கே.பியைக் கைதுசெய்யவில்லை. இது பாரிய அநீதியாகும். சட்டம் ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு ஏற்றாற்போல செய்யப்பட்டது என்பதே இதனூடாகத் தெரிகிறது. இதற்கு எதிராகத்தான் நாம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளோம்-JVP

659

1978712952kp5

LTTE_kp-03-300x130

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் பொறுப்பாளரும் இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் என அறிவிக்கப்பட்டவருமான கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைதுசெய்ய உடன் உத்தரவிடுமாறு வலியுறுத்தி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்றுத் தாக்கல் செய்தார். இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், குடிவரவு – குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர், இராணுவத் தளபதி, கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதி, பயங்கரவாத விசாரணைப் பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர்கள், சட்டமா அதிபர், கே.பி. ஆகிய 8 பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டடுள்ளனர்.

மனுவைத் தாக்கல் செய்ததன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட விஜித ஹேரத் எம்.பி., கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் என்பவர் முன்னைய அரசால் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், அவருக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இன்று அவர் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றார். இருப்பினும், எந்த நீதிமன்றத்திலும் அவர் முன்னிலைப்படுத்தப்படவில்லை.
அவருக்கு எதிராக பாதுகாப்பு அமைச்சினால் பல குற்றச்சாட்டுக்கள் அண்மைக் காலத்தில் முன்வைக்கப்பட்டிருந்தன். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால்தான் நாம் மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (நேற்று) ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளோம். கே.பியை உடனடியாகக் கைதுசெய்து, அவர் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் ஊடாக முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என அந்த ரிட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவர் பல குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என்றே ஊடகங்களில் அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேசத்தாலும் அவருக்கு எதிராக பலவகையான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அவரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும்.

அத்துடன், சர்வதேச ரீதியில் பணம், தங்கம் மற்றும் சர்வதேச கடற்பரப்பில் கப்பல் இருந்தாகக் கூறப்படுகிறது. ஆனால், இன்றுவரை இவை தெளிவாக வெளிக்கொணரப்படவில்லை. அவரிடம் எவ்வளவு பணம் இருந்தது? எவ்வளவு தங்கம் இருந்தது? கப்பல் இருந்தது என்பது தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படவேண்டும். கே.பி. போன்றோர் சுதந்திரமாக இருக்க, வடக்கு, கிழக்கைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் இளைஞர்கள் அரசியல் வைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புலிகளின் கட்டளைகளை ஏற்ற, கே.பி. போன்றோரின் கட்டளைகளை ஏற்றவர்கள்தான் இவர்கள். அவர்களுக்கு எதிராக அரசு பல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஆனால், கே.பிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை.

ராஜபக்ஷ அரசு கே.பியைப் பாதுகாத்தது மட்டுமன்றி, அவரிடமிருந்த பணம், தங்கம், கப்பலை என்ன செய்தது என்பதே மக்களிடம் உள்ள கேள்வியாக உள்ளது. உள்நாட்டிலுள்ள மக்கள் மட்டுமல்ல, வெளிநாடுகளிலுள்ள மக்களுக்கும் இந்தக் கேள்வி இருக்கிறது. வடக்கு, கிழக்கிலுள்ள அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்து தண்டனை வழங்கியுள்ளனர். ஆனால், கே.பியைக் கைதுசெய்யவில்லை. இது பாரிய அநீதியாகும். சட்டம் ராஜபக்‌ஷ குடும்பத்துக்கு ஏற்றாற்போல செய்யப்பட்டது என்பதே இதனூடாகத் தெரிகிறது. இதற்கு எதிராகத்தான் நாம் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளோம்.

இந்த ரிட் மனுவை விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்து, பொலிஸ்மா அதிபரூடாக அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவரிடமிருந்த பணம், தங்கம், கப்பல் ஆகியவற்றை மக்கள் உடைமையாக்க வேண்டும். இதனூடாக சட்டம் நிலைநாட்டப்படவேண்டும்

SHARE