இணுவில் கிழக்குப் பகுதியில் முதியவரை கத்தியால் குத்தி விட்டு இளைஞன் தப்பியோட்டம்

441

இணுவில் கிழக்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், அங்கு வசித்துவரும் முதியவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.கழுத்து மற்றும் நெஞ்சுப் பகுதியில் கத்திக்குத்துக் காயங்களுக்குள்ளான முதியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று  நண்பகல்  இடம்பெற்றது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

82 வயதுடைய முதியவரே கத்திக்குத்துக்கு இலக்காகிக் காயமடைந்தார். அவரும் அவரது துணைவியுமே அந்த வீட்டில் வசித்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் காயமடைந்த முதியவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது. அவரது மனைவி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொள்ளை முயற்சியில்லை என முதியவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் அடிப்படையில் இளைஞர்கள் இருவர் நேற்று  மாலை கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் முதியவரின் வீட்டில் வேலை செய்பவர்கள். அவர்களில் ஒருவரே மதுபோதையில் முதியவரைக் குத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE