அரசியல் யாப்பை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும்?

425

 

இடைக்கால அறிக்கையில் சில முன்னேற்றகரமான விடயங்கள் இருக்கின்றன ஆனால் அவை ஒரு முடிவல்ல என்று இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.

கடந்த வாரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்திலேயே சம்பந்தன் இதனை தெரிவித்திருக்கின்றார்.

இதிலிருந்து சம்பந்தன் தலைமையிலான அணியினர் தங்களது வேலையை ஆரம்பித்துவிட்டனர் என்பது தெளிவு. சம்பந்தன் தனதுரையில் பிறிதொரு விடயத்தையும் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதாவது, புதிய அரசியலமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், மக்களின் விரும்பத்தினை அறிந்து கொள்ளும் வகையில் பொதுசன வாக்கெடுப்பு விடப்படும். உண்மையில் இந்த இடம்தான் ஆபத்தானது.

இடைக்கால அறிக்கையை சாதகமாக பரிசீலிக்க வேண்டுமென்று கூறுபவர்கள் கூட ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்கின்றனர்.

அதாவது, ஒற்றையாட்சி முறைமை அப்படியேதான் இருக்கப் போகிறது. அதே போன்று, பௌத்த மதத்திற்கான முன்னுரிமையிலும் எந்தவொரு மாற்றமும் இருக்கப் போவதில்லை.

இந்த இரண்டும் இல்லாத ஒரு அரசியல் யாப்புடன் சிங்கள மக்கள் மத்தியில் சென்றால் அது நிச்சயமாக தோற்கடிகப்படும். பொதுசன வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால் அதன் பின்னர் அரசாங்கம் கவிழ்வது நிச்சயம்.

அவ்வாறானதொரு விசப் பரிட்சையில் இந்த அரசாங்கம் நிச்சயம் ஈடுபடப் போவதில்லை எனவே புதிய அரசியல் யாப்பு என்று ஒன்று வருமானால், அது ஒற்றையாட்சியை மேலும் உறுதிப்படுத்தும் ஒன்றாகவே இருக்கும்.

இவ்வாறானதொரு சூழலில் ஒரு பொதுசன வாக்கெடுப்பு இடம்பெற்றால் அதனை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது?

சிறிலங்கா பிரித்தானிய காலனிய ஆட்சியிலிருந்து விடுபட்ட பின்னர் கொண்டுவரப்பட்ட 1972 மற்றும் 1978 அரசியல் யாப்பு ஆகிய இரண்டின் போதும், தமிழ் மக்களின் பங்குபற்றல் இருந்திருக்கவில்லை.

அப்போதிருந்த தமிழ்த் தேசியத் தலைமையின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே மேற்படி இரண்டு யாப்புக்களும் நிறைவேற்றப்பட்டன.

சிறிலங்கா அரசு எதேச்சாதிகாரமாகவே நடந்து கொண்டது. தமிழ் மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அந்த எதேச்சாதிகாரத்தின் விளைவாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்பந்திக்கப்பட்டனர்.

அது முள்ளிவாய்க்காலில் முற்றுப் பெற்று, ஒரு சர்வதேச விடயமாக மாறியது. இன்று தமிழ் மக்களின் பிரச்சினை சர்வதேச அரங்கில் விவாதிக்கப்படும் ஒரு விடயம்.

ஆனால் வெளியுலகு நோக்கிச் சென்ற விடயத்தை மிகவும் புத்திசாதுர்யமாக சிறிலங்கா அரசு மிண்டும் உள்நோக்கி கொண்டுவந்திருக்கிறது.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 2015இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜெனிவா பிரேரணையின் கீழ், ஜ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகளை ரணில் – மைத்திரி கூட்டரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரில் இரா.சம்பந்தனும் ஆதரவு வழங்கிவருகின்றார்.

இந்த இடத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று உண்டு.

அதாவது, புதிய அரசியல் யாப்பு ஒரு வேளை நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையுடன் நிறைவேற்றப்படுமாக இருந்தால்  அது ஒரு பிரச்சினைக்குரிய விடயமல்ல.

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் உடன்பாடற்ற கட்சிகள்  அதில் பங்கு கொள்ளாமல் விடலாம் ஆனால் விடயம் பொதுசன வாக்கெடுப்பு ஒன்று இடம்பெறுமாக இருந்தால் அதுதான் மிகவும் சிக்கலானது.

அதில் தமிழ் மக்கள் பங்குகொள்வது மிகவும் பாரதூரமானது என்பதுடன் அது தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றுக்கு செய்யும் மாபெரும் அநிதீயாகவும் அமைந்துவிடும்.

மேலும், கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக சிந்திய இரத்ததிற்கும், இழப்புக்களுக்கும், அர்ப்பணிப்புக்களுக்கும் எந்தவொரு அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.

சம்பந்தன் கூறுவது போன்று புதிய அரசியல் யாப்பில்   முன்னேற்றகரமான விடயங்கள் இருந்தால் நல்லது. அது வரட்டும்.

அதனை எமது மக்கள் அனுபவிக்கட்டும் ஆனால் பொதுசன வாக்கெடுப்பில் தமிழ் மக்களை பங்குகொள்ளச் செய்வது மிகவும் அநீதியானது.

அது தமிழ்த் தேசிய இனத்தின் வரலாற்றையே ஒரு நாளில் கேள்விக்குள்ளாக்கவல்லது. அதனை தமிழ் மக்கள் செய்யலாமா?

இன்றைய சூழலில் இந்த விடயங்களை தமிழ் மக்கள் மத்தியில் கொண்டு சென்று, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது.

சம்பந்தனின் தகவலின்படி இந்த மாத இறுதியில் இடைக்கால அறிக்கை மற்றும் உப குழுக்களின் அறிக்கை தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

இதில் ஏற்படப் போகும் இணக்கப்பாடுகளின் அடிப்படையில்தான், புதிய அரசியல் யாப்பு முயற்சிகள் இடம்பெறும். இதற்கிடையில் தமிழரசு கட்சி மன்னாரில் ஏற்பாடு செய்தது போன்று, ஏனைய இடங்களிலும் கூட்டங்களை நடத்தலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் அதற்கு சமாந்தரமாக அதே வேளை அதனையும் விட வேகமாகவும் வீச்சாகவும் தமிழ்த் தேசிய தரப்பினர் மக்கள் மத்தியில் சென்று, பொதுசன வாக்கெடுப்பினால் ஏற்படப் போகும் ஆபத்தை உணர்த்த வேண்டும்.

இது தொடர்பில் மக்கள் மத்தியில் தொடர்சியான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். பெரும் கூட்டங்கள் நடத்துவதை விடவும், நகரங்கள் தோறும், கிராமங்கள் தோறும் சென்று சிறு சிறு கூட்டங்களை நடத்தலாம்.

இது சமூகத்தின் மத்தியில் ஒரு கருத்துருவாக்கத்தை பதிவு செய்யும். இதிலுள்ள ஆபத்தை உணரச் செய்வதே மிகவும் முக்கியமானது.

என்னதான் பிரச்சாரங்கள் மேற்கொண்டாலும் கூட, அனைத்து மக்களையும் வாக்களிப்பிலிருந்து விலத்தி வைக்க முடியாது. ஆனால் ஒரு பொதுசன வாக்கெடுப்பு இடம்பெற்றால், அதில் 51 வீதமான தமிழ் மக்கள் பங்குகொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுசன வாக்கெடுப்பு வெற்றிபெறுவதும் தோல்வியடைவதும் இங்கு பிரச்சினைக்குரிய விடயமல்ல. ஆனால் அது வென்றாலும் தோற்றாலும் இறுதியில் தமிழ்த் தேசிய அரசியல் தோற்காமல் இருக்க வேண்டும். அதுவே தமிழ்த் தேசிய சக்திகளின் இலக்காக இருக்க வேண்டும்.

சம்பந்தனை பொறுத்தவரையில் அவருக்கு பொதுசன வாக்கெடுப்பு மிகவும் கட்டாயமான ஒன்று. அதனாலேயே அவர் மீண்டும் மீண்டும் பொதுசன வாக்கெடுப்பு தொடர்பில் பேசி வருகின்றார்.

அவரைப் பொறுத்தவரையில் விமர்சனங்களிலிருந்து தப்புவதற்கு அது ஒன்றே வழி. சம்பந்தனை பொறுத்தவரையில் பொதுசன வாக்கெடுப்பு வென்றாலும் அல்லது தோற்றாலும் அவருக்கு அது வெற்றியே ஆனால் ஒற்றையாட்சிக்கான உறுதிப்பாட்டுடன், பௌத்தத்திற்கான முன்னுரிமையுடன் கூடிய ஒரு அரசியல் யாப்பை சிங்கள மக்கள் ஏற்றுக் கொள்ளலாம்.

இதில் மகிந்த தரப்பினர் இறுதியில் எவ்வாறான முடிவை எடுப்பர் என்பதில் தெளிவில்லை. சிங்கள தேசியவாத சக்திகள் இப்போது அதனை எதிர்ப்பது போன்று எதிர்த்துவிட்டு பின்னர் பொதுசன வாக்கெடுப்பின் போது அமைதியாகவும் இருக்கலாம். ஏனெனில் சிங்கள தேசியவாத அரசியலுக்கு புதிய அரசியல் யாப்பால் எந்தவொரு பங்கமும் ஏற்படப் போவதில்லை.

Ranil-and-maithri1இங்கு இன்னொரு விடயத்தையும் பதிவு செய்ய வேண்டும். ஒரு புதிய அரசியல் யாப்பு வருமாயின் அது நிச்சயமாக வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரான ஒன்றாகவே இருக்கும்.

எனவே அவ்வாறானதொரு அரசியல் யாப்பிற்கான பொதுசன வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் பங்குகொள்வார்களாக இருப்பின் அதன் பொருள் தமிழ் மக்களும் வடக்கு கிழக்கு பிரிப்பை அங்கீகரிக்கின்றனர் என்பதாகும்.

எனவே தமிழ் மக்கள் தங்களின் வாக்குகளைக் கொண்டே, தமிழ் மக்களின் தனித்துவத்தை, 70 ஆண்டுகளுக்கு மேலான அவர்களது அரசியல் தவத்தை கலைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என்பதை மக்கள் உணரத் தொடங்கினால் அதன் பின்னர் நிலைமைகள் முற்றிலுமாக கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.

இந்தப் பணியை முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பை இனியும் தமிழ்த் தேசிய சக்திகள் தாமதிக்க முடியாது. இதில் உடன்படும் அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்.

ஒற்றையாட்சியை பேணிப் பாதுகாக்க முற்படும், பௌத்தத்திற்கு முன்னுரிமையளிக்கும் ஒரு புதிய அரசியல் யாப்பிற்கு எதிராக மக்களைச் சிந்திக்கத் தூண்ட வேண்டும்.

அது ஒரு மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அவ்வாறானதொரு வேலைத்திட்டத்தின் கீழ்தான் இந்த நிலைமைகளை எதிர்கொள்ள முடியும்.

இதற்கென ஒரு தமிழ்த் தேசிய செயலணியை உருவாக்கலாம். இதற்குள் அனைத்து கட்சிகளும், தனிநபர்களும், சிவில் அமைப்புக்களும் உள்வரலாம்  அத்துடன் இவற்றுக்கு வெளியில்   இருக்கின்ற வர்த்தக சங்கங்கள், தொழிற்சங்கங்கள், விவசாய சம்மேளனங்கள், பெண்கள் அமைப்புக்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் என அனைவரையும் ஓரணிப்படுத்தி இதனை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கலாம்.

இவ்வாறனதொரு செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டுமாயின் அதற்கு பெருமளவு நிதியும் தேவைப்படும். புலம்பெயர் சமூகம் இந்த இடத்தில்;தான் கைகோர்க்க முடியும். புலம்பெயர் சமூகமும் தனது வரலாற்றுப் பொறுப்பிலிருந்து விலகி நிற்க முடியாது.

களமும் புலமும் ஓரணியாக வேலைசெய்ய வேண்டிய காலம் மிகவும் கனிந்துவிட்டது. இன்றைய சூழலில் தமிழ்த் தேசிய சக்திகள் முன்னாலுள்ள ஒரேயொரு பணி இதுவாக மட்டுமே இருக்க முடியும்.

புதிய அரசியல் யாப்பிற்கான பொதுசன வாக்கெடுப்பில் தமிழ் மக்கள் பங்குகொள்வது என்பது அவர்களது வரலாற்றை அவர்களே மறுதலிப்பதாகும். அவர்களது பிள்ளைகளின் தியாகத்தை அவர்களே கொச்சைப்படுத்துவதாகும்.

மக்கள் அறியாமையாலும் தவறான விளக்கங்காளாலும் இதில் பங்குகொள்வதற்கான வாய்புக்கள் அதிகமுண்டு. அந்த மக்களை சரியான பாதை நோக்கி கொண்டு செல்ல வேண்டியதே தமிழ்த் தேசிய சக்திகளின் பணியாகும்.

SHARE