இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்-

466
  • இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்-இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

    யாழ்நகரில் இருந்து சில மைல் தூர தொலைவில் உள்ள ஒரு மீனவர் கிராமம். நடுநிசியைக் கிழித்துக் கொண்டு கரையை விட்டு அகல்கின்றது ஒரு மீன்பிடிப் படகு. படகோட்டிகள் மட்டுமே வழக்கமாக கடற்தொழில் ஈடுபடுபடுவர்கள். சுமார் இருபது பேரளவில் இருந்த பிற பயணிகள் அனைவரும், இந்தியாவுக்கு தப்பிச் செல்லும் அகதிகள்.
    1987 ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு சில மாதங்கள் முந்திய காலகட்டம். பருத்தித்துறை முகாமில் இருந்து புறபட்ட இலங்கை இராணுவம் வடமராட்சிப் பிரதேசத்தை முற்றாக கைப்பற்றி இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஏனைய யாழ் குடாநாட்டின் பகுதிகளும் இராணுவம் வசம் வந்து விடும் என்ற அச்சம் நிலவியது. வடமராட்சியை தாண்டி இராணுவம் வராது என்று சிலர் அடித்துக் கூறினார்கள். இருப்பினும் போர் தீவிரமடைவதற்கு முன்னம், இந்தியா சென்று விடத் துடித்தார்கள் படகில் இருந்த அகதிகள்.

    1987 ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு சில மாதங்கள் முந்திய காலகட்டம். பருத்தித்துறை முகாமில் இருந்து புறபட்ட இலங்கை இராணுவம் வடமராட்சிப் பிரதேசத்தை முற்றாக கைப்பற்றி இருந்தது. புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஏனைய யாழ் குடாநாட்டின் பகுதிகளும் இராணுவம் வசம் வந்து விடும் என்ற அச்சம் நிலவியது. வடமராட்சியை தாண்டி இராணுவம் வராது என்று சிலர் அடித்துக் கூறினார்கள். இருப்பினும் போர் தீவிரமடைவதற்கு முன்னம், இந்தியா சென்று விடத் துடித்தார்கள் படகில் இருந்த அகதிகள்.

    இதற்கு முன்னம் கிளம்பிய அகதிகளின் படகுகளை நோக்கி இலங்கை கடற்படையினர் சுட்டதாகவும், அகப்பட்ட அகதிகளை வெட்டியதாகவும் வதந்திகள் உலாவின. இருப்பினும் உயிரைக் கையில் பிடித்த படி, அபாயகரமான கடற்பயணத்திற்கு தயாரானவர்கள். அகதிகளாக வெளியேறத் துடித்தவர்கள் பெரும்பாலும், யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியை சேர்ந்தவர்கள். மீனவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் முதல், மத்திய தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் வரை பல தரப்பட்டவர்கள். வசதி குறைந்தவர்கள், போர்ச் சூழலில் இருந்து தப்பி இந்திய அகதி முகாமில் பாதுகாப்பாக வாழலாம் என நம்பினார்கள். வசதி படைத்தவர்கள், இந்தியாவில் இருந்து இலகுவாக வெளிநாட்டுக்குப் போகலாம், அல்லது படிப்பைத் தொடரலாம் என நம்பியவர்கள்.

    அகதியாக சென்றாலும், சில காலம் சமாளிப்பதற்கு பணம் வைத்திருக்க வேண்டிய தேவையை எல்லோரும் உணர்ந்திருந்தனர். புகலிடம் கோருவது இந்தியாவில் அல்லவா? அதனால் வசதிக் குறைபாடுகளையும் முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தனர். இந்தியாவில் அப்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தார். தாராளப் பொருளாதாரக் கொள்கை எட்டிப் பார்க்காத காலம் அது. இந்தியர்கள் உள் நாட்டு உற்பத்திகளையே பயன்படுத்த வேண்டிய நிலை. அதற்கு மாறாக, இலங்கையில் ஏற்கனவே சந்தை திறந்து விடப்பட்டிருந்தது. ஜப்பானியப் பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. இலங்கையில் சாதாரணமாகக் கிடைக்கும் ஜப்பானிய வீடியோ பிளேயர் சாதனத்தை இந்தியா கொண்டு சென்று இரு மடங்கு இலாபத்திற்கு விற்க முடிந்தது. இதனால் சில வசதியான அகதிகள், தம்முடன் ஜே.வி.சி. வீடியோ பிளேயர் எடுத்துச் சென்றனர். வசதியற்றவர்கள் ஆயத்த ஆடை உற்பத்திக்கு அவசியமான, YKK ஜிப் வாங்கிச் சென்றனர். இறுக்கமான இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக, மேற்குறிப்பிட்ட பொருட்களுக்கு இந்தியாவில் அதிக கிராக்கி இருந்தது. இவற்றை விட இலங்கை ரூபாய் தாள்களை மட்டும் எடுத்துச் சென்றவர்கள், அவற்றை மாற்றுவதற்கு சிரமப் பட்டனர். மாற்றினாலும், நாணயமாற்று விகிதம் நியாயமானதாக இருக்கவில்லை.

    அகதிகளை ஏற்றிச் சென்ற படகோட்டிகளும், கடத்தல் வியாபாரத்தில் ஈடுபட்டதை அவர்களது கதைகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது. படகில் இருந்த பெரிய பொதிகள் அவர்களுடையதாகவே இருந்தன. அகதிகளை ஏற்றிச் செல்வதும் அவர்களுக்கு அதிக வருமானத்தை ஈட்டித் தரும் தொழிலாக இருந்தது. ஒரு அகதி, 600 – 1000 இலங்கை ரூபாய்கள் கொடுக்கத் தயாராக இருந்தால் மட்டுமே, அக்கரைக்கு ஏற்றிச் சென்றனர். அதே நேரம், சில அகதிகள் இந்தியாவில் இருந்து திரும்பி வந்து கொண்டுமிருந்தனர். திரும்பி வருவதற்கு 300 -400 ரூபாய்கள் மட்டுமே. திரும்பி வருவதற்கு பணம் இல்லா விட்டால், கடன் சொல்லலாம். ஆனால் இந்தியா போவதற்கு மட்டும், பணமில்லாத யாரையும் ஏற்றிச் சென்றதாக நான் அறியவில்லை.

    நிலா வெளிச்சம் கூட இல்லாத கும்மிருட்டு. கண்ணுக்கெட்டிய தூரம் வரை கடலைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. கடலும் எப்போதும் அமைதியாக இருப்பதில்லை. கடல் கொந்தளிப்பும், ஆளுயர எழும் அலைகளும் சிறிய படகை கவித்து விடும். நாங்கள் சென்ற படகு ஆழ்கடலில் பயணம் செய்வதற்கு உகந்ததா, அன்றில் திருத்த வேலைகள் செய்யப்பட வேண்டியிருந்ததா தெரியவில்லை. திடீரென படகுக்குள் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. படகில் எங்கோ ஓட்டை, அல்லது வெடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். எம்மைச் சுற்றி கடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல ஊறிக் கொண்டிருந்த கடல் நீர், முழங்காலளவு மட்டத்திற்கு வந்து விட்டது. படகில் இருந்த இளம் வயது ஆண்கள் வாளிகளால் தண்ணீரை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தனர். எவ்வளவு தண்ணீரை வாரி இறைத்தாலும், நீர் மட்டம் குறைவதாகத் தெரியவில்லை.

    சுமார் மூன்று, நான்கு மணி நேரமாக கடலோடு போராடிக் கொண்டிருந்தோம். இது போன்ற அனுபவங்களைப் பெற்ற படகோட்டிகளும் அன்று நம்பிக்கை இழந்து விட்டார்கள். உதவிக்கு யாரும் வராவிட்டால், படகு மூழ்கிடும் அபாயம் காணப்பட்டது. பயணிகள் எல்லோரும் இஷ்ட தெய்வங்களை வேண்டி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். நாங்கள் இன்னும் இலங்கை கடல் எல்லைக்குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதால் மேலதிக கிலி பிடித்தாட்டியது. ஒரு வேளை இலங்கை கடற்படை எம்மை கண்டு விட்டால், முதலில் சுட்டு விட்டுத் தான் விசாரிப்பார்கள். வெகு தூரத்தில் இலங்கைக் கடற்படைக் கப்பல்களின் வெளிச்சம் தெரிந்தது. இருப்பினும், தூரத்தில் இருட்டில் தத்தளிக்கும் சிறிய படகை அவர்களால் இலகுவாக அடையாளம் கண்டு கொள்ள முடியாது, என்று படகோட்டிகள் ஆறுதல் சொன்னார்கள்.

    படகோட்டிகளும், பயணிகளும் நம்பிக்கை இழந்து கொண்டிருந்தார்கள். அன்று கடலில் ஜலசமாதியாகி விடுவோம் என்றே பலரும் நினைத்தார்கள். தண்ணீரை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் மட்டும் விடா முயற்சியுடன் போராடிக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையே பொழுது விடிந்து விட்டது. ஒருவாறு இந்திய கடல் எல்லையை அண்மித்து விட்டோம். தூரத்தில் இந்திய மீனவர்களின் மிகப்பெரிய ட்ரோலர் படகுகள் தென்பட்டன. தூரத்தில் எமது சைகையை கண்ணுற்று ஒரு இந்தியப் படகு எம்மருகே வந்தது. இந்திய மீனவர்கள் எம்மை தமது படகில் ஏற்றிக் கொண்டனர். நாம் வந்த படகை ஒட்டி வந்த படகோட்டிகள், அதனை நடுக்கடலில் கைவிட வேண்டியேற்பட்டது. படகில் இருந்த தமிழக மீனவர்கள், தாம் பிடித்து வைத்திருந்த இறால்களை புகை போக்கியில் சுட்டு உண்ணத் தந்தார்கள். சில மணி நேரத்தில் இராமேஸ்வரம் கரையில் கொண்டு சென்று இறக்கி விட்டார்கள்.

    இராமேஸ்வரம் கடற்கரையில் இறக்கியவுடன், அகதிகளை பதியும் காரியாலயம் உள்ள திசையைக் காட்டி நடக்கச் சொன்னார்கள். இலங்கையில் இருந்து எடுத்து வந்த உடமையை கையில் பிடித்துக் கொண்டு, வெறுங்காலுடன் கடற்கரை மணலில் ஓட்டமும், நடையுமாக சென்றோம். சில நிமிடங்களில், சேற்று மணலில் காலைப் புதைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. கீழே குனிந்து பார்த்தால், பாதங்களில் மனித மலம் அப்பிக் கொண்டிருந்தது. அந்தக் கடற்கரையில் எந்தப் பக்கம் கால் வைத்தாலும், மலத்தில் மிதிக்காமல் போக முடியவில்லை. சுமார் இரண்டு கி.மி. தூரமாவது நடந்து சென்று, அகதிகளைப் பதியும் அலுவலகத்தினுள் நுழைந்த பின்னர் தான் நிம்மதிப் பெருமூச்சு வந்தது. அங்கிருந்த அதிகாரிகள் முதலில் எமது பெயர், விபரங்களை பதியும் வேலையில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருந்தனர். இலங்கைக் கடற்கரையில் இருந்து கிளம்பிய நேரம் முதல் எதுவும் சாப்பிடவில்லை. கடலில் போராடிக் கொண்டிருந்த நேரம் மறந்திருந்த பசி இப்போது வயிற்றைக் கிள்ளியது.

    இராமேஸ்வரத்தில் யாத்திரீகர் மடம் ஒன்றில் தங்க வைத்தார்கள். அங்கேயே குளிக்கும் வசதியும், உணவும் கிடைத்தது. முதல் முழுவதும் கண் விழித்து பாக்கு நீரிணையை கடந்த களைப்பு, அன்றிரவு நிம்மதியாக உறங்க முடிந்தது. இருப்பினும் ஊரை விட்டு, உறவுகளை விட்டு வெகு தூரம் வந்து விட்ட உணர்வு, நெஞ்சை வருடியது. எல்லோர் மனதிலும் இனம் புரியாத சோகம் கவிந்து கொண்டிருந்தது. மறு பக்கம், இனி வரும் நாட்களை உயிரச்சம் இன்றி நிம்மதியாக கழிக்கலாம் என்றும் ஆறுதல் கூறிக் கொண்டனர். நாம் தங்கியிருந்த மடத்தில், வேறு படகுகளில் வந்த அகதிகளும் தங்கியிருந்தனர். எல்லோரையும் நாளை ரயிலில் ஏற்றி மண்டபம் முகாமுக்கு அனுப்புவார்கள் என்று பேசிக் கொண்டனர். மண்டபம் முகாமில் வைத்து தான், தமிழ் நாட்டில் எந்த மூலையில் குடியிருத்துவது என்று தீர்மானிக்கப்படும். ஒரே குடும்பமாக பதிந்து கொண்டவர்களை தவிர, பிறரை வெவ்வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.

    ராமேஸ்வரம் ரயில் நிலையம். மண்டபம் செல்லவிருக்கும் அகதிகள் அனைவரையும் ரயிலில் ஏற்றினார்கள். குறைந்தது ஒரு பெட்டியிலாவது இராமேஸ்வரத்தில் என்னோடு ஒன்றாக தங்கியிருந்த அகதிகள் ஏறிக்கொண்டனர். ரயில் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மற்ற பெட்டிகளிலும் ஈழத்து அகதிகள் இருப்பதை தெரிந்து கொண்டோம். இராமேஸ்வரம் தீவு பெரியது என்பதால், ஒரு முனையில் இருந்து மறு முனை செல்வதற்குள் பல தரிப்பிடங்களில் ரயில் நின்றது. தங்கச்சி மடம் என்ற ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் சிக்னல் கிடைக்காததால் ரயில் குறைந்தது ஒரு மணி நேரமாவது தாமதித்து. சில பயணிகள் வெளியே இறங்கி தண்டவாளத்திற்கு அருகில் ஓய்வெடுத்தார்கள். திடீரென சில இளைஞர்கள் இன்னொரு பெட்டியில் இருந்து எமது பெட்டிக்கு வந்து, எம்மோடு பேச்சுக் கொடுத்தார்கள். அவர்களைப் பார்த்தால், நீண்ட காலமாக இந்தியாவில் வாழும் ஈழத்து இளைஞர்கள் போலத் தோன்றியது. “நீங்கள் புதிதாக வந்த அகதிகளா? உங்கள் ஊரில் இப்போது என்ன நடக்கிறது?” சாதாரண சுகம் விசாரிப்புகளை தாண்டி, அரசியல் கேள்விகள் எழுந்தவுடன் எமது மனதுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. யார் இவர்கள்? இவர்களுக்கு என்ன வேண்டும்?

    இராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட புகையிரவண்டி பாம்பன் பாலத்தை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. நிலக்கரியில் ஓடும் புகையிரத வண்டியை எனது வாழ்க்கையில் முதன் முதலாக அப்போது தான் பார்க்கிறேன். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து, இலங்கையில் நீராவி எஞ்சின் பயன்படுத்தி வந்தனர். புகையிரதவண்டியின் படத்தை புத்தகத்தில் மட்டுமே பார்த்திருந்தேன். இப்போது அதிலே பயணம் செய்வதும் ஒரு சுகானுபவம். ரயிலின் வேகம் அதிகம் இல்லை என்பதால், கதவடியில் நின்றவாறே இயற்கையை இரசித்துக் கொண்டு வர முடிந்தது. ரயில் திரும்பும் போதெல்லாம், என்ஜினில் இருந்து கிளம்பும் புகை முகத்தில் வந்து அடித்தது. எனது அகதி நண்பர்கள் இருந்த பெட்டிக்குள் திரும்பி வந்து உட்கார்ந்தேன்.

    அடுத்த பெட்டியில் இருந்து வந்து அரசியல் கதை பேசிச் சென்ற புதியவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். “மந்திரியாரே, மாதம் மும்மாரி பொழிகின்றதா?” என்று நாடக அரசர்கள் விசாரிப்பதைப் போல, “தமிழீழத்தின் இன்றைய நிலை என்ன?” என்று விசாரித்திருக்கிறார்கள். “இயக்கப் பெடியள் போல இருக்கு” பக்கத்தில் இருந்த நபர் காதுக்குள் கூறினார். 1986 ம் ஆண்டில் யாழ் குடாநாட்டில், புலிகள் அமைப்பினர் பிற விடுதலை இயக்கங்களை தடை செய்திருந்தனர். முதலாவதாக டெலோ இயக்கம் தடை செய்யப்பட்ட காலத்தில் ஒரு குட்டி யுத்தம் நடைபெற்றது. அடுத்தடுத்து தடை செய்யப்பட்ட புளொட், ஈபிஆர்எல்ப் போன்ற இயக்கங்கள் சகோதர சண்டையை தவிர்த்துக் கொண்டனர். கீழ்மட்ட போராளிகளைத் தவிர முக்கிய பிரமுகர்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டனர். இந்திய அரசு, பிற்காலத்தில் இவர்களை தனது நலன்களை நிலைநாட்ட பயன்படுத்திக் கொண்டது.

    அன்றைய தமிழ் மக்கள் புலிகளையோ, பிற இயக்கங்களையோ வேறு வேறாகப் பார்க்கவில்லை. ஏனென்றால், ஈழத்தில் பல குடும்பங்களின் உறுப்பினர்கள் எல்லா இயக்கங்களிலும் இருந்தனர். அதனால் அவர்கள் பார்வையில் அனைத்தும் விடுதலை இயக்கங்கள் தான். இராமேஸ்வரம் ரயிலில் நடந்த உரையாடலையும் அந்தப் பின்னணியில் பார்க்கப்பட வேண்டும். அகதிகள் யாரும் அவர்களை சந்தேகத்திற்குரிய நபர்களாக கருதவில்லை. ஈழப்போராட்டம் நடக்கப் போகும் காலம் முழுவதும், தமிழ் சகோதர யுத்தமும் தொடரும் என்பதை மண்டபம் முகாம் வந்த பின்னர் தான் உணர்ந்து கொண்டோம். இந்திய நடுவண் அரசும், அதனை எண்ணையூற்றி வளர்க்கும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தது.

    இராமேஸ்வரம் தீவை இந்திய உப- கண்டத்துடன் இணைக்கும் பாம்பன் பாலத்தை ரயில் கடந்து வந்தது. மனிதன் கட்டிய உலக அதிசயமான பாம்பன் பாலத்தை பார்த்து வியந்து கொண்டிருக்கும் பொழுதே, மண்டபம் ரயில் நிலையம் வந்து சேர்ந்து விட்டோம். ரயிலை விட்டு இறங்கியவுடனேயே ஒரு மிகப்பெரிய முகாம் கண்ணுக்கு முன்னால் விரிந்தது. அந்தச் சுற்றாடலில் இந்தியக் குடியிருப்புகள் இருக்குமா என்று சந்தேகப்படும் வண்ணம், காணுமிடமெல்லாம் ஈழ அகதிகள் காணப்பட்டனர். முகாம் வாயிலில் ஒரு சில பெட்டிக் கடைகள் காணப்பட்டன. அவற்றின் வாடிக்கையாளர்களும் அகதிகள் தான். வழக்கம் போல, இங்கேயும் பதிவு செய்யும் நடைமுறை. அடுத்த நாள் தான் அதிகாரி வருவாராம். அதனால், அன்றிரவு மண்டபம் முகாமிலேயே தங்கச் சொன்னார்கள்.

    புயலடித்த கடல் பயணத்தினால், எமது உடமைகள் சேதமடைந்திருந்தன. எனது முக்கிய ஆவணங்கள், மாற்றிக் கட்ட சில உடைகள், இவற்றையெல்லாம் தோளில் மாட்டும் துணிப்பைக்குள் அடைந்திருந்தேன். இராமேஸ்வரத்தில் வாங்கிய அந்த “சாமியார் பை”, இன்னும் சில நாட்களுக்கு என்னை இணை பிரியாமல் தொடரவிருந்தது. மண்டபம் முகாமில் “நிரந்தரமாக வசிக்கும்” அகதிகளின் பழக்கம் கிடைத்தது பெரிய ஆறுதல். எல்லோரும் மிக அன்பாக நடந்து கொண்டார்கள். தங்கள் குறை, நிறைகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார்கள். முன்னர் ஒரு காலத்தில், புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புகலிடமாக இருந்த மண்டபம் முகாம், தற்போது நிரந்தரமாக ஈழ அகதிகளை வைத்துக் கொண்டிருக்கிறது. எல்லாம் எளிமையாக கட்டப்பட்ட காங்க்ரீட் கட்டிடங்கள். சுமார் பத்தடி சதுர அறைக்குள் ஒரு அகதிக் குடும்பம் வாழ்ந்தது. தனி நபர்கள் என்றால், நான்கைந்து பேரைப் போட்டிருந்தார்கள். அங்கேயே சமைத்து உண்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது.

    மண்டபம் முகாமில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் மன்னார் பிரதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். இராமேஸ்வரத்தில் இருந்து இருபது மைல் தூரத்தில் உள்ள மன்னாரை சேர்ந்தவர்கள் தான், முதன்முதலாக படகேறி இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்கள். நாம் சென்ற பொழுது, அங்கேயே ஐந்து வருடங்களாக வாழும் அகதிகளையும் சந்தித்தோம். பலர் இடையிடையே இலங்கை சென்று வந்தவர்களாக இருந்தனர். அவர்களின் சொந்த வள்ளங்களையும் கொண்டு வந்திருந்தார்கள். ஒரே இரவில் இந்தியா சென்று சினிமா பார்த்து விட்டு வரும் கதையை, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் கேள்விப்பட்டிருந்தேன். அது எந்தளவு சாத்தியம் என்பது இப்போது புரிந்தது. முகாமில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த அகதிகளும் இருந்தனர். அகதிகளுக்கும், இந்தியத் தமிழர்களுக்கும் சில தகராறுகள் ஏற்பட்டால், அதற்கு மன்னாரை சேர்ந்தவர்களை குற்றம் சுமத்தினார்கள். பிரதேச வேறுபாடு பார்க்கும் யாழ்ப்பாண மரபு, இந்தியாவிலும் தொடர்ந்ததை காணக் கூடியதாக இருந்தது.

    புதிய அகதிகளான எமக்கு, இந்தியக் கலாச்சாரத்தை அறிமுகம் செய்து வைக்கும் பேச்சுகள் கலகலப்பூட்டின. ஈழத்தமிழர்கள் “சாரம்” என்று சொல்வதை, கடையில் “லுங்கி” என்று கேட்டு வாங்க வேண்டும் என்று ஆரம்பித்தார்கள். பெண்கள் அணியும் சட்டையை, “ஜாக்கட்” என்று உச்சரிக்க தடுமாறிய கதைகளை நகைச்சுவையாக கூறினார்கள். இந்தியத் தமிழில் பல ஆங்கிலச் சொற்கள் கலந்திருப்பதை குறித்து உரையாடல் திரும்பியது. ஒரு தடவை, இரண்டு ஈழத்தமிழ் இளைஞர்கள் கடையில் சென்று அரிசி இருக்கிறதா, என்று கேட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்று கடைக்காரருக்கு புரியவில்லை. புரிய வைப்பதற்கு எடுத்த முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், சாக்குப் பையில் இருந்த அரிசியை எடுத்துக் காட்டினார்கள். “ஓ… அதுவா, சுத்தமான தமிழில் ரைஸ் என்று சொல்லுங்க தம்பி!” என்று கடைக்காரர் கூறியதைக் கேட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு வந்து விட்டனர். இந்த “ரைஸ் கதை” பின்னர் ஈழத்தமிழர் மத்தியில் பரவலாக பேசப்படும் நகைச்சுவை விருந்தாகி விட்டது.

    மண்டபம் முகாம் அகதிகள் பகிர்ந்து கொண்ட வேறு சில தகவல்கள் சிந்திக்க வைத்தன. தமிழ் நாட்டின் மிகப் பெரிய ஈழ அகதிகளின் முகாமான மண்டபம், இந்திய புலனாய்வுத் துறையின் கண்காணிப்புக்குள் இருப்பது இரகசியமல்ல. அங்கு வசிக்கும் அகதிகளே சுட்டிக் காட்டிப் பேசுமளவிற்கு, இந்த அதிகாரிகளின் பிரசன்னம் எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இருப்பினும், 18 – 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் விடயம் மட்டும் புதிதாக இருந்தது. இராணுவப் பயிற்சி மட்டுமல்ல, சம்பளமும் கொடுப்பதாக ஆசை வார்த்தை காட்டி, பல இளைஞர்களை கூட்டிச் சென்றார்கள். அப்பாவி ஏழை இளைஞர்களும் அகதி முகாமில் கிடந்தது கஷ்டப்படுவதை விட, அது சிறந்தது என்று நினைத்து சென்றார்கள். எங்கே கூட்டிச் செல்கிறார்கள்? அவர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள்? ஈழப்போராட்டம் ஒரு திருப்புமுனைக்கு வந்துள்ள காலகட்டத்தில், ஒரு புதிய ஆயுதபாணி இயக்கத்தை உருவாக்க வேண்டிய தேவை என்ன? இந்தக் கேள்விகளுக்கான விடைகள், அன்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இலங்கை அரசின் மோசமான ஒடுக்குமுறையை சந்தித்திருந்த அகதிகள், இந்திய அரசின் மேல் கண்மூடித் தனமான விசுவாசம் வைத்திருந்தனர். அதனால் இந்தியா எது செய்தாலும், அது நன்மைக்கே என்று நம்பினார்கள்.

    முகாமில் இருந்தவர்களின் சமூக- அரசியல் பின்னணியும் கூர்ந்து நோக்கத் தக்கது. பெரும்பாலான மக்கள் எந்த வித அரசியல் பிரக்ஞையும் அற்ற உதிரிப் பாட்டாளிவர்க்கத்தை சேர்ந்தவர்கள். வெளிநாடு செல்ல வசதியற்ற ஏழைகள். ஈழத்தில் விடுதலை இயக்கங்கள் வளர்ச்சியடைவதற்கு முன்னமே, இந்தியா வந்து விட்டனர். அவர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்கள் மிக மிகக் குறைவு. ஏனெனில் அன்றைய ஈழத்தில், மற்றைய இயக்கங்கள் தடை செய்யபட்டு புலிகள் மட்டுமே செயற்பட்டு வந்தனர். (ஈரோஸ் அப்போதும் இயங்கிக் கொண்டிருந்தது இருந்தது. அது குறித்து பின்னர் விரிவாக.) இதனால் தமது ஆட்சி நடப்பதாக கருதிய புலிகள் இயக்க உறுப்பினர்கள் யாரும் இந்தியா செல்ல நினைக்கவில்லை. ஈழத்தில் புலிகளால் தடை செய்யப்பட்ட டெலோ, புளொட், ஈபிஆர்எல்ப் போன்ற இயக்கங்கள், இந்தியாவில் எந்தப் பிரச்சினையுமின்றி இயங்கிக் கொண்டிருந்தன. அந்த அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஈழத்தில் இருந்து அகதியாக வர வேண்டிய தேவை இருக்கவில்லை. அப்படியே வந்தாலும், அரசியலை விட்டொதுங்கி சாதாரண வாழ்க்கை வாழத் தான் விரும்பினார்கள். ஆகவே, மண்டபம் முகாமில் இருந்து இராணுவப் பயிற்சிக்காக சென்றவர்கள், அனேகமாக முன்னர் எந்த விடுதலை அமைப்பிலும் இருந்திராதவர்கள். முகாம் அகதிகளும் அதனை உறுதி செய்தனர்.

    மண்டபம் அகதிகள் வழங்கிய தகவல்களை தொகுத்துப் பார்த்த பொழுது, ஒரு உண்மை புலனானது. இந்திய அனுசரணையில் ஒரு புதிய இயக்கம் உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்திய மண்ணில் தோன்றும் புதிய ஈழ விடுதலை இயக்கத்தின் குறிக்கோள் என்ன? அதனால் இந்தியாவுக்கு என்ன நன்மை? அவர்கள் ஈழம் சென்று சிறிலங்கா படைகளை எதிர்த்து போராடுவார்களா? தமக்கு போட்டியாக ஒரு இயக்கம் வருவதை புலிகள் அனுமதிப்பார்களா? இந்தக் கேள்விகளுக்கு விடை காண, நாம் இந்திய- இலங்கை ஒப்பந்தம் வரை காத்திருக்க வேண்டும். இந்தியாவுக்கு அகதியாக வந்தவர்களுக்கு அதைப் பற்றிய கவலை எதுவும் இல்லை. இந்தியாவில் இருந்து வெளிநாடு செல்லலாமா? வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணத்தில் இந்தியாவிலேயே தங்கி விடலாமா? ஆதரிக்க ஆளில்லா விட்டால், முகாம் அருகில் கூலி வேலை செய்து பிழைக்கலாமா? இது போன்ற “பாமரத்தனமான” கேள்விகளே அவர்கள் மனதை குடைந்து கொண்டிருந்தன.

    அடுத்த நாள் அதிகாரிகள் வந்தார்கள். அகதிகளை பிரித்து தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். தஞ்சாவூர் நோக்கிச் செல்லும் பேரூந்து வண்டியில் எம்மை ஏற்றினார்கள். நாம் ஒரே ஊர்க்காரர்கள் சிலர் ஒன்றாக பதிந்து கொண்டதால், ஒரே இடத்திற்கு அனுப்பினார்கள். வண்டியில் புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். இனிமேல் அவர்களுடன் ஒரே முகாமில் தங்க வேண்டும். அதனால் பயணத்தின் போதே எமது நட்பை பலப்படுத்திக் கொண்டோம். வண்டியில் ஒரு போலீஸ்காரர் எமது பாதுகாப்புக்காக கூடவே வந்தார். எமது வண்டி, அகலமான நெடுஞ்சாலையில் இரவைப் போர்த்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. மீண்டும் ஒரு நெடும்பயணம். பயணக் களைப்பை போக்க சிலர் சினிமாப் பாடல்களை சத்தம் போட்டு பாடிக் கொண்டுவந்தனர்.

    எமது பேரூந்து வண்டி வேதாரண்யம் எனும் இடத்தை வந்தடைந்தது. வேதாரண்யம் நகரமும், அதிலிருந்து சிறிது தொலைவில் உள்ள கோடிக்கரை எனும் முனையும், ஈழப்போராட்டத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டவை. இராமேஸ்வரம் பகுதியில் இந்திய கடற்படையின் கண்காணிப்பு அதிகம் என்பதால், அங்கே வரும் படகுகள் எல்லாம் அகதிகளுடையவை. போராளிகளின் படகுகள் இராமேஸ்வரத்தை தவிர்த்து வந்தனர். அதற்குப் பதிலாக கோடிக்கரையில் வந்திறங்குவார்கள். இராமேஸ்வரத்திற்கு அடுத்ததாக மிகவும் கிட்டிய பயணப் பாதையும் அது தான். மேலும் யாழ் குடாநாட்டில் இருந்து கிளம்பும் படகுகள் மிகவும் இலகுவாக வந்தடையலாம். ஈழத்திற்கு செல்லும் ஆயுதங்களும், பெட்ரோல் போன்ற பொருட்களும் கோடிக்கரை வழியாகவே கடத்தப் பட்டு வந்தன. நாங்கள் போன காலத்தில், போராளிகளின் நடவடிக்கைகள் பெருமளவு குறைந்து விட்டன. இரகசிய போலிஸ் நடமாட்டம் அதிகமாகவிருந்தது. உள்ளூர் மக்களுடன் ஏற்பட்ட அசௌகரியங்களும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி இருந்தன.

    எமது பேரூந்து வண்டி வேதாரணியத்தில் இருந்து நாகபட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பிராதான பாதையில் இருந்து சவுக்குத் தோப்புக்களை கடந்து காடு போன்ற இடத்திற்குள் நுழைந்தது. முதல் நாள் மாலை மண்டபம் முகாமில் இருந்து கிளம்பி, அடுத்த நாள் காலை எமக்கென ஒதுக்கப்பட்ட முகாமை வந்தடைந்தோம். அப்போது தான் கட்டி முடிக்கப்பட்ட ஓலைக்குடிசைகளை கொண்ட முகாம், எமக்காக காத்திருந்தது. ஒவ்வொரு அகதிக்கும், சமைத்து சாப்பிட பாத்திரங்கள், அரிசி போன்றன வழங்கப்பட்டன. கோடை கால வெம்மையை உட்புக விடாத, ஓலைக்குடிசைக்குள் பாய் விரித்துப் படுத்தால் உலகமே மறந்து போனது. ஷெல் விழுந்து வெடிக்கும் காதை செவிடாக்கும் சத்தம் எதுவுமின்றி நிம்மதியான உறக்கம். ஆனால் இந்த அகதிவாழ்க்கை எத்தனை நாட்களுக்கு? சில நாட்களிலேயே இந்தியா வெறுத்துப் போனது.

    போருக்குள் வாழ்வது சிரமமாக இருந்தாலும், எமது மண்ணில் வாழ்கிறோம் என்ற உணர்வு இருந்தது. ஆனால், அந்நிய தேசத்தில் வாழும் ஒவ்வொரு கணமும் சங்கடத்தில் நெளிய வைத்தது. இப்படியே சில வாரங்கள் ஓடியிருக்கும். அகதி முகாமில் இருந்த பலர் மீண்டும் இலங்கை திரும்பிச் செல்ல நினைத்தார்கள். ஆனால் எப்படிச் செல்வது? கையில் இருந்த பணத்தை எல்லாம் கொட்டி இந்தியா வந்து விட்டோம். மீண்டும் ஊர் திரும்ப பணம் வேண்டுமே? இலங்கை செல்லும் படகுகள் கிடைக்குமா என்று விசாரிக்கத் தொடங்கினோம். குறைந்தது 400 ரூபாய் எண்ணி வைக்காமல் கூட்டிச் செல்ல மறுத்தார்கள். தினசரி கோடிக்கரையில் இருந்து யாழ்ப்பாணம் சென்று வரும் விடுதலைப் புலிகளின் படகுகள் மட்டும் இலவசமாக ஏற்றிச் செல்ல முன் வந்தார்கள். ஆனால் ஒரு நிபந்தனை. யாழ்ப்பாணம் சென்றவுடன் அவர்கள் இயக்கத்தில் சேர வேண்டும்.


    [இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]

    -[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-
    அகதிகள் பலரிடமும் எப்போது இலங்கை திரும்புவோம் என்ற ஏக்கம் குடிகொண்டிருந்த போதிலும், இந்திய அனுபவங்களையும் தம்மோடு சுமந்து செல்ல எண்ணினார்கள். அரசு கொடுக்கும் ஒரு பிடி அரிசியில், காய்கறி சேர்த்து சமைத்து உண்ணும் அகதி வாழ்வில் உல்லாசப் பயணத்தை நினைத்துப் பார்க்க முடியாது. இருப்பினும் இந்தியா வந்தால், கோயில் பார்க்காமல் திரும்பக் கூடாது என்று பிடிவாதம் பிடித்தார்கள். இந்துக்களைப் பொறுத்த வரையில், இந்தியாவை தமது தாயகமாக கருதும் போக்கு தொன்று தொட்டு நிலவியது. இப்போதும் இலங்கை திரும்பிய முன்னாள் அகதிகள், தாம் இந்தியாவில் எந்தெந்த கோயில்களுக்கு சென்று வந்தோம், என்று கூறி அயலவரின் பொறாமையைக் கிளப்புவார்கள். எமது முகாமில் இருந்தும் இளைஞர்களின் குழு ஒன்று கோயில் பார்க்க கிளம்பியது. எனக்கு அப்போதும் சாமி, கோயில்களில் நம்பிக்கை இல்லாத போதிலும், ஊர் சுற்றக் கிளம்பினேன்.

    பஸ் பயணத்திற்கு மட்டும் கையில் காசு வைத்திருக்க வேண்டும். ரயிலில் இலவசப் பிரயாணம் செய்யலாம் என்று கூறினார்கள். அது ஈழ அகதிகளுக்காக MGR வழங்கிய சலுகை என்றார்கள். (MGR அப்போதும் தமிழக முதலமைச்சராக இருந்தார்.) ரயிலில் டிக்கட் பரிசோதகர் வரும் போதெல்லாம், அகதி அட்டையைக் காட்டினால் போதும். தமிழ்நாடு மாநிலத்திற்குள், எந்த ரயிலிலும் டிக்கட் இல்லாமல் பயணம் செய்ய முடியும். ரயிலில் ஏறி திருச்சி சென்றோம். அங்கிருந்த கோயில்கள் எல்லாம் பார்த்து விட்டு, அன்றிரவு ரயில் நிலையத்திலேயே படுத்துறங்கினோம். மீண்டும் ரயில் ஏறி, நாம் வந்திறங்கிய இராமேஸ்வரம் வரையில் சென்று திரும்பி வந்தோம். வரும் வழியில் மறக்காமல் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தையும் தரிசித்தோம். நாம் சந்தித்த இந்திய தமிழர்கள், எங்களை “சிலோன் காரர்கள்” என்று அழைத்து உரையாடினார்கள். இந்தியாவில் இலங்கைத் தமிழர்கள் எல்லோரையும் சிலோன்காரர்கள் என்று தான் அழைத்து வந்தனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், இலங்கையில் மலையகத் தமிழரை “இந்தியத் தமிழர்கள்” என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தியாவில் அவர்களது பெயரும் சிலோன்காரர்கள் தான்.

    எமது தமிழக சுற்றுப் பயணத்தின் பின்னர், இந்திய-இலங்கைத் தமிழர்கள் மத்தியில் உள்ள ஒற்றுமைகள், வேற்றுமைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. 90 % சதவீதமான இலங்கை அகதிகள், அதற்கு முன்னர் இந்தியாவை பார்த்திராதவர்கள். இந்தியத் தமிழருடன் பழகும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கவில்லை. இந்தியாவுடனான அவர்களது தொடர்பு முழுவதும், சினிமா, சஞ்சிகைகள், நூல்கள் ஊடாகவே பரிமாறப்பட்டன. பெரும்பாலும் பாமர மக்கள், தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப் போலத்தான் இந்தியா இருப்பதாக நம்பினார்கள். இந்தியா வந்த பின்னர், அவர்களது மாயைகள் யாவும் அகன்றன. பிரமாண்டமான கோயில்களைத் தவிர, இந்தியாவில் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறவாரம்பித்தனர்.

    பொதுவாக இரண்டு சமூகங்களும், ஒன்றை மற்றொன்று தாழ்வாகக் கருதுவதை உணரக் கூடியதாகவிருந்தது. சில அகதி முகாம்களில், அதிகாரிகளின் திமிரான பேச்சு எரிச்சலூட்டியது. வசதிக் குறைபாடுகளை சுட்டிக் காட்டிய போதெல்லாம், ஒன்றில் புறக்கணித்தார்கள், அன்றில் வாயை மூடிக் கொள்ள சொன்னார்கள். “சிங்களவர்களால் அழிக்கப் பட்டுக் கொண்டிருந்த அரிய உயிரினத்தை வைத்துப் பராமரிப்பது,” போலப் பேசினார்கள். இதனால் வெறுத்துப் போன அகதிகள், “யுத்தம் மட்டும் இல்லையென்றால், எமது ஊரில் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்,” என்று பேசவாரம்பித்தனர்.

    மிகப்பெரிய இந்திய-இலங்கை முரண்பாடுகள், வர்க்கம் சார்ந்து எழுந்தது. அகதி முகாமில் கிடைக்கும் சொற்பத் தொகை வாழ்வதற்கு போதாது என்பதால், கூலி வேலை தேடவாரம்பித்தனர். இலங்கையில் இலவசக்கல்வி வாய்ப்பை பயன்படுத்தி, பல்கலைக்கழகம் வரை படித்த ஏழை மாணவர்கள் கூட, கூலி வேலைக்கு சென்று வந்தனர். பட்டதாரிகள் கூட, இந்தியாவில் தமது பட்டங்களுக்கு மதிப்பில்லை என்பதை விரைவில் புரிந்து கொண்டனர். ஒரு ஈழ அகதி எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், எந்தவொரு நிறுவனமும் அவர்களுக்கு வேலை கொடுக்க முன் வரவில்லை. மாநில, மத்திய அரசுகள் சட்டபூர்வ அனுமதி வழங்க மறுத்தன. அகதிகள் கூலி வேலைக்கு செல்வதை மட்டும் தடை செய்யவில்லை. இதனால் உள்ளூர் முதலாளிகளும், ஒப்பந்தக்காரர்களும் வீதிகளை செப்பனிடும் வேலை, மற்றும் கட்டுமானப் பணிகளில் இலங்கை அகதிகளின் உழைப்பை பயன்படுத்திக் கொண்டனர். ஒரு இந்திய தொழிலாளிக்கு கொடுக்கும் சராசரி கூலியை விட குறைந்த அளவு ஊதியமாக வழங்கப்பட்டது.

    ஈழ அகதிகள் என்றால் கடுமையாக வேலை வாங்குவது சாதாரணமாக நடந்து கொண்டிருந்தது. சில முதலாளிகள், அவர்களின் கையறுநிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். மாதக் கணக்காக வேலை வாங்கி விட்டு, சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினார்கள். ஒரு பக்கம், இந்தியத் தமிழ் முதலாளிகள் ஈழ அகதிகளின் உழைப்பை சுரண்டி கொழுத்துக் கொண்டிருந்தனர். மறு பக்கம், தொழில் வாய்ப்பை இழந்த இந்தியத் தமிழ் தொழிலாளிகள் அதிருப்தி கொண்டனர். இந்தியாவில் கூலி வேலையாட்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை தலித் மக்கள். இவர்களது குடியிருப்புகளும் அகதி முகாம்களை அண்டியே காணப்பட்டன. தொழில் போட்டியால் ஏற்பட்ட முறுகல் நிலை, “இந்தியத் தமிழ்- இலங்கைத் தமிழ் முரண்பாடு” வளரக் காரணமாயிற்று. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியினர், ஈழ அகதிகளை தம்மை விட தாழ்ந்தவர்களாக கருதினார்கள். சமூகங்களுக்கு இடையிலான சிறு சிறு சச்சரவுகளின் பொழுது, இது போன்ற உணர்வுகள் மேலெழுந்து வெளிப்படையாக பேசினார்கள். இதற்கிடையே வசதி படைத்த அல்லது மேல்நிலை சாதி இந்தியத் தமிழர்கள், அத்தகைய பிரச்சினைகள் குறித்து எந்த அறிவுமற்று வாழ்ந்தனர்.

    ஈழத்தில் பல்வேறு சாதிகளை சேர்ந்த அகதிகள் முகாமில் ஒன்றாக வாழ்ந்தனர். இந்திய வழக்கப்படி, ஈழ அகதிகளும் சாதி வாரியாக வகைப் படுத்தப் பட்டு பதியப்பட்டனர். அது ஒன்றும் கட்டாயமல்ல, எனக்குத் தெரிந்த பலர் படிவத்தில் சாதிப் பெயரை குறிப்பிடாமல் வெறுமையாக விட்டனர். சாதிப் பெயரை பதியும் நடைமுறை, இலங்கையில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கைவிடப் பட்டு விட்டது. (இன்று சிலர் இதைக் காட்டி ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதிகள் இல்லை என்று வாதிடுகின்றனர்.) ஆனால், கிராமங்கள் சாதி வேறுபாடுகள் தெளிவாகத் தெரிந்த சமூக அமைப்பைக் கொண்டிருந்தன. ஆகவே இந்தியா வந்த பின்னும் சாதிப் பெயரை பதிந்து கொள்வதில் பலருக்கு பிரச்சினை இருக்கவில்லை. மாறாக, இந்த சந்தர்ப்பத்தில் தமது சாதியை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை கண்டு கொண்டார்கள். தங்களை “வெள்ளாளர்களாக” பதிந்து கொண்டார்கள். இதனால் சாதிய படிநிலையில் உயர்ந்து விட்டதாக மனதளவில் திருப்தி கொண்டனர். யார் கண்டது? சில வருடங்களில் ஈழத்து சாதியமைப்பில் பாரிய மாற்றம் ஏற்படலாம்.

    அகதிகளிலும் “ஏழை அகதிகள், பணக்கார அகதிகள்” என்று இரண்டு வகை உண்டு. ஒருவர் ஈழத்தில் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது, இந்திய அகதி வாழ்க்கையிலும் தீர்மானிக்கப்படுகின்றது. ஈழத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அகதிகள், இந்தியாவில் அகதி முகாம்களிலேயே வருடக்கணக்காக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு மாறாக, மத்திய தர வர்க்க அகதிகள், கூடிய சீக்கிரத்தில் அகதி முகாமை விட்டு வெளியேறவே விரும்புவார்கள். அவர்கள் தங்களை இந்தியாவில் அகதியாக பதிந்து கொள்வார்கள், ஆனால் முகாமில் வாழ மாட்டார்கள். சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் சென்று வாடகை வீடு எடுத்து வாழ்வார்கள். பராமரிக்க வேண்டிய அகதிகளின் தொகை குறைகின்றது, என்ற சந்தோஷத்தில் மாநில அரசும் அது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

    பெரு நகரங்களில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்வதற்கு மாதாந்த வருமானம் வேண்டும். பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் அந்த செலவை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த மேட்டுக்குடி மக்கள் மட்டும் அகதியாக பதியாமல், நேரடியாக இந்தியாவில் குடியேறினார்கள். ஏற்கனவே அவர்களது செலவை ஈடுகட்டும் பணத்தை கையிருப்பில் வைத்திருப்பார்கள். ஈழப்போர் காலகட்டத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் வாழும் மேட்டுக்குடி தமிழர் குறித்து இங்கே பேசத் தேவையில்லை. வெளிநாட்டுச் செலவில் வாழ்பவர்கள் எல்லோரும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் ஒரு ஏழை விவசாயிக்கும் நிலம் சொந்தமாக இருக்கும். செறிவான மக்கட்தொகை கொண்ட யாழ்ப்பணத்தில் ஒரு பரப்பு காணியின் விலை பிற மாகாணங்களை விட அதிகம். இதனால் காணி விற்று அனுப்பிய பிள்ளை, வெளிநாடு சென்று உழைத்து அனுப்பினால், அந்தக் குடும்பம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டது. சில வருடங்களில், புதுப் பணக்கார மிடுக்கு அவர்களிடம் மத்தியதர வர்க்க மனோபாவத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

    சென்னை மாநகரின் பகுதியான அண்ணா நகர், அப்போது தான் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஈழத்தமிழரின் “குடியேற்றம்” இடம்பெற்ற அண்ணா நகர் பகுதியில் வாடகைக்கு வீடெடுப்பது கடினமாகவிருந்தது. வீட்டு வாடகை உயர்ந்து கொண்டே சென்றமை, இலங்கை- இந்தியத் தமிழ் முரண்பாட்டை விதைத்தது. பேராசை கொண்ட வீட்டு உரிமையாளரும், வெளிநாட்டுப் பணத்தை தண்ணீராக செலவழித்த ஈழத் தமிழரும் சமூக முரண்பாடுகளை கணக்கில் எடுக்கவில்லை. இதே போன்ற நிலைமை இதே காலகட்டத்தில் கொழும்பில் தோன்றியது. வட மாகாணத் தமிழர்கள், போர்ச் சூழலில் இருந்து தப்புவதற்காக, போர் நடக்காத கொழும்பில் சென்று பாதுகாப்பாக வாழ விரும்பினார்கள். இந்தியாவில் இருந்து போவதை விட, கொழும்பில் இருந்து வெளிநாடு செல்வது இலகுவாக இருந்தது. வெளிநாடு போகா விட்டாலும், வெளிநாட்டில் இருந்து உறவினர் அனுப்பும் பணத்தில் கொழும்பில் வசதியாக வாழ விரும்பினார்கள்.

    தமிழர்கள் கொட்டும் வெளிநாட்டுப் பணத்துக்கு பேராசை கொண்ட சிங்கள வீட்டு உரிமையாளர்களும், வீட்டு வாடகையை உயர்த்திக் கொண்டே சென்றனர். இதனால் கொழும்பு வாழ் சிங்கள, தமிழ் மக்களுடன் முறுகல் நிலை ஏற்பட்டது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கொழும்பு நகரில் யாழ்ப்பாணத் தமிழரின் தொகை பெருகிக் கொண்டிருந்தது. கொழும்பில் வாழ்வதற்கும், சென்னையில் வாழ்வதற்கும் இடையில் வேறுபாடு இருந்தது. யுத்தம் கொழும்பை நோக்கி புலம்பெயர்ந்தது. குண்டுவெடிப்புகள், அதையொட்டிய கைதுகள், நெருக்கடிகள் போன்றன அங்கேயும் பாதுகாப்பற்ற சூழலை தோற்றுவித்தது. சென்னையிலோ, திருச்சியிலோ அந்தப் பிரச்சினை இருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை மட்டும் அவர்களின் சீரான வாழ்க்கையில் நெருக்கடியைக் கொண்டு வந்தது.

    சென்னையில் சில நண்பர்கள் வசித்ததால், அவர்களின் தொடர்பு கிடைத்து நானும் சென்னை நோக்கிப் புறப்பட்டேன். அப்போதெல்லாம் தனியார் நடத்தும் விரைவு பேரூந்து சேவைகள் கிடையாது. போக்குவரத்து சபை முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. நகரங்களுக்கு இடையில் “திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்” சேவையில் ஈடுபட்டிருந்தது. நானும், அகதி முகாமில் சந்தித்த நண்பருமாக சென்னை நோக்கி பஸ் பயணம் மேற்கொண்டோம். சென்னை நகரின் பிரமாண்டம் வியக்க வைத்தது. அதே நேரம், இந்தளவு நெருக்கமான குடிசனப் பரம்பலை இலங்கையில் எங்கேயும் காணவில்லை.

    ஒவ்வொரு வீடும் ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது. கூரைக்கு பதிலாக மொட்டை மாடி வைத்துக் கட்டியிருந்தார்கள். பிறகொரு தருணத்தில், அப்படியான வீடுகளை வெப்ப வலைய நாடுகளில் எல்லாம் காண முடிந்தது. நான் சென்னையில் தங்கியிருந்த நாட்களில், கோடை காலமென்பதால் எல்லோரும் மொட்டை மாடியில் தான் படுப்போம். அந்தக் காலத்தில் காற்றாடி பாவிப்பது ஆடம்பரமானது. இலங்கையில் சில வசதியானவர்களைத் தவிர மற்றவர்கள் மின்சாரக் காற்றாடி பாவிக்கவில்லை. (என்பதுகளுக்கு பிறகு தான் எமது ஊருக்கு மின்சாரம் வந்தது.) ஆனாலும், கோடை காலத்து வெம்மையை தாங்கிக் கொள்ள முடிந்தது. சென்னையில் கோடை காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கொள்வது சித்திரவதை அனுபவிப்பதற்கு சமமானது. ஆகவே மொட்டை மாடியின் மகிமையை, சென்னை சென்று ஒரு சில நாட்களிலேயே உணர்ந்து கொண்டேன்.

    நான் தங்கியிருந்த வீட்டில் வசித்த எல்லோரும் 25 வயதுக்கு மேற்படாத வாலிபர்கள். அனைவரது நோக்கமும் வெளிநாடு போவதாகவே இருந்தது. தாங்கள் எத்தனை மாதங்களாக காத்திருக்கிறோம், என்பதை ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்தும் போதே கூறிக் கொண்டனர். புதிதாக சென்ற என்னை, “தங்களோடு சேர்ந்து வருந்த வந்திருக்கும் பாவப்பட்ட ஜீவன்,” போல சேர்த்துக் கொண்டார்கள். அங்கேயிருந்த சிலர் வெளிநாட்டுப் பயணத்திற்கான முயற்சியில் தோல்வியடைந்தவர்கள். சிலர் பணம் போதாமையால் இன்னும் விமான நிலையத்தை தரிசிக்காதவர்கள். இந்திய கடவுச்சீட்டில் படம் மாற்றி, டெல்லி விமான நிலையம் சென்று பிடிபட்டு திரும்பி வந்தவர்கள். நடுங்கும் இமாலயக் குளிரில் நேபாளம் வரை சென்று திரும்பியர்கள். இவ்வாறு பல சோகக் ககதைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    வெளிநாடு அனுப்பி வைக்கும் முகவர் ஒருவர் மட்டும், இருந்திட்டு எப்போதாவது வந்து எட்டிப் பார்த்து விட்டுச் செல்வார். தனது “வாடிக்கையாளர்களுக்கு” செலவுக்கு பணம் கொடுத்து விட்டுச் செல்வார். வீட்டு உரிமையாளரின் குடும்பம் கீழ் வீட்டில் வசித்து வந்தது. இவர்களைத் தவிர வேறு வெளியுலகத் தொடர்புகள் இல்லை. கொஞ்சம் பணம் இருந்தால், சினிமா பார்த்து விட்டு வருவதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இருக்கவில்லை. ஒரு புதுப்படம், தமிழகத்தில் ரிலீசாகி மாதக் கணக்கான பின்னர் தான் யாழ்ப்பாண திரையரங்குகளில் வெளியிடுவார்கள். அதனால் சென்னையில் புதுப்படத்தை உடனுக்குடன் பார்க்கும் வசதி, ரசிகர்களுக்கு ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்.

    ஒரு வகையில் நாம் தங்கியிருந்த வீடு இன்னொரு வகை “அகதி முகாம்.” இது போன்ற பல உத்தியோகபூர்வமற்ற முகாம்கள் சென்னை நகர வீடுகள் பலவற்றில் இருந்தன. பொதுவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர்களால் குறைந்த விலைக்கு வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தன. இந்த வீடுகளில் பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட இளைஞர்கள் வசித்தனர். எல்லோருடைய நோக்கமும் மேற்கு ஐரோப்பா, அல்லது கனடா போவதாக இருந்தது. நான் சந்தித்த சில இளைஞர்கள் ஈழ விடுதலை இயக்கங்களில் செயற்பட்டு, பின்னர் விட்டு விட்டு வந்திருந்தார்கள். ஈழத்திலும், தமிழகத்திலும் அந்த இயக்கங்கள் ஒன்றையொன்று பகைவர்களாக கருதிக் கொண்டிருந்த நேரம். ஆனால் இந்த முன்னாள் போராளிகள் மட்டும் நட்புடன் பழகினார்கள்.

    ஒரு சில நேரம், அரசியல் பேச்சுகள் தர்க்கத்தில் முடிந்தாலும், அவர்களது நட்பு முறியவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில், அரசியல் வாழ்வு அஸ்தமித்து விட்டது. இனிமேல் வெளிநாடு சென்று சம்பாதித்து சொந்தக் குடும்பத்தை பார்த்தால் போதும் என்று நினைத்தார்கள். முன்னர் இயக்க உறுப்பினர்களாக பொது வாழ்வில் இருந்த காலங்களில் குடும்ப உறவை துண்டித்திருந்தார்கள். தற்போது மீண்டும் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டார்கள். பெற்றோரும் “காணாமல் போன ஆட்டுக்குட்டி திரும்பி வந்த குதூகலத்தில்” திளைத்தார்கள். “ஈழத்திற்காக வேறு யாராவது போராடட்டும். தனது பிள்ளை வெளிநாடு சென்று நலவாழ்வு வாழ வேண்டும்,” என்று நினைத்தார்கள். அதனால் எத்தனை லட்சம் கொடுத்தேனும் வெளிநாடு அனுப்பி விடத் துடித்தார்கள்.

    முன்னாள் இயக்க உறுப்பினர்களின் மூலம், தமிழகத்தில் ஈழ அரசியல் செல்வாக்கு குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமான ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் இந்தியாவில், சென்னையில் தலைமை அலுவலகங்களை வைத்திருந்தன. ஈழத்தில் இயக்க நடவடிக்கைகள் யாவும் அங்கிருந்த படி நெறிப்படுத்தப் பட்டன. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கியதாக நம்பினார்கள். “இந்தியா இராணுவத்தை அனுப்பி தமிழீழம் எடுத்து தங்கள் கையில் தந்து விட்டுப் போகும்,” என்று விடுதலை இயக்கப் போராளிகள் கூட அப்போதும் நம்பிக் கொண்டிருந்தனர். 1983 இனக்கலவரத்திற்குப் பின்னர், தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு அலை வீசிக் கொண்டிருந்தது.

    அன்று முதலமைச்சராக இருந்த MGR உம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும், யார் அதிகம் ஆதரவளிப்பது என்பதில் போட்டி நிலவியது. MGR புலிகள் அமைப்பிற்கு நெருக்கமானவராக இருந்தார். வேண்டிய நேரமெல்லாம் பணமும், அரச உதவிகளையும் வழங்கி வந்தார். கருணாநிதி பிற கட்சிகளை சேர்த்துக் கொண்டு TESO (தமிழீழ பாதுகாப்பு அமைப்பு) என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் அனைத்து விடுதலை இயக்கங்களுக்கும் நிதி வழங்கினார். அன்று புலிகள் மட்டும் அந்த உதவியைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அதற்கு முன்னர் இந்திய மத்திய அரசின் நேரடித் தொடர்பில் இருந்த டெலோ இயக்கத்திற்கு கருணாநிதி ஆதரவளித்து வந்தார். MGR ஆயினும், கருணாநிதி ஆயினும், இந்திய மத்திய அரசின் அனுமதி இன்றி அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியாது, என்று முன்னாள் போராளிகள் தெரிவித்தனர். இந்தியா வேண்டிய நேரத்தில் தலையிட்டு, யார் எஜமான் என்பதை நிரூபிக்கும், என்றும் கூறினார்கள். அதனை மெய்ப்பிப்பது போல சில சம்பவங்கள் நடந்தன.

    இந்தியாவின் அனுசரணையின் பேரில், பூட்டானில் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சேர்த்து, ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் கூட்டாக தமது தீர்வுகளை முன்வைத்திருந்தன. அதற்குப் பின்னர், புலிகள், டெலோ, ஈபிஆர்எல்ப், ஈரோஸ் போன்ற நான்கு இயக்கங்கள் தமக்குள்ள ஐக்கியம் கண்டன. “ஈழ தேசிய விடுதலை முன்னணி” என்ற பெயரின் கீழ் கூட்டாக அறிக்கை விட்டன. இந்தியா, ஈழ விடுதலை இயக்கங்களிடையே அத்தகைய ஐக்கியத்தை எதிர்பார்க்கவில்லை. திடீர் நடவடிக்கையாக டெலோ அமைப்பின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா, புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், ஆகியோரை நாடு கடத்தியது.

    அதை விட, இன்னொரு சம்பவம் ஈழ விடுதலை அமைப்புகளின் சுதந்திரம் எந்தளவு மட்டுப்படுத்தப் பட்டது என்பதை நிரூபித்தது. ஒரு நாள் சொல்லி வைத்தாற் போல, அனைத்து இயக்கங்களினதும் தலைமை அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன. திடீரென புகுந்த போலிசும், புலனாய்வுத்துறை அதிகாரிகளும், அங்கிருந்த ஆயுதங்கள், ஆவணங்கள் அனைத்தையும் அபகரித்துச் சென்றனர். போலீசார் எவ்வாறு மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டுத் தேடினார்கள், என்று இயக்க அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய ஒரு நண்பர் தெரிவித்தார். சிறிலங்கா போலிஸ் மட்டுமே அத்தகைய அடக்குமுறையில் ஈடுபடும் என்று நம்பிக் கொண்டிருந்த நண்பருக்கு, அந்தச் சம்பவம் மீள முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது. திடீர் சோதனை நடவடிக்கைக்கு, இந்திய அரசு உத்தியோகபூர்வ விளக்கம் கொடுத்ததாக நினைவில்லை.

    சிறிது காலம் யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவம் முன்னேறுவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை. வடமராட்சியை கைப்பற்றிய இராணுவ நடவடிக்கையின் பின்னர், படை நகர்வில் தேக்க நிலை காணப்பட்டது. புலிகள் திருப்பித் தாக்கத் தொடங்கியிருந்தனர். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பாதுகாப்பார்கள் என்று, அவர்களது பலத்தில் நம்பிக்கை கொண்ட அகதிகள் பலர் ஊர் திரும்பினார்கள். மீண்டும் ஒரு தடவை நண்பர்களுடன் இராமேஸ்வரம் சென்றிருந்த பொழுது, சில படகுகள் புறப்பட இருப்பதாக செய்தி வந்தது. நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் என்பதால், இலவசமாக ஏற்றிச் செல்ல முன்வந்தார்கள்.

    சென்னையில் வசித்த நண்பர்களைப் போல, வெளிநாடு செல்லும் நோக்கம் எதுவும் எனக்கு அப்போது இருக்கவில்லை. இந்திய மண்ணில் அகதியானது போல, எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் அகதியாக அலைய மனம் ஒப்பவில்லை. எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும், அந்நிய மண்ணில் அடிமையாக வாழ்வதை விட, சொந்த மண்ணில் வாழ்வதே சுதந்திரம் என்று கருதுபவர்கள். அதனால் இலங்கை செல்லும் படகில் கால் வைத்த பொழுது, ஒரு தவறைச் செய்கிறோம் என்று நினைக்கவில்லை. அன்று என்னைப் போல பலரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்ததது சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு சில மாதங்களின் பின்னர், என்னோடு அகதி முகாமில் வசித்த ஈழ அகதிகள் அனைவரும் கப்பலில் வந்திறங்குவார்கள், என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்தியாவில் இருந்து சென்ற எம்மை, இந்தியாவின் நிழல் தொடரப் போகின்றது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

    யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்

    [இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]
    (பகுதி – 5)

    மந்தமாருதம் வீசும் பிற்பகல் வேளை. நண்பர்களுடன் வயலோரம் பல்சுவைக் கதைகள் பேசிக் கொண்டிருந்த நேரம். மேற்குத் திசையில் இருந்து இரண்டு மிராஜ் விமானங்கள் மேகத்தைக் கிழித்துக் கொண்டு பறந்து வந்தன. உருவத்தையும், வேகத்தையும் பார்த்தால், அவை சிறிலங்கா விமானப் படைக்கு சொந்தமானதாக இருக்க வாய்ப்பில்லை. நிச்சயமாக வேற்று நாட்டு விமானங்கள் தான். ஏதோ ஒரு வல்லரசு நாடு, இலங்கையை கண்காணிக்கின்றது என நினைத்தோம். சில நிமிடங்களில் விமானத்தில் இருந்து பொதிகள் வீசப்பட்டன. தூரத்தில் என்ன பொதிகள் என்று தெரியவில்லை. குண்டுகளாக இருக்குமோ? அந்நிய படையெடுப்பா? ஆனால் விமானங்கள் மறைந்து அரை மனித்தியாலமானாலும் குண்டு ஏதும் வெடித்த சத்தம் கேட்கவில்லை. நாம் நின்ற இடத்தில் இருந்து பத்து மைல் தூரத்தில், சிறிலங்கா இராணுவம் நிலைகொண்டிருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் தான், அகோரமான ஷெல் வீச்சுடன் முன்னேறிக் கொண்டிருந்தது. இருப்பினும், நாட்கணக்காக யுத்தம் நடக்கும் அறிகுறியே இல்லை. என்ன நடக்கிறது? திடீர் அமைதிக்கு காரணம் என்ன?

    இந்திய, இலங்கை அரசுகளுக்கு நடுவில் திரை மறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்ததும், அதனால் வடமராட்சி இராணுவ நடவடிக்கை இடைநிறுத்தப் பட்டதும் செய்திகளாக கசிய ஆரம்பித்தன. அப்போதெல்லாம், யாழ்ப்பாண மக்கள் இந்திய அரசின் தூர்தர்ஷன் வானொலியை செவி மடுப்பது வழக்கம். இலங்கை தேசிய வானொலி செய்தியை யாரும் நம்புவதில்லை. செய்தி சேகரிக்கும் “லங்கா புவத்” நிறுவனத்தை, “லங்கா பொறு” (சிங்களத்தில்: லங்கா பொய்) என்று கேலி செய்வது வழக்கம். இலங்கை வானொலி மறைக்கும் செய்திகளை இந்திய வானொலி தெரிவித்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில், போராளிக் குழுக்கள் கொடுக்கும் செய்திகளையும் ஒலிபரப்பியது. இன்னும் சில மாதங்களில், இந்த நிலைமை தலைகீழாக மாறப் போகின்றது.

    தூர் தர்ஷன் செய்தியின் பிரகாரம், “யாழ் குடாநாடு இராணுவ முற்றுகைக்கு உள்ளாகியிருந்தது. சிறிலங்கா அரசின் பொருளாதாரத் தடை காரணமாக உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியிருந்தனர். நிலைமை மோசமாக இருந்தது.” இராணுவ முற்றுகை, பொருளாதாரத் தடை, உணவுத் தட்டுப்பாடு, எதுவும் அன்று மக்களை பட்டினிச் சாவுக்கு தள்ளுமளவு மோசமாக இருக்கவில்லை. ஆனையிறவு ஊடான வணிகப் போக்குவரத்து தடைப்படவில்லை. மின்சாரம் தடையின்றி வந்து கொண்டிருந்தது. வலிகாமம் வடக்கு, வடமராட்சிப் பகுதிகளில் மட்டும் இராணுவ நடவடிக்கை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இருப்பினும் கட்டுப்படுத்த முடியாத மனிதப் பேரவலம் என்று கூற முடியாது. இந்தியா அவ்வாறான செய்திகள் மூலம் உள்நாட்டு, சர்வதேச அனுதாபத்தை ஈழத்தின் மீது திருப்பியது. அல்லலுறும் ஈழத் தமிழருக்கு உதவுவது, தனது தார்மீகக் கடமை என்று இந்திய அரசு கூறியது.

    இந்திய செஞ்சிலுவை சங்கம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்புவதற்கென நிவாரணப் பொருட்களை சேகரித்தது. இராமேஸ்வரத்தில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கிளம்பிய படகுகள் இலங்கை கடல் எல்லையை அடைந்தன. இந்திய-இலங்கை கடல் எல்லையில் வைத்து இடைமறித்த சிறிலங்கா கடற்படை, நிவாரணக் கப்பல்களை மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. “இந்தியாவில் அன்றாட உணவுக்கு வழியற்ற ஏழைகளுக்கு கொண்டு சென்று கொடுங்கள்.” திமிராக பதிலளித்தார் கடற்படைத் தளபதி. வேறு வழியின்றி, நிவாரணக் கப்பல்கள் இந்தியாவை நோக்கி திரும்பிச் சென்றன. அடுத்த நாள், அதே நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து நான்கு மிராஜ் விமானங்கள் கிளம்பின. இம்முறை யாழ் குடாநாட்டின் மீது விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் வீசுவதை, சிறிலங்கா இராணுவத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிர்பாராத விதமாக, இலங்கை அரசை அடிபணிய வைக்க, அந்த ஒரு நடவடிக்கையே போதுமானதாக இருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு அன்றே வித்திடப்பட்டது.

    இந்திய- இலங்கை ஒப்பந்தப் பிரகாரம், வட-கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பை இந்திய அமைதிப் படை பொறுப்பேற்றது. பலாலி விமானப் படைத் தளத்தில் இந்திய இராணுவம் வந்திறங்கியது. அவர்கள் யாழ் குடாநாட்டினுள் போக முடியவில்லை. அங்கே ஒரு பிரச்சினை இருந்தது. இராணுவ முகாம்களும், போரில் கைப்பற்றிய சிறிய பிரதேசங்கள், ஆகியனவே சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. குடா நாட்டின் பிற பகுதிகளை விடுதலைப் புலிகள், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தனர். அவர்கள் இந்திய இராணுவத்தை வெளியேற அனுமதிக்கவில்லை. இந்தியா சிறிலங்கா அரசுடன் மட்டுமே ஒப்பந்தம் போட்டது, தங்களோடு அல்ல என்று வாதாடினார்கள். அதை விட, ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட நேரம், தலைவர் பிரபாகரன் இந்தியாவில் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருந்தார். தமது தலைவரை விடுதலை செய்தால் மட்டுமே, இந்தியப் படைகளை அனுமதிப்போம் என்றனர்.

    புலிகள் பலாலி முகாமின் முன்னால் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்தனர். மினிவான் அனுப்பி ஊர் ஊராக மக்களை திரட்டி அழைத்துச் சென்றனர். அன்றிருந்த முறுகல் நிலை மக்கள் மத்தியில் பதற்றத்தையும் தோற்றுவித்தது. புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையில் சண்டை மூளுமோ என்று மக்கள் அஞ்சினார்கள். இருந்தாலும், புலிகளின் அழைப்பை ஏற்று பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர். பெருமளவு இளம்பெண்களும் சென்றிருந்தமை குறிப்பிடத் தக்கது. ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் நடந்த உரையாடல்களில், பலர் இந்திய படையினரை விடுப்புப் பார்க்க வந்திருந்தமை புலனானது. குறிப்பாக இளம் பெண்கள் வட இந்திய படைவீரர்களின் அழகையும், உயரத்தையும் சிலாகித்துப் பேசினார்கள்.

    முற்றுகை நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்திய அரசு பிரபாகரனை விடுதலை செய்ததும் முற்றுகை விலத்திக் கொள்ளப்பட்டது. இந்திய படையினர் டிரக், ஜீப் வண்டிகளில் சிறிய முகாம்களுக்கும் சென்றனர். இந்திய இராணுவம் தனக்கென முகாம் அமைக்கவில்லை. ஏற்கனவே இருந்த இலங்கை இராணுவ முகாம்களில் அரைவாசி இடத்தை பங்கு போட்டது. பின்வரும் காலங்களில், மிகப்பெரிய பலாலி முகாம் தவிர பிற முகாம்களில் இருந்த சிங்களப் படையினர் வெளியேறினார்கள். சுருங்கக் கூறின், ஒரு காலத்தில் சிறிலங்கா இராணுவ முகாம்களாக இருந்தவை, தற்போது இந்திய இராணுவ முகாம்களாயின. ஈழப்போர் ஆரம்பித்த காலத்தில் சிறிலங்கா படையினர் ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்கு ரோந்து செல்வது போல, இந்தியப் படையினரும் செய்தனர்.

    இந்தியப் படைகள் சென்றவிடமெல்லாம், அவர்களைக் காண வீதிகளில் மக்கள் குழுமினார்கள். ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுக்க விரும்பினார்கள். கடைக்காரர்கள் இலவச குளிர்பானம் அருந்தக் கொடுத்தனர். இந்திய அமைதிப் படையில் தமிழர்கள் மிக அருமையாகவே இருந்தனர். ஒரு சில மலையாளிகளும் தெலுங்கர்களும் தமிழ் பேசினார்கள். பிற மாநிலங்களை சேர்ந்த படையினரில் ஒரு சில ஆங்கிலம் தெரிந்தவர்களை தவிர, மற்றவர்களுக்கு மொழிப் பிரச்சினை ஒரு தடையாகவிருந்தது. அத்தகைய படைவீரர்களை கொண்ட இந்திய இராணுவம், சிங்கள இராணுவம் போன்று தமிழ் மக்களிடம் அந்நியப் பட்டு நின்றது. இருந்தாலும், இந்திய இராணுவத்தின் வருகையினால், தமிழ் மக்கள் தமக்கு விடிவு காலம் வந்து விட்டதாகவே நம்பினார்கள்.

    சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறையில் இருந்து காப்பாற்றுவதற்காக, இந்திய இராணுவத்தை அனுப்பி உதவும் என்று பல தமிழர்கள் நம்பினார்கள். பாமரர் முதல் படித்தவர் வரை அந்த நம்பிக்கை காணப்பட்டது. ஈழத்தமிழர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதாலும், தென்னிந்தியாவுடனான கலாச்சார தொடர்பாலும், பலர் இந்தியாவை தமது தாயகமாக கருதினார்கள். தென்னிந்தியாவிலும் தமிழர்கள் வாழ்வதாலும், பெரும்பான்மை இந்தியர்கள் இந்துக்கள் என்பதாலும், இந்திய அரசு தம்மை கைவிடாது என்று நம்பினார்கள். அன்று தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவு கட்சிகள், இந்தியா இராணுவத்தை அனுப்பி ஈழத்தமிழரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர். “அகில உலக தமிழினத் தலைவர்” கருணாநிதி முதல், “தூய தமிழ் தேசியவாதி” நெடுமாறன் வரை அவ்வாறு குரல் கொடுத்தவர்கள் தாம். இது போன்ற காரணங்களால், ஈழத்தமிழ் மக்கள் இந்தியப் படையினரை வரவேற்று மகிழ்ந்ததில் வியப்பில்லை. சில இடங்களில் இந்தியப் படைவீரர்கள் உள்ளூர்ப் பெண்களை திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்.

    புலிகள் அமைப்பினரும், இந்தியப் படையினருடன் சினேகபூர்வமாக நடந்து கொண்டனர். இனி சமாதானம் வந்து விட்டது என்பது போல, புலிகளின் தலைவர்கள் பலர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண சடங்குகளில், இந்தியப் படை கொமான்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதற்கு முன்னர், ஆயுதங்களை ஒப்படைக்கும் வைபவம் நடந்தது. இந்தியாவில் இருந்து விடுதலையாகி, இந்திய விமானப்படை ஹெலிகொப்டரில் சுதுமலை வந்த பிரபாகரன் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அவரது உரையைக் கேட்க பெருந்திரளான மக்கள் குழுமியிருந்தனர். அமைதியாக உரையை செவிமடுத்த பார்வையாளர்கள், பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைப்பதாக அறிவித்ததும் கரகோஷம் செய்தனர். அடுத்த சில நாட்களில், புலிகளின் ஆயுதங்கள் வண்டி வண்டியாக கொண்டு வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டன. புலிகளுக்கு முன்னரே, ஈரோஸ் இயக்கம் தம்மிடம் இருந்த ஆயுதங்களை ஒப்படைத்து விட்டனர். அன்று ஈழத்தில் இயங்காத, இந்தியாவில் இருந்து வந்திருந்த புளொட், ஈபிஆர்எல்ப் போன்ற அமைப்புகள், சம்பிரதாயத்திற்காக ஆயுதங்களை ஒப்படைந்திருந்தனர். இந்த நிகழ்வுகளை எல்லாம் தொலைக்காட்சி உடனுக்குடன் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

    அன்றைய சூழ்நிலை ஈழத்தமிழ் மக்கள் மனதில் நிம்மதியை தோற்றுவித்திருந்தது. இனிமேல் யுத்தம் இல்லை, சமாதானமாக வாழலாம் என்று எல்லோரும் பெருமூச்சு விட்டார்கள். வட-கிழக்கு மாகாணங்களில் சமாதானம் நிலவிய நேரம், இலங்கையின் பிற பாகங்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. யுத்தம் தெற்கை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருந்தது. உண்மையில் வடக்கையும், தெற்கையும் ஒருசேர சமாளிக்க முடியாத காரணத்தினாலேயே, சிறிலங்கா அரசு, இந்திய- இலங்கை ஒப்பந்தத்திற்கு சம்மதித்தது. அதே நேரம், அரசு வட-கிழக்கு மாகாண நிர்வாகத்தை இந்தியாவிடம் ஒப்படைத்து விட்டதால், தென்னிலங்கையில் இந்தியாவுக்கு எதிரான அலை வீசியது. சிங்கள மக்கள் மத்தியிலும், அரசாங்கத்தின் ஒரு பகுதியிலும் இந்திய எதிர்ப்புணர்வு அதிகரித்தது. ஒரு நாள், பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகத்தினுள் கிரேனேட் குண்டு வீசப்பட்டது. அமைச்சர் படுகாயமுற்று மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். அந்த குண்டு வெடிப்பு சம்பவம், வரப்போகும் போருக்கு கட்டியம் கூறியது.

     

    இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்

    ஈழத் தமிழ் தேசியம், அண்ணாதுரையின் திராவிட இயக்கத்தில் இருந்து சித்தாந்தத்தை கடன் வாங்கியது. மிதவாதத் தலைவர்கள், தனித் தமிழ்நாடு கோரிக்கையின் நீட்சியாகவே, தமிழீழத்தை கருதினார்கள். இருப்பினும் கட்சியின் இளைஞர் அணி, ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. அவர்களைப் பொறுத்த வரையில், திராவிட இயக்கத்தினர் தமிழ்நாடு விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடாததை; ஒரு வரலாற்றுத் தவறாக கருதினார்கள்.

     

    அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் சாத்தியமே என்று அவர்கள் நம்புவதற்கு, கண் முன்னே கண்ட நிகழ்வுகள் இருந்தன. 1971 ம் ஆண்டு, ஜேவிபி அறிவித்த சோஷலிச இலங்கையை நோக்கிய கிளர்ச்சி, இலங்கைத் தீவின் முதலாவது ஆயுதப் போராட்டமாகும். 1977 ல் இருந்து, ஆயுதபாணி தமிழ் இளைஞர்கள் போலிசை இலக்கு வைக்கத் தொடங்கினர். ஜேவிபி கிளர்ச்சி நடந்து, ஐந்து வருடங்கள் கழித்து வடக்கில் வன்முறை வெடித்தமை குறிப்பிடத் தக்கது. ஆகவே ஆரம்ப கால தமிழ் தேசியப் போராளிகளின் தலைமுறை, சம காலத்தை சேர்ந்தவர்கள் என்பது புலனாகும். ஜேவிபி கிளர்ச்சி மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் நடந்த சாதிய எதிர்ப்பு போராட்டமும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்திகளாக அமைந்துள்ளன.

    ஜேவிபியில் சில யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களும் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். எனக்குத் தெரிந்தவர்கள் எல்லோரும், தொழில் நிமித்தம் கொழும்பு நகரில் வாழ்ந்தவர்கள். ஜேவிபியில் இருந்த மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம். 1990௦, இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி வரையில் அதன் உறுப்பினர்களாக இருந்த மலையகத் தமிழர் சிலரை கொழும்பில் சந்தித்திருக்கிறேன். அப்போது ஜேவிபியில் இருந்து விலகி, தேநீர்க்கடை பணியாளர்களாக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களின் தகவலின் படி, ஜேவிபியில் இருந்த தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு என்றாலும், சில நூறு பேராவது தேறும்.

    ஜேவிபியில் இருந்து விலத்திய சிங்கள இளைஞர்கள் சிலர், தமிழீழ தேசிய இயக்கங்களிலும் சேர்ந்திருந்தனர். இடதுசாரித் தன்மை கொண்ட இயக்கங்களில் சேர்ந்திருந்த இவர்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. சிங்கள மொழியிலான அரசியல் பிரச்சாரத்திற்கு மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் தாக்குதல்கள் நடத்தவும் உதவியுள்ளனர். பிற்காலத்தில் வளர்ச்சியடைந்த வலதுசாரித் தமிழ்த்தேசியம் அவற்றை எல்லாம் மறந்து விட்டது.

    ஜேவிபியினர் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, “இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களை, இந்திய மேலாண்மை வல்லரசின் ஐந்தாவது தூணாக கருதியமை.” எதிர்காலத்தில் அவர்களைச் சாட்டியே இந்தியத் தலையீடு இடம்பெறும் என்றும் நம்பினார்கள். ஆனால் அந்தக் கருத்தியல் தவறு என்று பிற்காலத்தில் நிரூபிக்கப்பட்டது. ஜேவிபி சோஷலிசம் பேசினாலும், அதில் பெருமளவு தூய தேசியவாதக் கூறுகள் காணப்பட்டன.

    அவர்களது இந்தியா மேலான வெறுப்பின் மூலவேர், இலங்கை வரலாற்றின் ஒரு பகுதி ஆகும். இலங்கையில் அரசுரிமைப் போட்டிகளும், கிளர்ச்சிகளும் தோன்றிய காலத்தில் எல்லாம் இந்தியத் தலையீடு இடம்பெற்றுள்ளது. நவீன காலத்தில் பதிவு செய்யப்பட்ட இந்திய இராணுவ நடவடிக்கை, பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இடம்பெற்றது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிரான கிளர்ச்சியை அடக்க இந்தியப் படைகள் உதவின. 1987 ல் இந்தியப் படைகள் இலங்கையில் வந்திறங்கியமை, அதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே இரண்டு தடவைகள், இலங்கையில் எழுந்த அரச எதிர்ப்புக் கிளர்ச்சிகளை ஒடுக்க, இந்தியப் படைகள் தருவிக்கப் பட்டன.

     

    கண்டி இராச்சியத்தை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், மன்னனைப் பிடிக்க உதவிய பிரபுக்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆங்கிலேயர்கள் ஒப்பந்தப் படி நடக்காததைக் கண்டு வெகுண்டெழுந்த கெப்பிட்டிப்பொல என்ற ஊவா மாகாணத்தை சேர்ந்த பிரபு ஒருவர் கலகம் செய்தார். விரைவிலேயே ஆங்கிலேயருக்கு எதிரான கலகம் பிற பகுதிகளுக்கும் பரவியது. கண்டி இராச்சியம் மீண்டும் சுதந்திர நாடாகி விடும் என்ற சூழ்நிலை தோன்றியது. இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் படைகள் கலகத்தை அடக்க முடியாமல் தடுமாறின. இதனால் ஆங்கிலேயர் காலனியான சென்னையில் இருந்து, இந்தியப் படைகளை தருவிக்க வேண்டியதாயிற்று.

     

    இந்தியப்படைகள் கண்ணில் பட்ட பொது மக்களை கொன்று, அவர்களின் சொத்துகளை நாசம் செய்து தான் கலகத்தை அடக்கினார்கள். இந்தியாவை பிராந்திய வல்லரசாக மாற்றும் எண்ணம், அன்றே பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் மனதில் எழுந்திருக்கும். நிகழ்கால பூகோள அரசியலையும் அதன் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. வரலாறு திரும்புகின்றது என்று கூறுவார்கள். நமது கால இந்திய-இலங்கை ஆட்சியாளர்கள் ஆங்கிலேயத் தாயின் வயிற்றுப் பிள்ளைகளாகவே நடந்து கொள்கின்றனர்.

    பனிப்போர் காலத்தில் இந்திய, இலங்கை அரசுகள் சோவியத் சார்பு முகாமுடன் நெருக்கமாகவிருந்தன. எழுபதுகளில் சோவியத் சார்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய இடது கொள்கை கொண்ட சுதந்திரக் கட்சி அரசுடன் ஒத்துழைத்தது. ஸ்டாலினசம் குறித்த முரண்பாடுகளால் பிரிந்து சென்ற சீனா சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் பாராளுமன்ற பாதையை நாடியது. இதனால் அதிலிருந்து பிரிந்த, ரோகன விஜேவீர தலைமையிலான இளைஞர்கள் மக்கள் விடுதலை முன்னணி என்ற இயக்கத்தை ஸ்தாபித்து ஆயுதமேந்திய புரட்சியை நடத்த விரும்பினர்.

     

    இது ஒரு வகையில் இந்தியாவில் நக்சல்பாரி (மார்க்சிய லெனினிய) இயக்கங்களின் தோற்றத்தை ஒத்த வரலாறாக இருந்த போதிலும், ஜேவிபி அதிலிருந்து வேறுபட்டது. ஒரு காலத்தில் ஜேவிபி இலக்கியங்களில் பொல்பொட் புரட்சியாளராக புகழப்பட்டார். பொல்பொட்டின் க்மெர் ரூஜ் அமைப்பும், ஜேவிபியும் ஒரே தலைவிதியை பகிர்ந்து கொண்டதாலோ என்னவோ, இரண்டுமே கடும்போக்கு தேசியவாதத்தை கடைப்பிடித்தன. 1971 ம் ஆண்டு கிளர்ச்சியை அடக்குவதற்கு, சோவியத் யூனியனும், சீனாவும் இலங்கை அரசுக்கு உதவிய போதிலும், இந்தியப் படைகள் களத்தில் நின்று போரிட்டன. சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முதலாவது மனிதப் படுகொலை நடந்த வருடம் அது. பதினையாயிரத்திற்கும் குறையாதோர் படுகொலை செய்யப்பட்டனர்.

    1977 ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த வலதுசாரி யு.என்.பி. அரசு, சிறையில் இருந்த ஜெவிபியினருக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்திருந்தது. 1983 இனக்கலவரத்தின் பின்னர், அதே அரசு மீண்டும் ஜேவிபியை தடை செய்தது. அன்று ஜேவிபி, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளே இனக்கலவரத்திற்கு காரணம் என்று தடைக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரு பேரினவாத அரசு கொடுத்த விளக்கத்தை சிங்கள மக்களோ, அல்லது தமிழ் மக்களோ நம்பவில்லை. இருப்பினும் சிறிலங்கா அரசானது தமிழர்களுக்கு மட்டுமல்ல, இடதுசாரிகளுக்கும் எதிரானது என்பது நிரூபிக்கப்பட்டது.

     

    தடை செய்யப்பட்டதால் தலைமறைவான ஜேவிபி உறுப்பினர்கள், நீண்ட கால கெரில்லா யுத்தத்திற்கு தயார் படுத்தினார்கள். அரசுக்கு எதிரான யுத்தத்தை ஆரம்பிக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தார்கள். இந்திய-இலங்கை ஒப்பந்தம், எதிர்பார்த்திருந்த அரிய சந்தர்ப்பத்தை வழங்கியது. சிங்கள மக்கள் இந்தியாவின் தலையீட்டை விரும்பாததால், ஜேவிபியின் இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் ஈடுபட்டது. யுஎன்பி அரசாங்கத்தின் உள்ளேயும் அதிருப்தி நிலவியது. வருங்கால ஜனாதிபதியாகப் போகும் பிரேமதாச தலைமையில் ஒரு குழு கட்சிக்குள் கிளர்ச்சி செய்தது. முரண்நகையாக, இந்திய எதிர்ப்பாளர்களான ஜேவிபியும், பிரேமதாச அரசும் பிற்காலத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் இரத்தக் களரியை உருவாக்கின.

    இந்திய-இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்ட சில வாரங்களில், கொழும்பில் மந்திரி சபை கூட்டம் நடந்து கொண்டிருந்த வேளை இரண்டு கிரனேட் குண்டுகள் வீசப்பட்டன. பாதுகாப்பு கடமையில் இருந்த ஜேவிபியைச் சேர்ந்த காவலர்களே, அந்த குண்டுவீச்சுக்கு காரணகர்த்தாக்கள். ஜனாதிபதி ஜே.ஆர்.யும், முக்கிய அமைச்சர்களையும் கொலை செய்யும் நோக்குடன் குண்டு வீசப்பட்டாலும், பலர் காயங்களுடன் உயிர் தப்பி விட்டனர். அந்தச் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் நாடு முழுவதும் உணரப்பட்டன. யாழ் குடாநாட்டில் சாதாரண மக்கள், சிறிலங்கா அரசின் மேல் வெறுப்புக் கொண்டிருந்ததால், மந்திரிசபை குண்டுவெடிப்பை வரவேற்கவே செய்தனர்.

     

    ஜேவிபியின் கிளர்ச்சியில் நேரடியாக பங்களிக்கா விட்டாலும், பெரும்பான்மைத் தமிழர்கள் அவர்களுக்கு தமது தார்மீக ஆதரவை தெரிவிக்க தயங்கவில்லை. ஆயினும் இந்தியப் படைகளின் பிரசன்னம் குறித்து தான், ஜேவிபியின் நிலைப்பாடு தமிழ் மக்களிடம் இருந்து முரண்பட்டது. தமிழ் மக்கள், இந்தியப் படைகளை பாதுகாப்பு அரணாகக் கருதினார்கள். பிரச்சினை சுமுகமாக தீர்ந்த பின்னர், படைகள் இந்தியாவுக்கு திரும்பும் என்று நம்பினார்கள். ஜேவிபியும், சிங்கள மக்களில் ஒரு பிரிவினரும், இந்தியப் படைகளை அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவமாக பார்த்தனர். இன்னும் இரண்டு மாதங்களில், புலிகளும் அத்தகைய நிலைப்பாட்டை எடுக்கவிருந்தனர்.

    இனப்பிரப்பிரச்சினை தீர வேண்டும், யுத்தம் முடிய வேண்டும் என்று எதிர்பார்த்த சிங்களப் பொது மக்கள், இந்தியப் படைகளின் வருகையை தவறாக கருதவில்லை. ஆளும்கட்சியான வலதுசாரி யுஎன்பி ஆதரவாளர்கள், இடதுசாரி ஜேவிபியுடன் கணக்குத் தீர்க்க இது நல்ல சந்தர்ப்பம் என்று கருதினார்கள். தமது கழுத்துக்கு கிட்டே கத்தி வந்து விட்டதை, ஜேவிபியினரும் உணர்ந்திருந்தனர். அதனால் உடனடியாக இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென்ற கோரிக்கையை முன் வைத்துப் போராடினார்கள். மக்கள் இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டுமென போராட்டம் நடத்தினார்கள். பகிஷ்கரிப்பினால் தென்னிலங்கையில் இந்திய உற்பத்திப் பொருட்களின் விற்பனை வீழ்ச்சியடைந்தது. விற்பனையாளர்கள் இந்தியப் பொருட்களை பதுக்கி வைத்தனர், அல்லது வேறு நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டதாக கூறி விற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பகிஷ்கரிப்பை மீறி விற்ற கடைக்காரர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர், சில நேரம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

     

    சிறிலங்கா அரசு நீண்டகாலமாகவே இந்திய மருந்துகளையும், பேரூந்து வண்டிகளையும் இறக்குமதி செய்து வந்தது. அந்த வர்த்தகத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. புடவை வகைகள், இரும்பு, போன்றவற்றை இறக்குமதி செய்யும் நடுத்தர இந்தியத் தமிழ் வணிகர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதே வேளை, இந்தியப் படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் இந்தியப் பொருட்கள் அளவுக்கு அதிகமாகவே வந்து குவிந்து கொண்டிருந்தன. மக்கள் அதுவரை கேள்விப்பட்டிராத பொருட்கள் எல்லாம் சந்தைக்கு வந்தன. வியாபாரிகள் தமிழ்ப் பொது மக்களை மட்டுமல்ல, இந்தியப் படையினரையும் வாடிக்கையாளர்களாக பெற்று விட்ட மகிழ்ச்சியில், அவற்றை இறக்குமதி செய்து விற்றுக் கொண்டிருந்தனர்.

     

    “இந்தியப் படையினர், இந்தியாவில் இருந்து நேராக பலாலி விமானநிலையத்தில் வந்திறங்குவது போல, இந்தியப் பொருட்கள் கொழும்பைத் தவிர்த்து இறக்குமதியாகின்றதோ,” என்று மக்கள் பேசிக் கொண்டனர். வட-கிழக்கு மாகாணங்களில் கடமையில் இருந்த இந்தியப் படையினருக்கு, இந்திய ரூபாயிலேயே ஊதியம் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்திய ரூபாய்களை புழக்கத்தில் விட்டனர். இந்திய ரூபாய் எந்தக் கடையிலும், இலகுவாக மாற்றக் கூடியதாக இருந்தது. இதனால் யாழ் குடாநாட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது. அன்று நடந்த மாற்றங்களை இப்படியும் கூறலாம்.

     

     

    இந்திய-இலங்கை ஒப்பந்தம், ஈழ விடுதலை இயக்கங்கள் உரிமை கோரிய வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தது. மாகாண சபைகள் அமைத்து, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என்றும் சம்மதிக்கப்பட்டது. சிங்களப் பகுதி மாகாணங்களுக்கும் அதிகாரப் பரவலாக்கல் சென்றதை, அன்று சில தமிழ் இனவாதிகளால் ஜீரணிக்க முடியவில்லை. முரண்நகையாக, தமிழர்களின் பிரச்சினை தீர்க்கவென கொண்டு வரப்பட்ட மாகாண சபை, இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தினால் வட- கிழக்கில் செயற்படாமல் முடங்கியது.

    இந்தியாவின் திட்டம் நிறைவேறியிருந்தால், வட-கிழக்கு மாகாணம் தனியான போலிஸ், துணைப் படையுடன் சுயாட்சிப் பிரதேசமாக இருந்திருக்கும். ஆனால் இந்தியா தான் விரும்பிய பொம்மை அரசொன்றை நிறுவ முயன்றது. இதற்கு முதற்படியாக “ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி” என்ற பெயரில் ஆயுதக் குழுவொன்றை அமைத்திருந்தது. இந்த புதிய அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு பின்னணியைக் கொண்டவர்கள்.

    முன்பு புலிகளால் ஈழத்தில் இயங்க விடாது தடை செய்யப்பட்ட புளொட், ஈபிஆர்எல்எப், டெலோ ஆகிய அமைப்புகளில் இருந்து விலகிய உறுப்பினர்கள். தமிழக முகாம்களில் அடைந்து கிடந்த அகதிகள். இத்தகையோரை சேர்த்து தான் அந்த இந்திய சார்பு அமைப்பு தோன்றியது. பரந்தனிலும், கிளிநொச்சியிலும் நகரையொட்டி நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தின் முகாம்களுக்கு அருகில், ஈஎன்டிஎல்ப் முகாம்கள் அமைந்திருந்தன. அவர்கள் பகிரங்கமாக ஆயுதங்களுடன் காவல் காப்பதை வீதியால் செல்லும் அனைவரும் காணக் கூடியதாக இருந்தது. மாகாண சபையின் தலைமையை, அரசியல் ரீதியாக பலம்பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். பிடம் ஒப்படைக்கவே விரும்பினர். ஆயுதபாணிகளான ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள், இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த இடங்களில் தங்க வைக்கப் பட்டனர்.

    ஒரு முறை யாழ் நகரில், ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவின் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு வழமையாக செல்லும் நபர்களை விட, எண்ணிக்கை அதிகமாக்கிக் காட்ட நினைத்தார்கள் போலும். யாழ் நகர் நோக்கிச் சென்ற பேரூந்து வண்டிகளை கூட்டம் நடை பெற்ற இடத்திற்கு திசை திருப்பி விட்டார்கள். எதிர்பாராத விதமாக அகப்பட்டுக் கொண்ட பயணிகள், கூட்டம் முடிவடைந்த பிறகு தான் தத்தமது இடம் நோக்கி செல்ல முடிந்தது. இந்திய அமைதிப் படையினர், இரவிலும் பகலிலும் வீதிகளில் ரோந்து செல்வது வழக்கம். அவர்களுடன் இந்தியாவிலிருந்து வந்த ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களும் கூடச் செல்வார்கள். முன்பு யாழ் குடாநாட்டில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் அந்த அமைப்பில் ஏராளமான உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் இப்போது அரசியலை விட்டொதுங்கி தமது குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். இந்தியப் படையுடன் ரோந்து செல்லும் ஈபிஆர்எல்ப் ஆயுதபாணிகள், முன்னாள் தோழர்களையும் கண்டு பேசி கூட்டிச் சென்றனர். மீண்டும் அமைப்புடன் இணைந்து கொண்டவர்களுக்கு, இந்திய இராணுவம் ஆயுதங்களை வழங்கியது.

    ஈஎன்டிஎல்ப், ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை, புலிகள் தமக்கு வந்துள்ள அச்சுறுத்தலாக கருதினார்கள். ஒப்பந்தத்தை ஏற்று ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதால், நிராயுதபாணிகளான தாங்கள் இலக்கு வைக்கப்படுவோம் என்று அஞ்சினார்கள். அவர்களது அச்சத்தை மெய்ப்பிப்பது போல, சில இடங்களில் தெருவில் கண்ட புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டது. தாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரும், சில குழுக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது குறித்து புலிகள் முறைப்பாடு செய்திருந்தனர். ஆயினும் அந்த முறைப்பாடுகளை இந்திய அமைதிப் படை புறக்கணித்தது. ஒரு நாளிரவு, பரந்தனிலும், கிளிநொச்சியிலும் ஈஎன்டிஎல்ப் முகாம்கள் மீது, இந்திய இராணுவம் திடீர்த் தாக்குதல் நடத்தியது. சிலர் காயமடைந்த தாக்குதலில், ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது. இந்தியப் படை தனதருகில் ஒரே வேலியைப் பகிர்ந்து கொண்ட ஈஎன்டிஎல்ப் முகாமை தாக்கியது, அன்றைய சிறந்த நகைச்சுவை. அந்த நாடகம் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர், மீண்டும் அதே இடத்தில் ஈஎன்டிஎல்ப் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் காட்சி தந்தனர்.

    இராணுவ முகாம்களை தாண்டி செல்லும் வாகனங்களை இந்தியப் படையினர் சோதனையிட்டனர். பயணிகளை இறக்கி விட்டு, ஆயுதங்கள் கடத்தபடுகின்றதா என்பதை ஆராய்ந்தனர். இந்தியப் படை வரும் வரையில் யாழ் குடாநாட்டை கட்டுப் பாட்டில் வைத்திருந்த புலிகள், தமது ஆயுதங்களை நிலத்தை தோண்டி ஒளித்து வைத்திருந்தனர். “ஆயுதங்களை ஒப்படைத்தது தவறு” என்று பொருள் படும் சுவரொட்டிகள் பொது மக்களின் பெயரில் புலிகளால் ஓட்டப் பட்டன. புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் சென்ற வாகனங்களில் இயந்திரத் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததாக நேரில் கண்ட சிலர் கூறினார்கள். அமைதிப் படை நிலை கொண்டிருந்ததாலும், சமாதானம் நிலவியதாலும் யாரும் ஆயுதங்களை பிரயோகிக்க தயங்கினார்கள். இதே நேரம், இரகசியமாக சில கொலைகள் நடப்பதாக மக்கள் பேசிக் கொண்டனர்.

     

    இலங்கையில் வந்திறங்கிய இந்தியப் படையினர் சிலருக்கு, தாங்கள் எந்த நாட்டில் நிற்கிறோம் என்று தெரிந்திருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த படையினர், தாம் பாகிஸ்தானில் வந்திறங்கியதாக நினைத்தனர். கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்ந்ததும், இந்திய இராணுவ சிப்பாய்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழ்-முஸ்லிம் கிராமங்களுக்கு இடையிலான முரண்பாட்டில், இந்திய இராணுவம் தமிழ் (இந்துக்கள்) பக்கம் சார்ந்து நின்றது. இதனால் முஸ்லிம்கள் மத்தியில் இந்திய இராணுவம் மீது அதிருப்தி தோன்றியது.

    திருகோணமலையில் இந்திய இராணுவம் வன்முறைக்கு உதவியமை தெளிவாகத் தெரிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், தென்னிலங்கையில் “பூசா” முகாமில் சிறை வைக்கப் பட்டிருந்த தமிழ்க் கைதிகள் விடுதலையாகி ஊர் திரும்பினார்கள். திருகோணமலையை சேர்ந்த முன்னாள் பூசா கைதிகள், இந்திய இராணுவத்தின் உதவியுடன், திருகோணமலை வாழ் சிங்களவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். பல சிங்கள குடியேற்றங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால், சிங்கள மக்கள் இடம்பெயர்ந்தனர். மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தடுக்கும் நோக்குடன், சிறிலங்கா அரசு அந்த செய்திகளை இருட்டடிப்பு செய்தது. இன்று வரை, திருகோணமலை அசம்பாவிதங்கள் சிங்கள மக்களுக்கு மறைக்கப் பட்டே வந்துள்ளன.

     

    சிறிலங்கா அரசு, புலிகளின் திருகோணமலைப் பொறுப்பாளரான புலேந்திரன் மேல் இலக்கு வைத்திருந்தது. ஈழப்போர் ஆரம்பமாகிய காலங்களில், திருகோணமலை சிங்களப் பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக புலேந்திரன் முக்கிய சந்தேக நபராக கருதப்பட்டார். தற்செயலாக புலிகளின் தலைவர்களான, புலேந்திரன், குமரப்பா சென்ற படகு வட இலங்கைக் கடலில் தடுத்து நிறுத்தப் பட்டது. சிறிலங்கா கடற்படையானது, அவர்களை கைது செய்து, பலாலி இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றது. மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லவிருந்த வேளை, சயனைட் நஞ்சை உட்கொண்டு மாண்டனர். சிறையிலிருந்த அவர்களை பார்வையிடச் சென்ற அன்டன் பாலசிங்கம் போன்றோரே சயனைட் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப் பட்டது. புலித் தலைவர்கள் கொழும்பு கொண்டு செல்லப் படுவதை, இந்திய இராணுவம் விரும்பவில்லை. இருப்பினும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை மாற்ற முடியவில்லை.

    அதற்கு முன்னர், வட-கிழக்கு மாகான சபையில் புலிகளின் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இந்திய இராணுவம் முன் வந்தது. திரை மறைவில் பேரம் பேசல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் எதுவுமே நடைமுறையில் வந்ததாகத் தெரியவில்லை. புலிகளின் கோரிக்கைகளை முன்வைத்து, அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இந்திய அமைதிப் படை, திலீபனின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டியது. இறுதியாக நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் மரணமடைந்த திலீபனின் பூதவுடல், யாழ் குடாநாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. திலீபனின் சாத்வீக போராட்டத்தினால் கவரப்பட்ட பொது மக்கள், பெருமளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அஹிம்சா வழிப் போராட்டத்தினால் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. ஆனால் திலீபனுக்கு பிறகு யாரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. புலிகளின் தலைமைப் பீடம் மீண்டும் ஒரு போருக்கு தயாராவதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.

     

    குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் கைது நடவடிக்கையால், போர் நிறுத்தத்தை முறித்துக் கொள்வதாக புலிகள் அறிவித்தனர். கிழக்கு மாகாணத்தில் வீதியில் ரோந்து சென்ற படையினர் மீது நிலக்கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப் பட்டது. இந்திய, இலங்கைப் படையினர் அடுத்தடுத்து சென்ற போதிலும்; சிங்களப் படையினர் சென்ற பார ஊர்தி கண்ணி வெடிக்கு இலக்காகியது. புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தி விட்டதை புரிந்து கொண்ட இந்திய இராணுவம், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அக்டோபர் மாதம் வழமையான ரோந்துப் பணிகளை முடித்துக் கொண்டு, யாழ் கோட்டை முகாமுக்கு திரும்பிய இந்தியப் படையினரின் வாகனம் தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆயுதமேந்திய புலி உறுப்பினர்கள், யாழ் கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.

    யாழ் கோட்டை மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் இருந்த இராணுவ முகாம்கள் யாவும் முற்றுகையிடப் பட்டன. எதிர்பாராத முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட இந்திய இராணுவம், கண்மூடித் தனமான ஷெல் தாக்குதல் நடத்தியது. முகாம்களுக்கு அருகில் இருந்த புலிகளின் காவலரண்கள் மட்டுமல்லாது, குடியிருப்புகளும் ஷெல் வீச்சுக்கு இலக்காகின. மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். இரண்டு மாத சமாதானத்தின் பின்னர், மீண்டும் யுத்தம் தொடங்கி விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டனர். இம்முறை, இந்தியப் படையினரின் தாக்குதல்கள், சிறிலங்காப் படையினரை விட மிகவும் ஆக்ரோஷமாக அமைந்ததிருந்தது. யாழ் குடாநாட்டு மக்கள், மாபெரும் மனிதப் பேரழிவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.

    இந்திய இராணுவத்துடன் யுத்தம். பலரால் நம்ப முடியாமல் இருந்தது. கோட்டை முகாமில் இருந்து யாழ் நகரை நோக்கி, சரமாரியான எறிகணை வீச்சுகள் நடந்தன. இதனால் யாழ் நகருக்கு வேலைக்கு சென்ற அனைவரும், நேரத்தோடு வீடு திரும்பினார்கள். என்ன நடக்கின்றது என்று அவர்களால் ஊகிக்க முடியவில்லை. யாழ் நகர வீதிகள் எங்கும் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த யுத்தம் நினைவுக்கு வந்தது. இப்போதும் இலங்கை இராணுவமே மோதுவதாக நினைத்தனர். ஆனாலும், அவர்கள் எப்படி திரும்ப வந்தார்கள்? எல்லோர் மனதிலும் குழப்பம். ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்ட புலிகளும், ஆரம்பத்தில் சிங்கள இராணுவத்தையே குறி வைத்து தாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் நடந்த கண்ணி வெடிச் சம்பவத்தில், இந்தியப் படையின் டிரக் வண்டிக்கு பின்னால் சென்ற, சிறிலங்கா படையினரின் வாகனமே தாக்கப்பட்டது.

    இந்திய அமைதிப் படையும், தமிழர்களுக்கு சாதகமாகத் தான் நடந்து கொண்டது. உதாரணத்திற்கு திருகோணமலையை ஈழ சுயாட்சிப் பிரதேசத்தின் தலைநகரமாக்குவதற்கு இந்திய இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியது. வருங்கால மாகாண சபையும் அங்கேயிருந்து இயங்கவிருந்தது. அதற்கு முதல் படியாக, அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை அப்புறப் படுத்த உதவியது. அத்தகைய சம்பவத்தை, அதற்கு முன்னரும், பிறகும் இலங்கை வரலாற்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. சிங்களப் பேரினவாத அரசு, தென்னிலங்கையில் சிறை வைக்கப்பட்ட சிங்கள குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, தமிழர் பகுதியில் குடியேற அனுப்பி வைத்தது. பாரம்பரிய தமிழர்களின் நிலங்களை அபகரித்து, தங்கள் குடும்பத்தை தருவித்து குடியேறினார்கள். 1983 கலவரத்திற்கு முன்னரே, திருகோணமலை கலவரப் பூமியாக காட்சியளித்தது. கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களுக்கு போலிஸ் பாதுகாப்பும் கிடைத்து வந்தது. இந்திய இராணுவத்தின் வருகையுடன் நிலைமை தலைகீழாக மாறியது. திருகோணமலை நகரிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் குடியேறிய சிங்களவர்களை விரட்டியடித்த தமிழ் இளைஞர்களுக்கு கிரேனேட் விநியோகம் செய்தது. முன்னர், சிங்களக் குடியேறிகளால் பாதிக்கப் பட்டு, பூசா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு விடுதலையானவர்கள் பழி தீர்க்க கிடைத்த சந்தர்ப்பமாக கருதினார்கள்.

    கிழக்கு மாகாணத்திற்கென தனித்துவமான பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல், இலங்கையின் இனப்பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று மூவின மக்கள், இன அடிப்படையில் பிளவுண்டு மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகும். சிறிலங்கா அரசு, சிங்கள, முஸ்லிம் கிராமங்களில் ஊர்காவல் படை அமைத்து, ஆயுதங்களைக் கொடுத்திருந்தது. (இந்தியா, ஒரிசாவில் உள்ள “சல்வா ஜூடும்” போன்றது.) சிறிலங்கா இராணுவத்துடனான யுத்தம் நடைபெற்ற காலங்களில், ஊர்காவல் படைகளால் பல தமிழ்க் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், தமிழ் ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டிருந்தது. இதனால் பெருமளவில் முஸ்லிம் கிராமங்களும், சிறிதளவு சிங்களக் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. இலங்கையின் இனப்பிரச்சினையை, இந்தியாவும் எளிமையாக புரிந்து கொண்டதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இயற்கை வளம் நிறைந்த கிழக்கு மாகாணத்தில், இனங்களிடையே பகை முரண்பாடுகளை சிறிலங்கா அரசு, திட்டமிட்டு வளர்த்திருந்தது.

    இனப்பிரச்சினைப் புயல் கிழக்கில் மையங் கொண்ட போதிலும், போர் மேகங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு சிறிய நிலப்பகுதியைத் தவிர, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள, யாழ் குடாநாட்டின் பூகோள அமைவிடம் எப்போதும் இராணுவத்திற்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை. இராணுவ முகாம்கள் அனேகமாக கடற்கரைப் பகுதியை ஒட்டியே இருந்ததால், அவற்றை முற்றுகையிடுவது போராளிகளுக்கு இலகுவாக இருந்தது. சிங்கள இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு சூனியப் பிரதேசம் இருக்கும். மயான பூமியாக காட்சி தரும் அந்த இடத்திற்கு அருகில் செல்லக் கூட, மக்கள் அஞ்சுவார்கள். சமாதான காலத்தில், இந்தியப் படையினர் முகாம் அருகாமையில் செல்லும் வீதிகள் பொது மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டன.

    எமது உறவினர்கள் சிலர், காங்கேசன்துறை முகாம் அருகில் மீள்குடியேற்றத்திற்காக சென்றிருந்தனர். அவர்களின் வீட்டிற்கு செல்லும் வழியில், முகாமின் மத்தியில் இருந்த மைதானத்தில் ஆர்ட்டிலறி பீரங்கிகள் துருத்திக் கொண்டு நின்றன. முன்பு சிறிலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் விழுந்து வெடிக்கும் ஓசையை மட்டும் கேட்டு வந்தோம். எறிகணைகளை ஏவும் ஆர்ட்டிலறிகளை அப்போது தான் நேரில் பார்த்தோம். இன்னும் சில வாரங்களில், இந்திய இராணுவம் இதே ஆர்ட்டிலரிகளை பயன்படுத்தி பொது மக்களின் குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் என்று, அப்போது யாரும் நினைக்கவில்லை. இலங்கை இராணுவம் காசுக் கணக்குப் பார்த்து ஷெல் வீசியிருப்பார்கள். இந்திய இராணுவத்தினர் வகை தொகையின்றி அள்ளிக் கொட்டினார்கள். நிமிடத்திற்கொரு ஷெல் வந்து விழுந்து வெடித்தது.

    காங்கேசன்துறை, பலாலி முகாம்களில் இருந்த படையினரே முதலில் முற்றுகையை உடைத்துக் கொண்டு முன்னேறினார்கள். அதனால், அந்த முகாம்களை சுற்றி பத்து மைல் சுற்றாடலில் இருந்த வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. இந்தியப் படையினர் முன்னேறுவதற்கு டாங்கிகளும் பெருமளவு உதவின. வீதிகளில் கண்ணி வெடி புதைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்பதால், டாங்கிகள் வீட்டு வளவுகளைக் கடந்து முன்னேறின. எதிரில் அகப்பட்ட மதில் சுவர், மரம்,செடி எல்லாவற்றையும் இடித்து தள்ளி விட்டு முன்னேறின. சில இடங்களில் அலறி ஓடிய பொது மக்கள் மீதும் டாங்கிகள் ஏறிச் சென்றன. இந்திய இராணுவத்தின் போரிடும் முறை, சிறிலங்கா இரானுவத்தினதை விட முற்றிலும் மாறுபட்டிருந்தது. நிலங்களை கைப்பற்ற முன்னேறும் சிறிலங்கா படையினர், தமது பக்கத்தில் அதிக இழப்பு ஏற்பட்டால் பின்வாங்கி விடுவார்கள். ஆனால் சனத்தொகை பெருக்கம் அதிகமுள்ள இந்தியாவை சேர்ந்த இராணுவத்திற்கு, ஆட்பற்றாக்குறைப் பிரச்சினை இருக்கவில்லை. எத்தனை போர் வீரர்கள் செத்து மடிந்தாலும், அலை அலையாக வந்து கொண்டே இருந்தனர்.

    இவ்வளவு தீவிரமாக போரிட்டும், இந்தியப் படை யாழ்நகரை அடைவதற்கு ஒரு மாதம் எடுத்தது. யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதி பெருமளவு நகரமயக்கப் பட்டிருந்தது. குடாநாட்டிலேயே சன நெரிசல் அதிகமுள்ள பிரதேசமும் அது தான். வலிகாமம் என்றழைக்கப்படும் செம்மண் பிரதேசம் முழுவதும், புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் நடந்த உக்கிரமான சண்டையில் சிக்கி சின்னாபின்னப் பட்டது. ஈழப்போர் தொடங்கியதில் இருந்து, யாழ்குடாநாடு சந்தித்த முதலாவது மனிதப் பேரவலம் அப்போது தான் ஏற்பட்டது. வடக்கே காங்கேசன்துறையில் இருந்து, தெற்கே யாழ் நகரம் வரையிலான பகுதி, யாருமற்ற சூனியப் பிரதேசமாகிக் கொண்டிருந்தது. மக்கள் சாரிசாரியாக கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர்.

    யாழ் குடாநாட்டின் கிழக்குப் பகுதியான, வடமராட்சியும், தென்மராட்சியும் அமைதியாக காட்சியளித்தன. அங்கே வந்து சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள், தமக்குத் தெரிந்த உறவினர்கள் வீடுகளில் தங்கினார்கள். உறவினர்கள் இல்லாதோர் பாடசாலைகளில் தங்கினார்கள். இன்னும் சிலர் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இந்திய இராணுவம், யாழ் நகரம் வரை வந்து விட்டதால், புலிகளும் தென்மராட்சி ஊடாக வன்னிக் காடுகளை நோக்கி பின்வாங்கினார்கள். தென்மராட்சிப் பகுதி, யாழ் குடாநாட்டை வன்னி பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவிருந்தது. அதனால் அங்கே யுத்தம் நடக்காமல் தவிர்க்கப் பட்டது. இருப்பினும் தென்மராட்சியை கைப்பற்றும் நோக்குடன், இந்திய இராணுவம் அதிர்ச்சி தரும் படுகொலையை நடத்தியது.

SHARE