இருதய சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களுக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள “இதயத்திற்கு இதயம்“ நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன 50 இலட்ச ரூபா நிதி அன்பளிப்பினை நேற்றைய தினம் வழங்கி வைத்தார்.
கடந்த 16ஆம் திகதி “இதயத்திற்கு இதயம்“ நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தினை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிக்கமைய இன்று இந்த நிதி அன்பளிப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலன்னறுவை பௌத்த சங்கத்தின் பங்களிப்புடன் இந்த நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கான காசோலை ஜனாதிபதி விசேட வைத்திய நிபுணர்கள் ருவன் ஏக்கநாயக்க மற்றும் ராஜித டி சில்வா ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
இதனிடையே கம்பஹா, அக்கரவிட அசோகாராம விகாரையின் அறநெறிப் பாடசாலைக் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளுக்கான நிதி அன்பளிப்பினை விகாராதிபதி வண. மடவலதென்னே விமலசார தேரரிடம் இன்று ஜனாதிபதி கையளித்தார்.
லக்கல, பல்லேகம மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவ, மாணவிகள் அண்மையில் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய அப்பாடசாலைக்கு 25 இலட்ச ரூபா பெறுமதியான கணனிகளும் விளையாட்டு உபகரணங்களும் இன்று ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
அத்தோடு நோய்வாய்ப்பட்டதன் காரணமாக மிக அசௌகரியமான நிலையில் வாழ்ந்து வந்த மாகொல டீ.டீ.ரம்யா நீலகாந்தி அம்மையார் ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளுக்கமைய அவரது குடும்ப நலனுக்காக சுய தொழிலில் ஈடுபடுவதற்காக முச்சக்கர வண்டியொன்றும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் 2019ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்படும் யொவுன் புர இளைஞர் முகாமில் பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பங்குபற்றும் இளைஞர், யுவதிகளுக்கு அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இன்றைய தினம் ஜனாதிபதி நிதி அன்பளிப்பு வழங்கப்பட்டது.
தயா டி அல்விஸ், குசும் பீரிஸ், யமுனா மாலனி பெரேரா ஆகிய பாடலாசிரியர்களை பாராட்டும் முகமாக இடம்பெறும் இசை நிகழ்விற்கான நிதி அன்பளிப்பையும் இன்று ஜனாதிபதி வழங்கினார். பாடல் உருவாக்கத்தில் பங்களிப்பு செய்பவர்களுக்குரிய நிதியை கணக்கீடு செய்ய உதவும் தரவுகளை களஞ்சியப்படுத்தும் இயந்திரம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கான நிதி இன்று ஜனாதிபதி வழங்கி வைக்கப்பட்டதுடன், அதற்கான காசோலையினை பாடல் உருவாக்க நிலையத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாசவிடம் ஜனாதிபதி கையளித்தார்.