தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற அரசியல் அசாதாரண நிலை காரணமாக யார் பிரதமர்? எந்த அரசாங்கம் நிலையாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைக் கையாளப்போகிறது என்கிற கேள்விகளோடு, நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தமிழரசுக்கட்சியுடன் கூட்டாக இணைந்து செயற்படுகின்ற ரெலோ, புளொட் ஆகிய இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளும் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் ஆட்சியமைக்க வேண்டும். அதன் பிரதமராக ரணில் அவர்கள் தான் தொடரவேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே த.தே.கூவின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அதனை உத்தி யோகபூர்வமாக ஜனாதிபதிக்கும் அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இதில் மஹிந்த நல்லவரா? ரணில் நல்லவரா? என்கிற கேள்விக்கு தமிழரசுக்கட்சி தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கலந்துரையாடலை நடத்தவில்லை. அரசு கடந்த 35 வருடகாலமாக தமிழ் மக்களது பிரச்சினைகளில் கால அவகாசங்களையே வழங்கி வந்தது. ‘மக்களது தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு’ என்ற அடிப்படையில் யாரை ஆதரிப்பது, யாரை புறந்தள்ளுவது என்கிற முடிவை எடுத்திருக்கலாம். தங்களது பாராளுமன்றக் கதிரை களைத் தக்கவைத்துக் கொள்வ தற்காக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் உண்மையிலேயே தமிழினத்தை அடகுவைத்துச் செயற்படுவதாகவே இதனைக் கருத முடியும்.
காலத்திற்குக் காலம் ஆட்சி மாற்றங்களைப் பார்க்கும்போது, சிங்களப் பெரும்பான்மைத் தலை வர்கள் அனைவரும் தமிழ் பிரதி நிதிகளையும், தமிழ் மக்களையும் ஏமாற்றியே வந்துள்ளனர் என்பது புலனாகும். தமிழினத்திற்கு எதிராக போராட்டங்களை திசைதிருப்பியவர் ஜே.ஆர் அவர்கள். இதில் முக்கிய விடயமாக விடுதலைப்புலிகளது ஆயுதக்களைவு, பின்னர் அவர்களை அரசியல் மயமாக்கி தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்குவது என்பதுதான். தமிழீழக் கோரிக்கை அதில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனாலேயே மீண்டும் முறுகல் நிலை உருவாகி இலங்கை – இந்திய ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேர டியாக அரசுடன் பேச்சுக்களை நடத்தி, தமிழ் மக்களிடத்தில் அந்த செய்தியை ஒருமுறைக்கு பலமுறை சொல்கின்றபோது, அது உண்மையென தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்க விடுதலைப்புலிகள் கோரிய போது அது நடந்தேறியது. அது மாத்திரமல்ல, இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறுவதற்காக, பிரேமதாசா விடுதலைப் புலிகளுடன் நெருங்கியிருந்து ஐயாயிரம் துப்பாக்கிகளை அவர்களுக்கு வழங்கி, இந்திய இராணுவத்துடனான யுத்தத்தை விடுதலைப்புலிகளைப் பயன்படுத்தி கட்டவீழ்த்துவிட்டிருந்தார்.
இதனால் இந்தியாவை நிரந்தரமாக பகைக்கவேண்டிய சூழல் விடுதலைப்புலிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் ஏற்பட்டது. இக்காலத்தில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், த்ரீ ஸ்ரார் போன்ற இயக்கங்களைப் பயன்படுத்தி, பின்னர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக பிரேமதாசா அரசாங்கம் ஒரு நகர்வினை முன்னகர்த்தியது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு இவரே திட்டங்களை வகுத்துக் கொடுத்திருந்தார். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுதலைப்புலிகளுடன் பேச்சுக்களை ஏற்படுத்தினர். சந்திரிக்கா அவர்கள் தன்னை ஒரு சமாதானப் புறாவாக வெளிப் படுத்தியிருந்தார். ஆனாலும் தமி ழீழக் கோரிக்கையை சந்திரிக்கா அவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. தனது ஆட்சிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்த சந்திரிக்கா தென்னிலங்கையில் குழப்பநிலை ஏற்படுத்தப்பட, காப்பந்து அரசினை உருவாக்கி அதில் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமரானார்.
அக்காலகட்டத்தில் போரி னாலேயே தமிழ் மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நிலைப்பாட்டை விடுதலைப்புலிகள் கையில் எடுத்தனர். அரசிற்குப் பாரிய ஒரு நெருக்கடியையும் பொருளா தார ரீதியாக வீழ்ச்சியையும் ஏற்ப டுத்தினர். அரசு வேறு வழியின்றி நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் பேச்சுவார்த்தைக்குக் கள மிறங்கியது. 2000ஆம் ஆண்டுவரை தீவிரப் போர் வட-கிழக்கில் நடைபெற்றது. 2001 காலத்தில் யுத்தம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வர பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக் கப்பட்டது. 2002ம் ஆண்டு தாய்லாந்தில் முதற்கட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றது. 31 ஒக்ரோபர் 03 நவம்பர் 2002 பாங்கொக் ரோஸ் கார்டனிலும், 2-5 டிசெம்பர் 2002 ஒஸ்லோ, நோர்வேயிலும், 6-9 ஜனவரி 2002 ரோஸ் கார்டனிலும், 7-8 பெப்ரவரி 2003 பேர்லின், ஜேர்மனியிலும், 18-21 மார்ச் 2003 ஹக்கூன், ஜப்பானிலும், 18 ஓகஸ்ட் 2003 பாரிஸ், பிரான்சிலும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இப்பேச்சுவார்த்தை கால கட்டத்தில் இடைக்கால நிர்வாகம் விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. இக்காலத்தில் இராணுவத்தினர் மற்றும் விடுதலைப்புலிகள் பரஸ்பரம் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் தமது சேவைகளைப் புரிவதற்கு பேச்சுவார்த்தைகள் மூலம் முன்னெடுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ் இடைக்கால நிர்வாகக் காலத்தில் இராணுவத்தினருக்கு உளவு வேளை பார்த்தார்கள் என்ற அடிப்படையில் 29 பேர் இனந்தெரியாதோர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்க ளின் மீது யார் தாக்குதல் நடத்து வது என்கிற கேள்வி உலக நாடுகள் மத்தியில் எழுப்பப்பட்டது. இவற்றைத் தாம் செய்யவில்லை என விடுதலைப்புலிகள் மறுத்ததை யடுத்து விடுதலைப்புலிகள் தான் நேரடியாகச் செய்தார்கள் என்கிற குற்றச்சாட்டை அரசு சுமத்தியது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தன்னிச்சையான செயற்பாடு அரசாங்கத்தின் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சந்திரிக்கா – ரணில் காப்பந்து அரசாங்கம் குலைந்துபோகும் ஒரு சூழல் ஏற்பட்டது. அதிலும் மிகத் தந்திரோபாயமாக ஐ.தே.க அரசில் அப்போது பிரதமராகவிருந்த ரணில் விக்ரமசிங்க அவர்கள் விடுதலைப்புலிகளின் கட்டளைத் தளபதி கருணா அம்மான் அவர்களை பிரித்தாளும் தந்திரோபாயத்தை மேற்கொண்டு ஏதோவொரு வகையில் இதனைக் கச்சிதமாகச் செய்து முடித்தார். இதுவே விடுதலைப்போராட்டம் இறுதியில் தோல்வி நிலையினை அடைவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. அதன் பின்னர் அரசாங்கம், விடுதலைப்புலிகளின் போராட்டத்தை இலகுவாக வெல்லக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்டது. இக்காலத்தில் மாத்திரம் வன்னிப் புலிகள், கிழக்குப் புலிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந் நேரத்தில் இலங்கையரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. ஒரு கட்டத்தில் கருணா படை யணியை வன்னிப் புலிகள் அழித்தொழிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கு இலங்கையரசே ஆதரவினை வழங்கினர்.
இதனால் விடுதலைப்புலிகளது பலம் குறைக்கப்பட்டது. 2004ஆம் ஆண்டிற்கு முன்னர் வன்னிப் புலிகளுக்கு எதிராக கருணாவின் நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டது. தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இதிலும் அரசு மிக நுட்பமாக தமிழ் மக்களது போராட்டங்களை கையாண்டு தமிழர்கள் மத்தியில் குழுக்களையும், பிரிவினைகளையும் உருவாக்கி தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து பல ஏமாற்றங்கள். விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள். அவர்களை அழித்தொழிக்கின்றோம் எனக்கூறி தமிழினத்தையே இனப்படுகொலை செய்த வரலாறு பதிவாகியிருக்கிறது.
சர்வதேச ரீதியாக 07 பேச்சுவார்த்தைகளும், உள்ளுர் ரீதியாக 14 பேச்சுக்களும் நடைபெற்றன. உலக வங்கி உட்பட 22 சர்வதேச நிறுவனங்கள் இதற்கு ஆதரவு வழங்கின. விடுதலைப் புலிகளது தனிநாட்டு கோரிக்கை நிவர்த்தி செய்யப்படவேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டின. அவ்வாறாக விருந்தால் விடுதலைப்புலிகளை எவ்வாறு பயங்கரவாதிகள் என்று கூறமுடியும். பூகோள ரீதியாக பார்க்கின்றபோது சீனா, இந்தியா அமெரிக்கா இந்த மூன்று நாடுகளும் விடுதலைப்புலிகள் கடல், வான், தரை என்று வளர்ச்சியடைந்து வந்தால் அது ஏனைய நாடுகளுக்கும், தமது நாட்டிற்கும் பாதகத்தன்மையை ஏற்படுத்தும் என்கிற காரணத்தால் விடுதலைப்புலிகளை பயங்கர வாதிகள் என்று முத்திரை குத்தி போரைக் கட்டவீழ்த்துவிட்டனர்.
விடுதலைப்புலிகளது போராட்டம் குறித்து கூறிக்கொண்டிருப்பவர்கள் விடுதலைப்புலிகளுக்கு பயந்தே அக்காலத்தில் அரசியல் செய் தார்கள். விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்கள் மறுநாள் இல்லை என்றாகிவிடும். இன்று அரசியல் பேசத் தெரியால் பலர் தமது சுயநலத்துக்காக தமது வாய்க்கு வந்ததை அறிக்கைகளாக வெளியிடுகின்றார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ நல்லவர் என்று அவருக்கு வாக்களித்து இறுதியில் அவர் தமிழினத்திற்கு செய்தது ஒரு இனப்படுகொலையே. எம் மீது ஒரு இனச்சுத்திகரிப்பினை மேற்கொண்ட இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவிற்கு அக் காலத்தில் வாக்களிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை ஆதரித்து தமிழினம் வாக்களித்தது. பின்னர் அவர் தோல்வியடைய மஹிந்தவினது ஆட்சி கொடூரமாக நடைபெற்றது. நிறைவேற்றதிகாரம் இரத்துச் செய்யப்படவேண்டும். நல்லாட்சியினை நிறுவவேண்டும் என கூட்டுச்சேர்ந்த மைத்திரிபால சிறிசேன, சந்திரிக்கா மற்றும் ரணில், தமிழ்க் கட்சிகள், மலையகக் கட்சிகள் அனைத்தும் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டது. இவ்வரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வுகளைத் தரும் என எதிர்பார்த்திருந்தபோதும் நான்கு வருடங்களை எட்டும் நிலையில் இவ்வரசும் தமிழினத்திற்கு துரோகத்தையே செய்திருக்கிறது.
மஹிந்த, ரணில் போன்ற வர்களுக்கு வாக்களிக்கலாமா? சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற்போல் அரசியல் செய்யும் விளைவு தமிழ் மக்களை ஒரு நிர்க்கதியான நிலைக்கு கொண்டு செல்கின்றது. எமது உரிமைகளை நாமே வென்றெடுக்கவேண்டும். சிங்கள அரசாங்கம் விடுதலையைப் பெற்றுத்தரமாட்டாது. ஆகவே ஆயுதமேந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
சர்வதேச நாடுகள் போர் தொடர்ந்தும் இடம்பெறவேண்டும் என்றே காத்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. அதற்கான முன்னெடுப்புக்களே தற்போது மேற்கொள்ளப்படுகிறது. உரிமையை வென்றெடுக்க முன்னர் பாராளுமன்றக் கதிரைக்கு ஆசைப்படக்கூடாது.
எமது உரிமைக்கான போராட்டங்கள் ஆயுதமேந்தித்தான் என்பதல்ல. அஹிம்சை வழியிலும் போராடலாம். அதற்காக விலை போகக்கூடாது. தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுக்கொள்வதாயின் எமது உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டும். அதற்கான முன்னெடுப் புக்களை எமது தமிழ்த் தரப்புக்கள் துணிந்து செய்யவேண்டும் என்பதே எமது வேண்டுகோள். நாம் எந்தக் கட்சிக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழினத்தை ஏமாற்றும் கட்சிகளுக்கே எதிரானவர்கள் என்பதையே இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.