கட்சி அரசியல் செய்பவர்கள் தமது கட்சியை வளர்ப்பதற்கு ஒரு சில மக்களை பணம் கொடுத்து ஏமாற்றி ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வைக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாதிருக்க பொது மக்கள் விழிப்புனர்வுடன் செயற்படவேண்டும் என்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும்.
அண்மைக்காலமாக வன்னிப் பெருநிலப்பரப்பில் உண்ணாவிரதப் போராட்டங்கள், எதிர்ப்பு ஆர்பாட்டங்கள், அடையாள ஆர்ப்பாட்டங்கள் என்று தொடர்ந்து செல்கின்றது. இவ் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் வன்னி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் குறித்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியே காரணமாக அமைந்துள்ளன. மரணச் சடங்கு வீடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் செய்து தமது அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கு அல்லது புதிதாக அரசியல் களத்தில் நுழைவதற்கு ஏதுவாக இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தப் பிழைப்பைச் செய்வதை விட தெருவோரங்களில் இருந்து பிச்சை எடுப்பது மேல். குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் முன்வைக்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பொருளாதார மத்திய நிலையம், வவுனியா பஸ் தரிப்பு நிலையம் , காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள், ஐக்கிய நாடுகள் சபைக்கும் ஜனாதிபதிக்கும் கையொப்பம் இட்டு மகஜர் அனுப்பும் நடவடிக்கை, ஹறிஸ்ணவி கொலை, முதலமைச்சர் மற்றும் ஊழல் அமைச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டம், ஆபாச இணையத்தளங்களில் வவுனியாப் பெண்கள், முன்னால் அமைச்சர் சத்தியலிங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டம், பூந்தோட்ட முகாம் தொடர்பான ஆர்ப்பாட்டம், மின்சாரம் தாக்கி இறப்பதாக கூறி அதற்கொரு ஆர்ப்பாட்டம், அரசாங்க அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம், பிரதேச செயலாளருக்கு எதிரான ஆர்ப்பாட்டம், வெடுக்கு நாறி மலை கோவில் ஆர்ப்பாட்டம், கனகராயன்குளம் தாவுத் ஹோட்டல் ஆர்ப்பாட்டம், இறுதியாக அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான ஆர்ப்பாட்டம். இதுவரை போராடப்பட்ட இந்தப் போராட்டங்களில் கேப்பாப்புலவு ஒரு சில காணிகள் விடுவிப்பைத் தவிர ஏனைய ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் கட்சி அரசியலாகவே அமைந்திருந்தது.
இப் போராட்டங்களின் பின்னணியில் ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், தமிழரசுக் கட்சி, ரெலோ தற்பொழுது ஈ.பி.டி.பி தமது முகவரியை தக்கவைத்துக் கொள்வதற்காக யுத்தம் முடிந்து சமாதான காலகட்டத்திலும் அரச கைக்கூலிகளாக செயற்பட்டுக் கொண்டு சமூகத்தை திருத்துகின்றோம் என்ற பெயரில் மென்மேலும் பிரச்சினைகளை ஊதிப் பெருப்பித்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுத் தராமலேயே இடை நடுவில் விட்டு விட்டுச் செல்கின்றார்கள்.
வவுனியாவில் இருக்கக் கூடிய முஸ்லீம் பள்ளிவாசல், பாதைகளில் உள்ள கடைகளை எடுக்க வேண்டும் என்று இன முறுகலைத் தூண்டும் வகையில் இப்போராட்டம் குறித்த விசமிகளால் ஏற்படுத்தப்பட்டதே தவிர, இது தொடர்பில் வவுனியா நகர பிதாவையும் இதற்கு என்ன முடிவு எடுத்தார் என்று அவர் மீது சேறு பூசும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.
உண்மையில் சட்டவிரோதமாகத் தான் பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. முள்ளை முள்ளால் எடுப்பது போன்று தான் தமிழ் அரசியல்வாதிகள் செயற்படவேண்டிய தேவையுள்ளது. இன முறுகலை ஏற்படுத்துவதன் ஊடாக தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. மேற்குறிப்பிடப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொன்றும் எந்தளவில் முடிந்திருக்கின்றது என்று பார்த்தால் பகைமையைக் கூடுதலாக வளர்ப்பதாகவே அமைக்கின்றது.
பிரதானமாக வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய மையம் தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழரசுக் கட்சி மும்முரமாக மோதிக்கொண்டது. தடை செய்ய முனைந்து பிரியோசனமற்ற ஒரு இடத்துக்கே இந்த பொருளதார மத்திய மையம் கொண்டு செல்லப்பட்டது. வவுனியாவில் உள்ள மதகுவைத்தகுளம் என்ற இடத்திற்கே பொருளதார மத்திய நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் முஸ்லீம்களும், சிங்களவர்களுமே நன்மையடையப்போகின்றார்கள். இதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமையினால் உண்ணாவிரதப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
எது எவ்வாறு இருப்பினும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்த இறுதி முடிவே இவ் பொருளாதார மத்திய மையத்திற்கு தீர்ப்பாக அமைந்தது. இதற்கு வாக்கெடுப்பும் நடத்தினர். விவசாய அமைப்புக்கள் மாறி மாறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இறுதியில் தமது கட்சியை வளர்த்தபாடும் இல்லை. மக்களுக்கு சரியானதொரு நன்மையை பெற்றுக்கொடுத்த பாடும் இல்லை.
வவுனியா பஸ்தரிப்பு நிலையம் தாண்டிக்குளத்திற்கு கொண்டு செல்லப்படக்கூடாது என்று அதி தீவிரம் காட்டி முதலமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்தினர் ஒரு சாரார். ஆதரவாக போராட்டம் நடத்தினர். இறுதியில் முதலமைச்சரின் தீர்ப்பின் படி ஈ.பி.ஆர்.எல்.எப் இன் காய் நகர்த்தலின் படி பஸ்தரிப்பு நிலையம் தாண்டிக்குளத்திற்கே கொண்டு செல்லப்பட்டது. இப்படி ஒவ்வொரு போராட்டங்களையும் அடுக்கிக்கொண்டே செல்லலாம். இப் போராட்டங்கள் ஏன் காலத்துக்கு காலம் நடாத்தப்படுகின்றது. தமிழ் மக்களது தேசியம், சுயநிர்ணய உரிமையை திசை திருப்பும் நோக்கிலேயே இவ்வாறான போராட்டங்கள் நடாத்தப்படுகின்றது.
ஒவ்வொரு போராட்ட முடிவுகளும் தமிழ் மக்களுக்கு படிப்பினையாக அமைந்திருந்ததே தவிர, எந்தவித பிரதிபலிப்பையும் பெற்றுத்தரவில்லை. மாறாக சிங்கள அரசாங்கத்திற்கு தீனி போட்டதாகவே அமையப்பெற்றது. ஆயுதக்கட்சிகளின் கண்மூடித்தனமான இந்த ஆர்ப்பாட்டங்கள் யாரால் நடாத்தப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டத்திற்கு குந்தகம் விளைவித்துக்கொண்டு இருப்பது யார் ?
தொடரும்…
இரணியன்