‘ஆதாரம் இருந்தால் கொடுங்கள்’ – இம்ரான்கான் ஆவேசம்

410
காஷ்மீர் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்று கூறும் இந்தியா, அதற்கான ஆதாரத்தை தர வேண்டும் என இம்ரான்கான் ஆவேசமாக கூறினார்.
காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பிரமணியன், சிவசந்திரன் உள்ளிட்ட 40 வீரர்கள் பலியனார் கள்.

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஒரு வீடியோ செய்தி வெளியிட்டு, இது அந்த நாட்டு டெலிவிஷனில் ஒளிபரப்பானது. அதில் அவர் பேசி இருப்பதாவது:-

காஷ்மீர் தாக்குதலில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு சுமத்தி உள்ளது. எனவே இதற்கு பதில் அளிக்க விரும்புகிறேன்.

ஆரம்பத்திலேயே நீங்கள் பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தி இருக்கிறீர்கள். ஆனால் இதற்கு ஆதாரம் இல்லை. பாகிஸ்தானுக்கு இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் ஒருபோதும் எண்ணியது இல்லை.

காஷ்மீரில் ஒவ்வொரு முறையும் ஏதாவது நடக்கிறபோது, நீங்கள் பாகிஸ்தானை பொறுப்பாளியாக்க விரும்புகிறீர்கள். காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு பதிலாக, பேச்சுவார்த்தை தொடங்காமல், முன்னோக்கி நகராமல், இஸ்லாமாபாத்தை கசையடி படுகிற பையனாக்கவே விரும்புகிறீர்கள்.

நான் உங்களுக்கு தெளிவாக சொல்கிறேன். இது புதிய பாகிஸ்தான். புதிய மனப்பாங்கு இருக்கிறது. சிந்தனையில் புதிய பாதை இருக்கிறது. பிற நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு பாகிஸ்தான் மண் பயன்படக்கூடாது, மற்றவர்கள் இங்கு வந்து தாக்குதல் நடத்துவதையும் நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் ஸ்திரத்தன்மையை விரும்புகிறோம்.

இந்திய அரசுக்கு ஒரு வாய்ப்பு தருகிறேன். இந்த தாக்குதலில் பாகிஸ்தானியர் யாருடைய தொடர்பு குறித்தாவது விசாரணை நடத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அதைச் செய்வதற்கு நாங்கள் தயார்.

பாகிஸ்தானியர் ஒருவருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பதற்கு உங்களிடம் நடவடிக்கை எடுக்கத்தக்க விதத்தில் ஆதாரம் இருந்தால், எங்களிடம் கொடுங்கள். நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்ற உத்தரவாதத்தை நான் தருகிறேன்.

பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும், பாகிஸ்தானுக்கு எதிராக பழிவாங்க வேண்டும், பாகிஸ்தான் மீது ராணுவ துல்லிய தாக்குதல் நடத்த வேண்டும் என்றெல்லாம் இந்தியாவில் சொல்வதை நாங்கள் கேட்கிறோம். முதலில், எந்த சட்டமும், எந்தவொரு நாடும் நீதிபதியாகவும், வக்கீலாகவும், தண்டனையை நிறைவேற்றுபவராகவும் இருக்க அனுமதிக்கிறதா? இது என்ன வகையிலான நீதி?

நீங்கள் தேர்தலை சந்திக்க இருக்கிறீர்கள். தேர்தலின்போது, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்தால் அது உங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும் என நீங்கள் கருதுகிறீர்கள் என்றே நாங்கள் நம்புகிறோம்.

நீங்கள் பாகிஸ்தான் மீது என்ன வகையிலான தாக்குதலை நடத்த விரும்பினாலும், பாகிஸ்தானும் பதிலடி தரும். பழிவாங்குவதை தவிரவேறு வழி இல்லை.

போர் தொடங்குவது எளிது. போர் தொடங்குவது நமது கைகளில் இருக்கிறது. ஆனால் முடிவு அப்படி இருக்காது. அது எங்கே போகும்? கடவுளுக்குத்தான் தெரியும். இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

SHARE