இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் நாளை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடாக 445000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் இதில் 216000 கோடி ரூபாவை கடனாக பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை கடந்த ஆண்டு சமர்ப்பிக்க முடியாத நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடைக்கால வரவு செலவு திட்டம் ஒன்றினை அரசாங்கம் முன்வைத்தது.
இவ் இடைக்கால கணக்கறிக்கையில் இந்த ஆண்டு முதல் நான்கு மாதங்களுக்காக 1765 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சேவைகளுக்காக 790 பில்லியன் ரூபாவும், திரட்டு நிதியத்துக்காக 970 பில்லியன் ரூபாவும், முற்பணங்களுக்காக 5 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்தன.
இதனைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டு பிரேரணை கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்டது.
இப் பிரேரணையில் இம்முறை வரவுசெலவு திட்டத்தில் 445000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கடன் பெறக்கூடிய தொகை 216000 கோடி ரூபாவாகும். அத்துடன் இக்குறை நிரப்பியில் ஜனாதிபதிக்கு 1355 கோடியே 7180000 ரூபாவும், நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 18384 கோடியே 5358000 ரூபாவும், பாதுகாப்பு அமைச்சுக்கு 39306 கோடியே 9030000 ரூபாவும், பிரதமரின் அமைச்சான தேசிய கொள்கைகள்,பொருளாதார அலுவல்கள் ,மீள் குடியேற்றம்,புனர்வாழ்வளிப்பு,வடமாகாண அபிவிருத்தி,வாழ்க்கை தொழிற்பயிற்சி,திறன் அபிவிருத்தி,மற்றும் இளைஞர் அபிவிருத்தி அமைச்சுக்கு 9830கோடியே 9652000ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சுக்கு 18748 கோடியே 2398000ரூபாவும் வீடமைப்பு ,நிர்மாணத்துறை,மற்றும் கலாசார அமைச்சுக்கு 1663 கோடியே 1300000 ரூபாவும் கல்வி அமைச்சுக்கு 10500கோடி ரூபாவும் மலை நாட்டு புதிய கிராமங்கள்,உட்கட்டமைப்பு வசதிகள்,மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சுக்கு 388 கோடியே 3000000ரூபாவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு 856 கோடியே 2000000ரூபாவும் கைத்தொழில் வாணிப ,நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம்,மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுக்கு 289கோடியே 4900000ரூபாவும் உள்ளக,உள்நாட்டு அலுவல்கள் ,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராச்சி அமைச்சுக்கு 29239 கோடியே 6005000ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.மிகுதி ஏனைய அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சலுகைகள்
இம்முறை வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. சுயதொழில், நிவாரண கடன்கள், சலுகைகள் என இம்முறை உள்ளடக்கப்படவுமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் வெளிநாட்டு கொடுப்பனவுகளை இலங்கைக்குள் கொண்டுவரல், ஏற்றுமதிக்கான தடைகளை நீக்குதல் என்பனவும் வாகன வரிகளில் மீளமைக்கப்படும் எனவும், மதுபான வரிகள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் பெருந்தோட்ட துறையினருக்கான நிவாரணங்கள், தேயிலை தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 50 ரூபாய் கொடுப்பனவு என்பனவும் உள்வாங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
நாளைய தினம் பாராளுமன்றத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக பாராளுமன்ற சபை ஆசனங்களை சபை அமர்வுகளுக்கு முன்னர் பரிசோதனை செய்யவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் அறைகளை பரிசோதனை செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், பாராளுமன்ற கலரி நாளைய தினம் பொதுமக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட மாட்டது. சிறப்பு அதிதிகள் மாத்திரம் கலரியில் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் செவ்வைக்கிழமை சபைக்கு வரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்கள் நுகசெவன வாகன தரிப்பிடத்தில் நிறுத்தப்படுவதுடன் சிறப்பு அதிதிகள் ஜயந்திபுர வாகன தரிப்பிடங்களில் அவர்களின் வாகனங்களை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற வளாகத்துக்குள் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது.