தமிழரை வைத்தே தமிழினத்தை அழிக்கும் சதித்திட்டத்தை அரசு அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டது.

838

தமிழ் அரசியல் தலைமைகளின் தவறுகளே இலங்கை அரசை சர்வதேச அரங்கிலிருந்து பாதுகாக்கிறது

தமிழரை வைத்தே தமிழினத்தை அழிக்கும் சதித்திட்டத்தை அரசு அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டது.

யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் இலங்கையில் ஒரு இனவழிப்பு செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் பல இருந்தும் அவற்றை உரிய முறையில் சர்வதேச மனித உரிமைச் சபையிடம் சமர்ப்பிக்காது அரசாங்கத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இலங்கைத் தமிழர் இனப்படுகொலை என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டு வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் ஈழத்தமிழர்களை படுகொலைசெய்யும் இனவழிப்பைக் குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் 20,000 மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது. மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவென கருதப்படுகிறது.

குறிப்பாக தமிழர் தரப்பில் சிலர் ஜெனிவாவிற்குச் சென்று தமது சுகபோக வாழ்க்கையினை அனுபவித்துவிட்டு வருகின்றனரே தவிர, உரிய தரப்புகளுடன் பேசி நீதிக்கான உரிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதில் தவறிழைக்கின்றனர். சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய ஒரு நாட்டில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கான விதிமுறைகளான,

இனப் படுகொலை என்றால் என்ன?

1. இனமாகவோ அல்லது குழுவாகவோ அழிக்கப்பட்டால் அது இனப்படுகொலை.
2. கட்டாயக் கருத்தடை.
3. கட்டாய மதமாற்றம்.
4. விஷவாயு பயன்படுத்தப்பட்டுக் கொலைசெய்தல்.

இனப்படுகொலை என்பது மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய மிக மோசமான குற்றச்செயலாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது.

மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது.

`ஜெனோசைட்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இனப்படுகொலை என்ற சொல் எவ்வாறு நடைமுறைக்கு வந்தது?

ஜெனோசைட்டில் வரும் முதல் பாதி சொல்லான `ஜெனொஸ்’ என்பது கிரேக்க சொல் ஆகும், அது `இனம்’ அல்லது பழங்குடி என்ற பொருள் தருகிறது.

`சைட்’ எனப்படும் இலத்தின் சொல் `கொல்வதற்கு’ என்ற பொருள் தருகிறது, இந்த இரண்டும் சேர்ந்தே `ஜெனொசைட்’ என்ற வார்த்தை உருவானது.

யூத இனப்படுகொலையின் போது தனது சகோதரன் தவிர குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்த ரஃபேல், இனப்படுகொலை சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றமாக இனங்காணப்பட வேண்டும் என பிரச்சாரங்களை முன்னெடுத்து வந்தார்.

இதனை அடுத்து 1948 டிசம்பரில் இனப்படுகொலை குறித்த ஐ.நா தீர்மானத்தில் இது உள்வாங்கப்பட்டு பின்னர் 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.

ஒரு இனக் குழுவின் உறுப்பினர்களை கொல்வது குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் மற்றும் உள ரீதியாக மோசமான தீங்கினை ஏற்படுத்துவது இனப் படுகொலையாகக் கருதப்படுகிறது.

அந்த இனக் குழுவில் புதிதாக பிறப்புக்களை தடுக்கும் நோக்கில் செயற்படுவது, குழந்தைகளை வலுக்கட்டாயமாக வேறொரு இனக்குழுவுடன் சேர்ப்பது,

படத்தின் காப்புரிமைREUTERS

ஒரு தேசிய இனத்தை அல்லது சமய குழுவை முழுதாகவோ அல்லது பகுதியாகவோ அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் இனப்படுகொலை என ஐநா தீர்மானத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு இது கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.

இந்தத் தீர்மானம் மிகக் குறுகியதாக உள்ளது என்றும் வேறு சிலர் இது தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

நாஜிக்களால் மேற்கொள்ளப்பட்ட யூதர்களுக்கு எதிரான நடவடிக்கை மட்டுமே கடந்த நூற்றாண்டில் நடந்த இன அழிப்பு என சிலர் கூறுகின்றனர்.

ஆனால், 1948ஆம் ஆண்டுத் தீர்மானத்தின்படி, குறைந்தது மூன்று இன அழிப்பு சம்பவங்களாகவது நடந்திருப்பதாக வேறு சிலர் கணக்கிடுகின்றனர்.

முதலாவதாக, 1915க்கும் 1920க்கும் இடையில், ஒட்டோமான் துருக்கியர்களால் ஆர்மீனியர்கள் பெரும் எண்ணிக்கையில் படுகொலைசெய்யப்பட்டது.

அதன் பிறகு, நாஜிக்களால் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டது.

மூன்றாவதாக, ருவாண்டாவில் 1994ல் டுட்ஸி, ஹுடு இனத்தைச் சேர்ந்த 8 லட்சம் பேர் கொல்லப்பட்டது.

இவைதவிர, 1995ல் போஸ்னியாவின் ஸ்ரெப்ரெனீட்சாவில் நடந்தது இன அழிப்பு என யுகோஸ்லோவியாவுக்கான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இதுபோக, 1932-33ல் உக்ரைனில் சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய செயற்கைப் பஞ்சம், 1975ல் கிழக்குத் திமோர் மீது இந்தோனேஷியா எடுத்த படையெடுப்பு, 1970களில் கம்போடியாவில் நடந்த க்மெர் ரூஜ் படுகொலைகளையும் சிலர் இனப்படுகொலையாக முன்வைக்கின்றனர்.

இலங்கைக்குள் இனப்படுகொலை இடம்பெற்றதற்கான ஆதாரபூர்வமான சாட்சியங்கள் பல இருந்தும் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜெனிவாவில் அரசுக்கு மேலும் இரு வருட கால அவகாசம் வழங்குவதற்கு இணங்கியிருந்தது. அந்த கால இடைவெளியில் அரசாங்கம் தமக்கான அனைத்து தயார்ப்படுத்தல்களையும் உரிய முறையில் செய்து அதனைச் சர்வதேச சமூகத்திற்கும், சர்வதேச நீதிமன்றத்திற்கும், ஐ.நாவிற்கும் காண்பித்து வருகிறது.

 

குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியானது அண்மைக்காலத்தில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்தும் அவர்களது மாநாட்டில் அம்பலப்படுத்தினர். இதனைச் சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்ட இலங்கையரசு விடுதலைப்புலிகளாலும் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அவற்றையும் விசாரிக்கவேண்டும் என்று அரசாங்கத்திற்கு விடயங்களை எடுத்துக்கொடுத்துள்ளனர். இவர்களது நோக்கம் 1990களிலிருந்து இலங்கையில் நடைபெற்ற கொலைகள் தொடர்பில் விசாரிக்கப்படவேண்டும் என்பதே. அவ்வாறு விசாரிக்கப்படும்போது அனைத்துத் தரப்பும் தவறு செய்திருக்கிறார்கள் என்பது நிரூபணமாகும். இதனால் அரசினைத் தாங்கிப் பிடித்திருக்கின்ற ஆயுதக்கட்சிகளுக்கு பாதகத்தன்மையைத் தோற்விப்பதுடன் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது நிரூபணமாகும். இனப்படுகொலை தொடர்பில் யார் யார் எல்லாம் குரல் கொடுக்கின்றார்களோ அவர்களை அரசு தமக்குள் உள்வாங்கிக்கொண்டு பணத்தை அள்ளி வழங்கி சாட்சியங்களைச் தம்வசப்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.

கடந்த காலங்களில் வடமாகாண சபையில் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரேரணை கிடப்பில் போடப்பட்டதாகவே தொடர்ந்தும் இருக்கின்றது. தொடர்ந்தும் தமிழ்த் தரப்புக்கள் இனப்படுகொலைக்கான நீதியை கடுமையாக வலியுறுத்தத் தவறும் பட்சத்தில் அடுத்த ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வுக்குள் இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை வெறுமனே போர்க்குற்றம் தான் நடைபெற்றது எனக்கூறி அரசாங்கம் முழுமையாக தப்பித்துக்கொள்ளும் நிலைமைகள் உருவாகும். கால அவகாசம் என்பது தமிழினத்தை அடமானம் வைத்து மீண்டும் பாதாளத்துக்குள் தள்ளும் ஒரு நடவடிக்கையாகவே இதனைப் பார்க்க முடிகின்றது. தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 40வது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பிரதிநிதிகளாக மூவர் அடங்கிய குழு ஜெனிவா நோக்கிப் பயணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அதில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களும் அங்கம் வகிப்பதாகவும் கூறப்படுகின்றது.

தமிழரை வைத்தே தமிழினத்தை அழிக்கும் சதித்திட்டத்தை அரசு அன்றிலிருந்து இன்றுவரை கையாண்டது. இன்றும் கையாளுகிறது. இலங்கை விமானப் படையினால் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் விஷ வாயுக்கள் பயன்படுத்தப்பட்டது. கொத்துக்குண்டுகளைத் தாராளமாகப் பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் இருக்கிறது. அதுமட்டுமன்றி பொது மக்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டதற்கும், இளம் பெண்கள் பாலியல் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களும் இருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஆதாரங்கள் இருக்கிறது. ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. மேலும் அரசினால் வடகிழக்கில் பரவலாக திட்டமிட்டு செய்யப்பட்ட படுகொலைகளுக்கான ஆதாரங்கள் இருக்கிறது. இந்த ஆதாரங்களை உரிய முறையில் சர்வதேசத்திடம் சமர்ப்பிப்பதற்கு தமிழ்த் தரப்புக்கள் தயங்குகின்றனர். ஏனெனில் பாராளுமன்ற சுகபோக வாழ்க்கை தம்மை விட்டுச்சென்றுவிடும் என்ற பயம் ஒருபக்கம். தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்கிற மற்றொரு பயம். மக்கள் புரட்சி என்பது ஒடுக்கப்படுகின்ற சமுதாயத்திலிருந்து உருவாக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத ஒரு சூழ்நிலை தற்போதும் இங்கு இருக்கிறது. வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பௌத்த சிலைகளை வட பகுதியில் அமைப்பதிலும், பௌத்த மாநாடுகளை வைப்பதிலும், ஒரு கொடியின் கீழ் ஆட்சி நடப்பதையும் அவர் திறம்படச் செயற்படுத்த முனைந்திருக்கின்றார். அரசின் நிகழ்சி நிரலுக்கேற்ப அவரது செயற்பாடுகள் அமைகின்றது. இவ்வாறான ஒருவர் 40வது ஜெனிவா மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் பங்கேற்பது மனவேதனைக்குரியது.

பாராளுமன்ற இருப்பதைத் தக்கவைத்துக்கொள்வதற்காக உச்ச நீதிமன்று சென்றவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்காகவும் இணைந்த வடகிழக்கை பிரித்ததன் ஊடாக மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகளில் ஏன் வழக்குத் தொடரவில்லை. அரசுடன் இணக்க அரசியல் செய்வதன் ஊடாக தமிழ் மக்களது அபிலாசைகளை வென்றெடுக்க முடியாது. தொடர்ந்தும் அரசுடன் இணக்க அரசியலைச் செய்தால் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு வடகிழக்கில் அதிகரிக்கும். மீண்டும் ஒரு யுத்தத்திற்கான அடித்தளத்தையே இந்த தமிழ் அரசியல்வாதிகள் வித்திடுகின்றனர் எனலாம்.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களும், அதுபோன்று சுரேஸ் பிரேமச்சந்திரன், ஆனந்த சங்கரி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், டக்ளஸ் தேவானந்தா, கருணா, பிள்ளையான் போன்றவர்களும் தமிழ் மக்களது பிரச்சினைகளில் ஏதாவது ஒன்றுக்கு தீர்வினைப் பெற்றுத் தந்திருக்கிறார்களா? தொடர்ந்தும் அரசின் எடுபிடிகளாக இவர்கள் செயற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. வாய்ப்பேச்சு மட்டும் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை. அறிக்கை விடுவதில் வல்லுநர்களாகத் திகழ்கின்றனர். நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய வகையில் தமிழினத்திற்கான விடுதலை வென்றெடுக்கப்படவேண்டும். விடுதலைப்புலிகள் அல்லாதவர்களும் தற்போது தாம் விடுதலைப்புலிகள் என கூறுகின்றனர். விடுதலைப்புலிகள் அமைப்பு 2009-2019ஆம் ஆண்டு காலப் பகுதியில் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடவில்லை என்பது உண்மை.

தமிழீழ விடுதலைப்புலிகளது போராட்டமானது ஒடுக்கப்படும் இனத்திற்காக அவர்களின் விடுதலைக்காக மேற்கொள்ளப்பட்டதே. ஆகவே தமிழ் அரசியல்வாதிகள் இதனை நன்கு உணர்ந்து அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்காது, இலங்கை அரசுக்கு எதிராகப் போர்க்கொடியைத் தூக்குவதன் ஊடாக தமிழ் மக்களுக்கானத் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். இல்லையேல் இலங்கைத் தீவு மீண்டுமொரு பாரிய யுத்த அழிவைச் சந்திக்கநேரிடும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

இரணியன்

 

 

SHARE