மலையகத் தமிழர்கள் பச்சை இரத்தம் இந்த நூற்றாண்டின் தமிழ் அடிமைகள் பற்றியது
இந்த நூற்றாண்டிலும் அடிமைகளாக ஒரு தேசிய இனத்தின் முழுமையான பகுதியும் அடைத்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இருதயப் பகுதியில் வாழ்கின்ற மலையகத் தமிழர்கள் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு அங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். பரம்பரை பரம்பரையாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகவே வாழ நிர்பந்திக்கப்படும் ஒரு விசித்திரமான சமூகப் பொறிமுறையை இலங்கை அரசு மலையகத்தில் ஏற்படுத்தி வைத்துள்ளது.
ஏனைய பகுதிகளைச் சார்ந்த மக்களால் ‘இந்தியத் தமிழர்கள்’ என அழைக்கப்படும் மலையகத் தமிழர்கள் வடக்கு கிழக்குத் தமிழர்களிலிருந்து கலாச்சாரம், பொருளாதாரம், பிரதேசரீதியான தனித்துவத்தைக் கொண்டவர்கள். இன்று நேற்றல்ல, நூற்றாண்டுகளாகவே தேயிலைத் தொழிலாளர் குடியிருப்புக்களுக்குப் புதியவர்கள் சென்றால் அரச விசாரணைக்கு உட்படுத்தப்படும் அளவிற்கு அவர்கள் மீதான ஒடுக்குமுறையின் கோரம் உள்ளது.
யாழ்ப்பாண மையவாத, மேலாதிக்கச் சிந்தனையின் அரசியல் இந்தியப் பார்ப்பன மேலாதிக்க அரசியலைவிட பின் தங்கிய கூறுகளைக் கொண்டது. இலங்கை அரச பாசிசம் இரண்டு நூற்றாண்டுகளாக அடிமைகளாக வைத்திருக்கும் மலையகத் தமிழர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற நிர்வாகிகளதும், பள்ளிக்கூட ஆசிரியர்களதும் ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள். தோட்டக்காட்டான், வடக்கத்தையான் என்ற பெயர்களால் மலையகத் தமிழர்கள் அழைக்கப்பட்டார்கள்.
யாழ்ப்பாண வேளாள மேலாதிக்கம் கிழக்கு மாகாணத்தை எப்படிப் புறக்கணித்து தனது அதிகாரத்தை நிறுவ முயல்கிறதோ அதைவிட அருவருக்கத்தக்க வகையில் மலையக மக்களை ஒடுக்கியிருக்கிறது.
இந்த மேலாதிக்க அரசியலில் மொத்த வடிவமாக தேசிய விடுதலை இயக்கங்கள் தோன்றின. அவற்றின் மேலாதிக்க அரசியலை இந்திய அரசும் அதன் உளவு நிறுவனங்களும் வளர்த்தெடுத்தன. இறுதியில் யாழ்ப்பாண மேலாதிக்கவாதத்தின் ஏகப் பிரதிநிதிகளாகப் புலிகள் இயக்கம் எஞ்சியது. சமூகத்தின் கலாச்சாரத்தையும் அது தோற்றுவித்த அரசியலையும் மாற்ற விரும்பாத புலிகள் தாம் ஒரு இராணுவ அமைப்பு மட்டுமே என அறிவித்தனர். இன்று அதே வழியில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் அரசியல் வாதி அல்ல நிர்வாகி மட்டுமே என்கிறார். ஏனைய தேசிய இனங்களையும், பிரதேச வேறுபாடுகளையும் மதிக்கும் புதிய கலாச்சார மாற்றமின்றி சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் வெற்றிபெற முடியாது.
காலத்திற்குக் காலம் சிங்கள அரசுகளால் தூண்டிவிடப்படும் பேரினவாத வன்முறை மலையக மக்களையும் பாதித்திருக்கிறது.
பலர் வடக்கை நோக்கி இடம்பெயர்ந்து மீண்டும் கூலிகளாகப் பயன்படுத்தப்படுகின்றனர். இலங்கை அரசு வன்னிப் படுகொலைகளை நடத்திய போது இராணுவத் தாக்குதல்களில் பல இடம்பெயர்ந்த மலையகத் தமிழர்கள் மரணித்துப் போனார்கள்.
மலையகத் தமிழர்கள் மீதான இனச் சுத்திகரிப்பு 1948 ஆம் ஆண்டிலிருந்தே நடத்தப்படுகிறது. சிறுதொகுதி மலையகத் தமிழர்கள் தாம் வளப்படுத்திய மண்ணிலிருந்து பிடுங்கியெறியப்பட்டு தமிழகச் சேரிகளில் அனாதைகளாக விடப்பட்டார்கள்.
இந்தியாவிலிருந்து காலனி ஆதிக்க பிரித்தானியர்களால் இலங்கைக்குக் கடத்திவரப்பட்டு இன்றும் அடிமைகளாலவே பயன்படுத்தப்படும் மலையகத் தமிழர்களால் இந்திய தமிழ் உணர்வுப் பிழைப்புவாதிகளுக்குப் பொன்முட்டை போட முடியாது என்பதால் அவர்கள் மலையகத் தமிழ் தேசிய இனம் குறித்துப் பேசுவது கிடையாது.
தமிழகத்திலிருந்து ஈழம் பிடித்துத் தருவதாகப் போலி நம்பிக்கைகளை வளர்க்கும் ‘இன-மான’ வியாபாரிகள் ஏழைகள் என்பதால் மலையகத் தமிழர்களைக் கண்டுகொள்வதில்லைப் போலும். முள்ளிவாய்கால் நினைவு நாள் குறித்து ஒவ்வொரு மூலையிலும் பேசப்படுகின்ற மே மாதத்தில், வன்னியில் இனப்படுகொலையின் கோரத்திலிருந்து தப்பி இன்றும் முகாம்களுக்குள் முடங்கியிருப்பவர்களில் பெரும்பாலானோர் மலையகத் தமிழர்களே. 90 ஆம் ஆண்டிற்கு முன்னர் இனப்படுகொலைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக வன்னியை நோக்கி இடம்பெயர்ந்து அங்கு கூலிகளாக வேலைக்கமர்ந்துகொண்ட மலையகத் தமிழர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் எனப் பேரினவாதிகளால் அழைக்கப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் அcஅட்சி வன்னியில் நடைபெற்ற வேளையில் அங்கு பலர் புலிகளுக்குச் சேவை செய்பவர்களாகவும், புலிகளின் இராணுவத்திலும் இணைந்து கொண்டனர். மலையகத் தமிழர்கள் குறித்த ’20 ஆம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்; என்ற பி.ஏ.காதர் அவர்களால் எழுதப்பட்டட நூல் அந்த மக்களின் அவலங்களை வெளியே சொல்லத் தலைப்பட்டது.
இந்த நூற்றாண்டின் நிரந்தர அடிமைகளாக வைக்கப்பட்டுள்ள இந்த மக்கள் கூட்டம் வடக்குக் கிழக்கில் நடைபெற்ற போராட்டங்களிலிருந்து அன்னியப்பட்டிருந்தது. பேச்சுரிமை,எழுத்துரிமை, கல்விகற்கும் உரிமை போன்ற அனைத்தும் மறுக்கப்பட்ட நிரந்தரமான தொழிலாளர்களாகவே இன்றும் வாழும் தமிழர்கள் மலையகத் தமிழர்கள். இலங்கைப் பொருளாதாரத்தின் இரத்தம் இவர்களின் இழப்பில் உருவாக்கப்படும் தேனீரிலிருந்தே பெறப்படுகிறது.
மலையகத் தமிழர்களின் வரலாற்றை மையப்படுத்தி தவமுதல்வன் என்பவர் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மலையகத் தமிழர்கள் தொடர்பாக வெளியான முதலாவது ஆவணப்படம் பல புதிய தகவல்களைக் கூறுகிறது. நமது காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆவணப்படமும் நேர்கணலும் ஈழப் பிரச்சனை மீது அக்கறை கொள்ளும் அனைவராலும் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.