5 ஆயிரம் வீடுகளையும் வரவு செலவு திட்ட நிதியில் மிக விரைவில் நடைமுறைப்படுத்த முடியும்

284
பிரதமரின் வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில், 4 ஆயிரம் வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், மிகுதி 5 ஆயிரம் வீடுகளையும் வரவு செலவு திட்ட நிதியில் மிக விரைவில் நடைமுறைப்படுத்த முடியுமென அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஞானசோதி தெரிவித்தார்.

யாழிற்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சின் செயலாளர் வலிகாமம் வடக்கு, மயிலிட்டி பகுதியில் உள்ள முளவை என்ற கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்ட வேலைத்திட்டங்களை பார்வையிட்டதுடன் வீட்டுத்திட்டம் வழங்கிய மக்களுடன் கலந்துரையாடினார்.அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சின் அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் 10ஆயிரம் வீட்டுத்திட்ட நடவடிக்கைகள் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதில் 4 ஆயிரத்து 750 வீடுகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்ட வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் 4ஆயிரத்து 750வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. ஏனைய 5 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியில் இருந்து நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

வீட்டுத்திட்டத்திற்கு தெரிவு செய்வதற்கு புள்ளி அடிப்படை வைக்கப்பட்டுள்ளது. புள்ளி விபரங்களில் பாதிக்கப்பட்டவர்கள், தமது முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு முறைப்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாடுகளை பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபர் உட்பட தேசிய ரீதியில் முறைப்பாட்டினை முன்வைக்க முடியும். தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி அலுவல்கள், வடக்கு அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இந்த ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை 3மாத காலத்திற்குள் முடிவிற்குள் கொண்டு வர முடியுமென மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

எனவே, அடுத்த கட்ட வீட்டுத்திட்டத்திற்கான கோரல்களைப் பெற்று வருகின்றோம். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார்.

SHARE