வவுனியா இராசேந்திரங்குளம் விக்ஸ்காடு பகுதி மக்கள் வீட்டுதிட்டம் வழங்குமாறு கோரி ஆர்பாட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர். காலை 10 மணிக்கு வவுனியா பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது.
இதன்போது கருத்து தெரிவிக்கையில்,கடந்த 10 வருடங்களாக எமக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை தற்காலிக கொட்டகைகளிலேயே வசித்துவருகின்றோம். 47 குடும்பங்கள் வசித்துவருகின்ற எமது கிராமத்தில் பலருக்கு வீட்டுக்கான பதிவுகள் பிரதேச செயலகத்தால் மேற்கோள்ளபட்டபோதும் அது வழங்கப்படவில்லை. காணிகளிற்கு ஆவணங்கள் இன்மையால் வீட்டுத்திட்டம் வழங்க முடியாதென அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே நீண்டகாலமாக வீடில்லாமல் வசிக்கும் எமக்கு வீடுகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிரந்தர வீடும் அடிப்படை வசதியும் வேண்டும், காணிக்கான போராட்டம் முடிந்தது இது வீட்டிற்கான போராட்டம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிரதேச செயலாளர் கா.உதயராஜா சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.