அடுத்த ஜனாதிபதி யார்?

269

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஆடை அணியும் ஒருவர்தான் வெற்றி பெறுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன இரு கட்சிகளாக இருந்தபோதிலும் அவற்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் முன்னர் பிரதான கட்சியில் அங்கம் வகித்தவர்கள்.

எனவே, தேர்தலொன்று வரும் பட்சத்தில் கூட்டணி அமைத்தே போட்டியிடுவோம்.

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தப்பட்டுவந்தாலும் அதை நடத்துவதற்குரிய நோக்கம் அரசுக்கு கிடையாது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படாவிட்டால் அடுத்து ஜனாதிபதித் தேர்தல்தான் நடைபெறும்.

அந்தத்தேர்தலில் தேசிய உடை அணியும் நபரே வெற்றிபெறுவார். அன்றும் இன்னும் என்றும் எனது தலைவர் மகிந்த ராஜபக்ச ஆவார். வேறு எந்த ராஜபக்சவையும் நான் ஆதரிக்கமாட்டேன்.” என்றும் வெல்கம கூறினார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறங்கினால் தான் ஆதரவு வழங்கப்போவதில்லை என வெல்கம இதற்கு முன்னரும் பல தடவைகள் அறிவிப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE