பாக்.தீவிரவாதிகளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டு சதி நரேந்திரமோடியை கொல்லமனித வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம்பாதுகாப்பை அதிகரிக்க ஜனாதிபதிக்கு கோரிக்கை

733

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.கடந்த ஆண்டு பாட்னாவில், புத்த கயாவில் அவரை கொல்ல சதிசெய்து குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் அதில் இருந்து அவர் தப்பித்து விட்டார்.

3 அடுக்கு பாதுகாப்பு

இப்போது பிரதமர் வேட்பாளராக அவர் பாரதீய ஜனதாவினால் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் தொடுத்தபோது, அவர்களை எதிர்த்து வீரமாய் சண்டையிட்ட தேசிய பாதுகாப்பு படையின் 108 கமாண்டோக்கள் (கறுப்பு பூனைப்படையினர்) பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

ராஜீவ் பாணியில்…

இந்த நிலையில், நரேந்திரமோடியை மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கொல்வதற்கு கூட்டுச்சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக விசுவ இந்து பரிஷத் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அந்த அமைப்பின் தலைவர் அசோக்சிங்கால் ஒரு அவசர கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
நரேந்திரமோடி மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை (ஐ.பி.) உச்சகட்ட எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை போன்று, இந்த மனித வெடிகுண்டு தாக்குதல் அமையலாம் என கூறப்பட்டுள்ளது.நரேந்திரமோடியை துப்பாக்கியால் சுட மாட்டார்கள், ஆதரவாளர் போன்ற வேஷத்தில் மனித வெடிகுண்டாக மாறி வந்து அவரை குறிவைத்து தாக்குதல் நடத்துவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதல் நடத்துபவர் ஆணா, பெண்ணா என்பது குறிப்பிடப்படவில்லை.

கூட்டுச்சதி

நரேந்திரமோடியை கொல்வதற்கு இந்திய முஜாகிதீன், பாகிஸ்தானின் உளவு அமைப்பு ஐ.எஸ்.ஐ., மும்பை தொடர் குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் ஆகியோர் கூட்டுச்சதி செய்துள்ளனர்.சமீபத்தில் நரேந்திரமோடி அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவால் தேடப்பட்டு வருகிற தீவிரவாதி தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு கொண்டு வந்தே தீருவோம் என்று சூளுரைத்துள்ள நிலையில், மோடி மீதான மனித வெடிகுண்டு தாக்குதல் அச்சுறுத்தல் வெளிப்படையான ஒன்றாக அமைந்துள்ளது.

விசாரணை வேண்டும்

தீவிரவாதம் என்பது நமது நாட்டில் நீண்ட காலமாகவே மிகப்பெரிய சவாலாக விளங்குகிறது. அரசு, இந்த சவாலை கவனத்தில் கொள்ள வேண்டும். தீவிரவாதிகளை, கூலிப்படையினரை, கொலையாளிகளை, அவர்களது கூட்டத்தை, தாதாக்களை, சிலீப்பர் செல் களை (தீவிரவாத குழுக்களை) ஒடுக்குவது தொடர்பாக பணியாற்றி, ஒட்டுமொத்த செயல் திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும்.தற்போது வெளியிடப்பட்டுள்ள உளவுத்துறை எச்சரிக்கையின் அடிப்படையில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

பாதுகாப்பை உறுதி செய்க

அவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்பதில் பொதுவாக இந்த தேசமும், குறிப்பாக அவரது ஆதரவாளர்களும் மிகுந்த கவலை கொண்டுள்ளனர்.நரேந்திரமோடியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். உங்கள் அரசின் மூலமாகவும், மாநில அரசுகள் மூலமாகவும், பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் பாதுகாப்பு அம்சங்களை தரம் உயர்த்தி, எந்தவித கவனக்குறைவுக்கும் இடம் அளிக்காத, முழுமையான பாதுகாப்பினை வழங்குவதை உறுதி செய்ய வேண்டுகிறோம்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

கைதான தீவிரவாதி தகவல்

நரேந்திரமோடியை பாட்னாவிலும், புத்த கயாவிலும் கொல்வதற்கு குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடத்திய வழக்கில், இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் மூத்த தளபதி தேசின் அக்தர் ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்டு விட்டார். கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட இந்த இயக்கத்தின் மற்றொரு தளபதியான யாசின் பட்கல், போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, மோடியை கொல்வதற்கு எதையும் செய்வோம். அதற்கு என்ன விலையும் கொடுப்போம் என்று கூறி இருந்தது நினைவுகூரத்தக்கது

SHARE