தமிழீழத்தின் காவல் அரணாக விளங்கிய தமிழ் மக்களின் படை பலம் சிறீலங்கா, இந்திய அரசுகளினால் கூட்டாக முறியடிக்கப்பட்ட பின்னர் தமிழீழத்தில் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தொடர் இனஅழிப்புக்கள் பல்வேறு வடிவங்களில் மெல்ல மெல்ல உக்கிரமடைந்து வருகின்றது.
கலாச்சார சீரழிவுகள், பொருளாதார முடக்கம், திட்டமிட்ட மதப்பரம்பல்கள் (புத்த கோவில்களின் வருகை), திட்டமிட்ட குடியேற்றங்கள், பொருளாதார வளங்களை சூறையாடல், முன்னால் போராளிகளை துன்புறுத்துதல் மற்றும் படுகொலை செய்தல் என தொடரும் இந்த மிகநுட்பமான இனஅழிப்புக்களின் வடிவம் இத்துடன் முடிவடைந்துவிடவில்லை.
தமிழ் மக்களின் இப்பெருக்க விகிதாசாரத்தை குறைக்கும் முயற்சிகளையும் சிங்கள தேசம் மிகவும் நுட்பமாக மேற்கொண்டு வருகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பொருளாதார நெருக்கடிகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திவரும் சிங்கள தேசம் கட்டாய கருத்தடையை தமிழ் பெண்களுக்கு முன்னர் மேற்கொண்டதும் நாம் அறிந்தவையே.
போதைப் பொருட்களின் பாவனையை தமிழ் பகுதிகளில் ஏற்படுத்தி தமிழ் இளைஞர்களின் எதிகாலத்தை சீரழித்துவரும் சிங்களதேசம் தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குழந்தை பெற்ற தாய்மார்களின் தவவல்களை சேகரித்து வருகின்றது.
சிறீலங்காவின் தேசிய பாதுகாப்புக்காகவே இதனை மேற்கொள்வதாக சிங்கள தேசத்தின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சகா தெரிவித்துள்ளார். ஆனால் பிறக்கப்போகும் குழந்தைகளுக்கும் சிங்கள தேசத்தின் பாதுகாப்பிற்கும் என்ன தொடர்புள்ளது என்பதை யாரும் அறியோம். ஆனாலும் சிங்கள தேசம் அதனை முன்னெடுக்க முனைகின்றது.
போரின் பின்னர் தமிழர் பகுதிகளில் பெருமளவான புலனாய்வு நடைவடிக்கைகளை சிங்கள தேசம் மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம். இந்த நடவடிக்கைகளை சிங்கள தேசம் இரு வழிகளில் முன்னெடுக்கின்றது. ஓன்று தமிழ் மக்களின் நெருக்கடி நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அல்லது அவர்களுக்கு நெருக்கடிகளை தோற்றுவித்து அதற்கு உதவிகளை வழங்குவதாக பாசாங்கு செய்து தமிழ் மக்களுடன் ஒட்டிஉறவாடி தமிழ் மக்களின் மனங்களை வென்று பின்னர் இனத்தை சீரழிப்பது.
இரண்டாவது நேரிடையான இராணுவ புலனாய்வு நடவடிக்கைகள். அதற்கு ஆதரவாகவே பெருமளவான படையினரை தற்போதும் சிறீலங்கா அரசு தமிழ் மக்களின் பிரதேசங்களில் நிலைநிறுத்தியுள்ளது.
தமிழ் மக்களின் இனவிகிதாசாரத்தை குறைத்தல் என்ற சிறீலங்கா அரசின் திட்டத்தின் தாக்கம் எத்தகையது என்பதை நாம் அறியவேண்டும் எனில், ஆயுதப்பேராட்டம் தோல்வியடைந்த பின்னர் அரசியல் ரீதியாக தம்மை உறுதியாக நிலைநிறுத்திய வடஅயர்லாந்து விடுதலைப்போராளிகளின் மதிநுட்ப அரசியலை புரிந்துகொள்ளவேண்டும். அவர்களின் அரசியல் விழிப்புணர்வானது தற்போது அங்கு வாழும் கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து மக்களின் விகிதாசாரத்தை பெருமளவில் மாற்றியமைத்துள்ளதாக இந்த வருடம் சித்திரை மாதம் இடம்பெற்ற ஆய்வறிக்கை ஒன்றில் பிரித்தானியாவின் பி.பி.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து விடுதலையடைவது அல்லது தம்மை தாமே முற்றுமுழுதாக ஆட்சிபுரிவது என்ற நோக்கத்துடன் ஆரம்பமாகிய வடஅயர்லாந்து போராட்டத்தை பிரித்தானியா அரசு தனது படைபலம் கொண்டு முடக்கியபோதும் தமது அரசியல் நகர்வின் மூலம் வடஅயர்லாந்து மக்கள் தற்போது மிகப்பெரும் நெருக்கடியை பிரித்தானியா அரசுக்கு கொடுத்துள்ளனர்.
தமது இனத்தின் விருத்தியின் மூலம் வடஅயர்லாந்தின் இனவிகிதாசாரத்தை மாற்றி அமைத்து அதன் மூலம் அரசியல் பலம்பெறுவது என்பதே அவர்களின் நோக்கம். அதற்காகவே கருகலைப்பு என்பது அங்கு சட்டவிரோதமாக்கப்பட்டது. இதன் மூலம் அங்கு பிறப்பு விகிதம் அதிகரித்தது. கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்தது புரட்டஸ்ததாந்து மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டது.
நிலமை இவ்வாறு போனால் 2021 ஆம் ஆண்டில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மை இனமாக மாற்றம் பெற்றுவிடுவார்கள் என் வடஅயர்லாந்தின் அமைதி மற்றும் சமூக நடவடிக்கைகளை காண்காணித்து வரும் அமைப்பின் அதிகாரியான கலாநிதி போல் நோலன் தெரிவித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடித்தொகைக் கணக்கெடுப்பின்போது புரட்டஸ்த்தாந்து மக்களின் இனவிகிதாசாரம் 48 விகிதமாக இருந்தது, இது கத்தோலிக்க மக்களின் எண்ணிக்கையை விட 3 விகிதமே அதிகமாக இருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் வேலை செய்யும் மக்கள் தொகையில் 44 விகிதம் கத்தேலிக்கர்களாகவும், 40 விகிதம் புரட்டஸ்தாந்து மக்களாகவும் உள்ளதுடன் பாடசாலைச் சிறுவர்களில் 51 விகிதம் கத்தேலிக்க சிறுவர்களாகவும், 37 விகிதம் புரட்டஸ்தாந்து சிறுவர்களாகவும், ஏனையவர்கள் 12 – 13 விகிதமாகவும் உள்ளதாக பி.பி.சி மேலும் தெரிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கையிலேயே புரட்டஸ்த்தாந்து மக்களின் விகிதாசாரம் அதிகமாக உள்ளது. புரட்டஸ்த்தாந்து மக்கள் 57 விகிதமும், கத்தோலிக்கர்கள் 35 விகிதமாகவும் உள்ளனர். எனவே எதிர்வரும் மூன்று வருடங்களில் புரட்டஸ்தாந்து மக்கள் தமது பெரும்பான்மையை இழந்துவிடுவார்கள், எனவே வடஅயர்லாந்து பிரிததானியாவுடன் இணைந்து இருப்பதா அல்லது இல்லையா என்பது இந்த மக்களின் மனங்களை வெல்வதன் மூலமே தீர்மானிக்க முடியும் என நோலன் மேலும் தெரிவித்துள்ளார்.
அதாவது தனது படைபலம் மூலம் பிரித்தானியா மேற்கொண்ட ஆக்கிரமிப்பை தமது இனவிருத்தி மூலம் வடஅயர்லாந்து மக்கள் முறியடித்துள்ளனர்.
தற்போது நமக்கு புரிந்திருக்கும் சிங்கள அரசின் நுட்பமான இனஅழிப்பின் பின்னனி. இதனை தடுக்கவேண்டிய கடமையானது தமிழ் அரசியல்வாதிகளினதும், இனப்பற்று கொண்டவர்களினதும் கைகளிலேயே உள்ளது.
அண்மையில் இடம்பெற்ற ஆய்வறிக்கை ஒன்றில் சிறீலங்காவில் உள்ள இனங்களின் இனவிருத்தி விகிதாசாரத்தில் மூஸ்லீம் இனம் முதலிடத்திலும் (ஏறத்தாள 9 விகிதம்), சிங்கள இனம் இரண்டாம் இடத்திலும் (ஏறத்தாள 5 விகிதம்), தமிழ் இனம் மூன்றாம் இடத்திலும் (ஏறத்தாள 2 விகிதம்) உள்ளதாக கூறப்பட்டிருந்தது. அதாவது சிறீலங்காவின் மொத்த சனத்தொகையில் ஏறத்தாள 15 விகிதத்திற்கும் குறைவாக உள்ள தமிழ் மக்களின் விகிதாசாரத்தை மேலும் குறைப்பதற்கே சிங்கள தேசம் முற்படுகின்றது. அதாவது இந்த நிலமை தொடர்ந்தால் சிறீலங்காவில் இருந்து தமிழ் இனம் முற்றுமுழுதாக அழிவடையும் நிலையே ஏற்படும்.
74 சதவிகிதம் கொண்ட சிங்கள மக்களுடன் நாம் போட்டியிட முடியாது தான் ஆனால் தமிழ் மக்கள் தமது பகுதிகளை தக்கவைப்பதற்கேனும் குறிப்பிட்டத்தக்க அளவு சனத்தொகை வேண்டும்.
முதலில் நாம் சிங்கள அரசின் நுட்பமான இனஅழிப்புக்களை இனங்கண்டு அம்பலப்படுத்துவதுடன் அது தொடர்பில் மக்களிடம் ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். பின்னர் அதனை முறியடிப்பதற்கான திட்டங்களை வகுக்கவேண்டும். இவற்றை செய்வது எவ்வாறு?? இது தான் எமக்கு முன் உள்ள மிக முக்கிய கேள்வி.