இலங்கையின் தற்போதைய அரசியல் இராணு மயமாக்கப்படலாம்

318

இலங்கை இராணுவம் மற்றும் அரசியல்களுக்கிடையிலான‌ தொடர்பு பற்றிய தலைப்பு ஊடகங்களின் கவனத்தை அவ்வப்போதுதான் பெற்றுவருகிறது. போர்காலம், போரின் பிற்காலங்களில் சிவில்-இராணுவத்துக்கிடையிலான தொடர்பு பற்றிய சமநிலையானதொரு சட்டகத்தை பேணிவருவது நாட்டின் சிவில் அரசியல் தலைவர்களது மிக முக்கிய தேவையாக இருந்தும் இது விடயமான தீவிரமான அறிவார்ந்த பணிகளை கண்டுகொள்வது மிகவும் சிரமமானதாகவே இருக்கிறது. இலங்கையின் சிவில்-இராணுவ தொடர்பில் அண்மைய கால‌ நகர்வுகளில் தோன்றியிருக்கும் சில முக்கிய பண்புகளை கோடிட்டுக் காட்டுவதற்கு இக்கட்டுரை முயல்கிறது. இக்கட்டுரை இறுதியில் பிரேரிப்பது போன்று, சிவில்-இராணுவ தொடர்பு எமக்கு இன்னோர் பக்கத்தை காட்டித்தருகிறது. அத‌னூடாக இலங்கையின் தற்போதைய அரசியலை அவதானிக்கும் போது ஊடகங்களில் நாம் பொதுவாக வாசிப்பதை விட வித்தியாசமானதொரு பார்வையை எம்மால் பெற்றுக் கொள்ள முடிகிறது.

வியத் மக

இராணுவத்தின் பங்களிப்பு அல்லது அதன் பங்களிப்பின்னை பற்றிய தலைப்பு இன்றைய இலங்கை அரசியலில் வழமைக்கு மாறான ஒரு சூழலில் மேலெழுந்திருக்கிறது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை இலங்கையின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் நிறுத்தி, பலப்படுத்தும் நோக்கில், ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளால் வழிநடாத்தப்படும் ‘வியத் மக’ எனும் புதிய அரசியல் குழுவின் தோற்றம் சர்ச்சைகளை தூண்டியிருக்கும் அதேவேளை அதிக கவனத்தையும் பெற்றிருக்கிறது. ராஜபக்‌ஷ கூட முன்னாள் இராணுவ அதிகாரியே. இவ்வதிகாரிகள் குழு விடுதலைப் புலிகளது கிளர்ச்சியின் கடைசிக் கட்ட போராட்டத்தில் முன்னணியில் இயங்கியவர்கள். அதன் காரணமாக “போர் வீரர்கள்” எனும் பட்டத்தையும் தமதாக்கிக்கொண்டனர். பிரிவினைவாத அமைப்பை தோற்கடிப்பதில் அவர்கள் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பு மற்றும் நாட்டின் இறையாண்மையை மீட்டுக்கொடுத்தல் காரணமாக நாட்டின் எதிர்கால அரசியல் பாதையை வரைவதில் தமக்கென்றொரு இடத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக அவரகள் உணர்வது போல் உள்ளது.

இவ்வுணர்வு ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச நாடுகள், இலங்கையின் போருக்கு பின்னரான சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளானது நிலைமாறுகால நீதி மற்றும் போர் குற்றங்களுக்கான விசாரணைகளை கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்துவதன் காரணமாக மேலும் உயர்ந்திருக்கிறது. இப்பின்புலத்தில், விடுதலைப் புலிகளுக்கெதிரான கிளர்ச்சியை அடக்கும் போராட்டத்தை திறம்பட வழிநடாத்திய அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் தமது தனிநபர் மற்றும் நிறுவன நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள தம்மை ஒரு குழுவாக ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கின்றனர் என்பது ஓரளவு தெளிவான விடயமாகும். முன்னாள் கடற்படைத் தளபதியும் பின் 2015 நாடாளுமன்றத் தேர்தலுடன் நாடாளுமன்ற அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டவருமான சரத் வீரசேகர இம்முயற்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறார் எனலாம்.

வீரசேகர மிக முக்கிய பேச்சாளராக இருக்கும் வியத் மக, ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளைக் கொண்ட அரசியல் பிரச்சாரம் ஒன்றை ஆரம்பித்து வைத்திருப்பதுதான் அதன் புதிய பரிணாமம் ஆகும். இது ஒரு சமூக இயக்கத்தை ஒத்திருக்கிறது. இலங்கையின் அடுத்து வரும் நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் தலையிடுவதற்கான நிகழ்ச்சி நிரலொன்றும் அதனிடம் இருக்கின்றது. அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டிய முக்கிய பகுதி இது.

எச்சரிக்கை

ஆரம்பத்திலேயே ஓர் எச்சரிக்கை வார்த்தை அவசியப்படுகிறது. இலங்கையின் ஆயுதப் படை மற்றும் நீதித்துறை ஆகிய இரு பொது நிறுவனங்களும் நாட்டின் சமூக மற்றும் அரசியல் தளமாற்றங்களில் ஆற்றும் நிறுவனரீதியான பங்களிப்புகள் இலங்கை ஊடகங்களில் அடிக்கடி வந்துசெல்கின்றன. ஊடகங்கள் சாதாரண அறிவிப்புக்களாக அன்றி, சிறப்பறிக்கைகள் சமர்ப்பிக்குமளவிலான ஆய்வுகள் நோக்கி நகர்வதாக இல்லை என்று தோன்றுகிறது.

இவ்வகையான ஆய்வுகள் குறிப்பிட்ட நிறுவனங்களின் சுயாதீனத்துக்கான‌ அச்சுறுத்தல்களாக அந்நிறுவனங்களின் தலைமைகளால் பொருள்கொள்ளப்பட்டு, எதிர்பாராத மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்ற பயம் அதற்கான மூல‌ காரணமாக சிலவேளை இருக்கலாம். விமர்சன ரீதியான பொது கண்காணிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு நிறுவனம் நீதித்துறை என்ற ஆழ்ந்த‌ நம்பிக்கையினூடாக தோற்றம்பெற்றிருக்கும் பாரம்பரிய நடைமுறைகள் அந்நிறுவனத்தை பாதுகாக்கின்றன. மறுபுறம் ஆயுதப் படைகளது செயற்பாடுகள் மீதான பொது கண்காணிப்பு தேசிய பாதுகாப்பு சார்ந்த அதன் இயங்குதளங்களில் தலையிடும் நிலைமையை தோற்றுவிக்கலாம் எனும் ஊகத்தினடிப்படையில் அந்நிறுவனம் இயங்குகிறது. இதன் காரணமாக இக்கட்டுரையில், நான் ஓர் அரசியல் ஆய்வாளராக இருப்பினும், எனது கருத்தாக்கங்களையும் சமன்பாடுகளையும் மிக எச்சரிக்கையாகவே பிரயோகிக்கிறேன்.

வியத் மகயில் புதியது

வியத் மக நோக்கி ஒரு அரசியல் ஆய்வாளனின் கவனத்தைப் பெறச் செய்தது எது? இலங்கை அரசியலில் புதியதொரு தோற்றப்பாட்டை அது உள்ளடக்கியிருப்பதும் சுதந்திரத்தின் பின்னரான இலங்கை ஜனநாயகம் பின்பற்றி வந்த சிவில்-இராணுவ தொடர்பை மீள்வடிவமைப்பதற்கான சாத்தியங்களையும் அது கொண்டிருப்பது முக்கிய காரணங்கள். அமைச்சரவை, நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை போன்ற பாரம்பரிய ஜனநாயக நிறுவனங்களது கலவையிலும் அதன் வகிபாகங்களிலும் மாற்றங்களைக் கொண்டுவருவதனூடாக இலங்கையின் ஆட்சிக் கட்டமைப்பில் பிரதியீடொன்றை முன்வைக்குமளவிலான ஓர் வளர்ச்சியாகவும் அது இருக்கிறது.

எனது பார்வையில், UNP, SLFP, SLPP போன்ற அனைத்து சிவில் அரசியல் கட்சிகளின் தலைமைகளும் தமது தேர்தல் உள்ளக பகைகளுடன் சேர்த்து இப்புதிய பரிமாணம் மீதும் கவனம் குவிக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

பின்னணி

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து, இனநல்லுறவு, சமூக முரண்பாடுகள், தேச பொதுநலன் போன்ற பகுதிகளை முகாமை செய்வதில் பல பின்னடைவுகள் இருப்பினும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவன கட்டமைப்பை பராமரிப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டிருக்கிறது எனலாம். இருகட்சிகளுடைய செல்வாக்குடன் கூடிய பலமான பல கட்சியமைப்பு, துடிப்பான சிவில் சமூகம், பரவலாக இயங்கக்கூடிய இடதுசாரி அமைப்பு, வர்த்தக சங்கம், அரசியல் விழிப்புடன் கூடிய பிரஜைகள், கூடிய சதவீனத்தினரின் தேர்தல் பங்கேற்பு போன்றன அவற்றின் மிக அடிப்படை பண்புகள். சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கை ஜனநாயகத்தின் அடிப்படை பண்புகளில் ஒன்றாக பிரிடிஷ் பாரம்பரியத்தில் உருவான இராணுவத்தைக் கட்டுப்படுத்தும் பலமான சிவில் சமூகம் என்பதையும் கருத முடியும்.

இலங்கையும் இந்தியாவும் பாகிஸ்தான் மற்றும் பிற்கால பங்களாதேசை விட முற்றிலும் வித்தியாசப்படும் இடங்களுள் ஒன்று இது. இவ்விரு நாடுகளிலும், சுதந்திரமடைந்து பத்து ஆண்டுகளுக்குள், இராணுவ அதிகாரிகள் கொண்ட அரசியல் குழுக்களால் சிவில் அரசாங்கம் தூக்கி எறியப்பட்டது. ஜனநாயக ஆட்சியை ஒருங்கிணைப்பதற்கும் நிறுவனமயப்படுத்துவதற்கும் சிவில் அரசியல் தலைமைகள் தோல்வியடைந்தமை அதற்கான மிக முக்கிய காரணங்களுள் ஒன்று.

அதேநேரம், 1962, 1966 களில் தோல்வியுடன் முடிவுற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள் அதிகாரத்தில் இருந்த, அதிகாரத்துக்கு வெளியில் இருந்த சிவில் அரசியல் தலைவர்களிடத்தில் இலங்கையின் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னரான தேசத்தை நிர்வகித்தல் மீதான புதியதொரு சிந்தனையை – உடன்பட்ட கருத்து எனவும் கூறலாம்- தோற்றுவித்தன. ஆயுதப்படையையும் பாதுகாப்பு அமைச்சையும் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட சிவில்கட்டுப்பாட்டில் எவ்வாறு வைத்துக் கொள்வது என்பதே அது. அதனை அவர்கள் வெற்றிகரமாக முன்னெடுத்தது எவ்வாறு என்பது தனியானதொரு கட்டுரையில் விளக்கப்பட வேண்டும். ஓர் ஆய்வுப் பகுதியாகவும் அதனை வடிவமைக்கலாம். 1971 களிலிருந்து – நான்கு தசாப்த காலமாக தொடர்ந்த சிவில் யுத்த நேரத்தில் கூட சிவில்-இராணுவ தொடர்பை நிர்வகித்தலில் UNP மற்றும் SLFP இருகட்சிகளுக்கிடையிலான உடன்பாடு இலங்கையில் ஜனநாயகம் வாழ்வதற்கு குறிப்பிட்டுக் கூறுமளவிலான பங்களிப்பை செய்திருக்கிறது. இலங்கையின் அரசியல் விஞ்ஞான கற்கையில் இத்தலைப்பு போதிய கவனத்தைப் பெறவில்லை என்பதும் உண்மையே.

2009 க்குப் பின்னரான மாற்றம்

சிவில்-இராணுவ தொடர்பின் இயல்பில் மாற்றமேற்பட ஆரம்பித்திருக்கிற‌து. இராணுவம் அளவுகடந்த பலம் பெற்றிருந்த சிவில் போர் காலத்திலல்ல மாற்றம் நிகழ்ந்தது. மாறாக, இராணுவத்தின் தேசிய பாதுகாப்பு சுமை மிகவும் குறைந்திருக்கும் போரின் பின்னரான காலப்பகுதியில்.

இலங்கையின் போரின் பின்னரான அரசியலில் பாதுகாப்பு அமைச்சு பலம்பொருந்திய நிறுவனமாக தோற்றம்பெற்றதிலிருந்தே வழமைக்கு மாற்றமான போக்கு ஆரம்பித்திருக்கிறது. சிவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு கீழே பாதுகாப்பு அமைச்சு இருந்தது. பாதுகாப்புச் செயலாளராக, சிவில் ஜனாதிபதியுடைய சகோதரர் கோட்டாபய ராஜபக்‌ஷ இருந்தார். உண்மையில் அக்கட்டத்தில் கோட்டாபய ராஜபக்‌ஷ சிவிலியனாகவே இருந்தார். எனினும், அவரது இராணுவ நற்சான்றும் இராணுவ மனோநிலையும் அவரை சிவில் அரச அதிகாரி என்பதிலிருந்து இராணுவ தலைவர் என்ற நிலைக்கு மாற்றியிருக்கிறது.

நீண்ட உரையாடலை சுருக்கமாகக் கூறுவதாயின், 2009-2014 காலப்பிரிவில் இலங்கையின் பொதுக்கொள்கையில், குறிப்பாக பாதுகாப்பு, சட்டம், நீதித்துறை, வெளிநாட்டுதொடர்பு மற்றும் இராஜதந்திரம், கல்வி, நகர அபிவிருத்தி, கலாச்சார விவகாரம், மனித உரிமை, சமாதான முன்னெடுப்புகள் போன்ற பகுதிகளிலெல்லாம் அரசியல் பங்களிப்புக்காக பாதுகாப்புதுறை இயங்கும் போக்கொன்று உருவாக்கப்படுகிறது.

போரின் பின்னரான காலப்பகுதியில் அரசியலிலும் ஆட்சியிலும் உருவான முன்னெப்போதுமில்லாத அவ் ஒருங்கிணைப்பை ஜனவரி 2015 ஆட்சி மாற்றம் தடுத்து நிறுத்தியது. ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணிலுடைய நல்லாட்சி அரசாங்கம் பல மோசமான அரசியல் தோல்விகளை அடைந்தாலும், போரின் பின்னரான இலங்கையில் ஜனநாயக ஆட்சியை மீட்டெடுக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக தோன்றிய அப்புதிய போக்கை தடுத்து நிறுத்தியமைக்கான பாராட்டை பெற்றே ஆகவேண்டும். இத்தலைப்பு கூட ஓர் ஆய்வுக்கட்டுரையை வேண்டி நிற்கும் தலைப்பு.

பொன்சேகாவின் வருகை

விடுதலைப் புலிகளுக்கெதிரான களப்போராட்டத்தை மிக வெற்றிகரமாக தலைமைதாங்கிச் சென்ற இராணுவ தளபதி சரத் பொன்சேகா இலங்கையின் போருக்குப் பின்னரான அரசியலில் சிவில்-இராணுவ தொடர்பின் இன்னொரு தோற்றப்பாட்டை உருவாக்குகிறார்.

இரு ராஜபக்‌ஷ சகோதரர்களதும் அரசியல் மற்றும் நிறுவன கண்கானிப்பின் கீழ் போராட்டத்தை தலைமைதாங்கி செல்லும் காலப்பகுதிகளிலேயே, குறிப்பாக 2008, 2009 களில், பொன்சேகாவின் தனிப்பட்ட இலக்குகளில் அவ்விருவரும் மிக எச்சரிக்கையாக இருந்தனர். போராட்டக் களத்தில் இராணுவ ரீதியாக பல்வேறுபட்ட அதிகாரங்களை அவர் கொண்டிருந்தார். கொழும்பு சார்ந்த இராஜதந்திரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் நாட்டின் அதிகாரமிக்க மனிதர்களாக சரத் பொன்சேகா, கோட்டாபய ராஜபக்‌ஷ, மகிந்த ராஜபக்‌ஷ ஆகிய மூவரும் – இதே ஒழுங்கில் – கருதப்படுகின்றனர் என்ற‌ நகைச்சுவையொன்று வலம்வந்து கொண்டிருந்தது. போராட்டம் முடிந்தவுடன் ராஜபக்‌ஷ சகோதரர்கள் முன்னெப்போதுமில்லாத வகையிலும் ஆச்சர்யமூட்டும் வகையிலும் பொன்சேகாவை அவரது அதிகாரமிக்க இராணுவ தலைமையிலிருந்து நீக்கியதோடு சந்தேகத்துக்குரிய பதவியுயர்வை வழங்கி ஆயுதம் களையச் செய்தனர். இத்தீர்மானம் தனிப்பட்ட போட்டியாக முன்வைக்கப்பட்டது.

பொன்சேகா கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. இன்னும் இரு கிளை-சதிகளை அது கொண்டிருக்கிறது. 2009 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ராஜபக்‌ஷவுக்கு சவால்விடும் பொன்சேகாவின் தீர்மானம் அதில் ஒன்று. மிகவும் சூடுபிடித்த தேர்தல் பிரச்சாரத்தில் பொன்சேகா, ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கிடையிலான தனிப்பட்ட போட்டிகளும் குரோதங்களுமே கோடிட்டுக் காட்டப்பட்டன. பலம் பொருந்திய எதிர்கட்சியாக இருந்த UNP உடைய ஆதரவு பொன்சேகாவுக்குக் கிடைக்கிறது. பலம்பொருந்திய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு சவால்விடும் பொது வேட்பாளராக களம் இறங்குகிறார்.

தேர்தல் பிரச்சாரம் முடியும் கட்டத்தில், மிக சொற்ப ஊடகவியலாளர்களும் பார்வையாளர்களும் அவதானித்தது போல, பொன்சேகாவுடைய தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும் உற்சாகம் UNP தலைவர்களிடத்தில் மெதுமெதுவாக குறைந்து வந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி இரு வாரங்களாக ராஜபக்‌ஷ குழுவின் தாக்குதல் பொன்சேகாவின் தலைமையில் உருவாகி வரும் இராணுவ அரசாங்கத்தின் அபாயம் என்ற கருப்பொருளை சுழல்வதாகவே இருந்தது. கொழும்பில் சில வதந்திகள் பரவிக் கொண்டிருந்தன. பொன்சேகா முன்னால் இராணுவ அதிகாரிகள் குழுவொன்றை, குறிப்பாக தனக்கு விசுவாசமானவர்களை, கடைசி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க மட்டுமன்றி தேர்தல் வெற்றியின் பின் அதிகாரத்தை பெற்றுக் கொள்ளவும் புதிய அரசாங்கத்தை ஒழுங்குபடுத்தவும் தெரிவுசெய்திருப்பது ரணில் விக்கிரமசிங்க முகாமை அதிருப்தியடையச் செய்திருக்கிறது என்பது அவற்றுள் முதன்மையானது. UNP தலைமைகளோடு கலந்தாலோசிக்காமலே அரசாங்கத்தை ஒழுங்குபடுத்தும் திட்டத்தை தானாகவே வகுத்ததாகவும் கூறப்பட்டது.

உண்மையில் வதந்திகள் இருந்தன. எனினும், மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க இருவருக்குமிடையில் 2009 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுபவர் சிவில் அரசியல் தலைவராகவே தொடர்ந்திருக்க வேண்டும் என்ற‌  இறுதி நேர பரஸ்பர புரிந்துணர்வொன்று இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. இது ஓர் எடுகோள். இதனை பரீட்சிக்க மஹிந்த ராஜபக்‌ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோருடன் நேர்காணல் செய்வதே ஏகவழி.

ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில் இருவரும் சரத் பொன்சேகா எனும் தோற்றப்பாட்டை எவ்வாறு கையாண்டார்கள்? சிவில்-இராணுவ தொடர்பு பின்புலத்தில் இதனை அணுகும் போது ஆர்வமூட்டக்கூடிய கருத்தொன்றை வடிவமைக்க முடிகிறது. இலங்கை சிவில் அரசியல் தலைவர்களது பழைய ஏகோபித்த முடிவான அரசியல் அபிலாஷைகள் கொண்ட முன்னாள் இராணுவ அதிகாரிகள் கடுமையான சிவில் கட்டுப்பாட்டின் கீழே வைக்கப்பட வேண்டும் என்ற கருத்தாக்கத்தை தொடர்பவர்களாகவே ஜனாதிபதியும் பிரதமரும் காணப்படுகின்றனர். அவர்களிருவரதும் விவேகமுள்ள அரசியல் நகர்வாக சரத் பொன்சேகாவுக்கு/ பீல்ட் மார்ஷல் எனும் பதவியுயர்வு கொடுத்து, பின் சில முக்கியம் குறைந்த அமைச்சு பதவிகளை கொடுத்ததைக் கருதலாம்.

அடுத்தது என்ன?

கோட்டாபய ராஜபக்‌ஷவுடைய ஜனாதிபதி ஆசைகள், மறைவில்லாத அரசியல் இலக்குகளை கொண்டிருக்கும் முன்னால் சிரேஷ்ட இராணுவ தலைவர்கள் குழுவினால் விளம்பரப்படுத்தடுகின்றன என்பதை இப்பின்னணிகளுடன் புரிந்துகொள்ள வேண்டும். புதிதாக தோற்றம்பெற்றிருக்கும் இப்போக்கை ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் ரணில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த – முன்னணி வகிக்கும் மூன்று சிவில் அரசியல் கட்சிகளை தலைமை தாங்கும் மூன்று சிரேஷ்ட சிவில் அரசியல் தலைவர்கள் – ஆகிய மூவரும் எவ்வாறு கையாளப் போகின்றனர் என்பது அரசியல் ஆய்வாளர்களுக்கு மிகவும் ஆர்வமான ஒன்றாக உள்ளது.

SHARE