சிங்கள தேசியவாதம், தமிழ் குறும் தேசியவாதம் என்பன ஒரே திசைகளிலே பயணித்தன. அதுவும் ஒன்றுடன் ஒன்று மோதும் முடிவை  நோக்கியே நகர்ந்தன.

370

 

இலங்கைவாழ் தமிழர் சமூகம் தற்போது திருப்புமுனையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த அறுபது வருடத்திற்கும் மேலாக இச்சமுதாயத்தின் மேல் திணிக்கப்பட்டிருந்த இரட்டை வேட அரசியல் அதற்கான அதிக விலையைக் கொடுத்துள்ளது. ஒருபுறத்தில்  ‘தனிஈழம்’ எனவும், மறுபுறத்தில் ‘சமஷ்டி’ எனவும் ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ எனவும் பல்வேறு முரண்பட்ட குழப்ப அரசியலை  மக்கள் மீது விதைத்து ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்ற பிரிவினர் தமிழ் மக்களின் சமூக வாழ்வை சீரழித்ததுடன் இறுதியில் அவர்களே  அவர்களது சுயநலமிக்க அரசியலுக்கும் இரையாகிவிட்டுள்ளனர். இந்தநிலையில் தமிழர் சமூகம் தனது கடந்தகால அரசியலிலிருந்து  மீண்டெழ வேண்டு மெனில் தனது தவறுகளிலிருந்து அர்த்தமுள்ள பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும். இதன்மூலமே அரசியல்  விடுதலையையும் சமூக மேம்பாட்டையும் எட்ட முடியும்.

சுதந்திரத்தின் பின் 60 ஆண்டுகால தமிழர் அரசியலில் முப்பது ஆண்டுகள் அகிம்சை வழியும், முப்பது ஆண்டுகள் வன்முறை சார்ந்த  ஆயுத அரசியலாகவும் கழிந்துள்ளது. இந்த இரண்டு காலகட்டத்திலும் வெவ்வேறு அரசியல் தலைமைகள் தமிழ்த் தேசிய கோட்பாட்டை  நோக்கியே நகர்ந்தார்கள். இப்போது முடிவில் தமிழ் மக்கள் இப்போராட்டத்தினால் மிகவும் களைப்புற்று பலவீனப்படுத்தப்பட்டு இலங்கை  அரசினை நோக்கியே மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் கைவிடப்பட்டு விட்டார்கள். இந்த நிலைமைக்கு பெருமளவிலான காரண  கர்த்தாக்கள் தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகளே.

தமிழ் மக்களுக்குள் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டங்களின்போது மக்கள் தமது சக்திக்கு அப்பாற்பட்ட அளவிற்கு தமது சகல  வளங்களையும் வழங்கியிருந்த போதிலும் வார்த்தைகளால் வடிக்க முடியாத மனிதத் துயரங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டு  நின்றபோதிலும் அதனை சரியான வழியில் பயன்படுத்தி சாணக்கியமான முறையில் அரசியல் சமூக மேம்பாட்டை பெறும் ஆற்றலும்  அரசியல் தீர்க்கதரிசனமும் இத்தலைமைகளிடம் இல்லை என்பதை மிகத் தெளிவாகக் காணலாம். இன்றைய மோசமான வீழ்ச்சிக்கும்  தோல்விக்கும் காரணமென்ன? அரசியல் நெறியில் ஏற்பட்ட கோளாறுகள் என்ன? என்பது குறித்து மிகவும்  ஆழமான விரிவான அரசியல்  விவாதங்கள் நடாத்துவது தற்போது அவசியமாகி உள்ளது. அந்த  வகையில்தான் இக்கட்டுரையின் பங்களிப்பும்  அமைகிறது.

இலங்கையில் தேசியவாதம்

இலங்கை அரசியலில் தேசியவாதம் என்பது  பிரதான இயங்குவிசையாக தொடர்ந்தும் இருந்து வருகிறது. சுதந்திரத்திற்கு முற்பட்ட  காலத்தில் குடியேற்றவாத ஆதிக்கத்திலிருந்து தம்மை விடுவிப்பதற்காக தேசியவாதம் பயன்படுத்தப்பட்டது. இத்தேசியவாதம்  உள்ளடக்கத்தில் இனவாத கூறுகளைக் கொண்டிருந்த போதிலும் இடதுசாரிக் கட்சிகளின் வளர்ச்சியும் ஆளுமையும் இனவாத அடையாளத்தை பெருமளவில் தவிர்த்தும் தணித்தும் வைத்திருந்தன.

பிரித்தானிய குடியேற்ற ஆட்சியிலிருந்து முழு இலங்கையையும் விடுவித்துக் கொள்வதற்கான நிகழ்ச்சி நிரலே அன்றைய இடதுசாரிகளின்  போராட்டமாகவிருந்தது. சாமான்ய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, தேசிய வளங்களை ஏகாதிபத்தியவாதிகளின்  ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பது என்பன அரசியலில் பிரதானமாக விருந்ததால் இடதுசாரிகள் முன்னெடுத்த இப்போராட்டத்தில் மொழி,  இன, மத பேதமின்றி சகல மக்களும் கலந்து கொள்வது சாத்தியமாக விருந்தது. சிங்கள தேசியவாதம் இப்பரந்த போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்வதில் மாற்று வழிகளும் அவர்களுக்கு அன்று இருக்கவில்லை.

இடதுசாரிகளுக்கும் இத்தேசியவாதிகளுக்கும் இடையே ஐக்கியம், போராட்டம் என்ற அடிப்படையில் உறவுகள் இருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன வைத்திருந்த உறவுகள் இதனடிப் படையிலேயே  அமைந்திருந்தன.

சுதந்திரத்திற்கு பின்னான காலப்பகுதியை அடுத்து பாராளுமன்ற அரசியல் பலம் பெற்றதன் பின், சிங்களத் தேசியவாதம் வெறுமனே ஒரு சாராரின் கோட்பாடு என்ற எல்லையைத் தாண்டி நாட்டின் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கு விரோதமான போக்காக வளர்ச்சிபெற்றது.  சிங்களத் தேசியவாதம் சிங்களத் தேசம், பௌத்த தேசம் என்கிற கோட்பாடுகளை வரையறுத்தது. இவ்வாறு சிங்களத் தேசியவாதம்  அதிதீவிர நிலைப்பாட்டை எடுத்ததால் ஏனைய சிறுபான்மை இனங்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். இங்கு நாம் கவனிக்க வேண்டிய இன்னுமொரு விடயம் யாதெனில், தமிழ் மக்கள் மத்தியிலேயே குடியேற்ற ஆட்சியாளர்களின் சலுகைகளை அனுபவித்து வந்த  பிரிவினர் இந்த சிங்கள தேசியவாத அதிகார வர்க்கத்துடன் ஏதோ ஒருவகையில் கூட்டாகவும் இயங்கினர்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவ அரசியல் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக இனவாத அரசியலாக ஊக்கம் பெற்று வளர்ச்சி அடைந்ததன் விளைவாக, தமிழர் அரசியலில் ஒருபகுதி தமிழ் குறுந் தேசியவாத அரசியலாக மாற்றங்கண்டது. சிங்கள பேரினவாத அரசியல், தமிழ்  குறுந்தேசியவாத அரசியல் என எதிரும் புதிருமாக 1978ம் ஆண்டின் அரசியலமைப்பை அடுத்து வடிவ மெடுத்தன. நிறைவேற்று  அதிகாரமிக்க ஜனாதிபதி, விகிதாசாரப் பிரதிநிதித்துவம், இதன் ஊடான சிறிய இனவாதக் கட்சிகளின் அரசியல் பலம் என்பன இந்த  நிலைமை தீவிரமடையச் செய்தன.

நிறைவேற்று அதிகார முறைமை காரணமாக பாராளுமன்றம் செயலற்றதாக மாற்றப்பட்டது. இரு அதிகார மையங்களுக்கு இடையிலான  அரசியல் மோதல் நிலைமையை மேலும் சிக்கலாக்கியது. தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான தயக்கப்போக்கை தொடர்ந்தும்  கடைப்பிடித்துவந்த சிங்கள தேசிய கட்சிகளுக்கு, விகிதாசாரப் பிரதிநிதித்துவம் காரணமாக அதிகாரம் பெற்ற சிறிய இனவாதக்  கட்சிகளின்  போக்கும் தடைக்கற்களாக செயற்படும்  அவர்களது அரசியல் நிலைப்பாடுகளும் வாய்ப்பாகவே அமைந்தன. அரசியல் கட்டுமான அமைப்பிலுள்ள குளறுபடிகள், பிரதான கட்சிகளின்  இனவாத நிலைப்பாடுகள், பன்மைத்துவ, ஜனநாயகச் சூழலுக்கு எதிரான போக்குகள், ஏற்கெனவே தமிழர் சமூகத்திற்குள் நிலைகொண்டிருந்த குறுந்தேசிய வாதத்திற்கு ஊக்கியாக அமைந்தன. இந்த நிலைமைகள் ஐக்கிய  இலங்கைக்குள் வாழ முடியாது என்கிற தோற்றப்பாட்டை மேலும் இறுக்கி கடினமாக்க உதவின.

இராணுவ அணுகுமுறை

நாட்டில் காணப்பட்ட பொருளாதார, மற்றும்  அரசியல் பிரச்சனைகள் இராணுவ அணுகுமுறை என்ற இன்னொரு பரிமாணத்திற்கு எடுத்துச்  செல்லப்பட்ட விவகாரம் தனியான அம்சமாகும். தமிழ்ப் பிரதேசங்களில் காணப்பட்ட அரசியல் சார்ந்த வன்முறை பலமான ராணுவக் கட்டுமானமாக மாற்றம் பெற்ற போது அவ்வன்முறை தமிழ்ப் பிரதேசங்களில் காணப்பட்ட ஜனநாயக நிறுவனங்களை சீரழிக்கத்  தொடங்கியது. அரச அதிகாரிகள் சம்பளத்தை அரசாங்கத்திடமிருந்து பெற்ற போதிலும் நிர்வாக உத்தரவுகளை புலிகளிடமிருந்தே பெற்றனர்.  தமிழ்ப் பிரதேச நிர்வாகங்கள் தமது கட்டுப்பாட்டிற்குள் செயற்படுவதாகவும், அரச இறைமை அதிகாரம் நாடு முழுவதும் பிரயோகிக்கப்படுவதாகவும் பாசாங்கு காட்ட வேண்டிய நிலையில் இருந்த அரசு இச் சிக்கலான போக்கை அனுசரித்தே சென்றது.

ஆனாலும் அரச நிர்வாகம் என்பது நாட்டின் ஒரு பிரதேசத்தில் செயலற்று இருந்தது என்பதே உண்மை நிலையாகும். இந்நிலை மிக நீண்ட காலத்திற்கு இழுபட்டுச் செல்லச் செல்ல சிங்கள தேசியவாதம் தமக்கு ஏற்பட்டு வரும் தோல்வி என அதனைக் கருதத் தொடங்கியது.

சிங்கள தேசியவாதம், தமிழ் குறும் தேசியவாதம் என்பன ஒரே திசைகளிலே பயணித்தன. அதுவும் ஒன்றுடன் ஒன்று மோதும் முடிவை  நோக்கியே நகர்ந்தன. இரு சாராரும் போருக்கான முன்னெடுப்புகளை நோக்கிச் சென்றதன் விளைவே ராணுவ மயமாக்கலாகும். சர்வதேச அங்கீகாரம் கிடைத்ததாக கருதிய விடுதலைப் புலிகள் தலைமையிலான தமிழ் குறும் தேசியவாத சக்திகள் சிங்கள அதிகார வர்க்கமும்  அதன் ராணுவமும் பலவீனமான நிலையில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாகவும், இந் நிலையில்  தமது ராணுவ பலத்தை மேலும் அதிகரிப்பதன் மூலம் தமது தமிழீழக் கோரிக்கையை அடைந்துவிடலாம் எனவும் தப்புக் கணக்குப்  போட்டார்கள். இலங்கை ராணுவத்திற்குக் கிடைத்த தோல்விகள், அரசு மட்டத்திலே அதாவது ரணில், சந்திரிகா ஆகியோரிடையே ஏற்பட்ட தகராறுகள் அரசின் பலவீனமாகவும் கருதப்பட்டன. ராணுவமும், அரச கட்டுமானமும் ஆட்டம் கண்டுள்ளதாக கருதிய  விடுதலைப்புலிகள் தலைமை அதுவே போர் தொடுப்பதற்கான தருணம் எனவும் கருதியது. இதன் வெளிப்பாடே 2005ம் ஆண்டின் மாவீரர் தின உரையின் சாராம்சமாக அமைந்தது.

விடுதலைப்புலிகளை முற்றாக ஒழிக்க வேண்டுமென சிங்கள அதிகார வர்க்கம் தீர்மானித்த அதேவேளை அதனை நிறைவேற்றுவதற்கான தருணத்தை எதிர்பார்த்திருந்தது. விடுதலைப்புலிகள் ராணுவத்தின் மேல் கிளைமோர் தாக்குதல்கள், சாதாரண சிங்கள மக்கள் மீது  துப்பாக்கிச் சூடு என தினமும் செய்திகள் பத்திரிகைகளை நிறைத்தன. சாமான்ய மக்கள் அச்சத்தில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அரசு செயலற்று இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. பொறுமை காக்கும்படி அரசுத் தலைவர்கள் சமாதானம் கூறினார்கள். புலிகளின் தாக்குதல்கள் படிப்படியாக தினமும் அதிகரித்தபோது சிங்கள மக்கள் மத்தியிலே பெரும் வெறுப்பு உச்ச நிலையை அடைந்தது. இறுதியாக  சிங்கள மக்களின் நீர்ப்பாசன வசதிகளை மாவிலாறு அணைக்கட்டு மூலமாக புலிகள் தடுத்தபோது அதுவே ராணுவத் தாக்குதல்களுக்கான  ஆரம்பமாகவும் அமைந்தது.

பயங்கரவாதம் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியிலே நிலவிய அச்சம் பயங்கரவாதத்திற்கெதிரான இறுதி யத்தத்தில் சிங்கள  இளைஞர்களை இணைப்பதற்கான புறச் சூழலை வழங்கியது. பயங்கரவாதம், சிங்கள தேசியவாதம், சிங்கள பேரினவாதம், பௌத்தமத மேலாதிக்கம் என தனித்தனியாக செயற்பட்ட சக்திகள் யாவும் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் அணி திரண்டன. ராணுவம் இதற்கான தலைமையை வழங்கியது.Sivalingam1

இரு சாராருமே போருக்குத் தயாராகிய அதேவேளை நாட்டின் அரச யந்திரத்தையும் முழுமையாக ராணுவ நடவடிக்கைக்கு ஏற்ற வகையில் மாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக ஊடகத்துறை முழுமையான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டன.  பத்திரிகையாளர்கள், அரசியல் எதிரிகள் தாக்கப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். முக்கிய பிரமுகர்கள்,  வர்த்தகர்கள், சிவிலியன்கள் கடத்தப்பட்டார்கள். பொலீஸ், ராணுவம் என்பன சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயற்படத் தொடங்கின. சிங்கள தேசியவாதம் ஏனைய தேசிய இனங்கள் மீதான தாக்குதலைத் தொடுத்து தன்னைத் தீவிர பேரினவாத மட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

இன்றைய இலங்கை

இனவாத அரசியலின் தீவிர போக்கு நாட்டின் பாரம்பரிய அரசியல் நிர்மாணத்தை மிகவும் கீழான நிலமைக்கு எடுத்துச் சென்று அரசு  என்பது தோல்வி அடைந்த ஒன்று என வர்ணிக்கும் அளவுக்கு மாற்றியுள்ளது. ஆசியாவிலே மிக நீண்ட கால ஜனநாயக நாடு எனக்கருதப்பட்ட இலங்கை தற்போது மனித உரிமை மீறல்களில், பத்திரிகையாளர்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற நாடு என்ற வரிசையில் வைக்கப்படும் அளவுக்கு மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டின் அரசியல் சூழல் அண்மைக்காலமாக புதிய மாற்றம் ஒன்றை நோக்கி நகர்ந்தேவிட்டுள்ளது. அதாவது அரசியல் கட்டுமானங்களில்  ராணுவ ஆதிக்கம் பலமடைந்து வருகிறது. ராணுவ உயர் அதிகாரிகள் அரசியல் பேசும் அளவுக்கு மாற்றங்கள் காணப்படுகின்றன. அத்துடன்  ராணுவ அதிகாரிகள் சிவில் அதிகாரிகளின் பதவிகளை நிரப்பி வருகின்றனர். பாதுகாப்பு என்ற அடிப்படையில் சிங்கள பேரினவாத அரசியல் நிகழ்ச்சி நிரல் அரங்கேறி வருகிறது. இதனால் நாட்டின் சிறுபான்மைக் குழுக்கள் அச்சமடைந்துள்ளன. குறிப்பாக விடுதலைப்புலிகளைத்  தோற்கடித்தது இலங்கை ராணுவம் எனக் குறிப்பிடுவதை விடுத்து சிங்கள பௌத்த இளைஞர்களின் தியாகங்களே நாட்டைக் காப்பாற்றியதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது தேசியவாதத்தின் புதிய பரிமாணத்தை உணர்த்துகிறது. விடுதலைப்புலிகளின்  பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் மூலம் நாட்டிற்குப் புதிய சுதந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக விபரிக்கப்படுகிறது. இப்போக்குகள் உள்நாட்டு அரசியலில் மட்டுமல்ல வெளிநாட்டு அரசியலிலும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கு நாடுகளின் பிடியிலிருந்து  விலகிச் செல்வதாகக் காட்டும் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மேற்குலக நாடுகள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தமை, ஐரோப்பிய யூனியன் சந்தை வசதிகளை சலுகை அடிப்படையில் பயன்படுத்தும் ஏற்பாடுகளுக்கு தடையாக இருந்தமை, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய உதவிகளைத்  தாமதப்படுத்தல் என்பன இலங்கையின் மேற்குலக போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை உறுதி செய்கின்றன. அதுமட்டுமல்லாது சமீப  காலமாக இலங்கை அரசு நட்புப் பாராட்டும் அரசுகள் மனித உரிமை மீறல்களுக்கு மிகவும் பேர் போன அரசுகளாகும். ஈரான், லிபியா,  பாகிஸ்தான், சீனா, பர்மா போன்ற நாடுகளோடு இலங்கையின் உறவுகளும், கூட்டுகளும் ஓர் ஆரோக்கியமான உறவுகளாக கருத முடியவில்லை.

இலங்கை அரசியலில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கான அடிப்படைகளாக அங்கு காணப்படும் மிகவும் பிற்போக்குத் தன்மையுள்ள  தேசியவாதமே காரணமாக அமைகிறது. தமிழ் குறும்தேசியவாதத்தில் காணப்பட்ட பாசிச குணாம்சங்கள், சமூக விரோத சக்திகளினதும்,  பிற்போக்கு சுயநலக் கும்பல்களின் இருப்பிடமாக மாறிய போராட்டத்தலைமை, இதற்கு ஆதாரமாக வெளிநாடுகளில் செயற்பட்ட சர்வதேச அரசுகள், இலங்கை அரசு தொடர்பாக தற்போது நடந்து கொள்ளும் முறை அதனை இன்னொரு பக்கத்திற்கு தள்ளியுள்ளது. புதிய  நட்பு  நாடுகளாக தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான், ஈரான், லிபியா, சீனா, பர்மா போன்ற நாடுகளின் அரசுகள் உள்நாட்டில் மிகவும் ஜனநாயக விரோத கட்டுமானங்களைக் கொண்டனவாகும். ராணுவமே அரச கட்டுமானங்களில் ஆதிக்கம் செலுத்தும் போக்கைக் கொண்டன. இதனால்  மனித உரிமை மீறல் இந் நாடுகளில் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. இவ்வாறான மிகவும் பாரதூரமான ஜனநாயகத் தன்மையற்ற  அரசுகளோடு கூட்டுகளை உருவாக்கி வரும் போக்கு மிகவும் அச்சத்தைத் தருவதாகும். இக் குழப்பமான அரசியல் நிலமைகளின் இயக்கு  சக்தியாக தேசியவாதமே காணப்படுகிறது. சிங்கள அரசியலில் சமீபத்தில் எற்பட்டு வரும் மாற்றங்கள் நாட்டின் கடந்த காலங்களில்  காணப்படாத அம்சங்களாகும். இவை குறித்து பல தரப்பட்ட வாதங்கள் இல்லாமலில்லை.

குறிப்பாக மேற்குலக நாடுகளின் சந்தையாக செயற்பட்டு வந்த இலங்கை தற்போது அந்தக் கூட்டிலிருந்து வெளியேறி வருவதாகவும்,  இதனால் நாடு ஏகாதிபத்தியப் பிடியிலிருந்து விலகுவதாகவும் கூறி இவ்வாறான அடிப்படை மாற்றத்தைப் பலப்படுத்த வேண்டுமென்ற  வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இவ் வாதங்களில் சில நியாயங்கள் காணப்பட்ட போதிலும் மகிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சிக்  காலத்தில் காணப்படும் அதாவது சில வருடங்களாக மேற்கொள்ளப்படும் மாற்றங்களை மட்டும் வைத்து தேசத்தின் முழுமையான  போக்கைத் தீர்மானிக்க முடியுமா? என்பதும், இத்தகைய மாற்றங்கள் கொள்கை ரீதியான தீர்மானங்களின் விளைவாக ஏற்பட்டதா? அல்லது  சிக்கலான பிரச்சனைகளிலிருந்து தற்காலிகமாக விடுபடுவதற்காக எடுக்கப்பட்ட முடிவுகளா? என்பது இன்னமும் தெளிவாக இல்லை.  அத்துடன் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடம் கடன் வசதியைக் கோரி நிற்கும் அரசு  பொருளாதார கட்டுமானங்களில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துமா? என்பது கேள்வியாக உள்ளது.

ஆட்சியாளர்கள் தாம் எதிர் நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு தமது அμகுமுறைகளில்  தேசியவாத அம்சங்களைப் புகுத்தி மக்களின் கவனத்தை திருப்ப எடுக்கும் உத்திகளாகவே இவை உள்ளன. தமிழ் குறும் தேசியவாதமும், அதன் வன்முறை சார்ந்த அரசியலும் தேசிய பொருளா தாரத்தையும், அரசுக் கட்டுமானத்தையும் மிகவும் மோசமான நிலைக்குத்தள்ளியுள்ளது என்பதே யதார்த்தமாகும். நாட்டில் காணப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் எதேச்சாதிகார சக்திகளின் இருப்பிடமாக மாறியமைக்கு தற்போதுள்ள அரசியல் அமைப்பு பிரதான காரணம் என்பதை நாம் ஏற்றாக வேண்டும். இதனால் ஓர் குழுவினரின்  ஆதிக்கத்தின் இருப்பிடமாக அரசு யந்திரம் மாறியுள்ளது. பயங்கரவாத ஒழிப்பு என்ற  போர்வையில் இடம் பெறும் இந் நடவடிக்கைகள் அரசியல் அமைப்பின் ஏனைய செயற்பாடுகளை முழுமையாக முடக்கி ஓர் ராணுவ ஆட்சியை ஒத்த நிலமைகளை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த 30 வருட காலமாக நாட்டில் இடம்பெறும் வன்முறை சார்ந்த அரசியல் போக்கு சிங்கள தேசியவாத சக்திகளின் இருப்புக்கு மிகவும் ஊக்கமளித்துள்ளது. ராணுவ மயமாக்கல் என்பது சகல மட்டங்களிலும் நடந்தேறுகிறது. இவ் ராணுவ  மயமாக்கல் தேசியவாதம் கலந்த க லவையாக மாறி வருவதால் சிறுபான்மை மக்களிடையே மிகுந்த அச்சம் எற்பட்டுள்ளது.

சிங்கள பகுதிகளில் தாண்டவமாடும் சிங்கள பௌத்த மத மேலாதிக்க சிந்தனைகள் சிங்கள கிறிஸ்தவர்களை, முஸ்லிம்களை மிகவும்
இக்கட்டான நிலைக்குத் தள்ளியுள்ளது. எனவே நாட்டில் வாழும் மக்கள் மொழி ரீதியாக மட்டுமல்ல மத ரீதியான சிறுபான்மையினரும்  சிங்கள தேசியவாத எழுச்சியினால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இலங்கையின் எதிர்காலம் குறித்து நாம் தற்போது சிந்திப்பதாயின் தேசியவாத  சிந்தனைகளின் தாக்கங்கள் குறித்து விரிவாக பேச வேண்டியுள்ளது. பல் தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் ஜனநாயகம் நிலைக்க  வேண்டுமாயின் பெரும் பான்மை இனம் குறித்துப் பேசுவதா? அல்லது நாட்டில் வாழும் சகல பிரஜைகளினதும் சம உரிமை பற்றிப்  பேசுவதா? என்பதை விவாதிக்க வேண்டும்.

இங்கு இறைமை என்பது பாராளுமன்றத்தின் இறைமையா? அல்லது மக்களின் இறைமை அதிகாரமா? மக்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதா? அல்லது அரசியல்வாதிகளின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதா? அரசியல் அமைப்பு என்பது பன்மைத்துவ போக்கைக் கொண்டிருக்க வேண்டுமா? அல்லது பெரும்பான்மை இனத்தின் தயவின் அடிப்படையில் தீர்மானிக்கும் போக்கைக் கொண்டிருக்க  வேண்டுமா? என்பன நம்முன்னுள்ள முக்கியமான கேள்விகளாகும்.

இங்கு பன்மைத்துவம் என்பது இனங்கள் சார்ந்தவை மட்டுமல்ல, பெண்களின் உரிமை, சிறுவர்களின் உரிமை, அங்கவீனர்களின் உரிமை  என பல்வேறு அம்சங்கள் பற்றிப் பேசவேண்டியுள்ளது. இவை பற்றிய வாதங்கள் எழுப்பப்படும் போதுதான் தேசியவாதம் அதிகாரமற்றதாக  கீழிறக்கப்பட முடியும்.

சுயநிர்ணய உரிமை என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. தமிழ் தேசிய அரசியலில் காணப்படும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகள் ஒரு சாராரின் நலன்களை மையப்படுத்தவதாகவே அமைந்துள்ளன. சிங்கள தேசியவாதத்தின் நடைமுறைக்கும் கோட்பாட்டிற்கும் இது விலக்காக அமையவில்லை. இதுவே அதன் தோல்விக்கும் காரணமாக அமைந்தது. இதிலிருந்த வெளியேறி அகன்ற இலங்கைக்கள் சம உரிமையோடு வாழ்வதற்கு புதிய கோட்பாடுகளை அதாவது சமத்துவம், சமாதானம், பன்மைத்துவம், மனித உரிமை என்பவற்றை மையமாகக் கொண்ட சுயநிர்ணய உரிமையை நோக்கி எமது பார்வைகள் திரும்ப வேண்டும்.

SHARE