கடந்த வாரம் வெளியான ‘தடம்’ திரைப்படம்இ முதல் வார முடிவில் சென்னையில் ரூ. 92 லட்சம் வரை வசூலை பதிவு செய்துள்ளது. வெளிநாடுகள் ரூ. 60 லட்சம் வரை வசூலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கொலை, அதற்கு தொடர்புடையவர்களாக போலீசார் சந்தேகிக்கும் இரண்டு பேர். அந்த இரண்டு பேரை சுற்றி நடக்கும் அதிரடி த்ரில்லர் படம் தா ‘தடம்’. ஏற்கனவே ’தடையற தாக்க’ மூலம் வெற்றியை பதிவு செய்துவிட்ட மகிழ் திருமேனி, அருண் விஜய் கூட்டணி, ‘தடம்’ படத்தில் அதை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
கடந்த வாரம் வெள்ளியன்று பல படங்கள் திரைக்கு வந்திருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் ஓவியாவின் ’90 எம்.எல்’ படத்திற்கே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எந்தவித சலனமும் இல்லாமல் வெளிவந்து, தற்போது பாக்ஸ் ஆஃபிஸில் அதகளம் செய்து வருகிறது ‘தடம்’.
அதன்படி, வெளியான முதல் நாளன்று சென்னையில் மட்டும் ’தடம்’ திரைப்படம் ரூ. 28 லட்சம் வரை வசூல் செய்ய, ‘90 எம்.எல்’ திரைப்படம் ரூ. 30 லட்சம் வரை வசூலித்தது. ஆனால் விமர்சகர்கள் வட்டத்தில் தடம் படத்திற்கு பாராட்டுக்கள் குவிய, அடுத்தநாள் வசூல் நிலவரம் தலைகீழானது.
அதன்படி, ’தடம்’ திரைப்படம் வெளிநாடுகளில் வெளியான முதல் நாளன்று ரூ. 50 லட்சம் வசூலித்துள்ளது. இரண்டாம் நாளில் (சனிக்கிழமை) ரூ. 60 வசூலை பதிவு செய்துள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வந்தாலும் ’என்னை அறிந்தால்’ படம் அருண் விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படமும் தமிழ், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள ‘தடம்’ திரைப்படமும் அருண் விஜயக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.
குவிந்து வரும் வரவேற்பு காரணமாக, ’90 எம்.எல்’ படத்தை விட, ’தடம்’ படத்திற்கு திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்