பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவையும் இந்த விவகாரத்தில் சிக்கவைத்துள்ளார்
வசந்தகரணாகொட தான் கைதுசெய்யப்படுவதை தவிர்ப்பதற்காக நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குறிப்பிட்ட மனுவில் அவர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இந்த விவகாரம் குறித்து தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
11 தமிழ் இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட விடயம்எவ்வாறு இடம்பெற்றது என தனது மனுவில் குறிப்பிட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி தன்மீதான பழியை கோத்தபாய ராஜபக்ச மீது போடுவதற்காக அவரை இந்த விவகாரத்திற்குள் இழுத்துவிட்டுள்ளார்
கொழும்பில் கடத்தப்பட்டு திருகோணமலை கடற்படை தளத்தில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இளைஞர்கள் விவகாரத்தின் முக்கிய சூத்திரதாரி என குற்றம்சாட்டப்படும் தனது பாதுகாப்பு அதிகாரி சம்பத் முனசிங்க குறித்து தனக்குமுறைப்பாடு கிடைத்ததாக வசந்த கரணாகொட தனது 11 பக்க ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.
2009 மே 23 ம் திகதி அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் குறிப்பிட்ட விவகாரம் குறித்து தெரிவித்ததுடன் காவல்துறை விசாரணையை கோரினேன் என வசந்தகரணாகொட தெரிவித்துள்ளார்
எனினும் வசந்தகரணாகொடவின் செயலாளராக பணியாற்றிய சமல் பெர்ணான்டோ இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா சுட்டிக்காட்டியவேளை வசந்த கரணாகொட எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
வசந்தகரணாகொட உரிய தருணத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் ஐந்துபேரின் உயிர்களையாவது காப்பாற்றியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.