மேற்கு வங்கத்தில் தம்மை பாலியல் பலாத்காரம் செய்து தீவைத்த நபரை, பெண் ஒருவர் எரியும் தீயோடு சென்று பிடித்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ஆண் உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் கணவனை இழந்த பெண் ஒருவர் தனது பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவரது வீட்டில் இருந்து புகை வந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது இருவர் மீது தீப்பற்றி எரிந்ததைக் கண்டு தீயை அணைத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆண் உயிரிழந்தார். முகம், கை கால்கள் எரிந்துபோன நிலையில் சிகிச்சை பெற்று வரும் பெண், போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
அதில் தம் வீட்டுக்குள் நுழைந்த நபர் ஒருவர், தம்மை பலாத்காரம் செய்து தம் மீது தீவைத்து எரித்ததாகவும், உடலில் எரிந்து கொண்டிருந்த தீயோடு சென்று அந்த நபரை பற்றிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.