வடக்கு கிழக்கும் விளையாட்டு அபிவிருத்தியும்
அண்மைய காலங்களில் வடக்கு கிழக்கில் விளையாட்டு அரங்கில்
ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மகிழ்ச்சி தருவதாக அமைகிறது. தேசிய மற்றும்
சர்வதேச பார்வைகள் நம்மை நோக்கி கூடுதலாக விழுவதாகவே தோன்றுகிறது.
40 ஆண்டுகளுக்கு பிறகு தேசிய கிறிக்கெற் அணியில் யாழ்ப்பாணத்திலிருந்து
விஜயகாந்த் வியஸ்காந்த் இடம்பிடித்திருக்கிறார். கால்பந்தாட்டத்தில் தேசிய
குழாமில் ஞானரூபன் , மற்றும் இளையோர் குழாமில் தனுஜன் போன்றோர்
பிரகாசித்து வருகின்றனர். யாழ் மண்ணின் பிரபல வலை பந்தாட்ட வீராங்கனை
தர்ஜினி அவுஸ்திரேலியாவின் கழகத்தின் சார்பில் தொழில் ரீதியான
போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அத்தோடு அண்மையில் இலங்கை அணி
அண்மையில் கிண்ணத்தை கைப்பற்ற பெரும் பங்காற்றியுள்ளார். தேசிய
ரீதியிலான தடகள மற்றும் பெரு விளையாட்டுகளில் நம்மவர்கள் பிரகாசிக்க
தொடங்கியிருக்கிறார்கள்.இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற தெற்காசிய
போட்டிகளில் கூட எம்மவர்கள் பலர்பங்கு பற்றியிருந்தனர்
நீண்ட வருடங்களின் பின்னர் கால்பந்தாட்டத்தில் புதிய மைல் கல்லாக தொழில்
ரீதியான கால்பந்தாட்ட தொடர் வடக்கு கிழக்கு பிரிமியர் லீக் (Noth East Primier
League) 12 கழகங்களுக்கு இடையே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு
கழகங்கள் தேசிய ரீதியிலான போட்டிகளில் பங்கேற்க தொடங்கியுள்ளன,
பெண்கள் கால் பந்தாட்டத்தில் கூட பிரகாசிக்க தொடங்கியுள்ளார்கள் என்பதிற்கு
தெல்லிப்பளை ஜூனியன் கல்லூரி பெண்கள் அணியே சான்று.
நீண்ட கால போரின் தாக்கங்களில் இருந்து மீண்டு எமது திறமைகளை தேசிய
மற்றும் சர்வதேச அளவில் காட்டுவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாக்கி கொண்டு
இருக்கின்றன. அவற்றை நாம் சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். வடக்கு
கிழக்கை பொறுத்தவரை விளையாட்டு அரங்கில் நிறைய திறமை மிக்கோர்
இருக்கின்றனர். அவர்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்த செல்ல வேண்டிய
அவசியம் இருக்கிறது.பல்வேறு விளையாட்டுகளில் எம்மை உலக தரத்துக்கு
உயர்த்துவதற்கு முதலில் அதற்கான சுற்றுசூழலை (Sports Ecosystem ) உருவாக்க
வேண்டும் அதற்கான வழிகளையம் திட்டங்களையும் இக்கட்டுரை ஆய்வு
செய்கிறது
ஒரு பிரதேசத்தின் விளையாட்டு அபிவிருத்தியை மேம்படுத்துவதட்கு
அதிலுள்ள பல்வேறு பட்ட அங்கங்களான பாடசாலைகள் , கழகங்கள் , சமூக
மற்றும் தொழில் நிறுவனங்களின் அபிவிருத்தி மீது கவனம் செலுத்துவது
அவசியமானதாகும். இந்த கட்டமைப்பை நாங்கள் படத்திலுள்ளவாறு மூன்று
முக்கிய நிலைகளாக கொள்ளலாம்.
1. அடிப்படை கட்டமைப்பு – பாடசாலைகள் , சமூக கழகங்கள் (Community clubs)
2. இடைத்தர கட்டமைப்பு – விளையாட்டு கழகங்கள் , விளையாட்டு கல்வி
கூடங்கள் (Sports Academy)
3. மேல்தர கட்டமைப்பு – தொழில்சார் கழகங்கள் , விளையாட்டு நிறுவனங்கள்
(Sports Enterprises)
சிறுவர் மற்றும் இளையோர் பெரும்பாலோனோரின் விளையாட்டு
பாடசாலைகளில் தான் ஆரம்பமாகிறது. பாடசாலைகளில் அதட்குரிய வசதிகள்
மற்றும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுப்பது அவர்களின் திறமைகளை ஆரம்ப
காலங்களிலேயே இனங்காண்பதற்கும் அவர்களை அடுத்த நிலைக்கு எடுத்து
செல்வதற்றகும் உதவியாக இருக்கும். சிங்கப்பூர் போன்ற அபிவிருத்தி அடைந்த
நாடுகளில் குறைந்த பட்சம் ஒரு குழைந்தை 4 விளையாட்டுகளிலாவது ஈடுபட
பாடசாலைகள் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற
கொள்கைகளை கொண்டிருக்கின்றன. அது அவர்களுக்கு பிடித்த அல்லது
திறமையை வெளிப்படுத்த கூடிய விளையாட்டை இனங்காண உதவும்.
வடக்கு கிழக்கை பொறுத்தவரை ஒரு சில பெரிய பாடசாலைகளில் மாத்திரமே
பல விளையாட்டுகளை பயில்வதற்குரிய வசதிகள், சந்தர்ப்பங்கள்
இருக்கின்றன. சிறிய மற்றும் இடைத்தர பாடசாலைகளிலும் இவ்வசதிகள்
கொண்டுவர படவேண்டும். அத்தோடு தனி நபர் விளையாட்டுகளான பூப்பந்து ,
டென்னிஸ் , மேசை பந்து போன்றவற்றில் பின் தங்கி இருப்பதாகவே
தோன்றுகிறது. பாடசாலைகள் அரசு மற்றும் பழைய மாணவர் சங்க
உதவிகளுடன் இவற்றை மேம்படுத்த முன்வரவேண்டும். பாடசாலை மற்றும்
வலய , மாவட்ட நிலை போட்டிகள் அதிகரிக்க பட்டு , திறமைகள் இனங்காண
பட்டு அவர்களை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும். அனுபவம் மிக்க
பயிற்சியாளர்கள் பாடசாலைகளில் நியமிக்க படவேண்டும் , பெரும்பாலான
பாடசாலைகள் நல்ல பயிற்சியளர்களை நியமிக்க போதுமான நிதி வசதிகளை
கொண்டிருப்பதில்லை. இந்நிலைமை மாற்றப்படவேண்டும்.
சமூக கழகங்கள் (Community Clubs) இந்த அடிப்படை கட்டமைப்பில் அடங்குகிறது ,
மேலைத்தேய நாடுகளில் இது ஒவ்வொரு சிறிய பகுதிகளிலும் காணப்படுகிறது.
இதன் நோக்கங்களில் ஒரு அங்கம் அந்த பகுதிகளிலுள்ள விளையாட்டை
அபிவிருத்தி செய்வதாகும். விளையாட்டுகளுக்குரிய அடிப்படை வசதிகளை
வழங்குவது , சமூகத்தினரிடையே போட்டிகள் வைப்பது போன்றவற்றின் மூலம்
அப்பகுதி மக்களின் விளையாட்டை மேம்படுத்துவதிற்கு இவை உதவுகின்றன.
இப்படி அமைப்புகள் நம் பகுதிகளில் பெருபாலும் இல்லை என்றே சொல்லலாம்.
பல ஊர்களில் அவ்வூர் விளையாட்டு கழகங்கள் இப்பணியை ஓரளவு
செய்கின்றன. அரசாங்கம் அல்லது சமூக அமைப்புகள் சேர்ந்து இப்படியான
களகங்களை உருவாக்கி விளையாட்டுகளை அபிவிருத்தி செய்ய முன் வர
வேண்டும்
விளையாட்டு கல்வி கூடங்கள் (Sports Academy) எம் விளையாட்டின் தரத்தை
அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல உதவும். விளையாட்டில் ஆர்வமுள்ளோர்
மற்றும் திறமையுள்ளோர் இவற்றின் மூலம் தம்மை தேசிய, சர்வதேச
ரீதியிலானா போட்டிகளுக்கு தயார் படுத்தி கொள்ள முடியும். வடக்கு கிழக்கை
பொறுத்தவரை இவ்வாறான ஒரு சில விளையாட்டு கல்வி கூடங்கள்
இருக்கின்றன. அதுவும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் போன்ற ஒரு சில புகழ்
பெற்ற விளையாட்டுகளுக்கு மாத்திரமே. அரியாலையில் அமைந்திருக்கும்
கால்பந்து கல்வி கூடம் ஒரு நல்ல உதாரணமாகும். இது போன்ற கல்விகூடங்கள்
இன்னும் பல இடங்களிலுக்கும் , வேறு விளையாடுகளுக்கும் உருவாக்க
படவேண்டும்.
விளையாட்டு கழகங்கள் வடக்கு கிழக்கு விளையாட்டு அபிவிருத்தியில் பெரும்
பங்காற்றுகின்றன. முக்கியமாக கால்பந்து மற்றும் கிரிக்கெட் கழகங்கள் தேசிய
ரீதியில் எம் திறமையை வெளிப்படுத்துகின்றன. இக் கழகங்கள் உள்ளூர்
விளையாட்டுகளையும் அபிவிருத்தி செய்கின்றன. தற்போது நடைபெற்று வரும்
பல வகையான போட்டிகள் நல்ல அறிகுறியாகவே தென்படுகின்றன. அத்தோடு
இளைஞர் கழகம் (Youth Clubs) இவ் விளையாட்டு கழகங்களோடு இணைந்து
பணியாற்றுகின்றன. மேலைத்தேய அல்லது நல்ல அனுபவமிக்க
பயிற்சியாளர்கள் நியமிப்பதன் மூலம் நம் விளையாடின் தரத்தை மேம்படுத்தி
கொள்ள முடியும். புலம் பெயர் உறவுகள் மற்று அரசு இக்கழகங்களின்
அபிவிருத்தியில் பங்களிக்க முன்வர வேண்டும். பெரும்பாலான கழகங்கள்
மிகவும் அடிப்படை தர வசதிகளுடனேயே இயங்குகின்றன. விளையாட்டு
உபகரணங்கள் , மைதான இடவசதிகள் மிகவும் மட்டு படுத்த பட
நிலையிலையிலே இருக்கின்றன. இவை சீர் செய்ய படுகின்ற போது நம்
விளையாட்டுகள் முன்னேறுவதை காண முடியும்.
விளையாட்டு ஊடகங்கள் நம் விளையாட்டு அறிவை மேம்படுத்தி கொள்ளவும்
விளையாட்டு விடயங்கள் பலரை சென்றடையவும் உதவும் . வடக்கு கிழக்கை
பொறுத்தவரை விளையாட்டு ஊடகங்கள் மிகவும் மட்டுப்படுத்த பட
நிலையிலேயே உள்ளன. உள்ளூர் விளையாட்டுகளை ஒளி/ஒலி பரப்பும்
ஊடங்கள் மிகவும் அரிது , அதோடு விளையாட்டு சஞ்சிகைகள்/ பத்திரிகைகள்
மிகவும் அரிதாகவே வெளியிட படுகின்றன. உலக விளையாட்டுகளை ,
முக்கியமாக கால்பந்து , கிரிக்கெட் மற்றும் இதர விளையாட்டுகளை பார்க்க
கூடிய தொலைக்காட்சி அலைவரிசைகளை பெற்று கொள்வது இலகுவானதாக
இல்லை. சிறுவர்கள் , மற்றும் இளையோர்கள் உலக விளையாட்டுகளை
பார்ப்பதன் மூலம் தங்கள் விளையாட்டு திறனை விருத்தி செய்துகொள்ள
முடியும். உள்ளூர் ஊடகங்கள் இவற்றை அபிவிருத்தி செய்ய முன்
வரவேண்டும் . அரச மற்றும் தனியார் ஊடகங்கள் உலக விளாயாட்டுகள்
எல்லோரையும் இலகுவாக சென்றடைய முயற்சி செய்ய வேண்டும்.
இறுதியாக ஒரு பிரதேச விளையாட்டில் பெரும் தாக்கம் செலுத்துபவை
விளையாட்டு முதலீடுகளும் , தொழில் ரீதியான விளையாட்டுகளும் தான்.
தொழில் ரீதியான விளையாட்டுகள் விளையாட்டு வீரர்களுக்கு
வாழ்வாதாரத்தை தர முடிவதால் அவர்கள் முற்று முழுதாக விளையாட்டுகளில்
தங்களை அர்ப்பணிக்க முடியும். இது அவர்களின் விளையாட்டு தரத்தை
விரைவாக மேம்படுத்தும். அண்மையில் தொடங்கப்பட்டு இருக்கும் வடக்கு
கிழக்கு பிரிமியர் லீக் ஒரு சிறந்த உதாரணமாகும். நீண்ட காலத்தின் பின்
தொங்கப்பட்டு இருக்கும் இத்தொழில் ரீதியான போட்டிகள் நம் பிரதேச
கால்பந்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும். வெளிநாட்டு வீரர்களின்
பங்கெடுப்பு , நிதி முதலீடுகள் , தேசிய ரீதியிலான பார்வைகள் , நம் பிரதேச
திறமைகளை மேம்படுத்த உதவும். மற்றய விளாயாட்டுகளுக்கும் இப்படியான
தொழில் ரீதியான போட்டிகள் , கழகங்கள் ஆரம்பிக்க படவேண்டும். இதற்கு நிதி
படைத்தோர் , புலம் பெயர் உறவுகள் , வியாபார நிறுவனங்கள் முதலீடு செய்ய
வேண்டும். தனிப்பட்ட திறமை மிக்க வீரர்களுக்கும் நிதி ஆதரவாளர்கள் உதவி
செய்ய வேண்டும். இதன் மூலம் சர்வதேச , தேசிய போட்டிகளில் விரைவில்
நம்மவர்களை காண கூடியதாக இருக்கும் .
ஆசிரியர் : இ.சற்சொரூபன்