விலைமாதர்கள் புதிய அரசாங்கத்திற்கு விலைபோவார்களா?

611

ஏமாற்றப்பட்டுவிட்டோம் அல்லது ஏமாற்றப்படுகிறோம் என்ற அடிப்படையின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாரியதொரு எதிர்பார்ப்புடன் அமைச்சுப் பதவிகளுக்காக ஏங்கித் தவிப்பதைக் காணமுடிகிறது. அபிவிருத்தியா? அல்லது மக்களின் உரிமைகளா? என்ற அடிப்படையின் கீழ் மக்களது உரிமைகளுக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்கவேண்டும்.

ஆனாலும் சோரம்போகும் அரசியலைச் செய்கின்ற தமிழ் அரசியல் தலைமைகள் சோரம்போகத்தான் செய்கிறார்கள். நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி மாற்றம் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்குமாகவிருந்தால் அல்லது நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு வழங்குமாகவிருந்தால் சற்றுச் சிந்தித்து செயற்படவேண்டிய கட்டாயத்துக்குள் தான் தமிழினம் தள்ளப்பட்டிருக்கிறது. பசில் ராஜபக்ஷவினது தலைமையில் தனித்தனியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கோடிக்கணக்கிலான ரூபாய் தருவதாக இதுவரை பேரம்பேசல்கள் இடம்பெற்றிருக்கிறது. இதற்கான கலந்துரையாடலின் ஆதாரங்களும் கைவசம் இருக்கிறது. நிபந்தனையின் அடிப்படையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு தலா 20 கோடியாம். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி பேரம் பேசப்பட்டுள்ளது. ஆனாலும் த.தே.கூவினர் நிபந்தனைகளை முன்வைத்திருப்பதாகத் தெரிகிறது.

முன்வைத்த நிபந்தனைகள்

1. வட-கிழக்கு இணைப்பு.
2. தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம்.
3. காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறிந்து அதற்கானத் தீர்வுகள்.
4. பொலிஸ் மற்றும் காணி அதிகாரம்.
5. வட-கிழக்கில் இருக்கக்கூடிய இராணுவத்தினரை மக்களது நிலங்களில் இருந்து முழுமையாக வெளியேற்றுதல்.
6. ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்தல்.

இந்த அடிப்படையின் கீழ் சாத்தியப்படுவது தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை விவகாரம் மாத்திரமே. ஏனைய விடயங்கள் அனைத்தும் கிடப்பில் தான் போடப்படும். 11 ஆயிரம் போராளிகளை விடுதலை செய்த கடந்த மஹிந்த அரசுக்கு எஞ்சியிருக்கும் தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்வது அவர்களுக்குப் பெரிய விடயம் அல்ல. ஆனால் இதனை நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மஹிந்தவின் காலைப் பிடிப்பார்களாகவிருந்தால் அதற்குப் பின்னர் வரும் விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்பது உறுதி.

சோரம்போகும் அரசியல் நிலைமைகள் காணப்படுவதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் மத்தியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கு தற்போதைய அரசு கையாளும் ராஜதந்திரம் சாத்தியமாக அமையும். தமிழ் அரசியல்கைதிகள் விவகாரம் தொடர்பில் சரியான முடிவுகளை எடுக்கவேண்டும். மேல் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இணக்கப்பாட்டிற்கு வராது. அவ்வாறு இணக்கப்பாட்டிற்கு வந்தாலும் அது ஒரு போலியான கைச்சாத்தாக மாத்திரமே அமையும். பண்டா-செல்வா ஒப்பந்தத்திலிருந்து; மஹிந்த வரையான ஒப்பந்தங்கள் அனைத்தும கிழித்தெறியப்பட்டதும், கிடப்பில் போடப்பட்டதுமே வரலாறு.

மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்களாகிய நாம் செய்யக்கூடாது. மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் இந்த மண்ணில் உருவாகுவதற்கு த.தே.கூவினரே காரணமாக இருந்துவிடக்கூடாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியல் செயற்பாடுகள் பல்வேறு கட்டங்களாக மாறுபட்டிருந்தன. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பூகோள அரசியல் இந்த நாட்டுக்குள் காலூன்றி நிற்கிறது. வட-கிழக்கு இணைப்பு சாத்தியப்படுமாக இருந்தால், பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கப்படுமாக இருந்தால் ஏனைய அனைத்து விடயங்களையும் தமிழ்த் தரப்பு பெற்றுக்கொள்ள இலகுவாக இருக்கும். தென்னிலங்கையின் குடும்ப பிரச்சினையை அரசியல் விவகாரமாக்கி தமிழினத்தின் அரசியல் தீர்வினை பாதாளத்திற்குள் தள்ளி விடும் செயற்பாடாகவே இதனை அவதானிக்க முடிகிறது.
போருக்கு முன் போருக்குப் பின்னரான இரு காலகட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய கட்டமைப்பு வௌ;வேறு பரிணாமங்களைக் கொண்டிருந்தது. போர்க்காலத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது 14 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றமையானது மிகவும் வேதனைக்குரிய விடயம்.

எதிர்காலங்களிலும் இந்நிலை நீடிக்குமாகவிருந்ததால் தமிழ்க்கட்சிகள் பிளவுபட்ட நிலையில் இரண்டு, ஐந்து, ஆறு ஆசனங்களுடன் தமது சுயநல அரசியல் பிழைப்பை நடத்தவேண்டிய சூழல் ஏற்படும்.
பணத்தைப் பெற்றுக்கொண்டு தமது பதவியைத் தக்கவைத்துக்கொண்டு சோரம்போகும் அரசியலை தமிழ்த் தேசிய்க கூட்டமைப்பு செய்யுமாகவிருந்தால் மக்களின் தீர்ப்பு மகேஸ்வரனின் தீர்ப்பு என்கிற நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள். தமிழ் மக்களுக்கான தீர்வையும் அரசியலையும் ஒன்றாக பார்த்து தமிழ் மக்களது அரசியலை தீர்மானிப்பது தவறு. தென்னிலங்கையின் அரசியல் குழப்பங்களால் தமிழ் மக்களாகிய நாம் குதூகலித்துக்கொண்டாடக்கூடாது. நிதானமாகவிருந்து அதனை அவதானித்துச் செயற்படவேண்டும்.

தற்போதைய புதிய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ்த் தரப்பு இணையுமாகவிருந்தால் நிபந்தனை அடிப்படையில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து ஆயுதப்போராட்டம் மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றன. ஏற்கனவே ஆயுதக்குழுக்கள் பிளவுபட்டு அரசுக்குத் துணைபோய் இன்று அவர்கள் புற்றுக்குள் பதுங்கியிருந்த பாம்பைப்போன்று வெளிவந்திருக்கிறார்கள். பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தாலும் அது தனது குணத்தை காட்டத்தான் செய்யும். கிறீஸ் புதம், வெள்ளை வான் என்று இந்த நாட்டிற்குள் மீண்டும் தலைவிரித்தாட இவர்களே வழிவகுப்பார்கள். அரசுடன் கையேந்தி வாழ்க்கை நடத்திய தமிழ் அரசியல் கட்சிகளும், தமிழ் குழுக்களும் தமிழ் மக்களுக்கான உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்காது மீண்டும் வன்முறைக் கலாச்சாரத்தை உருவாக்கும் சக்திகளாக செயற்படுவார்கள்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது பாராளுமன்ற உறுப்பினர்கள் மிக அவதானத்துடன் தமது செயற்பாடுகளை முன்னகர்த்தவேண்டும். 30.10.2018 அதாவது இன்றைய தினம் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுக்கவிருக்கிறார்கள். இந்த சந்திப்பில் யார் என்ன கூறினாலும் சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் இறுதி முடிவுமே தீர்மானமாக இருக்கப்போகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தற்போது முன்னிலை வகிக்கிறார். த.தே.கூவினது பிடியிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி தனித்து நிற்கிறது. ஏற்கனவே சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் மஹிந்த அவர்களது விசுவாசி. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு அங்கத்துவக் கட்சியாக இவர்கள் இல்லாத காரணத்தினால் இவர்களது நிலைப்பாடு இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. நிலைமைகள் எவ்வாறு இருப்பினும் தமிழினம் இதுவரை காலமும் போராடிய போராட்டம் தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதனை மனதில் நிறுத்தி தேசியத் தலைவர் பிரபாகரன் என்ன நோக்கத்தில் கூட்டமைப்பை உருவாக்கினாரோ, தியாகி திலீபன் அஹிம்சை வழியில் போராடி உயிரைத் தாயகத்திற்காக தியாகம் செய்தாரோ அனைத்தும் வீணாகிவிடக்கூடாது.

பயங்கரவாதத்தை அழிப்பதாகக்கூறி ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் மக்களைக் கொன்றொழித்த மஹிந்த அரசுடன் நாம் மீண்டும் நழுவிப்போகும் அரசியலைச் செய்யக்கூடாது. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு இனப்படுகொலையாளி என்ற நிலையில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியிருக்கின்றார். ஜனாதிபதியினாலேயே மஹிந்த அவர்கள் அவதூறாகப் பேசப்பட்டவர். ஆனால் இன்று அவரை அன்போடு அரவணைத்திருக்கின்றார். இதில் துரோகி வேறு யாரும் அல்ல மைத்திரிபால சிறிசேன தான். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்விடயங்களைக் கருத்தில் கொண்டு, போலியான வாக்குறுதிகளுக்கு அடிபணியாது ஏமாற்றப்படுகிறோம், ஏமாற்றப்பட்டோம் என்பதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

மீண்டும் தவறினை செய்ய முற்படாது தமிழினத்திற்கு ஒரு விடிவினைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமையவேண்டும் என்பதே இக்கட்டுரையின் பிரதான வேண்டுகோள்.
வாழ்கின்ற நாம் வீழ்வதும் ஒருமுறை உறுதி. ஆனால் எமது வீழ்ச்சி பயனுள்ளதாக அமையவேண்டும். தமிழினத்தின் விடுதலையைப் பெற்றுக்கொடுத்த வரலாறாக அது எழுதப்படவேண்டும். பல்லாயிரக்கணக்கான போர் வீரர்கள் எம்தேச விடுதலைக்காக தன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். இவர்களது வரலாறுகள் அழிக்கப்பட்டுவிடக்கூடாது. இலங்கையில் தமிழினம் இருந்ததற்கான வரலாறுகளே அழிக்கப்பட்டுவிடும். இதற்கு நாமே காரணமாக அமைந்துவிடக்கூடாது. இந்தியாவின் அத்திப்பட்டி கிராமம் அழிந்துபோனதைப்போன்று ஒரு சூழல் எமது இனத்திற்கும் உருவாக்கப்படும். எனவே எச்சரிக்கையாக இருக்கவேண்டும். வாய் வீரம் பேசுபவர்களைவிட செயற்படுபவர்களையே நாம் ஆதரிக்கவேண்டும். இல்லையேல் தமிழினம் நிர்க்கதியான நிலைக்கு மீண்டும் தள்ளப்படும். விழிப்பாக இருப்பதே தற்போதைய காலகட்டத்தின் அவசியமாகும்.

பலரது எண்ணக்கருவிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகள் விலைமாதர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். ஆனாலும் தமிழ் மக்களது பிரச்சினைகளை இன்றுவரை சர்வதேச, உள்ளுர் ரீதியாக எடுத்துச்செல்வது அவர்களே. அவ்வாறு இவர்கள் விலைமாதர்களாக விலைபோக மாட்டார்கள் என்பது எமது கணிப்பு. ஆனாலும் கணிப்பினையும் மீறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலைபோவார்களாகவிருந்தால் அது தமிழினத்தின் சாபக்கேடாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

  • இரணியன்
SHARE