்ந்ததா?
போரின் இறுதிக்கட்டம் . . .
இறுதிக்கட்டப்போரின் அதிர்ச்சியூட்டும் வன்முறையும் அதனால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் எண்ணிக்கையும் ஒரு வரலாற்று விபத்தினதோ துரதிர்ஷ்டவசமான ஒற்றை நிகழ்வுகளின் கோவையினதோ போரின்போது தவிர்க்க முடியாத இழப்புகளினதோ சட்ட ஒழுங்கின் செயலிழப்பினதோ விளைவல்ல. அவை தொடர்ச்சியான இலங்கை அரசுகள் மேற்கொண்ட தமிழ் மக்களின் இன, தேசிய அடையாளத்தின் ஆதாரங்களை அழிக்கும் வரலாற்றுப் படிமுறையின் தர்க்கரீதியான முடிவு மட்டுமல்ல, 2002 போர்நிறுத்தத்தின்போதும் சமாதான முன்னெடுப்புகளின் போதும் இருசாராருக்கும் வழங்கப்பட்டிருந்த சம அந்தஸ்து (ஜீணீக்ஷீவீtஹ் ஷீயீ மீstமீமீனீ) அகற்றப்பட்டதன் நேரடி விளைவும்கூட. இந்தச் சம அந்தஸ்து முதலில் அமெரிக்காவாலும் பிரிட்டனாலும் அகற்றப்பட்டது. பின்னர் இவ்விரு நாடுகளினதும் அழுத்தம் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்தால் அகற்றப்பட்டது. 2003இல் சமாதான நடவடிக்கைகளின் முக்கியக் கூட்டமொன்றை வாஷிங்டனில் நடத்த ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா முடிவெடுத்து அதன்மூலம் விடுதலைப் புலிகளைப் பேச்சு வார்த்தையிலிருந்து அப்புறப்படுத்திய ‘வாஷிங்டன் அத்தியாயம்’, 2005இல் சுனாமி நிவாரணத்திற்காக நிறுவப்பட்ட இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான கூட்டுக் கட்டமைப்புக்கு நிதி ஒதுக்க மறுத்த அமெரிக்காவின் செயல்பாடு, பிரித்தானியா தலைமைப் பொறுப்பு வகித்த காலத்தில் 2006இல் ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்தமை என்பன இரு சாராருக்கும் வழங்கப்பட்ட சம அந்தஸ்தை அகற்றவும் இலங்கை அரசின் இருப்பை நியாயப்படுத்தும் கதையாடல்களை வலுப்படுத்தவும் இந்த வல்லரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள். இலங்கை அரசின் ஒற்றையலகுத் தன்மையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம், சீனாவுக்கும் அமெரிக்காவிற்குமிடையிலான உலக-அரசியல் இயக்காற்றலின் பின்னணியிலேயே அலசப்பட வேண்டும். பாரம்பரிய ராணுவ பலமும் சீரான சமூக அரசியல் நிர்வாகமும் 5,00,000க்கும் மேலான குடிமக்களையும் கொண்ட, தமிழர்களின் நடைமுறை யதார்த்தமான தனிநாடு, ஒற்றையலகு அரசையும் அதன் இனவாதக் கதையாடல்களையும் பலமிழக்கச்செய்ததோடு, இந்த ஒற்றையலகு அரசைப் பாதுகாப்பதையே முக்கியக் குறிக்கோளாகக் கொண்ட உலக வல்லரசுகளைக் கவலைகொள்ளவைத்தது. இலங்கை அரசுக்கு இந்த வல்லரசுகளால் வழங்கப்பட்ட அரசியல், ராஜதந்திர, ராணுவ உதவிகளின் உண்மை விளைவு சிங்களப் பௌத்த வாதத்தைப் பலப்படுத்துவதாகவே அமைந்தது. இதுவே சிங்களச் சமூகத்தினதும் அரசியலாளர்களினதும் இன அழிப்பு நோக்கை வலுப்படுத்திப் போருக்குத் தூண்டியது. இதன் அர்த்தம் உலக வல்லரசுகள் சிங்களப் பௌத்தத் தேசியவாதத்தை விரும்புகின்றன என்பதல்ல. அவர்களின் முக்கிய ஆவல் பிரதேச வாரியாக ஒற்றை அலகையும் ஒற்றை அரசு அதிகாரத்தையுமுடைய தேசத்தை உருவாக்குவதே.
ஐரோப்பிய ஒன்றியம் ஏன் சமாதான நடவடிக்கைகளை ஆரம்பத்தில் ஆதரித்தது என்பதையும் அமெரிக்காவும் பிரிட்டனும் ஏன் பட்டும்படாமலும் இருந்தன என்பதையும் அறிய, மேற்கத்திய வல்லரசுகளுக்கிடையிலான – குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன் என்பவற்றுக்கிடையிலான பலச் சமன்பாடுகளை ஆராய்வதும் முக்கியமானது. இலங்கையின் ஒற்றையலகுக் கட்டமைப்பின் உலக-கேந்திர முக்கியத்துவமும் உலக வல்லரசுகளுக்கிடையிலான பலச் சமன்பாடுகளும் மேலும் விவாதத்திற்குள்ளாக்கப்பட வேண்டும் என்றாலும், அது இந்தக் கட்டுரையின் இலக்குக்கு அப்பாற்பட்டது. இருந்தாலும், இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மையைக் கண்டறிய, ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்பட வேண்டும். தமிழர்களுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரை நடத்த முதன்மையான காரணியாக அமைந்தது இலங்கை அரசின் இனவாத நோக்கமா இருதரப்பினருக்குமிடையிலான சம அந்தஸ்தை இல்லாது செய்த உலக வல்லரசுகளின் கேந்திர அக்கறையா (strategic interest) என்பதே அந்தக் கேள்வி.
போரின் இறுதிக்கட்டம் பெரும்பாலும் இலங்கை அரசாலும் அதன் சர்வதேச ஆதரவு நாடுகளாலும் – பயங்கரவாதத்திற்கெதிரான உலகளாவிய போரின் அடிப்படையில் – கிளர்ச்சிக்கு எதிரான போர் என நியாயப்படுத்தப்படுகிறது. ஒரு தனித்துவமான இனக்குழுவை அழிக்கும் திட்டவட்டமான நோக்கம் போருக்கு இருக்கவில்லை எனக் கூறி இவர்கள் இன அழிப்புக் குற்றச்சாட்டை மறுக்கிறார்கள். எனினும் திட்டவட்டமான நோக்கம் வெளியிடப்படாத போதும், பொதுவான நோக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. குற்றச்செயலைப் புரிபவருக்கும் அந்தச் செயலின் விளைவுகளுக்கும் இடையிலான உளவியல் தொடர்பை நோக்கம் பற்றிய அறிவுசார்ந்த விளக்கம் தெளிவுபடுத்துகிறது. குவாத்த மாலா விடயத்தில் வாதிடப்பட்டது போல் கிளர்ச்சியாளர்களைக் கொல்வதென்ற ராணுவ நோக்கம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க முடியாதா? தமிழ் மக்கள்மீது நடத்தப்பட்ட பாரியத் தாக்குதல்களின் விளைவு என்னவாக இருக்குமென முன்கூட்டிய அறிவுடனும் ஓரளவு உறுதியுடனும் எதிர்வு கூறியிருக்க முடியுமென்றால் அந்தத் தாக்குதல்கள் இன அழிப்பு நடவடிக்கையே. வேறுவகையில் கூறுவதானால், ஒரு தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, பாரிய ராணுவத் தாக்குதல்களின் மூலம் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வலுக்கட்டாயமாகக் கிளர்ச்சிக்கு எதிரான போரை நிகழ்த்துவதன் நோக்கம் இன அழிப்பே.
போரின் இறுதிக்கட்டத்தில், தமிழ் மக்கள்மீது ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்ட அதே வேளையில், இலங்கை அரசின் ராணுவ, அரசியல் தலைவர்களால் விடுக்கப்பட்ட பின்வரும் கூற்றுகள் திட்டவட்டமான நோக்கத்தையும் பொதுவான நோக்கத்தையும் எடுத்துக்காட்டுகின்றன:
‘இந்த நாடு சிங்களவர்களுக்கே சொந்தமானது என நான் உறுதியாக நம்புகிறேன். ஜனத்தொகையில் 75 விழுக்காட்டினரான நாங்கள் ஒருபோதும் அடிபணியமாட்டோம். இந்த நாட்டைத் தற்காக்கும் உரிமை எமக்கே உண்டு. சிறுபான்மையினர் இங்கே வாழலாம். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர் என்ற போர்வையில் நியாமற்ற கோரிக்கைகளை முன் வைக்க முடியாது’ – லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கைப் படைத் தளபதி (23 செப்ரெம்பர் 2008).
‘எந்தவொரு நாட்டிலும் பெரும்பான்மையினரின் கையிலேயே நிர்வாக உரிமை இருக்க வேண்டும். அதைத் தடுக்க முடியாது. பெரும்பான்மையினரின் கையிலேயே அதிகாரம் இருக்க வேண்டும். இந்த நாடு ஜனத்தொகையில் 74 விழுக் காட்டினரான சிங்களவர்களாலேயே ஆளப்படும்’ – லெப்டினன்ற் ஜெனரல் சரத் பொன்சேகா, இலங்கைப் படைத் தளபதி (19 ஜூலை 2008).
‘முல்லைத்தீவுப் பகுதியில் சிக்கிக்கொண்டுள்ளவர்கள் பயங்கரவாதிகளின் உறவினர்கள் மட்டுமே. அவர்களை ஒருபோதும் பொதுமக்களாகக் கருத முடியாது’ – அரசின் கூட்டணிக் கட்சியான ஜாதிக ஹெல உருமயவின் பத்திரிகையாளர் மாநாடு (28 ஜனவரி 2009).
‘வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள எதுவும் தாக்குதலுக்காகக் குறிவைக்கப்படும். வைத்தியசாலையாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி, அது பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ளவரை தாக்குதலுக்கு ஏற்புடைய இலக்காகவே இருக்கும்.’ – பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ (02 பெப்ரவரி 2009).
இலங்கை அரசின் செயல்பாடுகள் தமிழ் மக்களின் உயிர்வாழ்க்கையை எவ்வளவு பாரதூரமாகப் பாதிக்கும் என்பது ஏற்கனவே தெரிந்திருந்தது என்பதை இந்தக் கூற்றுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன. வரையறுக்கப்பட்ட ‘பாதுகாப்பு வலயமும்’ தீவிரத் தாக்குதலுக்குள்ளானது என ஐ. நா. அறிக்கை தெரிவிக்கிறது. (இதைப் ‘பாதுகாப்பு வலயம்’ என அறிவித்துப் பொதுமக்கள் அதற்குள் செல்ல வேண்டுமென இலங்கை அரசு கேட்டிருந்தது). மே 2009இல், போருக்குப் பின்னான தனது வெற்றி உரையில், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்:
‘இலங்கையில் இன்று பெரும்பாலும் சிறுபான்மைச் சமூகங்கள் கிடையாது. தேசாபிமானிகளும் தேச விரோதிகளும் மட்டுமே உள்ளனர்.’
சர்வதேச அரங்கில், மேமாதத்தில் போரின் இறுதி வாரத்தில், ஐ. நா. பாதுகாப்புச் சபை, ஐரோப்பிய ஒன்றியம், வெள்ளை மாளிகை ஆகியன ஒரே நாளில் – இலங்கை அரசே இலங்கையில் சட்டபூர்வ அதிகாரம்கொண்டது என்ற அவர்களின் கருத்தைத் தெளிவாகப் பிரதிபலிக்கும் வகையில் – அறிக்கைகளை வெளியிட்டன. ஐ. நா. பாதுகாப்புச் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கை அரசுக்குப் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் சட்டபூர்வ உரிமை இருக்கிறது எனக் கூறுமளவுக்குத் துணிந்தன. ஐரோப்பிய ஒன்றியம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக இலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளை வரவேற்றது. அமெரிக்க அதிபர் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட வேண்டுமென வலிந்து கேட்டுக்கொண்டார். ராணுவமயப்படுத்தலைத் தளர்த்துதல், புனர்வாழ்வு வழங்குதல், மீள்குடியேற்றம், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்த முற்பட்ட 2002இன் சமாதான முன்னெடுப்புகளைத் தொடக்கத்தில் ஆதரித்த சர்வதேசச் சமூகம் பின்னர், மேற்குறிப்பிட்ட உலக வல்லரசுகளின் தலைமையில், இலங்கை அரசை ஆதரிக்கும் வெளிப்படையான அரசியல் நிலைப்பாட்டை எடுத்ததன்மூலம் பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வுக்கான வெளி இல்லாதொழிக்கப்பட்டது. இது ‘பயங்கரவாதத்திற்கெதிரான உலகாளவிய போர்’ என்ற வெற்றுரையால் நியாயப்படுத்தப்பட்டு, இறுதியில் தமிழ் மக்கள் தொகையின் ஒரு பெரும்பகுதியையும் அவர்களின் தேசிய ஆதாரங்களையும் தலைமையையும் அழித்தொழித்த கிளர்ச்சி எதிர்ப்பு உக்திகள்மூலம் நடை முறைப்படுத்தப்பட்டது. அதனால் இலங்கையின் வன்கொடுமைகள் பற்றிய உண்மையைக் கண்டறிய, ஒற்றைநாடு என்னும் பார்வையைத் தாண்டிச்செல்வது மிக முக்கியமானது. உண்மையை நாடுகடந்த நிலைக்கு இட்டுச்சென்று அதன் சட்ட அடிப்படையிலான விளைவுகளை சர்வதேச மட்டத்தில் தேட வேண்டிய தேவையுள்ளது.
இன அழிப்பின் உலக அரசியல்: அமைதிக்கு எதிரான குற்றம்
தமிழ் மக்களுக்கெதிரான நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்கள், இலங்கை அரசினது பூரண அறிவோடு மட்டுமல்ல, ஐ. நா. ஊடாகத் தமது குரல்களை வெளிப்படுத்திய சர்வதேசப் பங்காளிகளின் பூரண அறிவோடுமே நடத்தப்பட்டன. இலங்கையில் இடம்பெற்றதை இன அழிப்பு என அழைப்பது சட்டம், அறம், கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சரியானது மட்டுமல்ல, பல தசாப்தங்களாக ஓரங் கட்டுதல்களுக்கும் அடக்குதல்களுக்கும் ஒடுக்குதல்களுக்கும் எதிராகப் போராடிவந்த தமிழ் மக்களின் அரசியல் சிந்தனையைக் கவர்வது மாகும். இன அழிப்பு எனப் பெயர் சூட்டுவது குறியீட்டுரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் பெறுமதி மிக்கது என்பதோடு, அது இலங்கையின் ஒற்றையலகுத் தன்மையினதும் அதன் சர்வதேச உறவுகளினதும் ஒழுங்கு நிலைத் தகுதியைத் தீவிரக் கேள்விக்குள்ளாக்குகிறது என்றவகையில் அதற்கு அரசியல் பெறுமதியும் உண்டு. ஒரு இனவாத சிந்தாந்தத்திற்கும் அதிகாரக் கட்டமைப்புக்கும் எதிர்ப்பாக உருவாக்கப்பட்ட தமிழ் மக்களின் தேசிய ஆதாரங்களைப் போர் வேண்டுமென்றே அழித்தொழித்தது. தமிழ் இன அழிப்பில் இலங்கை அரசே குற்றவாளி. எனினும் மேற்குறிப்பிட்ட வல்லரசுகளின் தலைமையிலான, சர்வதேசச் சமூகமும் இதற்கு உடந்தையாக இருந்தது என்ற வகையில் அதற்கும் இதில் பங்குண்டு.
மேற்குறிப்பிட்ட வல்லரசுகளின் பங்களிப்பு எவ்வாறு சர்வதேசச் சட்டத்திற்குள் அடக்கப்படலாம்? அவர்களின் பங்களிப்பு – வலிந்து தொடுக்கப்பட்ட போரின் மூலம் நிகழ்த்தப்பட்ட – அமைதிக்கெதிரான குற்றம் அல்லவா? உண்மையில், இந்தப் போர் நடத்தப்படாதிருந்தால், தமிழ் இன அழிப்பு தவிர்க்கப்பட்டிருக்கும். இந்தவகையான பார்வையில், இனவாத நோக்கம் அல்ல கேந்திர அக்கறையே முக்கிய விடயமாகத் தென்படுகிறது. அமைதிக்கெதிரான குற்றம் ஒன்றால் கேந்திர அக்கறை வலுப்படுத்தப்பட்டது. இதில் மேற்குறிப்பிட்ட வல்லரசுகளே குற்றவாளிகள்.
நிறைவு: நீதி, புனரமைப்பு, மற்றும் நம்பிக்கை
நீதிக்கும் வன்கொடுமைகளை இன அழிப்பு என அழைப்பதற்குமான தொடர்பு என்ன? இன அழிப்பெனப் பெயரிடுவதன் மூலம், தமிழர்களின் பாரம்பரியத் தாயகம் மீதான அவர்களின் சுயநிர்ணய உரிமையினதும் சுயாதிக்க உரிமையினதும் அரசியல் தகுதியும் அறத் தகுதியும் ஏற்கப்பட்டு வலுப்படுத்தப்படுகின்றன. எனினும் இந்த வகையான நீதி வழங்கல், இரு இனங்களையும் மேலும் பிளவுபடுத்தும் வகையிலான ‘சிங்களவர் ஙீ தமிழர்கள்’ என்ற தவிர்க்க முடியாத இரும அடையாள நிலைக்கு இட்டுச்செல்லக் கூடாது. பன்முகத்தன்மையையும் சமத்துவத்தையும் கூட்டுச்சார்பையும் சகித்துக்கொள்ள முடியாத ஒரு அடிப்படைவாத அரசு சித்தாந்தத்திற்குக் காட்டப்படும் தொடர்ச்சியான துணிச்சல் மிக்க எதிர்ப்பின் விளைவாகவே நீதி பெறப்படும். அத்தகைய அடிப்படைவாத சித்தாந்தத்திற்கு ஆதியான அல்லது புதிப்பிக்கப்படுகின்ற மாற்றமடைய முடியாத கடப்பாடுகள் எதுவும் கிடையாது. மாறாக, அது காலனித்துவக் காலத்தில் வரலாற்றுரீதியாகப் புனையப்பட்டு இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்பியவர்களாலும் அவர்களின் கூட்டாளிகளாலும் பலப்படுத்தப்பட்டது. இத்தகையதொரு வரலாற்றுரீதியானதும் இனவாதமற்றதுமான தொலை நோக்கு மட்டுமே இலங்கையில் மீளலை ஏதுவாக்கும்.
நீதிக்கும் அமைதிக்கெதிரான குற்றத்திற்குமிடையிலான தொடர்பு என்ன? ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் வருடாந்த அமர்வு தொடர்பான ஆரவாரங்கள் தமிழர்களை ஆதரவற்ற, பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்தி, அவர்களுக்கு நம்பிக்கையளிப்பது போல் தோற்றங்காட்டுகின்றன. இலங்கையில் பொறுப்புடைமைக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற ஐ. நா. மனித உரிமைச் சபையின் முன்மொழிவுக்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவானது – தேசத்ததைப் பாதுகாப்பதற்கானதெனப் போரை நியாயப்படுத்தி, மனித உரிமை மீறல்களைத் தனிப்பட்ட இராணுவ வீரர்களின் ஒழுக்கயீனம் எனத் தாழ்த்திய – எல். எல். ஆர். சி. பரிந்துரைகளை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதோடு நின்றுகொண்டது. கொழும்பு அமெரிக்கத் தூதரகத்தில் 13 பெப்ரவரி 2012 அன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் அமெரிக்க அரசுத் திணைக்களத் துணைச் செயலர் ஒருவரால் வெளியிடப்பட்ட தூதரக அறிக்கையில் இது மிகத் தெளிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட சொற்பதம் ‘போர்க் கால நெறிப்பிறழ்வுகள்’ (wartime abuses) என்பதே. பெப்ரவரி 17இல், மேற்கூறிப்பிட்ட மனித உரிமை அமைப்புகளும் மேலும் சில அரசுச் சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து அமெரிக்காவின் கோரிக்கையைப் பாராட்டி அறிக்கையொன்றை வெளியிட்டன. இலங்கையின் வன் கொடுமைகளை வரலாற்று நோக்கில் உண்மையாகப் பிரதிபலிக்கும் வகையில் சர்வதேச மனிதநேயச் சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது மட்டுமல்ல உண்மையை மறைத்து நீதியையும் மீளலையும் மழுங்கடிப்பதற்கான முயற்சிகள் அமைதிக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த வல்லரசுகளால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகின்றன என்பதும் தெள்ளத்தெளிவாகிறது. உண்மையில் இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பும் அமைதிக்கெதிரான குற்றமுமாகும்.
2002இன் சமாதான நடவடிக்கைகள் ஊடாக, வேறுபட்ட காரணங்களுக்காகப், பேச்சுவார்த்தை அடிப் படையிலான தீர்வை அடைய முயன்றுகொண்டி ருந்த இலங்கைத் தீவின் மக்கள் அனைவருக்கும் எதிராக நிகழ்த்தப்பட்ட அமைதிக்கெதிரான குற்றமாகவும் அது இருக்கிறது. ஒரு சர்வதேசச் சுயாதீனமான பொறுப்புடைமைக் கட்டமைப்பு மாற்றுச் சர்வதேசச் சமூகத்தால் நிறுவப்பட வேண்டும். நடைமுறையில் இது சாத்தியப்பட, இலங்கையில் மனித உரிமைகளுக்கும் நீதியான சமாதானத்திற்கும் ஆதரவு கோரும் செயல்பாடுகளின் போக்கிலும் கோட்பாட்டுவெளியிலும் (orientation and paradigm) பாரிய மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அமைதிக்கெதிரான குற்றத்திற்கு நீதி பெறப்படுவதை இத்தகைய மாற்றமொன்றே உறுதிப்படுத்தும். வன்கொடுமைகள் பற்றிய பேரதிர்ச்சியூட்டும் நினைவுகளிடையே, வரலாற்றிலிருந்து பாடங் கற்றுக்கொள்வதால் மட்டுமே நம்பிக்கையைக் கண்டடைய முடியும்.