எழுத்து மூலம் உறுதிமொழி வழங்கினால் மாத்திரமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்க முடியும் என்பதே எனது நிலைப்பாடு – முன்னாள் பா.உ பா.அரியநேத்திரன்

329

நாட்டில் அசாதாரண நிலை தோற்றுவிக்கப்பட்டதையடுத்து அதனை எவ்வாறு கையாளவேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது நிலைப்பாடு பற்றி தினப்புயல் இணையம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு முன்னாள் பா.உ பா.அரியநேத்திரனிடம் வினவியபோது, கடந்த கால அரசியல் விடயங்களை எடுத்துக்கொண்டால் கடந்த 72 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத்தை அரசியல் அமைப்பில் கொண்டுவரும் போது அதனைக் குழப்பும் நோக்கில் தான் சிங்களப் பேரினவாத அரசு செயற்பட்டுக்கொண்டிருக்கிறது. குறிப்பாக ஐ.தே.கவின் தலைவராக இருக்கலாம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையாக இருக்கலாம். தென்னிலங்கையின் பிரதான கட்சிகள் தமிழ் மக்களுக்கான தீர்வுகளுக்காக பின்னடிப்புக்களையே மேற்கொண்டு வந்தன என்பதே வரலாறு.

குற்றவாளிகள் என்று பார்க்கும்போது இரு கட்சியினைச் சார்ந்த தலைமைகளும் குற்றவாளிகள் தான். கடந்த ஆட்சியில் சுகாதார அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் போது பதில் பாதுகாப்புச் செயலாளராகவும் பொறுப்பேற்றிருந்தார். டட்லி சேனாநாயக்க தொடக்கம் மஹிந்த ராஜபக்ஷ வரையில் ஆட்சி செய்த ஜனாதிபதிகள், பிரதமர்களைப் பொறுத்தவரை தமிழினத்தின் தீர்வு விடயத்தில் கரிசணைகொண்டு செயற்படவில்லை. 2015ஆம் ஆண்டு கூட்டு அரசாங்கம் ஒன்று நிறுவப்பட்டு அந்த அரசின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து ஆட்சி செய்தனர். இந்தக் கூட்டு அரசினை தமிழ் மக்களின் பிரதிநிதிகளும், தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டனர். எனினும் தற்போதைய ஜனாதிபதி தானே இறுதியில் யுத்தத்தை முடித்துவைத்ததாக அண்மைய ஐரோப்பிய ஒன்றிய விஜயத்தின் போது தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் தான் இலங்கை அரசியலில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர், சுப்ரமணிய சுவாமி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்திருந்தனர். எனினும் மஹிந்த அவர்கள் இந்தியாவிற்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய நிலையிலேயே இவ்வாறானதொரு ஆட்சி மாற்றம் நாட்டில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லாட்சி அரசாங்கத்தை சிறுபான்மைக் கட்சிகளும், மக்களும் நம்பியிருந்தனர். சர்வதேச சமுகமும் நல்லாட்சியின் பின் இருந்தன. ஆனால் நம்பிக்கைக்குப் பாத்திரமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நடந்துகொள்ளவில்லை என்பது வருத்தமளிக்கிறது. தென்னிலங்கை அரசியல் குழப்பங்களை அடுத்து எதிர்க் கட்சித் தலைவராகிய இரா.சம்பந்தன் அவர்கள் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் ஆகியோரைச் சந்தித்து எழுத்து மூலம் நாம் குறிப்பிடுகின்ற கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வினைத் தரவேண்டும் இதற்கு உத்தரவாதம் வழங்கினால் நாம் ஆதரிப்பது தொடர்பாக பரிசளிப்போம் எனத் தெரிவித்திருக்கின்றார்.

இதிலொரு வேடிக்கை விடயம் என்னவென்றால் தென்னிலங்கையில் அரசியல் குழப்பம் வருகின்றபோது பேரினவாதக் கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படுகிறது என்பதாகும். மஹிந்த ராஜபக்ஷவினது காலத்தில் மாத்திரம் தீர்வுத்திட்டம் தொடர்பில் 16 பேச்சுக்கள் பேசப்பட்டது. பல விடயங்கள் முன்மொழிவு செய்யப்பட்டது. ஆனாலும் இவை அனைத்தும் இறுதியில் எவ்விதப் பயனுமற்றுப்போனது. அப்போது நானும் பாராளுமன்றில் இருந்தேன். இவ்விடயங்கள் குறித்துப் பேசியிருந்தேன். தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள இந்தக் குழப்பங்களால் மஹிந்த மீண்டும் வருகிறார், ரணில் மீண்டும் வருகிறார் என்று தமிழ்த் தரப்பாகிய நாமும், தென்னிலங்கையும் வெடி கொழுத்தி ஆரவாரிப்பது என்பது அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்தி நிற்கிறது.

அரசாங்கங்களின் தொடர்ச்சியான ஏமாற்றம் எந்தக் கட்சிக்கு தமிழ் மக்களது ஆதரவினை வழங்குவது என்ற ஒரு விடயத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. தற்போதைய ஆட்சி மாற்றம் என்பது 19வது திருத்தச்சட்;டத்தை மீறியே மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதமர் பதவியை மஹிந்த அவர்களுக்கு வழங்கியிருக்கிறார். இவ்வாறு உடனடியாகச் செயற்பட்ட ஜனாதிபதி அரசியல்கைதிகளை ஏன் விடுதலை செய்திருக்கக்கூடாது. ஒரு சதிப் புரட்சியை ஏற்படுத்திய ஜனாதிபதி அவர்களுக்கு இவ்வரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் என்பது சாதாரண விடயமாகத்தான் பார்க்கப்படுகிறது.
பொதுவாகக் கூறினால் கூட்டாட்சி அரசாங்கம் தமிழ் மக்களுக்கான சிறு சிறு விடயங்களில் தவறுவிட்டதன் காரணங்களால் இன்று இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஆனந்த சுதாகரனைக் கூட மைத்திரிபால சிறிசேன அவர்கள் விடுதலை செய்திருக்கலாம். தன் மீது தற்கொலைத் தாக்குதலைச் செய்ய முற்பட்டவரைக் கூட விடுதலை செய்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் இதனை ஏன் செய்யவில்லை. ஆகவே தனது அரசியல் சுயலாபத்திற்காக தமிழினத்தின் மீது அவ்வப்போது போலி முகங்களைக் காட்டுவது தான் அவரது நிலைப்பாடு.

மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்தும் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் பின்னடிப்பையே செய்தார். அதனால் தான் அவரை தமிழ் மக்கள் நிராகரித்தனர். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவைப் புறந்தள்ளி தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவர்களது பாரிய சூழ்ச்சியின் நிமித்தம் இந்தக் கூட்டு அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டரசாங்கம் 03 வருடங்களை எட்டியிருக்கும் நிலையில் இவர்களுக்குள் பிரச்சினை உருவாகி, அதாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கின்றார் என்பதுடன் இந்த நாட்டைக் மீளக்கட்டியெழுப்ப சிறந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே என்ற மாற்றுக் கருத்தினைக் கூறியிருக்கின்றார் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்.

மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக வருவதற்காக மைத்திரிபால சிறிசேனவினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு தான் இது என அரசியல் ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. நிலைமைகள் எவ்வாறாகவிருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டதைப்போன்று 19வது திருத்தச்சட்டத்தை மீறிய செயற்பாடாகவே இப் பிரதமர் நியமனம் அமைகின்றது. இதனைச் சரிசெய்யவேண்டும். பின்னர் நாம் முன்வைக்கும் தமிழ் மக்களின் தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்ந்து செயற்படுவதற்கும் தங்களுடைய அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கு உரிய முறையில் பரிசீலனைகளை மேற்கொண்டு செயற்படலாம். எது எவ்வாறாகவிருப்பினும் தொடர் ஏமாற்றங்கள் என்பது தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. இதற்காக வட-கிழக்கு தமிழ் மக்கள் குழப்ப நிலையை அடையவேண்டிய தேவை இல்லை. பெரும்பான்மை பேரினவாதக் கட்சிகள் தமக்கிடையே இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தி தமிழ் இனத்தின் வாக்குகளை தவறாகப் பயன்படுத்துவது, தமிழ் அரசியல் பிரதிநிதிகளை விலைகொடுத்து வாங்குவது என்பது எல்லாம் கடந்தகால வரலாறுகள் எமக்கு பாடமாகக் கற்பித்துத் தந்திருக்கின்றன. ஆகவே மிக அவதானமாக தமிழ் அரசியல் பிரதிநிதிகளது செயற்பாடுகள் நகர்த்தப்படவேண்டும் என்பதே எமது இன்றைய அரசியல் நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார் அரியநேத்திரன்.

 

SHARE