ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்

371

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு பிரதேசத்தில்  நேற்று  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வீதியை மறித்து டயர்களை போட்டு தீயை மூட்டி போக்குவரத்தை தடை செய்து மக்கள் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதையன்கட்டில் இடம்பெற்றவிபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு சார்பாக நடந்துகொண்டதாகவும் விபத்தை ஏற்படுத்தியவர்களை கைதுசெய்யவில்லை எனவும் தெரிவித்து இந்த ஆர்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

நேற்றுமுன்தினம் மாலை முத்தையன்கட்டு வலது கரை பகுதியில் பெண்ணொருவரை உந்துருளியில் வந்த இளைஞர்கள் சிலர் மோதித் தள்ளியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில்  சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் குறித்த விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தலைக்கவசம் அணியாது சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத நிலையில் வந்து இந்த விபத்தை ஏற்படுத்தி இருந்த போதிலும் பொலிஸார் அவர்களை கைது செய்யவில்லை எனவும் நீதியான விசாரணைகளை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து இன்றைய தினம் மக்கள் இந்த சாலை மறியலை மேற்கொண்டதோடு பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வருகைதந்த ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுடன் கலந்துரையாடி விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு உரிய தண்டனைகளை பெற்று கொடுப்பதாகவும் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்ததோடு பக்கசார்பாக நடந்துகொண்ட பொலிசாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை தொடர்ந்து மக்கள் ஆர்பாட்டத்தை கைவிட்டு சென்றனர் .

SHARE