இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது; இறையாண்மை மிக்க இரண்டு நாடுகள் பரஸ்பரம் செய்துகொண்ட சர்வதேச உடன்பாடு இது. தமிழின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உள்நாட்டு அரசியல் அமைப்பு திருத்தியமைக்கப்படும் என்று ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உறுதிமொழி அளித்த உடன்பாடு. இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பெரிய லட்சியமாக மக்களிடையே பேசிப் பிரபலப்படுத்திய அதிபர் ஜெயவர்தனே, உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் பக்கத்து நாட்டுக்கு வாக்குறுதி அளித்து உடன்படிக்கை செய்துகொண்டது, பிறகு அதை அமல்படுத்த இந்திய ராணுவத்தை இலங்கைக்கு வரவழைத்தது போன்றவை நகைமுரணாக அமைந்துவிட்டது. இந்த உறுதிமொழியின் பேரில் இலங்கை அரசியல் சட்டம் திருத்தப்பட்டது,
ஜூலை 29, 1987 என்பது இலங்கை வரலாற்றின் முக்கியமான நாள். இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனேயுடன் கொழும்பு நகரில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை அதில் வாக்குறுதி அளித்திருந்தது. அதே நாளில் பின்னர் நடந்த அணிவகுப்பு மரியாதையின்போது இலங்கைக் கடற்படை வீரர் ஒருவர் திடீரென துப்பாக்கியின் அடிக்கட்டையால் ராஜீவைத் தாக்க முயன்ற சம்பவத்தையும் மறக்க முடியாது. ராஜீவ் காந்தி மட்டும் உள்ளுணர்வு காரணமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்திருக்காவிட்டால் அவருடைய மண்டை உடைபட்டிருக்கும். அவருக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் இலங்கையின் வரலாறே வேறு மாதிரியாகியிருக்கும்; நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்படாமல் இருந்திருந்தால் இலங்கைத் தமிழ் மக்களின் வாழ்க்கையும் மாறியிருக்கும்.
இந்திய-இலங்கை உடன்பாடு தன்னிகரில்லாதது; இறையாண்மை மிக்க இரண்டு நாடுகள் பரஸ்பரம் செய்துகொண்ட சர்வதேச உடன்பாடு இது. தமிழின மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உள்நாட்டு அரசியல் அமைப்பு திருத்தியமைக்கப்படும் என்று ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு உறுதிமொழி அளித்த உடன்பாடு. இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பெரிய லட்சியமாக மக்களிடையே பேசிப் பிரபலப்படுத்திய அதிபர் ஜெயவர்தனே, உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் பக்கத்து நாட்டுக்கு வாக்குறுதி அளித்து உடன்படிக்கை செய்துகொண்டது, பிறகு அதை அமல்படுத்த இந்திய ராணுவத்தை இலங்கைக்கு வரவழைத்தது போன்றவை நகைமுரணாக அமைந்துவிட்டது. இந்த உறுதிமொழியின் பேரில் இலங்கை அரசியல் சட்டம் திருத்தப்பட்டது, மாகாணக் கவுன்சில்கள் உருவாக்கப்பட்டன, தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்த வடக்கும் கிழக்கும் ஒரே பகுதியாக தற்காலிகமாக இணைக்கப்பட்டன. இந்த ஏற்பாடு சுமார் இருபதாண்டுகள் நீடித்தன.
இந்தியாவின் பங்குக்கு முற்றுப்புள்ளி
இந்த அதிகாரப்பகிர்வு ஏற்பாடு குறித்து தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எஃப்) அதிருப்தி தெரிவித்தது. ஜெயவர்தனேவுக்கு அடுத்து பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாச, விடுதலைப் புலிகளுடன் நேரடியாகப் பேசத் தொடங்கியதை அடுத்து இந்தியாவுடனான பரிமாற்றங்களை முறித்துக்கொண்டார். அந்த உடன்பாட்டின் பலன் கிடைப்பதில் இந்தியா ஆற்றக்கூடிய பங்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அதற்குப் பிறகு இலங்கை அரசின் அறிக்கை, பேட்டி அல்லது வெளியீடுகளில் இந்தியாவுடன் செய்துகொண்ட உடன்பாட்டைக் குறிப்பிடுவதுகூட நின்றுவிட்டது. ஆனால், தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று வரும்போதெல்லாம் அந்த உடன்பாட்டில் இடம்பெற்ற பிரிவுகள்தான் அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. 2006-ல் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இலங்கை உச்ச நீதிமன்றம் பிரித்தபோது, இந்தியாவுடனான உடன்பாட்டை இலங்கை மீறுகிறதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இப்போதும் அது விடையில்லா வினாவாகத் தொடர்கிறது. ஆனால், இலங்கையோ தொடர்ந்து, ‘திருப்தியளிக்கும் வகையில் அதிகாரங்கள் பகிர்ந்துகொள்ளப்படும்’ என்று உறுதியளித்துவருகிறது. அதிபர் மகிந்த ராஜபட்ச அரசின்போது வெளியான மூன்று கூட்டறிக்கைகளிலும் அதிகாரப்பரவலை அர்த்தமுள்ளதாக்க 13-வது சட்டத் திருத்தம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. வெளிப்படையாகக் கூறாவிட்டாலும் இந்த ஒப்பந்தப்படிதான் தீர்வு என்று உதட்டளவில் இலங்கை தொடர்ந்து பேசிவருகிறது.
புதிய அரசியல் சட்டம்
இந்திய-இலங்கை உடன்பாட்டை அமல்படுத்தியிருந்தால் பெருமளவுக்கு உயிரிழப்புகள் நேர்ந்திருக்காது என்று அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறினார். புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்கு புதிய அரசியல் சட்டசபையை உருவாக்குவதற்கான தீர்மானத்தின் மீது 2016 ஜனவரி 9-ல் பேசுகையில் இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட இன்னும் இரு உடன்படிக்கைகள் 1957-ல் எஸ்டபிள்யுஆர்டி பண்டாரநாயக-எஸ்ஜேவி செல்வநாயகம் இடையிலான ஒப்பந்தம், 1965-ல் டட்லி சேனநாயகே-செல்வ நாயகம் இடையிலான ஒப்பந்தம் ஆகியவை. சிறிசேனா அப்படிப் பேசி ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘முன்னுரிமைப் பணிகள் பட்டியல் தயாரிப்புக் குழு’ இடைக்கால அறிக்கையைக் கூட தாக்கல் செய்யவில்லை. ஆனால் ஆறு துணைக் குழுக்கள் தங்களுடைய அறிக்கையை 2016 டிசம்பரில் அளித்துவிட்டன. வரைவு இடைக்கால அறிக்கை தயாராகியிருந்தாலும் வெவ்வேறு அரசியல் தலைவர்களின் நோக்கங்களுக்கேற்ப தாக்கல் செய்யப்படாமலேயே இருக்கிறது.
1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனப் படுகொலையால் ஏற்பட்ட பெரிய அவமானத்திலிருந்து இலங்கை அரசு தப்பிக்க இந்திய-இலங்கை உடன்பாடு ஒரு வாய்ப்பைத் தந்தது. அந்த உடன்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்ற உள்ளார்ந்த எண்ணம் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகளுக்கு இல்லை. 13-வது திருத்தம் மூலம் தமிழர்களுக்குக் கிடைத்த அரைகுறை உரிமைகளைக்கூட சேதப்படுத்தும் முயற்சிகள் இலங்கை அரசுகளால் மேற்கொள்ளப்பட்டன. போர்க்குற்ற நடவடிக்கைகளுக்காக உலக அளவில் கண்டிக்கப்படும் நிலையிலிருந்து தப்பிக்க சிறிசேன-ரணில் விக்கிரமசிங்கே அரசு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளிலும் இறங்கியிருக்கிறது. அதில் ஒன்றுதான் உள்நாட்டு அளவில் கருத்தொற்றுமை அடிப்படையில் தீர்வு காண்பது. அப்படி காணப்படும் கருத்தொற்றுமைகூட இந்திய-இலங்கை உடன்பாட்டின் அடிப்படையில் அமைந்தால்தான் வெற்றிகரமாக அமையும். இந்த முயற்சிகளில் இந்திய அரசின் ஒத்துழைப்பும் வெற்றிக்கு மிகமிக அவசியம்.