“நித்தம் நித்தம் மாறுகின்றதெத்தனையோ?” -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்

321

உலகின் பார்வைமுழுவதும் சில நாட்களாய் இலங்கையின் மீதுதான்.
காரணம், நிகழ்ந்திருக்கும் பாராளுமன்றக் குழப்பங்கள்.
பாராளுமன்றம் கூடப்போகிறது என்றும்,
யார் உண்மைப்பிரதமர்? யார் பொய்ப்பிரதமர் என்ற கேள்விக்கான விடை,
பெரும்பாலும் கிடைத்துவிடும் என்றும்,
பாராளுமன்றைக் கூட்டாமல் ஜனநாயகத்தைப் புறந்தள்ளி,
ஜனாதிபதி செய்த ஆள்பிடிக்கும் வேலை,
வெற்றியில் முடிந்ததா? தோல்வியில் முடிந்ததா? என்பதற்காம் பதில் தெரிந்துவிடும் என்றும்,
ஆவலோடு அனைவரும் எதிர்பார்த்திருக்க,
விட்ட பிழையைச் சரிசெய்வதாய்ச் சொல்லி,
மீண்டும் ஒரு பிழையை விட்டார் ஜனாதிபதி.
தான் அமைத்த மஹிந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பது,
பெரும்பாலும் தெரிந்துபோய்விட,
திடீரென 09 ஆம் திகதி இரவு பாராளுமன்றத்தைக் கலைத்து,
சர்ச்சைகளின் நாயகனாகி இருக்கிறார் அவர்.
✦✦
ஜனாதிபதிக்கு இருந்த,
ஓர் அரசைக் கலைக்கும் அதிகாரத்தை,
ஆட்சிக்கு வந்ததும் தானே நீக்கிவிட்டு,
இன்று அடாவடித்தனமாய் அந்த அதிகாரத்தை,
கையில் எடுத்திருக்கும் ஜனாதிபதியின் செயல் கண்டு,
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.
உலக சமுதாயத்தை மதியாது,
ஜனாதிபதி எடுத்த இம்முடிவால்,
இலங்கையின் பொருளாதாரத்தில் மட்டுமன்றி,
அதன் அரசியல், பாதுகாப்பு, நீதி போன்றவற்றிலும்,
பெரும் உடைவுகள் ஏற்படப்போகின்றன என்று,
அரசியல் அவதானிகள் அஞ்சிய நிலையில்,
ஜனநாயகத் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் நீதித்துறை,
மிகுந்த கம்பீரத்துடன் தனது கடமையைச் செய்து,
ஜனாதிபதியின் சமநிலைக் குழப்பத்திற்கு தற்காலிக முடிவு கட்டியது.
✦✦
ஆனாலும் பேரினத் தலைவர்கள் அதற்கும் அடங்குவதாய்த் தெரியவில்லை.
தொடர்ந்தும் தமது குறுக்குப் புத்தியால், காரணங்கள் பல காட்டி,
அவர்கள் நீதிமன்றத்தையும் நிராகரிக்க முனைந்து நிற்கின்றனர்.
பாராளுமன்றை படக்கொட்டகையாக்கி,
அவர்கள் செய்யும் கூத்துக்கள் வரம்புமீறிப் போய்க்கொண்டிருக்கின்றன.
வெளிநாட்டுத் தூதுவர்கள், தம்நிலை மறந்து கைதட்டி ஆர்ப்பரிக்கும் அளவிற்கு,
இவர்களின் விறுவிறுப்பும் வேகமும் நிறைந்த சண்டைக் காட்சிகள்,
அதிகரித்துக் கொண்டே போகின்றன.
தாம், தன்னிறைவற்ற ஒரு நாட்டின் தலைவர்கள் என்பதையும்,
மற்றை நாடுகளிடம் கையேந்தித்தான் நம் வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதையும்,
மறந்த இவர்களின் செயற்பாட்டில்,
ஆணவம் மட்டுமன்றி,
இலங்கையின் அழிவும் தெரியத் தொடங்கியிருக்கிறது.
✦✦
இதுவரை காலமும் நாடு போரால் சிதைவுற்றது.
இனிவருங்காலத்தில் அது அரசியலால் சிதைவுறும் போல் தெரிகிறது.
தம் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு,
தமிழினத்தை முன்பு துடிக்கத் துடிக்கச் சிதைத்தார்கள்.
இனக்கலவரங்களின் போது நீதியின்றிச் சிதைக்கப்பட்ட தமிழினத்தாரின்,
உயிர், உடமை போன்றவற்றிற்கான எந்தப் பதிலும் உரைக்காமல் இருந்தவர்கள்,
நிகழ்ந்து முடிந்த போர்ப்பழியை ஆயுதக்குழுக்களின்மேல் மட்டுமே ஏற்றி,
தேசத்தைப் பாதுகாப்பதாய்ச் சொல்லி,
உலகம் பதைபதைக்க தமிழினத்தை அழித்தார்கள்.
அந்தப் பாவமோ? என்னவோ? இன்று அவர்கள் செயல்களாலேயே,
சுதந்திர இலங்கை அன்னை,
வல்லரசுகளின் கால்களில் மிதிபடும் நிலைக்கு வரத் தொடங்கியுள்ளாள்.
அன்று இலங்கையின் ஜனநாயகத்தைக் காப்பதாய்ச்சொல்லி,
தமிழர்களை அழித்தொழித்துக் கொண்டாடியவர்கள்,
இன்று தாமே தேசத்தை அழிவு நோக்கி நகர்த்தத் தொடங்கியிருக்கிறார்கள்.
இவர்களுக்கு யார் என்ன தண்டனை வழங்கப் போகிறார்களோ?
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது நிஜமாகத்தான் இருக்கிறது!

✦✦
அன்று ஜனநாயகத்தின் காவலராய்ப் பார்க்கப்பட்ட ஜனாதிபதி,
இன்று ஜனநாயகத்தின் எதிரியாய் பார்க்கப்படுகிறார்.
பிரச்சினையைத் தீர்க்கவேண்டியவரே பிரச்சினைகளின் காரணராகிவிட்ட நிலையில்,
அடுத்து, அதிகாரம் ஆயுதப்படைகளின் கைகளுக்குப் போகப் போகிறதா? அல்லது,
அடுத்த நாடுகளின் கைகளுக்குப் போகப்போகிறதா? என்று,
அஞ்சி நிற்கின்றனர் அரசியல் அறிந்தோர்.
அமெரிக்க கழுகும், சீன ‘ட்ரகனும்” இலங்கையை விழுங்க ஆயத்தம் செய்வதாய்,
பத்திரிகைகளில் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
என்னாகப் போகிறதோ யாரறிவார்?
✦✦
ஜனாதிபதியும் மஹிந்தவும் இணைந்து நடத்திய நாடகத்தை,
குழப்புவதில் முக்கிய பங்கு வகித்தவர் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர்.
அவர் எடுத்த உறுதியான முடிவே,
ஜனாதிபதியின் சூழ்ச்சியை முறியடித்திருக்கிறது.
ஜனநாயகத்தன்மை சிறிதுமின்றி,
அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் பிரதிநிதியாய் பாராளுமன்றுள் நுழைந்த சம்பந்தர்,
அதற்காகப் பழிவாங்கும் உணர்வு சிறிதுமின்றி,
தான் வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நேர்மை செய்து,
அண்மைப் பிரச்சினையில் தான் எடுத்த முடிவுகளால்,
இலங்கையின் ஜனநாயகக் காவலராய் மாறி தலைநிமிர்ந்திருக்கிறார்.
தமிழினத்தையும் தலை நிமிர்த்தியிருக்கிறார்.
எதிரிகளுக்கும் நேர்மை செய்யும் தமிழரின் பண்பை அவர் நிறுவியது கண்டு,
பேரினத்தார் கூட வியந்து நிற்பதாய்ப் பேசப்படுகிறது.
ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு எதிராய் சம்பந்தனார் காட்டிய உறுதிப்பாடே,
மற்றைய சிறுபான்மைக் கட்சிகளையும்,
உறுதியான நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்ததாய்ப் பலரும் சொல்கிறார்கள்.
✦✦
வியாழேந்திரன் என்ற ஒரு கறுப்பாட்டைத் தவிர,
மற்றைய அனைத்துக் கூட்டமைப்பு உறுப்பினரும்,
தம்மை ஈர்க்க கோடிக்கணக்கில் விலைபேசப்பட்டபோதும்,
அதற்கு அசைந்து கொடுக்காமல் நின்று,
தமிழின உரிமை இலட்சியமே தமது அரசியல்ப் பாதை என்பதனை,
பேரினத்தார்க்கு ஒற்றுமையால் எடுத்துக்காட்டி,
தமிழனத்தைப் பெருமைப்படுத்தியிருக்கிறார்கள்.
அண்மையில் வடக்கில் நடந்த அரசியல் குழப்பங்களைக் கண்டு,
தமிழினத்திற்குள் உட்பூசல்களை விளைத்துவிட்டோம் என்று எண்ணிப் பெருமைப்பட்டவர்கள்,
இன்றைய பாராளுமன்ற அரசியல் குழப்ப விடயத்தில்,
தமிழ்த்தலைவர்கள் காட்டிய ஒருமைப்பாட்டைக் கண்டு,
தம் அஸ்திரங்கள் வீணாகின என்று தலை கவிழ்ந்தார்கள்.
✦✦
அதுமட்டுமல்லாமல்,
வடக்கில் கூட்டமைப்பை ஒழித்துவிடுவது என்று கங்கணம்கட்டிக் கிளம்பி,
ஆர்ப்பரித்து நின்ற கூட்டமும்,
கூட்டமைப்பின் இன்றைய நாடளாவிய எழுச்சி கண்டு வாய் மூடி மௌனித்திருக்கின்றது.
வெற்றிக்கனி இனி நம் மடியில்த்தான் வீழும் என்று நம்பியிருந்த அக்கூட்டம்,
ஒற்றுமையாலும் உறுதியாலும் உயர்ந்திருக்கிற கூட்டமைப்பு உறுப்பினர்களின்மேல்,
மக்கள் மன்றுக்கு ஏற்பட்டிருக்கும் மதிப்பைக் கண்டு,
தம் எண்ணத்தில் மண் வீழ்ந்ததாய் நினைந்து ஓய்ந்திருக்கிறது.
தம் ஊதுகுழல்களான பத்திரிகைகளின் மூலம் உரத்துக் குரல் கொடுத்து,
உலா வந்து கொண்டிருந்தவர்கள்,
இன்று ஓய்ந்து ஆங்காங்கே முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
வெற்றுத் தலைவர்களின் வெறும் உணர்ச்சிக் கூச்சல்களைக் கேட்டு,
இவர்கள்தாம் தலைவர்கள் என எண்ணத் தொடங்கியிருந்த சில தமிழர்களும்,
வாய்ப்பேச்சு வேறு! செயல்வீச்சு வேறு! என்பதை உணர்ந்து,
தம் மன வாக்குச்சீட்டில் மாற்றம் செய்து புதிதாய்ப் புள்ளியிட முடிவு செய்திருக்கிறார்கள்.
✦✦
மேற்படி உண்மைகளை உணர்ந்து,
கூட்டமைப்பு இதே ஒற்றுமையுடன் தொடர்ந்து இயங்குமா?
காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
வாய்ப்பைத் தவறவிடுகிறவன் துரதிஷ்டசாலி,
வாய்ப்புக்களைத் தவறவிடுபவன் முட்டாள்.
கூட்டமைப்பினர் அறியவேண்டிய பொன்மொழி இது.
✦✦
இவ் இக்கட்டான சூழ்நிலையில்,
பலராலும் திட்டப்பட்ட சுமந்திரனின் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
பாராளுமன்றினுள் கறி சமைக்க மிளகாய்ப் பொடியோடு வந்தவர்கள் கூட,
சுமந்திரனையும் சம்பந்தரையும் குறிப்பாய்த் தேடியதாய் செய்திகள் சொல்கின்றன.
இன்றைய நிலையில் இத்தகைய பிரச்சினையைக் கையாளும் திறன்,
கூட்டமைப்பு உறுப்பினர்களுள் மேற்சொன்ன இருவரையும் விட,
வேறெவருக்கேனும் உண்டா? எனும் கேள்வி,
மக்கள் மத்தியில் தவிர்க்கமுடியாமல் கிளம்பியிருக்கிறது.
கூட்டமைப்பு என்று இல்லை மற்றைத் தமிழ்க் கட்சிகளிலும் கூட,
அத்தகையோர் இருக்கின்றனாரா? என்பதும் கேள்விக்குரிய விடயமாகவே இருக்கிறது.
நடைமுறையில் சில திருத்தங்களைச் செய்து கொண்டாரேயானால்,
சம்பந்தனின் இடம் சுமந்திரனுக்காகக் காத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
பலபேருக்குக் கசப்பை ஏற்படத்தப்போகும் இவ் உண்மையை,
காலம் அங்கீகரிக்கையில் நாம் கண்டு கொள்வோம்.
✦✦
முடிவுகளைக் காலந்தான் முக்கியப்படுத்துகிறது.
இன்றைய கால எல்லையில் சம்பந்தனாரின் முடிவு,
தமிழர்களைப் பெறுமதிப்படுத்தியிருக்கிறது.
சிங்களத் தலைவர்களின் கைப்பொம்மையாய் ஆடிக்கிடக்கிறார் சம்பந்தனார் என்றார்கள்.
இன்று, சம்பந்தரின் கையில் ஆடும் பொம்மைகளாகி இருக்கிறார்கள் சிங்களத் தலைவர்கள்.
நாளை யார் கையில் யார் ஆடப்போகிறார்களோ?
இதுதான் நிரந்தர முடிவு என்று எதனையும் சொல்லிவிடமுடியாது.
காலமாற்றம் சம்பந்தரின் முடிவை சிதைக்கவும் வாய்ப்பில்லாமல் இல்லை.
நடந்து முடிந்த சம்பவங்களால்,
மஹிந்த தமிழ்த்தலைவர்கள்மேல் கடுங்கோபம் கொண்டிருப்பார் என்பது வெளிப்படை.
தற்செயலாய் அவர் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறும் பட்சத்தில்,
நிச்சயம் அக்கோபத்தை தமிழ்த்தலைவர்களின் மேல் காட்டாமல் விடமாட்டார்.
இஃது அவரது முன்னை நடவடிக்கைகளைக் கொண்டு எடுக்கும் முடிவு,
மஹிந்தவின் கோபம் தமிழ்த்தலைவர்களோடு நிற்குமா?
அல்லது தமிழர்கள் மீதும் பாயுமா?
காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
✦✦
இன்றைய நிலையில், எதையும் உறுதியாய்ச் சொல்லமுடியாவிட்டாலும்,
தொடர்ந்து வரும் நாட்களில்,
சம்பந்தனாரின் முடிவு கூட்டமைப்பின் சரித்திரத்திற்கான அத்திவாரமா?
அல்லது சமாதிக்கான அத்திவாரமா? என்பதும் தெரியப்போகிறது.
ரணிலின் கை ஓங்கினால் சம்பந்தனார் ‘ஹீரோ” வாகப் போகிறார்.
மஹிந்தவின் கை ஓங்கினால் சம்பந்தனார் ‘வில்லனாக” போகிறார்.
அங்ஙனம் அவர் ஆகப்போவது,
ரணில், மஹிந்த இருவர்க்கும் மட்டுமல்ல தமிழினத்திற்கும்தான்.
சம்பந்தனார் துணிந்து எடுத்து வைத்திருக்கும் அடி,
சறுக்கப் போகிறதா? சாதனையாகப் போகிறதா?
இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள் அனைவர் மனங்களிலும்.
பதிலுக்காய் காத்து பதறி நிற்கின்றனர் தமிழ்மக்கள்.
✦✦
ஆனாலும் ஒன்று.
தற்போது சம்பந்தர் எடுத்திருக்கும் முடிவு ஜனநாயகம் சார்ந்தது என்பதில்,
ஐயத்திற்கு இடமில்லை.
வருங்கால, வெற்றி தோல்விகளைக் கணித்து,
சத்தியத்திற்கு மாறாகவோ, அல்லது இரண்டுங்கெட்டான் நிலையிலோ,
இருக்க நினைப்பது தலைமைக்கு அழகல்ல.
பல பிரச்சினைகளில் அங்ஙனமாய் இருந்த சம்பந்தனார்,
இம்முறை துணிந்து முடிவெடுத்துத் தலை நிமிர்ந்திருக்கிறார்.
எம்மைத் தலைநிமிர்த்தியும் இருக்கிறார்.
எனவே எதுவந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள,
கூட்டமைப்பும் தமிழினமும் தயாராகவேண்டியது தான்.
நம்மிடம் ஒற்றுமை இருந்தால் எதிரியும் நண்பனாவான்.
ஒற்றுமை நீங்கின் நண்பனும் எதிரியாவான்.
இவ் உண்மையை கூட்டமைப்பினர் முதலில் தாம் உணர்ந்து,
பின் இனத்திற்கும் உணர்த்துவார்களாக!
✦✦

பாராளுமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும்,
யுத்தக்காட்சிகளைப் பார்த்தபடியே இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இலங்கை அரசியல் வரலாற்றில் நடக்காத சம்பவங்கள் எல்லாம்,
கட்சித்தலைவர்களின் கண்முன்னாலேயே நடந்து கொண்டிருக்கின்றன.
‘கொலைகள் கூட நிகழலாம்” என உறுப்பினர்கள் கணிக்கும் அளவிற்கு,
இலங்கை அரசியலின் இழிநிலை சிகரம் தொட முனைந்து கொண்டிருக்கிறது.
நடக்கப் போகும் ஆபத்துத் தெரியாமல் தேசத்தைப் பிளவுபடுத்தும் வேலைகளை,
பேரினவாத அரசியல்வாதிகள் செய்யத் தொடங்கிவிட்டனர்.
ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் மாறுபட்ட பலகுழுக்களும்,
தேசத்தை பாழ்செய்யும் இயல்பு கொண்ட, உடனிருந்தே தீமை செய்யும் உட்பகையும்,
தலைவனை அலைவிக்கும் கொலைக்குறும்பரும் இல்லாத நாடே சிறந்த நாடு என்பார் வள்ளுவர்.
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.
வள்ளுவர் வேண்டாம் என்றவை நம் தேசத்தில் வீறாய் விளையத் தொடங்கிவிட்டன.
தமிழினத்தின் மேல் அராஜகம் செய்து பழகிய ருசியில்,
பேரின அரசியல் தலைமைகள்,
இன்று தமக்குத்தாமே அதனைச் செய்யத் தொடங்கிவிட்டன.
இவர்தம் பலயீனத்தைப் பயன்படுத்தி,
இலங்கைத்தாயின் சுதந்திர மணிமுடியைப் பறிக்கும் ஆசையோடு,
எத்தனையோ நாடுகள் ஏங்கிக் கிடக்கின்றன.
சதோதரப் பகையால் துகிலுரியப்பட்ட பாஞ்சாலியைப் போலத்தான்,
இன்று இலங்கை அன்னையின் நிலையும்.
வாராவாரம் பரபரப்பான புதிய காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கும் இலங்கையில்,
அடுத்தவாரம் என்ன நடக்குமோ? யாரறிவார்?

SHARE