முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இளைய புதல்வரான வைத்திய கலாநிதி பகீரதன் அவர்கள் அளித்த செவ்வி!!
• இந்திய அனுசரணையின்றி தீர்வு சாத்தியமாகாது
இந்தியாவின் அனுசரணையின்றி தமிழர்களின் பிரச்சினைக்கு என்றுமே தீர்வு கிடைக்காது. மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாரதீய ஜனதா கட்சி தமிழர் விடயத்தில் கொண்டிக்கும் கரிசனையைப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு உரிய வலியுறுத்தலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் இளைய புதல்வரான வைத்திய கலாநிதி பகீரதன் தெரிவித்தார்.
கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், விடுதலைப்புலிகள் போரியல் முறைமையை மாற்றியமையும், இந்தியாவின் அனுசர ணையை இழந்தமையுமே தோல்விக்கான காரணமாகும் என்றும் கூறினார்.
நான் உருவாக்கிய தமிழீழ தேசிய இராணுவம் என்ற அமைப்பின் செயற்பாடுகளை புலிகள் விரும்பியிருக்கவில்லை. ஏகப்பிரதிநிதித்துவத்தினையே அவர்கள் முன்னிறுத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் வழங்கிய செவ்வியின் முழு விபரம் வருமாறு,
Q: இலங்கையில் காணப்படும் தேசிய அரசியல் மற்றும் தமிழர் தரப்பு அரசியல் நிலைமைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
A: முதலில் நான் ஒரு விடயத்தினை கூறிவைக்க விரும்புகின்றேன். நான் எந்தவிதமான அரசியல் நோக்கத்தின் அடிப்படையிலும் எனது கருத்துக்களை பதிவு செய்யவில்லை.
நான் இங்குள்ளவர்களுடன் கலந்துரையாடிய, நேரில் அவதானித்த மற்றும் ஆய்வுரீதியாக வாசித்துப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தான் பதிலளிக்கின்றேன்.
தமிழர் தரப்பினைப் பொறுத்தவரையில், ஜனநாயக ரீதியிலான அரசியல், ஆயுதரீதியான அரசியல் முன்னெடுப்புக்கள் அனைத்தும் நிறைவடைந்து தற்போது சதுரங்க அரசியல் அல்லது இராஜதந்திர அரசியல் முன்னெடுப்பொன்றே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
தேசிய அரசியல் கட்சிகள், சர்வதேச தரப்புக்கள் அனைத்தும் இந்த விடயத்திற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டுடன் கரிசனை கொண்டிருப்பதென்பது நல்லதொரு சமிக்ஞையாகவுள்ளது.
ஆகவே இந்த விடயம் வெற்றி பெறவேண்டும் என்பதே எம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும். இருப்பினும் அது வெற்றியடையும் முன்பே எதனையும் எதிர்வு கூறிவிடமுடியாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் கூறுவது போன்று பொருளாதார ரீதியாக நாடு முன்னேற்றமடைய வேண்டுமாகவிருந்தால் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
அதேநேரம் தமிழ் மக்களின் மனதில் நாம் இலங்கையர் என்ற மனோநிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகின்றது.
இந்தியாவில் நான் அதிகளவான காலத்தினை செலவளித்த அனுபவத்தின் பிரகாரம் அங்குள்ளவர்கள் முதலில் இந்தியன் என்று கூறுவார்கள்.
பின்னர் தான் அவர்களின் பிராந்தியங்களை கூறுவார்கள். ஆனால் இங்கு அவ்வாறில்லை. நான் கூட இளம் வயதில் ஸ்ரீலங்கா தாயே நமோ, நமோ என்று இசைக்க முடியாது எனக் கூறி சாரணர் இயக்கத்தினை விட்டு வெளியேறியிருந்தேன்.
ஆனால் இப்போது நிலைமைகள் மாறி யுள்ளன. ஐக்கிய இலங்கைக்குள்ளேயே தீர்வொன்றைக் கண்டறிய வேண் டும் என்பதே அனைவரினதும் நிலைப்பாடாக இருக்கையில் அரசாங்கம் அதனை புரிந்து கொண்டு தீர்வை முன்வைக்க வேண் டும்.
அதன் மூலமே அனைவரிடத்திலும் இலங்கையர் என்ற எண்ணப்பாடு தோற் றம் பெறும்.
அதேநேரம் யுத்தம் நிறுத்தப்பட்டமை நல்லதொரு விடயமாக இருக்கின்றபோதும் மக் களின் இழப்பு எமக்கு மிகப்பெரும் பாதிப்பாகும். இந்திய–இலங்கை ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் மக்கள் இவ்வளவு உயிரிழப்புகளினை சந்தித்திருக்க மாட்டார்கள்.
இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகி இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை தரும்போது மூவாயிரம் பொதுமக்களும் எழுநூறு வரையிலான போராளிகளுமே உயிரிழந்திருந்தனர்.
2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலுக்கு முன்னதாக விடுலைப்புலிகளின் போராளிகளில் 40 ஆயிரம் பேர் வீரச்சாவடைந்திருந்தனர். இறுதி யுத்தத்தின்போது பொதுமக்களினதும் போராளிகளினதும் உயிரிழப்பு மிகவும் அதிகமானதே.
இதனால் இரண்டு இளம் தலைமுறையினர் தடந்தெரியாதுபோயுள்ளனர். வடக்கினை பொறுத்தவரையில் இன்னமும் யுத்தபிரதேசம் போன்று தான் உள்ளது. வியட்நாமில் யுத்தத்திற்கு பின்னரான நிலைமைகள் எவ்வாறிருந்தனவோ அவ்வாறு தான் வடக்கிலும் நிலைமைகள் உள்ளன.
Q: சிங்கள, பௌத்த தேசியவாத அரசிய லை முன்னெடுத்த பிரதான கட்சிகள் இரண்டும் இணைந்திருந்தாலும் தற்போது வரையில் ஒற்றையாட்சிக்குள்ளே தமிழ் மக்க ளுக்கு தீர்வை வழங்க முடியும் என்ற நிலைப் பாட்டில் இருக்கின்றபோது சமஷ்டி என்ற சொற்பதத்தினை கூட விட்டுக்கொடுக்க தயா ராகவிருக்கும் தலைமைக்கு நியாயமான தீர் வொன்றை அளிப்பார்கள் என்று நம்புகின்றீர்களா?
A: தற்போதுள்ள சூழலில் அவர்களுடைய உரைகளின் அடிப்படையில் பார்க்கையில் நியாயமான தீர்வு வழங்கவேண்டுமென்றதொரு மனோரீதியான நிலைமை பெரும்பான்மை தலைவர்களிடத்தில் ஏற் பட்டுள்ளதென நான் கருதவில்லை. ஆனால் அத்தகையதொரு நிலைமை ஏற்படவேண்டுமென்றே கருதுகின்றேன்.
Q: இந்திய–இலங்கை ஒப்பந்தம் நடை முறைப்படுத்தப்பட்டிருந்தால் இத்தனை விபரீதங்களும் நடைபெற்றிருக்காது என்று கூறுகின்றீர்களே. அதனை தமிழர் தரப்பினால் நடைமுறைப்படுத்த முடியாது போனமைக்கு காரணம் என்ன?
A: இந்திய–இலங்கை ஒப்பந்தத்தினை தமிழ்த் தலைமைகள் வரவேற்றிருந்தன. இருப்பினும் அவர்கள் அதன் வழிவந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்திருந்தார்கள். இதில் எனக்கு நேரடியான அனுபவம் உள்ளது. எனது அப்பா (அமிர்தலிங்கம்) லண்டனில் இருந்து
அவசரமாக நாடு திரும்பி கட்சியின் பொதுச்சபையையும், மத்திய குழுவினையும் கூட்டி தேர்தலில் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
அதன்போது கட்சியின் உறுப்பினர்கள் தமது உயிருக்கு ஏற்படும் ஆபத்தினையே முன்னிலைப்படுத்தி கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். இதன்காரணமாகவே அப்பா ஒருபடி பின்நோக்கிச் சிந்தித்து தேர்தலில் பங்குபற்றுவதில்லை என்ற முடிவை எடுத்திருந்தார்.
தமிழர் விடுதலைக்கூட்டணி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடமாட்டாது என்ற முடிவை எடுத்தமையானது அப்போதிருந்த இந்திய உயர்ஸ்தானிகர் தீட்சித்திற்கு கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது.
அதேநேரம் பத்பநாபாவின் இலக்கில் வரதராஜப்பெருமாளை முன்னிலைப்படுத்தி அதனை ஏற்று நடத்த துணிந்தது மிகப்பெரும் விடயமாகும்.
அப்போது நடத்தப்பட்ட விடயங்களை வைத்து பார்க்கையில் சரி, பிழை என்பதற்கு அப்பால் வடகிழக்கு இணைந்த மாகாணத்தினை ஈ.பி.ஆர்.எல்.எப்.பினர் முன்னெடுத்திருந்தமையை சிறந்ததொரு படியாகவே நோக்கலாம்.
உண்மையில் ஜே.ஆர். தலைமையிலான அரசாங்கத்திற்கு பெரியண்ணனாக இருந்த இந்தியாவை எதிர்ப்பதற்கு எந்தவிதமான வாய்ப்புகளும் காணப்பட்டிருக்கவில்லை. அவர்கள் இந்தியா சொல்வதைக் கேட்கவேண்டிய நிலைமைக்குள் தான் இருந்தார்கள்.
அவ்வாறிருக்கையில் தமிழர் தரப்பில் காணப்பட்ட ஒற்றுமையற்ற தன்மையால் சரியான முன்னெடுப்புக்களை முன்னெடுக்க முடியாது போனது. இதனால் தான் மாகாண சபை முறைமையை சரியாக முன்னெடுக்க முடியாது போனது. அந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்தியிருப்போமானால் தனித் தமிழீழத்தினையோ அல்லது சமஷ்டியையோ இணைந்த வடகிழக்குடன் அன்றே பெற்றிருப்போம்.
Q: வடகிழக்கு தமிழ் மக்களின் தளப தியாக இருந்தவர் உங்களுடைய தந் தையார் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். அவரின் மறை வின் பின்னர் அவருடைய இரண்டு புதல்வர் களும் சமூகத்தினை விட்டு அந்நியமாக இருந் தமைக்கு காரணம் என்ன?
A: அந்நியமாக இருந்து விட்டோம் என்று கூறமுடியாது. என்னைப் பொறுத்தவரையில் அப்பாவின் மரணத்துடன் எனக்கு காணப்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக நான் நாட்டை விட்டு வெளியேறியிருந்தேன். அதன் பின்னர் என்னால் நாட்டுக்குள் பிரவேசிக்க முடியவில்லை. கடந்த மூன்று வருடங்களாக இலங்கைக்கு வருகை தர ஆரம்பித்திருக்கின்றேன். ஒரு சில சமூக வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.
Q: எவ்வாறான சமூக வேலைத்திட்டங் களை முன்னெடுத்து வருகின்றீர்கள்?
A: வடக்கிலும், கிழக்கிலும் உள்ள வறுமையில் கல்வி கற்கும் மாணவர்களின் தேவைகளுக்காக நிதி உதவிகளைச்செய்வதோடு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் உதவிகள் அளிக்கப்படுகின்றன. ஏடு என்ற ஒரு அமைப்பினை ஸ்தாபித்து இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Q: உங்களுடைய அரசியல் பிரவேசத்தின் ஆரம்பமாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றனவா?
A: இல்லை, எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை. இங்கு பிரச்சினைகள், நெருக்கடிகள் இருக்கும்போது நாங்கள் மக்களுடன் இருக்கவில்லை. அவ்வாறான நிலையில் தற்போது இங்கு வந்து அரசியலில் ஈடுபடுவது நாகரிகமற்ற செயற்பாடு என்பதாகவே நான் கருதுகின்றேன்.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கொள்ளும் பணிகளை விடவும் நான் இங்குவந்து எதனையும் செய்துவிடப்போவதில்லை. அதன் காரணத்தினாலேயே என்னால் இயலுமானவற்றை சமூகத்திற்கு செய்வதற்காக இவ்வாறான அமைப்பொன்றை உருவாக்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
Q: மக்கள் சேவையில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட உங்களின் தந்தையாரின் மர ணத்தினால் ஏற்பட்ட வெறுப்பானது நீங்கள் அர சியலில் ஈடுபடுவதற்கு முட்டுக்கட்டையாக இருக் கின்றதாக கொள்ளலாமா?
A: ஒருபோதுமில்லை. அஞ்சினர்க்கு சதா மரணம், அஞ்சாத நெஞ்சத்து ஆடவனுக்கு ஒரு மரணம் என்று கூறியே என்னையும் அண்ணனையும் அப்பா வளர்த்தார். எங்களுக்கு பயமிருக்கவில்லை.
அப்பா நன்றாகப் படம் பார்ப்பார். இரவுக்காட்சிக்காக யாழ்ப்பாணம் செல்லும் போது அதற்கு முன்னைய காட்சிக்குச் சென்ற இளைஞர்கள் கல்லுண்டாய்வெளியில் பெரிய கற்களை அல்லது தென்னங்குற்றிகளை போட்டுவிட்டுச் சென்றுவிடுவார் கள்.
அப்போது அப்பா காரை நிறுத்தி விட்டு எங்களை இறங்கிச்சென்று அவற்றை வீதிக்கரைகளில் போடுமாறு கூறுவார். அப்போது எங்களுக்கு பத்து, பன்னிரண்டு வயதிருக்கும். எங்களுடைய அம்மா எங்களை அனுப்ப வேண்டாம் என்று தந்தையுடன் சண்டையிடுவார். அதெல்லாம் பசுமையான நினைவுகள்.
ஆனாலும் அப்பாவின் மரணம் மிகப்பெரிய இழப்பு. அவரை நான் அப்பாவாக பார்க்கவில்லை. எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தார். தலைவராக இருந்தார். அவருடைய மரணம் என்னை மிகக் கடுமையாக பாதித்திருந்தது.
Q: உங்களுடைய சகோதரர் காண்டீபன் தலைமையிலான இயக்கமும், உங்க ளின் பங்குபற்றுதலுடன் தமிழீழ தேசிய இராணுவம் என்ற இயக்கமும் உருவாக்கப்பட்டமைக் கான காரணம் என்ன?
A: அந்தக்காலப்பகுதியில் தமிழாராய்ச்சி மாநாடு மிகவும் சவாலானதொரு விடயமாகவிருந்தது. அந்த மாநாடு நடைபெற்று ஒருவருடத்திற்குள் எழும்பூரில் நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்புச்சம்பவங்களுடன் எனது அண்ணன் தொடர்பு பட்டிருந்தார்.
அது சிவகுமாரன் அண்ணாவின் காலப்பகுதி. இளைஞர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. அத்தகைய சூழலில் தான் அண்ணாவும் அவ்வாறானதொரு செயற்பாட்டில் ஈடுபட்டார்.
பின்னர் அண்ணா காண்டீபன் அக்குற்றத்திற்கான தண்டனையை பெற்று நாடு திரும்பினார்.
1972 இல் செட்டி தமிழ் புதிய புலிகள் அமைப்பினை உருவாக்கும் போது பிரபாகரன், அண்ணா காண்டீபன், பெரிய சோதி இவ்வாறு பலர் அதில் பகுதிகளாக இருந்தனர்.
பின்னரான காலப்பகுதியில் பிரபாகரன் தமிழீழ விடுதலைப்புலிகள் என பிரிந்தார். அண்ணா காண்டீபன் இங்கிலாந்துக்கு அரசியல் அடைக்கலம் கோரிச் சென்றுவிட்டார்.
என்னைப்பொறுத்தவரையில் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட அனைத்து இயக்கத்தினரையும் அறிந்தவனாக இருந் தேன். 1981 இல் நான் இங்கிருந்து வெளியேறி மதுரை மருத்துவக் கல்லூரியில் கல்வி கற்கச் சென்றிருந்தேன்.
அச் சந்தர்ப்பத்தில் எனக்கு இலங்கையின் செய்தி த்தாள்கள் இராமேஸ்வரம் ஊடாக கிடைக் கும். நான் வாசித்த பின்னர் அவற்றைப் பெற்றுச்செல்வதற்காக கிட்டு அங்கு வருகை தருவார்.
அதன்போது கலந்துரையாடுவார். புலிகளுடன் அவ்வாறானதொரு புரிந்துணர்வே இருந்தது. அதன் பின்னர் உமாமகேஸ்வரனுக்கும், பிரபாகரனுக்கும் பிளவு ஏற்பட்டபோது இருதரப்பினருடனான தொடர்புகளை நிறுத்திக்கொண்டேன்.
அத்தோடு தமிழர் விடுதலைக் கூட்டணியை அனுசரித்துச் செல்லக்கூடிய இயக்கமொன் றை உருவாக்க வேண்டுமென நானும் நண்பர்களும் சிந்தித்தோம்.
மன்னார் ஜெயராஜா தலைமைத்துவத்தில் பணியாற்ற நானும் இன்னும் சில நண்பர்களும் இணைந்து தமிழீழ தேசிய இராணுவம் (டெனா) என்ற இயக்கத்தினை உருவாக்கினோம்.
இதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தவிதமான உதவியையோ ஆதரவையோ வழங்கவில்லை. ஒரு குறுகிய காலம் அந்த இயக்கம் இருந்தது. நாங்கள் இயங்குவதை விடுதலைப்புலிகளும் விரும்பியிருக்கவில்லை. 1986 இல் ஜெயராஜையும் அவர்கள் (புலிகள்) கொலை செய்தார்கள்.
பின்னர் 1987 இல் இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானவுடன் நாம் ஆயுத இயக்கமாக தொடரவேண்டியதில்லை என்று தீர்மானித்து அவ் இயக்கத்திலிருந்த அனைவரையும் அவர்களின் வீட்டுக்குச் செல்லுமாறு பணித்து இயக்கத்தினை கலைத்திருந்தோம். தொடர்ந்து நான் மதுரைக்குச் சென்று எனது மருத்துவக் கல்வியைத் தொடர ஆரம்பித்திருந்தேன்.
Q: ஆயுத இயக்கத்தில் நீங்கள் ஈடுபட்ட போது உங்களின் தந்தை எவ்வாறு பிர திபலித்திருந்தார்?
A: அப்பா எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இயக்கங்களை உருவாக்குவதற்கோ அந்த வழியில் எங்களைச் செல்வதற்கோ விரும்பியிருக்கவுமில்லை. ஆதரவளிக்கவுமில்லை.
ஆனால் இயக்கத்தினை ஆரம்பிக்கும் விடயத்தினை அப்பா அறிந்தபோது என்னிடத்தில், எல்லா இளைஞர்களும் ஆயுத இயக்கங்களில் தம்மை ஈடுபடுத்தி பணியாற்றும்போது உன்னை தடுக்க என்னால் முடியாது. ஆனால் உனது கல்வியை ஏதோவொரு வகையில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்றே கூறினார். நான் அதனை அப்போது ஆமோதித்திருந்தேன்.
Q: ஆயுத இயக்கங்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை கொண்டிருக்காத உங் களின் தந்தையாருக்கும், புலிகளுக்கும் இடை யில் முரண்பாடுகள் ஏற்படுவதற்கு காரணம் என்ன?
A: முதலாவதாக எனது அப்பா, தமிழீழம் கிடைக்குமாகவிருந்தால் மிக நல்லது. அல்லது தமிழீழமல்லாது நியாயமானதொரு தீர்வு கிடைக்கும் என்றால் அதனை ஏற்றுக் கொள்வதென்பதில் உறுதியாக இருந்தார்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று மாவட்ட சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில், நீங்கள் மாவட்ட சபைகளை ஏற்றுக்கொண்டதால் இளைஞர்களுக்கு மத்தியில் அதிருப்திக்குள்ளாகி வருகின்றீர்கள்.
பிரபல்யம் குறைவடைய ஆரம்பித்திருக்கின்றது. இவற்றை அறிந்து கொண்டும் மாவட்ட சபைகளை ஏற்றுக்கொண்டமைக்கான காரணம் என்ன என அப்பாவிடத்தில் கேள்வியெழுப்பியிருந்தேன்.
அதன்போது நாளைய சந்ததியின் காலத்தில் எதுவும் கிடைக்காத பட்சத்தில் மாவட்ட சபையையாவது ஏற்றிருக்கலாம் என எவரும் என்னை குற்றம் சாட்டக்கூடாது என்ற காரணத்தினாலேயே மாவட்டசபை விடயத்தினை ஏற்றுக்கொண்டேன். முதலில் இதனை ஏற்றுக்கொண்டு பின்னர் அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டும் என்று பதிலளித்திருந்தார்.
அடுத்ததாக இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தாகியதன் பின்னர் உர்வாக்கப்படுவதாகவிருந்த இடைக்கால நிர்வாகத்திற்கு புலிகளுக்கு ஏழு ஆசனங்களும் தமிழர் விடுதலைக்கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ரெலோ ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு ஆசனங்கள் வீதம் வழங்கப்பட்டன. அதில் புளொட் தமக்கான ஆசனத்தினை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்குவதாக கூறியிருந்தது.
இதன்போதும், ஜனநாயக கட்சியாக விருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஒரு ஆசனம் வழங்கப்படுகின்றதை எவ்வாறு ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்று எனது அப்பாவிடத்தில் வினவியிருந்தேன்.
அதன்போது, இதனை என்னுடைய அரசியல் சார்ந்த பிரச்சினையல்ல. எனது கட்சி சார்ந்த பிரச்சினையல்ல. எமது மக்களுக்கு கிடைக்கின்ற ஒரு தீர்வாக பார்க்கின்றேன்.
ஆகவே எனக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதற்காக ஏற்றுக்கொள்ளாது விட்டால் அது நான் செய்யும் மிகப்பெரும் தவறாகிவிடும்.
விடுதலைப்புலிகளிடத்தில் இடைக்கால நிர்வாகத்தினை வழங்கினாலும் அதற்கு அடுத்தபடியாக நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் தான் தமது பிரதிநிதிகள் யார் என்பதை தீர்மானிப்பார்கள். மக்கள் எங்களை தெரிவு செய்வார்கள் என்ற அதீத நம்பிக்கை எனக்குள்ளது என்று அப்பா கூறியிருந்தார்.
இடைக்கால நிர்வாக சபையினை முழுமையாக விடுதலைப் புலிகளுக்கு வழங்கியாவது பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்று தான் அப்பா விரும்பினார். ஆனால் விடுதலைப்புலிகள் ஆரம்பத்திலிருந்து இடைக்கால நிர்வாக சபையை தோல்வியடையச்செய்யவேண்டும் என்று தான் நினைத்தார்கள். அதனால் தான் மூவரின் பெயரை வழங்கியிருந்தனர்.
அந்நிலையில் சிவஞானம் யார் என்பதை புலிகள் நன்கறிந்திருந்தனர். அவருடைய பெயரை ஜே.ஆர். தெரிவு செய்த பின்னர் அவர் வேண்டாம் என்று கூற புலிகளால் முடியாதல்லவா?
எனது அப்பாவினைப் பொறுத்தவரையில் சென்னையில் பல தடவைகள் பிரபாகரனையும், ஏனைய இயக்கங்களின் தலைவர்களையும் சந்தித்திருக்கின்றார். குட்டிமணி தங்கத்துரை பாண்டிச்சேரியில் பிடிபட்டிருந்தபோதும், பாண்டிபசாரில் துப்பாக்கிச் சூட்டு விவகாரத்தின் பின்னர் பிரபாகரன், உமாமகேஸ்வரன் ஆகியோர் பிடிபட்டிருந்தபோதும் அவர்களை மீட்பதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
விடுதலை இயக்கங்கள் தமிழீழத்தினை நோக்கிய பாதையினை அமைத்துச் செல்வதாகவே அப்பா நம்பியிருந்தார். ஆனால் தமிழர் தரப்புகளுக்கிடையில் எப்போதுமே பொறாமையான மனநிலைமையே இருந்து வருகின்றது.
1983ஆம் ஆண்டு இனக்கலவரம் நடைபெற்றதன் பின்னர் மக்கள் பயந்திருந்த நிலையில் வீரமா காளியம்மன் ஆலயத்திற்கு முன்னால் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்பட்டபோது போராட்டத்தினை இடையில் முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அவர்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கப்பட்டன. இது விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் விடயமல்லவா?
தமிழர் விடுதலைக் கூட்டணியைப் பொறுத்தவரையில் எந்தவொரு காலகட்டத்திலும் ஆயுத விடுதலை இயக்கங்களை தமக்கு சவால் மிக்கவையாக கருதவில்லை.
என்னுடைய தந்தையார் ஒருபோதும் புலிகளை பகிரங்கமாக விமர்சித்தது கிடையாது. அவர் என்றும் எமது இளைஞர்கள் என்ற நிலைப்பாட்டிலேயே அனைத்து ஆயுத இயக்கத்தினரையும் பார்த்தார்.
ஆனால் இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் புலிகள் இந்திய இராணுவத்துடன் யுத்தம் செய்து கொண்டிருந்த போது தான், நாங்கள் கட்டுப்படுத்த முடியாத சக்தியை உருவாக்கி விட்டோம்.இது எல்லோரையும் அழித்து தன்னையும் அழித்துவிடும் என்று அப்பா கூறினார்.
Q: உங்களின் தந்தை வௌிப்படுத்திய விமர்சனம் தான் புலிகள் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு வழியிட்டதா?
A: புலிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் ஏகப்பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக திரு,திருமதி பூரி தெல்லிப்பழைக்கு நேரடியாகச் சென்று பிரபாகரனுக்கு விளங்கப்படுத்தியிருந்தனர்.
அதன்போது அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். அதன் பின்னர் சென் னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலை யத்தில் வைத்து பிரபாகரன் ஊடகவியலா ளர்களைச் சந்தித்தபோது, இந்தியா நல் லெண்ணத்துடன் செயற்படுகின்றது. அத ற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவோம் என்று கூறியே டெல்லிக்குச் சென்றார்.
பிரபாகரன் டெல்லிக்குச் சென்ற பின்னர், அங்கு தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட ஏனைய இயக்கங்களுடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்படவேண்டும் என இந்திய மத்திய அரசாங்கம் அவரிடத்தில் கூறியபோது தான் பிரபாகரன் கோபமடைந்தார்.
ஆகவே விடுதலைப் புலிகள் ஏகப்பிரதிநிதித்துவத்திலேயே அதிகளவு கவனம் செலுத்தியிருந்தார்கள். அவர்கள் தங்களைத் தான் (இயக்கத்தினையே) முன்னிலைப்படுத்தியிருந்தார்களே தவிர இனத்தையல்ல.
Q: ஆயுத போராட்ட இயக்கங்களிலேயே அதிகளவு உயிர்களை தியாகம் செய்தவர்கள் விடுதலைப்புலிகள். அது இனத்திற்கானதாக அமையாது என்கின்றீர்களா?
A: அவர்களின் தியாகத்தினை நான் கொச்சைப்படுத்தவில்லை. இந்திரா காந்தியின் காலகட்டம் வித்தியாசமானது.
பங்களாதேஷின் விடுதலைக்கு எவ்வாறு பங்களிப்புக்களை வழங்கினாரோ அதேபோன்று எமது (தமிழர்களின்) விடுதலையிலும் பங்களிக்கலாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருந்தார். இந்தியா பிரிவினைக்கு ஆதரவு தெரிவித்திருக்காது என்று இப்போது கூறினாலும் அந்தக் காலகட்டம் வித்தியாசமானது.
ஆனால் ராஜீவ் காந்தியின் காலகட்டம் இதிலிருந்து மாறுபட்டது. பார்த்தசாரதி நீக்கப்பட்டு ரொமேஷ் பண்டாரி உள்வாங்கப்படுகின்றார். திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ராஜீவ் காந்தி ஐக்கிய இலங்கைக்குள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே விரும்பினார்.
ராஜீவ் காந்தி, ஆயுதக்குழுக்களை ஒன்றுபடுத்தி பொதுவான தலைமைத்துவத்தினை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். அந்த முயற்சிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஈடுபட்டபோது விடுதலைப்புலிகளே மிகப்பெரும் தடையாக இருந்தனர். அவர்கள் அவ்வாறான ஒன்றை விரும்பியிருக்கவில்லை.
கலைஞர் கருணாநிதிக்கு முன்னால் சென்று ஏனைய மூன்று இயக்கங்களை சேர்த்து பயணிப்பதாக கூறிவிட்டு பின்னர் அந்த இயக்கங்களை அழித்து விட்டார்கள். இதே செயற்பாடுகளையே தமிழ்த் தலைமைகள் மீது மேற்கொண்டார்கள்.
எனது அப்பாவுக்கு கோபம் வரும் என்று ஒரு காரணத்தினை கூறலாம். ஆனால் தருமலிங்கம், ஆலாலசுந்தரம் போன்றவர்களை கொலைசெய்ததை எவ்வாறு மன்னிப்பது? தருமலிங்கம் மாமா உண்மையிலேயே மகாபாரதத்தில் தருமர் பாத்திரத்திற்கு ஒப்பானவரே. அத்தகையவர்களை அழித்தது மிகப்பெரும் அநியாயமே.
Q: உங்களுடைய தந்தையின் மறைவின் பின்னர் தமிழ் மக்களுக்கான தலை மைத்துவத்தில் இடைவௌியொன்று ஏற்பட்டிருக்கின்றது என கருதுகின்றீர்களா?
A: தற்போது எதிர்க்கட்சித்தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் சம்பந்தன் இருக்கின்றார். அவர் எனது தந்தையின் பின்னர் அந்த பாத்திரத்தினைப் பொறுப்பேற்று மிகச் செவ்வனே செய்கின்றார் என்பது தான் எனது நிலைப்பாடு.
இராஜதந்திர ரீதியாகவும் சரியான நகர்வுகளை கொண்டு செல்வதோடு அவருக்கு தலைமைக்கான பல விசேட தன்மைகள் இருக்கின்றன. சம்பந்தனைப் பற்றி தந்தை செல்வாவும் சரியாக அறிந்திருந்தார் என்பதை அப்பா கூறிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
எனது தந்தையின் மறைவுக்கு பின்னர் நீண்டதொரு தொய்வடைந்த நிலைமையில் தான் தமிழர்களுக்கான தலைமைத்துவம் சம்பந்தனின் கையில் வழங்கப்பட்டிருக்கின்றது. அந்த பாரிய சுமையை கொண்டு சுமந்து செல்கின்றார். சம்பந்தன் ஒரு இராஜதந்திர அரசியல்வாதி. அவருடைய நகர்வுகளும் வித்தியாசமானவையே.
Q: இந்திய–இலங்கை ஒப்பந்தம் கைச் சாத்திடப்பட்ட பின்னர் விடுதலை இயக் கங்களுக்குள் காணப்பட்ட ஒற்றுமையின்மை அதனை சரியான திசைக்கு கொண்டு செல்ல முடியாது போனதாக கூறினீர்கள். தற்போதைய சூழலில் தமிழர் தரப்பில் காணப்படும் ஒற்று மையை எப்படி பார்க்கின்றீர்கள்?
A: இன்னமும் அதே நிலைமை தான் நீடிக்கின்றது. அனைவரும் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று சிந்திக்கின்றார்கள். அந்த சிந்தனையை சற்று நிறுத்தி வைத்து விட்டு இனம் சார்ந்து சிந்திக்க வேண்டும்
Q::- வடக்கில் சர்ச்சைகளுடன் இயங்கி வரும் வடமாகாண சபை குறித்து உங் களின் பார்வை எவ்வாறுள்ளது?
A: எமக்கு முதற்தடவையாக மாகாண சபையை நிர்வகிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. அதனை சிறப்பாக நிர்வகித்து முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக காட்டியிருக்க வேண்டும்.
நீதியரசர் விக்கினேஸ்வரனின் தலைமைத்துவத்தில் அத்தகையதொரு நிலைமை ஏற்பட்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவ்வா றானதொரு நிலைமை ஏற்படாது சர்ச்சைகள் காணப்படுகின்றமை கவலை அளிக்கின்றது.
Q: விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்புள்ளிக்கு வந்தமைக்கு காரணம் என்ன?
A: முதலாவதாக தமிழ்த் தலைவர்களின் மரணங்களைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும் தமிழ்த் தலைவர்களுக் கும் இடையிலான தொடர்பாடல் இல்லாது போயு ள்ளது.
அடுத்ததாக இந்தியா பிரபாகரனின் தலைமைத் துவத்தினை விரும்பியிருக்க வில்லை. அதற்காக மாத்தையாவிடத்தில் தலைமைத் துவத்தினை வழங்கி அவரைப் பயன்படுத்த முனைந்த செயற் பாடுகள் நல்ல உதாரணமாகின்றன.
இறுதியாக விடு தலைப்புலிகள் கொரில்லா போர் முறைமையில் இருந்து மரபியல் ரீதியான யுத்த முறைமைக்கு மாறியமை.
20 சதவீத இனத்தவர்களால் மரபியல் ரீதியான யுத்த முறை மையை முன் னெடுத்து வெற்றி பெறுவ தென்பது மிகவும் கடினமானதொரு விடயம். ஆகவே இவை தான் எனக்கு தெரிந்தவரையில் காரணங்களாக கூற முடியும்.
Q:தமிழர்களின் பிரச்சினைக்கு நியாய மான தீர்வினை விரைவாக பெற்றுக் கொள்வது சாத்தியமாகுமெனக் கருதுகின்றீர் களா?
A: தற்போதைய சூழலில் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உட்பட சர்வ தேசத்தின் பல நாடுகள் அக்கறை செலுத்தி வருகின்றன.
இருப்பினும் இந்தியாவே எமது நாட்டிற்கு அருகில் உள்ள மிகப்பெரும் நாடாகும். இந்தியாவின் அனுசரணையின்றி எமது பிரச் சினைக்கு என்றுமே ஒரு தீர்வு வருவதற்கான சந்தர்ப்பமில்லை.
1983 ஆம் ஆண்டு இனக்கலவரம் நடை பெற்றபோது தமிழகம் மட்டுமன்றி சரண்சிங், வாஜ்பாய் போன்றவர்களும் வட இந்தியர் கள் உட்பட ஒட்டுமொத்த இந்தியாவுமே எமக்காக குரல் எழுப்பியது.
ஆகவே இந்துத் துவ கொள்கையைக் கொண்டிருக்கும் பாரதீய ஜனதா கட்சி எமது விடயங்களில் கொண் டிருக்கும் கரிசனையைப் பயன்படுத்தி அர சாங்கத்திற்கு அழுத்தங்களை செய்ய வைப் பதற்கு முனையலாம்.
Q: அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், போன்ற நாடுகளின் ஆதிக்கப்போட்டி நடைபெறும் இலங்கைத்தீவில் இந்தியா இலங் கைக்கு கணிசமான அழுத்தமொன்றை தமிழர் களுக்காகச் செய்யும் எனக் கருதுகின்றீர்களா?
A: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏனைய நாடுகளைவிடவும் நல்லு றவொன்று இருந்து வருகின்றது. இலங்கை யிலேயே இன்னொரு நாட்டின் அமைதிப் படை அரசாங்கத்தின் அனுமதியுடன் வருகை தந்திருக்கின்ற நிலைமை இடம்பெற்றிருக் கின்றது.
துருக்கியில் சைப்பிரஸ் பிரஜைகளை காப்பாற்றுவதற்கு அமைதிப்படை சென்றி ருந்தாலும் துருக்கி அரசாங்கத்தின் அனும தியைப் பெற்றிருக்கவில்லை.
ஆகவே இலங்கையில் தான் அவ்வாறான நிகழ் வொன்று நடைபெற்றிருக் கின்றது. ஆகவே கடந்த காலத்தில் அத்த கைய செயற்பாட்டினை மேற்கொண்ட இந்தியா தற்போது அரசாங்கத்துடன் இருக்கும் நல்லுறவின் நிமித்தம் வற்புறுத்தலைச் செய்ய முடியும்.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையி லான உறவுகளிலும் மாற்றம் ஏற்பட்டிருக் கின்றது. ஆகவே இந்தியாவின் தலையீடுசாத்தியமானதொன்றாகும்.
நேர்காணல் : ஆர்.ராம்
படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்