சந்திரிக்கா – மஹிந்த – மைத்திரி – ரணில் இவர்களில் யார் துரோகிகள்

293

கடந்த 72 வருட காலமாக தமிழ் மக்களுக்கான ஒரு தனி அலகு கோரியப் போராட்டங்கள் ஆயுத, அஹிம்சைப் போராட்டங்களாக முன்னெடுக்கப்பட்டது. அதில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு அஹிம்சைப் போராட்டங்கள் இன்றுவரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1948ம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் தமிழினமும், சிங்கள இனமும் ஒன்றாக வாழும் என்று நினைத்து பிரிட்டிஷ் அரசு இந்நாட்டை இலங்கையருக்குக் கையளித்துவிட்டுச் சென்றது. வில்லியம் கோபல்லாவ தொடக்கம் மைத்திரிபால சிறிசேன வரை 07 ஜனாதிபதிகள் இந்நாட்டை ஆட்சி செய்துள்ளனர். தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய ஏற்கனவே ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமிழினத்தை அழித்தொழித்த ஒரு இனப்படுகொலையாளி எனக் கூறப்படுகிறார்.

கடந்த காலங்களில் செம்மணிப் புதைகுழி தொடக்கம் மன்னார் புதைகுழி வரை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களே நிகழ்த்தினார். இவரது காலத்தில் விடுதலைப்புலிகளுடனான பேச்சுக்கள் கச்சேரி நல்லூரில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் செயலகத்தில் இடம்பெற்றது. தொடர்ந்தும் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைய தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் இலங்கை அரசிற்கு எதிராக போர் தொடுத்தனர். 1995-2001 வரை வட-கிழக்கிலும், தெற்கிலும் விடுதலைப்புலிகள் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டு அரசிற்கு இழப்புக்களை ஏற்படுத்தி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களை அரசியல் மேடைக்கு அழைத்தனர். அதில் விடுதலைப்புலிகள் கட்டுநாயக்க, கொலன்னாவ போன்ற இடங்களில் மேற்கொண்ட தாக்குதல்கள் அரசிற்கு பாரிய இழப்பினை ஏற்படுத்தியது. இக்காலகட்டத்தில் திணறிப்போயிருந்த இலங்கை அரசும், இனவாதக் கட்சிகளும் எந்தக் காலகட்டத்திலும் விடுதலைப்புலிகளுக்கு தமிழீழம் வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இந்தியா, பாகிஸ்தான், சீனா போன்ற பல நாடுகளின் ஆதரவோடு இலங்கை அரசு தமிழினத்திற்கான போரை மீண்டும் ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் ஆட்சி அதிகாரங்கள் கைநழுவிப் போகும் நிலையில் இந்த நாட்டினை யாருக்கு கையளிக்கப்போகிறோம் என்ற நிலை ஏற்பட்டது. அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார். ரணில் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராகவே அப்போது இருந்தார். சந்திரிக்காவின் ஆட்சியின் போது பிரதமராக ரணில் அவர்கள் சிறிது காலம் பதவியில் இருந்தார். அப்பொழுதும் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. விடுதலைப்புலிகளுடனான ஒஸ்லோ பேச்சுக்கள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளை கூறுபோட ரணில் பெரிதும் பாடுபட்டார். விடுதலைப்புலிகளின் தலைவருக்கும், கருணாவிற்கும் பிரிவினை ஏற்படுத்தி விடுதலைப்புலிகளை பலமிழக்கச் செய்தார். அதற்கு பின்னர் நோர்வே மத்தியஸ்தத்துடன் இடைக்கால நிர்வாகத்தை நிறுவி அதன் ஊடாக தனது புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் ஆழ ஊடுருவும் படையணியை அனுப்பி விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களைக் கொன்றார். அதேபோன்றதொரு நடவடிக்கை பொட்டு அம்மானின் தலைமையில் தென்னிலங்கையிலும் மேற்கொள்ளப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். இவ்வாறான சம்பவங்கள் இந்த இடைக்கால நிர்வாகத்தின் போது எவ்வாறு நடைபெறுகிறது என சர்வதேச நாடுகள் கேள்வி கேட்கத் தொடங்கின. அதற்கான பதில் இனந்தெரியாதோர் என்றே வந்தது. ஒரு ஆளுமையுள்ள அரசினால் இவ்வாறான சம்பவங்களை கண்டுபிடிக்க முடியாதா என்று கேட்கப்பட்டது. இடைக்கால நிர்வாகத்தை குழப்புவதே இவர்களின் நோக்கமாக இருந்தது. விடுதலைப்புலிகளுடன் எவ்வாறு போர் தொடுக்கலாம், அதற்கான சந்தர்ப்பம் எப்போது அமையும் என சிங்கள பேரினவாத அரசு திட்டங்களை வகுத்து இறுதியில் அது மாவிலாறு தண்ணீர் பிரச்சினையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்கால் வரை மஹிந்த ராஜபக்ஷ வரை கொண்டுசெல்லப்பட்;டு தமிழினம் அழிப்பிற்குள்ளாகி ஆயுதப்போராட்டமும் மௌனிக்கப்பட்டது.

இலங்கையரசு, நாம் பயங்கரவாதிகளுடன் தான் போரிடுகிறோம் என்று கூறி ஒரு இனப்படுகொலையினை நடத்தினர். உண்மையில் விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகளா? மஹிந்தவின் காலத்தில் பாராளுமன்ற விவாதக் குழுவில் 16 தடவைகள் பேச்சுக்கள் இடம்பெற்றது. இந்த 16 கட்டப் பேச்சுக்களிலும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள், சம உரிமைகள், வட-கிழக்கு இணைப்பு போன்றன வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு வலியுறுத்தப்பட்டுக்கொண்டிருந்தபோதிலும் வட-கிழக்கினை ஜே.வி.பியினரைக் கொண்டே ரணில் அவர்கள் பாராளுமன்றில் நடைமுறைப்படுத்தினார். வட-கிழக்கு இணைவினை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்தும் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

இதற்கிடையில் மஹிந்த அவர்கள் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளின் ஆதரவோடு தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை, விடுதலைப்புலிகளின் போராட்டங்களை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினர் இறந்தனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைவிட வன்னியில் 65 ஆயிரம் விதவைகளும், அங்கவீனமுற்றோர் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் கடத்தப்பட்டு காணாமல் போயினர். தமிழ் மக்களைக் கொன்றொழிக்க அவர்களது அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதை விட்டு ஒரு இனத்தையே அழித்த வரலாற்றுத் துரோகி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள். இதில் இம் மூவரும் பாரிய குற்றவாளிகள். இன்று ஒருவரையொருவர் குற்றம் கூறுகிறார்கள். தென்னிலங்கையில் ஒரு குழப்பம் ஏற்பட்டதன் விளைவாக மக்கள் மீது கைவைத்தால் இரத்த ஆறு ஓடும் என்கிறார்கள். இதற்கிடையில் கூட்டுச்சதி ஒன்று இடம்பெறுகிறது. யுத்தம் நிறைவுபெற்று 10 வருடங்களை எட்டவுள்ள நிலையில் கூட்டரசாங்கம் நிறுவப்பட்டு 03 வருடங்களை நிறைவடைந்துள்ள நிலையில் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. இறுதியில் பதவி ஆசையில் மோகங்கொண்டு மைத்திரிபால சிறிசேன அவர்கள் 19வது திருத்தச்சட்டத்தின் கீழ் பாராளுமன்ற விதிகளை மீறி செயற்பட்டிருக்கிறார். நல்லாட்சியில் இருக்கக்கூடிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஒரு சிறந்த மனிதர். நல்ல முடிவுகளை எடுப்பார் என நம்பியிருந்த அதேநேரம் பாராளுமன்ற சட்டவிதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டமையானது இன்று சர்வதேச ரீதியாகவும், தமிழ் மக்களின் மத்தியிலும் ஒரு வரலாற்றுத் துரோகியாகவே பார்க்கப்படுகிறார்.

மோதகம், கொழுக்கட்டை இரண்டுக்கும் உள்ளே இருக்கும் உணவுப்பொருள் ஒன்றுதான். வெளியில் பார்க்கும்போதுதான் அது வித்தியாசப்படுகிறது. அவ்வாறான ஒரு நிலைப்பாட்டைத்தான் இன்றும் சிங்கள பேரினவாதத் தலைமைகள் முகபாவனைகள் வேறாக இருந்தாலும் அவர்களுடைய செயல்கள் ஒன்றாகவே இருக்கிறது. ஜனநாயகத்தை மீறி செயற்படமாட்டேன் என போலியான வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ரணில் அவர்களினால் அச்சுறுத்தல் எனக்கூறி மீண்டும் ஒரு இனப்படுகொலையாளி மஹிந்த அவர்களை பிரதமராக நியமித்திருக்கிறார். இது மீண்டும் தமிழினத்தையும், தமிழ் அரசியல் தலைமைகளையும் ஏமாற்றும் ஒரு சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவினது ஆட்சிக்காலத்தில் வெள்ளை வான் கடத்தல், கொலை, கொள்ளை, கிறீஸ் பூதம் என்று ஒவ்வொன்றையும் படிப்படியாக கூறிக்கொண்டே செல்லலாம். ஆயிரக்கணக்கில் மக்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். மஹிந்தவின் ஆட்சியில் 35 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். 25இற்கும் மேற்பட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். ஊடகவியலாளர்களின் பேனாக்கள் நசுக்கப்பட்டு பலர் இந்நாட்டை விட்டு தப்பியோடி உள்ளனர். ஆகவே தமிழினத்தின் துரோகிகள் அல்லது குற்றவாளிகள் என்று பார்க்கும்போது சந்திரிக்கா, மஹிந்த, ரணில், மைத்திரி போன்ற இவர்கள் மிகப் பொருத்தமானவர்கள்.

தென்னிலங்கையில் அரசு கவிழ்ப்பிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது ஆதரவு தேவைப்படும் பட்சத்தில் காலில் விழுந்தாவது தமக்கு ஆதரவு வழங்குங்கள் என்று கேட்கும் அளவிற்கு நிலைமைகள் தீவிரமடைந்துள்ளது. முன்னோர் குறிப்பிட்டது போல மஞ்சள் கயிற்றுத் தாலியை அறுத்த இனம் என்றும் கூறலாம். அப்படியான துரோகத்தையே இன்று தமிழ் இனத்திற்கு செய்துள்ளனர். விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த ரெலோ, புnhளாட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.பி.டி.பி போன்ற ஆயுதக் கட்சிகளை மீண்டும் விலைகொடுத்து வாங்க அரசு முயற்சிக்கிறது. விடுதலைப்புலிகள் போராட்டத்தைக் காட்டிக்கொடுக்கவில்லையா என்ற கேள்வி எழுப்பப்படும். 2009 யுத்தம் முடிவும் வரையிலும் கருணா அணியினரைத் தவிர விடுதலைப்புலிகள் எவரும் காட்டிக்கொடுக்கவில்லை. யுத்தம் முடிவுற்ற பின்னர் தான் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களைக் கொடுமைப்படுத்தி அவர்களுக்கு எதிராக பொய்யான வழக்குகளைச் சோடித்து நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வார்கள் என்பது எமக்குத் தெரியும்.

இக்கட்டுரையை எழுதுகின்ற நான் 2009 – 2010 இறுதிப்பகுதி வரை வெலிக்கடை, போஹம்பர, பூசா, பல்லேகல, திருகோணமலை தடுப்பு முகாம், வவுனியா போன்ற பல சித்திரவதை முகாம்களிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் இருந்தவன் என்ற வகையில் இதனது உண்மை நிலைப்பாட்டை வரைந்துள்ளேன். விடுதலை செய்யப்பட்ட 11000 போராளிகளை மாத்திரம் தான் அனைவருக்கும் தெரியும். இதனைவிட விடுதலைப்புலிகளின் 29 கட்டமைப்புக்களில் இருந்து செயற்பட்ட முக்கிய உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுவிட்டார்கள். சிலர் விசாரனைகளின் போது அடித்துக்கொல்லப்பட்டுவிட்டார்கள். இலங்கைப் புலனாய்வினர் தற்போதும் நடமாடிக்கொண்டிருக்கும் போராளிகள் பலருக்கு எவ்வாறு சித்திரவதை செய்தார்கள் என்பதும் அவர்களுக்கு நன்கு தெரியும்.
கடந்த ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தபாய அவர்கள் மஹிந்தவின் ஆட்சி கவிழ்க்கப்பட போகிறது என்பதை அறிந்துகொண்டு போஹம்பர, வெலிக்கடை, திருகோணமலை போன்ற சிறைகளில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் அமைப்பின் போராளிகளை சுட்டுக்கொன்றனர். இவர்களில் யார் துரோகி என்பது மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகவே நாம் வெளிப்படையாக இதனைக் கூறுகிறோம். மேற்குறிப்பிடப்பட்ட ஆட்சியாளர்கள் எவ்வாறு தமிழினத்திற்கு துரோகத்தினைச் செய்தார்கள் என்பது பற்றி தொடர்ந்து வரும் கட்டுரைகளில் நாம் பார்க்கலாம்.

தொடரும்…

இரணியன்

SHARE